உள்ளடக்கத்துக்குச் செல்

நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/புகழ்த் துறவு

விக்கிமூலம் இலிருந்து

133. புகழ்த் துறவு

‘கலீர், கலீர்’ என்று சிலம்புகள் ஒலித்தன, தண்டைகள் குலுங்கின. கை வளைகள் ‘கல்’லென்ற சுநாதத்தால் பொருள் விளங்காத இன்பக் காவியம் ஒன்றைப் பாடிக் கொண்டிருந்தன. மிருதங்கமும், தபேலாவும் பதத்துடனே ஒத்து முழங்கின.

முத்துக்குமார நட்டுவனார் ஓர் ஓரமாக விரித்திருந்த விரிப்பில் அமர்ந்து, பதம் பிடித்துக் காட்டிக் கொண்டிருந்தார். தில்லை வடிவு அற்புதமாக அபிநயம் பிடித்து ஆடிக் கொண்டிருந்தாள். கொடி போலச் சுழன்று ஆடினாள். கலையின் நுணுக்கம் பூர்ணமாக விளங்கிச் சோபிக்கும்படியான ஒவ்வோர் அம்சமும், அவளது நிருத்தியத்தில் குறைவற நிறைந்திருந்தன. அங்கங்களின் ஒவ்வொரு சின்னஞ்சிறு அசைவிலும் பாவம் கனிந்து பரிணமித்தது.

பூவணைநல்லூர் வேதநாதசுவாமி கோவிலில், ஒரு சதிர்க்காரியின் நடனத்திற்காக இவ்வளவு ‘நடன ரசிகர்கள்’ கூடியது என்பது இதுதான் முதல் தடவை என்று துணிந்து கூறலாம். ‘கீதமினிய குயிலே’ என்று தொடங்கும் திருவாசகம் குயிற்பத்தில் உள்ள பாடலைப் பாடி முக்கால் மணி நேரமாக அதற்கு அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தாள் தில்லை வடிவு. மாணிக்க வாசகரின் வாக்கே, மனமுருக்கும் சுவையையுடையது; தேன் போன்றது! அந்தத் தெய்வீகத் தேனில் தனது அபிநய ஸெளந்தரியம் என்கிற அமுதத்தைக் கலந்து, கூடியிருந்தவர்களுக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள் தில்லை. எல்லோரும் கண்களாரச் செவியார மாந்தி மயங்கிக் கட்டுண்டு சிலைகளைப் போல மயங்கி நின்று கொண்டிருந்தனர்.

தம்மை மறந்த ஈடுபாட்டுடன் பதம் பிடித்துத் தாளம் மீறாமல் தில்லையை இயக்கிக் கொண்டிருந்தார் முத்துக்குமார நட்டுவனார்.

அர்ச்சகர் அர்த்தநாரீஸ்வரக் குருக்கள் கூட்டத்தை விலக்கிக் கொண்டு பரபரப்பாக நட்டுவனாரை நெருங்கி வந்தார்.

“என்ன நட்டுவனாரே இது? காலநேரம் தெரிந்துகொள்ள மாட்டேன் என்கிறீர்களே? தில்லை எங்கே ஒடிப் போகி விடப் போகிறாள்? நேற்றுத்தானே பொட்டுக் கட்டியிருக்கிறது. இனி மேல் அவள் பணிதானே வேதநாதனுக்கு? இன்று சுவாமி புறப்பாட்டுக்கு நேரமாகி விட்டது. கொஞ்சம் சீக்கிரம் முடியுங்கள்!” நட்டுவனார் மட்டுமில்லை; ஏக காலத்தில் இப்படி இரைந்து பேசிய குருக்களை, அப்படியே எரித்து பஸ்மம் ஆக்கி விடுவது போல நோக்கியது கூட்டம் முழுவதுமே. ஆனால், நட்டுவனாரும் அநேகமாக அந்தப் பதத்தோடு முடித்து விடக் கருதினார். ‘குருக்கள் கூறுவதும் ஒரு வகையில் நியாயம்தானே?’ என்று தோன்றியது நட்டுவனாருக்கும். நாட்டியம் முடிந்தது. கூட்டமும் மெல்ல மெல்லக் கலைந்தது.

ஆனால்...

விதி என்கின்ற ஒரு சூத்திரக் கயிற்றை வைத்து இறைவன் மனித வாழ்க்கையை எவ்வளவோ விதமாகக் கணத்திற்குக் கணம் ஆட்டி அலைத்து மாற்றுகிறான்! அதில்தான் எவ்வளவு அற்புதங்கள் அடங்கி இருக்கின்றன? முதல் நாள் ‘பரம்பரைப் பாத்தியதை’ என்ற பேரில் தன் கோவில் தேவதாசியாகப் பொட்டுக்கட்டிக்கொண்ட அந்த இளந் தேவதாசியை வாழ்வின் இணையற்ற ஒளி வெள்ளத்தின் இடையே தவழவிட்டு விட்டு, பின் மீண்டும் தன் பணியை நாடி ஓடிவரச் செய்யவேண்டும் என்பது சர்வேசுவரனான வேதநாதப் பெருமான் திருவுள்ளக் கருத்தானால் அதை மாற்றுவதற்குக் கேவலம், இந்த அர்த்தநாரீஸ்வரக் குருக்களும், அந்த முத்துக்குமார நட்டுவனாரும் யார்? ஏன், தில்லை வடிவைப் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த அவள் தாய் பொன்னியே தலைகீழாக நின்று பிடிவாதம் செய்தும் அதை மாற்ற முடியவில்லையே! விதியின் நிகழ்ச்சிகளுக்கு ஈஸ்வர ரீதியாக உள்ள மூல காரணம் அவன் மட்டுமே அறிந்தவை. அதன் பலாபலன்களும் அவனுக்கே வெட்டவெளிச்சம். ஜீவ குலத்தோடு எத்தனையோ கோடானு கோடி மார்க்கங்களில் விளையாடுகிறான் அவன். அவற்றில் ஒவ்வொன்றிற்கும் ஒர் உள்ளர்த்தம் இருக்கிறது. அது அவன் மட்டும் அறிந்தது. தில்லைவடிவையும் அப்படி ஒரு விளையாட்டு விளையாடி வேடிக்கை பார்த்தான் வேதநாதப்பெருமான்.

2

சுவாமி புறப்பாட்டிற்கு அறிகுறியாக வாசலில் அதிர்வேட்டுக்கள் போடத் தொடங்கியபோது, முத்துக்குமார நட்டுவனாரும், தாய் பொன்னியும் புடை சூழக் கோயில் மரியாதைகளைப் பெற்றுக்கொண்டு வீட்டிற்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தாள் தில்லைவடிவு. அவளும், உடன் வந்து கொண்டிருந்த தாயும் நட்டுவனாரும் கோபுரவாசலை அடைவதற்காகக் கோவிலின் தேவஸ்தான காரியாலயத்தின் அருகே வந்த சமயம்,கோவில் நிர்வாக அதிகாரி வடிவேலுப்பிள்ளை, வெள்ளைக்காரன் போன்று உடையணிந்து கொண்டிருந்த ஒருவரோடு அவர்களை நோக்கி எதிரே வந்தார். அவர்கள் எதிரே நின்றனர், வருகின்றவர்களை எதிர்மறித்துக் கொண்டுபோக முடியாமல்.

வடிவேலுப் பிள்ளையும் சூட்டும் கோட்டும் முகம் நிறைந்து காட்டும் கருப்புக் கண்ணாடியுமாக வந்த அந்த மனிதரும், நேரே தங்களை நோக்கித் தான் வருகின்றார்கள் என்பதைத் தில்லை முதலியவர்கள் சீக்கிரமே புரிந்து கொண்டார்கள்.

“நட்டுவனாரே! இவர் என் சிநேகிதர்.பட்டணத்தில் ஒரு சினிமாக்கம்பெனியிலே பெரிய வேலை இவருக்கு தில்லையைப்பற்றி ஒரு விஷயம் பேசிக் கலந்து கொள்ள வேண்டுமென்கிறார் இவர். இன்றைக்குத் தில்லையின் நாட்டியத்தைப் பார்த்தாராம். அப்போதிருந்து என்னிடம் வாய் ஓயாமல் புகழ்ந்து கொண்டிருக்கிறார். தில்லையின் அதிர்ஷ்டத்தை இவர் மூலமாக வேதநாதன் அனுப்பிவைத்திருக்கிறான்.பரவாயில்லை! நீங்கள் நாட்டியம் முடிந்து வீட்டிற்குப் புறப்பட்டு விட்டீர்கள் போலிருக்கிறது. பொன்னி!தில்லையோடுநீயும் நட்டுவனாரும் வீட்டிலேயே இருங்கள்.நானும் இவரும் சுவாமி புறப்பாடு முடிந்ததும் அங்கே வருகிறோம். சாவகாசமாக விஷயத்தைப் பேசிக் கொள்ளலாம்.”

“சரிங்க புறப்பாடு முடிந்து வாங்க” ஏக காலத்தில் நட்டுவனார், பொன்னி, இருவருமே வடிவேலுப் பிள்ளைக்கு இப்படி விடை கூறினர். வடிவேலுப்பிள்ளை பேசிக்கொண்டிருக்கும்போதே, இடையிடையே அந்தச் சினிமாக்கார மனிதர் தாமும் பேசுவதற்கு முயலும் ஆர்வத்தை முகத்திலே புலப்படுத்திக் காட்டினார். ஆனால் வடிவேலுப்பிள்ளை அவரை இடையிலே பேசவிட்டால்தானே? அவர் தில்லையையே வைத்த கண் வாங்காமல் கலைக் கண்களோடு கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவர்கள் விடை பெற்றுக்கொண்டு வீட்டிற்குச் சென்றனர். நிர்வாக அதிகாரி வடிவேலுப்பிள்ளை சுவாமி சந்நிதியை நோக்கி நடந்தார். ஆனால், அவரோடு கூடவந்த அந்த மனிதரோ, கோபுரவாசல் படிகளில் அன்னமும் நானும் நடையுடன், மின்னல் இடை துவள நாட்டிய உடையுடனேயே ஏறிச் சென்று கொண்டிருக்கும் தில்லையை நயன ஜோடிகளின் நோக்குத் தினவு தீரப் பார்த்துக்கொண்டிருந்தார்.

“என்ன மிஸ்டர் பத்ரிநாத்! அங்கேயே நின்றுவிட்டீர்கள்? நீங்கள் பின்னால் வருவதாக நினைத்துக்கொண்டல்லவா நான் சுவாமி சந்நிதிக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.” அதற்குள் எதையோ, கோபுர வாசல் பக்கம் பார்த்துப் புரிந்து கொண்டவர்போல ஒரு நமட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே,ஓ! அதுவா விஷயம்? தில்லை விஷயம் இப்போதே முடிந்துவிட்டது என்று எண்ணிக்கொள்ளலாம் நீங்கள்! இந்தப்பூவணை நல்லூர் மட்டுமில்லை.நேற்று அவள் பொட்டுக்கட்டி உரிமைப்பட்ட சாட்சாத் வேதநாதப்பெருமானே எதிர்த்தாலும் சரி! நீங்கள் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். நாளைக் காலை நீங்களும் ‘டைரக்டரும்’ சென்னை செல்லும் போது உங்கள் காரில் ‘தில்லை’யும் இருப்பாள். இந்த வடிவேலுப் பிள்ளையின் சாமர்த்தியம் அப்போது தான் தெரியும் உங்களுக்கு!”

“அதற்குச் சொல்லவில்லை சார்! நீங்கள் செய்வீர்கள், உங்களால் கண்டிப்பாக முடியும். இந்தப் பெண்ணினுடைய உருவத்தை நடனம் என்ற ஜீவகலைக்காகவே பிடித்துப் பிடித்து சிருஷ்டித்திருக்கிறான் சார் பிரமன் எங்கள் மூவிடோனில் ஆறு நடன ஜோடிகள் தண்டத்திற்குச் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். பூமி நடுங்கும்படி குதிக்கிறார்கள் சார். இவள் ஒருத்தி இருந்தால் போதும் கலை உலகமே எங்கள் கைப்பொம்மையாகி விடும்!” பத்ரிநாத் என்று அழைக்கப்பட்ட அந்த நடன டைரக்டர் வடிவேலுப்பிள்ளையைத் தூக்கிவைத்துப் பேசினார். தில்லையின் இன்றியமையாமை டைரக்டர் பத்ரிநாத்தின் பேச்சில் ஒவ்வொரு ‘டிகிரி’யாக ஏற ஏற, அவரிடம் பேச வேண்டிய தரகுத் தொகையின் இலக்கத்திற்குப் பின்னால் ஒவ்வொரு ஸைபராகச் சேர்த்து எழுதிக்கொண்டிருந்தார் வடிவேலுப்பிள்ளை தம் மனத்திற்குள்ளே. உண்மையில் பிள்ளை மனம் வைத்துச் செய்ய முற்பட்டுவிட்டாரானால் நடக்காது என்பது இல்லை. அவரே சொல்லிக் கொண்டு பெருமைப்பட்டதுபோல, பூவனை நல்லூரும் ஈசுவரனாகிய வேதநாதனுமே எதிர்த்தாலும்கூட அவரால் அது முடியும். ஆனால், ஶ்ரீமான் வடிவேலுப்பிள்ளை அதற்காக ஒரு சில ‘பச்சை நோட்டுக்களை’ பத்ரிநாத்திடமிருந்து எதிர்பார்த்ததும் அவ்வளவு ‘பெரிய குற்றம்’ என்பதற்கில்லையே! பத்ரிநாத்தும் அதை அப்படிக் குற்றமாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை. வடிவேலுப்பிள்ளை கொடுத்திருந்த உறுதிமொழியின் பேரிலேயே, டைரக்டரை உடனே அழைத்து வருமாறு டாக்ஸியோடு டிரைவரை அவசரமாகக் கும்பகோணத்திற்கு அனுப்பியிருந்தார் பத்ரிநாத்.

சென்னையிலுள்ள அவர்களது மூவிடோனின் தலைமை டைரக்டர் ஒரு படத்திற்கான புறக்காட்சிகளை எடுப்பதற்காகக் குறிப்பிட்ட சில நடிகர்களோடு கும்பகோணத்தில் ‘கேம்ப்’ போட்டிருந்தார். பத்ரிநாத்தும் அவரோடு வந்திருந்தவர்தான். பூவணைநல்லூர், கும்பகோணத்திலிருந்து,ஏழரை மைலில் உள்ள இயற்கை அழகு வாய்ந்த சிற்றுார். சிற்பங்கள் மிகுந்த வேதநாதப் பெருமான் கோவில் உள்ள இடம். பரம்பரையாக நிருத்திய கலையை வளர்த்துவரும் நட்டுவனார்களும், நடனமணிகளும் நிறைந்த இடம் என்றெல்லாம் கேள்விப்பட்டுச் சென்னையிலிருந்து கொண்டு வந்திருந்த ஸ்டுடியோ டாக்ஸியில் தாம் மட்டும் வந்திருந்தார், நடன டைரக்டர் பத்ரிநாத் மறுநாள் எல்லோரும் சென்னை திரும்புவதாக ஏற்பாடு.

மாலை நாலு மணிக்குக்கும்பகோணத்திலிருந்து டாக்ஸியில் புறப்பட்ட பத்ரிநாத் எப்படியும் ஏழு மணிக்குத் திரும்பிவிடுவது என்று திட்டமிட்டிருந்தார். ஆனால் அங்கே, பூவணை நல்லூரில், தில்லைவடிவு என்ற ஒரு பெண் தம்மை, தம் திட்டத்தை எல்லாம் மாற்றிப் புதிதாக எதை எதையோ நடத்திவிடப் போகிறாள் என்பதைப் புறப்படும்போது அவர் கண்டாரா என்ன?

“எனக்கு இவர் சிநேகிதர்” - என்று சமத்காரமாக ஒரு பொய்யை வீசி எறிந்து, தனக்குத் தில்லை முதலியவர்களை அறிமுகப்படுத்தியதும் ‘நாளைக் காலை நீங்களும் டைரக்டரும் சென்னை செல்லும்போது உங்கள் காரில் தில்லையும் இருப்பாள்’ என்று உறுதி கூறியதுமாகிய வார்த்தைகளைக் கொண்டே, வடிவேலுப்பிள்ளை ஏதோ கொஞ்சம் வெள்ளையப்பனுக்கு அடிபோடுகின்றார் என்பதைப் புரிந்து கொண்டார் பத்ரிநாத். தில்லை கிடைப்பதாக இருந்தால் மூவிடோனின் தலைமை டைரக்டரிடம் சொல்லி எதற்கும் ஏற்பாடு செய்ய முடியும் என்ற உறுதியான நம்பிக்கை அவருக்கு இருந்தது.

3

ன்ன அக்கிரமம்? கலி முத்திப் போயிடுத்துண்ணா! முந்தாநாள் தான் ஈசுவரசந்நிதியில் பொட்டுக் கட்டியிருக்கு நேத்துராத்திரி ஊரே பிரமிக்கும்படி, நான் எவ்வளவு அவசரப்படுத்தியும் கேட்காமே, சுவாமி புறப்பாட்டுக்கு முன்னே சுத்திச் சுத்தி ஆடினாள்.இன்னிக்கு அந்தச் சினிமாக்காரனோடே பட்டணம் போறாளாமே? பொட்டுக்கட்டின அப்புறம் அவள் சர்வேஸ்வரனுக்கு உரியவள் இல்லையோ? இந்தப் பாழாப் போவான் வடிவேலுப்பிள்ளைக்கு இருந்திருந்தும் புத்தி இப்படியா போகனும்? இது எல்லாம் ‘அவனு’க்குத் துரோகம்! ‘அவன்’ சும்மா விட்டுவிட மாட்டான்!” அர்த்தநாரீஸ்வர குருக்கள் கோபுரவாசலில் நின்று முத்துக் குமார நட்டுவனாரிடம் இரைந்து பேசி ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டிருந்தார்.

“குருக்களே! இதெல்லாம் தலையெழுத்து. நானும் பொன்னியும் எவ்வளவு முட்டிக்கொண்டோம் என்கிறீர்கள்? இந்த வடிவேலுப்பிள்ளையும், கருப்புக் கண்ணாடிக்காரனும், கும்கோணத்திலிருந்து புதுசா வந்தவனும், ஜம்பமாக வீட்டு வாசலில் காரிலே வந்து இறங்கியவுடன், இந்தப் பெண்ணுக்குத் தலைகால் புரியல்லே! அப்படியே சொக்கி மயங்கிப் போயிடிச்சு. அதுனோட பிடிவாதத்துக்கு முன் எங்க வார்த்தை செல்லுபடியாகல்லே! இதோ, இப்போ மணி ஏழரை ஆறது! இன்னும் ஒரு மணிநேரத்தில் ‘தில்லை’ புறப்பட்டிடும்.வேதநாதனின் விருப்பம் நானும் பொன்னியும் தான் மூச்சுள்ள வரை சேவகம் பண்ணவேனும் என்கிறதாக இருக்கிறதோ என்னவோ? யார் கண்டார்கள்? எல்லாம் அவனுடைய அலகிலா விளையாட்டு!” என்று நட்டுவனார் பதில் சொல்லிக்கொண்டே நகர்ந்தார்.

‘ஆட்டுவித்தார் ஆரொருவர் ஆடாதாரே?’ என்ற தேவாரப் பாடலைத் தாளவாத்தியங்களோடு இனிமையாக முழங்கிக்கொண்டே சனிக்கிழமைத் தேவார பஜனை கோஷ்டி கோபுர வாசலில் நுழைந்தது. அர்த்தநாரீஸ்வர குருக்கள், பஜனை கோஷ்டிக்கு சுவாமி தரிசனம் செய்து வைப்பதற்காகக் கோபுர வாசலிலிருந்து அவர்களுக்கு முன்னால் உள்ளே நுழைந்து விரைவாகச் சந்நிதியை நோக்கிச் செல்லத் தொடங்கினார். சந்நிதிக்குப் போகிறபோக்கில் தேவஸ்தானத்திற்குள்ளேயிருந்து வந்த சம்பாஷணையைக் குருக்கள் சிறிதே தயங்கி நின்று காதில் வாங்கினார்.

“என்ன பிள்ளைவாள்? நான் ரொம்ப நாளாகச் சொல்லிக்கொண்டே இருக்கேன்? நம்ம பாங்கிலே ஒரு ‘டிபாஸிட்’ போட்டு வையுங்களேன். ஒண்ணும் கவனிக்கவே மாட்டேங்கிறியளே?”

“இன்னிக்குக் கண்டிப்பாகக் கவனிக்கிறேன் சார்! (இதைத் தொடர்ந்து வடிவேலுப்பிள்ளையின் சிரிப்பொலி) நல்ல நேரம் பார்த்துத்தான் கேட்டிருக்கீங்க. ஆமாம்; அப்படி ஒர் ஐநூறு போட்டு வைத்தால் கிடக்கிறது. நீங்களுந்தான் விடாமே கேக்கிறியளே? அது சரி இன்னைக்கு சனிக்கிழமை ஆச்சே பாங்கு எத்தனை மணி வரை உண்டு? எனக்கும் கும்பகோணத்துக்குக் கோவில் காரியமா வரவேண்டியிருக்கு. அப்படியே உங்க பாங்குக்கு வந்து காரியத்தை முடிச்சிடலாம் பாருங்க.”

இதற்கு மேல் அர்ச்சகர் அர்த்தநாரீஸ்வர குருக்கள் அங்கே நிற்கவில்லை. “பய! அழுகிப்புழுத்துத்தான் சாகப் போகிறான்” இப்படி முணுமுணுத்த அவர் உதடுகளின் ஒலி இடுப்பில் தொங்கிய சாவிக் கொத்தின் ஒலியில் கலந்து ஐக்கியமாகி விட்டது. காலை எட்டிப் போட்டவராய் இடுப்பிலிருந்து கொத்துச் சாவிகளைக் கையிலே மாற்றிக் கொண்டு நடந்தார் அவர்.

4


காலம் என்ற சிமெண்டுத் தரையில் வருஷம் என்ற பந்து பன்னிரண்டு முறை துள்ளிவிட்டது. மகள் தில்லை வடிவு, பெற்ற தாயாகிய தான் கூறியதையும் பொருட்படுத்தாமல் சினிமாக்காரர்களோடு சேர்ந்து கொண்டு சென்னைக்குப் போய் விட்டாளே என்ற ஏக்கத்திலேயே மனமும் உடலும் உடைந்துபோன பொன்னி, அதிக நாள் உயிர்வாழவில்லை.மகள் சென்னைக்குப்போன மூன்றாவது வருடமே வேதநாதப் பெருமான் அவளைத் தன் திருவடியில் சேர்த்துக் கொண்டு விட்டார்.

வடிவேலுப்பிள்ளையோ, நட்டுவனாரோ,அர்த்தநாரீஸ்வரக்குருக்களோ, தங்கள் தங்கள் மனநிலையில் பொன்னியின் மரணத்தைப் பெரிதுபடுத்தி அழவோ ஆதங்கப்படவோ இல்லை. அதனால் தானோ என்னவோ, ‘லலிதகுமாரி’ என்ற புதுப்பெயரில் சென்னையில் சினிமா நட்சத்திரமாக மின்னிக் கொண்டிருந்த பூவணை நல்லூர்த் தேவதாசி தில்லைவடிவிற்கு யாருமே தாயின் மரணத்தைப்பற்றி எழுதவும் இல்லை!

“இந்தப் பொன்னி போனால் இன்னொரு சின்னி! கோவில் தேவதாசி மிராசை ஏற்றுக்கொண்டு பணிபுரிய வேறு தாசிகளுக்குப் பஞ்சமா, என்ன?” - இப்படி நினைத்தது மட்டுமில்லை, பாலாம்பாள் என்ற அந்தப் புதுத் தேவதாசியை நியமித்தேவிட்டார் பிள்ளை. எல்லோரையும் ஆளும் இறைவனையும் அவன் கோவிலையும் தாமே ஆள்பவரில்லையா அவர்? வேதநாதன்கூட அவர் இட்ட படித்தரத்திற்கு அஞ்சித்தானே வாழ்ந்தாக வேண்டும்?

பொன்னியின் காலம் முடிந்தபின் முத்துக்குமார நட்டுவனாரும் பூவணை நல்லூரில் அதிக நாள் தங்கவில்லை. கும்பகோணத்தில் நாலைந்து பெரிய மனிதர்களுக்குத் திடீரென்று நாட்டியக் கலையின் மேல் ஒரு பற்று ஏற்பட்டதன் விளைவாக நாட்டியப்பள்ளிக்கூடம் ஒன்றை ஏற்படுத்தப்போவதாக, நட்டுவனாருக்கு ஒரு செய்தி எட்டிற்று. கும்பகோணத்திற்குப் போய்ச் சம்பந்தப்பட்டவர்களைப் பார்த்தார். காரியம் நட்டுவனாருக்குச் சாதகமாக முடிந்துவிட்டது. நாட்டியப் பள்ளிக்கூடத்தின் ஆசிரியர் பதவியும், தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பாமல் வீட்டிலேயே கற்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று எண்ணிய சிலர் வீட்டு ‘டியூஷன்'களும் அவருக்குக் கிடைத்தன.அதன்பிறகு பூவணைநல்லூர்ப் பக்கம் அவரைக் காண்பதே அரிதாகப் போயிற்று. கும்பகோணத்துக் கலாரஸிகர்களுக்கும் பெரிய மனிதர்களுக்கும் இடையில் ‘முத்துக் குமார்’ என்ற பெயருக்கு 'பிரபலத்துவமும்’ ‘பிரமுகத்துவமும் ஒருங்கே கிடைத்துவிட்டன. வருடங்கள் தோன்றி மறைய மறைய, சமூகமும் அவற்றை மறந்துவிடுவது போல, சினிமா நட்சத்திரம் லலிதகுமாரிக்குப் பழைய பூவணை நல்லூர் வாழ்வின் நினைவு அறவே இல்லாமல் மறந்துவிட்டது. அப்படி மறக்கச் செய்தபின் நினைவூட்டி ஆட்கொள்ள வேண்டும் என்பதுதான் வேதநாதனுடைய திருவுள்ளம் போலும்! அடையாறு - காந்திநகரில் மூன்றடுக்கு மாடிகளோடு பெரிய விசாலமான பங்களா, இரண்டு மூன்று பாங்குகளில் இலட்சக்கணக்கில் கனத்த ‘பாலன்ஸ்’ துணையாகவோ, பணியாளாகவோ, பீ.ஏ. படித்த ஒர் இளைஞன்! அவனுக்குப் ‘பிரைவேட் ஸெகரெட்டரி’ என்று பெயர்.இந்தப் பதவிப் பெயரைத் தமிழில் மொழி பெயர்த்து எழுதுகிறேன் பேர் வழியே என்று, லலிதகுமாரியின் அந்தரங்கக் காரியதரிசி என இப்படிக் கொட்டேஷன் கொடுத்து எழுதி, சில சினிமாப் பத்திரிகைகள் அந்தப் பதவிப் பெயருக்கு ஒரு புது அர்த்தம் கற்பிக்க ஆரம்பித்தன!

“வாழ்வு என்றால் நாலும் கலந்துதான் இருக்கும்” என்பார்கள். ஆனால், அவள் வாழ்விலோ ‘நாற்பதும்’ கலந்திருந்தது என்று கூறிக்கொண்டார்கள்! கலையுலகத்தில் அவளுக்கிருந்த பெருமையும், ‘கிராக்கியும்’ ஏகப்பட்டதாகவே இருந்தது.

5

வீட்டிற்கு இரண்டு தமிழ்ப் பத்திரிகைகளும், ஒர் ஆங்கிலப்பத்திரிகையும் தினசரி வந்தாலும், செய்திகளைப் படிக்கவோ, அவற்றை லேசாகப் புரட்டிப் பார்க்கவோ கூட லலிதகுமாரிக்கு நேரமே இருப்பதில்லை. செக்குகளைக் கட்ட பாங்கு செல்லவோ, வருமான வரி அதிகாரிகளுக்குப் பதில் சொல்லவோ அவசியமில்லாமல் கொஞ்சம் ஒய்வு ஒழிவு இருக்கின்ற நாட்களில் ரவீந்திரன் (இதுதான் அவளுடைய அந்தரங்கக் காரியதரிசியின் பெயர்) மட்டும் பத்திரிகைகளைப் புரட்டிப் பார்ப்பது வழக்கம்.

வழக்கத்திற்கு விரோதமாக, “மிஸ்டர் ரவீ! அந்தத் தமிழ்த் தினப் பத்திரிகைகள் வந்திருந்தால் இங்கே கொண்டு வாருங்கள்! பொழுது போகவில்லை. அதையாவது பார்த்து வைக்கிறேன்” என்று அவள் கூறியபோது, வியப்போடு பத்திரிகைகளைக் கொண்டு வந்து வைத்தான் ரவீந்திரன். அன்று சரஸ்வதி பூஜையாகையினால் ‘ஸ்டுடியோக்கள்’ எல்லாவற்றிற்கும் விடுமுறை என்பது அவனுக்கு அப்போது தான் நினைவு வந்தது.

பத்திரிகையை மேலோட்டமாகப் பார்த்துக்கொண்டே வந்த லலித குமாரி, அடுத்தடுத்த தலைப்புக்களாக ஒரே பக்கத்தில் பிரசுரமாகி இருந்த அந்தச் செய்திகளைக் கண்டதும் தன் பார்வையை அப்படியே அதன்மேல் நிலைக்க விட்டுவிட்டாள்.

‘கும்பகோணம் நடன ஆசிரியரின் பரிதாபகரமான முடிவு’ ‘கோவிலில் தர்மகர்த்தா பதவியிலிருந்து விலக்கப்பட்டார்’. தனித்தனியே மேற்கண்ட இரு தலைப்புக்களுடனும் செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன.

“கும்பகோணம் - இவ்வூருக்கு அருகிலுள்ள பூவணைநல்லூர்க் கோவில் தர்மகர்த்தா வடிவேலுப்பிள்ளை, வேதநாத சுவாமி கோவில் தோட்டத்தில் ரகசியமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த மொட்டைக் கடிதம் ஒன்றைப் பரீட்சிப்பதற்காகப் போலீஸ் அதிகாரிகள் திடீரென்று பூவணைநல்லூருக்கு விஜயம் செய்து பிரஸ்தாப இடத்திலே பரீட்சித்தபோது,மொட்டைக் கடிதம் உண்மை என்றே முடிவாயிற்று. மேலும் புலன் விசாரித்ததில் கும்பகோணத்தில் பிரபல நடன ஆசிரியராக இருக்கும் பூவணைநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரும் திருட்டுச் சாராயம் காய்ச்சுவதில் வடிவேலுப் பிள்ளைக்குத் துணையாக இருந்து வந்திருக்கிறார் என்று தெரியவந்தது.

ஆனால், பூவணைநல்லூரில் போலீஸார் சென்று பரிசோதித்த அதே இரவில், கும்பகோணம் மகாமகக் குளத்தின் அருகே நடன ஆசிரியர் முத்துக்குமார் யாராலோ பயங்கரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். முத்துக்குமாரின் கொலை செய்யப்பட்ட பிரேதத்தைக் கும்பகோணம் போலீஸ் டாக்டர் பரிசோதித்து, கொலை செய்யப்படுவதற்கு முன் முத்துக்குமார் நிறையக் குடித்திருக்க வேண்டுமென்று தெரிவித்தார். பூவணைநல்லூர்க் கள்ளச் சாராய வழக்கிற்கும், முத்துக்குமார் கும்பகோணத்தில் கொலை செய்யப்பட்டதற்கும் ஏதோ நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும் என்று போலீஸார் கருதுகின்றனர். வடிவேலுப்பிள்ளை என்பவர் பூவணைநல்லூர்க் கோவில் தர்மகர்த்தா பதவியிலிருந்து விலக்கப்பெற்று, கும்பகோணம் சப்ஜெயிலில் போலீஸ் ரிமாண்டில் இருந்துவருகிறார்”. லலிதகுமாரி பத்திரிகையை அப்படியே படித்துக் கீழே எறிந்தாள்.அவள் மனத்தில் நினைவிலிருந்து எழுந்த ஒரு பழக்கமான கவிச்சித்திரம் தோன்றியது.

"நின்றும் நிலைத்தும் நிலமார
நெடும் புகழ்தான் நிதம் பெற்றுங்
குன்றின் விளக்கென்னவே வாழ்மாந்தர்
குலவுமுறை விதியணுகத்
தின்றும் திளைத்தும் சிறியனவே
செய்துமிக இழிவணுகக்
கொன்றும் குலைத்தும் வேதேசா!
குவிந்தபுகழ் துறந்திடுவர்
துன்றும் துவடியாம் நின்னடியைத்
தொடல் மறந்த தொல்லை ஐயோ!"

பூவணைநல்லூர் வேதநாதப்பெருமான் மீது குமரேசப் பாவலர் பாடிய இந்தப் பாட்டிற்கு இளமையில் ‘தில்லைவடி’வாக, இருந்தபோது எத்தனையோ முறை அபிநயம் பிடித்து ஆடியிருக்கும் நினைவு ‘லலிதகுமாரிக்கு’ ஏற்பட்டது. அவள் கண்களில் காரணமின்றிக் கண்ணிர்துளித்தது.நெஞ்சில் ஏதோ ஒர் உருக்கம் வேகமாக ஏற்பட்டுக்கொண்டிருந்தது. வடிவேலுப்பிள்ளை காலத்தில் தனக்கு ‘மிகவும் பிடித்த பாட்டு இது’ என்ற அவர், கோவிற் சுவரில் இதை எழுதி வைத்ததையும், "தில்லை! நீ இந்தப் பாட்டைப் பாடி அபிநயமும் பிடித்துவிட்டால் எனக்கு அழுகையே வந்துவிடுகிறது, அம்மா!” என்று வாயாரப் பன்முறை நட்டுவனார் கூறியதும் லலிதகுமாரிக்கு நினைவு வந்தன. இந்தப் பாடலை அவ்வளவு தூரம் உணர்ந்த வடிவேலுப்பிள்ளையும் முத்துக்குமார நட்டுவனாருமே இப்படி ஆகிவிட்டார்களே? இது விதியா? அல்லது வேதநாதனுடைய திருவிளையாடலா? நம்மை இப்படி யெல்லாம் ஆக்கக்கூடிய புகழை, அது நம்மை இக்கோலங் காண்பதற்குள் நாமாகவே துறந்து தியாகம் செய்துவிட்டால்? புகழும் பவிஷ-ம் நம்மை விலகுவதற்குள் நாமாக அவைகளை விலக்கி ‘அவன்’ அடிப்பணி பூண்டால் தொல்லை இல்லையா . லலிதகுமாரி (பழைய தில்லை வடிவு) மனங் குழப்பும்படி சிந்தித்தாள். சிலையாக உட்கார்ந்து சிந்தித்துக் கொண்டே இருந்தாள்.

6

ரஸ்வதி பூஜைக்கு மறுநாளைக்கு மறுநாள். பூவணைநல்லூர்க் கோவில் சந்நிதி வாசலில் யாரோஒர் இளம்பெண் கோலம் போட்டுக்கொண்டிருந்தாள்.அவள் தூய வெள்ளை உடை அணிந்திருந்தாள். வாரி முடித்த கருங்குழல்; உடலில் வேறு எந்த அணிகலனும் அலங்காரமும் கிடையாது.

பூட்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறோமே என்பதையும் மறந்து யாரோ ஒரு நகரத்து மனிதன் காரிலிருந்து இறங்கி நேரே சந்நிதி வாசலுக்கு வேகத்தோடு நடந்துவந்தான். “லலிதா! உன் முடிவு இதுதானா? வாழ்வின் பெரும் பகுதியை வீணாகவே கழித்துவிட உனக்கு அவ்வளவு திடமான விரக்தி என்ன வந்தது? நீயாகப் புகழை வேண்டி அன்று இதே கோவிலிலிருந்து யார் சொல்லியும் கேட்காமல் என் வேண்டுகோளுக்கு இணங்கிச் சென்னைக்கு வந்தாய்! இன்று சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவந்து இங்கே கல் தரையில் கைதேயக் கோலம் போடுகிறாய்! புகழைச் சுலபமாக அடையமுடியாது லலிதா துறந்துவிடலாம் சுலபமாக”

கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண், கோலப் பொடியினாலேயே சந்நிதிக்கு முன் ஏதோ எழுத்துக்களைத் துவினாள்.

"கொன்றும் குலைத்தும் வேதேசா!
குவிந்தபுகழ் துறந்திடுவர்
துன்றும் துவடியாம் நின்னடியைத்
தொடல் மறந்த தொல்லை ஐயோ!"

"மிஸ்டர் பத்ரிநாத்! வடிவேலுப் பிள்ளையையும், நட்டுவனாரையும் போல என்னையும் ஒரு நாள் என் புகழ் சந்தி சிரிக்கச் செய்துவிடும். நானே முந்திக்கொண்டு வந்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்” கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண் தலை நிமிர்ந்து கூறினாள். வந்தவர் பதில் பேசாமல் வந்த வழியே திரும்பி நடந்தார்!

(1978-க்கு முன்)