உள்ளடக்கத்துக்குச் செல்

நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/துல்லியமாக ஒரு மதிப்பீடு

விக்கிமூலம் இலிருந்து

125. துல்லியமாக ஒரு மதிப்பீடு

ல்லப்பன் பட்டி அப்படி ஒன்றும் பெரிய நகரமுமில்லை; சிறிய கிராமமுமில்லை. பல நடுத்தர விவசாயக் குடும்பங்கள், சில பெரிய மிராசுதார்கள், நாலைந்து ரைஸ் மில்கள், பத்திருபது வட்டிக் கடைகள், அடகு பிடிக்கும் நிலையங்கள் எல்லாம் உள்ள ஒரு நடுத்தரமான ஊர் அது. என்ன காரணத்தாலோ அந்த ஊரில் வட்டிக் கடைகளுக்கும், அடகுக் கடைகளுக்கும் பிரமாதமாக லாபம் வந்தன. அதனால் புதிது புதிதாகப் பலர் வந்து வட்டிக் கடைகளும், அடகுக் கடைகளும் போட்ட வண்ணமாக இருந்தனர்.

எத்தனை கடைகள் வந்தாலும் புராதனமான பழ. சொ. என்ற இரண்டெழுத்து விலாசத்துக்கு உள்ள மகிமை ஒன்றும் குறையவில்லை. பழ. சொ. என்ற இரண்டெழுத்துக்களைச் சொன்னாலே ஊரில் அனைவருக்கும் உடனே புரியக் கூடிய பழ. சொக்கநாதன் செட்டியார் சர்வசாதாரணமான ‘பான் புரோக்கர்’களில் ஒருவர் மட்டுமல்லர். அவர் பெயருக்கு மகிமை உண்டாக்கும் வேறு சில நல்ல குணங்களும் அவரிடம் இணைந்திருந்தன. அதனால் அவ்வூரில் அவர் பெயருக்குத் தனித் தன்மை இருந்தது.

பழ.சொ. குறள், கம்பராமயணம், வில்லி பாரதம், கந்த புராணம், திருவிளையாடல், பெரிய புராணம் போன்ற இலக்கியங்களில் நல்லரசனையும், பொதுவாகக் கவிதைகளில் ஈடுபாடும் உள்ளவர். தமிழ்ப் புலமை, கவிதை, இவற்றுக்கு மட்டும் நெகிழ்ந்து கொடுக்கக் கூடிய அவர் மனம் வட்டிக் கடை விஷயங்களில் நெகிழ்ச்சியே இல்லாத கருங்கல்லாகி விடும்.பண விஷயம்-வரவு செலவுகளில் பழ.சொ. ரொம்பவும் கறாராகவும் கச்சிதமாகவும் இருப்பார். கால் காசு கூட இன்னொருவருக்காக விட்டுக் கொடுக்க மாட்டார்.

நல்லப்பன் பட்டியில் ஒரு திருக்குறள் கழகம் இருந்தது. அதற்குப் பழ. சொ. தான் பொக்கிஷதார். ஒரு சமயம் வட்டிக் கடைக்கு வந்த வாடிக்கைக்காரன் ஒருவன்,”என்ன செட்டியார் சார்? திருக்குறள் கழகத்திலே ஈகையைப் பத்திப் பேசறீங்க, வட்டிக் கடைக்கு வந்தா ஈவு இரக்கமில்லாம நடந்துக்கிறீங்க... ஒண்ணுக்கொண்ணு சம்பந்தமே இல்லையே?’ என்று கேட்டு விட்டான்.

“சம்பந்தம் இருக்கணும்னு எந்த சாஸ்தரத்திலே தம்பி சொல்லியிருக்கு? ஈகையைப் பத்திச் சொன்ன அதே வள்ளுவர் பெருமான்தானே ஐயா ‘பொருள் செயல் வகை’ன்னும் பத்துக் குறள் சொல்லி வச்சிருக்காரு. ‘செய்க பொருளை’ன்னு ஓங்கி முதுகிலே ஓர் அறை வச்சில்ல சொல்றாரு” என்று பழ. சொ. தயங்காமல் அந்த ஆளுக்குப் பதிலடி கொடுத்தார்.

அப்படிக் கேட்ட வாடிக்கைக்காரன் ஓர் இளைஞன்தான். பி.யூ.சி. பெயிலாகி, மேலே படிப்பும் வராமல், ஊரோடு விவசாய வேலைகளைப் பார்க்கவும் முடியாமல் ஓர் இரண்டுங்கெட்டான் கிராமத்தில் தங்கி விட்ட வேல்சாமி என்ற இளைஞன்தான் ஒரு நாள் குத்தலாகப் பழ. சொ. விடம் இப்படிக் கேட்டு விட்டுப் பதிலுக்கு வாங்கிக் கட்டி கொண்டான்.

வேல்சாமியின் தற்காலிக வேலை கவிதைகள் எழுதிப் பத்திரிக்கைகளுக்கும், பதிப்பகங்களுக்கும் அனுப்புவது. எதிர்கால இலட்சியம் சினிமாக்களுக்குப் பாட்டெழுதிப் பிரபலமாக வேண்டுமென்பது. ஆனால், இரண்டாலும் அப்போதைக்கு ஒரு பைசாக் கூட அவனுக்கு வருமானமில்லாமல் இருந்தது. அவன் வறுமையில் சிக்கித் தவித்தான்.

தமிழ் இலக்கிய ரசிகர் என்ற முறையில் வேல்சாமியின் மேல் பழ. சொ. வுக்குக் கொஞ்சம் அபிமானம் உண்டு. அவனுக்குப் படிப்புதான் வரவில்லையே ஒழிய, கவிதை எழுதப் பிரமாதமான திறமையிருந்தது. திருக்குறள் கழகக் கவி அரங்கங்களிலே வேல்சாமிக்கு அடிக்கடி வாய்ப்புக் கொடுத்து வந்தார் பழ.சொ.

“நீ முன்னுக்கு வந்துடுவே தம்பீ! பழைய கவிதைகளிலே மட்டுமே காண முடிஞ்ச வாக்கு வளம் உன் பாட்டிலே இருக்கு” என்று அடிக்கடி மனநிறைவோடு வேல்சாமியைப் பழ. சொ. பாராட்டிக் கொண்டிருந்தார். ‘தம்பி! தம்பீ!’ என்று அவர் தன்னிடம் இழைவதில் நம்பிக்கை வைத்து ஒரு நாள் அவருடைய வட்டிக் கடைக்குப் படியேறிப் போய் ஐந்து ரூபாய் கை மாற்றுக் கேட்டான் வேல்சாமி. உடனே அவனை ஏற இறங்கப் பார்த்து விட்டுக் கொஞ்சம் கூட மலர்ச்சியில்லாத முகத்தோடு கறாரான வியாபாரக் குரலில்”தரேன்.ஆனா எதும் மேலே கடன் கொடுக்கச் சொல்றேன்னேன்? ரிஸ்ட் வாட்ச்சா, மோதிரமா? உன் கையிலே எதையும் காணலியே? மூளியாவில்லே வந்திருக்கே?' என்று பதிலுக்குக் கேட்டார் பழ.சொ.

அப்போதுதான் பழ. சொ. வுக்கும் வேல்சாமிக்கும் மேற்கண்ட வாக்குவாதம் நடந்தது.

“என்னை நம்பி ஓர் அஞ்சு ரூபா தரப்பிடாதா நீங்க?”

“நம்பறது, நம்பாதது எல்லாம் வேற வேறே விஷயம் தம்பீ! அடகுக் கடைன்னு வந்தாச்சின்னா அதுக்குன்னு தனி வளமுறை, இலக்கணம் எல்லாம் இருக்கு அடகு பிடிக்கிறதுன்னே இந்தத் தொழிலுக்குப் பேரு. நான் நூறு ரூபாய் மதிக்கற ஒரு பொருளை நம்பி இவ்வளவு கடன் கொடுக்கலாம். இருநூறு ரூபாய் மதிக்கற பொருளை நம்பி இவ்வளவு கடன் கொடுக்கலாம்னெல்லாம் ஒரு துல்லியமான மதிப்பீடு இருக்கு. அதை மீறி எதையும் இங்கே செய்யறதில்லை…”

“அஞ்சு ரூபா கைமாத்துக்குக் கூடவா அடகு அது இது எல்லாம்?”

“அஞ்சு பைசாவுக்குக் கூடத்தான்னு வச்சுக்கவேன்! நட்பு வேறே, தொழில் வேறே. ‘மயிர் ஊடாடா நட்பின் பொருள் ஊடாடகெடும்’னு வசனம் சொல்லுவாங்க தம்பீ!”

“அப்போ, ரிஸ்ட் வாட்ச், மோதிரம், பாத்திரம், பண்டத்தை நம்பித்தான் கடன் தருவீங்க. என்னை மாதிரி ஓர் ஏழைக் கவிஞனை நம்பித் தர மாட்டீங்க இல்லையா?”

“ரிஸ்ட் வாட்ச்சா, மோதிரமா, பாத்திரமா, பண்டமாங்கிறது முக்கியமில்லை தம்பீ! நீ கொண்டாற பொருள் எதுவோ, அது துல்லியமாக நான் மதிக்கற பொருளா இருக்கணும். அடகுக் கடையோட தத்துவம் அது.”

“நீங்க மதிக்கறது துல்லியமா இருக்கணும்னு என்ன கட்டாயம்? பல அடகுக் கடைகளிலே மோசடிதானே அதிகமா இருக்கு?”

“மத்தவங்க எப்படியோ தம்பீ? என்னைப் பொருத்த வரை ஏறக்குறைய மூணு மாமாங்கமா இந்தத் தொழில்லே இருக்கேன். என் மதிப்பீடு ஒரு நாளும் தப்பினதில்லே. ரொம்பத் துல்லியமா இருக்கும். நான் ஒரு நாளும் நஷ்டத்துக்கு வியாபாரம் பண்ணினதில்லே. என்னோடவாடிக்கைக்காரங்களையும் நஷ்டப்பட விட்டதில்லை.”

வேல்சாமி மேற்கொண்டு எதிர்வாதம் பண்ணாமல் எழுந்திருந்து போய்ச் சேர்ந்தான். பழ. சொ. சாமர்த்தியமாகப் பதில் பேசி விட்டாலும், ஐந்து ரூபாய் கைமாற்றுத் தர மறுத்து விட்டாரே என்ற ஏமாற்றம் வேல்சாமியின் மனத்தில் இருக்கத்தான் செய்தது.

சில மாதங்களில் நல்லப்பன்பட்டி மிராசுதார் ஒருவர், நிலங்கரைகளை எல்லாம் விற்றுச் சினிமாத் தொழிலில் முதலீடு செய்து படத் தயாரிப்பில் ஈடுபட்டார். அவருடைய தயவில் வேல்சாமிக்கு யோகம் அடித்தது. பழ. சொ. உட்படப் பலருடைய சிபாரிசின் பேரிலும், அந்தத் தயாரிப்பாளர் தம் சொந்த ஊரான நல்லப்பன் பட்டிக்கு வரும் போதெல்லாம் வேல்சாமி நேரில் போய்ப் பார்த்து மன்றாடியதன் காரணமாகவும், திடீரென்று ஒரு நாள் வேல்சாமிக்கு அவருடைய கம்பெனியிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டு வரச்சொல்லிக் கடிதம் வந்தது.

நல்லப்பன்பட்டியிலிருந்து சென்னை போவதற்கு எவ்வளவு குறைந்தபட்சமாகச் செலவழித்தாலும், ரூபாய் முப்பது ஆகும். அந்த அதிர்ஷ்டம் நிறைந்த கடிதம் கிடைத்த உற்சாகத்தில், அங்கே இங்கே அலைந்து ஐந்தும், பத்துமாக வாங்கி வெகு சிரமப்பட்டு இருபது ரூபாய் வரை தயார் பண்ணி விட்டான் வேல்சாமி. மாலை ஐந்தே முக்கால் மணிக்கு ரயில் ஏற வேண்டும். நாலு மணி வரை நிதி நிலைமை இருபது ரூபாயைத் தாண்டவில்லை.

பழ. சொ. விடம் போகலாம் என்றால், அவரிடம் அடகு வைக்க மதிப்பீடுள்ள பொருள் எதுவும் வேல்சாமியிடம் இல்லை. ‘நீ கொண்டாற பொருள் எதுவோ அது துல்லியமாக நான் மதிக்கறதா இருக்கணும்‘ என்று பழ. சொ. முன்பு சொல்லியிருந்த வாக்கியம் வேல்சாமிக்குத் திரும்பத் திரும்ப நினைவு வந்தது.

திடீரென்று ஏதோ ஞாபகம் வந்தவனாக, டிரங்குப் பெட்டியைக் குடைந்து, ஒரு பழைய நாற்பது பக்கம் நோட்டுப் புத்தகத்தைத் தேடி எடுத்துக் கொண்டு பழ. சொ. கடையை நோக்கிப் புறப்பட்டான் வேல்சாமி. அப்போது மாலை நாலரை மணி ஆகியிருந்தது.

பழ.சொ. கடையில்தான் இருந்தார். யாரோ ஒரு பெண் பெரிய பித்தளைக் குடம் ஒன்றைக் கொடுத்துப் பணம் வாங்கிக் கொண்டிருந்தாள். அவளை அனுப்பி விட்டு, வேல்சாமியின் பக்கம் திரும்பி,

“வா, தம்பீ! கேள்விப்பட்டேன். ரொம்ப சந்தோஷம். நம்மூர்க் கருணேசர் சமேத மெய்யம்மை நாயகி அருளால் நீ சுபிட்சமா வளர்ந்து, முன்னுக்கு வரணும்கிறது என் ஆசை” என்று பழ.சொ. அவனை வாழ்த்தி வரவேற்றார்.

“இதைக் கொஞ்சம் பாருங்க? ‘வறுமை நாற்பது’ன்னு ஒரு சின்னப் பிரபந்தம் நம்மூர் மெய்யம்மை நாயகியை முன்னிலைப்படுத்திப் பாடியிருக்கேன். நீங்க பார்த்து ரெண்டு நல்ல வார்த்தை சொன்னீங்கன்னா எனக்குத் திருப்தியாக இருக்கும்” என்று அந்த நாற்பது பக்கம் நோட்டுப் புத்தகத்தைப் பழ.சொ. விடம் நீட்டினான் வேல்சாமி.

காப்பு, கடவுள் வாழ்த்துப் பாடல்களை மனத்துக்குள்ளேயே படித்துக்கொண்ட பழ. சொ. நூலின் முதல் பாடலை உற்சாக மிகுதியால் தேவாரம் பாடுவது போல் வாய்விட்டே அப்போது பாடத் தொடங்கி விட்டார்.

“கொல்லும் பசிப்பிணியின் துன்பத்தால்
பெருங் கொடுமை தாளாமல் நான்
கும்பிட்ட கைக்குப் பதில் கூப்பல்
அறியாத வண்கணாளர்முன்
பல்லும் முகமும் மலரப் பரிந்து
பரிந்துரைத்த சொல்லெதுவும் பலிக்காமல்
பரிதவித்துப் பரிதவித்து வயிறெரிந்த
துயரத்தின் நினைவுகளை
அல்லும் பகலும் அனவரதமும்
எப்போதும் தனித்திருந்தே
ஆற்றாமை மிகுந்திடவே கையற்று
வகையற்று வழியற்று
மெல்லும் படிக்கென்னை மிகநலிய
விடலாமோ நல்லை நகர்
மெய்யம்மையே கருணேசர் நேசிக்கும்
மிகப் பெரிய நாயகியே!”

ஒரு முறை, இரு முறை, மும்முறை, ஆசை தீர வாய் விட்டுப் பாடியபின் “இந்த வாக்கு அட்சர லட்சம் பெறும் தம்பீ! நீ இப்படி உருகிப் பாடினது பொறுக்க முடியாமத்தான் அந்த மெய்யம்மை கண் திறந்து உனக்கு ஒரு வழி விட்டுருக்கா” என்றார். பழ. சொ.

“ துல்லியமாகப் பார்த்துதான் சொல்றீங்களா? இல்லே சும்மாவாச்சும் என்னை உற்சாகப் படுத்தறீங்களா?”

“முகஸ்துதிக்காக நான் எப்பவும் எதையுமே சொல்றதில்லை தம்பீ! என் மதிப்பீடு எப்பவுமே துல்லியமா இருக்கும். அட்சர லட்சம் பெறுகிற நயமான வாக்கு இது.”

“அப்போ இந்த அட்சர லட்சம் பெறுகிற நோட்டுப் புத்தகத்தை வச்சுக்கிட்டு, ஒரு பத்து ரூபாய் கடன் கொடுங்க. எனக்கு மெட்ராஸ் போக, சார்ஜுக்கு பணம் கொறையுது”.

ஒரு கணம் பழ. சொ. தயங்கினார். வேல்சாமியிடம் வாங்கிய நோட்டுப் புத்தகத்திலிருந்த மற்ற முப்பத்தொன்பது பாடல்களையும் நிதானமாகப் படித்தார். பின்பு எதுவும் பேசாமல் சிட்டை, பேரேடு, நோட்டு எல்லாவற்றையும் முறையாக எடுத்து நகை, பாத்திரம் முதலிய மற்ற அடகுப் பொருள்களுக்குப் பதிவது போல் பதிவு செய்து கையெழுத்து வாங்கிக் கொண்டு ஒரு பத்து ரூபாய் எடுத்து வேல்சாமியிடம் நீட்டினார். நோட்டுப் புத்தகத்துக்கு இரசீதும் கொடுத்தார்.

அப்போது மணி நாலு அடித்து ஐம்பது நிமிஷம். வேல்சாமி பணத்தை வாங்கிக் கொண்டு இரயிலுக்கு நேரமாகி விட்டதே என்று விரைந்தான்.

“தம்பி அதிகமில்லை. ஒரே வட்டிதான் போட்டிருக்கேன். வட்டி மாசத்துக்குப் பத்துப் பைசாத்தான் வரும்.” என்று ஏதோ சொல்லத் தொடங்கிய பழ.சொவைக் கூட அவன் சரியாகக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. பழ. சொ. நகைகள், வெள்ளிப் பாத்திரங்களைப் பத்திரப்படுத்தி வைப்பதைப் போல் அந்த நாற்பது பக்கம் நோட்டுப் புத்தகத்தையும் எடுத்து அடகுக் கடை இரும்புப் பெட்டியில் பத்திரப்படுத்தி வைத்துப் பூட்டினார்.

பழ. சொவை வசமாக மடக்கிப் பத்து ரூபாய் வாங்கி விட்டதாக உள்ளூற மகிழ்ந்தபடி சென்னைக்கு இரயிலேறினான் வேல்சாமி. இதன் பின் அவனுடைய நல்ல காலம் ஆரம்பமாயிற்று. முதல் படத்துக்கு அவன் எழுதிய பாடல்கள் எல்லாமே ‘ஹிட் சாங்ஸ்’ ஆகிப் புகழ் பெற்று எங்கும் ஒலித்தன. படிப்படியாகப் பேரும், புகழும், பொருளும் வளர்ந்தன. அவன் பெரிய ஆளாகி விட்டான்.

ஐந்து வருடங்கள் வரை வேல்சாமி ஊர்ப் பக்கம் திரும்பவே இல்லை. அந்த ஐந்து வருடங்களில் திரைப்படப் பாடல்களின் மூலம் புகழும், பொருளும் சேர்த்தது தவிர, ஏராளமான கவிதை நூல்களையும் எழுதி வெளியிட்டிருந்தான். அவை நன்றாக விற்றுக் கொண்டிருந்தன.ஏதோ பிரபல பத்திரிக்கை அவனைப் பேட்டிகண்ட போது, நீங்கள் ‘இது வரை எழுதியவற்றில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எது?’ என்று கேட்டதற்கு, “நான் சிறு வயதில் எழுதிய வறுமை நாற்பது என்ற தலைப்பிலான கவிதைகள்தான் எனக்கு மிகவும் பிடித்தவை” என்று அவன் பதில் சொல்லியிருந்தான். உடனே அவனுடைய பதிப்பாளருக்கு அந்த வறுமை நாற்பது என்ற கவிதைத் தொகுதியை விசாரித்து இரசிகர்களின் கடிதங்கள் குவிந்தன. பதிப்பாளர் வேல்சாமியிடம் வந்து ‘வறுமை நாற்பது’ பாடல்கள் புத்தகமாக வெளி வர வேண்டிய அவசியத்தை வற்புறுத்தி ஐயாயிரம் ரூபாய்க்கு ஒரு ‘செக்’கும் உடனே எழுதி நீட்டினார்.

“அது எங்க கிராமத்தில் ஒரு பெரிய விடாக்கண்டன் கொடாக் கண்டன் கிட்டச் சிக்கியிருக்கு. நேரே போனாத்தான் முடியும்” என்றான் வேல்சாமி.

பதிப்பாளர், “இந்தாங்க இதையும் எதுக்கும் கையோட வச்சுக்குங்க. அந்த விடாக்கண்டன் ஏதாவது தகராறு பண்ணினால், என்ன செய்யறது?’ என்று மேலும் ரொக்கமாக ஆயிரம் ரூபாய் வேறு தனியே ஒரு கவரில் வைத்து வேல்சாமி வசம் கொடுத்தார். எப்படியாவது புத்தகம் வெளி வந்தாக வேண்டும் அவருக்கு.

அடுத்த வாரம் கவிஞன் வேல்சாமி காரிலே நல்லப்பன்பட்டி கிராமத்துக்குப் புறப்பட்டான். ஒரு காலத்தில் தன்னை நம்பிக் கடன் கொடுக்க மறுத்த பழ. சொக்கநாதன் செட்டியாரை மருட்டவேண்டும் என்பதற்காக ஒரு பளீரென்ற சவர்லே இம்பாலா காரில் போய் இறங்கிக் “கணக்கு கிணக்கு ஒண்ணும் பார்க்க வேண்டாம்! இந்தாங்க.ஆயிரம் ரூபாயை வைச்சுக்குங்க.அந்த நாற்பது பக்கம் நோட்டுப் புத்தகத்தை அடகு மீட்டுக்கறேன்” என்பதாகச் சொல்லி பழ.சொ. வைத் திணற அடிக்க வேண்டும் என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டே காரில் போனான் வேல்சாமி. கார் மாலை

மூன்றரை மணிக்கு நல்லப்பன் பட்டியை அடைந்தது.

கடை வாசலில் திடீரென்று கப்பல் போல் ஒரு பெரிய கார் வழுக்கிக் கொண்டு வந்து நின்றதைப் பார்த்ததும், பழ. சொ. மூக்குக் கண்ணாடியை அணிந்து கொண்டு மீண்டும் உற்றுக் கவனித்தார்.

“மறந்துட்டீங்களா? நான்தான் வேல்சாமி. அந்த நாளிலே உங்க திருக்குறள் கழகக் கவியரங்கத்திலே எல்லாம் பாடியிருக்கேனே? ஞாபகம் இல்லையா?”

“அடேடே தம்பியா? வாங்க தம்பி! உட்காருங்க. ஆளே அடையாளம் தெரியாமே மாறிப் போயிட்டீங்களே?. நல்லா இருக்கீங்களா? செளக்கியம் எல்லாம் எப்படி? இன்னிக்குதான் உங்களை நினைச்சேன், பழைய பாக்கி எல்லாம் சேர்த்துப் பார்க்கறப்ப அந்தப் பத்து ரூபாய் சொச்சம் அப்படியே இருந்திச்சு.”

“நானும் அதுக்காகத்தான் வந்தேன் செட்டியார் சார்! கணக்குக் கிணக்கு ஒண்ணும் நீங்க பார்க்கவேண்டாம்.அன்னிக்கு அந்தப் பத்து ரூபாய் நீங்க தரலேன்னா, நான் மெட்ராஸ் புறப்பட்டுப் போய் இன்னைக்கி இவ்வளவு நல்லா இருக்க முடியாது. ஏதோ நீங்க நல்ல மனசோடஉதவி பண்ணினீங்க. நான் இன்னிக்கு வசதியா இருக்கேன். இந்தாங்க இதைக் கொடுத்திட்டு, என்னோட நாற்பது பக்கம் நோட்டுப் புத்தகத்தை நான் அடகு மீட்டுக்கறேன்” என்று ஆயிரம் ரூபாய் அடங்கிய கவரை எடுத்துப் பழ. சொவிடம் நீட்டினான் வேல்சாமி.

பழ. சொக்கநாதன் செட்டியார் அதைக் கையில் வாங்கிப் பிரிக்காமலே கீழே வைத்து விட்டுப் பேரேட்டை எடுத்துப் புரட்டிப் பார்த்து, “தம்பி! ரசீது கொண்டாந்திருக்கீங்களா? நீங்க தர வேண்டியது பதினேழு ரூபாய் எண்பத்தாறு காசு ஆகுது. வட்டியும் முதலுமாகச் சேர்த்துதான் சொல்றேன்” என்றார்.

“செட்டியார் சார்! இப்போ நான் ஒண்ணு கேட்கிறேன். தப்பா நினைச்சுக்காதீங்க. நான் திரும்பி வந்து அடகைத் திருப்ப முடியாமல் போயிருந்தா, உங்களுக்கு இந்தப் பதினேழு ரூபாய் எண்பத்தாறு காசு நஷ்டம் தானே? அப்படிநஷ்டமாகியிருந்தா, நீங்க முன்னே அடிக்கடி சொல்வீங்களே, என் மதிப்பீடு ரொம்பத் துல்லியமா இருக்கும்! நான் ஒருநாளும் நஷ்டத்துக்கு வியாபாரம் பண்ணினதில்லே. என்னோட வாடிக்கைக் காரங்களையும் நஷ்டப்பட விட்டதில்லைன்னு. அது பொய்யாய்ப் போயிருக்கும். இல்லையா?”

“யார் சொன்னா? நீங்க அடகு திருப்ப வராட்டி அந்த நாற்பது பக்க நோட்டிலே இருக்கிறதை நானே நம்மூர்க் கோவில் பெரிய திருவிழா சமயத்திலே, சின்னப் புஸ்தகமா அச்சடிச்சுப் போட்டு எட்டணாவோ, முக்கால் ரூபாயோ விலை வெச்சு வித்து எனக்குச் சேர வேண்டிய பதினேழு ரூபாய் எண்பத்தாறு காசை வரவு வெச்சுக்கிட்டுப் பேப்பர், பிரஸ், பைண்டிங் செலவு போக லாபத்தைக் கோவில் உண்டியல்லே போட்டுடலாம்னு இருந்தேனாக்கும்” என்றார் செட்டியார்.

வேல்சாமி அதைக் கேட்டு அசந்து போனான்.

“கவரை எடுத்துப் பிரிச்சுப் பாருங்க.”

பழ.சொ. கவரை எடுத்துப் பிரித்துப் பத்து நூறு ரூபாய் நோட்டுக்கள் இருப்பதை கண்டு மலைத்த போது, “எடுத்துக்குங்க! அவ்வளவும் உங்களுக்குத்தான். இவ்வளவு நாட்கள் நீங்க அந்த நோட்டுப் புஸ்தகத்தைக் காப்பாத்தித் தந்ததுக்கு என் வெகுமதி.”

“வெகுமதியாவது ஒண்ணாவது... அதெல்லாம் நான் வாங்குற வழக்கமில்லை.” என்று 982 ரூ. 14 நயா பைசாவைத் திருப்பிக் கொடுத்த பழ.சொ. அடகு ரசீதை வற்புறுத்திக் கேட்டார். -

“ரசீது இல்லே! எங்கேயோ தவறிப் போச்சு. நான் வேணா என் அடகுப் பண்டத்தைத் திருப்பி வாங்கிக்கிட்டதாக எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துடறேன்.”

“அப்போ சரி! நான் சொல்றபடி எழுதுங்க, தம்பீ!” என்று தொடங்கிப் பழ.சொ.வே அவன் எழுதிக் கொடுக்க வேண்டிய கடிதத்தை ‘டிக்டேட்’ செய்யத் தொடங்கினார். அந்தக் கடிதத்தில் ரசீது தொலைந்து போனதை அவனே தெரிவிப்பது போல் எழுதச் செய்திருந்தார். பழைய ரசீதின் அடிக்கட்டையிலும் அடகு மீண்டதாக அவன் கைப்பட எழுதிக் கையெழுத்து வாங்கிக் கொண்டார். இவ்வளவும் முடிந்த பின்னரே, இரும்புப் பெட்டியைத் திறந்து அந்த நாற்பது பக்க நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கண்களில் ஒத்திக் கொண்டு மரியாதையாக வேல்சாமியிடம் திருப்பிக் கொடுத்தார். பழ.சொ. வேல்சாமி அதை வாங்கிக் கொண்டு,சிரித்தபடியே பழ.சொவை நோக்கி வினவினான்:-

“நமக்குள்ளே இவ்வளவு பிஸினஸ் லைக்கா இருக்கணுமா செட்டியார் ஸார்? நீங்க இந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்தது எனக்குக் கட்டோட பிடிக்கலை. நீங்க அன்னிக்குச் சமயத்திலே பத்து ரூபா தந்திருக்கலேன்னா, நான் ஊரை விட்டே புறப்பட்டிருக்க முடியாது. எதை நம்பி அன்னிக்கு நீங்க கடன் கொடுத்தீங்க? இந்த நாற்பது பக்க நோட்டை மட்டும் நம்பியா? என்னை நம்பியா?”

“நிச்சயமா இந்த நாற்பது பக்கம் நோட்டைநம்பித்தான் கடன் கொடுத்தேன். என் மதிப்பீடு ஒரு நாளும் சோடை போகாது தம்பி! என்னிக்காவது ஒரு நாள் இந்தக் கவிதை லட்சம் லட்சமா விலை போகும்னு அன்னிக்கே மதிச்சவன் நான்.”

“அப்படிமதிச்சவர் கணக்கா ஏன் பத்து ரூபா மட்டும் கடன் கொடுத்தீர்களாம்!” “அது என் தப்பில்லே தம்பீ! நீங்க அன்னிக்கு என் கிட்டக் கடனாகக் கேட்டது அவ்வளவுதான். கேட்கிறதுக்கு மேலே நாங்க கொடுக்கப்படாது. இப்பக் கூட அஞ்சு வருஷத்துச் சில்லறை மாசத்துக்கு கணக்காகப் பத்து ரூபாய் முதலுக்கு ஒன்று வட்டி வீதத்துக்கு என்ன ஆகுதோ, அதுக்கு மேலே கால் தம்பிடி நான் உங்க கிட்டே வாங்கலே தம்பீ…”

“ஏன் வாங்காம இருக்கணும்? நீங்க அப்படி வாங்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறதுதான் எனக்குப் பிடிக்கலே.”

“அது நியாயமில்லே தம்பீ! அடகுக் கடையிலே மீட்டுக்கிட்டுப் போற பொருள் மேலே என்ன பற்று இருக்குதோ, அதை வரவு வச்சிக்கிட்டுப் பொருளைத் திருப்பிக் கொடுத்துடறதுதான் வளமுறை. அதுக்கு மேலே நான் வாங்கறதோ, வாங்க ஆசைப்படறதோ நியாயமா இருக்காது. நான் ஒரு நாளும் நஷ்டத்துக்கு வியாபாரம் பண்ணினவன் இல்லே. என் வாடிக்கைக் காரங்களையும் நஷ்டப்பட விட்டதில்லை. அது என் தொழில் தர்மம். அதை நான் விட்டுட முடியாதுங்க தம்பீ… நீங்க என்னை மன்னிச்சுடணும்” என்று கைகூப்பினார் பழ.சொ.

வேறு வழியின்றிக் கவிஞர் வேல்சாமியும் பதிலுக்குக் கைகூப்பி விட்டுப் புறப்பட எழுந்திருக்க வேண்டியதாயிற்று.

(கல்கி, தீபாவளி மலர், 1975)