நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/வாணவேடிக்கை
138. வாணவேடிக்கை
அந்த நாளில் விநாயக சுந்தரத்துக்கு அப்படி ஒரு பெயர். எந்தத் திருமண ஊர்வலமானாலும் கோவில் உற்சவமானாலும், அதில் விநாயக சுந்தரத்தின் வாண வேடிக்கை ஒரு முக்கியமான அம்சமாக இருக்கும். திருமணப் பத்திரிகைகளிலும், உற்சவ அழைப்பிதழ்களிலும், இன்னாருடைய பாட்டுக் கச்சேரி, இன்னாருடைய நாதஸ்வரம், இன்னாருடைய சொற்பொழிவு என்று சிறப்பாகக் குறிப்பிடுகிற மாதிரி “இன்னாருடைய வாண வேடிக்கை” என்று போடுகிற அளவிற்கு அவன் ஒரு நல்ல அந்தஸ்தை அடைந்திருந்தான்.
“ஐயா! வாணம் உலகத்துக்கெல்லாம் வேடிக்கை. அதைச் செய்கிறவனுக்கு அது ஒவ்வொரு கணமும் வினை. நீங்கள் என்னமோ கூலிக்காரனுக்குப் பேசுகிற மாதிரிப் பணம் பேசுறீங்க” என்று தன் தொழிலின் அருமையையும், தரத்தையும் சொல்லித் திருமணங்களுக்கும், திருவிழாக்களுக்கும் அழைக்க வருகிறவர்களிடம் அவன் ரேட்டுப் பேசுகிற தோரணையே தனிப்பட்டதாக இருக்கும். சுற்று வட்டாரத்தில் நான்கைந்து ஜில்லாக்களில் அவன் பேர் பிரசித்தம். அந்தத் தொழிலுக்கு அவன்தான் மன்னன். நட்சத்திர வாணம், பூவாணம், அவுட்டு, சரவெடி என்று வகை வகையாக வாணங்கள் உற்பத்தியாகும் அவனிடம். அந்தத் தொழிலுக்கான வெடிமருந்து கந்தக லைசென்ஸ் அவனுக்கு உண்டு. மூங்கில் குழாயும், களிமண்ணும், வெடிமருந்தும், உலகெங்கும்தான் இருக்கின்றன. ஆனால், அவை விநாயக சுந்தரத்தின் கையில் அபூர்வ வாணங்களாக உருவாகி விட்டால் என்னென்ன அற்புதங்களை ஆகாய வெளியில் உண்டாக்கிக் காட்டி வியப்பூட்டுகின்றன?
அவ்வப்போதுள்ள சூழ்நிலைக்கேற்ப அவன் வாணங்களுக்குப் பெயர் வைப்பான். ராக்கெட்டையும், ஸ்புட்னிக்கையும் பற்றிப் பத்திரிகைகளில் அடிபட்டால் ராக்கெட் வாணமும், ஸ்புட்னிக் வாணமும் அவனுடைய கைகளில் உருவாகி விடும். தமிழ்ப் பண்டிதருக்குத் தொல்காப்பியம் படித்ததிலுள்ள கர்வம், தன் வாணக் கலையில் அவனுக்கும் உண்டு.
“இதென்னடா தறுதலைப்பய வேலை? வெடி மருந்தையும், குழாயையும் வச்சுக்கிட்டு மாரடிக்கிறது? வருடத்துக்கு மூணு நாலு தடவை எவனாவது வாண வேடிக்கைக்குக் கூப்பிடுகிறான். இதை நம்பிப் பொழைக்க முடியுமா? வேறே ஏதாவது உருப்படியான வேலையாப் பாரப்பா!” என்று அவனுடைய தகப்பனார் ஆரம்பத்தில் அவனைக் கண்டித்ததுண்டு.
நாளாக ஆக அந்த வித்தையில் அவன் சம்பாதிக்கத் தொடங்கிய புகழையும், பொருளையும் கண்டு பின் அவன் போக்குப்படி விட்டு விட்டார் அவர்.அந்தக் கலை கொடுத்த வருவாயிலேயே விநாயக சுந்தரம் உள்ளூரில் இரண்டு மாடி வீடு கட்டி விட்டான். நிலமும் நீச்சும் வேண்டியது வாங்கிச் சேர்த்துக் கொண்டான். பெருங்கலைஞர்களிடம் வந்து அண்டிக்கொண்டு வித்தை பழகும் இளங்கலைஞர் மாதிரி அவனிடமும் இரண்டு மூன்று ஆட்கள் அந்தக் கலையைப் பழகிக் கொண்டிருந்தனர். விநாயக சுந்தரத்துக்குத் தன் சீடர்களிடம் பரம விசுவாசம் உண்டு. ஊருக்கு மேற்கே புளியந்தோப்பில் தனியாக ஓர் ஓட்டுக் கட்டிடம், ஒதுங்கி நிற்கிற பெருமையில் துறவி போலக் காவி நிறம் போர்த்திக் காட்சியளிக்கும். அதுதான் விநாயக சுந்தரத்தின் வாணத் தயாரிப்புத் தொழிற்சாலை.
புளியந்தோப்பும், கட்டிடமும் விறகு கரிமூட்டைவியாபாரமும் கண்ணுசாமிக்குச் சொந்தம். அதை விநாயக சுந்தரத்துக்கு மாதம் இருபது ரூபாய் வாடகைக்குக் குடக்கூலிக்கு விட்டிருந்தான் கண்ணுசாமி.
“வேய்! நீர் கரியைக் காசாக்குகிறீர். நான் காசைக் கரியாக்குகிறேன். என்னிடத்தில் இந்தப் பக்கா கிராமத்தில் மாதாமாதம் இருபது ரூபாய் அடிச்சு வச்சு வாங்குறீரே. இது உமக்கு அடுக்குமா?” என்று ஒவ்வொரு தடவையும் வாடகை கொடுக்கும் போது கண்ணுசாமியை வம்புக்கு இழுப்பான் விநாயகசுந்தரம்.
“என்னங்க தம்பீ! நமக்கும் உனக்கும் நிகராகுமா? ஒரு கலியாணத்திலே, ஒரு திருவிழாவிலே, ஒரு நாள் இராத்திரிப் போய் வாணம் விட்டு முந்நூறு நானூறு கொண்டு வந்திடறே நீ. பாழாப் போன பய கிராமத்திலே, எவன் கரி மூட்டை வாங்கறேங்குறான்? மாசம் மூணு ஆனா இரண்டு கரி மூட்டை விலைக்குப் போகுது!” என்று கண்ணுசாமி பதிலுக்குச் சடைத்துக் கொள்ளுவான். விநாயக சுந்தரம் ஹாஸ்ய புருஷன்; எதையும் வேடிக்கையாகப் பேசுவான். வாணத்தைப் போலவே ஓர் அவுட்டுச் சிரிப்பு. அவனுக்கு மட்டும்தான் அந்த மாதிரிச் சிரிக்கத் தெரியும். காசும் பணமுமாகப் பெருவாழ்வு வாழ்ந்தான் அவன். நாடகக் கலைஞர்களையும், இசைக் கலைஞர்களையும்போல ஐந்து விரல்களிலும் மோதிரம் மின்ன, சரிகைத் துப்பட்டாகவும், மல்வேஷ்டியுமாக உல்லாச வாழ்வு வாழும் வசதியை அவன் தனது வாணத் தொழிலால் தேடிக்கொண்டிருந்தான். ஆனாலும், வாழ்வில் அவனுக்கு ஒரு பெரிய குறை. அவனுக்குத் திருமணம் நடந்த போதே திருமணம் நடந்த மற்றவர்களெல்லாம் குழந்தையும், குட்டியுமாகக் குடும்பம் பெருகி வாழ்ந்தார்கள். இருபத்தாறாவது வயதில் அவனுக்குத் திருமணம் நடந்தது. நாற்பத்திரண்டு வயது வரை அவன் வீடு குழந்தைகள் தவழும் பாக்கியத்தைப் பெறவில்லை.
“ஏலே ஐயா! எனக்கு நெய்ப்பந்தம் பிடிக்க ஒரு பேரப் பயல் பிறக்காமலே என்னைப் போக விட்டிடுவே போலிருக்கே” என்று அடிக்கொரு தரம் அவனுடைய கிழத் தந்தை பெருமூச்சு விட்டுக் கொண்டே அவனிடம் குறைப்பட்டுக் கொள்ளுவார். ஊர்க் குழந்தைகள் எல்லாம் தீபாவளி, கார்த்திகைப் பண்டிகைகளின் போது அவனுடைய தொழிற்சாலையில் உற்பத்தி செய்த மத்தாப்புப் பெட்டிகளை வைத்துக் கொண்டு திரியும். அவன் வீட்டில் மத்தாப்புக் கொளுத்த ஒரு குழந்தையில்லை. வெளிக்குச் சிரிப்பும் குதூகலமுமாக வாழ்ந்தாலும் நீறு பூத்த நெருப்புப் போல அவன் மனத்தை அது தீராக் குறையாக அரித்தெடுத்துக் கொண்டு வந்தது. கார்த்திகையன்றும், தீபாவளியன்றும், ஒரு கூடை நிறைய மத்தாப்புப் பெட்டிகளை அள்ளி வைத்துக் கொண்டு ஊர்க் குழந்தைகளை எல்லாம் கூப்பிட்டுக் கொடுப்பான் அவன். இதனால் மழலை மாறாத ஊர்க் குழந்தைகளிடம், ‘மத்தாப்பு மாமா’ என்றொரு செல்லப் பெயர் கூட அவனுக்கு ஏற்பட்டிருந்தது. அவனுக்கு முதல் முதலாகப் பேரும், புகழும் ஏறியது கண்ணுடைய நாயகி அம்மன் திருவிழாவில் வாண வேடிக்கை விட்ட போதுதான். அதனால் பழைய நன்றி மறவாமல் வருடா வருடம் அந்த அம்மனுக்கு அவன் வாண வேடிக்கை உபயம் செய்து வந்தான். “தாயே! என் தொழில் ஒளி நிறைந்தது. ஒளியால் வேடிக்கை காட்டுவது. என்னுடைய வாணங்கள் வானத்து இருளெல்லாம் போக்குகின்றன. ஆனால், என் வீட்டு இருளை நீ இன்னும் போக்கவில்லையே!” என்று அம்மனிடம் அவன் பிரார்த்தித்துக் கொள்ளுவான்.
‘குழந்தையில்லையே’ என்ற ஏக்கம் விநாயக சுந்தரத்துக்கும், அவன் மனைவிக்கும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வந்தது. இராமேசுவரம், காசி என்று தல யாத்திரை போய் வந்தார்கள் அவர்கள். பழைய கால நம்பிக்கைகளையும் புறக்கணிக் காமல், அரசமரத்துக்கும், வேப்பமரத்துக்கும் கலியாணம் செய்யும் சடங்கைக் கூடச் செய்தார்கள்.
என்ன செய்தும் பயனில்லை. கடவுளும், விதியும், நல்வினையும் அவர்கள் மட்டில் கண்களைத் திறந்து கருணையோடு பார்க்கவேயில்லை.
கடவுளுக்குத்தான் என்ன ஓரவஞ்சனை? வைத்துப் பேண முடியாத ஏழைக் குடும்பங்களில் அவர்களால் கட்டிக் காக்க இயலாத அத்தனை குழந்தைகள்! இல்லையே என்று ஏங்குபவனுக்குப் பேருக்கு ஒரு குழந்தை கூட இல்லையாகவே போய்க் கொண்டிருக்கிறது.
விநாயக சுந்தரம் அவன் கண் காணப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறான்? காய்ப்பில்லாத புளியந்தோப்பும், இருபது ரூபாய் வாடகை வருமானமும் தவிர, வேறு வக்கில்லாத விறகு கரி மூட்டைக் கடைக் கண்ணுசாமிக்கு ஐந்து பெண் குழந்தைகள், மூன்று ஆண் குழந்தைகள்.மனிதன் சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறான். சண்டைக் கெடுபிடி ஓய்ந்து ரேஷன் கட்டுப்பாடுகளையும் எடுத்த பின் கரி, விறகு வியாபாரம் படுத்து விட்டது. சுற்றிலும், மலையும் காடும் உள்ள கிராமத்தில் எந்தப் பயல் காசு கொடுத்து விறகு வாங்குவான்? எப்போதோ பாரஸ்ட்காரன் கண்ணில் மண்ணைத் தூவி மலையை மொட்டையடித்து அடுக்கிய விறகுகளும், கரி மூட்டைகளும் ஆண்டாண்டுக் கணக்காகக் குவிந்து கிடக்கின்றன. பெரிய குடும்பம், கண்ணுசாமி சமாளிக்கமுடியாமல் திணறுகிறான். .
கண்ணுசாமிக்கு விநாயகசுந்தரத்தின் சொத்துச் சுகங்களில் ஒரு கண் இருந்தது. எட்டுக் குழந்தைகளின் பாரத்தை எவன் தாங்குவது? கடைசிப் பையனை (மூன்று வயது) விநாயக சுந்தரத்துக்குத் தத்துக் கொடுத்து விடலாமா என்று அவனுக்கு ஒரு நப்பாசை உள்ளூற உண்டு. இவன் ஆசைப்பட்டால் மட்டும் போதுமா? விநாயக சுந்தரத்துக்கு அந்த எண்ணம் உண்டாக வேண்டாமா? உண்டாகவில்லையே?பேச்சுப் போக்கில் அந்த விஷயம் நாலு பெரியவர்கள் மூலம் விநாயக சுந்தரத்தின் காதில் விழும்படி தானே ஏற்பாடு செய்தான் கண்ணுசாமி. விநாயக சுந்தரம் அதைப் பொருட்படுத்தினதாகவே தெரியவில்லை. அலட்சியமாக இருந்து விட்டான். நெய்ப் பந்தம் பிடிக்கப் பேரன் கிடைக்காமலே, அவன் தந்தையும் இறந்து போய் விட்டார்.
அவனுக்கு வயது கிட்டத்தட்ட ஐம்பதுக்கு மேலாகி விட்டது.விநாயக சுந்தரத்தின் மனைவிக்குக் கூட ‘இனிமேல் இல்லை’ என்கிற மாதிரி ஓர் அவநம்பிக்கை ஏற்பட்டு விட்டது. “என்னங்க. இனிமேலும் இப்படி இருந்தா நல்லா இல்லே! ஏதாவதொரு வழியைப் பண்ணுங்க. சொந்தப் பிள்ளை நமக்குக் கொடுத்து வைக்கலை. தத்துப் பிள்ளைதான் கொடுத்து வச்சிருக்குப் போலிருக்கு” என்று சுவீகாரத்தைப் பற்றி அவனுக்கு நினைவு படுத்தினாள் அவள்.
“பார்க்கலாம்! அம்மன் திருவிழா முடிந்து விடட்டும். ஓர் ஏற்பாடு செய்வோம்!” என்றான் விநாயக சுந்தரம். கரி மூட்டைக் கண்ணுசாமியின் மனைவி அடிக்கடி தன் கடைக்குட்டிப் பயலை இழுத்துக் கொண்டு விநாயக சுந்தரத்தின் வீட்டுக்கு வந்து போக ஆரம்பித்தாள்.
“அடே பயலே! அவங்க வீட்டுக்குப் போனா அந்த ஆச்சி கிட்ட ஒட்டிப் பழகுடா, அவங்கதான் இனி உனக்கு அம்மாடா” என்று பாதி வேடிக்கையாகவும், பாதி உண்மையாகவும் தன் கடைசிப் பையனை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தான் கண்ணுசாமி. விநாயக சுந்தரம் அந்த வருடம் கண்ணுடைய நாயகி அம்மன் விழாவுக்காகப் பிரமாதமான முறையில் வாண வேடிக்கை உபய ஏற்பாடுகள் செய்வதில் ஆழ்ந்திருந்தான்.
அவன் மனைவிக்குக் கூடவரவர இதெல்லாம் நம்பிக்கை குறைந்து விட்டது.”இது ஏன் இவரு இப்பிடிக் கைக்காசைக் கரியாக்கி வாணவேடிக்கை விடறேன் பேர்வழியே என்று வருசந்தவறாமே அலையறாரு. இவ்வளவு செய்தப்பறமும் அந்த அம்மன் இவர் பக்கம் கண் திறந்து பார்த்தாளா?” என்று நினைக்கவும், அக்கம் பக்கத்துப் பெண்களிடம் சொல்லவும் தலைப்பட்டாள்.
“இந்தாங்க! இந்த வாணவேடிக்கை உபயத்துக்குச் செலவழிக்கிற காசை நாலு ஏழைப் பிள்ளைகளுக்குச் சோறு போட்டாலும் பிரயோசனமுண்டு. எதுக்காக இப்படி அலைஞ்சு இந்த வயசுலே உடம்பைக் கெடுத்துக்கணும்? எல்லாம் இத்தனை வருடம் செய்து கட்டிக் கிட்ட புண்ணியம் போதும்” என்று ஒருநாள் அவனிடமே அவள் துணிந்து அதைச் சொல்லி விட்டாள்.
முகத்தில் சினம் பொங்கத் தன் மனைவியை ஏறிட்டுப் பார்த்தான் விநாயககந்தரம். “இனி மேல் என்னிடம் இப்படிப் பேசாதே! இந்த வீடு, வாசல், சொத்து, சுகம் எல்லாம் அந்த அம்மன் கொடுத்ததடி! எனக்கு நன்மை செய்தாலும், செய்யாவிட்டாலும் அவள் என் கண் கண்ட தெய்வம். என்ன வினைப் பயனோ? இவ்வளவு பெருமைகளையும் எனக்குக் கொடுத்திருக்கும் அவளுக்கு என் வீட்டில் ஒரு குழந்தையைக் கொடுக்க மட்டும் மனம் வரவில்லை.அதற்காக நான் சோர்ந்து விட மாட்டேன். அவளையே என் குழந்தையாகப் பாவித்து வாண வேடிக்கை காட்டிக் கொண்டு வருகிறேன்” என்று பக்தி தொனிக்க, நாத் தழுதழுக்கக் கூறினான் விநாயக சுந்தரம். அப்போது அவன் முகத்தில்தான் எவ்வளவு ஒளி? எத்தனை நம்பிக்கை?
அவன் மனைவிக்குப் பதில் பேசுவதற்கே வாய் இல்லாமல் போய் விட்டது.
கோவில் உற்சவ அழைப்புப் பத்திரிகையில் விநாயக சுந்தரத்தின் வாண வேடிக்கை உண்டு என்பதைப் பிரமாதமாக விளம்பரப்படுத்தியிருந்தார்கள். அந்தப் பெயர் உற்சவத்தில் எவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டுவதற்குப் பயன்படும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
எல்லா வருடங்களையும் போல் இல்லாமல் அந்த வருடம் புதுப் புது வாணங்களாகச் செய்திருந்தான் விநாயகசுந்தரம். பத்து நாள் திருவிழா. முதல் ஒன்பது நாட்கள் அவனுடைய ஆட்கள் வாண வேடிக்கையைக் கவனித்துக் கொண்டார்கள். அவன் சுவாமி புறப்பாட்டு ஊர்வலத்தில் தர்மகர்த்தாவோடு நடந்து கொண்டே வாண வேடிக்கை ஏற்பாடுகளை மேற்பார்த்து வந்தான். விநாயககந்தரம் தன் ஆட்களை அதிகாரம் பண்ணி வேலை வாங்குகிற மிடுக்கே தனி.
“ஏ! அப்பா ஏழுமலை! சுற்றிக் குழந்தைப் புள்ளைங்களா நிக்கிது. வாணத்தைப் பார்த்து விடு.”
“டேய் சுதரிசனம், ஏரோப்ளேன் வாணத்தைத் தலை கீழாப் பிடிச்சுக் கொளுத்தி விடாதே! மூக்கிலே முகரையிலே பாய்ஞ்சு அடிச்சிடப் போவுது”
“யப்பா தீவட்டி தள்ளி நில்லு! வாணம் விடறது தெரியலே” - இது சாமிக்குத் தீவட்டி பிடிக்கிறவனை நோக்கிச் சொன்னது.
“ஏ கிழவி! ஒதுங்கி நின்னு பாரு! அப்பிடி வாயைத் திறக்காதே. வாணம் வாயிலே வந்து விழுந்துடப் போவுது.”
அதிகாரமும், அதட்டலும், சிரிப்பும், செயலுமாக அம்மன் புறப்பாட்டை நடத்திக் கொண்டு போவான் விநாயக சுந்தரம், வாண வேடிக்கையை விட அவன் வாய் வேடிக்கை பிரமாதமாக இருக்கும். சில சமயங்களில் அவனது நகைச்சுவைப் பேச்சே வாணமாக இருக்கும்.
பத்தாவது நாள் கடைசித் திருவிழா. எள் போட்டால் கீழே விழ இடமில்லை. ஒரே கூட்டம். அக்கம் பக்கத்து ஊர் மக்களெல்லாம் வந்திருந்தார்கள். அம்மன் புறப்பாடாகிக் கோவில் வாசலைக் கடந்து வீதியில் வந்து விட்டாள். கடைசி நாள் அன்றைக்கு மட்டும் விநாயக கந்தரம் தன் கையாலேயே வாணம் விட்டுக் கொண்டு வருவான். அரை வேஷ்டியை முழங்காலுக்குமேல் தார்ப் பாய்ச்சிக் கட்டிக் கொண்டு. திறந்த மார்போடு திருநீற்றுக் கோலங்களுடன் அன்று அவன் பரம பக்தனாகக் காட்சியளிப்பான். அவன் பக்கத்தில் ஓர் ஆள், கூடைநிறைய வாணத்தோடு வருவான். விநாயக சுந்தரம் கூடையிலிருந்து ஒவ்வொரு வாணமாக எடுத்துத் தீப்பொருத்தி மேலே விடுவான். அந்தக் கலையை வைத்துக் கொண்டு அற்புதமான வேடிக்கையைக் காட்டுவான் அவன். தரையில் நின்று கொண்டு வானில் ஒளியைச் சிதறி விளையாடும் அந்த விந்தை அவனுடைய தனித் திறமை.
அதனால்தான் கடைசி நாளில் அத்தனைக் கூட்டம் கூடியிருந்தது. வாண வேடிக்கை பார்ப்பதற்காகத் தெருவின் இரு சிறகிலும் கூட்டம். வீடுகளின் மொட்டை மாடிகளிலும் கூட்டம். அன்றைக்கு ஒரு நாள் மட்டும் யாரும் யாரையும் கண்டிக்க முடியாது. யார் வீட்டு மாடியில் எவர் நிற்பதென்ற உரிமைப் பேச்செல்லாம் கிடையாது. உள்ளூர் ஆட்கள், வெளியூர் ஆட்கள், வேறு தெரு ஆட்கள், எல்லோரும், எல்லோர் வீட்டு மாடியிலும் சுவாதீனமாக வாண வேடிக்கை பார்க்க ஏறி நின்று கொள்ளுவார்கள்.
அம்மன் புறப்பாடாகித் தெருவில் இறங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம் வாண வேடிக்கை ஆரம்பமாயிற்று. அம்மன் ஒவ்வோரிடத்திலும் நின்று மெல்ல நகர்ந்தாள். விநாயக சுந்தரத்தின் கைவரிசைகள் விண்ணின் இருள் நீலப்பரப்பில் பல வண்ண ஒளிகளை உமிழ்ந்து கொண்டிருந்தன. ‘எடுத்தது கண்டார் இற்றது கேட்டார்’ என்று இராமன் வில் ஒடித்த பெருமையைக் கவிஞர் கம்பர் பாடின மாதிரி விநாயக சுந்தரம் வாணம் எடுத்ததை எல்லோரும் கண்டார்கள். சர்ரென்று அது மேல் நோக்கி எழுந்ததைக் கண்டு வியக்குமுன் ஒளி மலர்களாக வானில் மலர்ந்து வியப்பூட்டியது அந்த வாணம்.
கட்டாந்தரையில், மொட்டைப் புளியமரத் தோப்பில், ஓட்டுக் கட்டிடத்தில் இத்தனை விந்தைகளை அவனால் எப்படிப் படைத்து, வித்தை காட்ட முடிகிறதென்று பட்டிக்காட்டு ஜனங்களுக்கு ஒரே ஆச்சரியம்.
அம்மன் ஊர்வலம் மெதுவாக நகர்ந்து தெருவைக் கடந்து கொண்டிருந்தது. மேளக்காரரும், நாதசுரக்காரரும் வெளுத்து வாங்கினார்கள். பொய்க்கால் குதிரைக்காரர்கள் நிஜக்குதிரை மாதிரியே ஆடிக் காட்டினார்கள். ஆனால், அதையெல்லாம் யார் கவனித்தார்கள்?
விநாயகசுந்தரத்தின் வாணவேடிக்கை ஒன்றைத்தானே அத்தனைக் கூட்டமும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.
பாதித் தெரு வருவதற்குள்ளேயே தன்னைப் பற்றிப் பிரமாதமான புகழ் வார்த்தைகள் அவன் காதுகளில் விழுவதற்குத் தொடங்கி விட்டன. -
“அடேயப்பா! இதற்கு முன் எந்த வருடத்திலும் வாண வேடிக்கை இவ்வளவு பிரமாதமாக அமைந்ததில்லை. விநாயக சுந்தரம் ஜமாய்த்து விட்டார்!”
தர்மகர்த்தா அவன் காதில் கேட்கும் படியாகவே யாரிடமோ அவனைப் புகழ்ந்து கொண்டிருந்தார். அவனுடைய மனத்திலும், கைகளிலும் உற்சாகம் முறுக்கு ஏறியிருந்தது. தர்மகர்த்தா ஒருவருடைய புகழ்ச்சிக் குரல்தான் அவனால் அந்தக் கூட்டத்தில் அடையாளம் புரிந்துகொள்ள முடிந்த குரல். அடையாளம் புரியாத இன்னும் எத்தனையோ குரல்கள் அவனை அவன் வித்தையை, அவன் காது கேட்கும்படியே புகழ்ந்து கொண்டிருந்தன.
ஊர்வலம் தெருத் திரும்பி விட்டது. ஒரு மூலையில் ஏழெட்டுக் குடிசைகள். அதற்கருகில் ஒரு பாழ் மண்டபம். அது ஊரின் சேரி. மாடி வீட்டுக் குழந்தைகளுக்கெல்லாம் வாண வேடிக்கை பார்க்க மொட்டை மாடி இருந்தது. சேரிக் குழந்தைகள் என்ன செய்யும் பாவம்? கிட்டவும் வர முடியாது.எட்டி நின்று பார்க்க மாடியும் அங்கே இல்லை.
மேலே ஏறிச் செல்லப் படியுடன் இருந்த அந்தப் பாழ் மண்டபம் சேரிக் குழந்தைகளின் குறையைப் போக்கியது. அந்த இருட்டில் அதன் மேலே ஏறி நின்று திருவிழா வாண வேடிக்கை பார்ப்பதற்காக அந்தக் குழந்தைகளை யாரும் ஏன் என்று கண்டிக்கப் போவதில்லை. பார்க்கா விட்டாலும் ஏன் போய்ப் பார்க்கவில்லை என்று யாரும் கேட்கப் போவதில்லை.
அந்தச் சிறு குழந்தைகளுக்கு ஆசையில்லாமலா போகும்? உலகத்திலுள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் ஆசை ஒரே மாதிரித்தானே இருக்க முடியும்? குஞ்சும் குளுவானுமாகச் சேரியைச் சேர்ந்த ஏழெட்டுக் குழந்தைகள் அந்தப் பாழ் மண்டபத்தின் மேல் வந்து நின்று கொண்டிருந்தன.
அம்மன் ஊர்வலம் பாழ் மண்டபத்தை அணுகிய போது கட்டிடங்கள் குறைந்து பெரும் பகுதி திறந்த வெளியாக இருந்ததனால், அதிகம் சக்தியுள்ள புது மாதிரி வாணம் ஒன்றை முதல் தடவையாகக் கொளுத்தி விட்டான் விநாயகசுந்தரம்.
வாணம் அவன் கையிலிருந்து புறப்பட்ட மறு விநாடி பாழ்மண்டபத்தின் உச்சியிலிருந்து வீல் என்று பயங்கரமாக ஒரு குழந்தையின் அலறல் ஒலித்தது.”என்ன? என்ன?” என்று பதறிய குரல்களும், பரபரப்பும் கலவரமுமாகக் கூட்டம் அலை மோதியது. ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை, ஆனால், விநாயக சுந்தரத்துக்கு உடனே புரிந்து விட்டது. கூட்டத்தை வகிர்ந்து கொண்டு மனம் பதறி ஓடினான். பாழ் மண்டபத்தில் ஏறினான். அங்கே தென்பட்ட காட்சியைக் கண்டதும் அவனுக்குக் குடல் பதறியது. சரீரம் கிடுகிடுவென்று நடுங்கியது. சிறு குழந்தை மாதிரி விக்கி விக்கி அழுதான்.
பாழ் மண்டபத்தில் நின்று கொண்டிருந்தசேரிக் குழந்தைகளில் ஓர் ஐந்து வயதுப் பெண் குழந்தையின் கண்களில் அவனுடைய வாணம் பாய்ந்து கோரப்படுத்தியிருந்தது. மற்றக் குழந்தைகளும் பயந்து போய் மிரண்டு அழுதன.
அப்படியே அந்தக் குழந்தையை வாரி எடுத்துக் கொண்டு உள்ளூர் லோகல் பண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினான் அவன்.
குழந்தைக்குக் கண் போய் விட்டது. மூன்று நாள் வரை ‘பார்க்கலாம், பார்க்கலாம்’ என்று சொல்லிக் கொண்டிருந்த டாக்டர் நான்காம் நாள் கண் போய்விட்டதென்று தீர்மானமாகச் சொல்லி விட்டார். சேரி ஆட்களை விசாரித்ததில், அது தாய் தந்தையற்ற அநாதைக் குழந்தையென்று தெரிவித்தனர்.
குழந்தையை வண்டியில் போட்டுக் கொண்டு ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்குத் திரும்பினான் அவன். வீட்டுக்குப் போகிற வழியில் கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் வந்தது. அவன் கை கூப்பினான். “தாயே! இந்த அநாதைக் குழந்தையின் கண்ணை என் கையால் பிடுங்கி எறிய வேண்டுமென்பதுதான் உன் சித்தமா? இதற்குக் கண் போயிற்று! எனக்குக் கண் கிடைத்து விட்டது” அவன் குரல் தழுதழுத்தது. அதே சமயம், அவன் மனத்தில் ஒரு மின்னல் மின்னியது.”இது அநாதைக் குழந்தையல்ல! தாய் தந்தையற்றதல்ல; இது நீதான். கண்ணுடைய நாயகியாகிய நீயேதான் கண்ணிழந்து என் வீட்டுக்கு வர இப்படி ஒரு குழந்தையாகப் பிறந்து தந்திரம் செய்திருக்கிறாய்!” பித்தனைப் போல் முணுமுணுத்தான் விநாயகசுந்தரம்.
குழந்தையை வண்டியிலிருந்து வீட்டுக்குள் சுமந்து கொண்டு போகும் போது அம்மன் சிலையையே தூக்கிக் கொண்டு போகிற மாதிரி பயபக்தியுடனே தூக்கிக் கொண்டு போனான் விநாயககந்தரம்.
ஆம்! வாணம் உலகத்துக்கெல்லாம் வேடிக்கை. அதைச் செய்கிறவனுக்கு அது ஒவ்வொரு கணமும் வினைதான்.
(1978-க்கு முன்)