நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/ஆனால்...
136. ஆனால்...?
'முல்லை மலர்' இலக்கிய மாதப் பத்திரிகையின் ஆசிரியர் வேங்கடரத்னம் தீர்மானமாக முடிவு செய்து விட்டார். அவரும்தான் மூன்று வருடங்களாக முயற்சி செய்து பார்க்கிறார். எல்லா ஏற்பாடுகளும் செய்த பின் கைக்கெட்டியது வாய்க் கெட்டாமற் போவது போல் கடைசி சந்தர்ப்பத்தில் பிரயாணம் நின்று போய் விடும். ஆனால், இந்த வருடம் எப்படியும் குற்றாலத்துக்குப் போயே தீருவது என்று உறுதியான தீர்மானத்தோடு பிரயாணத் தேதியும் குறிப்பிட்டு வைத்து விட்டார் அவர்.
“குற்றாலத்தில் பதினைந்து நாளாவது தங்குவேன். அதுவரை எல்லாம் உம்முடைய பொறுப்பிலேயே ஜாக்கிரதையாக நடத்தும். என்ன ராமசாமி, கவனமாகக் கேளும்! நம்முடைய அடுத்த தொடர் கதையை இந்தப் பதினைந்து நாட்களில் அங்கேயே முடிந்த வரை எழுதி விடலாம் என்று உத்தேசித்திருக்கிறேன். போன மறுநாளே கதையின் தலைப்பை உமக்கு எழுதி விடுகிறேன். இந்த மாத இதழிலேயே கடைசிப் பக்கத்தில் விளம்பரம் செய்து விடும்”
“ஆகட்டும் சார்!”-துணையாசிரியர் ராமசாமி அடக்கமாகப் பதில் கூறினார்.
“வந்து இன்னொரு விஷயம். இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. அந்தச் சுப்பராமன் எழுதிய நாவல், மதிப்புரைக்கு வந்தால் கொஞ்சம் பார்த்து எழுதும். அநேகமா இந்த இதழுக்குள்ளே புஸ்தகம் வந்து விடும்.”
“அதுக்கென்ன சார்? நீங்க இதைச் சொல்லவேண்டுமா என்ன? நம்ம சுப்பராமன்தானே? நானே பார்த்துச் செய்யறேன்.”
“அதுக்கு இல்லை ராமசாமி! உமக்கு ஞாபகப்படுத்தினேன். அவ்வளவுதான்.”
“புரூப்’களை ஒன்றுக்கு இரண்டு தடவையாகக் கொஞ்சம் கவனமாகப் பாரும்”
“----------”
“நாளைக்குத் தானே பன்னிரண்டாந் தேதி” “ஆமாம் சார்” .
“நாளைக்குச் சாயங்காலம் புறப்படலாம் என்று இருக்கிறேன்.”
“நல்லபடியாகப் போய் விட்டு வாருங்கள் சார்! இப்பொழுது சீஸனும் அருமையாக இருக்கும்.”
“கேமராவிற்கு பிலிம் ‘லோட்' பண்ணச் சொல்லி ராஜுவை அனுப்பினேன், அவனைக் கொஞ்சம் பார்த்து இங்கே அனுப்புமேன்.”
“சரி சார், பார்க்கிறேன். ஆசிரியர் அறையிலிருந்து வெளியே வந்தார் உதவியாசிரியர் ராமசாமி.
2
பதின்மூன்றாம் தேதி காலை பத்தரை மணிக்குத் தென்காசி ஸ்டேஷனில் வந்து இறங்கினார் வேங்கடரத்தினம். பன்னீர் தெளிப்பதுபோலச் சாரல் பெய்து கொண்டிருந்தது. குளிர்ந்த தென்றல் காற்று அவருடைய சில்க் ஜிப்பாவை வருடிக் கொண்டு வீசியது.
ஆஹா இப்படிப்பட்ட சூழ்நிலையிருந்தால் கற்பனை எவ்வளவு ‘மனோரம்மியமாக ஒடும்? என்று தமக்குள் எண்ணிக் கொண்டார் அவர். தென்புறம் குற்றாலத்தின் மேக மூட்டத்துடன் கூடிய நீலநிற மலைச்சிகரங்கள் அவரை மெளனமாகச் சைகைசெய்து அழைப்பது போல விளங்கின. வாடகைக் கார் ஒன்றில் ஏறிக் குற்றாலத்திற்குப் புறப்பட்டார் அவர்.
'குற்றாலத்தில் தங்கியிருக்கும் அந்தப் பதினைந்து நாட்களில் எவ்வளவு எழுத முடியுமோ அவ்வளவையும் எழுதிக் குவித்துவிடவேண்டும் என்று சங்கல்பம் செய்துகொண்டிருந்தது அவருடைய உள்ளம். டாக்ஸி சென்ற வேகத்தோடு வேகமாகச் சூழ இருந்த இயற்கைக் காட்சிகளை ரஸித்தார் அவர்.
தனிமையும், எழுதுவதற்கு வசதியும் வேண்டுமென்று வாடகை அதிகமாக இருப்பதையும் பொருட்படுத்தாமல் ஐந்தருவிரோட்டில் ஒரு பங்களாவின் மாடியில் தங்கினார் வேங்கடரத்தினம்.ரோட்டின் தெற்குப் புறத்தில் சித்தர் அருவிக்குப் போகிற மலைவழியின் சரிவில், அழகான பெரிய தோட்டத்திற்கும் பூஞ் செடிகளுக்கும் நடுவே வெய்யிலே எட்டிப் பார்க்க முடியாத பசுமைக்குள் மறைந்திருந்தது அந்தப் பங்களா! தம் எழுத்துக்கும் கற்பனைக்கும் சிந்தனைக்கும் பொருத்தமான இடம் கிடைத்ததே என்று திருப்திகொண்டார் வேங்கடரத்தினம் கூப்பிட்ட நேரத்திற்கு என்ன என்று கேட்டு அவர் கட்டளைகளை நிறைவேற்றுவதற்கு அந்தப் பங்களாவின் வாட்ச்மேன் இருந்தான். விஷயம் வேறொன்றுமில்லை எழுதத் தொடங்கிவிட்டால் அடிக்கடி காப்பியை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தால்தான் கற்பனை தடையின்றி ஒடும் அவருக்கு. ஹோட்டலில் இருந்து காப்பி வாங்கிக்கொண்டு வரத்தான் 'வாட்ச்மேனின் உதவி அவருக்கு அடிக்கடி தேவையாயிருந்தது.
வந்த அன்றைக்கு அலுப்பாக இருந்ததனால் மலைமேலிருக்கும் தேனருவி, சண்பக அருவி, முதலிய இடங்களுக்கு அவரால் போக முடியவில்லை. காலையில் வடவருவியில் நீராடி விட்டுப் பங்களாவிற்கு வந்தவர், வாட்ச்மேன் கொண்டு வந்து வைத்திருந்த எடுப்புச் சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு அலுப்புத் தீர உறங்கினார். மறுபடி அவர் கண் விழித்தபோது மணி நாலரை ஆகியிருந்தது. “அடடா! இவ்வளவு நேரம் உறங்கிக் கழித்துவிட்டோமே? இரவு நேரத்தில் தூக்கம் விழித்தால்தான் தொடர் கதையின் முதல் அத்தியாயத்தையாவது எழுதலாம்” என்றெண்ணிக் கொண்டே வாட்ச்மேனைக் கூப்பிடுவதற்காக வாயைத் திறந்தார்.
அதற்குள் அவனே உள்ளே துழைந்து ஒரு 'விஸிட்டிங்' கார்டை அவரிடம் கொடுத்தான். தாம் வந்திருப்பதே யாருக்கும் தெரிந்திருக்காது தெரியாமலிருப்பது தான் தம்முடைய வேலைக்கு நல்லது” என்றெண்ணிக் கொண்டிருந்த வேங்கடரத்தினம் விஸிட்டிங் கார்டைப் பார்த்ததும் திகைத்தார். 'முல்லை மலர்' தொடங்கிய நாளிலிருந்து அதன் சந்தாதாரராக இருக்கும் தென்காசிவக்கீல் ஒருவரின் பெயர் விஸிட்டிங் கார்டில் இருந்தது. வேங்கடரத்னம் சம்மதத்துக்கு அறிகுறியாகத் தலையை அசைத்தார். வாட்ச்மேன் வக்கீலை அழைத்து வந்தான்.
சந்திப்பு, முறையான குசலப்ரச்னம் எல்லாம் முடிந்த பின் வக்கீல், வேங்கடரத்னத்தை இரவு தென்காசி வந்து தம் வீட்டில் சாப்பிடவேண்டும் என்று ஆர்வத்தோடு வற்புறுத்தினார்.
“வக்கீல் சார்! உங்கள் அன்புக்கு நன்றி. இப்பொழுதே மணி நாலே முக்கால் ஆகிவிட்டது. நான் நேரே ஐந்தருவிக்குப் போய்க் குளித்துவிட்டு இங்கே வந்து கொஞ்சம் எழுதவேண்டும். முக்கியமான எழுத்து வேலை.” என்று மறுத்தார் வேங்கடரத்தினம்.
வக்கீல் அவரை விடவில்லை!
“அதனால் பரவாயில்லை. கீழே என் கார் இருக்கிறது. அதிலேயே ஐந்தருவிக்குப் போவோம். நானும் கூட வருகிறேன். குளித்துவிட்டு நேரே தென்காசிக்குப் போய் விடலாம், இரவு என் காரிலேயே கொண்டு வந்து விடுகிறேன். பின்பு நீங்கள் எழுதலாமே?” என்றார். வேங்கடரத்தினம் சம்மதித்தார். எல்லாம் திட்டமிட்டபடி நடந்தன. ஆனால், இரவு குற்றாலம் திரும்பும் திட்டம் மட்டும் நிறைவேறவில்லை. தென்காசியிலேயே தங்கும்படி நேர்ந்துவிட்டது. வேங்கடரத்தினத்தை மறுநாள் காலையில்தான் குற்றாலத்தில் கொண்டு வந்து விட்டார் வக்கீல்.
“நீங்கள், நான் வந்திருப்பதை வேறு யாரிடமும் சொல்லிவிட வேண்டாம். உங்களோடு இருக்கட்டும்.நான் ஒரு தொடர்கதை எழுதிக்கொண்டுபோகலாமென்று இங்கே வந்தேன்.பலர் என்னைக் காண வந்தால் என் வேலைக்கு இடையூறு விளையும்" என்று கூறி வக்கீலை விடைகொடுத்து அனுப்பினார் வேங்கடரத்தினம்.
வக்கீல் சென்றபின் காப்பி வரவழைத்து அருந்திவிட்டு எழுதுவதற்கு உட்கார்ந்தார்.அப்போது காலை மணி எட்டே கால்.கதையை எங்கே ஆரம்பிக்கலாம்? எந்தச் சம்பவத்திலிருந்து ஆரம்பித்து எப்படி வளர்க்கலாம் என்ற சிந்தனையிலேயே ஒன்பதரை மணி வரை கழிந்துவிட்டது. அதற்கு மேல் எழுத்து ஒடவில்லை. கதையின் தலைப்புக்கூட இன்னும் எழுதியாகவில்லை.
“சரி சாயங்காலம் பார்க்கலாம்! இப்போது ஏதாவது ஒர் அருவிக்குப் போய்க் குளித்துவிட்டு வருவோம்” என்றெண்ணிக்கொண்டு வேலைக்காரனை அழைத்தார். அவன் சண்பக அருவிக்குப் போகலாம் என்றான். வேங்கடரத்னம் அவனைத் துணைக்கு அழைத்துகொண்டு மலைமேல் சண்பக அருவிக்குப் போகும் சாலையில் ஏறினார். பாதித் தொலைவு நடந்தவர் திடீரென்று ஏதோ நினைவு வந்தவர் போல் "ஏனப்பா இங்கே தபாலாபீஸ் எங்கே இருக்கிறது? வா. அவசரமாக ஒரு தந்தி
கொடுக்க வேண்டும். கொடுத்துவிட்டு அப்புறம் மேலே ஏறுவோம்!” என்று வாட்ச்மேனைப் பார்த்துக் கேட்டார்.
“பக்கத்திலே தானுங்க! அடிவாரத்திலேயே இருக்குது” என்று அவரைத் தபாலாபீஸ்"க்கு அழைத்துச் சென்றான் அவன்.
புதிய தொடர் கதையின் பெயர் "நிலா மோகினி” என்று குறிப்பிட்டு, உதவியாசிரியர் ராமசாமிக்குச் சுருக்கமாக ஒரு தந்தியையே கொடுத்தார் வேங்கடரத்னம். திடீரென்று கீழே இறங்கியதையும் பரக்கப் பரக்கத் தந்தி கொடுத்ததையும் பார்த்து வேலைக்காரன் என்னவோ ஏதோ என்று தனக்குள் நினைத்துக்கொண்டான். தந்தி கொடுத்து முடிந்ததும் மீண்டும் மலைமேல் ஏறினர் இருவரும். வாட்ச்மேன் மெளனமாக அவருக்கு வழியைக் காட்டிக் கொண்டே மேலே ஏறிச் சென்றான்.
அடிக்கடி அவன் மெளனத்தைக் கலைத்து வாயைக் கிண்டினார் வேங்கடரத்னம்
“என்னப்பா வாட்ச்மேன்! இந்த மலையைப் பற்றிய விசேஷமான சமாசாரங்கள், ஆச்சரியமான நிகழ்ச்சிகள், ஏதாவது இருந்தால் சொல்லேன்” தம் கதைக்குப் பொருள் தேடவே இப்படிக் கேட்டார் அவர்.
அதுதான் ‘சாக்கு’ என்று, அவன் வேண்டியது வேண்டாதது என்று பாராமல் பச்சிலை மூலிகையிலிருந்து பலா மரங்களின் காய்ப்பு வரை எதை எதையோ விவரித்துக் கூறத் தொடங்கிவிட்டான்.வேங்கடரத்னத்திற்கு ஏனடா இவன் வாயைக் கிளறினோம்? என்றாகிவிட்டது.
‘மணிபர்ஸ் காலியாகிவிட்டது! அதில் ஒன்றுமிருக்காது’ என்ற அவநம்பிக்கை யோடு கைவிட்டு வேண்டா வெறுப்பாகத் துழாவினவனுக்கு, அதிலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டே அகப்பட்டது போல கதைக்குதவாத செய்திகளை அதுவரை பேசி வந்த வாட்ச்மேன் அப்போது தான் ஒரு விறுவிறுப்பான நிகழ்ச்சியைத் தொடங்கினான். வேங்கடரத்னம் கவனத்தோடு கேட்கலானார்.
3
போன வருடம் தேனருவிக்குப் போகிற பாதையில் இரண்டு பேர் அதாவது ஒர் இளம் தம்பதி தற்கொலை செய்து கொண்டதாகப் பேப்பரில் ஒரு சமாசாரம் வந்தது பாருங்கள்.”
"ஆமாம்! அதற்கென்ன” - வேங்கடரத்னம் கேட்டார். “அது நடந்த இடம் இதுதானுங்க" இப்படிக் கூறிக்கொண்டே கிடுகிடு பாதாளமான ஒரு பள்ளத்தைச் சுட்டிக் காட்டினான் வாட்ச்மேன்.
இடப்பக்கம் திரும்பி அந்த இடத்தைப் பார்த்தார் அவர். தலை சுற்றுவது போலிருந்தது.அவ்வளவு பெரிய பள்ளம். மேலேயிருந்து அசாத்தியமான வேகத்தோடு பாய்ந்துவரும் சித்திரா நதியின் பிரவாகம் மூன்று பெரிய அருவிகளாகப் பிரிந்து அந்தப் பள்ளத்திற்குள் வீழ்ந்து கீழே சென்று கொண்டிருந்தது. இயற்கையழகிலும் காணும் கண்களைப் பிரமிக்கவைக்கும் ஒருவிதப் பயங்கரத் தோற்றம் கலந்திருக்க
முடியும்' என்பதை நிரூபிப்பன போலக் காட்சியளித்தன அந்தப் பள்ளத்தாக்கும் அதிலே பாயும் அருவிகளும் நாற்புறமும் வான முகட்டை அளாவி நிற்கும் பெரிய பெரிய மலைச்சிகரங்களுக்கு நடுவே தனியாக எவராவது அந்தப் பள்ளத்தைப் பார்க்க நேர்ந்தால் அதுவே அவர்களைப் பேயறைந்தது போலப் பயமுறுத்திவிடும். காற்றிலே மரங்கள் ஆடும் 'ஹோ' வென்ற ஒசையோடு அந்தப் பள்ளத்தில் விழும் தண்ணிரின் இசையும் சேர்ந்து பயங்கரமான தனிமையுணர்ச்சிக்குப் பின்னணி கீதம் பாடின. வன விலங்குகள், பறவைகள், இவைகளின் ஒலி வேறு இடையிடையே கேட்டன.
எழுதப்போகும் தொடர் கதையில் ஏதாவது ஒர் இடத்தில் இந்தக் காட்சியை வைத்து ஒரு சம்பவத்தைப் பின்னலாமென்று எண்ணினார் வேங்கடரத்னம் கையோடு கொண்டு வந்திருந்த கேமராவை எடுத்துச் சரியான கோணத்தில் அந்தக் காட்சியை ஒரு படம் பிடித்துக்கொண்டார்.வேலைக்காரனிடமிருந்து மேலும் கிடைத்த மட்டில் விவரங்களைச் சேகரிப்பதற்காக, அவனைத் தொடர்ந்து சில கேள்விகள் கேட்கத் தொடங்கினார்.
"அது சரி அவர்கள் இதிலே விழுந்து இறந்து போனதற்குக் காரணம் தற்கொலை நோக்கம்தான் - என்று நீ எதைக் கொண்டு நிர்ணயிக்கின்றாய்?”
“வழக்கு நடந்தபோது போலீஸ் தொந்தரவுக்காகச் சில விஷயங்கள் வெளிவரலிங்க ஆனால், உங்களிடம் அந்த விவரங்களைச் சொல்வதில் இப்போ ஏதும் பிழையில்லை. நான் எங்க பங்களா எஜமானர், நேற்று வந்திட்டுப் போனாரே வக்கீல், மூன்று பேரைத் தவிர வேறே யாருக்கும் இந்த விவரங்கள் தெரிஞ்சிருக்க நியாயமில்லை.”
“எனக்குத் தெரிவதனால் உனக்கு ஒன்றும் தீங்கு விளையாது. சும்மா, பொழுது போவதற்காகத்தான் கேட்கிறேன்.”ஆசிரியர் ஆவலோடு கேட்டார்.
“அந்தத் தம்பதி நம்ம பங்களாவிலேதான் தங்கியிருந்தாங்க! முதல் முதலாக இன்றுதான் நாலாவது மனிதராகிய உங்களுக்கு இந்த உண்மையைச் சொல்கிறேன்! அவங்க பேரு கூட எனக்கு நினைவிருக்குது அந்தப் பெண் பேரு. அதுனோடே அழகுக்கு ஏற்றாற்போலவே அழகான பேருதாங்க காதம்பரின்னு பேரு. அவரு பேரு ரகுராமன்”. அவன் இப்படிக் கூறிக்கொண்டுவரும்போது மூன்றாவது மனிதர் ஒருவர் "கேமராவும் கையுமாக வந்தவர் நேரே வேங்கடரத்தினத்தினருகே வந்து வணங்கினார். வேலைக்காரன் பேச்சை நிறுத்தினான்.
“அடேடே சுப்பராமனா?. நீ இங்கே எப்போது வந்தாயாம்? அங்கேயிருந்து புறப்படும்போது கூட உன்னுடைய புத்தக மதிப்புரை விஷயமாக ராமசாமியிடம் சொல்லிவிட்டு வந்தேனே! ஏதேது இந்த வருஷக் குற்றாலம் சீஸனை ஒரே ஜர்னலிஸ்ட்களா முற்றுகையிட்டிருக்கிறோம் போல் அல்லவா தோன்றுகிறது?"
“ஏதோ, திடீரென்று நினைத்துக் கொண்டேன். உன்னிடம் சொல்லிக் கொள்ளக்கூட அவகாசமில்லை.புறப்பட்டுவிட்டேன்.இங்கே தளவாய் ஹவுஸில் ரூம் எடுத்துக் கொண்டு தங்கியிருக்கிறேன். எங்கே சண்பக அருவிக்கா? நான் அங்கிருந்துதான் வருகிறேன்.”
"ஆனால் என்ன? இன்னொரு தரம் போகலாமே" - என்றார் வேங்கடரத்னம் மூவரும் மேலே நடந்தனர். மூன்றாவது நபரின் குறுக்கீட்டால் வாட்ச்மேனின் கதை இதற்குமேல் தொடர முகாந்திரமில்லாமல் போயிற்று.
4
அன்று பெளர்ணமி, சிவலிங்கத்தின் மேல் பால் அபிஷேகம் செய்கிற மாதிரி மலைச்சிகரங்களின் மேல் நிலவுக் கதிர்கள் பொழிந்து கொண்டிருந்தன.
சண்பகாதேவி கோவிலில் தரிசனம் முடித்துக்கொண்டு கீழே இறங்கும் போதே மாலை ஆறுமணி ஆகிவிட்டது. சுப்பராமன் தனக்குக் கொஞ்சம் எழுத்து வேலையிருப்பதாகக் கூறி வேங்கடரத்தினத்திடம் விடைபெற்றுக்கொண்டு தான் தங்கியிருந்த தளவாய் ஹவுஸிற்குச் சென்றுவிட்டான். பங்களா வாட்ச்மேன் தனக்கு இலஞ்சி வரை போக வேண்டிய வேலை இருக்கிறதென்றும்,மறுநாள் காலையில்தான் திரும்ப முடியுமென்றும் கூறி பிளாஸ்கில் காப்பியை வாங்கிக் கொணர்ந்து வைத்துவிட்டுப் போய்விட்டான்.
வேங்கடரத்தினம் பங்களாவில் தனிமையை அடைந்தார். 'நல்லவேளையாக வாட்ச்மேனும் சுப்பராமனும் விடைபெற்றுக் கொண்டு போனார்கள். எனக்கு எழுதுவதற்கு வேண்டுமான தனிமை கிடைத்து விட்டது - என்ற மனச் சந்துஷ்டியோடு எழுத முற்பட்டார் அவர் நிலாவையும் மலைக்காட்சிகளையும் கண்ணால் கண்டு கொண்டே எழுதலாமென்று நாற்காலியையும் மேஜையையும் பால்கனிக்கு அருகில் எடுத்துப் போட்டுக் கொண்டார். பால்கனிக்கு நேர் எதிரே கீழேயுள்ள தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த பல நிற ரோஜாச் செடிகளில் மலர்ந்து விளங்கும் மலர்களைப் போல, அவர் மனத்தில் கற்பனைகள் விரைவாக மலர்ந்தன.
“காதம்பரியின் மலர்க்கரங்கள்.ரகுராமனின் தலையைக் கோதின. இந்த வாக்கியம் இரண்டாவது அத்தியாயத்தின் கடைசி வாக்கியமாக அமைந்திருந்தது. அன்று வாட்ச்மேனிடம் அரைகுறையாகக் கேட்ட சம்பவத்தின் விளைவாகக் காதம்பரி, 'ரகுராமன் - என்றே தம் கதையின் முக்கிய பாத்திரங்களுக்குப் பெயர் வைத்திருந்தார் அவர் குற்றால மலையில் நிலவு பொழியும் இரவு ஒன்றில் ஆரம்பிப்பதாகவே கதையின் சம்பவத்தையும் தொடங்கியிருந்தார். அனுபவத்தின் சாயை சிறிதளவாவது பிரதிபலிக்காமல் கற்பனை பிறவாது அல்லவா?
சரியாக மணி பன்னிரெண்டு குளிர், சாரல், இரண்டும் அதிகமாகி விடவே நாற்காலியையும், மேஜையையும் உள்ளே எடுத்துப் போட்டுக்கொள்ளலாம் என்று எண்ணி முதலில் நாற்காலியைக் கொண்டு போய்ப் போட்டார்.
"மேஜையைத் தூக்கிக் கொண்டு போகலாம்" என்று மீண்டும் பால்கனியை அடைந்த வேங்கடரத்னம் அப்படியே திடுக்கிட்டுப்போய் நின்றார்!
மேஜைமேல் எழுதிப் பின் செய்து வைத்திருந்த தொடர்கதையின் இரண்டு அத்தியாயங்களையும், அதனருகே வைத்திருந்த விலையுயர்ந்த அவரது பார்க்கர் பேனாவையும் அங்கே காணோம்.
வேங்கடரத்னம் மலங்க மலங்க விழித்தார். பயப்பிரமை படிந்த விழிகளால் பால்கனியில் நின்றுகொண்டே சுற்று முற்றும் பார்த்தார். நேர் எதிரே ரோஜாச் செடிகளின் பக்கம் திரும்பியபோது மயிர்க்கூச்செறியும்படியான ஒரு காட்சியை அவர் கண்டார். அவருக்கு உடலில் ரத்தம் உறைந்துவிட்டது. கால்கள் அசைய மறுத்தன. கூச்சல் போட வாய் எழவில்லை!
"மோகினிப் பிசாசு" - அவருடைய செவிகளுக்குக்கூடக் கேட்காத அவ்வளவு மெல்லிய குரலில் உதடசையாமல் முனு முனுத்தது அவருடைய நா.
ரோஜாச் செடிகளின் நடுவே இருந்த சிமெண்ட் மேடையில் அப்ஸர லோகத்து அழகுகளையும் மிஞ்சி நிற்கும் அழகோடு ஒரு பெண் வீற்றிருந்தாள். அவள் கையில் அவர் எழுதி வைத்திருந்த பேப்பர் கற்றைகளும், பார்க்கர் பேனாவும் இருந்தன.
'சந்தேகமில்லை! இவள் மோகினியேதான். இல்லையானால் இவள் அழகில் இவ்வளவு மயக்கும் சக்தியும் கவர்ச்சியும், காண்போர் நடுங்கும் பயங்கரத் தன்மையும் இருக்க முடியாது. வேங்கடரத்னம் தமக்குள் நினைத்துக்கொண்டார். முடியப்படாத அவளது கருங்குழல், தோள்களிலும் முதுகிலும் அலை அலையாகப் புரண்டு கொண்டிருந்தது. தாழம்பூவின் இரண்டொரு மடல்களையும் சிறு மல்லிகைச்சரம் ஒன்றையும் முடியப்படாத கூந்தலின்மேல் பிறைச் சந்திரனைப் போல வளைத்துச் சூடிக்கொண்டிருந்தாள். அந்த மணம் பால்கனியின் மேலிருந்த அவர் நாசித்துளை களை ஊடுருவி அவரைக் கிறங்க அடித்துக் கொண்டிருந்தது. முகம்! ஈடு இணையற்ற அழகின் இருப்பிடம். மூக்கில் பேஸ்ரி, வைரக் கற்கள் நிலா ஒளியில் பளிச் பளிச்' என்று மின்னின காதுகளில் கரிய கூந்தல் வளைவுகளுக்கு இடையே ஆடும் முத்துச் சிமிக்கிகள். அவள் கண்கள்! அவற்றின் நீட்சியும் மருட்சியும், எல்லாவற்றிற்கும் மேல் பார்ப்பவர்களைச் சொக்க வைக்கும் மைதீட்டியது போன்ற இயற்கைக் கருமையும், ஐயமற அவளை ஒரு மோகினிப் பிசாசு - என்றே எண்ணிக் கொள்ளச் செய்தன வேங்கடரத்னத்தை நல்ல பாம்பு படமெடுத்து நெளிவதுபோன்ற அவளது அந்த இடுப்பு: சிருஷ்டி கர்த்தாவின் ஸெளந்தரியத் தேர்ச்சிக்கு அது ஒர் எடுத்துக்காட்டு.
எல்லாவற்றிற்கும் மேல் அங்கே சிமெண்ட் மேடையில் ரோஜா மலர்களுக்கு நடுவே உட்கார்ந்து அவள் செய்து கொண்டிருந்த காரியம்?.
அதுதான் அவரை நிலைகொள்ள முடியாமல் மனம் பதறச் செய்தது! ஆம்! அவருடைய பேனாவிலேயே அவர் எழுதிவைத்திருந்த தொடர்கதையின் பகுதிகளைப் படித்து, அடித்தும், சிலவற்றைத் திருத்தியும், ஏதேதோ மனம்போன போக்கில் நாசம் செய்து கொண்டிருந்தாள்!
'கீழே இறங்கிச் சென்று அவளிடமிருந்து அதைப் பிடுங்கிக் கொண்டு, திரும்பிப் பாராமல் ஓடிவந்து மாடிக் கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு விட்டால் என்ன? - என்று எண்ணினார். ஆனால், கால்கள் நின்ற இடத்திலிருந்து அசைந்தால் தானே? அவருடைய பாதங்கள் இரண்டுமே உணர்ச்சியற்று மரத்துப் போயிருந்தன.
மின்னல் வேகத்தில் வேறோர் பயங்கரமான அனுமானத்தைச் செய்தது அவர். மனம் ஒரு வேளை, சென்ற வருடம் தற்கொலை செய்து கொண்ட காதம்பரியின் ஆவியோ? - இப்படி நினைக்கும்போதே உடல் முழுவதும் உதறலெடுத்து நடுங்கியது அவருக்கு காதம்பரியும், ரகுராமனும் அதே பங்களாவில் தங்கியிருந்ததாக 'வாட்ச்மேன் கூறியது நினைவுக்கு வந்ததும், மேற்படி பயங்கர அனுமானம் அவர் உள்ளத்தில் வலுப்பட்டது. ‘காதம்பரி, ரகுராமன் என்ற அதே பெயர்களை அமைத்து அவர்களுடைய தற்கொலைச் சம்பவத்தையும் இணைக்க முயன்றதனால் தன்மேல் கோபமுற்று, தன் தொடர் கதையை அபகரித்துக்கொண்டு போவதோடன்றித் தன்னையும் பழி வாங்குவதற்கென்றே காதம்பரியின் பேய் அங்கே வந்து உட்கார்ந்திருப்பதாக ஒரு பயப்பிரமை - பிராந்தி - அவர் மனத்தில் அழுத்தமாக உண்டாயிற்று! அந்தப் பிரமை ஏற்பட்டபோதே சுவாசக் குழாய்கள் அடைத்துக் கொண்டு மூச்சுவிடுவதே நின்று போகும்போலிருந்தது அவருக்கு.வேங்கடரத்னம் தன் நினைவை இழந்தார். அவருக்குத் தலை சுற்றியது.
இறுதியாக அவர் நினைவிழந்து மயங்கிக் கீழே விழும்போது, “விடாதே. பி.டி. இதோ, இங்கே இந்தப் பங்களாவுக்குள்ளேதான் இருக்கிறாள். இதோ.. இந்த சிமெண்ட் மேடையிலே. ரோஜாச் செடிகளுக்கு நடுவிலே' - என்று கூப்பாடு போட்டுக்கொண்டு இரண்டு மூன்று பேர் திறந்து கிடந்த பங்களாக் கதவுகளைக் கடந்து உள்ளே ஓடிவருவதையும், அந்த யுவதி காகிதக் கற்றைகளையும், பேனாவையும் வீசி எறிந்துவிட்டு ஒடுவதையும், மங்கிய கண்களால் கண்டார். அதன்பின் அவருக்குத் தன் நினைவில்லை.அப்படியே மூர்ச்சையாகிப்பால்கனியில் விழுந்து கிடந்தார்.அதன் பின் நடந்தவை எவையுமே அவருக்கும் ஒன்றும் தெரியாது.
முகத்தில் குளிர்ந்த தண்ணிர்த் துளிகள் அடுத்தடுத்து விழவே வேங்கட ரத்தினத்திற்கு மெல்ல மெல்ல பிரக்ஞை வந்தது. அவர் தன் நினைவோடு கண்களை விழித்துப் பரக்கப் பரக்கச் சுற்றி நின்றவர்களைப் பார்த்தார். சுப்பராமன் கையில் தண்ணிர்ச் செம்புடனே நின்றுகொண்டிருந்தான். அவனுக்கு அந்த அர்த்தராத்திரிக்கு மேலே தன் பங்களாவில் நடந்த விஷயம் எப்படித் தெரிந்தது?’ என்று வியப்போடு அடுத்து நின்றவர்கள் மேல் பார்வையைச் செலுத்தினார் அவர்.
மறுவிநாடி மீண்டும் மூர்ச்சை வந்து விடும்போல இருந்தது அவருக்கு கையில் தண்ணிர்ச் செம்போடு நின்ற வேங்கடரத்னத்தின் நண்பர் சுப்பராமனுக்கு அருகே தென்காசி வக்கீல் அந்த மோகினிப் பேயின் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு நின்றார். அவருக்குப் பக்கத்தில் காவியுடை அணிந்த தாடிச் சாமியார் ஒருத்தரும் நின்று கொண்டிருந்தார்!
"பயப்படாதே! இவள் என் மச்சினிதான், பேய் பிசாசு இல்லை! கொஞ்சம் சித்த ஸ்வாதீனம் போதாது. அதுதான் இப்படி நடுராத்திரியில். சுப்பராமனிடமிருந்து இந்தச் சொற்களைக் கேட்டிருக்கவில்லையானால் வேங்கடரத்னம் மீண்டும் கட்டாயம் மூர்ச்சை போட்டு விழுந்து இருப்பார்.
ஆனாலும், அந்த நிலையிலும் சில பெரிய திகைப்புக்குரிய சந்தேகங்கள் அவரைத் ஒத்பிரமை கொள்ளச்செய்திருந்தன.அத்தனை பேருக்கும் நடுவில் வெளிப்படையாகத் தன் சந்தேகத்தை எப்படிக் கேட்பது என்ற சங்கோஜமும் உடன் தோன்றியது.
"சுப்பராமா! நானும் டாக்டரும் இவளைக் கூட்டிக்கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போகிறோம். நீ, சாரோடே இங்கே இரு காலையிலே ஆஸ்பத்திரிக்கு வா! பாவம்! நடுராத்திரியில் சாரை ரொம்ப மனக் கலவரப்படுத்தி அவர் காரியத்தை எல்லாம் கெடுத்துவிட்டாள்!” - தென்காசி வக்கீல் இப்படிக் கூறிவிட்டுச் சுப்பராமனிடமும் ஆசிரியரிடமும் விடை பெற்றுக்கொண்டு, தாடிச் சாமியார் பின் தொடர, அந்த மோகினியைப் பிடித்து இழுத் துக்கொண்டு சென்றார். பால்கனியிலிருந்து, கீழே வக்கீலின் பிடியைத் திமிரிக்கொண்டு ஓட முயலும் அந்த மோகினியைக் கண்டு கொண்டிருந்த வேங்கடரத்னம், தன்னைக் காண்பவர்களின் சித்தங்களை எல்லாம் ஸ்வாதீனமில்லாமல் செய்துவிடும் இந்த அழகிக்காசித்தஸ்வாதீனம் இல்லை' என்று வியப்பால் வாயைப் பிளந்து கொண்டிருந்தார்.நிலா ஒளியில் வானத்திலிருந்து குதித்து ஒடும் தேவ மகள் போல அந்தக் காம்பவுண்டைத் தாண்டி மறைந்தாள் அவள். வேங்கடரத்னம் தன் பார்வையைத் திருப்பியபோது, ஏதேது? மோகினிப் பிசாசு பலமாகப் பிடித்துக்கொண்டு விட்டதோ? என்று கூறி அவரை நையாண்டி செய்தான் சுப்பராமன். அவன் கையில் கசங்கிய தாள்களும் அவருடைய பேனாவும் இருந்தது!
மறுநாள் பொழுது விடிந்தது!
“வக்கீல்தான் என் மாமனார். இந்தப் பெண் பத்மினி, அவருக்கு இரண்டாவது மகள் என் மனைவியின் தங்கை, சித்தஸ்வாதீனம் இல்லாததனால் இங்கே அடுத்த காம்பவுண்டிலுள்ள பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள். இங்கே அவளைப் பார்த்துவிட்டுப்போகவே நானும் மனைவியும் வந்தோம்.வந்த காரணத்தை - என் மச்சினி பைத்தியம்’ என்பதைச் சொல்ல வெட்கப்பட்டேன் நான். அதனால்தான் நான் இங்கே வந்திருப்பது தெரியாமல் மாமனாரை விட்டு உங்களை விருந்துக்கு அழைத்தேன். ஆனால், இன்று சண்பக அருவிப் பாதையில் எதிர்பாராத விதத்தில் உங்களைக் கண்டு கொண்டபோது என் வரவை மறைக்க முடியவில்லை. எனவே, தனியே நான் மட்டும் வந்து தளவாய் ஹவுஸில் தங்கியிருப்பதாகவும், நீ வந்திருப்பதை நான் அப்போதுதான் அறிந்துகொள்வது போலவும் பொய் சொல்லி நடித்தேன். என்னை மன்னித்துவிடு”- சுப்பராமன் உருக்கமாகக் கூறினான்.
“என்னையும் மன்னிச்சுப்புடனுமுங்க. வேங்கடரத்னமும், சுப்பராமனும் வியப் போடுமாடிப்படியிருந்த பக்கம் திரும்பிப்பார்த்தனர்.வாட்ச்மேன் அங்கே நின்றான்.
“பக்கத்திலே பைத்திய ஆஸ்பத்திரிங்கிறதை மறந்து கவனக் குறைவா பங்களா கேட்டை மூடாமல் நேற்று ராத்திரி தவற விட்டுட்டேங்க”
"ஆனால்.” என்றார் வேங்கடரத்னம். அதற்கு மேல் அவர் என்ன தான் கூற முடியும்?