நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/மறத்திற்கும் அதுவே துணை
124. மறத்திற்கும் அதுவே துணை
ஜான்சன் துரையை நான் முதல் முதலாகச் சந்தித்தது அப்பர் கூனூரில் உள்ள ‘சிம்ஸ்’ பூங்காவில் தான். எங்கள் இருவருக்குமிடையே நட்பு வளரக் காரணமாக இருந்தது நாய் வளர்ப்பதில் இருவருக்கும் இருந்த பொது அக்கறையே. நான் முதலில் ஜான்சன் துரையைக் கண்ட போது தன்னுடைய கம்பீரமான பதினாறடி வேங்கை போன்ற ‘ஹவுண்ட்’ நாயைப் பிடித்தவாறு ‘சிம்ஸ்’ பூங்காவின் புல்வெளியில் அவன் உலாவிக் கொண்டிருந்தான். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான் முதலில் நாயைத்தான் பார்த்திருந்தேன். பிறகுதான் துரையைப் பார்த்தேன். அந்த நாயின் கம்பீரமான ஆகிருதியே என் கவனத்தைக் கவர்ந்தது.
அதன் பின் நான் வலுவில் சென்று என்னைத் துரைக்கு அறிமுகப்படுத்திக் கொண்டேன். எங்கள் உரையாடல் ஆங்கிலத்தில் நிகழ்ந்தது. பரஸ்பர அறிமுகங்கள் முடிந்த பின்,”மிஸ்டர் ஜான்சன்! ஐ லைக் திஸ் டாக்வெரி மச்” என்று ஆரம்பித்ததுமே, துரை அவசர அவசரமாகக் குறுக்கிட்டு, “டோன்ட் கால் ஹிம் டாக். ஹிஸ் நேம் இஸ் ஸீஸர். ஹி இஸ் மோர் தென் மை ஸன்” என்று என்னைத் திருத்தினான்.
அந்த நாயின் மேல் அவன் வைத்திருந்த பாசத்தையும், பிரியத்தையும் கண்டு நான் அயர்ந்து போனேன்.
அதற்கு மறு வாரம் உதகை நாய்க் காட்சியில் மீண்டும் அவனையும் அந்த 'ஹவுண்டையும்’ கண்டேன். அவனுடைய ஸீஸர்தான் அந்தக் காட்சியில் சிறந்த நாய்க்கான முதற் பரிசைப் பெற்றது. அந்த நாயின் மேல் எனக்கு அலாதிப் பிரியமே ஏற்பட்டு விட்டது. கன்னிங்ஹாம் எஸ்டேட் உரிமையாளனான ஜான்சன் துரைக்கு வயதாகி விட்டது. நாலைந்து ஆண்டுகளுக்கு முன் அவன் மனைவியும் காலமாகி விட்டாள். அவனுக்குக் குழந்தைகள் இல்லை. அவன் மனைவி காலமானதிலிருந்தே எந்தச் சமயத்திலும் எஸ்டேட்டை விற்று விட்டு அவன் ஊர் திரும்பலாம் என்று கூனூரில் பேசிக் கொண்டார்கள். ஊர் திரும்புகிறவர்கள், அதுவும் நாடு விட்டு நாடு செல்கிறவர்கள், வளர்ப்பு நாயை உடன் கொண்டு செல்ல வசதி இல்லை என்பதால் அவன் ஊருக்குச் செல்லும் போது என்ன விலை கேட்டாலும் கொடுத்து அந்த ‘ஹவுண்டை’ வாங்கி விடுவது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். என்னிடம் வேறு சில நாய்கள் இருந்தாலும், அந்த ஹவுண்டின் மேல் எனக்கு ஒரு மோகம் பிறந்து விட்டது.
சென்னையிலும், உதகையிலும், அப்பர் கூனூரிலுமாக மூன்று மேல் நாட்டுப் பாணியிலான ஒட்டல்களை நடத்தி வரும் எனக்கு இந்த மூன்று ஊர்களிலும் மாற்றி மாற்றி இருக்க வேண்டியிருக்கும். வேட்டை நாய் வகையைச் சேர்ந்த ஹவுண்டிலும் ஜான்சன் துரையின் ஸீஸர் தனி ரகம், அதனுடைய குறிப்பறிதலும், மோப்ப சக்தியும், புரிந்து கொள்ளும் தன்மையும் இணையற்றவை. ஒரு சமயம் ஜான்சன் துரையின் பங்களாவில் ஏதோ குழாய் ரிப்பேர் முடித்து விட்டுப் போகிற போது ஒருவன் பாத்ரூமிலிருந்து ஒரு சோப்பையும், நாலைந்து புத்தம் புது கில்லெட் பிளேடுகளையும், ஒரு பழைய ரேஸரையும் எடுத்து ட்ரெளஸர் பாக்கெட்டில் அடைத்துக் கொண்டு கிளம்பியிருக்கிறான்; அவ்வளவுதான். அந்தப் பிளம்பர் காம்பவுண்ட் கேட்டைத் தாண்டுவதற்குள் ஸீஸர் புலியைப் போல் பாய்ந்து, அவனைக் கவ்விப் பிடித்து அவன் கால் சட்டையைப் பிராண்டத் தொடங்கி விட்டது.
அதன் பிடியில் கால் மணி நேரம் அவன் திணறி விட்டான். துரை சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்ததும்தான் உண்மை புரிந்ததாம். அப்புறம் அவன் திருடிய சாமான்களைக் கொடுத்து விட்டுத் துரையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு போய்ச் சேர்ந்தானாம். இன்னொரு சமயம், துரையும் ஸீஸரும் காரில் எஸ்டேட் பகுதிக்குப் போயிருக்கிறார்கள். காரையும், காருக்குள் ஸீஸரையும், டிரைவரையும் ஒரு மரத்தடியில் விட்டு விட்டுத் துரை எஸ்டேட்டுக்குள் நடந்து போயிருக்கிறான். காருக்குள் டேங்க் நிறைய முப்பது முப்பத்தெட்டு லிட்டர் வரை பெட்ரோல் இருந்திருக்கிறது. எஸ்டேட் பகுதிக் கார்களில் பெட்ரோல் திருடித் தருகிற டிரைவர்களுக்குப் பணம் கொடுத்துப் பெட்ரோல் வாங்கிக் கொள்ளும் தரகன் ஒருவன் டின்னோடும், டாங்கிலிருந்து பெட்ரோல் எடுக்கிற ட்யூபோடும் வந்து பெட்ரோல் திருடுகையில் ஸீஸர் கார்க் கதவைத் திறந்து கொண்டு குதித்து அவனைப் பிடித்துக் குரைக்கத் தொடங்கி விட்டது. நாய் குரைப்பதைக் கேட்டுத் துரை ஓடி வந்து விபரம் புரிந்து, அந்தத் திருட்டு டிரைவரை வேலையை விட்டு நிறுத்தினானாம். துரை முதுமலைக் காட்டுக்கு வேட்டைக்குப் போய்க் கொண்டிருந்த நாட்களில் ஸீஸர் அவனுக்கு அபார உதவிகள் எல்லாம் செய்திருக்கிறதாம். ஸீஸர், துரைக்குப் பி.எ. மாதிரி பயன்பட்டு வந்தது என்றார்கள்.
எனக்கோ அது மாதிரி நாய் ஒன்று கட்டாயம் தேவைப்பட்டது. என்னுடைய கூனூர் ஓட்டல் ஸ்டோர் ரூமிலிருந்து பண்டங்கள் தாறுமாறாகத் திருடு போய்க் கொண்டிருந்தன. டூட்டி முடிந்து வீடு திரும்பும் போது,வேலை ஆட்கள் சட்டைப் பை, டிராயர் பை, தொப்பி என்று எங்கெங்கோ மறைத்து வைத்துப் பொருள்களைத் திருடிக் கொண்டு போனார்கள். கூர்க்காவை விட்டுப் பைகளைச் சோதிக்கச் சொன்னால், வேலையாட்கள் அதைத் தன்மானப் பிரச்சனையாக்கி யூனியன் மூலம் வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்தார்கள்; அல்லது கூர்க்காவையே கண்ணைக் கட்டிக் கொண்டு அல்லது மிரட்டித் தொடர்ந்து திருடிக் கொண்டே இருந்தார்கள். பாதாம் பருப்பு, ஏலக்காய், சர்க்கரை, குங்குமப்பூ, நெய் என்று விலையுயர்ந்த பொருள்களாகத் திருடு போயின. கூர்க்காவுக்குப் பக்கத்தில் ஸீஸர் மாதிரி ஒரு நாயைக் கட்டி வைத்து விட்டால் அந்த விஷயம் சுலபமாகி விடும் என்று எனக்குத் தோன்றியது.
இந்த எண்ணத்துடனேயே, ஸீஸரை நன்கு பழக்கப்படுத்திக் கொண்டு விட வேண்டும் என்று நான் ஜான்சன் துரை வீட்டுக்கு அடிக்கடி போய் வரத் தொடங்கினேன். துரை அந்த நாயை வைத்திருந்த சவரணையைப் பார்த்ததும் எனக்குப் பயமாகவும், தயக்கமாகவும் கூட இருந்தது. ஓர் இளவரசனை வளர்ப்பது போல், ராஜோபசாரத்தோடு அந்த நாயை வளர்த்து வந்தான் ஜான்சன் துரை. அதற்கென்று தனிக் கட்டில், மெத்தை, பிளாங்கெட் எல்லாம் கூட இருந்தன. அவன் அதற்குப் போடுகிற பிஸ்கெட் ஹாலந்திலிருந்து வந்தது. அதைக் குளிப்பாட்டுகிற சோப், பூசுகிற பவுடர், எல்லாம் கூட விலை உயர்ந்தவையாக இருந்தன. அவனுடைய பங்களாவில் அதற்கு இறைச்சி வைக்கவும், உணவு படைக்கவும் அவன் வீட்டுப் பட்லர் பயன்படுத்தியது போல் பீங்கான் தட்டுக்களை என் ஹோட்டலில் டீலக்ஸ் ரூமில் தங்குகிறவர்கள் சூப் குடிப்பதற்குக் கூட நான் பயன்படுத்த முடிந்ததில்லை. கண்ணை இமை காப்பது போல் அந்த நாயைக் கட்டிக் காத்தான் ஜான்சன்.
அதற்கென்று தனி பட்லர், தனியாக வாராவாரம் வந்து பார்க்க ஒரு வெட்டர்னரி டாக்டர் உண்ணி ஒட்டாமல் ரோமம் கத்திரித்து விட்டு உடம்பில் ஆலிவ் ஆயில் போட்டு மஸாஜ் செய்ய ஒரு சலூன்காரன்.இப்படி எல்லாரும் இருந்தார்கள். ஸீஸரின் உடம்பு வெல்வெட் போல வழவழப்பாக இருந்தது. ஸீஸரின் மேல் ஒரு துரும்பு பட்டால் கூட ஜான்சனால் பொறுத்துக் கொள்ள முடியாது. அதற்குக் கச்சிதமாக நேரம் தவறாமல், வேளை வேளைக்கு எல்லாம் சாப்பிட வைத்தாக வேண்டும். ஒரு விநாடி முன் பின்னாகி விட்டாலும் வேலைக்காரர்களைத் திட்டித் தீர்த்து, வீட்டுக்கு அனுப்பி விடுவான் துரை. ‘ஸீஸர் இஸ் மோர் தென் மை ஸன்’ என்று அவன் என்னிடம் கூறியது நூற்றுக்கு நூறு பொருந்தும் என்று இப்போது தோன்றியது.
ஆரம்பத்தில் நான் ஜான்சன் துரை பங்களாவுக்குப் போன போதெல்லாம் என்னை வேற்றாளாகக் கருதிச் சீறிப் பாய்ந்து குரைத்த ஸீஸர், நாளடைவில் என்னோடு பழகி விட்டது. ஒவ்வொரு முறை நான் போகிற போதும் ஜான்சன் எனக்கு ஒரு சுவாரசியமான அநுபவத்தைச் சொல்வான். அந்த முறை முன்பு நடைபெற்ற உலகப் போரில் தான் இராணுவத்தில் பணியாற்றிய போது ஒரு 'டாங்க்’ சண்டையில் முழங்கால்களையும் கைகளையும் இழந்த தன் இளம் சகாக்கள் இருவரைப் பற்றிச் சொன்னான்.
“நான் அந்த இரு இளம் வீரர்களை உயிருக்குயிராக நேசித்தேன்.ஒரு மழை இரவில் டாங்க் சண்டையில் பயங்கரமாக அங்கஹீனப்பட்டு அவர்கள் நடுக்கும் குளிரில் திறந்த வெளியில் விழுந்து கிடந்தார்கள். அந்த முனையையே நாங்கள் காலி செய்து விட்டுப் பின்வாங்க வேண்டிய நிலைமை. எங்களுக்கான சப்ளைகள் எல்லாம் எதிரிகளால் துண்டிக்கப்பட்டு விட்டன. வைத்திய உதவிக்கு வழி இல்லை.
நாங்கள் வைத்திய வசதி, வாகன வசதி, வயர்லெஸ் சாதனங்கள் எல்லாவற்றையும் இழந்து விட்டோம். மூன்று முனைகளில் ஜெர்மன் ஸோல்ஜர்கள் எங்களைத் தேடிப் பூண்டோடு அழிக்க விரைந்து முன்னேறிக்கொண்டிருந்தார்கள். தப்புவதற்கு ஒரே ஒரு முனைதான் இருந்தது. நான் ஒருவன்தான் அதில் உயிர் பிழைத்தவன். நான் எப்படியும் தப்பியாக வேண்டிய அவசரம்.அங்கஹீனப்பட்ட நண்பர்களைத் தூக்கிச் செல்ல முடியாது. அவர்கள் பனியில் சித்திரவதையாகி அணு அணுவாகச் சாவதோ, துன்பப்படுவதோ கூட என்னை வேதனைப் படுத்தக் கூடியவை தாம். எனக்கு மிகவும் பிரியமானவர்களைப் பற்றி நான் ஒரு கணத்தில் முடிவெடுக்க வேண்டியிருந்தது. பார்த்தேன், பசியிலும், பனியிலும் மெல்ல மெல்லச் சாவதை விட அவர்கள் உடனே நிம்மதியாகச் சாகட்டும் என்று முடிவு செய்து, நான் என் கைத் துப்பாக்கியால் அவர்களைச் சுட்டு விட்டுத் தப்பி ஓடினேன். நீங்களே சொல்லுங்கள். எது தர்மம்? அப்போது அவர்களை நான் கொன்று விட்டு வந்ததுதான் அவர்களுக்குச் செய்த மிகப் பெரிய உதவி. நான் கொல்லாமல் விட்டுவிட்டு வந்திருந்தால் கழுகுகளும், நரிகளும் வந்து கொத்தி, அவர்களைச் சித்திரவதை செய்யலாம். அணு அணுவாக அவமானப்பட்டுச் சித்திரவதையாகச் சாவதை விட உடனடியான மரணம் என்பது மகத்தானது என்பது என் கருத்து. என்னுடைய உயிருக்குயிரான நண்பர்களுக்கு நான் அந்த வேளையில் அன்று செய்ய முடிந்த உதவி அவ்வளவுதான். என்ன செய்யலாம்?”
இந்த அனுபவத்தை மனமுருகி என்னிடம் விவரிக்கும் போதே ஜான்சனுக்குக் கண்களில் நீர் மல்கி விட்டது. அவன் உணர்ச்சி மயமாகி விட்டான். அவனால் துயரத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அவனுக்கு உயிர் இழந்த தன் பழைய நண்பர்களின் நினைவு வந்து விட்டது.
சில மாதங்களில் நான் ஆவலோடு எதிர்பார்த்த சந்தர்ப்பமும் வந்தது. ஜான்சன் துரை எஸ்டேட்டையும், பங்களாவையும், காரையும் விலை பேசிக் கொடுத்து விட்டு நாடு திரும்பப் போவதாகப் பேச்சு அடிபடத் தொடங்கியது. கடைசியில் அது உறுதியும் ஆயிற்று.
எஸ்டேட், பங்களா எல்லாவற்றையும் விலை பேசி முடித்தாயிற்று. ஸீஸர் விஷயமாகப் பேசுவதற்கு நான் ஜான்சனைச் சந்திக்கச் சென்றேன். சுற்றி வளைத்து வேறு ஏதேதோ விஷயங்களைப் பேசி விட்டு, ஸீஸரைப் பற்றி ஆரம்பித்தேன்.
“எஸ்டேட், வீடு எல்லாவற்றையும் விற்க ஏற்பாடு செய்து விட்டீர்கள் மிஸ்டர் ஜான்சன்! ஸீஸரை என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்கள் விரும்பினால் அதை ஒரு நல்ல விலை பேசி எனக்கு விற்கலாம் அல்லவா?”
இதைக் கேட்டு ஜான்சன் பதில் சொல்லாமல் என்னை ஏற இறங்கப் பார்த்தான். சிறிது தயங்கினான்; பின்பு சிரித்துக் கொண்டே சொல்லத் தொடங்கினான்:
“எஸ்டேட், வீடு எல்லாவற்றையும் போல ஸீஸரை விற்க முடியாது. யாராவது சொந்த மகனை விலைக்கு விற்பார்களா? நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”
“வேறு வழி என்ன? நீங்கள் ஸீஸரை உங்களோடு விமானத்தில் கொண்டு போவதும் சாத்தியமில்லையே!”
“அது எனக்குத் தெரியும். நான் ஸீஸரைக் கொண்டு போவது சாத்தியமில்லைதான். ஆனால் நான் எப்படி அவனைக் கண்ணும் கருத்துமாகப் பேணிப் போற்றி வளர்த்தேனோ, அப்படி வளர்க்கிற ஒருவர் கிடைத்தால், விலையின்றியே கூட அவனைச் சுவீகாரம் கொடுக்கலாம்”“நான் அப்படிவளர்க்க முடியுமென்று நம்புகிறேன் மிஸ்டர் ஜான்சன். எனக்கும் ஸீஸரைப் போன்ற ஒரு மகன் தேவை.”
“இந்தியர்களாகிய நீங்கள் ‘நாய்க்கு இவ்வளவு செலவா?’ என்று பல சமயங்களில் கஞ்சத்தனமாகக் கணக்குப் பார்ப்பீர்கள்! என் ஸீஸரோ இளவரசனைப் போல் செல்லமாக வளர்ந்தவன். எனது பராமரிப்பு இல்லாமல் அவன் ஏங்கவோ, தவிக்கவோ நேருவதை விட மரணம்கூட மேலானதாயிருக்கும். ஸீஸரின் ஸ்டேட்டஸ் தாழ்ந்து போகக் கூடாது ஸீஸருக்கு ரோஷம் அதிகம்.”
“ஒரு பத்து நாள் என் பராமரிப்பில் ஸீஸரை விட்டுப் பாருங்கள். உங்களுக்குத் திருப்தி ஏற்பட்டால், எனக்குச் சுவீகாரம் போல் செய்யலாம்.”
நீண்ட வாதப்பிரதிவாதங்கள், நிபந்தனைகளுக்குப் பின் ஜான்சன் ஸீஸரைப் பத்து நாள் என் பராமரிப்பில் விட்டுப் பார்க்கச் சம்மதித்தான். அவன் நாடு புறப்படஇன்னும் பத்துப் பதினைந்து நாட்களே இருந்தன.
மறுநாள் காலை ஜான்சனே காரில் ஸீஸரை அழைத்து வந்து, என் பங்களாவில் கொண்டு வந்து விட்டுப் போனான். என் பங்களாவில் அதற்கான ஏற்பாடுகள் சரியாகவும், கெளரவமாகவும் இருக்கின்றனவா என்பதையும் சரி பார்த்தான்.
அவன் ஸீஸரைக் கொண்டு வந்து விட்டுப் போன சிறிது நேரத்துக்குப் பின் எனக்குச் சென்னையிலிருந்து ஒரு தந்தி கிடைத்தது. எனது சென்னை ஓட்டலில் வேலை நிறுத்தம் என்றும், உடனே நான் புறப்பட்டு வரும்படியும் தந்தி வந்தது. அந்தப் பதற்றத்தில் நான் அடுத்த கணமே காரில் கோவை விரைந்து, கோவையிலிருந்து விமான மூலம் சென்னை போய்ச் சேர்ந்தேன்.
தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் ஓட்டலுக்கு நிறையச் சேதம். இருபது நாட்கள் நான் சென்னையிலிருந்து நகர முடியவில்லை. லட்சக்கணக்கில் நஷ்டம் வரும் போல் இருந்தது. இதனால் நான் ஸீஸரையே மறந்து விட்டேன்.
நடுவே வீட்டிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. நான் சென்னை வந்த பின் ஒரு நாள் காலை ஜான்சன் துரை கூனூரில் என் வீட்டுக்குத் தேடி வந்ததாகவும், அவன் வரும் போது, ஸீஸர் வீட்டு முகப்பில் குப்பைத் தொட்டியருகே நின்றதைப் பார்த்து, அவன் என் வேலைக்காரனிடம் என் பொறுப்பற்ற தன்மையைப்பற்றிக் கன்னா பின்னாவென்று திட்டி விட்டு, நாயைத் திரும்ப அழைத்துப் போய்விட்டதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடிதத்தைப் படித்தவுடன் சிறிது நேரம் மனம் வேதனைப்பட்டாலும், அப்போது அதை விடத் தலை போகிற பிரச்னைகள் இருந்ததனால் அதை உடனே மறந்து விட முடிந்தது. சென்னை ஓட்டல் நிலைமைகள் சரியாகி, மூன்று வாரங்களுக்குப் பின் நான் மறுபடி கூனூர் திரும்பிய போது ஜான்சன் துரை லண்டனுக்குப் புறப்பட்டுப் போய் விட்டது தெரிய வந்தது. ஸீஸர் என்ன ஆயிற்று என்ற விவரம் மட்டும் தெரியவில்லை. துரையிடம் பட்லராக இருந்த ஜோஸப்பைக் கூப்பிட்டு அனுப்பினேன். அவன் வந்தான், விசாரித்தேன். அவன் சொல்வதற்குத் தயங்கினான். வற்புறுத்திய போது “துரை அதை யாரிடமும் சொல்லக் கூடாதுன்னிருக்காருங்க” என்று இழுத்தான்.
“துரைதான் லண்டனுக்குப் போயாச்சே! நீ இனிமே என்ன செய்யப் போறே? என் ஓட்டல்லேயே ஒரு நல்ல வேலையாத் தரேன். பார்க்கறியா?” என்று நான் சொன்னதும், அவன் சிறிது வழிக்கு வந்தான்.
“சொல்றேங்க! ஆனா அதை நீங்க வேற யாரிட்டவும் சொல்லக் கூடாது. உங்க வீட்டிலே ஸீஸரைச் சரியாக் கவனிக்கலேன்னு துரைக்கு உங்க மேலே ரொம்பக் கோபம். உங்களை வாய் ஓயாமத் திட்டிக்கிட்டிருந்தாரு, அப்புறம் நாயை விமானத்திலே அழைச்சிட்டுப் போக எழுதிக் கேட்டுப் பார்த்தாரு. ஒண்ணும் முடியற வழியாயில்லே.
“கடைசியிலே அவரு புறப்படறன்னிக்குப் பகல் பன்னிரண்டு மணிக்குக் கோயம்புத்துார்லே பிளேன் ஏறணும்னு முடிவாச்சு. அதற்கு முதல் நாளே எஸ்டேட், பங்களா, கார் எல்லாம் வித்தாச்சு. ஏர்போர்ட்டுக்கு கூட என்னை டாக்ஸிதான் பேசச் சொன்னாரு. புறப்படற அன்னிக்கு என்னை அதிகாலையிலேயே போட்டோ கிராஃபரையும் கூட்டிக் கிட்டு வரச் சொன்னாரு.
மறுநாள் காலையிலே போட்டோகிராஃபரோட பங்களாவுக்கு ஆறு மணிக்கே போயிட்டேன். துரை முதல் நாள் ராத்திரி தூக்கமில்லாமே, நிறையக் குடிச்சிருக்கணும்னு தெரிஞ்சிச்சு.
“டே ஜோசப்! வேறு யாரிட்ட விட்டாலும், நான் கவனிச்ச மாதிரி இத்தினி ராஜோபசாரமா என் ஸீஸரை இன்னொருத்தன் கவனிப்பானாடா”ன்னு கேட்டாரு.
“அது ரொம்பக் கஷ்டம் தொரை! நீங்க அதை உயிருக்குயிராப் பெத்த மகன் மாதிரி வளர்க்கிறீங்க. அப்படி எவனும் செய்ய மாட்டான்”னேன்.
“நான் சொன்னதைக் கேட்டுத் துரை பெருமூச்சு விட்டாரு. கொஞ்சம் யோசிச்சாரு அப்புறம், ‘ஆல் ரைட்! போட்டோ கிராஃபரைக் கொஞ்ச நேரம் இருக்கச் சொல்லு, நீ ஸீஸருக்கு பிரியமான இறைச்சியைச் சமைச்சுக் கொண்டா. ரெண்டு கார்லண்ட்ஸுக்குச் சொல்லி அனுப்பு’ன்னாரு ஸீஸரை அவரே குளிப்பாட்டி வாசனைப் பவுடர் போட்டாரு. நான் போட்டோகிராஃபரை இருக்கச் சொல்லி விட்டு, மாலைக்குச் சொல்லி அனுப்பிய பின் இறைச்சி சமைக்கச் சமயலறைக்குள் நுழைந்தேன். .
“கறி சமைத்ததும், தன் கையாலேயே வாங்கி ஸீஸரை மடியில் வைத்துப் பிரியமா வயிறு நிறைய ஊட்டினார் துரை. ஸீஸரும் பிரியமாகச் சாப்பிட்டது. அப்புறம் வழக்கமில்லாத வழக்கமா, அதுக்கு ஆப்பிள் கூட நறுக்கிக் கொடுத்தாரு. ‘ஜோசப்! போட்டோகிராஃபரைக் கூப்பிடு. மாலைகளைக் கொண்டா’ன்னாரு. நான் மாலைகளைப் பிரித்துக் கொடுத்தேன். தன் கழுத்தில் ஒன்றும், நாய் கழுத்தில் ஒன்றுமாகப் போட்டுகிட்டாரு. படம் எடுக்கச் சொன்னாரு. ஸீஸரை உட்கார வைத்து, அவரு பக்கத்திலே நிற்கிறாப் போல, அது அவரைத் தழுவிக்கிறாப் போல, அவரு மேலே அது தாவி ஏறுகிறாப் போலன்னு நிறையப் படங்கள் எடுத்து தள்ளினான், போட்டோகிராஃபர்.
“போட்டோகிராஃபருக்குப் பணம் குடுத்து, பிலிம் ரோலை அப்படியே வாங்கிக் கொண்டு அவனைப் போகச் சொன்னாரு. வெளிக் கேட்டை சாத்திப் பூட்டச் சொன்னாரு. பிஸ்டலைக் கொண்டான்னாரு. எனக்கு எதுக்குன்னு புரியலே. ஆனா உடனே எடுத்துக் குடுத்தேன். ஸீஸரை அழைச்சிக்கிட்டுத் தோட்டத்து வடகோடியிலே ஒரு சண்பக மரம் உண்டுங்களே, அங்கே போனாரு. நான் பின்னாடியே போனேன். ஸீஸரைச் சண்பக மரத்திலே கட்டினாரு. பிஸ்டலை எடுத்தாரு. கொஞ்ச நேரம் சின்னப் புள்ளை கணக்கா விக்கி விக்கி அழுதாரு. அப்புறம் திடீர்னு ஸீஸரை நோக்கி மூணு வாட்டி சுட்டாரு. ஸீஸர் கதறித் துடித்து ரத்த வெள்ளத்தில் விழுந்தது. நான் தடுக்க முடியலே. சுட்டதும் பிஸ்டலைக் கீழே எறிஞ்சுட்டு ஸீஸரோட உடலைக் கட்டிக்கிட்டு அரைமணி நேரம் கதறி அழுதாரு. அப்புறம் கல்லறையிலே எழுத்துச் செதுக்கற ஆளைக் கூட்டியாரச் சொன்னாரு. ஸீஸரை அந்த மரத்தடியிலேயே புதைச்சு, அதும் மேலே பதிக்கிற கருங்கல்லிலே, ‘ஜான்சனுக்குப் பிரியமுள்ள ஸீஸரின் இனிய உயிர் இங்கே உறங்குகிறது’ன்னு தேதி, மாசம், வருஷத்தோடு தமிழிலேயே செதுக்கணும்னு பேசி, அதுக்குப் பணமும் கொடுத்தாரு. அப்புறம் டாக்ஸியிலே ஏர்ப்போர்ட் போற வரை மெல்ல அழுதுகிட்டே வந்தாரு. நானும் வழியனுப்பப் போயிருந்தேன்.”
இவ்வாறு பட்லர் ஜோஸப் சொல்லி முடித்தான்.
“ஆமாம் பங்களாவை விலைக்கு வாங்கினவங்க சண்பக மரத்தடியிலே நாய் சமாதி இருக்கச் சம்மதிச்சாங்களா?”
“துரை அவங்ககிட்டக் கொடுக்கச் சொல்லி ஒரு லெட்டர் குடுத்தாரு. அதை நான் அவங்க கிட்டக் குடுத்துட்டேன். சமாதியை அவங்க ஒண்ணும் பண்ணலே. துரையோட ‘ஸென்டிமென்ட்ஸை’ அவங்க மதிக்கிறாங்கன்னே தெரியுது”
உடனே ஜோஸப்போடு அந்த மரத்தடிக்குப் போய்ப் பார்த்தேன். கறுப்புச் சலவைக் கல்லில் வெண்ணிற எழுத்துக்களில் ‘ஜான்சனுக்குப் பிரியமுள்ள ஸீஸரின் இனிய உயிர் இங்கே உறங்குகிறது’ என்று செதுக்கியிருந்தது.
அதைப் பார்த்ததும், முன்பு உலகப் போரின் போது தன் நெருங்கிய சிநேகிதர்களை ஓர் இக்கட்டான சமயத்தில் தானே சுட்டுக் கொன்றதாக ஐான்சன் என்னிடம் கூறிய சம்பவம் நினைவு வந்தது.
பேணி வளர்ப்பது மட்டுமே பிரியத்துக்கும் அன்புக்கும் அடையாளம் என்று நான் அன்று வரை புரிந்து கொண்டிருந்தேன். பிரியமாகப் பேணி வளர்க்க முடியாத போது அழித்து விடுவதும் கூட அன்பின் உயர்ந்த பக்குவத்துக்கு அடையாளந்தான் என்று இப்போது புதிதாகப் புரிந்து கொள்ள முயல்கிறேன்! ஆம் பிரியத்துக்கு மறுபக்கம் ஒன்றும் இருக்கத்தான் செய்தது.
(கலைமகள், தீபாவளி மலர், 1975)