உள்ளடக்கத்துக்குச் செல்

நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/அத்தியூற்று

விக்கிமூலம் இலிருந்து

83.அத்தியூற்று

பாரஸ்டு கார்டு பரசுராம் துப்பாக்கியைத் தோளில் மாட்டிக்கொண்டு தைரியமாக முன்னே சென்றார். நாங்கள் பயந்துகொண்டே அவரைப் பின்பற்றி நடந்தோம்.

மேற்கு மலைச் சிகரங்களில் கதிரவன் மறையும் காட்சி மனோரம்மியமாக இருந்தது. ஆனால், எங்களுக்கு இருந்த நடுக்கத்தில் அழகை நாங்கள் ரசிக்க முடியவில்லை. நாங்கள் நடந்துகொண்டிருக்கும் போதே தொலைவில் எங்கோ யானைகள் பிளிரும் ஒலி, பசியால் குரூரமாக உறுமிக் கொண்டிருக்கும் புலி ஒன்றின் குரல் இவைகளைக் கேட்டோம்.

“பரசுராம் ஸார்! கொஞ்சம் வேகமாக நடப்போம். எங்களுக்கெல்லாம் பயமாக இருக்கிறது. இருட்டுவதற்குள்ளேயாவது நாம் ‘ரெஸ்ட் ஹவு’ஸில் இருக்க வேண்டாமா?” நான், பயப்படும் எங்கள் கோஷ்டியினரின் சார்பாகப் பரசுராமனிடம் இந்தப் பிரேரணையை வெளியிட்டேன்.

“ஏன் ஸார், வீணாகப் பதறுகிறீர்கள்? துப்பாக்கியே இல்லாமல் நடு ராத்திரியில் வெட்டரிவாளோடு அத்தியூற்றுக் கரைக்குப் போய்க் கரடிக் கும்பலுக்கு நடுவே தைரியமாக வெற்றி வாகை சூடி வந்தான் ஒரு சின்ன முத்துப் பண்டாரம். அவனும் நம்மைப்போல் ஒரு சாதாரண மனிதன்தான்.அவனோடு பந்தயம் போட்டுத் தோற்றுப் போய் 50 ரூபாயை எண்ணிக் கொடுத்தோம். அப்போது _ அந்த ராத்திரியில் இவன் செய்த தீரச் செயல்களை இப்போது நினைத்தாலும் சதை ஆடுகிறது.நாமும் மனிதர்கள் தாமே?” பரசுராம் இப்படி எனக்கு ஆறுதல் கூறவும், சின்னமுத்துப் பண்டாரத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டாயிற்று.

நான் பயத்தை மறந்து பரசுராமைத் தூண்டினேன். ரெஸ்ட் ஹவுஸிற்குப் போனவுடன் கூறுவதாக ஒப்புக் கொண்டார் பரசுராம். எல்லாருமே வேகமாக நடந்தோம்.

நாங்கள் ‘ரெஸ்ட்ஹவு’ஸை அடையும்போது மணி ஆறரை ஆகியிருந்தது.அங்கே பரசுராம் செய்திருந்த ஏற்பாட்டின்படி, ஒரு காட்டிலாகா வேலையாள் தேநீர் தயாரித்து வைத்திருந்தான். பலாச்சுளைகளை உட்கொண்டு தேநீர் பருகினோம். நாங்கள் பரசுராமைச் சுற்றி உட்கார்ந்ததும் அவர் சொல்லத் தொடங்கினார்.

ங்கள் பாரஸ்ட் ஏரியாவுக்கு அத்தியூற்று ஏரியா என்பது பெயர் ஏரியாவிலேயே முக்கியமானதும் சர்க்காருக்கு அதிக வருமானத்தைக் கொடுக்கக் கூடியதுமான இடம் அத்தியூற்று.

பலா மரங்கள் இருக்கக்கூடிய அத்தியூற்றுக் கரையைப் பற்றியோ நான் சொல்ல வேண்டியதே இல்லை.அது நீங்களே பர்த்த இடம்தானே? பயங்கரமான பள்ளத்தாக்கு அது எவ்வளவு கரடிகள் இந்த மலைத்தொடரில் உண்டோ, அவ்வளவு கரடிகளும் பலாப்பழக் காலம் வந்து விட்டால் அத்தியூற்றுக் கரைக்கு வந்துவிடும்.

இதனால் சர்க்காரிடமிருந்து பலாமரங்களைக் குத்தகைக்கு எடுப்பதற்கு எவரும் முன் வருவதற்குத் தயங்கினார்கள். அந்த வருடம் சர்க்காருடைய அதிர்ஷ்டமோ, அல்லது கரடிகளுடைய துரதிர்ஷ்டமோ தெரியவில்லை, பலாத் தோப்பு முழுவதும் ஒரு கணிசமான தொகைக்கு ஏலம் போயிற்று.

மலையடிவாரத்தில் கான்சாபுரம் என்று ஒரு ஊர் இருக்கிறது பாருங்கள்! அந்த ஊரைச் சேர்ந்த வேல்சாமித் தேவர் என்பவர் குத்தகையைத் துணிந்து எடுத்திருந்தார்.

சின்ன முத்துப் பண்டாரம் இந்த மலைப் பிராந்தியத்தில் தலை சிறந்த வேட்டைக்காரன். வேல்சாமித் தேவருக்கு வலதுகை என்றே அவனைச் சொல்லலாம். அவ்வளவு நெருக்கமான பழக்கமும் விசுவாசமும் தேவரிடம் அவனுக்கு உண்டு. வேல்சாமித் தேவருடைய குத்தகையை லாபகரமாக நிறைவேற்றி வைப்பதற்குத் தன்னால் ஆன உதவிகளையெல்லாம் செய்வதாக வாக்களித்திருந்தான்.

பலா மரங்கள் பண்டாரத்தின் காவலில் இருக்கின்றன என்ற செய்தியே, பலாப்பழம் திருடவருகிறவர்களைச் சரியானபடி எச்சரித்துத் தடுத்துவிட்டது. மனித உருவில் வருகிற இந்தத் திருடர்களின் தொல்லை ஓய்ந்திருந்தாலும் அதைப் போல் நான்கு மடங்கு தொல்லையைக் கரடிகள் கொடுத்தன. பகல் முழுவதும் தன்னுடைய வேட்டைத் திறமையினாலும் வெடிச்சத்தங்களாலும் அவற்றைத் துரத்திப் பலாப் பழங்களைப் காப்பாற்றிவிட்டான் சின்னமுத்துப் பண்டாரம். இரவிலும் ஒரு பெரிய வாகை மரத்தில் பரண் கட்டிக்கொண்டு, கரடிகள் வருகிற அறிகுறி தென்படும் போதெல்லாம், வெடிச் சத்தத்தைக் கிளப்பியும் குரல் கொடுத்தும் விரட்டி வந்தான். இருந்த போதிலும், பழங்களில் சிலவற்றைக் கரடிகள் நாள் தவறாமல் சிதைத்துக் கொண்டேதான் இருந்தன.

ஆனால், அந்தச் சிதைவினால் தேவருடைய குத்தகைக்குச் சிறிதும் நஷ்டம் ஏற்படாமல் பாதுகாத்து விட்டான் சின்னமுத்து. பலாப்பழக் காலம் தொடங்கியபின், முதல் மாத விற்பனையிலேயே குத்தகை பேசிய அசல் தொகை தேறிவிட்டது தேவருக்கு.

இந்தச் சமயத்தில்தான் எங்கள் இலாகா இன்ஸ்பெக்க்ஷனும் வந்தது. அன்று மாலை மூன்று மணிக்கு நானும் இன்ஸ்பெக்ஷனுக்காக வந்திருந்த, ஏற்கனவே எனக்குப் பழக்கமான இன்ஸ்பெக்டரும் அத்தியூற்றுக் கரையில் சில இடங்களைப் பார்வையிட்டவாறே நின்று பேசிக் கொண்டிருந்தோம்.

அப்போது சின்னமுத்துப் பண்டாரம் பின்தொடர வேல்சாமித் தேவர் அங்கே வந்தார் நான் தேவரை வரவேற்று இன்ஸ்பெக்டருக்கு அறிமுகம் செய்து வைத்தேன். சின்னமுத்துப் பண்டாரத்தின் வேட்டைத் திறமையைப் பற்றியும் அவரிடம் சிலாகித்துக் கூறினேன்.

சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டே நடந்த நாங்கள் நால்வரும், பலாப்பழக் காவல் நிமித்தம் இரவில் தங்குவதற்காக மரத்தின் உச்சிக் கிளைகளுக்கிடையே பண்டாரம் பரண் போட்டிருந்த வானளாவிய வாகை விருட்சத்தின் பக்கமாக வந்து சேர்ந்திருந்தோம். கரடிமேலே ஏறமுடியாதபடி அந்த வாகைமரத்தைச்சுற்றி ஆழமான குழி வெட்டப்பட்டு, குழிக்குள் முள்ளுக் கிளைகளை வெட்டிப் போட்டிருந்தார்கள். குழியைத் தாண்டி மரத்தின் அடிப்பகுதியை அடைய ஒரு பனை முண்டு இடப்பட்டிருந்தது. பண்டாரம் பரணில் ஏறிக் கொண்டதும் அந்தப் பனை முண்டுப் பாலத்தை நீக்கிவிடுவானாம்.

அந்த மரத்துக்கு அருகே கீழே ஒடும் அத்தியூற்றுக் கால்வாயின் குளிர்ந்த நீர்ப்பரப்பில் காலை இட்டுக்கொண்டே நாங்கள் மூன்று பேரும் பாறை ஒன்றில் அமர்ந்தோம். சின்னமுத்துப் பண்டாரம் மரியாதைக்காக அடக்க ஒடுக்கத்தோடு கை கட்டிக் கொண்டு பவ்வியமாக அருகில் நின்றான்.

காட்டிலாகா இன்ஸ்பெக்டர் தேவரிடமும் என்னிடமும் வேட்டையாடும் விதங்களைப் பற்றியும், ஆங்கிலத்தில் வனமிருகங்களோடு வேட்டைக்காரர்கள் போராடும் காட்சிகளை மயிர் சிலிர்க்கும்படியான சினிமாப் படக்காட்சிகளாக எடுப்பதைப் பற்றியும், கதை கதையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

“ஜங்கிள் கிங் என்ற ஒர் ஆங்கிலப் படம், ஸார் போனமாசம் ரீகலில் ஓடியது. அதிலே பாருங்கள், ஒரு பயங்கரமான காட்சி. காட்டில் எட்டுப் பெரிய கரடிகளுக்கு நடுவே ஒரே ஒரு வீரன் நின்று போராடுகிறான். என்ன அற்புதமாக எடுத்திருக்கிறான்! தத்ருபம் என்றால் தத்ரூபம்தான்,போங்க” இன்ஸ்பெக்டர் சொல்லி வாய்மூடவில்லை. “அதிலென்னங்க ஆச்சரியமிருக்குது? இங்கே மலங்காடுங்களிலே எத்தனையோ நாள் கரடி மந்தைங்களையே தனி ஆளாயிருந்து சமாளிச்சு மீண்டும் வர்ரதுண்டுங்களே!” சின்னமுத்துப் பண்டாரம் பெருமிதம் தொனிக்கும் குரலில் கூறினான்.

“சும்மா எங்கிட்டே உருட்டாதே, மேன்! இங்கேதான் பலாப் பழத்துக்குக் கரடிகள் கூட்டம் கூட்டமாக வருமே? இன்று இரவே உன்னால் நிரூபித்துக் காட்ட முடியுமா? நீ கரடிகளோடு போராடுவதை இங்கு வாகை மரத்துப் பரண் மேலிருந்து நாங்கள் பார்ப்போம். நீ சொன்னபடி செய்து மீண்டும் வந்தால் நான் உனக்கு ஐம்பது ரூபாய் தருகிறேன்.இல்லையானால், நீ எனக்கு ஐம்பது ரூபாய் தரவேண்டும்! சம்மதமா? சம்மதமானால் பேசு சும்மா வாயளப்பு வேண்டாம்” ஆத்திரத்தோடு சின்ன முத்துப் பண்டாரத்தை விரட்டிப் பார்த்தார் இன்ஸ்பெக்டர்.

ஆனால், அவனோ அதற்கும் அசரவில்லை. "ஓ! இப்பவே இன்னிக்கிராத்திரியே தயாருங்க. பந்தயமா நீங்க சொன்னதுபோல அம்பது ரூவா வச்சுக்குங்க. இதோ, இந்த வெட்டரிவாளை மட்டும் நான் உபயோகிச்சுக்கலாமாங்க” என்று கூறிவிட்டுப் பாறையில் அரிவாளைத் தீட்டத் தொடங்கி விட்டான் சின்னமுத்துப் பண்டாரம்! நானும் தேவரும் எவ்வளவோ தடுத்தும் பயன்படவில்லை. சின்னமுத்துவும் இன்ஸ்பெக்டரும் கடைசி வரை தங்கள் பந்தயத்திலும் தீர்மானத்திலும் உடும்புப் பிடியாக நின்றார்கள்.

இரவுச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு எல்லோரும் வாகை மரத்தடியில் சந்திப்பது என்று தீர்மானித்துக் கொண்டோம்.

அன்று அமாவாசைக்கு முதல் நாளாகையினால் இருட்டு மைக் குழம்பாக இருந்தது. நாங்கள் நான்கு பேரும் வாகை மரத்துப் பரண் மேல் உட்கார்ந்திருந்தோம். கீழே வனவிலங்குகளின் அட்டகாசம் பயங்கரமான ஒலிகளின் மூலம் எங்கள் செவியை எட்டிக்கொண்டிருந்தது.

வாகை மரத்திற்கு நேர் எதிரே அத்தியூற்று நீர் ஓடையின் சரிவிலிருந்த ஒரு பெரிய பலாமரத்தின்மேல் பேட்டரி லைட்டை அடித்துப் பரணிலிருந்தே பார்த்தார் தேவர். கீழே எழுபதடி பள்ளத்தில் இருபதடி தூரத்தில் அமைந்திருந்தது அந்தப் பெரிய பலாமரம்.

பேட்டரி விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் நாங்கள் நுணுக்கமாக நோக்கினோம். அந்த மரத்தின் தூரிலிருந்த நாலைந்து பலாப்பழங்களைச் சுற்றிலும் பூதாகாரமான கரும் பூதங்களைப்போல் ஐந்தாறு கரடிகள் மொய்த்துக் கொண்டிருந்தன. காட்டு மிருகங்களை அடிக்கடி கண்டு குளிர்விட்டுப்போன எங்களையே புல்லரிக்குமாறு செய்தது அந்தக் காட்சி.

என் கைக்கடிகாரத்தில் ரேடியோ எண்களும் முட்களும் அமைந்திருந்ததனால் நான் மணி பதினொன்று என்று இன்ஸ்பெக்டரிடம் கூறினேன்.

"நேரே அந்தப் பலாமரத்தின் தூருக்குப்போய், கரடிகள் மொய்த்திருக்கும் பலாப்பழங்களில் ஒன்றை எடுத்துக்கொண்டு, அவைகளை வென்றுவிட்டு இங்கே வரவேண்டியது. முக்கால் மணி நேரத்துக்குள் மரத்தடிக்குத் திருப்பிப் பரணுக்கு வந்துவிடவேண்டும். இவைகள் என் நிபந்தனைகள்” என்றார் இன்ஸ்பெக்டர்.

“உங்க நிபந்தனைப்படியே நான் போய் வர்ரேனா இல்லையாங்கிறதை, பேட்டரி லைட்டு அடிச்சு நல்லாப் பார்த்துக்குங்க” கூறிக்கொண்டே நீண்ட வெட்டரிவாளை இடுப்பிலே சொருகிக்கொண்டு வாகை மரத்துப் பரணிலிருந்து கீழே இறங்கினான் சின்னமுத்துப்பண்டாரம். “பண்டாரம்! பந்தயம், வீராப்பு, இதையெல்லாம்விட உயிர் பெரிசு, அப்பா! ஜாக்கிரதை” தேவர் எச்சரித்தார்.

"நீங்க பேசாமே நடக்கிற வேடிக்கையைப் பார்த்துக்கிட்டிருங்க. எனக்கா அதெல்லாம் தெரியாது. உங்க இனிசுபெட்டர் ஐயாவை ஐம்பது ரூபாயை இப்பவே எண்ணிவச்சுக்கிடச்சொல்லுங்க” இப்படிக் கூறியபடி வாகை மரத்தின் கீழே இறங்கிப் இரண்டாம் தொகுதி அத்தியூற்று 631 பள்ளத்தைக் கடந்து பலா மரத்தை நோக்கி உருவிய அரிவாளுடனே நடந்தான் சின்னமுத்துப் பண்டாரம். எனக்கு நெஞ்சு பதறியது; உடல் நடுங்கியது. தேவர் மீண்டும் பாட்டரி லைட்டின் விசையை அழுத்தினார். அதன் ஒளியில் எங்களுக்கு அரிவாள் ஏந்திய கையுடன் அடிமேல் அடி வைத்துப் பலாமரத்தை நெருங்கும் சின்னமுத்துவின் சிறிய உருவம் தெரிந்தது. பண்டாரம் போகிற போக்கில் வெறொரு பலாமரத்திலிருந்த முதிர்ந்து கனிந்த பழமொன்றை இரு கூறாக வகிர்ந்து எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட பலாமரத்திற்குச் சென்றான். அவன் எதற்காக ஒரு கையில் அரிவாளையும் மற்றொரு கையில் பலாப்பழத்தையும் எடுத்துக்கொண்டான் என்பது எங்களுக்கு விளங்கவே இல்லை. பண்டாரம் அடுத்த விநாடி மயிர் சிவிர்க்கும்படியான கூச்சல் ஒன்றைப் போட்டுக் கொண்டே ஓங்கிய அரிவாளுடன் பலாமரத்தை நெருங்கிவிட்டான். என்ன பயங்கரம்! ஏககாலத்தில் அங்கே கூடியிருந்த அத்தனைக் கரடிகளும் அவனை நோக்கிப் பாய்ந்து வளைத்துக்கொண்டன. - தேவர், சின்னமுத்து உயிர் பிழைப்பது துர்லபம் என்று எண்ணிக்கொண்டு, நான் மறைவாகப் பரண்மீது ஒளித்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டு கீழே இறங்கிக் கரடிகளைச் சுடத் தயாராகிவிட்டார். எனக்கும் இன்ஸ்பெக்டருக்கும் ரத்தம் உறைந்துவிட்டது. பேட்டரி லைட்டின் மங்கலான ஒளியில் பலாமரத்தடியில் சின்னமுத்துவின் உருவமே தெரியவில்லை. ஒரே கரடிக் கும்பலாகத் தெரிந்தது. அதற்கிடையில் லேசாக ஒரு மனித உருவம் தெரிவதுபோல் இருந்தது. காது செவிடாகும்படியான கரடிகளின் பயங்கர ஒலம். இந்த நிலைமையில், நாங்கள் மூவருமே திகைத்து மலைக்கும்படியான ஒரு செயலைச் சின்னமுத்து செய்தான். - கையிலிருந்த பலாப்பழத்தோடும் அரிவாளோடும் ஒரே தாவாகத் தாவி மரத்தின் அடிக் கிளையின் மேல் நின்று கொண்டு பழத்தை இரு கூறாகப் பிளந்து கீழ் நோக்கி நீட்டினான். அவன் எதிர்பார்த்தபடியே ஒரே சமயத்தில் நாலைந்து கரடிகள் அந்தப் பழக் கீறலை நோக்கித் தலையை உயர்த்தி வாயைப் பிளந்தன. சட்டென்று உடனே பழக் கீறலை இடது கைக்கு மாற்றிக்கொண்டு வலது கையால் அரிவாளை ஓங்கினான் சின்னமுத்து. இருளில் வேகமாக அவன் அரிவாள் மின்னிப் பாய்வதையும் கரடிகள் ஒலமிட்டுக் கொண்டு கீழே விழுவதையும் நாங்கள் கண்டோம். பந்தய நிபந்தனைப்படி முக்கால் மணிநேரத்தில் அதே மரத்திலிருந்து முழுப்பழம் ஒன்றை அறுத்துக் கொண்டு வெற்றி வீரனாக இறுமாப்பு நடை போட்டு வந்து சேர்ந்துவிட்டான் சின்னமுத்துப் பண்டாரம். இன்ஸ்பெக்டர் வாயடைத்துப் போய் நின்றார். நானும் தேவரும் அவன் சாமர்த்தியத்தைப் பாராட்டினோம். மணி பர்ஸைத் திறந்து ஐந்து பத்து ரூபாய் நோட்டுக்களை அவனிடம் நீட்டினார் இன்ஸ்பெக்டர். 632 : நா. பார்த்தசாரதி சிறுகதைகள் "அத்தியூற்று சின்னமுத்துப் பண்டாரம் எப்படிப் பட்டவன்னு நீங்கள் தெரிஞ்சுக்கிட்டாப் போதும், பணம் வேண்டாமுங்க” என்றான் சின்னமுத்து. இன்ஸ்பெக்டரோ வற்புறுத்தி நோட்டுக்களை அவன் கையில் திணித்தார். . "அப்படின்னா ஒன்று செய்யுங்க கீழே ஒரு நாலைஞ்சு கரடியையாவது வேலை தீர்த்திருப்பேன். அதனோட தோலை எல்லாம் நீங்க எடுத்துக்கிடுங்க. கிரயம் 50 ரூபாய்க்கு மேல் தேறும்” "நீ செய்திருக்கும் வேலைக்கு ஆயிரமாயிரமாகக் கொடுக்கலாம்” என்றார் இன்ஸ்பெக்டர். - “பண்டாரம் இப்படிப்பட்ட சாமர்த்திய முள்ளவனா இருந்ததனால்தான் என் பலாப்பழக் குத்தகை உருப்படியா லாபம் கொடுக்க முடியுது” தேவர் நன்றி தொனிக்கும் குரலில் கூறினார். “ஒருவேளை இந்த அத்தியூற்று ஏரியாவிலிருந்து என்னை மாற்றினாலும், சின்னமுத்துப் பண்டாரம் அந்த நள்ளிரவில் கரடிகளுக்கு நடுவே துப்பாக்கி இன்றி, வெட்டரிவாளாலும் யுக்தியாலும் போராடி மீண்ட அட்டகாசத்தை என் ஆயுள் பரியந்தம் என்னால் மறக்கவே முடியாது. பரசுராம் ஆச்சரியம் உள்ளடங்கிய குரலில் கதையைக் கூறி முடித்தார். "இங்கே கரடிகள் அவ்வளவு அதிகமா"? நான் சிரித்துக்கொண்டே கேட்டேன்! இத்தனை நேரம் கேட்டபின் என்னிடமே கரடி விடுகிறீர்கள் சார்' பரசுராம் என்னைப் பதிலுக்குக் கேட்டார். நாங்கள் அத்தனை பேரும் அந்த ஹாஸ்யத்தை அனுபவிக்கும் பாவனையில் விழுந்து விழுந்து சிரித்தோம். (1963-க்கு முன்)