நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/சந்தேகங்களின் முடிவில்...
159. சந்தேகங்களின் முடிவில்...
வியன்னா விமான நிலையத்தில், ஆளரவமற்று வெறிச்சோடிப் போன அந்த நள்ளிரவில் சந்தேகப்படத்தக்க சூழ்நிலையில், அந்த இளம் பெண் எனக்கு வற்புறுத்தி உதவ முன் வந்த போது, என்னுள் மகிழ்ச்சிக்குப் பதில் பயமும்-தற்காப்பு உணர்ச்சியுமே அதிகமாயின. ஹாம்பர்க்கிலும், பெர்லினிலும் என் நண்பன் பாஸ்டின் ராய்ஸ் எச்சரித்திருந்தது நினைவுக்கு வந்தது.
என்னுடைய கோட் பாக்கெட்டில் உள்பக்கமாகப் பத்திரமாயிருந்த ஆயிரத்து இருநூறு டாலர் ரொக்கத்தையும், ஐநூறு டாலர் மதிப்புள்ள டிராவலர்ஸ் செக்கையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற பதற்றம் அதிகமாயிற்று. கேள்விப்பட்டிருந்த கதைகள், அனுபவங்கள் ஒவ்வொன்றாக நினைவு வந்தன. வெளிநாட்டில்-கண்காணாத தேசத்தில் பணத்தை இழந்து நடுத் தெருவில் நிற்கும் பயங்கர அனுபவத்துக்கு ஆளாகி விடுவோமோ என்று பயமாகக் கூட இருந்தது.கோடைக் காலமாதலால், லண்டனிலும், பாரிஸிலும் போல வியன்னாவிலும் இரவு பத்து மணிக்குமேல்தான் இருட்டும் என்று ஜெனீவாவிலிருந்து புறப்படும் போது நினைத்திருந்தேன்.
என் துரதிர்ஷ்டம் மாலை ஆறு மணிக்கு மேல் ஜெனீவாவிலிருந்து வியன்னாவுக்கு நேரடியாக ஃபிளைட் எதுவும் இல்லை. ஜெனீவாவிலிருந்து ஜூரிச் வரை ஸ்விஸ் ஏர் ஃபிளைட் ஒன்று இருந்தது. அப்புறம் ஜூரிச் விமான நிலைய டிரான்ஸிட் லவுன்ஜில் இரண்டு மணி நேரம் காத்துக் கிடந்து, மறுபடி அங்கிருந்து ஆஸ்டிரியன் ஏர்வேஸ் ஃபிளைட் ஒன்றைப் பிடித்து வியன்னா போய்ச் சேர வேண்டிய மாதிரி, என் பயணத் திட்டம் அமைந்து விட்டிருந்தது. வேறு வழியில்லை. அன்று ஞாயிற்றுக் கிழமை வேறு!
வீக் எண்ட்- அதாவது, வார இறுதி விடுமுறை நாட்களில் அந்த நாட்டவர்களை வெளியே பார்ப்பது துர்லபம். தெருக்கள் வெறிச்சோடிக் கிடக்கும் தெருவோரங்களிலும் வீட்டு முகப்புக்களிலும் வரிசையாகப் பார்க் செய்த கார்களைத் தவிரத் தெருக்களும், கடை வீதிகளும் ஆளரவமற்று மக்கள் காலி செய்து விட்டு ஓடின நகரம் மாதிரி இருக்கும்.
வியன்னாவில் விமானம் தரையிறங்கும் போதே இரவு ஒன்பது மணிக்கு மேலாகியிருந்தது. பாஸ்போர்ட் கண்ட்ரோல், கஸ்டம்ஸ் ஆகிய இடங்களில் ‘க்யூ’வில் நின்று முடித்துக் கொண்டு-எக்ஸ்சேஞ்ஜ் கவுண்டரில் மறுபடியும் வரிசையில் நின்று, தேவையான அளவு ஆஸ்ட்ரியன் ஷில்லிங்ஸ் மாற்றிக் கொண்டு வெளியே வந்த போது இரவு மணி பத்து. நன்றாக இருட்டி விட்டது.
மேற்கு ஜெர்மனியில் பத்துப் பேரில் ஐந்து பேர் ஆங்கிலத்தில் உரையாடக் கிடைப்பார்கள் என்றால், இங்கே ஆஸ்திரியாவில் பத்தில் ஒருவர் கூட ஆங்கிலம் பேசுவது அபூர்வமாயிருந்தது. தேடி அலைந்து விமான நிலையக் கூடத்தில் இங்கும் அங்கும் ஒடி, ஆங்கிலம் பேசுகிறவரைக் கண்டுபிடித்து, அப்புறம் அந்த நிலையத்தின் 'லெஃப்ட் லக்கேஜ் சாமான்களை விட்டுச் செல்லும் இடம் எங்கிருக்கிறது என்று கண்டுபிடித்து, அரைவல் லவுன்ஜிற்கும் டிபார்ச்சர்லவுன்ஜிற்குமாக-எஸ்கலேட்டரில் ஏறி இறங்கிக் கடைசியாகச் சாமான்களை ஒப்படைத்து ரசீது பெற்றுக் கொண்ட போது, மணி பத்தே முக்கால். வியன்னாவில் தங்குவதற்கும், உபயோகிப்பதற்கும் தேவையான சாமான்களை ஒரு கைப்பையில் எடுத்துக் கொண்டாயிற்று.
விமான நிலைய வாயிலிலிருந்து புறப்படும் லக்சுரி கோச் நகர ஏர் டெர்மினல் ஆகியவை வியன்னா ஹில்டன் ஒட்டல் வரை போகிறதென்றும், அதில்போக ஐம்பது ஷில்லிங்ஆகும்என்றும், அதே விமானநிலையத்தின் கீழ்த்தளத்தில் இருந்து புறப்படும் அண்டர்கிரவுண்ட்ரயிலில் போக இருபத்து நாலுஷில்லிங் ஆகுமென்றும் தெரிந்தது. ஏறக்குறைய அப்போதே விமானநிலையம் வெறிச்சோடிப் போய்விட்டது.
பாதாள ரயிலில் போவதையே விரும்பினேன். காரணம், இருபத்தாறு ஷில்லிங் அந்நியச் செலாவணி மிச்சப்படும் என்பதுதான்!
விமான நிலையக் கூடத்திலிருந்தே கீழே இறங்கி, பாதாளரயில் பிளாட்பாரத்தில் கொண்டு போய்விடும். எஸ்கலேட்டரில் இறங்கிக் கீழே பார்த்தால் துணுக்கென்றது! ஜெகஜ்ஜோதியாக ஸோடியம் வேப்பர் மின்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. ஒரு ரயிலும் புறப்படுவதற்குத் தயாராக நின்று கொண்டிருந்தது. ஆனால், பிளாட்பாரத்திலும் ரயிலுக்குள்ளேயும் ஈ காக்கை இல்லை. பயங்கர மெளனம். டிக்கெட் கவுண்டரில் மட்டும் ஒரே ஒரு நடுத்தர வயதுப் பெண் உட்கார்ந்திருந்தாள். அவளிடம் விசாரித்ததில் மழலை ஆங்கிலத்தில் பதில் கிடைத்தது. "ரயில் போகும். நீங்கள் விரும்பினால் டிக்கெட் தருகிறேன். ஏன் கூட்டமில்லை என்பதற்கெல்லாம் இப்போது நான் காரணம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. பொதுவாக அகாலத்தில் கூட்டமே இராது. இன்று ஞாயிற்றுக்கிழமை வேறு. கோச் எங்குமே நிற்காமல் நேரே சிட்டி ஏர் டெர்மினலுக்குப் போய்விடுவதால், பெரும்பாலான விமானப் பயணிகள் டாக்ஸிக்கு அடுத்தபடிகோச்சிலேயே போய்விடுவார்கள்.ஸப்வே ட்ரெயின் எல்லா ஸ்டேஷன்களிலும் நின்று நின்று எபிட்டி சென்ட்ரல் பகுதிக்குப் போய்ச் சேர அதிக நேரமாகும் என்பதால், பெரும்பாலோர் ரயிலில் போவதை விரும்பமாட்டார்கள்” என்றாள் அவள். டிக்கெட்டை வாங்கிக் கொண்டு ரயிலுக்குப் போனேன். அடுத்தடுத்து இரண்டு மூன்று கோச்களில் ஏறி இறங்கியும், எந்தக் கோச்சிலும் ஆள் நடமாட்டமே இல்லை. பயமாயிருந்தது. அவ்வளவு பெரிய ரயிலில் நான் ஒரே ஒருவன் மட்டும் தானா பயணம் செய்யப் போகிறேன்? ஏறத்தாழ ஒன்பது பெட்டிகளுக்கு மேலுள்ள சுத்தமான அந்த அண்டர்கிரவுண்ட்ரயிலில்,தனியாகநான் ஒருவன்தான் பயணம் செய்யப் போகிறேன் என்றெண்ணியபோது, என்னவோ போலிருந்தது. யோசனையும் தயக்கமும் ஏற்பட்டன.
எதற்கும் மேலும் இரண்டொரு பெட்டிகளில் தேடிப் பார்க்கலாம் என்று, உள்ளேயே ஒரு கோச்சிலிருந்து இன்னொரு கோச்சிற்கு நடந்து போக வசதி செய்யப்பட்டிருந்த அந்த ரயிலில் மேலும் முன்னோக்கி நடந்தேன். வெள்ளைக் குழல் விளக்குகளின் ஒளியில் ரெக்ஸைன் ஸீட்கள் காலியாக மின்னின.
கடைசியாக - அதாவது, ரயிலின் முன்பக்கத்திலிருந்து எண்ண ஆரம்பித்தால், முதல்கோச்சில் அவளைக் காண முடிந்தது. முதல் பார்வையிலேயே பழைய இத்தாலிய நடிகை ஜினாலோலா பிரிகிடாவை அவளது இளம் வயதில் பார்த்தாற்போன்ற தோற்றத்தோடு அவள் தென்பட்டாள்.
ஒரிரு நிமிடங்கள் தயங்கிய பிறகு, "டு யூ ஸ்பீக் இங்கிலீஷ்?” என்று நான் கேட்டவுடன், 'எஸ்' என்று முகமலர்ந்தாள். அப்பாடா! நாற்பது ஐம்பது நிமிடங்கள் போரடிக்கிற தனிமையில் பயணம் செய்ய நேராமல் ஒரு துணையாவது கிடைத்ததே என்று மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்பட்டன. கட்டழகு மையங்கள் விட்டுத் தெரிகிற வகையில் சம்மர் டிரஸ்ஸில் இருந்தாள் அவள். நேரடியாகப் பார்ப்பதற்குத் தயக்கமாகவும் கூச்சமாகவும் இருந்தது. திருட்டுத்தனமாகப் பார்ப்பதற்குப் பயமாக இருந்தது. ரயில் புறப்பட்டது. மணி பதினொன்றே கால். அவள் தன் கையிலிருந்த புத்தகத்தை மடக்கி வைத்துவிட்டு “நீங்கள் டுரிஸ்டா? எந்த நாட்டிலிருந்து வருகிறீர்கள்?’ என்று ஆங்கிலத்தில் கேட்டாள். அந்த நள்ளிரவில் ரயில்பெட்டியில் தன்னந்தனியாக வந்து அமர்ந்திருந்த அழகுத் தேவதையாக ஜொலித்தாள் அவள். நான் அவளுக்குப் பதில் சொன்னேன்.மேலும் உற்சாகமாக எதிர் ஸீட்டில் என்னருகே வந்து உட்கார்ந்து சிரித்துப் பேச ஆரம்பித்தாள் அவள். தன் பெயர் அங்கெலிகா என்று அறிமுகமும் செய்து கொண்டாள். வெண்ணெய் திரண்டாற் போன்ற அவள் மேனி நிறமும், திரட்சியும் வளமும் மினுமினுக்கும் கட்டழகும், இளமையும் மருளச் செய்தன. அந்த உடலிலிருந்து கிளர்ந்த மெல்லிய மயக்கும் தன்மை வாய்ந்ததொரு பெர்ஃப்யூம் என்னை வசப்படுத்தியது. அழகிய வசீகரமான கண்கள், சொக்க வைக்கும் பல் வரிசை, மயக்கும் சிரிப்பு, சிவந்த செந்நிற உதடுகள். அவள் என்னைக் கேட்டாள்:
“வியன்னாவில் எங்கே தங்கப் போகிறீர்கள்?”
“அது ஒன்றும் பிரச்னை இல்லை. பாரிஸிலிருந்தே அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மூலம் ஒரு ஒட்டலில் இடம் ரிஸர்வ் செய்திருக்கிறேன்.” -
“அது சரி! எந்த ஒட்டல் என்று தெரிந்தால்தானே போவதற்கு வழி சொல்ல முடியும்? ஒருவேளை வியன்னா சென்ட்ரலில் இறங்கி வேறு ரயில் மாற வேண்டியிருக்கலாம். அல்லது பஸ் பிடிக்க வேண்டியிருக்கலாம்.”
"ஒட்டல் நாய்பவ். நியுஸ் டிஃப்ட்காஸே - வியன்னா4.”
"அது ஏன் இந்த ஒட்டலை ஏற்பாடு செய்தீர்கள்?
"என்னுடைய பட்ஜெட்டுக்கு இதுதான் முடியும்.”
“அதற்காகச் சொல்லவில்லை. இப்போதே மணி பதினொன்றரைக்கு மேல் ஆகிவிட்டது. ரயிலிலிருந்து இறங்கி இந்த ஒட்டல் உள்ள தொலைவுவரை பஸ்ஸில் போக பஸ் இராது. டாக்ஸியில் போனால் ஒட்டல் வாடகையைவிட அதிகமாக டாக்ஸிக்கே செலவாகிவிடும். நாளை விடிந்ததும் ஊர் சுற்றிப்பார்ப்பதற்காக மறுபடி நீங்கள் நகரின் மையப்பகுதிக்கு அங்கிருந்து வந்தாக வேண்டும். அதற்காக வேறு போக்குவரத்துச் செலவு ஆகும். உங்கள் பட்ஜெட் முழுவதும் போக வரவே செலவழிந்து விடும்.”
“வேறு வழியில்லை. எப்படியும் நான் அங்கே போய்த் தங்கித்தானாக வேண்டும். அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்காரர்கள் எனக்காக அதை ரிசர்வ் செய்து விட்டார்கள்!”
"சிக்கனமாக நான் உங்களுக்கு ஒரு யோசனை சொல்ல முடியும். ஏற்பதும் ஏற்காததும் உங்கள் பாடு” “என்ன யோசனை அது?” "இந்த யோசனையின் மூலம் செலவும் மிச்சப்படும். அநாவசியமாக அகாலத்தில் நீங்கள் நெடுந்தூரம் அலைந்து திரிவதையும் தவிர்க்கலாம். நாம் எந்த இடத்தில் இந்த ரயிலிலிருந்து இறங்குகிறோமோ, அந்த இடத்திற்கு லாண்ட் ஸ்ட்ராபே என்று பெயர். அதற்கு அருகேதான் வியன்னா ஹில்டன் இருக்கிறது. ஆனால், உங்கள் பட்ஜெட்டிற்கு ஹில்டன் ஒத்துவராது. அதற்குப் பக்கத்திலேயே என் சிநேகிதி ஒரு ஒட்டலில் மானேஜராயிருக்கிறாள். நான்கூட அங்கேதான் தங்கப்போகிறேன். விரும்பினால் நீங்களும் அங்கே தங்கலாம்!” "ஏற்கனவே நாய்பவ் ஒட்டலில் செய்த ரிசர்வேஷன் என்ன ஆவது? “பிரச்னை இல்லை. அதை டெலிபோன் மூலம் கான்ஸல் செய்துவிடலாம்.”
- சொல்லியபடி தன் அழகிய கண்களைச் சிமிட்டிக் குறுநகை புரிந்தாள் அங்கெலிகா, பேருக்கேற்றபடி தேவதையாகத்தான் தோன்றினாள் அவள்.
இந்தச் சமயத்தில் நான் அவளுக்கு மறுமொழி கூறுவதற்கு முன் நண்பன் பாஸ்டின் ராய்ஸின் எச்சரிக்கை நினைவு வந்தது. - “ஹாம்பர்க்கிலோ, பெர்லினிலோ அல்லது பாரிஸிலோ ஒரு விஷயத்தில் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த எச்சரிக்கை எல்லாருக்குமே பொருந்தும் என்றாலும், குறிப்பாக உங்களைப் போன்ற ஆசியர்களும்-அராபியர்களும் சுலபமாக ஏமாற்றப்பட்டு விடுவீர்கள்! முன்பின் தெரியாத அழகிய இளம்பெண் யாராவது தன்னோடு வந்து தங்குமாறு அழைத்தாலோ, ஹாவ் எ கிளாஸ் ஆஃப் பீர் வித் மீ” என்று பீர் அருந்தக் கூப்பிட்டாலோ நம்பிப் போய்விடக் கூடாது. பீரிலோ, பானத்திலோ உங்களுக்குத் தெரியாமல் பிரக்ஞையோ, நினைவோ தவறச் செய்யும் மாத்திரைகளைக் கலக்கிக் கொடுத்து விடுகிறார்கள். அப்புறம் பணத்தையோ, உடமைகளையோ பறித்துக் கொண்டு போய்விடுகிறார்கள். இப்போதெல்லாம் சகஜமாக இப்படி நடக்கிறது. ஜாக்கிரதையாயிருங்கள். முன்பின் தெரியாதவர்களின் அழைப்பை அன்பு காரணமாக அழைப்பதாக ஏற்றுவிடாதீர்கள், ஆபத்து” என்பது பாஸ்டின் ராய்ஸ் எனக்கு அளித்திருந்த எச்சரிக்கை.ராய்ஸ் மட்டுமின்றி வேறு பலரும் இப்படி எல்லாம் மோசடிகள் சகஜமாக நடக்கின்றன என்று சொல்லிஎச்சரித்திருந்தார்கள். அவள் சிகரெட் எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு, என்னிடமும் புன்முறுவலோடு சிகரெட் பெட்டியை நீட்டினாள்.
"நோ.தேங்க்ஸ்” என்று நான் மறுத்தேன்.அவள் பக்கத்திலிருந்த புத்தகத்தின்மேல் அப்போதுதான் என்பார்வை சென்றது. முக்கால் நிர்வாணக் கோலத்தில் ஓர் அழகிய இளம்பெண், ஒர் ஆணுக்கு மஸாஜ் செய்வதுபோல் அட்டையில் ஒரு படம் ஹெள டு ஸெட்யூஸ் மென்? ஆண்களை மயக்குவது எப்படி? என்று தலைப்பு.
நிச்சயமாக இவள் பாஸ்டின் ராய்ஸ் எச்சரித்த மாதிரி ஆண்களை மயக்கிப் பணம் பறிக்கும் சாகஸக்காரியாகத்தான் இருக்க வேண்டும். இவளிடம் ஜாக்கிரதை தேவை என்று உள்மனம் என்னை எச்சரிக்க ஆரம்பித்திருந்தது. இவளைப் பார்த்தால் உள்ளுர்க்காரி மாதிரித்தான் தெரிகிறது. ஆனால், தானும் அதே ஒட்டலில் தங்கப் போய்க் கொண்டிருப்பதாக ஒரு ஒட்டலின் பெயரைச் சொல்லி, அதில் தன் சிநேகிதி மானேஜராயிருப்பதால், நானும் அங்கேயே தங்க வேண்டுமென்கிறாள். இதெல்லாம் என்ன சூழ்ச்சியோ’ என்று உள்ளம் மிரண்டது. மறுபடி அவளே பேசினாள்:
“நான் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவள். உங்கள் நாட்டில் நிறைய ரோமன் கத்தோலிக்கர்கள் இருக்கிறார்களாமே, கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் என்ன மதம்?”
“உண்மைதான். எங்கள் நாட்டில் நிறைய ரோமன் கத்தோலிக்கர்கள் இருக்கிறார்கள். நான் அவர்களில் ஒருவனில்லை, இந்து”
"அப்படியா? மிஸ்டர் காந்தியும் ஒரு இந்துவாகத்தானே இருந்தார்”
"ஆனால், சர்வமத சமரச நோக்கில் காந்தி மிகவும் நம்பிக்கைக் கொண்டு பாடுபட்டார்” “நான் ‘காந்தி படம் பார்த்தேன்.” ரயில் ஒரு ஸ்டேஷனில் நின்றது. அவசர அவசரமாக வெளியே எட்டிப் பார்த்த அவள், “வாருங்கள்! நாம் இங்கேதான் இறங்க வேண்டும்” என்று எழுந்திருந்தாள். நானும் எழுந்து அவளைப் பின் தொடர்ந்தேன்.
கீழே இறங்கியதும் அவள் தன் கைப்பையிலிருந்து ரோடு மேப் ஒன்றை எடுத்து என்னிடம் காண்பித்து, "இதோ பாருங்கள். நீங்கள் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மூலம் ரிஸர்வ் செய்திருக்கும் ஒட்டல் நாய்பவி போவதாயிருந்தால் இவ்வளவு தூரம் இங்கிருந்து டாக்ஸியில் போக வேண்டியிருக்கும்.மொழியும் இடமும் தெரியாத இந்த அந்நிய நாட்டில் அப்படித் தனியே உங்களால் போக முடியுமா என்பதை நீங்களே முடிவு செய்வதற்கு விட்டுவிடுகிறேன். நான் இங்கிருந்தே என் தோழியின் ஒட்டலுக்குப் போகப் போகிறேன். எனக்குச் சொந்த ஊர் லின்ஸ். பக்கத்தில் தான் இருக்கிறது. வருடத்தில் குறைந்தபட்சம் நூறு தடவையர்வது வியன்னா வருகிறேன். ஒவ்வொரு முறையும் நான் என் சிநேகிதி பணிபுரியும் இதே ஒட்டலில்தான் தங்குவது வழக்கம். நான் சிபாரிசு செய்வதனால் என் சிநேகிதி மிகக் குறைந்த ೧7-556ು உங்களுக்கும் ரூம் தருவாள்' என்றாள். அந்த அர்த்த ராத்திரியில் அவள் வற்புறுத்தி என்னைத் தன் முடிவுக்கு இசைய வைக்க முயல்கிறாளோ என்று பட்டது. வியன்னாவில் பயன்படுத்துவதற்கு என்று மாற்றி வைத்துக் கொண்டிருக்கும் 600 ஆஸ்டிரியன் வில்லிங்ஸ் தவிர, என்னிடம் மற்ற வகையில் இருக்கும் ஆயிரத்து எழுநூறு டாலரையும், இந்த அழகியிடம் பறிகொடுக்க வேண்டும் என்றுதான் நம் தலையில் எழுதியிருக்கிறது போலும் என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது!
"கவலைப்படாதீர்கள் என்னை நம்புங்கள்.உங்களுக்கு ஒரு கஷ்டமும் வராது.என் சினேகிதியின் ஒட்டலுக்குப் போனவுடன் டெலிபோன் செய்து அந்தப் பழைய ஒட்டல் ரிஸர்வேஷனைக் கான்சல் செய்துவிடலாம்.” என்று, என் தோளை சகஜமாகத் தொட்டு மெல்லத் தட்டிக் கொடுத்தாள். பூப்போன்ற தன்னுடைய மிருதுவான விரல்களால் எனது வலது கையைப் பற்றி, "வாருங்கள்! போகலாம்” என்றாள். மறுபடியும் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டாள். என் நண்பன் பாஸ்டின் ராய்ஸ் கூறியிருந்தது எனக்கு நினைவு வந்தது “இருபது - இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் பொது இடங்களில் பிறர் முன் புகை பிடிக்கிற ஒரு ஜெர்மானியப் பெண்ணைக் கெளரவமானவளாகச் சமூகமே ஒப்புக் கொள்ளாது. இப்போதெல்லாம் சோஷியலாக இருப்பது, விமன்ஸ் லிபரேஷனைக் காட்டிக் கொள்கிறது ஆகியவற்றின் அடையாளமாகப் பெண்கள் புகை பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள்:” - ‘எப்படியோ இவளிடம் சிக்கிக் கொண்டோம்! வேறு வழியில்லை என்று அவளோடு சென்றேன் நான் நகரின் தெருக்கள் சந்தடியற்றிருந்தன. கட்டிடங்களும், மரம் செடி கொடிகளும், மின்விளக்குக் கம்பங்களும் உறக்கத்தில் ஆழ்ந்திருப்பவை போல் தோன்றின. அகன்ற வீதியில் நானும் அவளும் தனியாக நடந்து போய்க் கொண்டிருந்தோம். தெருக்களின் ஆளரவமற்ற நிலை எனக்குப் பயமூட்டினாலும், அங்கெலிகா கலகலவென்று சிரித்துப் பேசி நடந்து வந்து கொண்டிருந்தாள். சாலையில் டிராம்வே தண்டவாளங்கள் விளக்கொளியில் தரையில் நீளும் மின்னல் கோடுகளாய் ஜ்வலித்துக் கொண்டிருந்தன.
"தாகமாயிருக்குமே.பீர்குடிக்கிறீர்களா?” என்று என்னைக் கேட்டுக் கொண்டே, தன் தோள்பையிலிருந்து மெல்லிய அலுமினிய டப்பாக்களில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு பீர் கேன்களை எடுத்தாள். நான் பதில் சொல்வதற்குள், இரண்டு பீர் டப்பாக்களின் ஊற்று வாயையும் மூடியிருந்த மெல்லிய அலுமினியம் தகடுகளை உரித்தெடுத்துத் திறந்தும் விட்டாள்.
எனக்கு உதறலெடுத்தது. சந்தேகம் பிடித்தது. பிரக்ஞையிழக்கச் செய்யும் மாத்திரைகளை பீர் கேனிலே போட்டிருப்பாளோ.
"இல்லை எனக்கு வேண்டாம். நீங்கள் குடியுங்கள் அங்கெலிகா.”
"சிகரெட் குடிப்பதிலை. பீர் வேண்டாமென்கிறீர்கள். உங்களிடம் என்ன கோளாறு.” நான் பதில் சொல்லாமல் அவளை ஏறிட்டுப்பார்த்துச் சிரித்தேன். பெண்ணே நீ என்னை அத்தனை சுலபமாக ஏமாற்றிவிடமுடியாது’ என்று மனத்துக்குள் சொல்லிக் கொண்டேன். “புழுக்கமாயிருக்கிறது.நல்ல கோடை இரவு. இந்த உல்லன் கோட்டை வேறு ஏன் சமக்கிறீர்கள்? விடுங்கள். கழற்றி நான் கையில் வைத்துக் கொள்கிறேன்” என்று சிரித்துக் கொண்டே, அப்படியே தழுவுவதுபோல் என்னை நெருங்கி, எனது கோட்டைக் கழற்ற முயன்றாள் அங்கெலிகா. உண்மையில் மிகவும் புழுக்கமாக இருந்தும், "பரவாயில்லை, ஒட்டலுக்குப் போனபின் கழற்றத் தானே போகிறேன்.” என்று சமாளித்து, அப்போதைக்கு அவளைத் தடுத்தேன். கோட் பாக்கெட்டிலேயே குறியாக இருக்கிறாள் போலும் என்று என் சந்தேகமும் வலுப்பட்டது.
நான் குடிக்க மறுக்கவே, திறந்துவிட்ட இரண்டு பீர்கேன்களையும் அவளே பருக வேண்டியதாயிற்று. வெறிச்சோடிப் போய் ஆளரவமற்ற தெருக்களில் நடந்து நடந்து, கடைசியாக 'ஒட்டல் பித்தோவன் வாயிலில் போய் நின்றோம். அதுதான் அவள் தோழியின் ஒட்டலாம்! புகழ்பெற்ற ஜெர்மானிய இசைவாணரின் பெயரில் அமைந்திருந்தது. -
ஒட்டலை மூடியிருந்தார்கள். அங்கெலிகா காலிங்பெல்லை அழுத்தினாள். கதவுகள் திறக்கப்பட்டன. அங்கெலிகாவின் தோழிதான் வந்து திறந்தாள்.
“ஹாய்...அங்கெலிகா.வெல்கம்! லின்ஸிலிருந்து புறப்படுமுன் வழக்கமாக டெலிபோன் செய்வாயே. இம்முறை ஏன் மறந்துவிட்டாய்”
‘முடியவில்லை! இதோ என் இந்திய நண்பர். வழியில் ரயிலில் சந்தித்தேன், கிஸ்லா வேறு ஏதோ ஒட்டலில் தங்க இருந்த இவரை இங்கு அழைத்து வந்தேன்!” அறிமுகம் நடந்தது. கிஸ்லா என்னோடு கைகுலுக்கினாள். -
“நன்றி. அங்கெலிகா. சரியான டுரிஸ்ட் மாதம். நீயும் முன் தகவல் சொல்லாமல் வந்துவிட்டாய். இங்கு அறையே காலி இல்லை. என் அறையில் நீ ஒருத்தி தங்கிக் கொள்ளலாம். உனக்கே தெரியும். அங்கே இரண்டு படுக்கைகள்தான் உண்டு.”
“ஐயையோ! இவர் ஏற்கனவே அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மூலம் ரிஸர்வ் செய்திருந்த ஒட்டலுக்குப் போகவிடாமல் தடுத்து இவரை இங்கு அழைத்து வந்தேனே. என்ன செய்வது?” * அவர்கள் இருவரும் சிகரெட் எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டார்கள். “ஒரு காரியம் செய்யலாம் அங்கெலிகா இவர் நமது விருந்தினர். நம்மால் இவருக்கு அசெளகரியம் நேர விடக்கூடாது. இவருக்கு ஒரு டாக்ஸி வரவழைத்து, இவரை ஏற்கனவே ரிஸர்வ் செய்தபடி நாய்பவ் ஒட்டலுக்கே அனுப்பிவிடலாமே? இவரை ஏன் சிரமப்பட விட வேண்டும்?” o
‘'வேண்டாம் கிஸ்லா! எனக்காக நீ கொஞ்சம் அசெளகரியத்தைப் பங்கிட்டுக் - கொண்டாலே போதுமானது. இந்த அகாலத்தில் இவரைத் தனியே டாக்ஸியில் அவ்வளவு தூரம் போகச் சொல்லித் துரத்துவது எனக்குப் பிடிக்கவில்லை. உன் அறையில் ஒரு கட்டிலை நீயும், நானும் பகிர்ந்து கொள்வோம். இன்னொன்றில் இவர் உறங்கட்டும்.” "இவர் அதை அசெளகரியமாக நினைக்காத பட்சத்தில் எனக்கு ஆட்சேபணை இல்லை அங்கெலிகா தங்கிக் கொள்ளட்டும்!” என்றாள் கிஸ்லா. பேருக்கு ஒட்டல் லெட்ஜரில் எனது பாஸ்போர்ட் எண் முகவரி குறித்தாள். ‘என்னிடமிருக்கும் பணத்தைப் பறிக்க இரண்டு பேருமாகச் சேர்ந்து நாடகமாடுகிறார்களோ என்று நான் சந்தேகப்பட்டுப் பயந்தேன். உடனே அவசர அவசரமாகக் குறுக்கிட்டுச் சொன்னேன்.
“தயவு செய்து ஒரு டாக்ஸி மட்டும் ஏற்பாடு செய்து கொடுங்கள், போதும். உங்களுக்குச் சிரமம் வேண்டாம்! நான் ஏற்கனவே ரிசர்வ் செய்த ஒட்டலுக்கே போய்விடுகிறேன்.”
“இல்லை! நான் இந்த அகாலத்தில் உங்களை அதற்கு அனுமதிக்கமாட்டேன். ரிஸ்க்' என்றாள் கிஸ்லா. சொல்லிவிட்டு, உடனே ஒட்டல் நாய்பவ்”வுக்கு ஃபோன் செய்து என் அக்காமடேஷனைக் கேன்ஸல் செய்யுமாறு கூறியும் முடித்துவிட்டாள்.
‘ரிஸ்க் என்ன ரிஸ்க்? உங்களிடம் பறிகொடுக்கப் போவதை அங்கே தெருவில் யாரிடமாவது பறிகொடுக்கப் போகிறேன். அவ்வளவுதானே?’ என்று என் மனம் நினைத்தது. "பறி கொடுப்பதைப் பெண்களிடமா பறி கொடுக்க வேண்டும்?’ என்று மனம் என்னையே ஏளனம் செய்யவும் தொடங்கியது. உடனே கிஸ்லா அந்த அழகிய சுத்தமான அறையைத் திறந்து ஒரு கட்டிலை எனக்காக ஒழித்துவிட்டாள். அறையின் கோட்ஸ்டாண்ட் மற்றொரு கட்டிலருகேஅதாவது, அங்கெலிகாவும் - கிஸ்லாவும் படுத்துக் கொள்வதற்கு இருந்த கட்டிலருகே இருந்ததனால், எனது கோட்டை நான் அங்கே மாட்டத்துணியவில்லை. என்படுக்கை மெத்தையில் தலையணை அருகிலேயே மடித்து வைத்துக் கொண்டேன். அம்மாதிரி வைத்துக் கொள்வதானால் கோட்டில் மடிப்பும், சுருக்கமும் விழும் என்றாலும் பரவாயில்லை. பாக்கெட்டில் இருக்கிற பணம் பிழைத்தால் போதும் என்ற பாதுகாப்பு உணர்வே அப்படிச் செய்யத் துண்டியது.
பத்து இருபது நிமிஷம் கழித்து அங்கெலிகா வந்து டின்னருக்கு அழைத்தாள். மறுபடியும் என்னுள் சந்தேகம்.
'சாப்பாட்டில் ஏதாவது கலந்து வைத்து விடுவார்களோ?
"ஜூரிச்சிலிருந்து வியன்னா வரும்போது ஆஸ்டிரியன் ஏர்வேஸ் ஃபிளைட்டில் கொடுத்த உணவே அதிகம். மறுபடி எனக்குப் பசிக்கவில்லை” என்று பிடிவாதமாகச் சொன்னேன். . அங்கெலிகா என்னை உற்றுப் பார்த்துச் சிரித்தாள்.
"நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள்! பயமும் கூச்சமும் சந்தேகமும் உங்களைப்பொய் சொல்லத் தூண்டுகின்றன. ஆஸ்திரியன் ஏர்வேஸ் ஃபிளைட்டில் என்ன சாப்பிடக் கொடுப்பார்கள் என்பது எனக்குத் தெரியாதா? இப்போது மணி பன்னிரண்டரை. இந்த நாலு நாலரை மணி நேரத்தில் ஃபிளைட்டில் சாப்பிட்டது எந்த மூலையில் போயிருக்குமோ? உங்களுக்கு நல்ல பசி இருக்கும். வம்புக்கு நீங்கள் புளுகிறீர்கள்.”
"உண்மையைத்தான் சொல்லுகிறேன். எனக்குச் சிறிது கூடப் பசிக்கவில்லை.”
ரியலி நிச்சயமாக
"அப்படியானால் நான் உங்களை வற்புறுத்த விரும்பவில்லை" என்று கூறிவிட்டுப் போய்விட்டாள் அங்கெலிகா. / - அவள் போனதும் நான் போர்வையை இழுத்துப் போர்த்துக்கொண்டு உறங்க முயன்றேன். என் உடம்பு மட்டும் அல்லாமல், பணம் இருந்த கோட்டுக்கும் சேர்த்துப் போர்வையை போர்த்தியிருந்தேன். அப்போதிருந்த புழுக்கத்தில் போர்வையே தேவைப்படாது. இருந்தாலும், பாதுகாப்புக்காக வலிந்து போர்த்திக் கொள்ள நேர்ந்திருந்தது.இந்தியாவில் இப்படி ஒர் ஆண்பிள்ளையோடு தனியறையில் இரண்டு இளம் பெண்களைத் தங்கச் சொன்னால் - அந்தப் பெண்கள் சந்தேகமும், பயமும், அடைவார்கள். இங்கேயோ நேர்மாறாக இருந்தது! இரண்டு பெண்களோடு தனியறையில் தங்க நேர்ந்து விட்டதற்காக ஒர் ஆண் பயமும், சந்தேகமும், கூச்சமும்பட நேர்ந்திருந்தது. இடமாறுதலாலும், நேரமாறுதல்களாலும் பல நாட்கள் சரியாக உறங்காமல் களைத்துப் போன நான் எப்போது எப்படி அயர்ந்து உறங்கினேனென்றே எனக்குத் தெரியாது. அடித்துப் போட்ட மாதிரி ஒரு துக்கம்.
மறுபடி கண்விழித்த போது குளிர்ந்த காற்று முகத்தில் வந்து உராய்ந்தது. வெளியே பறவைகளின் குரல்கள் கலந்து ஒலித்தன. அறைக்குள் பகலின் இளங்காலை வெளிச்சம் பரவியிருந்தது. - - -
கண் விழித்ததும் எதிர்க் கட்டிலைப் பார்த்தேன். காலியாயிருந்தது. விரிப்புக்கள் அழகாக மடித்துத் தலையணைகளின் மீது வைக்கப்பட்டிருந்தன. உடனே என் தலை மாட்டோடு அரவணைத்தபடி வைத்திருந்த கோட்டைப் பார்த்தேன். காணவில்லை! நெஞ்சு பதறியது. நழுவிக் கீழேயோ பக்கவாட்டிலோ விழுந்திருக்கலாம் என்ற அனுமானத்தில் பார்த்தால் அங்கேயும் கோட்டைக் காணவில்லை! 'சரி பணம்பாஸ்போர்ட் எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டோம்.இந்த இரண்டு இரண்டரை மாதப் பயணத்தில் வியன்னாவில் பித்தோவன் ஒட்டலில் வந்து இப்படிச் சகலத்தையும் பறிகொடுக்க வேண்டுமென்று நம் தலையில் எழுதியிருக்கிறது போலும்! என்று என்னையே நொந்து கொண்டேன். பரபரப்பாக அறை முழுவதும் தேடினேன். கோட்டை எங்கும் காணவில்லை.
ஒட்டல் முழுவதும் வேறு அறையே இல்லாததுபோல் நாடகமாடி இந்த அறையில் தங்களோடு தங்கும்படி நிர்ப்பந்தப்படுத்தி, இரண்டு அழகிய ரெளடிப் நா.பா. Il - 34 பெண்பிள்ளைகள் வஞ்சகமாக நம்மை ஏமாற்றிவிட்டார்களே என்றெண்ணியபோது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
குளியலறையில் போய்ப் பல் துலக்கி முகம் கழுவி உடை மாற்றிக் கொண்டு ஒட்டல் ரிஸப்ஷனுக்குச் சென்றேன்.அங்கெலிகாவைக் காணவில்லை. கிஸ்லா மட்டும் ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள்.
செய்கிற திருட்டைத் திட்டமிட்டு இரண்டு பெண்களுமாகச் சேர்ந்து செய்துவிட்டு, ஒருத்தி எங்கோ போய்விட்டாள். இன்னொருத்தி, இந்தப் பூனையும் இந்தப் பாலைக்குடிக்குமா? என்பதுபோல் பரமசாதுவாக உட்கார்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறாள்!"
எனக்கு ஒரே கோபம். நேரே ரிஸப்ஷன் கவுண்ட்டர் எதிரே போய் நின்றேன்.
கிஸ்லா தலை நிமிர்ந்தாள். புன்முறுவலோடு, “குட்மார்னிங்! நன்றாக உறங்கினர்களா?” என்று கேட்ட அவளிடம் பதிலுக்கு நன்றியோ, குட்மார்னிங்கோ கூறாமலே, “என் கோட்டைக் காணவில்லை. படுக்கையில் என்னருகில் வைத்துக் கொண்டிருந்த கோட் எப்படிக் காணாமல் போக முடியும்? யாரோ எடுத்திருக்கிறார்கள்” என்று கடுமையாகப் புகார் கூறுகிற தொனியில் ஆரம்பித்தேன்.
“யாரும் எடுக்கவில்லை! ராத்திரி உங்கள் கோட் படுக்கையிலிருந்து நழுவிக் கீழே விழுந்து சுருக்கமும் மடிப்புமாகக் கிடந்தது. அங்கெலிகாதான். முதலில் அதைப் பார்த்து எடுத்து என்னிடம் கொடுத்தாள். இதை நன்றாகச் சுத்தம் செய்து அயர்ன் பண்ணி இவரிடம் கொடு என்றாள். இரவு இரண்டரை மணி சுமாருக்கு அவளுக்கு லின்ஸில் இருந்து போன் வந்தது. அவளுடைய வயதான தந்தைக்கு உடல் நிலை மிகவும் சீரியஸ்ஸாகி இருப்பதாகவும், அவள் உடன் தேவை என்றும் கூறி, அவளை உடனே புறப்பட்டு வரச் சொன்னார்கள். வேறு வழியில்லை. அவள் போக வேண்டியிருந்தது. பாவம் பெரிய பணக்காரக் குடும்பத்துப் பெண். அவள் தந்தைக்கு ஸின்ஸில் இரண்டு பெரிய ப்ருவரி (பீர் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருக்கின்றன. எங்களுடையதற்கும் வேறு பல ஒட்டல்களுக்கும் அவர்கள் ப்ருவரிதான் பீர் சப்ளை செய்கிறது. வியாபார விஷயமாக அடிக்கடிவியன்னா வருவாள்.தந்தைக்கு இவள் ஒரே பெண் இரண்டு மூன்று வருஷங்களாகத் தொழிற்சாலை நிர்வாகத்தை இவள்தான் கவனித்து வருகிறாள். தாயை இழந்து பல வருஷங்கள் ஆகின்றன. உங்களிடம் சொல்லாமல் போக நேர்வதற்காக வருந்தினாள். உங்களிடம் தந்துவிடச் சொல்லி ஓர் உறையைத் தந்து விட்டுப் போயிருக்கிறாள்.”
என்று கூறி, சுத்தமாக அயர்ன் செய்து மடித்து வைத்திருந்த என் கோட்டையும், அதனுள்ளிருந்த மற்றவற்றையும் என்னிடம் பத்திரமாகத் திருப்பிக் கொடுத்தாள் கிஸ்லா. சரிபார்த்ததில், எல்லாம் நான் வைத்தபடி இருந்தன. எனக்கு மிகவும் வெட்கமாகப் போய்விட்டது. . .
"போய் பிரேக்ஃபாஸ்டை முடியுங்கள்! கீழே பேஸ்மண்ட்டில் டைனிங் ஹால் இருக்கிறது. காலை ஒன்பது மணிக்குப் புறப்படும் ஸிடிரமா டுரிஸ்ட் கோச்சில் இருநூற்றெண்பது ஷில்லிங் கொடுத்து, உங்களுக்காக ஒரு ஸீட் ரிஸர்வ் செய்து கொடுத்துவிட்டுப் போயிருக்கிறாள் அங்கெலிகா. நீங்கள் எட்டே முக்காலுக்கு இங்கிருந்து புறப்பட்டுவிட வேண்டும்” என்று என்னைத் துரிதப்படுத்தினாள். நான் கிளம்புமுன், “இந்தாருங்கள் அங்கெலிகாவின் கடிதம்' என்று ஒரு கனத்த உறையையும் என்னிடம் நீட்டினாள் கிஸ்லா. உடல்நலமில்லாத தந்தையைக் காணப் புறப்படுகிற அவசரத்தில், இத்தனை நீண்ட கடிதத்தை நமக்கு இவளால் எப்படி எழுத முடிந்தது என்ற வியப்புடன், அந்த உறையை வாங்கிப் பிரித்தேன் நான்.
“அருமை நண்பரே! முதலில் திடீரென்று சொல்லிக் கொள்ளாமல் புறப்பட நேர்ந்ததற்காக என்னை மன்னிக்கவும். காரணத்தை இதற்குள் கிஸ்லாவே உங்களிடம் கூறியிருப்பாள். பயமும்-கூச்சமும் நிறைந்த உங்களைத் தனியே தவிக்கவிடாமல் நானே உடன் வந்து, வியன்னாவில் எல்லாவற்றையும் சுற்றிக்காட்டி உங்களை வியப்பிலாழ்த்த நினைத்திருந்தேன். அது இயலாமல் போய்விட்டது. அதற்காக, எபிடிரமாடுர் கோச்சில் ஒட்டல் பித்தோவனிலிருந்தே டெலிபோன் மூலம் இரண்டு nட் ரிஸர்வ் செய்திருந்தேன். நான் என் nட்டை கான்சல் செய்துவிட்டு, உங்கள் nட்டை மட்டும் உங்களிடம் தரச்சொல்லி கிஸ்லாவிடம் கூறியிருக்கிறேன். தங்குவதற்காக நீங்கள் ஒட்டல் பித்தோவனுக்கு எதுவும் தரவேண்டியதில்லை. நான் பார்த்துக்கொள்வேன். அந்நியச் செலவாணியின்றிக் கஷ்டப்படும் உங்களுக்கு உதவ ஆசைப்படுகிறேன். மறுக்காது ஏற்றுக் கொள்ளுங்கள். இதனுடன் இணைக்கப்பட்டுள்ள இரண்டாயிரம் வில்லிங்ஸை என் அன்பளிப்பாக ஏற்கவும். அப்படி ஏற்க விருப்பமில்லை என்றால், கடனாக ஏற்கவும். கடனை எனக்குத் திருப்பி அனுப்ப வேண்டாம் நீங்கள் இந்தியா திரும்பிய பின் உங்களால் முடியும்போது, இத்தொகைக்கு இணையான இந்திய ரூபாய்களை, ரோமன் கத்தோலிக்கர்கள் சார்புள்ள ஏதாவதொரு சாரிட்பிள் இன்ஸ்டிடியூஷனுக்கு நன்கொடையாக வழங்கினால் போதுமானது! நான் இந்தியா வர நேர்ந்தாலோ, மறுபடி நீங்கள் வியன்னா வர நேர்ந்தாலோ சந்திக்கலாம். உங்கள் முகவரி ஒட்டல் லெட்ஜருக்காக நீங்கள் தந்த விவரங்களிலிருந்து குறித்துக் கொண்டேன். என் முகவரி இக்கடிதத்தில் குறித்திருக்கிறேன். நீங்கள் வியன்னாவிலிருந்து புறப்படுகிறவரை கிஸ்லா உங்களுக்கு ஒரு குறைவுமின்றி உங்களைக் கவனித்துக் கொள்வாள். இந்த இடத்தில் என் இதழ்களால் ஒரு முத்தத்தைப் பதித்த பின் கையொப்பமிடுகிறேன்.
இப்படிக்குஉங்கள் அன்புள்ள,
அங்கெலிகா”
படித்து முடித்தவுடன் திகைப்பில் மலைத்தே போனேன். உடன் பிறந்தே கொல்லும் சந்தேகம் என்னும் நோயை ஒவ்வோர் இந்தியனிடமும் ஏன் வைத்தாய் என்று என்னை நோந்துகொள்ளத்தோன்றியது.பயத்திலிருந்தும் சந்தேகத்திலிருந்தும் விடுபடாத ஒர் அப்பாவி, காதலுக்கோ - நட்புக்கோ கூடத் தகுதியற்றவனாகத்தான் இருக்க வேண்டும் நான் அங்கெலிகாவிடம் அப்படித்தான் இருந்திருக்கிறேன். (இதயம் பேசுகிறது. தீபாவளி மலர், 1984)