நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/புகழ் என்னும் மாயை
139. புகழ் என்னும் மாயை
நடிக மணி நாவுக்கரசனுக்கு அன்று அப்படி ஒருவிநோதமான ஆசை ஏற்பட்டது. தன்னைப் பற்றி வெளியில் ஆண்களும்,பெண்களும்,சிறுவர்களும், சிறுமிகளும் என்ன பேசிக் கொள்கிறார்கள், எப்படிப் புகழ்கிறார்கள், எவற்றைத் தனது பெருமைகளாகச் சொல்லி வியக்கிறார்கள், எவற்றைத் தமது சிறுமைகளாகச் சொல்லி இகழ்கிறார்கள்என்றெல்லாம் தானே நேரில் கேட்டுத் தானே நேரில் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும்போல நடிக மணிக்கு விந்தையானதொரு விருப்பம் உண்டாயிற்று.
நேரில் தம்மைச் சுற்றிலும் காதில் கேட்கிற கேட்ட-கேட்கும் புகழை அவர் நம்பத் தயாராயில்லை. பத்திரிகைகளும், நண்பர்களும் திறமைக்காக அல்லாமல், நட்புக்காகவும், தயவுக்காகவும் புகழுகிறார்களோ என்று நீண்ட நாட்களாக அவருடைய மனத்தில் ஒரு சந்தேகம் உறுத்தியது. தற்பெருமையையும், செல்வக்குவியலின் சுக போக வீறாப்பையும், எண்ணி எண்ணி மனத்திற்கே அந்த எண்ணம் சலித்துப் போய், ‘இன்னும் ஏதோ உன்னிடம் இல்லையே, ஏதோ குறைகிறதே’ என்று உள் மனமே தன்னை இடித்துக் காட்டி எதற்காகவோ தவிக்கும் சமயங்களில் எல்லாம் நடிக மணிக்கு இந்த ஆத்ம விசாரம் தவிர்க்க முடியாமல் உண்டாகும்.
“உண்மையாகவே இந்த உலகம் என்னைப் பற்றி என்னதான் நினைக்கிறது? என்ன பேசுகிறது? இவ்வளவு புகழையும், செல்வத்தையும் சுகபோகக் கட்டுக் காவலையும் கடந்து வந்து என் செவிகளை எட்டமுடியாத அபிப்ராயங்களுக்கும் என் கவனம் செலுத்தப்பட வேண்டுமல்லவா? ஆசையவலங்களும், பொறாமை போட்டிகளும், வறுமை வாட்டங்களும் மண்டிக் கிடக்கும் உயிருள்ள உலகத்தின் அழுக்கு நிறைந்த வீதிகளிலும், சந்துகளிலும், பொந்துகளிலும், மூலை முடுக்குகளிலும், பயங்களற்ற தனிமையில், தயக்கங்களற்ற துணிவில் மனிதர்கள் என்னைப் பற்றி என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள்? என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்?” நடிக மணியின் சிந்தனை புரண்டது. -
தன்னை யாரும் தெரிந்து கொள்ள முடியாமல், தான் எல்லோரையும், எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் முடிந்த மாதிரியில் வெளியே ஒரு சுற்றுச் சுற்றி விட்டு வந்து விடவேண்டுமென்று தீராத தாகம் கொண்டார் அவர்.
அப்போது இரவு ஏழு மணி. அன்றிரவு ஒன்பது மணிக்கு ஏதோ ஒரு படப்பிடிப்புக்குக் ‘கால்ஷீட்’ இருந்தது. முதல் வேலையாக டெலிபோனை எடுத்து உடல் நலமில்லாததால் அன்று படிப்பிடிப்புக்கு வர இயலாதென்று ‘கால்ஷீட்’டை ரத்துச் செய்தார். அடுத்துத் தனக்கு மிக நெருங்கிய நண்பரான ‘மேக்-அப்’ நிபுணர் ஒருவருக்கு டெலிபோன் செய்து சில சாதனங்களோடு தன் பங்களாவுக்கு உடனே வருமாறு அவரை வேண்டிக் கொண்டார். கால் மணி நேரத்தில் ‘மேக்-அப்’ நிபுணர் டாக்ஸியில் வந்து சேர்ந்துவிட்டார்.
“யாரும் என்னை அடையாளம் கண்டுகொள்ள முடியாதபடி தாராளமாக வெளியில் சுற்றி விட்டு வர வேண்டும். அதற்கேற்ற மாதிரியில் எனக்கு ஒரு மேக்-அப் போட்டு விடுவீரா?”
நடிக மணியின் விருப்பத்தைக் கேட்டு மேக்-அப் நிபுணர் திகைத்தார். ஆனாலும் மறுக்காமல் ஒப்புக் கொண்டார்.
முக்கால் மணி நேரத்தில் நடிக மணியை அவரது வீட்டிலுள்ளவர்களே அடையாளம் கண்டு கொள்ள முடியாதபடி உருமாற்றி விட்டார் மேக்-அப் நிபுணர். தாடியும், மீசையும், நரைத்த தலையும், மூக்குக் கண்ணாடியுமாக ஏதோ ஓர் ஏழைக் குடும்பத்து, நடுத்தர வயது மனிதனைப் போல் மாறியிருந்தார் நடிகமணி. காரியம் காதும், காதும் வைத்தாற் போல் பரம ரகசியமாக நடந்தது. ‘யாரிடமும் இதைப் பற்றி மூச்சுவிடக் கூடாதென்று’ மேக்-அப் நிபுணரிடம் உத்தரவாதம் வாங்கிக் கொண்டிருந்தார் நடிகர். வெளியே புறப்படுமுன் கண்ணாடியில் பார்த்துச் சரி செய்து, குரலை மாற்றிக் கொண்டு பேசவும் பழகிக் கொண்டார். நடிகரிடம் விடை பெற்றுக் கொண்டு மேக்-அப் நிபுணர் புறப்பட்டுப் போய் விட்டார். -
இரவு மணி எட்டே கால். படங்களில் நடித்துப் புகழ் பெற்ற நடிகமணி, வாழ்க்கையில் நடித்துப் பார்க்க வீட்டை விட்டு வெளியேறினார். மூக்குக் கண்ணாடியணிந்த கிழவராக அவர் புறப்பட்டார்.
“உலகத்துத் துன்பங்களே தெரியாமல் அரண்மனைச் சுகங்களில் மயக்கப்பட்டிருந்த புத்தர் அங்கிருந்து யாருக்கும் தெரியாமல், மெளனமாக உண்மை உலகை அறிய வெளியேறின போது அவருடைய மனத்திலும் இப்படித்தானே ஆவல்கள் துடித்திருக்கும்? உயிரும் சதையுமாக உண்மை உலகத்தைக் காண விரும்புவதில்தான் எத்தனை சுகம்!”
அவரது அந்தப் பிரம்மாண்டமான அரண்மனை போன்ற மாளிகையின் வாயிலுக்கு அப்பால் வெறும் கால்களால் நடந்து தெருவில் இறங்குவது நடிகமணியின் வாழ்வில் முதல் முதலாகப் புதிய அநுபவம். பங்களா வாயிற்படியில் இருந்தவாறே அழகிய பெரிய காரில் ஏறிச் செல்லும் வழக்கத்தை இப்போதுதான் முதல் முறையாக அவர் மீறுகிறார்.
'சே! சே! பங்களா வாயிலுக்கு இந்தப் பக்கம் தெரு இத்தனை அழுக்காகவா இருக்கும்? செருப்பாவது போட்டு கொண்டு வந்திருக்கலாமே!’ - வீட்டில் இருந்தவை எல்லாம் உயர்ந்த ரகத்துப் புதுச் செருப்புக்கள். அவற்றைக் காலில் அணிந்துகொண்டு புறப்பட்டால், போட்டுக் கொண்டிருக்கும் வேடத்துக்குப் பொருந்தாது. சேறும் சக்தியுமாக இருந்த தெருவில் கூச்சத்தை விட்டுத் துணிந்து விரைவாக நடந்தார். வெறுங்கால்களால் மண்ணை மிதித்தறியாத பட்டுப் பாதங்கள் சிறிது நொந்தன. கால்கள் இலேசாக உறுத்தி வலிப்பது போலிருந்தது.
தெருவின் இரு புறத்துச் சுவர்களிலும் தான் நடித்த படங்களின் பெரிய பெரிய சுவரொட்டிகள் அழகாகவும், கவர்ச்சியாகவும் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்த்துக் கொண்டே நடந்தார் நடிகர்.
மேக்-அப் நிபுணரை அவருடைய வீட்டில் கொண்டு போய் விடுவதற்குச் சென்றிருந்த நடிமணியின் கார் எதிரே வீதியில் திரும்பி வந்து கொண்டிருந்தது. கப்பல் போல நீளமாக, அகலமாக, அழகாக, எத்தனை பெரிய கார்! வீதியையே நிறைத்துக் கொண்டு கம்பீரமாகப் பாய்ந்து வந்தது. அவர் விலகிக் கொண்டு காருக்கு வழி விடவில்லை. கொஞ்சம் நடு வீதியிலேயே தயங்கி நின்று விட்டார்.கார் கிறீச்சிட்டு நின்றது.
“கிழட்டுப் பொணமே! கண்ணு அவிஞ்சு போச்சா? காரிலே விழுந்து சாவாதே. பார்த்து நட!” காரை நிறுத்தி அவருடைய டிரைவரே ஒரு நிமிடம் அவரைத் திட்டி விட்டுப் போனான்.
“கண் அவிந்து போகிறதாவது? இப்போது தானே கொஞ்சம் கொஞ்சமாகக் கண்ணே திறக்கத் தொடங்கியிருக்கிறது!”
மேலே நடந்தார் நடிகர். காஸ் விளக்குகளும் பாண்டு வாத்திய முழக்கமுமாகச் சினிமா விளம்பர வண்டிகள் எதிரே வந்தன. முன்னால் ஓர் ஆள் எல்லோருக்கும் விளம்பர நோட்டீஸ் கொடுத்துக் கொண்டு வந்தான்.சிறு குழந்தைகள் நோட்டீசுக்காக அவனைச் சூழ்ந்து கொண்டு மொய்த்தன. அவனோ குழந்தைகளை விலக்கித் தள்ளி விட்டு, ஒதுங்கி நடந்து கொண்டிருந்த அவர் கையில் ஒரு நோட்டீஸைக் கொண்டு வந்து திணித்து விட்டுப் போனான். சிரித்துக் கொண்டே தெரு விளக்கு வெளிச்சத்தில் நோட்டீஸை விரித்துப் படித்தார் அவர். “நடிகமணியின் சிறந்த நடிப்புக்காக யாவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம்” என்ற வாக்கியத்தைப் படித்த போது சிரிப்புப் பொங்கிக் கொண்டு வந்தது அவருக்கு.
நடிகமணி மிகச் சிறந்த இதுவரை எந்தப் படத்திலுமே நடித்திராத நடிப்பை இன்று இந்த வீதியின் இருளில் அல்லவா நடித்துக் கொண்டிருக்கிறார்? இதைப் பார்க்க யாரும் காசு கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டு வரக் காணோமே!
“தாத்தா! தாத்தா! அந்த நோட்டீஸை எனக்குக் குடு!” ஒரு சிறு பெண் குழந்தை ஓடி வருகிறது. எவ்வளவு அழகான பிஞ்சு முகம் இந்தக் குழந்தைக்கு?
“நீயே வச்சுக்க, பாப்பா! எனக்கெதுக்கு?” என்று குழந்தையின் பிஞ்சுக் கைகளில் அந்த நோட்டீஸைக் கொடுத்துவிட்டு முதுகில் செல்லமாகத் தட்டிக் கொடுத்து அனுப்பினார் நடிகமணி, எதிரே இரண்டு கல்லூரி மாணவர்கள் வேகமாகப் பேசிக் கொண்டே வருகிறார்கள்.“செகண்ட் ஷோவுக்கு நேரமாச்சு; வேகமாக நட இப்பவே போனாத்தான், ‘க்யூ’விலே நின்னு டிக்கெட் வாங்கலாம்.”
“நாளைக்குப் பரீட்சையாச்சேடா! நீயானால் சினிமாவுக்கு வாடான்னு உசிரை வாங்கிறியே?”
“சரிதான் வாடா, சொல்கிறேன். உலகத்திலேயே இல்லாத பிரமாதமா இன்னிக்குத்தான் பரீட்சை புதுசா வருதா என்ன? நடிக மணி இந்தப் படத்திலே ‘ஏ ஒன்’ ஆக நடிச்சிருக்காண்டா! எல்லோரும் பிரமாதமாச் சொல்றாங்க!”
- அந்த இளைஞனுக்கு இருந்த உற்சாகத்திலே நடிக மணியை ஏக வசனத்திலே ஒருமையாகப் பேசிப் புகழ்ந்து கொண்டு போகிறான் அவன்.
நடிகமணி இதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டே மேலே நடந்தார். ஏதோ ஒரு கிராமத்திலிருந்து கொண்டு, நெற்றி வேர்வை நிலத்தில் விழப் பாடுபட்டு, அந்தப் பையனின் படிப்புக்காகச் சுளை சுளையாய்ப் பணம் அனுப்பிக் கொண்டிருக்கும் அவனது ஏழைத் தகப்பனின் முகத்தை நடிக மணி இப்போது தன் மனக்கண்களில் கற்பனை செய்ய முயன்றார். நெஞ்சின் மெல்லிய பரப்பில் முட்கள் பாய்வது போல் ஏதோ ஒரு வலி உண்டாயிற்று. ஒரு வேதனை கால் கொண்டது.
நடந்து நடந்து அமைதியான தெருக்களைக் கடந்து, கலகலப்பான ஒரு வீதிக்குள் புகுந்தார் அவர். தெருத் திருப்பத்தில் ஒளி மயமான மின் விளக்கு அலங்காரங்களோடு ஒரு சினிமாத் தியேட்டர்- அதில் அவர் நடித்த படம் நூறாம் நாள் விழாக் கொண்டாடி முடித்தும் இன்னும் கூட்டம் குறையாமல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. தியேட்டருக்கு எதிர்த்தாற் போல் அங்கே ஒரு பொதுப் பூங்கா அமைந்திருக்கிறது.
பூங்காவில் உள்ளே நுழைந்து கூட்டத்தோடு கூட்டமாகப் புல் தரையில் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டார் அவர். பின்புறம் யாரோ இரண்டு வயதான மனிதர்கள் பேசிக் கொள்ளும் உரையாடல் கேட்கிறது.
“என்ன ஐயா, ராமரத்னம்! எங்கே இந்த நேரத்திற்கு இப்படிப் பார்க்கில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்?”
“ஒய்ப் சினிமாவுக்குப் போயிருக்கிறாள். ஆட்டம் விட்டதும், இருந்து கூட்டிக் கொண்டு போகணும்! அதான் உட்கார்ந்து காத்துக் கொண்டிருக்கேன்…”
“ஏன் ஐயா நீயும் கூடப் போயிருக்கக்கூடாதோ?”
“தெரிந்தால்தானே சார் போகலாம்? சாயங்கலாம் ஆபிஸ் விட்டு வீட்டுக்கு வந்து பார்த்தால் பக்கத்து வீட்டிலே சாவியைக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறாள். ‘அடுப்பிலே பால் காய்ச்சி வைத்திருக்கிறது. டிகாக்ஷன் போட்டுக் காபி கலந்து கொள்வீர்களாம் - திரும்பக் கூட்டிக் கொண்டு வர ஒன்பதரை மணிக்குத் தியேட்டருக்கு வருவீர்களாம்’ என்று பக்கத்து வீட்டில் விவரம் சொல்லிச் சாவியைக் கொடுக்கிறார்கள்…”“சினிமாவில் அப்படி ஒரு பைத்தியமா?”
“இரைந்து கேட்காதீர் இந்தக் கேள்வியை! யார் காதிலாவது விழுந்தால் பிறகு உம்மைத்தான் பைத்தியம் என்பார்கள். முந்தா நாள் பக்கத்து வீட்டிலே ஒரு சங்கதி நடந்தது. பள்ளிக்கூடத்திலே பத்தாங் கிளாஸோ, என்னமோ படிக்கிற பையன் ஒருத்தன் அப்பா அம்மாவுக்குத் தெரியாமல், வெள்ளி டம்ளரை வீட்டிலிருந்து கிளப்பிக் கொண்டு போய் விற்று விட்டான். 'எதுக்குடா இப்படிச் செய்தே?’ என்று தகப்பனார் நாலு அறை வைத்துக் கேட்டபோது, ‘சினிமாவுக்குப் போகக் காசு இல்லே, டம்ளரை விற்றேன்’ என்றான் பயல்.”
“அந்தப் பையனாவது அப்படிச் செய்தான்! எங்கள் தெருவில் ஒரு பையன் மாதாமாதம் பள்ளிக்கூடச் சம்பளத்தைக் கட்டாமல் சினிமாவிற்குக் ‘க்யூ’வில் நின்று தகப்பனிடம் உதைபடுகிறான்.”
“இதெல்லாம் சினிமாவுடைய தப்பென்று சொல்ல முடியாது சார்! சினிமாவிலே எவ்வளவோ நல்ல அம்சம் எல்லாம் காட்டறாங்க. ‘நடிக மணி நாவுக்கரசன்’னு ஒருத்தர் படத்துக்குப் படம் அற்புதமாக நடித்திருக்காரு. நம்ம ஆளுங்கதான் கலையை ஒரு கட்டுப்பாட்டோடு இரசிக்கத் தெரியாமே தாறுமாறாகப் பைத்தியம் பிடிச்சுப் போயிடறாங்க” என்று முதலில் பேசிய இருவருக்கும் நடுவே வேறு ஒரு குரல் நுழைந்து சமாதானம் கூறுகிறது.
உட்கார்ந்து கேட்டுக் கொண்டே இருந்த நடிக மணிக்கு மனத்தை என்னமோ பண்ணுகிறது. கணவனை மறந்து சினிமாவுக்கு ஓடும் மனைவி, வெள்ளி டம்ளரை வெள்ளித் திரைக்காக விற்கும் பையன், பள்ளிச் சம்பளத்தைப் படம் பார்க்கச் செலவழிக்கும் சிறுவன் எல்லாரும் மனத்தில் தங்கி முள்ளாகக் குத்தினார்கள். அவ்வளவுக்கும் நடுவில் தன் நடிப்புத் திறமையைப் புகழ்ந்த மூன்றாம் மனிதரின் குரல் மனத்துக்குச் சிறிது ஆறுதலும் தந்தது அவருக்கு.
நடிகமணி பூங்காவிலிருந்து நடந்தார். திரைப்படக் கொட்டகை வாசலில் ‘க்யூ’வில் ஏதோ கலவரம். எல்லோருமாகச் சேர்ந்து கும்பலாகக் கூடிக் கொண்டு யாரோ ஒருவனை அடிக்கிறார்கள்: உதைக்கிறார்கள். அருகில் நெருங்கி விசாரித்ததில், யாரோ பிக்பாக்கெட் அடித்து விட்டானாம். அவனைத் தண்டிக்கிறார்களாம்.
சினிமாத் தியேட்டரிலிருந்து சிறிது தள்ளி ஒரு மரத்தடியில் கூலிக்காரிகள் போல் தோற்றமளித்த இரண்டு எளிய பெண்கள் பேசிக் கொண்டு நின்றார்கள்.
“என்னடி அங்கம்மா! உம் புருசன் வீட்டுக்கு இன்னிக்காச்சும் வந்தானா? கஞ்சி காய்ச்சக் காசு கொடுத்தானா?”
“அதையேன் கேட்குறே? என் தலையெழுத்து. கூலியை வாங்கிட்டு முதலாட்டத்துக்கு ஒரு படம். இரண்டாவது ஆட்டத்துக்கு இன்னொரு படம்னு அது பாட்டுக்குப் போயிடுது. நான் கெடந்து திண்டாடுகிறேன். குழந்தை குட்டிங்க எல்லாம் பட்டினி, வீடு நெனைவில்லாமே திரியுற மனுசனை என்னா.செய்யிறது?’“என்னமோ, காளியாத்தா பார்த்து உம் புருசனுக்கு நல்ல புத்தியைக் குடுக்கணும். கலியாணம் கட்டின நாளிலேருந்து நீயும் இந்தக் கஸ்டம்தான் படுறே…” இந்தப் பேச்சைக் கேட்டதும், பரட்டைத் தலையும், பீடிப் புகையுமாக ஒரே படத்துக்கு ஏழு தரம் நாலரையணா க்யூவில் நிற்கும் ஆண் முகம் ஒன்று நடிக மணியின் கற்பனைக் கண்களில் தோன்றுகிறது. கண்களில் நீர் மல்க, நெஞ்சு வேதனையால் துடிக்க, அந்தப் பஞ்சைப் பெண்ணை ஒரு கணம் நின்று பார்த்து விட்டு மேலே நடந்தார் நடிகமணி.
இன்னும் சிறிது தூரம் சென்றதும், ஐந்தாறு குடிசைகள் சேர்ந்தாற் போல் தெரிந்தன. அந்தக் குடிசைகளில் ஏதோ ஒன்றில் இருக்கும் சிறுமி ஒருத்தி, நடு வீதியில் நின்று யாரையோ எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். நடிகமணி கேட்கிறார்.
“இருட்டிலே ஏன் தனியா நின்னுக்கிட்ருக்கே, பாப்பா?”
“தனியா நிக்காமே வேறே என்னா செய்யிறது தாத்தா? நாயினா சினிமாவுக்குப் போயிடுச்சு. கஞ்சி காய்ச்சக் காசு குடுக்கலே, நாயினாவைத் தேடிக்கினு அம்மாவும் போயிடிச்சு. குடிசைலே வெளக்கு இல்லே. பயமாயிருக்கு. அங்கே குந்தியிருந்து அலுத்துப் போச்சு.”
“உங்க நாயினா என்னா வேலை செய்யிது?”
“கை வண்டி இழுக்குது.”
“உங்க நயினா தெனம் தெனம் சினிமாவுக்குப் போகுதே, உன்னை என்னிக்காச்சும் கூட்டிக்கிட்டுப் போயிருக்குதா?”
“நாயினா சம்பாரிக்கிற காசு, அது சினிமாவுக்குப் போறதுக்கே காணலியாம். என்னை எங்கே கூப்பிடப்போகுது? அம்மா சொல்லுது.”
“உன்னை நான் சினிமாவுக்குக் கூட்டிக்கிட்டுப் போறேன், வர்ரியா பாப்பா?”
“சினிமாக்கொண்ணும் நா வரலை.பசி வவுத்தைக் கிள்ளுது. அம்மாவை இன்னும் காணலியே தாத்தா?”
“எங்கூட வா ஒட்டல்லே சாப்பிடலாம்…”
குழந்தை கூச்சமோ, பிகுவோ இல்லாமல் நடிக மணியைப் பின் தொடர்கிறது. சினிமாத் தியேட்டர் அருகிலிருந்த ஓர் ஒட்டலுக்குக் கூட்டிக் கொண்டு போய்க் குழந்தைக்கு விதவிதமான பலகாரங்கள் வாங்கிக் கொடுக்கிறார் அவர். குழந்தை முகம் மலர்ந்து சாப்பிடுகிறது.
இன்னும் ஒரு பெரிய பலகாரப் பொட்டலத்தை வாங்கி, அதன் கையில் கொடுத்து, “வீட்டிலே போய் இதை உங்கம்மா கிட்டக் கொடுக்கணும்” என்று கூறி அழைத்துப் போகிறார்.
வீதியில் குடிசைகள் உள்ள இடம் அருகே வந்ததும், “நீ வீட்டுக்குப் போ, பாப்பா! நான் போய் வருகிறேன்” என்று நடிக மணி விலகிக் கொள்கிறார்.“நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்களே தாத்தா! எங்க நாயினாவுக்கு ரொம்பக் கோபம் வரும். பொல்லாதவரு. ‘கஞ்சி காச்சக் காசு தராமே இப்படிச் சினிமா சினிமான்னு அலையறிங்களே’ன்னு அம்மா கேட்டா, நாயினா அம்மாவை இழுத்துப் போட்டு அடிக்கும், உதைக்கும். அம்மா அழுவா; அம்மாவைப் பார்த்தா எனக்கும் பாவமா இருக்கும்.”
“இனிமே சினிமாவுக்குப் போகப்படாதுன்னு உங்க நாயினாவுக்கு நீ சொல்லேன்.”
“அம்மாடி! நான் சொன்னா, அது என்னையே அடிச்சுக் கொன்னுடும் தாத்தா! நாளைக்கி வேணா நீயே வந்து சொல்லேன் தாத்தா.”
“சரி; வந்து சொல்றேன் நீ வீட்டுக்குப் போ…!'
“கட்டாயம் வரணும் தாத்தா! நீங்க ரொம்ப நல்லவரு.” குழந்தை பலகாரப் பொட்டலத்தோடு குடிசைக்குள் போகிறது. நடிக மணி மேலே நடந்தார்.
அவர் மேலே ஏறி விடுகிறார் போல் ஒரு கார் மிக அருகில் வந்து நிற்கிறது. மேக் - அப் நிபுணர் சிரித்துக் கொண்டே ஸ்டுடியோ காரிலிருந்து கீழே இறங்குகிறார்.
“என்ன, உலகம் எப்படி இருக்கிறது?”
“நான் நினைத்துக் கொண்டிருந்த மாதிரி இல்லை.”
“நீங்கள் எதற்கு இந்த உலகத்தைப் பற்றி நினைக்கவேண்டும்? கலை உலகிற்கு நீங்கள்தான் முடி சூடா மன்னர். அந்த உலகைப் பற்றி மட்டும் நினையுங்கள் போதும். அங்கே உங்களுக்குப் புகழ்தான் உண்டு. இன்பம்தான் உண்டு, துன்பமே இல்லை”.
இதைக் கேட்டு விட்டு நடிக மணி நகைத்தார்.
“ஒவ்வொருவருடைய புகழுக்கும், எங்கோ பலர் துன்பப்பட வேண்டியிருக்கிறது. உயிருள்ள உலகத்தில் எத்தனையோ பிரச்னைகள். அதை மறந்து விட்டோ, மறைத்து விட்டோ கலை உலகில் நான் மட்டும் சுகமான தந்தக் கோபுர வாசியாக வாழ்வது நியாயமாகப் படவில்லை எனக்கு” ,
உள்ளம் உருகி நடிக மணி நாவுக்கரசு இவ்வாறு கூறி விட்டு நிதானமாகப் பெருமூச்சு விட்டார். அவருடைய ஞானோதயம் புரியாமல் மேக்-அப் நிபுணர் திகைத்தார்.
(1978-க்கு முன்)