நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/ஒரு கதாபாத்திரம்
123. ஒரு கதாபாத்திரம்
மளிகைக் கடை விநாயகம் பிள்ளையைத் தெரியாதவர்கள் எங்களூரில் அநேகமாக இல்லை. அதாவது இருக்க முடியாது; இருக்கவும் கூடாது. அவரை ஒரு சாதாரண மனிதர் என்று சொல்வதை விட அவரே ஒரு தத்துவம் என்று சொல்வதுதான் ஏற்கும். சென்ற பன்னிரண்டு ஆண்டுகளாக அல்லது அப்பட்டமான வியாபார மொழியில் சொல்வதாயிருந்தால் ஒரு டசன் வருடங்களாக வியாபாரம் என்கிற தத்துவத்துக்கு ஒரு நிலையான அத்தாட்சியாக வீற்றிருப்பவர் போல் அந்தக் கல்லாப் பெட்டியை இழுத்து மூடித் திறந்து கொண்டிருக்கிறார் அவர்.
“என்ன அண்ணாச்சி? சீனாக்காரன் இப்படி இமயமலை எல்லையிலே வந்து கழுத்தை நெரிச்சிக்கிடிருக்குதானே?” என்று கடைக்கு வருகிற வாடிக்கைக்காரர் யாராவது பேச்சை ஆரம்பித்து வைப்பார்.
“ஆமாம் வேய்! சவத்துப் பய இப்பிடிச் செய்வான்னு தெரிஞ்சிருந்தாக் கர்ப்பூரம் நிறைய வாங்கி ஸ்டாக் முடக்கியிருக்கலாம். பார்த்துக் கிட்டே இரியும். இன்னும் கொஞ்ச நாளானப் பெறவு கர்ப்பூரம் கிடைக்காமல் நம்மூர்ச் செங்கழு நீர்ப் பிள்ளையாரிலிருந்து தீர்த்தபுரிசுவரப் பெருமான் வரை எல்லாச் சாமிகளும் இருட்டிலே திக்குமுக்காடப் போறாக.” என்று சீன ஆக்கிரமிப்பைக் கூடத் தம்முடைய மளிகைக் கடைக் கல்லாப் பெட்டியிலிருந்து எந்தக் கோணத்தில் பார்க்க முடியுமோ, அந்தக் கோணத்தில் பார்த்து அபிப்பிராயம் சொல்வார் விநாயகம் பிள்ளை. விநாயகம் பிள்ளை மிகவும் அழுத்தமான பேர்வழி, ஒரு பிரச்னை யார் யாரைப் பாதிக்கிறதோ, அப்படிப் பாதிக்கிற அத்தனை பேருடைய கோணங்களிலிருந்தும் பார்த்து அந்தப் பிரச்னையைப் பற்றிக் கவலைப்பட அவருக்குத் தெரியாது. கவலைப்படுவதைக் கூடச் சிக்கனமாகவும், அவசியத்தைத் தவிர்க்க முடியாமலும் செய்கிறவர் அவர்.
“அட நீரொருத்தர்… வேலையற்றுப் போய்க் கண்ட கண்ட விஷயத்துக்கெல்லாம் கவலைப்படலாமா? நாற்பது ரூபாய் வருமானமுள்ள காரியத்துக்கு இருபது ரூபாய்ப் பெறுமானத்துக்கு மேலே கவலைப்படப்பிடாது. உங்க கவலை இருக்கே; அதுக்குக் கூட ஒரு பொருளாதார மதிப்பீடு இருக்கணும் வேய்...! நாம் கவலைப்படற பிரச்சினையாலே நமக்கு நஷ்டமிருந்தாலொழியக் கவலைப்படறதை விட்டுடணும்... என்ன? புரியுதா நான் சொல்லற ‘பாயிண்ட்’…? கடுகு மிளகு விற்காத நேரத்தில் மளிகைக் கடையிலிருந்து சாமர்த்தியத்தை விற்று விளம்பரம் செய்து கொண்டிருப்பார் விநாயகம் பிள்ளை. உயர்திருவாளர் விநாயகம்பிள்ளை அவர்களிடம் பொடி போடுவதைத் தவிர வேறு எந்த விதமான கெட்டப் பழக்கமும் (பொடி போடுவது ஒரு கெட்ட பழக்கமாக இருக்குமானால்) கிடையாது. அந்தத் தேவையைக் கூட அவர் கவலைப்பட்டோ. சிரமப்பட்டோ நிறைவேற்றிக் கொள்வதில்லை. பாலமுருகன் மளிகை ஸ்டோர்ஸில் (விநாயகம் பிள்ளையின் கடை) லாகிரி வஸ்துக்களான பொடி, புகையிலை, சிகரெட், பீடி ஆகியவற்றை விற்பதில்லையானாலும், கடைப் பக்கம் வந்து போகிறவர்களில் யார், யார் பொடி போடுகிறவர்கள் என்பது விநாயகம் பிள்ளையவர்களுக்கு மனப்பாடம். அவருக்குப் பொடி போடத் தோன்றும் வேளையில் சரியாகச் சொல்லி வைத்து வரச் சொல்லியிருந்தது போல் யாராவது வந்து சேருவார்கள். பிறருடைய வரவிலிருந்து அவருடைய தேவைகள் நிறைவேறி விடும்.
“அண்ணாச்சி! கொஞ்சம் மட்டையை இந்தப் பக்கம் நீட்டுதியளா...” என்று இரவல் கேட்பதையே நிர்ப்பயமாகவும், சுதந்திரமாகவும் கேட்டு நிறைவேற்றிக் கொள்வார் விநாயகம் பிள்ளை. பிறருடைய நஷ்டத்தைப் பற்றி அவர் எப்போதுமே அதிகமாகக் கவலைப்பட்டதில்லை.விநாயகம் பிள்ளையின் வியாபாரத் தத்துவங்களில் அதுவும் ஒன்று. “வியாபாரியாக இருக்கப்பட்டவன் தன்னுடைய நஷ்டத்துக்கு மட்டுமேதான் கவலைப்பட வேண்டுமே ஒழியப் பிற்ருடைய நஷ்டத்துக்காகச் சிறிதும் கவலைப்படக் கூடாது” என்பது அவரே அடிக்கடி சொல்லுகிற வாக்கியம். அந்த வாக்கியத்தை அவர் சொல்கிறபடியே ஒரு வார்த்தை கூட நஷ்டப்படாமல் இங்கே எழுதியிருக்கிறேன்.
உயர்திரு விநாயகம் பிள்ளையவர்களின் ‘பாலமுருகன் மளிகை ஸ்டோர்ஸில்’ உபதேசத்தைத் தவிர எல்லாப் பண்டங்களும் ரொக்க வியாபாரம்தான். ‘இன்று ரொக்கம் நாளைக் கடன்’ என்று சில வியாபாரிகள் போர்டு மாட்டியிருப்பது போல் விநாயகம் பிள்ளையவர்களின் கடையில் எந்த விதமான போர்டும் வாடிக்கைக் காரர்களை மிரட்டிக் கொண்டு தொங்காது. காரணம், திருவாளர் விநாயகம் பிள்ளையே அவருடைய கடைக்கு ஒரு நிரந்தரமான போர்டு மாதிரி. அங்கே கிடைப்பவை, கிடைக்காதவை விலை, பேரம் எல்லாம் அவருடைய முகத்திலும், கண்களிலும் தெளிவாக எழுதப்பட்டாற் போலத் தெரிந்து கொண்டிருக்கும். போர்டுகளில் இல்லாத, இருக்க முடியாத கறார் - கண்டிப்பு உணர்ச்சியும் அதிகப்படியான தகுதியாக அந்த முகத்தில் இருக்கும்.போர்டுக்கும், அவருக்கும் இது ஒரு வித்தியாசம்.
திருவாளர் விநாயகம் பிள்ளைக்குத் தான தருமங்களில் அவ்வளவாக நம்பிக்கை கிடையாது. அப்படியே நம்பிக்கை இருந்தாலும், அதை வெறும் நம்பிக்கையாக மட்டும் வைத்துக் கொள்வதில் அவருக்கு எந்த விதமான ஆட்சேபணையும் கிடையாது. செயலாக ஆக்கிக் கொள்வதற்கு மட்டும் அவருக்கு அவகாசம் இல்லை.
“நான் சொல்ல வர்ரது என்னான்னு கேட்டுக்கிடுங்க. அதுவும் பெறவு நீங்க சொல்லறதைத் தாராளமாகச் சொல்லலாம். என்னைப் போல வியாபாரியா இருக்கிறவங்களுக்கு வியாபாரத்தைச் செம்மையாய்ச் செய்துக்கிட்டிருக்கிறதே பெரிய தருமந்தான். அப்புறம் வேறே தருமம் எதுக்குங்க? நாங்க யாரிட்டவும் தருமத்துக்கு வராமல் இருந்துக்கிட்டிருக்கோமே. அதுவே பெரிய தருமமாச்சே…” என்று சாதுரியமாக எதிராளியை மடக்கிப் பேசுவார் விநாயகம் பிள்ளை. இப்படிச்சொல்லிவிட்டு இரண்டு கைகளையும் மேலே முழ உயரத்துக்குத் தூக்கி ஒரு தாராளக் கும்பிடு போட்டு விட்டு ‘நீங்கள் போகலாமே’ என்ற அர்த்தத்தில் ஒரு சிரிப்பும் சிரித்துவிட்டால், அதற்கு அப்புறம் விநாயகம் பிள்ளைக்கு முன்னால் நிதி வசூல் நோட்டோடு வருகிற எந்தப் பயலும் தயங்கி நிற்க முடியாது. அந்தச் சிரிப்புத்தான் முற்றுப் புள்ளி. அதற்கு அப்புறமும் நெளிந்து குழைந்து முன்னால் நின்று கொண்டிருக்கிற ஆட்கள் அவர் முகத்தில் சிரிப்பைக் காண முடியாது. ஒரு நாளைக்கு ஒரு தரம் சூரியன் உதிக்கிற மாதிரித்தான் அந்தச் சிரிப்பும். அதற்கு ‘ஒன்ஸ் மோர்’ (இரண்டாந் தடவை) கிடையவே கிடையாது.
நமது திரு. விநாயகம்பிள்ளையின் கடையில் ஒரே ஒரு தர்மம் மட்டுமே கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாகக் கோவில் கர்ப்பக்கிருகத்தின் நந்தா விளக்கைப் போல அணையாமல் நடந்து கொண்டு வருகிறது. அதைப் பற்றிய விவரங்கள் கீழ்வருமாறு :
அவருடைய கடையில் பீடி, சிகரெட், சுருட்டு வகையறாக்களை விற்பதில்லை என்றாலும், எதிர்ப்பக்கம் ஒரு சிறிய பெட்டிக்கடை இருந்தது. அந்தப் பெட்டிக் கடையில் பீடி, சிகரெட், சுருட்டு இத்யாதிகளை வாங்கிக் கொண்டு மளிகைக் கடைப் பக்கம் வருகிறவர்களுக்கு இனாம் சர்வீஸாக இருபுறமும் ஒட்டை செய்யப்பட்ட தகர டப்பா ஒன்றில் தேங்காய் நார்க்கயிறு நீளமாக நுனியில் நெருப்போடு புகைந்து கொண்டிருக்கும். பெட்டிக் கடையும் சுற்றுப்புறமும், ஒலைக்கீற்றுக்களால் வேயப்பட்டிருந்ததனால் தற்காப்பை உத்தேசித்து இந்த ‘ஃபயர் செர்வீஸை’ - விநாயகம்பிள்ளை வசத்தில் ஒப்படைத்திருந்தான் பெட்டிக்கடைக்காரன்.
“ஐயா! நெருப்பு இருக்குதுங்களா?” என்று கேட்டுக் கொண்டு வருகிற ஆட்களை, “அன்னா. அங்ஙான இருக்குது. எடுத்துப் பத்த வச்சிக்க...” என்று சொல்லிப் பெட்டிக் கடையிலிருந்து வருகிற ஆட்களுக்கெல்லாம் நெருப்பு வைத்து அனுப்பிக் கொண்டிருந்தார் விநாயகம்பிள்ளை.
அவர் ரொம்ப அசுவாரஸ்யமாகவும், வெறுப்பாகவும் இருக்கிற வேளைகளில் இந்தப் பதில் கொஞ்சம் மாறி வெளிப்படுவதும் உண்டு.
“இங்கேதான் எங்கெயாச்சும் இருக்கும். வேணமட்டும் அள்ளி வச்சிக்க”
“நான் என்ன எந்தலை மேலேயாஅள்ளி வச்சிக்கிட்டிருக்கேன். அங்ஙனே பாரு. தகர டப்பாவிலே கயிறு இருக்கும்.”
என்று விதவிதமாக ஆளுக்குத் தகுந்தாற் போல் விநாயகம்பிள்ளையிடமிருந்து பதில் வரும். சில சமயங்களில் பதிலே வராது. கை மட்டும் நெருப்புப் புகைந்து கொண்டிருக்கிற இடத்தைச் சைகை காட்டி வைக்கும். மளிகைக் கடைப் பையன்களிடம் அவர் நடந்து கொள்கிற விதமே ஒரு கம்பீரமான தன்மை வாய்ந்ததாயிருக்கும்.“ஏலே மூதி! உன்னெயத்தாண்டா கேக்குதேன். இந்தப் பாலமுருகன் மளிகை ஸ்டோர்ஸிலே பொட்டணம் மடிக்கிறதுக்கு முன்னாலே முந்திரிப் பருப்புக் கசக்குமா இனிக்குமான்னு கூடத் தெரியாதேடா உனக்கு... களவாணிப் பயலே…? முந்திரிப் பருப்பா கேட்குது உனக்கு? முந்திரிப் பருப்புத் திங்கிற முகரையைப் பாரு… திருடித் தின்ன வெட்கமாயில்லை…?
- என்று பொட்டணம் கட்டும் போது கைக்கு இசைவாக இருந்த காரணத்தால், இரண்டு பருப்பை வாயில் போட்டு மென்று விட்ட சிறுவனைத் தாக்கு தாக்கென்று தாக்கித் தள்ளி விடுவார்.
“நாக்கு நீளக் கூடாதுடா! பயலே பொது எடத்துலே இருக்கறவன்... தோணினபடி திருடித் திங்கிறதுன்னு வந்துப்புட்டா, அப்புறம் உலகத்திலேயே நியாயம், தர்மம், ஒண்ணும் இல்லாமல் போயிடும்டா…?”
என்று அந்த முந்திரிப் பருப்புக் குற்றத்துக்கே ஒரு ‘இண்டர்நேஷனல் கிரைம் வியூ’வைக் கொடுத்துப் பெரிதுபடுத்திப் பேசுவார் விநாயகம்பிள்ளை.
“சரிதான் விட்டுத் தள்ளுங்க. ரெண்டு முந்திரிப் பருப்புக்கு ஏன் இப்படித் தொண்டைத் தண்ணி வத்துதிய…? சின்னஞ்சிறுசுக அப்பிடித்தான் இருக்கும்.தெரிந்தும் தெரியாமலும் இருந்திடணும்” என்று கடைக்குச் சாமான் வாங்க வந்த முதியவர்கள் யாராவது மத்தியஸ்தம் செய்ய வந்தால், விநாயகம்பிள்ளை அவர்களாலே அந்த மத்தியஸ்தத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாது.
“நீங்கசும்மா இரியுங்க...இது வியாபார விவகாரம். நாணயமில்லாட்டி வியாபாரம் குட்டிச் சுவருதான். இன்னிக்கு ரெண்டு முந்திரிப் பருப்புலே நீளற கை, நாளைக்குக் கல்லாப் பெட்டிவரை நீளும்... இதெல்லாம் அப்பப்போ ஒட்ட நறுக்கி எறிஞ்சிடணும்...” என்று மத்தியஸ்தத்துக்கு வந்தவர்களிடம் எறிந்து விழுவார் விநாயகம்பிள்ளை.
தன் வாழ்க்கையில் நடந்த இரண்டே இரண்டு சுவாரஸ்யமான சம்பவங்களை எப்போதாவது கதையைப் போல் இரசமாக அனுபவித்துச் சொல்வார் விநாயகம்பிள்ளை. -
அதில் ஒன்று அவர் உழவு மாடு பிடித்துக் கொண்டு வருவதற்காகச் சங்கரன் கோயில் மாட்டுத் தாவணிக்குச் சென்று விட்டுத் திரும்பிய போது இராத்திரி வேளையில், வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் அவரை மறித்துக் கொள்ளையடிக்க முயன்று முடியாமல் தோற்று ஓடிப் போன சம்பவமாயிருக்கும்.
மற்றொன்று பழைய காலத்து இராச கம்பீரத்தோடு கூடிய மைசூர் தசராவுக்கு அவர் போய்விட்டு வந்ததைப் பற்றிய வருணனையாக இருக்கும். ஆனால், அதில் ஒரு சுவாரஸ்யம் உண்டு. மைசூர் தசராவோ, மகாராஜாவோ அந்த வருணனையில் முக்கியமாயிருக்க மாட்டார்கள். திருவாளர் விநாயகம்பிள்ளை அந்த யாத்திரையை வருணிக்கும்போது அவரே மைசூர் மகாராஜாவாயிருப்பார்.இந்த இரண்டு சம்பவங்களும் சாதாரணமானவை. எல்லோருடைய வாழ்விலும் நிகழ்பவை என்று மற்றவர்கள் நினைக்கலாம். ஆனால், எல்லோருடைய வாழ்விலும் நிகழும் போது வேண்டுமானால் இவை சாதாரணமானவையாயிருக்கலாம். விநாயகம்பிள்ளையின் வாழ்வில் இவை சாதாரணமாய் நேர்ந்ததாக அவர் ஒரு போதும் ஒப்புக் கொள்ளவே மாட்டார்.
“கேளுங்க... எதுக்குச் சொல்ல வந்தேன்னா... மைசூரிலே நான் தசராவுக்குப் போயிருந்தபோது...” என்று ஆரம்பித்து விட்டாரானால் அப்புறம் அந்தப் பேச்சு சங்கரன் கோவில் மாட்டுத் தாவணிக்குப் போய் விட்டுத் திரும்பிய போது வழிப்பறிக் கொள்ளைக்காரர்களைச் சமாளித்த தீரம் வரை சொல்லப்பட்ட பின்புதான் முடிவு பெறும். நடுவில் அவரை யாராலும் தடுத்து நிறுத்தி விட முடியாது. அவருடைய இந்தச் சுய புராணத்தைத் தப்பு என்றும் சொல்லி விட முடியாது. ‘நான் கண்ட மைசூர்’ என்ற தலைப்பில், ஒரு பிரயாணப் புத்தகம் எழுதவோ, கட்டுரைத் தொடர் வெளியிடவோ அவரால் முடியாமலிருக்கலாம். இப்படி வாய் வார்த்தையாகப் பேசிக் கொள்ளக் கூடவா அவருக்கு உரிமை கிடையாது?
“மைசூரில். இப்பொழுது நடக்கிறதே தசரா; தசராவா அது? குப்பை...! பார்த்திருந்தா அந்த நாளிலே தசராவைப் பார்த்திருக்கணும்…” என்று விநாயகம்பிள்ளை அவர்கள் வக்கணையாய்ப் பேசும் போது அந்த நாள் தசராவைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே என்று நமக்கும் கூட வருத்தமாகத்தான் இருக்கும்.
நல்ல வேளையாக, அந்த நாள் தசராவைப் பார்த்து விட்டு, இந்த நாளிலும் நம் கண் காண இருக்கிற விநாயகம்பிள்ளையைப் பார்க்கும்போதே பழைய தசராவைப் பார்த்த திருப்தி ஏற்பட்டுவிடும், எனக்கு.
நான் இங்கு சொல்லியவற்றைத் தவிர இன்னும் எத்தனையோ சுவாரஸ்யமான அம்சங்கள் விநாயகம்பிள்ளையிடம் இருக்கின்றன. அவற்றை எல்லாம் தனித்தனியே விவரிக்க இயலவில்லையே என்பதில் எனக்கும் வருத்தம்தான். அப்படி விவரிக்க இந்த மாதிரி ஒரு சிறிய நடைச் சித்திரம் போதாது.
சுருக்கமாக ஒன்று சொல்ல முடியும் உயர்திருவாளர் விநாயகம்பிள்ளை அவர்கள் பாலமுருகன் மளிகை ஸ்டோர்ஸ் முதலாளி மட்டும் இல்லை. அவர் சுவையான கதாபாத்திரம். அவரே ஒரு கதை. அதில் ஒரே ஹீரோ அவர்தான். இன்னொரு ஹீரோவுக்கு இடமில்லை.
(1975-க்கு முன்)