நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/வேலையும் விசாரணையும்
137. வேலையும் விசாரணையும்
அன்றுடன் நான் வேலையிலிருந்து நீக்கப்பட்டுச் சரியாக ஒரு வாரமாயிற்று. கையில் கணக்குத் தீர்த்துக் கொடுத்து சம்பளத்துடன் வெளியேறும் போது கூட எனக்கு இவ்வளவு மன வேதனையில்லை; கிடைத்த பணத்தைக் கொண்டு இரண்டு மூன்று வாரங்களைக் கடத்தி விட்டால் வேறு ஏதாவது சான்ஸ் பிடித்துக் கொண்டு விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், அன்றிலிருந்து அந்த நம்பிக்கைக்குத் தலைவலி பிடிக்க ஆரம்பித்தது.
ஏறக்குறைய ஒரு வாரம் வரை என்னுடைய வேலை நீக்கம் ஒருவருக்கும் தெரியாதபடிகடத்தி விட்டேன். அதற்குப் பிறகுதான் ஆரம்பமாயிற்று அந்த அநுதாப விசாரணைகள். அதை 'அநுதாப விசாரணை’ என்று நான் கூறுவது விசாரிப்பவர் களுடைய அகராதியில் கண்டது. என்னுடைய வார்த்தையில் சொல்லப் போனால் அதைக் ‘கொல்லாமற் கொல்லும் கேள்வி’ என்று தான் சொல்வேன். அப்படிச் சொல்லும் அளவுக்கு நான் அநுபவித்து விட்டேன். நான் மட்டுமென்ன? வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்கிய பட்டதாரிகள், படித்த இளைஞர்கள் எல்லோருமே இதை அநுபவிக்கத் தவறுவதில்லை. பட்டதாரிகளும், படித்தவர்களும் கூட வேலை கிடைக்கவில்லை என்பதற்காகக் கவலைப்படுவதைக் காட்டிலும், வேலையைப் பற்றித் தங்களிடம் இரக்கத்தோடு விசாரிக்கும் அநுதாபிகளுக்காகத் தான் கவலைப்படுகிறார்கள். அந்த ‘அநுதாபி’களின் வார்த்தைதான் அவர்கள் தைரியத்துக்கும் நம்பிக்கைக்கும் உலை வைத்து உண்ணவும், உறங்கவும் முடியாமல் உருக வைக்கிறது. இவர்கள் தலை தட்டுப்பட்டால் நடுங்கி மறைந்து நடக்கக் கூட வேண்டியிருக்கிறது. இவர்களைச் சந்தித்து விட்டால் அந்தக் கேள்வியைக் கேட்டு விடுவார்களே என்ற பயம்தான் காரணம்.
என்னைப் பொறுத்த வரையில் இந்த அநுதாப விசாரணையை நான் ரூமெடுத்துக் கொண்டிருக்கும் வீட்டுக்காரர்தான் முதன் முதலில் ஆரம்பித்து வைத்தார். ‘முடித்து வைத்தது யார்?’ என்று கேட்கிறீர்களா? எனக்கு வேலை கிடைக்கிற வரை இந்த விசாரணைக்கு முடிவேயில்லையே!
அது மட்டுமா? இந்த விசாரணையைக் கேட்பதற்குத் தகுதியே வேண்டியதில்லை. என்னுடைய காலேஜ் புரொபஸராகிய ஸ்ரீமான் கண்ணுசாமிப் பிள்ளையிலிருந்து காலையில் என் ரூமைப்பெருக்குவதற்கு விளக்குமாறும் கையுமாக வரும் வேலைக்காரி வடிவாம்பாள் வரை யாரும் கேட்கலாம்.அவரவர் தரத்திற்குத் தக்கபடி வார்த்தைகளும் விசாரணையின் தோரணைகளும்தான் வேறுபாடு அடைகின்றன.“சார், ஏதோ கேள்விப் பட்டேனே! அது நிஜம்தானா? மேற்கொண்டு என்ன செய்யறதாக உத்தேசம்? எங்கேயாவது ஏற்பாடு செய்திருக்கீங்களா? இப்படியே இருந்தாக் கட்டி வரணுமே”
இது என் வீட்டுக்கார முதலியாரின் அநுதாப விசாரணை.
“ஆமாம், ஸார்! வேறே எங்கேயாவது பார்க்கணும்” இது நான் முதலியாருக்குச் சொன்ன பதில். முதலியார் விசாரிக்கும் போது பதில் சொல்லும் அளவுக்கு என் தைரியமும், நம்பிக்கையும் சோர்வடையாமல் இருந்தனவே, அதை விசேஷமாகச் சொல்லவேண்டும்!
“மிஸ்டர் சாரதி! உங்களை ரிலீவ் பண்ணிவிட்டதாகக் கேள்விப்பட்டேன். நம்ம காலேஜிலேகூட ஒரு ‘கிராஜ்வேட் லைப்ரரியன்’ வேணும்! ஆனால், அதுக்கு பி.ஏ. பர்ஸ்ட் கிளாஸ் இருக்கணுமே…?”
இது புரொபஸர் ஸார் செய்த அநுதாப விசாரணை,
“அப்படியா?” இவ்வளவுதான் அவருக்கு நான் சொன்ன பதில். அவர் விடை பெற்றுக் கொள்ளும் போது என் கைகள் யந்திரம் போல இயங்கித் தாமாகவே ஒரு வணக்கத்தைச் செய்து வைத்தன. இப்போது என் உறுதியில் அதிர்ச்சியின் ஜன்னி லேசாக ஆரம்பித்தது.
முதுகில் ஓங்கி ஓர் அறை விழுந்தது! அப்போது எனக்கு அது அறையாகத்தான் இருந்தது. “ஏண்டா பழி! ஆந்திர மாகாணம் பிரிஞ்சாலும் பிரிஞ்சது; உன் பாடு ஆபத்தாய்ப் போச்சேடா! அப்புறம் என்னடா செய்யப் போறே!” ஆந்திர மாகாணம் தனியாகப் பிரிந்த பின் சென்னையிலிருந்த எனது கம்பெனி ஹைதராபாத்துக்குப் போய் விட்டது.
இது கல்லூரி நண்பன் ரகுவின் ஹாஸ்யம் கலந்த அநுதாபம். ரகுவுக்கு நான் பதிலே சொல்லவில்லை. இன்னும் ஒரு வாரமாக என் வேலை போனது பற்றி நடந்த அநுதாப விசாரணைகள் முழுவதையும் எழுதினால், அது உங்கள் பொறுமைக்குப் பரீட்சை நடத்தியதாக ஆகி விடும்.
சந்தித்தவர்களிடம் எல்லாம் இதே விசாரணை, கண்டவர்கள் ஒன்று கூடிப் பேசி வைத்துக் கொண்டது போல ஒருவர் தவறாமல் இதையே கேட்டார்கள். கேட்டார்களென்றா சொன்னேன்? இல்லை, இல்லை! வார்த்தைகளாகிய ஈட்டிகளை மீண்டும் மீண்டும் பாய்ச்சினார்கள். வெந்த புண்ணில் வேல் கொண்டு எறிந்தார்கள். நான் இனிமேல் ரூமை விட்டு வெளியே போகக் கூடாது என்ற அளவுக்கு வேலை நீக்க விசாரணை பெருகி, வெள்ளமாகப் பரந்து வியாபித்து விட்டது. நான் வேலையே பார்க்கப் போவதில்லை. முடிந்தால் வாழ்கிறேன், இல்லையானால் ஒரு சாண் கயிறு கூடவா கிடைக்காமற் போய்விடும்? இந்த வேலையில்லா நிலையும் போதும்; விசாரணையும் போதும்! - இப்படி ஒரு மயான வைராக்கியம் என் மனத்திற் படியும்படி செய்து விட்டது இந்த அநுதாப விசாரணை அனுபவம்!எப்போதாவது எனக்கு வேலை கிடைத்து விட்டால் அதற்குள் நான் பைத்தியமாகி, அதைப் பார்க்க முடியாமல் கூடப் போகும்படியும் ஆக்கி விடலாம் இந்த அநுதாபம்.
கடிகாரத்தைப் பார்த்தேன். மணி பன்னிரண்டு; தூக்கத்தைப் பற்றியே நினைவில்லை. பலவந்தமாகக் கண்ணிமைகள் மூட முயன்றன. மூடிய இமைகளுக்குள் இந்த விசாரணைப் பிரமுகர்கள் ஒருவர் விடாமல் வந்து மானஸிக விசாரணையை மறுபடியும் நடத்தினார்கள். தூக்கம் வரவில்லை. போர்வையை நீக்கி விட்டு எழுந்தேன். அதே சமயத்தில் கதவைத் திறந்து கொண்டு பெட்டி படுக்கை முதலியன சகிதமாக என் அப்பா உள்ளே நுழைந்தார். அப்போதுதான் கதவைத் தாழ்ப்பாள் போடாதது என் நினைவுக்கு வந்தது. ஆச்சரிய மிகுதியினாலோ வேறு எதனாலோ”வாருங்கள் அப்பா” என்று கூடச் சொல்ல வாய் மறுத்து விட்டது.
“ஏண்டா, இன்னுமா தூங்காமல் இருக்கிறாய்? உடம்பு எதற்கு ஆகும்? வேலை போனவனெல்லாம் செத்தா போய் விட்டான்கள்? நல்ல பைத்தியக்காரத்தனமடா, இது. ஆமாம்! நான் போட்ட கடிதம் உனக்குக் கிடைக்கவில்லையா? மதுரை பாசஞ்சரில் பதினொன்றரை மணிக்கு வருவதாக எழுதியிருந்தேனே.”
அப்பா பேசிக் கொண்டே போனார்.
அறையின் ஒரு மூலையில் ஜன்னல் வழியாக எறியப்பட்டிருந்த ஒரு கடிதம் என் கண்ணில் பட்டது. கையில் எடுத்தேன்.
“செங்கற்பட்டில் நண்பரொருவர் வீட்டுக் கல்யாணத்திற்குப் போக வேண்டும். நாளை இரவு பதினொன்றரை பாசஞ்சரில் வருகிறேன். நீ தூக்கம் விழித்து ஸ்டேஷனுக்கு வர வேண்டாம். நானே ரூமுக்கு வந்து விடுகிறேன். உன் வேலை போய் விட்ட விஷயம் ராமு மூலம் அறிந்து கொண்டேன். அதற்காக மனசை அலட்டிக் கொள்ளாதே. வீண் கவலை வேண்டாம். அதை நீ எனக்கு எழுதாததற்கு நான் வருத்தப்படுகிறேன். உள்ளுர் ஹைஸ்கூல் ஒன்றில் எல்.டி. கிடைக்காததால், கிராஜ்வேட் வேண்டுமென்று கேட்டிருந்தார்கள். அதை உனக்கு ஏற்பாடு செய்து விட்டேன். வாத்தியார் மகன் வாத்தியாராகவே ஆகி விடு. அங்கே உன்னை யாரும் ரிலீவ் செய்யமுடியாது. உன் அப்பா'
இவ்வளவுதான் கடிதத்தில் என் கண்ணில் பட்டது. அப்பாவின் அநுபவம். என் வேதனையை ஒரு நொடியில் போக்கும் இரண்டு வாக்கியங்களாக அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. “வேலை போனவனெல்லாம் செத்தா போய் விட்டான்? வீண் கவலைப்பட்டு மனசை அலட்டிக் கொள்ளாதே.” இவைகள்தான் இந்த அமுத வார்த்தைகள். இவைகளைத் திரும்ப இன்னொரு தடவை படித்தேன். அதற்கும் மேலாக அவர் கடைசியில் எழுதியிருந்த இரு தொடர்கள் என்னுள்ளத்திலிருந்த புண்களை நிரந்தரமாக அப்புறப்படுத்தி விட்டன. நான் அன்றிரவு நிம்மதியாகத் தூங்கினேன்.
★★★
ரயிலுக்குப் புறப்படும் போது வீட்டுக்காரர் வந்து சேர்ந்தார். “பையனுக்கு நம்ம ஊரிலேயே வேலைக்கு ஏற்பாடு செய்து விட்டேன். உங்கள் உதவிக்கு நன்றி, இந்தாருங்கள் வீட்டுச் சாவி!”
அப்பாவிடமிருந்து முதலியார் சாவியைப் பெற்றுக் கொண்டார்.
“அப்படிங்களா! ரொம்ப நல்லதுங்க!” என்ற வார்த்தைகள் அவரிடமிருந்து வெளி வந்தன. இனி அவர் வேலையைப் பற்றி என்னிடம் விசாரிக்க முடியாதல்லவா?
(1978-க்கு முன்)