உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழர் வரலாறும் பண்பாடும்/தமிழ் இலக்கியத்தில் மோரியர்

விக்கிமூலம் இலிருந்து



தமிழ் இலக்கியத்தில்
மோரியர்

அகநானூறிலும், புறநானூறிலும், மோரியரைப்பற்றி ஐந்து பாடல்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. இக்குறிப்புகளைக் கொண்டு பல்வேறு விவாதங்கள், ஆராய்ச்சியாளரிடையே நடைபெற்று வருகின்றன. அவ்வாராய்ச்சிக்குப் பொருளாக அமைந்துள்ள வினாக்கள் வருமாறு: தமிழிலக்கியங்கள் குறிப்பிடும் மோரியர் யாவர்? இவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு எவ்வகையில் அறிமுகமாயினர்? மோரியரைக் குறிப்பிடும் பாடல்கள் மோசியர் காலத்திலேயே தோன்றினவா? இக்குறிப்புகளைக் கொண்டு புறநானூற்று அகநானூற்றுக் காலங்களைக் கணிக்க முடியுமா? இவ்விவாதங்களுக்குப் பல தலைசிறந்த ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கருத்துக்களை வழங்கியுள்ளார்கள். அவர்களுள் சிலர், வையாபுரிப் பிள்ளை, டாக்டர் எஸ்.கே.சட்டர்ஜி, ஆர்.ஜே.மஜூம்தார், டாக்டர் டி.டி. கோலாம்பி, எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார் முதலியோர்.

மெளரியர் என்ற பெயரை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்தப் பரம்பரையின் ஸ்தாபகர் சந்திரகுப்தர். சந்திரகுப்தன், சாணக்கியன் ஆகிய இருவரது கதைகளை சுருக்கமாகவேனும் அறியாதவர் இல்லை. சந்திரகுப்த மெளரியனுடைய காலத்திலிருந்து தான் தொடர்ச்சியான சரித்திரம் தொடங்குகிறதென்று சரித்திர ஆராய்ச்சியாள்கள் கூறுகிறார்கள்.

தாழ்ந்த ஜாதிப் பெண்ணிடத்து அரசனுக்குப் பிறந்த மகன் சந்திரகுப்தனென்று சில புராணக் கதைகள் கூறுகின்றன. அவன் தாயின் பெயர் மூரா என்றும் அதனாலே அவனுக்கு அப்பெயர் அமைந்தது என்றும் சில மொழியாராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். வேறு சிலர் புத்தருடைய வம்சமான சாக்கிய வம்சத்தில் சந்திரகுப்தன் தோன்றியதாகக் கூறுவர். இவ்விரண்டில் எது உண்மையாயினும் சந்திரகுப்தன் முந்திய அரசபரம்பரையின் நேர்வாரிசு அல்ல, என்பது தெளிவு. அவன் நந்த மன்னர்களிடம் படைத்தலைவராக இருந்து அரசனது அதிருப்திக்குள்ளானான். இதுபோன்ற அதிருப்திக்குள்ளான விஷ்ணுகுப்தன் என்னும் சாணக்கியனோடு சேர்ந்து மன்னனை எதிர்த்து ஒர் மறைவான இயக்கத்தைத் தோற்றுவித்தான். இறுதியில் நந்தர் பரம்பரை வீழ்ந்தது. சந்திரகுப்தன் முதல் மெளரியனாக முடி சூடிக்கொண்டான் சுமார் கி.மு. 321ல் மெளரிய பரம்பரை தோன்றிற்று. சந்திர குப்தன் காலத்திலேயே வட இந்தியாவிலுள்ள பல்வேறு சிற்றரசர் களையும், வனத்தில் வாழும் உறவு முறைக் கூட்டத்தாரையும் வென்று அடிமைப்படுத்தி, மெளரிய சாம் ராஜ்யத்தை விஸ்தரித்தான். அவனுடைய காலத்திற்குப்பின் மெளரிய சக்கரவர்த்திகளில் பெயர் பெற்றவன் அசோகன். அசோகன் அறவாழ்க்கையை மேற்கொள்வதற்கு முன்னால் வட இந்தியாவில் தற்போது காஷ்மீரம் என்று வழங்கும் காம்போஜத்திலும், தெற்கே கலிங்கத்திலும் மெளரிய ஆட்சியைப் பரப்பினான். அவனுடைய ஆட்சிக்காலத்தைப்பற்றி சாசனங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அகப்படுகின்றன. மெளரிய பரம்பரையின் ஆட்சிக்காலம் கி.மு. 321லிருந்து கி.மு.156 வரை என்று இதே காலத்தில் தமிழ்நாட்டில் சேர, சோழ, பாண்டியர்களும், நூற்றுக்கணக்கான குறுநில மன்னர்களும் ஆட்சி புரிந்து வந்தார்கள். اஇந்தியாவிலேயே வலிமைமிக்க மெளரியர்களைப் பற்றி அவர்கள் அறிந்திருக்கக் காரணங்களுண்டு. தமிழ்நாட்டுத் துறைமுகங்களிலிருந்து வாணிபப் பொருள்கள் கலிங்கத்துக்கும், வட நாட்டு நகரங்களுக்கும் சென்றன. தமிழ் நாட்டு வணிகர்கள் சிறு சிறு கூட்டங்களாக வடநாட்டில் பல பகுதிகளிலும் குடியேறி வாணிபம் செய்து வந்தார்கள். தக்ஷசீலத்திலும், பாடலிபுத்திரத்திலுமுள்ள புத்தபிக்குகள் நாகார்ஜூன் கொண்டாவுக்கும், தென்பாடலிக்கும், காஞ்சீபுரத்திற்கும், கற்பதற்கும், கற்பிப்பதற்குமாக வந்து போய்க் கொண்டிருந்தார்கள். இதன் காரணமாக மெளரிய சாம்ராஜ்யத்தைப்பற்றித் தமிழ் மன்னர்களும் தமிழ்ப்புலவர்களும் அறிந்திருக்கக் கூடும் என்பது சரியானதோர் முடிவே. மெளரியர்களோடு, போர்கள் மூலமும் திருமணத்தொடர்பு மூலமும், வாணிபத் தொடர்பு மூலமும் உறவுகொண்டிருந்த கிரேக்கர்கள் அவர்களைத் தங்களுடைய மொழியில், மோரீஸ், என்று அழைத்தார்கள் வடமொழியில் மெளரிய' என்ற சொல் மோரியர் என்று திரிந்து வழங்கியது. பெளத்தமத அறநூல்களும் அசோகனது கல்வெட்டுக்களும், புத்த ஜாதகக் கதைகளும், ராஜதரங்கிணி, தாரநாதம் முதலிய புத்தமத வரலாறுகளும் பாலி மொழியிலேயே உள்ளன. கலிங்கத்திலும் தமிழ் நாட்டிலுமுள்ள அறக்கல்லூரிகளில் பாலி மொழியிலே புத்த தருமம் போதிக்கப்பட்டது. எனவே, தமிழ்நாட்டில் மெளரியர் என்ற சொல் மோரியர் என்று வழங்கப்பட்டது. புலவர்கள். தங்களுக்குப் பரிசில் அளிப்பவர்களை மிகையாகப் புகழ்வது வழக்கம். தமிழ்நாட்டில் மோரியர் ஆட்சிக்காலத்தில் மிகச்சிறிய நிலப்பரப்புள்ள பகுதிகளையே மன்னர்களும், குறுநிலமன்னர்களும் ஆண்டுவந்தனர். ஆயினும் புலவர்கள் அவர்களைப் புகழ்ந்து பாடும்போது கடல் சூழ்ந்த புவிக்கெல்லாம் 'தலைவன்' என்றே பாடுவார்கள். அவன் செய்யும் அறச்செயல்களை உலகத்திலேயே சிறந்த பேரரசனதஅறச்செயல்களுக்கு ஒப்பிடுவார்கள். பிற்காலத்து சாசனங்கள் கூட கொங்குநாட்டில் 200 சதுரமைல் பரப்புள்ள ஒரு சிறுபகுதி மன்னனைத் திரிபுவனச் சக்கரவர்த்தி என்று அழைக்கிறது. இதேபோல் கோப்பெருஞ்சிங்கன் என்னும் சிற்றரசனை சகல புவனச் சக்கரவர்த்தி என்று சாசனம் அழைக்கிறது. எனவே குறுநிலத்தை மோரியர் சாம்ராஜ்யத்தோடு ஒப்பிட்டும் குறுநிலமன்னனை மோரியச் சக்கரவர்த்திகளோடு ஒப்பிட்டும் கூறுவது புலவர்களது உயர்வு நவிற்சியுக்தியாகும். மேற்சொன்ன கருத்துக்களை மனதில்கொண்டு அகநானூறில், வரும் மோரியர் பற்றிய குறிப்புக்களை ஆராய்வோம்.

................வென்வேல்
விண்ணுறு நெடுங்குடைக் குடைத்தேர் மோரியர்மோரியர்
திண்கதிர் திகிரி திரிதரக் குறைத்த
உலக விடைகழி மறைவாய் நிலஇய மலர்வாய்
, மண்டிலத்தன்ன நாடும் பலர்புற விதிர்ந்த அறத்துறை யன்னே

(புறநானூறு 175 ஆதனுங்கனை ஆதிரையானார் பாடியது) (புலவர் தன்னை ஆதரிக்கும் குறுநில மன்னனைப் புகழ்ந்து பாடுகிறார். உனது அறத்துறை மோரியரது ஆட்சியின் கீழுள்ள பரந்த நிலப்பரப்பில் நிலைபெற்ற அறத்துறை போன்றது.)

விண் பொரு நெடுங்குடை இயல்தேர் மோரியர் பொன் புனை திகிரி திரிதரக் குறைந்த அறை

(அகநானூறு 69)

(வானத்தளவு உயர்ந்த நெடியகுடையையும், விரைந்து செல்லும் தேர்ப்படையையும் உடைய மோரியர்களது ஆணைச்சக்கரத்தால் குறைப்பட்ட இடங்கள்)

வம்ப மோரியர் புனைத்தேர் நேமிஉருளிய குறைத்த விலங்கு வெள் அறிவிய வரை

(அகநானூறு 251)

(புதியவர்களான மோரியரது அணி செய்யப்பட்ட தேர்களின் சக்கரங்கள் உருண்டதால் பள்ளம் விழுந்து நீர் அருவியாகப்பாயும் இடங்கள்)

மோரியர் தென்றிசை மாதிர முன்னிய வரவிற்கு, விண்ணுற ஒங்கியபனி இருங்குறை ஒண்கதிர்த் திகிரி உருளியர் குறைந்த அறை

(அகநானூறு 281)

                   (மோரியர் தென்திசை நோக்கி வரும்பொழுது வானளாவ வளர்ந்த பனி மூடிய குன்றங்கள் மீது தேர்ச்சக்கரங்கள் பதிந்து குன்றங்கள் தேய்ந்து தாழ்ந்தன.)

மேலே காட்டிய மேற்கோள்களைக் குறித்து வையாபுரிப்பிள்ளை அவர்கள் கருத்து வருமாறு: மோரியர் என்பது மெளரியர்களைக் குறித்ததாகலாம். ஆனால் மேலே குறிப்பிட்ட செய்யுள்கள் மோரியரது ஆட்சிக் காலத்திலேயே எழுதப்பட்டிருக்க வேண்டுமென்று அவசியமல்ல. தான் புகழ நினைக்கும் தலைவனது பெருமையை பழங்காலப் புராணத் தலைவர்களது பெருமையோடு ஒப்பிடுவதும் உண்டு. மகாபாரதத்தில் போரிட்ட இருதரப்புப் படையினருக்கும், பெருஞ்சோற்றுதியன் என்னும் சேரமன்னன் விருந்தளித்தான், என்று புறநானூற்றுச் செய்யுள் ஒன்று கூறுகிறது. இது வரலாற்று உண்மையாக இருக்க முடியாது. பாரதக் கதையோடு தமது மன்னனைத் தொடர்பு படுத்துவதாகப் புனைந்து கூறப்பட்ட செய்தியே அது. அது போலவே மோரியரைப் பற்றிய பழஞ் செய்யுள்களிலும், புலவர்கள் தங்களது மன்னர்களைப் பெருமைப்படுத்துவதற்காக, முற்காலத்தில் வாழ்ந்த மோரியர்களோடு அவர்களை ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார்கள். உண்மையில் புறநானூறு செய்யுள்களில் பழமையானவை எழுதப்பட்ட காலம், கி.பி.முதல் நூற்றாண்டே. எனவே மோரியரைப் பற்றிய குறிப்புகளெல்லாம் பழைய சங்கச் செய்யுள்கள் எழுதப்பட்ட காலத்துக்கு இரண்டு, மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தவை. இதுவே பிள்ளையவர்களது கருத்தாகும். டி.டி. கோஸாம்பி அவர்கள் 'புராதன இந்திய சரித்திர அறிமுகம் என்ற நூலில் மோரியர் பற்றிய இலக்கியச் சான்றுகள் பற்றி தமது கருத்தை வெளியிட்டுள்ளார். மோரியர் காலத்தில் தமிழிலக்கியம் வளர்ச்சியடைந்திருந்தது என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. மோரியர் காலத்தில் தமிழ் நாட்டில் புதிய கற்கால நாகரிகம் நிலவியிருந்தது. எழுத்தும், இலக்கியமும் தோன்ற வில்லை. இக்கருத்தைத் தாம் மாற்றிக் கொள்வதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. என்று அவர் கூறுகிறார். பாரதீய வித்தியா பவனம் வெளியிட்டிருக்கும், 'புராதன இந்திய சரித்திரம்' என்னும் நூலில் வம்ப மோரியர் என்ற சொற்றொடருக்கு upstart mauryas என்ற பொருள் கொடுத்து மோரியர் காலத்திலேயே தமிழ் நாட்டுப் புலவர்கள். மெளரிய சாம்ராஜ்யத்தைப் பற்றியும், மெளரியர்களைப் பற்றியும் அறிந்திருந்தார்கள் என்று கூறுகிறார். இதன் மூலம் மெளரியப் பரம்பரை ஆட்சிக் காலத்தில், மொழியும் இலக்கியமும் தமிழ் நாட்டில் வளர்ச்சியுற்றிருந்ததை இவ்வரலாற்று ஆசிரியர் ஒப்புக்கொள்கிறார். ஆனால் மோரியர்களைப் பற்றிய குறிப்புகளுள்ள, பாடல்களைக் கொண்டு தமிழ் நாட்டின் வரலாற்றைத் தெளிவாக அறிவதற்கு அந்நூலில் முயற்சி எதுவும் செய்யப்படவில்லை. இக் கருத்துகளைப் பற்றி என்னுடைய கருத்து என்ன என்பதைச் சுருக்கமாகக் கூறுகிறேன். முதன் முதலில் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்களது கருத்தை எடுத்துக் கொள்வோம். அவர்கள் சொல்வது போல பாரத ராமாயணத் தலைவர்களுக்குச் சமமாகப் பாட்டுடைத் தலைவனைப் புகழ்ந்து கூறுவது தமிழ்ப் புலவர்களது மரபுதான். ஆனால் மோரியர்களைப் பற்றி வரும் குறிப்புக்களில் அவர்கள் பழங்காலத்து மன்னர்கள் என்ற கருத்து காணப்படவில்லை. புறநானூற்றுப் பாடலில் ஆதனுங்கனது அறத்துறை மோரியர் ஆட்சி நிலைபெற்று விளங்குகின்ற இடங்களில் நிலைபெற்ற அறத்துறை போன்றது என்று சொல்லப்படுகிறது. ஆதனுங்கன் காலமும், மோரியர் காலமும், நிகழ் காலத்தில் பேசப்படுகின்றன. எனவே இது மோரியர் காலத்தையே குறிக்கிறதென்பது வெளிப்படை. இதே செய்யுள் தேர்ப்படை மிகுதியுடைய மோரியரது வெற்றிச் சிறப்பைக் கூறுகிறது. எக்காலத்திலோ நடைபெற்ற போர்களில் கிடைத்த வெற்றிகளைப் பெறுமையாகச் சொல்லிக் கொள்ள வேண்டுவது இல்லை. இவ்வெற்றிகளெல்லாம் சமீப காலத்தில் கிடைத்த வெற்றிகளையே குறிக்கின்றன. மேலும் மோரியர் பரம்பரை அழிந்த பிற்பாடு கலிங்கத்தில் காரவேலர் போன்ற பேரரசர்களும் வட இந்தியாவில் கங்கர் பரம்பரையும் தோன்றிவிட்டன. பிள்ளை அவர்கள் கூறுவதுபோல கி.பி. முதல் நூற்றாண்டில் இப்பாடல்கள் எழுதப்பட்டிருந்தால் அக்காலத்தில் மெளரிய சாம்ராஜ்யம் மறைந்து இந்தியாவின் வடமேற்குப் பகுதி கிரேக்கர்களின் ஆட்சியிலும் வடகீழ்ப்பகுதி இரண்டு, மூன்று சக்கரவர்த்திகளின் கீழும் சென்று விட்டன.

ஆகவே முன்னூறு வருஷங்களுக்கு முன் அழிந்து விட்ட பரம்பரையைக் குறித்து புலவர் நிகழ் காலத்தில் கூறியிருக்க மாட்டார். தவிரவும், வம்பமோரியர் என்ற சொற்றொடர் புதியவர்களான மோரியர் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வம்ப மாகள், வம்பலர், என்ற சொற்கள் ஊருக்கோ நாட்டுக்கோ புதியவர்கள் என்ற பொருளில் பண்டைப் புலவர்களால் கையாளப்பட்டது. வம்பன் என்பதற்குத் தற்காலத்தில் இருக்கும் பொருளை அகநானூறு, புறநானூற்றில் வரும் இடங்களில் கொள்ளக் கூடாது. வம்பர் என்பது தற்காலத்திலுள்ள பொருளைத்தான் ‘இந்தியாவில் புராதன சரித்திரம்’ என்ற நூலில் ஆசிரியர் upstarts என்று விளக்கம் கொடுத்தார். புதியவர் என்றால் செய்யுள் எழுதப்பட்ட காலத்தில் அல்லது அதற்குச் சற்று முன்பாவது அவர்கள் தமிழ் நாட்டினருக்கு அறிமுகமானவர்களாக இருக்க வேண்டும். இவர்கள் தென்திசை நோக்கிப் படையெடுத்து வந்தார்களென்பது அகநானூறு, 281ம் செய்யுள்ளால் விளங்கும். இதுவும் ஒரு சமீப கால நிகழ்ச்சியையே குறிப்பிடுகிறது. இவையனைத்தையும், ஒன்று சேர்த்துப் பார்க்கும்பொழுது, மோரியர் காலத்திலேயே இங்கு மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் பாடல்கள் எழுந்தன என்று உறுதியாகக் கருதலாம். இச்சான்றுகளைக் கொண்டு சுமார் கி.மு.321க்கும் கி.மு.156-க்கும் இடையில் மேற்கோள் காட்டப்பட்ட பாடல்கள் தோன்றியிருக்கக்கூடும் என்று முடிவு செய்யலாம். இன்னும் கூர்ந்து நோக்கினால் புறநானூற்றுப் பாடல்களிலிருந்து வேறொரு வழியாலும் அப்பாடலின் காலத்தைக் கொண்டு நிர்ணயிக்கலாம்.

ஆணைச் சக்கரத்தையும், தர்மச் சக்கரத்தையும் ஒன்றாக்கி தர்மமே ஆணைக்கு அடிப்படையாக இருத்தல் வேண்டுமென்று அசோகன் பறை சாற்றினான். அவனுக்கு முன்பிருந்த சந்திரகுப்தனும், சாணக்கியனும் ராஜா ரீதியில் தண்டத்தையே முதன்மைப்படுத்தினார்கள். ‘ஆக்ஞா’ சக்கரத்தையும், தர்மச் சக்கரத்தையும் ஒன்றாக இணைக்க முற்பட்டவன் அசோகன். அவன் தனது கலிங்கப்போருக்கு முன்தண்டத்தையே நம்பியிருந்தான். கலிங்கப் போருக்குப் பின் அவன் புத்த தர்மத்தை மேற்கொண்டு தர்மச்சக்கரமே ஆக்ஞா சக்கரம் என்று பாறைகளிலும் கற்களிலும் எழுதி வைத்தான். இப்பாடலிலும் மோரியர் திகிரி என்பது மோரியர் ஆணைச் சக்கரத்தைக் குறிக்கிறது. கதிர்த்திகிரி என்பது அவர்கள் ஆட்சியின் சிறப்பைக் குறிக்கிறது. அவர்கள் நாட்டு அறத்துறை போன்றது. ஆதனுங்கனது அறத்துறை இங்கே அவர்கள் ஆணைச்சக்கரம் பரவிய இடங்களில் தர்மச்சக்கரம் பரவியிருந்தது என்ற கருத்தை கவிஞர் சுட்டிக் காட்டுகிறார். அப்படியாயின் இக்கருத்து அசோகன் காலத்தில் கலிங்கப் போருக்குப் பின் அவனுக்குத் தோன்றிய கருத்தாகும். அசோகனது முதல் பிரகடனம் கி.மு. 259 அசோகனது மரணம் கி.மு. 237. இக்காலத்தில் புத்தமதக் கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவின. எனவே இக்காலத்திலேயே மோரியர் பற்றிய இச்செய்யுள்கள் தோன்றியிருக்கலாம்.

புறநானூற்றில் சில செய்யுள்கள் கி.பி. முதல் நூற்றாண்டைச் சார்ந்தனவாக இருக்க வேண்டும். எனவே வையாபுரிப்பிள்ளை அவர்கள் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. அடுத்து டி.டி. கோஸாம்பியின் கருத்துகளை ஆராய்வோம். கோஸாம்பி, மெளரியர் காலத்தைக் தமிழ் நாட்டில் புதுக் கற்கால நாகரிகம் நிலவிய காலம் என்று கூறுகிறார். அப்படியானால் தமிழ் நாட்டில் உழவுத்தொழில் முன்னேறியிருக்கவில்லை. நாடும் நகரமும் தோன்றியிருக்கவில்லை. உலோகங்கள் உபயோகத்திற்கு வரவில்லை. எழுத்தும் இலக்கியமும் தோன்றவில்லை. வாணிபம் சிறிதளவும் தோன்றவில்லை என்பதே இதன் பொருள். அவருடைய ஆதாரம் எல்லாம் வையாபுரிப் பிள்ளையின் தமிழிலக்கிய வரலாறு ஒன்றுதான். அவருடைய கருத்துக்களை நாம் முன்னரே பரிசீலித்தோம். பிள்ளையவர்களின் கருத்துக்களின் அடிப்படையிலேதான் இம்முடிவுக்கு கோஸாம்பி வருகிறார். அக்காலத்திலிருந்த தமிழ் நாட்டின் பண்பாட்டு நிலையை அறிந்து கொள்ள சான்றுகள் அகப்படவில்லையென்று அவர் கூறுகிறார்.

கி.மு.வில் தமிழ் நாட்டின் வரலாற்றை அறிந்துகொள்ள வலுவான சான்றுகள் இல்லையென்பது உண்மைதான். ஆனால் இருக்கிற சான்றுகளைப் புறக்கணித்துவிட்டு முடிவுக்கு வருவதும் தவறாகும். டாக்டர் கோலாம்பியின் சரித்திரக் கண்ணோட்டமும் கொள்கையும் எனக்கு உடன்பாடுதான். ஆனால் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை கிடைக்கும் அளவு சான்றுகளைக் சேகரித்துத் தமது திறமையையும் அறிவையும், கண்ணோட்டத்தையும் பயன்படுத்தி பண்டைத் தமிழ் நாட்டின் சமூக வளர்ச்சியைப் பற்றி ஒரு சிறு குறிப்பாவது அவர் எழுத வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன்.

மோரியர் காலத்தில் தமிழ் மக்கள் கற்காலத்தை விட்டு முன்னேறியிருந்தார்கள் என்பதைக் காட்டக் கீழ்வரும் சான்றுகள் உதவும்.

1. மேலே காணப்பட்ட அகநானூறு, புறநானூறு செய்யுட்கள்.

2. ஆனைமலையிலும், பிற இடங்களிலும் கிடைக்கும் பிராமி எழுத்துச் சாசனங்கள். இவை கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

3. கிரேக்கர் எழுதிய நூல்களில் தொண்டி, முசிறி போன்ற தமிழ் நாட்டுத் துறைமுகங்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. வாணிபம், கற்கால மனிதர்களின் சிருஷ்டி அல்ல. உயர்ந்த நாகரிகமுடைய மக்கள் அதனைத் தோற்றுவிக்க முடியும்.

4. சந்திர குப்தன் காலத்திலிருந்த மெகஸ்தனீஸ் எழுதிய இந்தியாவைப் பற்றிய நூல்களிலிருந்து பாண்டிய அரசைப் பற்றி அறிகிறோம். கற்கால மனிதர்களின் குழுக்களுக்கு அரசனும், ஆட்சியமைப்பும் இருந்திருக்க முடியாது. ‘வேதங்களின் தமிழ் சொற்கள்’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரையில் வேதங்களின் தமிழ் மூலத்திலிருந்து, தோன்றிய சொற்கள் நூற்றுக்கணக்கானவை உள்ளன என்று டாக்டர் கமில் சுவலபில் அவர்கள் நிரூபித்துள்ளார்கள். மோரியர் காலத்திற்கும், வேத காலம் 2000 ஆண்டுகள் முற்பட்டது. புதிய கற்கால மனிதர்கள் வளர்ச்சியுற்ற ஒரு மொழியைப் பேசியிருக்க முடியாது. எழுதியிருக்கவும் முடியாது. தமிழ்ச் சொற்கள் வேதத்தில் உள்ளன என்றால் வேதகாலத்திலேயே தமிழர்கள் கற்காலத்தைக் கடந்த நாகரிகத்தை உடையவர்களாக இருந்திருக்க வேண்டும். அதற்கு 2000 ஆண்டுகளுக்குப்பின் அவர்கள் சமூக முன்னேற்றப் பாதையில் வளர்ச்சியுற்றிருப்பார்களே தவிர பின்னோக்கிச் சென்றிருக்க முடியாது.

மேற்கூறிய சான்றுகளால் மோரியர் காலத்தில் தமிழ் நாட்டு மக்கள் பழைய கற்கால மனிதர்கள் அல்ல என்பது தெளிவு. கிடைக்கிற ஆதாரங்களிலிருந்து சிறு இன முறைக்குழுக்கள் ஒன்று சேர்ந்து முடியரசுகள் வளர்ச்சியடைகிற ஆரம்ப நிலவுடைமைக் கட்டத்தில் நமது நாகரிகம் இருந்தது என்று கூறலாம். சமீபத்தில் அகப்பட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பாண்டிய நாணயங்களும் அயல் நாட்டு நாணயங்களும் தென் தமிழ் நாட்டில் அகப்படுவதால் ஆரம்ப வியாபாரம் அக்காலத்திலேயே தோன்றியிருந்தது என்பதைக் காட்டுகிறது. தமிழ் நாட்டின் பண்டைக்கால வரலாற்றை அறிந்து கொள்வதற்கு மறைந்தும், புதைந்தும் கிடக்கும் ஆதாரங்களை வெளிகொணர வேண்டியது தொல் பொருள் ஆராய்ச்சித் துறையினர் கடமையாகும்.