உள்ளடக்கத்துக்குச் செல்

நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/பரபரப்பாக ஒரு செய்தி

விக்கிமூலம் இலிருந்து

122. பரபரப்பாக ஒரு செய்தி

சுப்புரத்தினம் வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்தார். ஒன்றுமில்லாத காரியத்துக்காக அப்படி ஓடிவருவதும், அலட்டிக் கொள்வதும் அவருக்கு வழக்கம்தான். சரியான சாமியார்ப் பைத்தியம் அவர்.

“ஒரு நியூஸ் கொடுக்கணும். தபால் இன்னும் அனுப்பலியே?”

“நீர் ஓடிவருகிற லட்சணத்தைப் பார்த்தால் ஏதோ கொலை, கொள்ளை மாதிரித் தலைபோற தந்தி நியூஸ் போல அத்தனை பயங்கரமா இருக்கே சுவாமீ…!”

இப்படிச் சொல்லிய நிருபர் சுவாமிநாதன் சிரித்துக் கொண்டே சுப்புரத்தினம் பிள்ளையை வரவேற்றார்.

“அபசாரம்! அபசாரம்! நான் அன்னை பரிசுத்தா தேவியின் பஜனை கோஷ்டி இங்கே முகாம் செய்யப் போறதைப் பற்றி சைவத் திருமுறைக் கழகத்தின் சார்பில் அதன் காரியதரிசி என்கிற முறையில் நியூஸ் குடுக்க வந்தால், நீர் என்னமோ ‘கொலை, கொள்ளை’ன்னு இல்லாத வார்த்தையை எல்லாம் சொல்லி மிரட்டறீரே... ஐயா?”

“உமக்கு அது மிரட்டல், எனக்கு அதுதான் ஐயா நியூஸ். ஸென்சேஷன் இல்லாமே சும்மா இப்படி பஜனை மடத்து நியூஸா அனுப்பி என்ன பிரயோஜனம்? உம்ம பரிசுத்தா தேவியும் அவர் கோஷ்டியும் இந்த ஊருக்கு வராங்கங்கிறது நியூஸே இல்லே. மாசம் பிறந்தா அவங்க தவறாமல் இங்கே வந்து போய்க் கொண்டுதானே இருக்காங்க? இந்த ஊரைப் பொறுத்த வரை அவங்க இங்கே வர்றாங்கங்கிறது நியூஸே இல்லே. வரலேங்கிறதுதான் நியூஸ் பளீர்னு தந்தி அடிக்கிற மாதிரி ஒரு நியூஸ் இல்லாமே இதெல்லாம் என்னய்யா நியூஸ்?”

“கிண்டல் போதும் சார்! இன்னிக்கி டெஸ்பாட்சிலேயே இந்த நியூஸையும் தயவுசெய்து அனுப்பி வச்சிடுங்க…”

“ஆமாம்! தலை போகிற சமாசாரம் பாருங்க. இதை இன்னிக்கி டெஸ்பாட்சிலேயே அனுப்பலேன்னாக் குடி முழுகிப் போயிடும்…!”

“தயவு செய்து ‘அன்னையார்’ விஷயத்திலே மட்டும் இப்படிச் பேசாதீங்க. இந்த யுகத்திலே பரிபூரணமான தெய்வப்பிறவி அவங்க. முழுமையடைந்த மனித அவதாரம்.”

“அதெல்லாம் சரிதான்! நல்லாப் பாடறாங்க. அவங்களும் அவங்க கோஷ்டியைச் சேர்ந்த மற்றப் பெண்களும் தூய வெள்ளை மல் புடவை அணிந்து பரிசுத்தமாக எதிரே வந்து நிற்கும் போது, சாட்சாத் சரஸ்வதியே வந்து நிற்கிற மாதிரி இருக்கு.”

“அது மட்டுமா? வேற்று மதத்தவரான நம்ம ஊர் சுலைமான் சேட் கூட அவங்க பஜனையின்னா - திருமுறைக் கழகத்தைத் தேடி வந்து, இடுப்பிலே வேஷ்டியைக் கட்டிக்கிட்டுப் பயபக்தியோட நிற்கிறாரு. அன்னை பரிசுத்தாதேவி கொடுத்தால் விபூதி குங்குமத்தைக் கூடமறுக்க முடியாமே வாங்கிப் பூசிக்கிறாரு. அவங்க ஒவ்வொரு தடவை வர்றப்பவும் தன் வீட்டுக்கு அழைச்சு சைவ உணவு வகைகளோட அவங்களுக்கு விருந்து வைக்கிறாரு.”

“கலைமானுக்கு அன்னையார் மேல் அபார பக்தி. சுலைமான் ஒரு முழு மனிதர். அவரைப் போல் தர்ம சிந்தனையாளர் வேறு ஒருவரைக் காண முடியாது” என்று அன்னையார் அடிக்கடி சுலைமானைப் புகழ்வார். சுலைமான் சேட்டோ அன்னையார் பேரைக் கேட்டதுமே, கண்களிலே நீர் மல்கி கருணைப் பெருக்குடனே, “அவங்க ஒரு பரித்தமான ஆத்மா முழுமையான மனித தெய்வம்”னு கை கூப்பறாரு.”

“சுலைமான் சேட்டு ஒருத்தர் மட்டுமில்லை, இந்த ஊரிலே எல்லாருமே அன்னையாரைக் கண்கண்ட தெய்வமா நினைக்கிறாங்க.” -

“ஆனால், கருவாட்டு வியாபாரமும், உப்பளங்களும் தவிர வேறு எதுவுமே இல்லாத இந்தச் சமுத்திரக் கரையோரத்துக் கிராமத்துக்கு மட்டுமே அன்னையார் ஏன் திரும்பத் திரும்ப வந்து முகாம் செய்யணும்கிறதுதான் எனக்குப் புரியலே. பல ஊர்களுக்கு முகாம் செய்து, பக்தியைப் பரப்ப வேண்டியவங்க இங்கே மட்டுமே வந்துக்கிட்டிருந்தா, மற்ற ஊர்களுக்கு அந்த அருள் மழை எப்போதுதான் பெய்யறதாம்?”

“நீங்க கேட்கிறது நியாயம்தான் நிருபர் சார்! ஆனால், அன்னையார் இந்த ஊரில் மட்டுமே ஏதோ விசேஷ ஆன்மிக அமைதியைக் காண்கிறார். இவ்வூர் மக்களின் மேல் அவர் அளவற்ற அன்பும் அருளும் காட்டுகிறார்.”

சுப்புரத்தினம் பிள்ளையின் விளக்கம் திருப்தி அளிக்கா விட்டாலும் நியூஸை வாங்கி, அன்று அனுப்ப இருந்த டெஸ்பாட்ச்சில் சேர்த்தார் நிருபர்.

அலைக்கரைப் பட்டி அப்படி ஒன்றும் பெரிய கிராமமில்லை. தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரை ஓரமாயிருந்த வறண்ட ஜில்லா ஒன்றின் கடற்கரை ஓரத்துக் கிராமம் அது. சுலைமான் சேட்தான் கிராமத்தில் பெரிய மீன் வியாபாரி, தேங்காய் வியாபாரமும் உண்டு. அதைத் தவிர மொத்தம் இருபது பெரிய முஸ்லீம் குடும்பங்கள். பத்துப் பதினைந்து இந்துக் குடும்பங்கள் அடங்கிய சிறு கடலோரத்துக் கிராமம்தான் அலைக்கரைப்பட்டி.

இந்தக் கிராமத்தில் இருந்த பதினைந்து சைவ வேளாளர் குடும்பங்களும் மிகுந்த சமயப் பற்றுள்ளவை.அவர்கள் ஒன்று சேர்ந்துதான் ‘சைவத் திருமுறைக் கழகம்’ என்று ஒரு சங்கம் வைத்திருந்தனர். சுப்புரத்தினம் பிள்ளைதான் அதன் நிரந்தரக் காரியதரிசி, கடற்கரை ஓரத்தில் சுலைமான் சேட்டுடைய தென்னந்தோப்பு இரண்டு மைல் நீளம் கடலுக்கு வேலி எடுத்தது போல் அமைந்திருந்தது. இந்தத் தென்னந்தோப்பிற்கும் ஊர்ப் பஞ்சாயத்துப் போர்டு கட்டிடத்திற்கும் நடுவே, கிராமத்தில் ஒரு முருகன் கோவில் அமைந்திருந்தது. அந்த முருகன் கோவில் கட்டிடத்தின் முகப்பான தகரக் கொட்டகைதான் திருமுறைக் கழகத்தின் நிகழ்ச்சிகள் நடைபெறுகிற அரங்கமாகப் பயன்பட்டு வந்தது. சைவ வேளாளர் மகமை வசூல் பணத்திலிருந்து கோவில் நடந்து வந்தது. திருமுறைக் கழகக் காரியதரிசி சுப்புரத்தினம்தான் இதற்கும் தர்மகர்த்தாவாக இருந்து வந்தார்.

கோவிலுக்கு வடக்கே, பஞ்சாயத்து போர்டு கட்டிடத்திற்கு மேற்கே இரண்டு பர்லாங் தூரத்தில் பெரிய மசூதி. கிராமத்தின் மிகப் பெரிய செல்வந்தர்கள் எல்லாம் முஸ்லீம்களாக இருந்ததனால், மசூதி பெரிதாகவும், அழகாகவும், நன்றாகவும் புதுப்பித்துக் கட்டப்பட்டிருந்தது.

அலைக்கரைப்பட்டி கிராமத்தில் யாரும் பிரசாரம் செய்யாமலே மதச்சார்பற்ற மனப்பான்மை நெடுங்காலமாக இருந்தது. சுலைமான் சேட் முருகன் கோவிலுக்கு வந்து அருள் பாடல்களைக் கேட்டு உருகுவதோ, இந்துக்கள் மசூதி வாயிலில் உள்ள மெளல்வியிடம் பயந்த குழந்தைகளுக்கு மந்திரித்துக் கொண்டு வருவதோ அங்கு மிகவும் சகஜமாக நடந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு பெளர்ணமியிலும் அலைக்கரைப்பட்டி முருகன் கோவில் அன்னை பரிசுத்தாதேவி குழுவினரின் பக்திப் பாடல்கள் ஒலிப்பது என்னும் வழக்கம் கடந்த சில ஆண்டுகளாகவே சகஜமான நிகழ்ச்சியாகி இருந்தது. சுலைமான் சேட் இந்த அருள் இசைக் கச்சேரிகளுக்கு மிகவும் உதவி புரிந்ததைக் கொண்டாடாத இந்துக்கள் உள்ளூரில் இல்லை. அருளரசிஅன்னை பரிசுத்தாதேவியின் வயதை யாராலும் கணிக்க முடியாமலிருந்தது. அவர் பதினெட்டு வயதுக் குமரி போல் இளமையாயிருந்தார். ஆனால், அவருடைய முகபாவத்தில் முதிர்ந்த ஞானப் பக்குவம் தெரிந்தது. நல்ல உயரமும், மயக்கக்கூடிய அழகும் உள்ள கட்டுடலோடு அவர் வெள்ளை நிற அழகில் துளசி மணிமாலை மின்னக் கையில் தம்புராவுடன் பாட வரும் போது சாட்சாத் மீரா தேவியே எதிரில் வந்து நிற்பது போல் இருக்கும். அவருடைய கோஷ்டியில் மொத்தம் அவரைத் தவிர பதினோரு பெண்கள். எல்லாருமே அதிரூப சுந்தரிகள். ஆனால், வெள்ளை மல் புடவை, துளசி மணி மாலை, காவியேறாத முத்துப் பற்கள்; ஒளி வீசும் துறவுக் கோலத்தில் எளிமையாகவே அனைவரும் விளங்கினர். அவர்களில் இருவர் சுருதிப் பெட்டி, ஒருவர் ஆர்மோனியம், இருவர் மிருதங்கம், இருவர் வீணை, இருவர் தபேலா, இருவர் ஃபிடில் என்று வாத்தியங்களுடன் தோன்றி உடன் பாடினர். அவர்களுடைய குரலினிமையும், பக்திப் பாடல்களும் அனைவரையுமே பரவசப்படுத்தின. ஒவ்வொரு முறையும் அருளரசி அன்னை பரிசுத்தாதேவி குழுவினர் அலைக்கரைப்பட்டியை அடைவதற்காகச் சென்னையிலிருந்து புறப்பட்டுப் பக்கத்து நகரத்துக்கு ரயில் மார்க்கமாகவோ, விமான மூலமாகவோ வந்து சேருவதற்கும், அங்கிருந்து கிராமத்திற்கு வருவதற்கும் சுலைமான் சேட் நிறைய சிரமம் எடுத்துக் கொண்டார்.

பக்கத்து நகரத்துக்குப் போய் அவர்களை அழைத்து வர அவருடைய சவர்லெட் இம்பாலா கார் ஒன்றும், மெர்ஸிடீஸ் பென்ஸ் கார் ஒன்றும் பறக்கும். பெட்ரோல் விலை பயங்கரமாக ஏறியிருக்கும் இந்தக் காலத்திலும், அன்னையாரையும் அவர் குழுவினரையும், அழைத்து வரவும், கொண்டு போய் விடவும், அதே பெரிய கார்களையே சுலைமான் சேட் தொடர்ந்து கொடுத்து வந்ததை, அவருடைய பெருந்தன்மை என்று கொண்டாடிப் புகழ்ந்தது ஊர்.

“நம்பளுக்கு ஆண்டவன் கொடுக்கிறான். நம்பள் நல்ல காரியங்களுக்கும், நல்லவங்களுக்கும் கை நிறையக் கொடுக்கிறோம்” என்று சுலைமான் சேட் அடர்ந்த தாடியினிடையே வெற்றிலைக் காவியேறிய பற்கள் தெரியச் சிரித்தபடி அடிக்கடி சொல்லுவார்.

சுலைமான் சேட்டின் பெருமுயற்சியால் அலைக்கரைப்பட்டிக்கும், அதன் சுற்றுப்புறத்துக் கடற்கரை ஊர்கள் சிலவற்றுக்குமாக அலைக்கரைப்பட்டியில் ஒரு தந்தி ஆபீஸ் வந்திருந்தது. சுலைமான் சேட் போன்ற பெரிய வர்த்தகர்களுக்கு அங்கே அவசரமான துரிதச் செய்திப் போக்குவரத்துக்காகத் தந்தி அலுவலகம் வந்தது மிகவும் வசதியாயிருந்தது.

ஆனால், தந்தி அலுவலகம் வந்து பல ஆண்டுகள் ஆகியும், அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லையே என வருந்தும் ஓர் ஆத்மா அந்தக் கிராமத்தில் உண்டு என்றால், அதுதான் நிருபர் சாமிநாதன். பக்கத்து நகரத்திலிருந்து வெளி வரும் தினசரிகள், தலைநகர் சென்னையிலிருந்து வெளிவரும் தினசரிகள் எல்லாவற்றுக்கும் அந்த வட்டாரத்து நிருபர் அவர்தான்.

தபால், தந்தி,டெலிபோன் கட்டணங்கள் மானாவாரியாக உயர்ந்து விட்ட பின் பல தினசரிகள் தங்களுடைய நிருபர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பிச் சாதாரணமான - அதிமுக்கியமில்லாத எந்தச் செய்தியையும் டெலிபோனிலோ, தந்தியிலோ அனுப்பினால் அதற்கான செலவை நிச்சயமாகக் காரியாலயம் அனுமதிக்காது என்றும், சாதாரணச் செய்திகளைச் சாதாரணத் தபாலில் அனுப்பினால் போதும் என்றும் அறிவித்து விட்டன. அந்தச் சுற்றறிக்கையிலேயே எந்தச் செய்தியை டெலிபோனிலோ, தந்தியிலோ அனுப்பலாம் என்பதற்கும் முன்மாதிரியான சில செய்திகளும் தந்திருந்தார்கள். அந்த மாதிரியான ஒரு செய்தி அங்கே ஆறாண்டுகளில் ஒரே ஒருமுறைதான் கிடைத்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதைத் தந்தியிலோ, டெலிபோனிலோ அனுப்ப முடியாமல் போய் விட்டது. அதாவது அக்டோபர், நவம்பர், டிசம்பர்-அடை மழைப் புயல் காலங்களில் கடல் கொந்தளிக்கும். அத்தகைய ஒரு ஸீஸனில் ஒரு முறை கடல் கொந்தளிப்பு அதிகமாகிக் கடலுக்குள் முதல் நாளிரவு மீன் பிடிக்கப் போயிருந்த இருபத்தைந்து செம்படவர்கள் மாண்டு போக நேரிட்டு விட்டது. ஊருக்குள் புயல் கொந்தளிப்பில் தந்தி - டெலிபோன் போக்குவரத்தும் சில நாட்கள் துண்டிக்கப்பட்டுப் போனதால், அந்த அதிமுக்கிய நியூஸை அலைக்கரைப்பட்டி கிராமத்திலிருந்து நிருபர் சாமிநாதன் தந்தி மூலம் அனுப்ப முடியாமலே போய் விட்டது. பக்கத்து நகரத்திலிருந்து கலெக்டர் வெளியிட்டபுயல் சேதம் பற்றிய அறிக்கை நிருபரை முந்திக் கொண்டது. கலெக்டரின் அறிக்கை வெளியான மறு நிமிஷமே அதிமுக்கியமான அந்த நியூஸ் பழசாகி விட்டது. நிருபர் சாமிநாதனுக்கு அதில் மிகப் பெரிய ஏமாற்றம். அடித்த புயல் தந்திக் கம்பங்களை மட்டும் விட்டு விட்டு அடித்திருக்கக் கூடாதோ என்று ஏங்கி வருத்தப்பட்டார் நிருபர் சாமிநாதன். நிருபர் வேலையே சலிப்பாக இருந்தது அவருக்கு. “தந்தி அடிக்கிற மாதிரியோ, டெலிபோன் பண்ணுகிற மாதிரியோ, தினசரியின் முதல் பக்கத்திலே ஹெட்லைன் எட்டுக் காலம் தலைப்புப் போடுகிற மாதிரியோ அஞ்சாறு வருஷத்திலே ஒரு தடவை கூட இங்கே இருந்து ஒரு நியூஸ் அனுப்ப முடியாமல் இது என்ன நிருபர் வேலை வேண்டிக் கிடக்கிறது?’ என்று நண்பர்களிடமும், தெரிந்தவர்களிடமும், பிரமுகர்களிடமும் நிருபர் சாமிநாதன் அடிக்கடி அலுத்துக் கொள்வது ஒரு வழக்கமாகவே ஆகி விட்டது.

“நிருபர் பதவிங்கிறது எங்கேயும், எப்போதும் நுழையறதுக்கு ஒரு பாஸ்போர்ட் மாதிரி. அதனால்தான் இதை வச்சிட்டிருக்கேன். நீர் என்னடான்னா மாதந்தவறாமே ‘அருளரசி அன்னை பரிசுத்தாதேவி குழுவினர் அலைக்கரைப்பட்டி விஜயம்’னு அவங்க வர்ரப்ப ஒரே தலைப்பிலே ஒரே விஷயத்தைக் கடந்த பல வருஷமாக் கொடுத்துக்கிட்டிருக்கீரு. அவங்க ஊர் திரும்பினதுமோ, அலைக்கரைப் பட்டியிலிருந்து ‘அருளரசிதேவியார் ஊர் திரும்பினார்’னும் ஒரு பழைய பல்லவிதான். எப்பத்தான் அருளரசி பரிசுத்தாதேவி அலைக்கரைப்பட்டிக்கு வரவில்லை என்றோ, வந்த பின் ஊர் திரும்பவில்லையென்றோ ஒரு நியூஸ் தரப்போ றீரு” என்று சாமிநாதன், சைவத் திருமுறைக் கழகக் காரியதரிசி சுப்புரத்தினம் பிள்ளையிடம் கேலி செய்து பேசும் போது, “அபசாரம்! அபசாரம்! அந்த மாதிரி நியூஸ் எல்லாம் என் கையிலேருந்து உமக்கு என்னிக்குமே கிடைக்காது” என்று சுப்புரத்தினம் பிள்ளை சிரித்துக் கொண்டே பதில் சொல்லி விட்டுப் போவார்.

1974ம் வருஷம் அக்டோபர் மாதத்தில், சுப்புரத்தினம் பிள்ளை நிருபர் சாமிநாதனைச் சந்தித்து, “நிருபர் சார்! இந்த மாசம் புதுமையா எல்லாம் ஏற்பாடாகி இருக்கு. அருள் அரசியார் வழக்கத்துக்கு மாறாக, ஒரு வாரம் இங்கே தங்கறாங்க. அப்புறம் திரும்பறப்போ கார்லே போகாமல், அவங்க கோஷ்டியோட பாத யாத்திரையாகவே திரும்பறாங்க. போற வழியில், ஒவ்வொரு கிராமத்திலும் அருளிசை முழக்கமும் உண்டு” என்றார்.

“இந்த நியூஸ்லே என்னய்யா புதுமை இருக்கு? ஒரு நாள் தங்கறவங்க இங்கே ஒரு வாரம் தங்கறாங்க. காரிலே திரும்பறவங்க பாத யாத்திரையாக நடந்து போகப் போறாங்க.”

“அதுதான் புதுமை சார்!”

“சரி! நியூஸை அனுப்பி வைக்கிறேன். போங்க! இந்த பஜனை நியூஸ் கூட இல்லாட்டிநான் அனுப்புறத்துக்குத்தான் இங்கே வேறே என்ன இருக்கு? போடறதும் போடாததும் அவங்க இஷ்டம்.

ஒரு வாரம் கழிந்தது. அருளரசி அன்னை பரிசுத்தாதேவியார் குழுவினருடன் அலைக்கரைப்பட்டியில் நிகழ்ச்சிகளை முடித் துக் கொண்டு பாதயாத்திரையாகத் திரும்பப் புறப்பட்டு விட்டார். பகல் முழுவதும் கிராமங்களில் தங்கல், இரவில் குழுவினருடன் நடை என்று அவர்கள் பாத யாத்திரைத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. ஏழு நாட்கள் முடிந்த பின், அன்னை பரிசுத்தாதேவி குழுவினர் அலைக்கரைப்பட்டியை விட்டுப் புறப்பட்ட மூன்றாம் நாளோ, நான்காம் நாளோ இரவு பதினொன்றரை மணிக்கு அவசர அவசரமாக இரு எக்ஸைஸ் இலாகா இன்ஸ்பெக்டர்கள் ஜீப்பில் தேடி வந்து திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த நிருபர் சாமிநாதனை எழுப்பினார்கள்.தங்கள் ஐடெண்டி கார்டுகளைக் காண்பித்தார்கள்.ஒரு முக்கியமான நியூஸை விரிவாக எழுதித் தினசரிகளுக்குத் தந்தி மூலம் தெரிவிக்க வேண்டியிருப்பதால் தங்களோடு ஜீப்பில் வர வேண்டும் என்று சாமிநாதனை உடனே அழைத்தார்கள். சாமிநாதன் உற்சாகமாகப் புறப்பட்டார்.

அப்புறம் விடியற்காலை மூன்று மணிக்கு அவர்களே சாமிநாதனை அலைக்கரைப்பட்டி தபால் தந்தி அலுவலகத்தில் இறக்கி விட்டார்கள்.

“இந்த நேரத்தில் தந்தி வாங்க மாட்டாங்களே சார்…?” என்றார் சாமிநாதன்.

“இதெல்லாம் இன்னிக்கி மட்டும் வாங்குவாங்க. ஸ்பெஷல் ஏற்பாடு இருக்கு. உள்ளே வாங்க. போஸ்ட் மாஸ்டரை எழுப்பி நான் சொல்றேன்” என்று எக்ஸைஸ் இலாகா உயர் அதிகாரியும், இன்ஸ்பெக்டரும் சாமிநாதனை உள்ளே அழைத்துப் போய் போஸ்ட் மாஸ்டரை எழுப்பி ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். தந்தியைக் கொடுத்து விட்டு ‘டீடயில்டு வெர்ஷன் பாலோஸ்’ என்றும் போட்டு விட்டு வீடு திரும்பினார் சாமிநாதன். வீடு திரும்பியதும், உடனே தாம் நேரில் பார்த்ததை வைத்து ‘ஸ்டோரி பில்ட் அப்’ பண்ணித் தலைப்புக் கொடுத்து எழுதி முடித்த போது கிழக்கு வெளுத்து விடிந்து விட்டது.இது போல ஒரு பரபரப்பான நியூஸை அவர் தமது நிருபர் வாழ்விலேயே கண்டதில்லை. எழுதி முடித்த சாமிநாதன் சோம்பல் முறித்தபடி கொட்டாவியோடு திண்ணையிலிருந்து எழுந்திருந்த போது,

“நிருபர்வாள்! ஒரு முக்கியமான செய்தி. உடனே பத்திரிகைக்கு அனுப்பணும். பாத யாத்திரையில் அருளரசியாருக்கு விவரம் புரியாத சில விஷமிகளால் இடையூறு நேர்ந்து விட்டது. இன்னியிலிருந்து அதைக் கண்டிச்சு, அன்னையார் மெளனவிரதம் இருக்காங்க..” என்று சுப்புரத்தினம் பிள்ளை பரபரப்பாகக் கூறியபடி வேர்க்க விறுவிறுக்க வந்தார். சாமிநாதன் அவர் மேல் எரிந்து விழுந்தார்.

“இந்தாங்க பிள்ளைவாள்! அன்னையாராவது, புண்ணாக்காவது? உம்ம நியூஸை உடைப்பிலே கொண்டு போய்ப் போடும். இப்போ இன்னும் ஒரு வாரத்துக்கு எனக்கு நியூஸ் இருக்கு, ஏன்? இந்தக் கிராமமே இனிமே நியூஸ் மயம்தான்!”

“என்ன சொல்றீங்க? புரியலியே?”

“புரியாட்டி இதோ இதைப் படியுங்க.”

“பாதயாத்திரை என்ற பெயரில் தங்கம் கடத்திய பெண்கள்! அலைக்கரைப்பட்டி வட்டாரத்தில் சுலைமான் சேட் கைது! அருளரசி பரிசுத்தாதேவியும் அவர் குழுவினரும் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர். எக்ஸைஸ் இன்ஸ்பெக்டர்கள் ராகவன், வீரமணி இருவரும் தங்கள் குழுவினருடன் நேற்று நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு அலைக்கரைப்பட்டிக்கும் மதுரைக்கும் நடுவே ‘பாத யாத்திரை’ செய்து கொண்டிருந்த அருளிசைக் கோஷ்டி என்ற பெயரிலான இரகசியக் கடத்தல் குழுவினரிடம் வீணை, தம்புரா, மிருதங்கம், ஆர்மோனியம், சுருதிப் பெட்டிகளில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த பல லட்சம் பெறுமானமுள்ள தங்கத்தைப் பிடித்தனர். அருளரசி பரிசுத்தாதேவியின் முகமூடி கிழிபட்டது. இவர் ஏற்கனவே பம்பாயில் எட்டாண்டுகளுக்கு முன் வைரக் கடத்தலில் பிடிபட்ட ஆயிஷா தேவிதான் என்ற உண்மையும் வெளிப்பட்டது. இவரையும், இவர் குழுவினரையும் பயன்படுத்தித் திருமுறைக் கழகம் என்ற பஜனை மடத்தில் பாடச் செய்வது போல் ஏற்பாடு செய்து, ஒவ்வொரு மாதமும் வழக்கமாக இந்தத் தங்கக் கடத்தலை நடத்தியவர் அலைக்கரைப் பட்டி சுலைமான் சேட் என்பது கண்டு பிடிக்கப்பட்டது. அலைக்கரைப்பட்டி வட்டாரத்தில் இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பல கடத்தல்காரர்கள் பிடிபடலாம் என்று அதிகாரிகள் நம்பகமாகக் கூறுகிறார்கள்” என எழுதி ‘ஸ்டோரி ஃபாலோஸ்’ என்பதாக மேலும் தொடர்வதாகச் சொல்லி முடித்திருந்தார் நிருபர் சாமிநாதன். சுப்புரத்தினம் பிள்ளை இதைப் படித்ததும்,”என்ன பிள்ளைவாள்! நம்ப முடியுதா? இல்லியா?” என்று சாமிநாதன் அவரைக் கேட்டார்.

“வேறென்ன செய்யிறது? நம்பத்தான் முடியுது! நீங்க ரொம்ப நாளா இந்த ஊர்லேருந்து ஸென்ஸேஷனலா நியூஸ் எதுவும் கிடைக்கலேன்னு வருத்தப்பட்டீங்க. இப்பக் கிடைச்சிருக்கு. இனி மேலும் தொடர்ந்து கிடைக்கும்னு தோணுது. இந்த நல்ல வேளையிலே எனக்கொரு சின்ன உபகாரம் மட்டும் நீங்க பண்ணனும்?”

“என்னது? என்ன உபகாரம்?”

“இந்த நியூஸ்ல ‘திருமுறைக் கழகம்’னு எங்க சங்கத்தோடபேர் வருது. தயவு செய்து அந்த இடத்திலே ‘இவர் குழுவினரைப் பயன்படுத்திப் பஜனை மண்டபத்தில் பாடச் செய்வது போல்’னு மட்டும் போட்டுக்குங்க. திருமுறைக் கழகம் ஒரு பாவமும் செய்யலை அநாவசியமா அதும் பேரை இதிலே இழுக்காதீங்க…”

“அதெப்படி முடியும்?”

“நீங்க மனசு வெச்சா முடியும் நிருபர்வாள்!”

நிருபர் சாமிநாதன் தாம் எழுதி வைத்திருந்த செய்தியை எடுத்துத் ‘திருமுறைக் கழகம்’ என்ற பெயர் வந்த இடத்தில் அதை அடித்து விட்டு, ‘இவரையும் இவர் குழுவினரையும் பயன்படுத்திச் சுலைமான் சேட் தனது தென்னந்தோப்புக்கு அருகிலுள்ள ஒரு தகரக் கொட்டகையில் பஜனை பாடச் செய்வது போல நடிக்கச் செய்து’ என்று திருத்திய பின் மீண்டும் அதைப் பிள்ளைவாளிடம் காண்பித்தார்.

இப்போது பிள்ளை திருப்தியோடு புன்னகை பூத்தார். உடனே நிருபர் சாமிநாதன், “நீர் எதோ ஒரு ஃபிராட் நியூஸ் சொல்ல வந்தீரே? அதை யார் சொல்வி அனுப்பிச்சாங்க?”

“அதுவா? அது பொய்யாயிருக்கணும். சுலைமானோட மாமன் ‘ஃபார்ச்சூன் பகுருதீன்’ சொன்னான்; அதை நம்பாதீங்க…”

சாமிநாதன் தந்தி ஆபீசுக்கு ஓடினார். எக்ஸைஸ் அதிகாரிகளுக்கு மிகுதியான கடத்தல் தங்கத்தைக் கண்டு பிடித்து விட்ட மகிழ்ச்சியை விட அலைக்கரைப்பட்டி வட்டார நிருபர் சாமிநாதனுக்குத்தம் வாழ்நாளில் ஸென்சேஷனலாக எட்டுக் காலம் தலைப்புக்குரிய ஒரு முழு நியூஸ் கிடைத்ததில் ஏற்பட்ட மகிழ்ச்சிதான் மிகவும் அதிகமாயிருந்தது என்று சொல்ல வேண்டும்.

(1975-க்கு முன்)