நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/ஒரு கவியின் உள் உலகங்கள்
161. ஒரு கவியின் உள் உலகங்கள்
பூங்குன்றத்துக்குத் தந்தி ஆபிஸ் கிடையாது. தந்தி, தபால் எல்லாம் பன்னிரண்டு மைலுக்கு அப்பால் இருந்த பெரிய நகரமான மேலநல்லூரிலிருந்துதான் பட்டுவாடா ஆக வேண்டும். இரயில்வே ஸ்டேஷனும் மேலநல்லூர்தான். அங்கிருந்து பூங்குன்றத்துக்குப் போக ஒற்றையடிப் பாதை. அடர்ந்த காட்டை வகிர்ந்து கொண்டு செல்கிறது. வண்டித் தடம் சுற்றுவழியாகப் போகிறது. அதன் மூலமாகப் போனால் மேலும் நாலு மைல் அதிகமாகும். ஒற்றையடிப் பாதையோ, வண்டித் தடமோ, எதுவானாலும் இருட்டிய பின் போக்குவரத்துக் கிடையாது. வன விலங்குகளைப் பற்றிய பயமும் உண்டு. மலையடிவாரத்தில் அடர்ந்த காட்டினிடையே இரண்டு காட்டாறுகளுக்கு நடுவே சிக்கிக் கொண்டபூங்குன்றம் ஒரு சிற்றூ ர். அது, நல்ல மழை நாட்களில் சில தினங்கள் உலகத் தொடர்பே அற்றதொரு தீவு போலாகி விடுவதும் உண்டு.
பூங்குன்றத்தில் மொத்தம் நாற்பது ஐம்பது குடியிருப்புக்கள் இருந்தால், பெரிய காரியம். “என் வாழ்வில் இறுதி ஆண்டுகளை இந்த இயற்கையழகு மிக்க கிராமத்தில்தான் கழிக்கப் போகிறேன்” என்று மகாகவி இளம்பூரணனார், அங்கு குடியேறிய பின்புதான், உலகத்துக்குத் தெரியாத அந்த ஊர் பிரபலமாயிற்று. அதாவது கொஞ்சம் பேர் தெரிந்தது.
மேலநல்லூர் தபாலாபீஸிலிருந்து பூங்குன்றத்துக்குப் பட்டுவாடா ஆக வேண்டிய தபால்களில் பெரும்பாலானவை கவிஞருக்குத்தான் இருக்கும். தபால் பட்டுவாடா செய்யும் பொறுப்பில் இருந்த இளைஞன் குமரகுரு, சுற்று வட்டாரத்துக் கிராமங்கள் எல்லாவற்றிற்கும் போக வேண்டியிருந்தாலும், பூங்குன்றத்துக்குப் போவதிலும், கவிஞரைச் சந்திப்பதிலும் அதிக ஆர்வம் உடையவனாக இருந்தான். காரணம், குமரகுருவே ஓர் இளம் கவிஞன். தணிக் கட்டையான அவன், மேலநல்லூரில் குடியிருக்க அறை என்று எதுவும் கிடைக்காததால், போஸ்ட் மாஸ்டருடைய தயவில் தபாலாபீஸிலேயே, பின் கட்டு அறை ஒன்றில் தங்கிக் கொண்டான். சமயங்களில் அவசரத் தந்தி, பி.சி.ஓ. என்ற வகையில் டிரங்கால் இவற்றுக்கு மெசஞ்சராகவும் அலைய வேண்டியிருக்கும். வேறு எத்தனையோ தபால் ஊழியர்கள் மேல நல்லூருக்கு வந்த முதல் தினத்திலிருந்து வேறு வசதியான நகரங்களுக்கு மாற்றிக் கொண்டுபோவதற்குப் பறப்பார்கள். குமரகுரு அப்படிப் பறக்காததோடு மேலிடத்திலிருந்து தன்னை மாற்றாத வரை அங்கேயே தொடர்ந்து இருக்க விரும்பினான். இரும்புத் துண்டு காந்தத்தால் ஈர்க்கப்படுவது போல் மகாகவி இளம்பூரணரால் அவன் ஈர்க்கப் பட்டிருந்ததுதான் காரணம். அவரது அண்மை அவனுக்குப் பிடித்திருந்தது. குயில்களும், கிளிகளும் ஒலிக்கும் ஒசைகள் தவிர வேறு செயற்கை ஒலிகளே இல்லாத அந்தத் தீவு போன்ற கிராமத்தில் மரம்,செடி, கொடிகள் அடர்ந்த ஒரு பெரிய தோட்டத்தின் நடுவாக இருந்த சிறிய ஒட்டு வீட்டில் தான் மகாகவி வசித்து வந்தார். அதில் ஒர் எளிய நாட்டுப்புறத்து விவசாயியைப் போல அவரும், அவருடைய மனைவியும் வாழ்ந்தார்கள். வீட்டில் முக்கால்வாசி இடத்தைப் புத்தகங்கள் அடைத்துக் கொண்டிருந்தன. பாரதியாரின் காணிநிலத்தில் வருவது போன்ற குடியிருப்பு அது.
குமரகுரு தபால்களை எடுத்துக்கொண்டுபோகும்போதெல்லாம் பெரும்பாலும் அவரைத் தோட்டத்தில்தான் பார்ப்பான். 'குரு அந்த முல்லைக்கொடி அரும்பு கட்டியிருக்குத் தெரியுமோ?’ என்றோ, 'அன்றைக்கு அந்த ரோஜாப்பதியன் போட்டேனே, அது நன்றாக வேரூன்றிவிட்டது' என்றோ தான் அவனை எதிர்கொள்வார், அவர்.
'இத்தனை வயதிற்கு மேலும் இவரால் எப்படி இத்தகைய குழந்தைத்தனமான அல்ப சந்தோஷங்களால் மகிழ முடிகிறது? - என்று குமரகுருவிற்குப் பெரிதும் வியப்பாயிருக்கும். ஒருமுறை சிரித்துக் கொண்டே அதை அவரிடமே கேட்டுமிருக் கிறான். . .
“இந்தக் குழந்தை மனத்தையும், இப்படிப் பூக்களையும் தளிர்களையும், தாவரங்களையும், இயற்கையையும் பார்த்து மனம் நிறைய மகிழ்ந்து ஆச்சரியப்படும் இயல்பையும் கடைசிவரை நான் இழந்து விடாமலிருக்க வேண்டும் என்பதுதான் என் பிரார்த்தனை குரு என்று நான் இந்தக் குணங்களை எல்லாம் இழந்துவிடுகிறேனோ, அன்றிலிருந்து நான் கவிஞனாக இருப்பதற்கில்லை.” என்று அப்போது குமரகுருவிற்கு மறுமொழி கூறியிருந்தார் அவர் தம்முடைய மிகப் பணிவுள்ள சீடனைப் போலப் பழகினாலும், அவர் அவனுடைய பெயரின் பின் பகுதியைச் சொல்லிச் செல்லமாகக் 'குரு' என்றே அவனை அழைத்துவந்தார்.குரு அவருடைய கவிதைகளின் ரசிகன். கவிதைகளைப் போலவே அவருடைய செயல்களையும் ரசித்துக் கவனித்து வந்தான் அவன்.
எங்கு எந்தப் புதுமையைக் கண்டாலும் - அது எவ்வளவு சிறியதாயிருந்தாலும் உடனே ஒரு குழந்தையைப்போல் குதுகலப்படும் அவரை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவன் அவருடைய தோட்டத்திற்குள் தபால்களோடு நுழையும் ஒவ்வொரு சமயமும் முதல்முறை அவரைச் சந்தித்தது போன்ற அதே ஆர்வத்தோடு தான் நுழைந்தான். புதுமையை வரவேற்கும், புதுமைக்கு வியப்படையும் அவரது மலர்ந்த உள்ளம் அவனைப் போல ஒரு புதிய இளம் கவிஞனையும் வரவேற்று மகிழத் தயாராயிருந்தது. சகஜமாய் அளவளாவத் தயாராயிருந்தது.
'இந்த மருக்கொழுந்துச் செடிக்கு ஆண்டவன் எங்கிருந்து தான் இத்தனை வாசனையைப் படைத்தானோ?” என்று வியப்பார் ஒரு சமயம்.
'இத்தனை நிறத்தில் இத்தனை விதத்தில், இத்தனை மணங்களோடு பூமிக்குள் மறைந்திருக்கும் அழகுகள் ஒவ்வொன்றும் வெளிப்பட்டுப் பூப்பூவாய்ப் பூக்கிறது பார்த்தாயா? என்பார் வேறொரு சமயம் வானின் ஒரு கோடியில் சாயம் பூசினாற்போல் தெரியும் மங்கலான வானவில், நீலவானின் இளம்பிறை, காலைக் கதிரவன், மலரும் ஏதாவதொரு புதுமலர், முளைக்கும் ஏதாவதொரு புதிய செடி எல்லாமே அதிசயம்தான் அவருக்கு அப்படி அவர் வியந்து முகம்மலரச் சிரிக்கும்போது எழுபத்து மூன்று வயது மூப்பிலிருந்தா இந்த மலர்ச்சியும் மகிழ்ச்சியும் என்று நம்ப முடியாமலிருக்கும் அவரது உற்சாகமும் புத்துணர்ச்சியும்.
அவருக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டிருப்பதாக வந்த தந்தியை அவன் சைக்கிளில் ஒடிப்போய் கொடுத்தபோது ரோஜாப்பதியன்களுக்குத் தண்ணிர் ஊற்றிக் கொண்டிருந்த அவர், "இரு இந்தக் கடைசிச் செடிக்கும் தண்ணிர் விட்டபின் வருகிறேன்” என்றார்.
ஒரு பூவுக்கும், செடிக்கும் வியக்கிறவர் ஒரு பெரிய தேசிய கெளரவம் தன்னைத் தேடி வந்ததற்காகச் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் மிகவும் சுபாவமாயிருந்தது. குமரகுருவுக்குப் பெரிதும் வியப்பை அளித்தது.
அவ்வளவு பெரிய நாடறிந்த மகாகவிக்குக் கர்வம் என்பதே என்னவென்று தெரியாது. தபால்கார இளைஞன் குரு எப்போதாவது அவரிடம் நீட்டும் கவிதைகளைப் படித்துத் திருத்தங்கள் செய்து கொடுத்துப் பாராட்டுவார்.
'எவ்வளவு சிரமங்கள் வந்தாலும் எத்தனை வயதானாலும் மனசை மட்டும் மூப்படைய விட்டுவிடாதே. நீ மிகச் சிறந்த கவிஞனாக வரலாம். பழியாலும் மூப்படையாதே புகழாலும் மூப்படையாதே' - என்றார்.
"பூப்பூவாய்ப் பூத்திந்தப்
பூமி சிரிக்குதப்பா!
பாப்பாவாய்ப் பாடியதைப்
பரவும் வகையறியாமல்
மூப்பாலே சோர்ந்திருந்தார்
மூடமனிதர் வீழ்ந்திருந்தார்
சாப்பாட்டு ராமர்களே -
சரணடைவீர் இயற்கையிலே"
என்று மகாகவி இயற்றியிருக்கும், பூமியின் புன்னகை என்ற தலைப்பிலான கவிதைகளில் ஒன்றை நினைத்துக்கொள்வான் குமரகுரு பூங்குன்றத்தின் அமைதியில் மூழ்கி விளம்பரமில்லாமல் தம் வாழ்வின் இறுதிப் பகுதியைக் கழித்து வந்தாலும் உலகம் அவரை அவ்வளவு சுலபத்தில் மறந்து விடவில்லை. அதிகமான பொருளாதார வசதி என்றும் சொல்ல முடியாது. பயங்கர வறுமை என்றும் கூற முடியாது. விற்கும் புத்தகங்களின் ராயல்டி வருமானத்தில் எளிய கிராம வாழ்வு நடத்தி வந்தார் மகாகவி,
அந்த ஆண்டு நல்ல அடைமழைக் காலம் தொடங்கியிருந்தது. மழை கொட்டுக் கொட்டென்று கொட்டிக் கொண்டிருந்த ஒரு முன்னிரவில் மேல நல்லூர் அஞ்சல் அலுவலகத்தின் தந்திக் குமாஸ்தா, "அப்பா குமரகுரு உங்க ஆளு.அதான் அந்தக் கவிஞருக்குப் பம்பாயிலிருந்து ஒரு தந்தி வந்திருக்குப்பா. காவியபீடம்"கிற அகில இந்திய இலக்கிய ஸ்தாபனம், அவருடைய கவிதைப் பணிக்காக இந்த வருஷ விருதையும் ஐந்து லட்ச ரூபாய் ரொக்கத்தையும் அவருக்கு வழங்க முடிவு பண்ணியிருக்கு. அதைப் பத்தின தந்தி இது எப்படி இந்த அடைமழையிலே போய்க் குடுக்கப் போறே. பூங்குன்றத்துக்குப் போற வழியெல்லாம் ஒரே காட்டாறு. பயங்கர வெள்ளமா இருக்குமே இப்போ” என்றார்.
“இது ரொம்ப மகிழ்ச்சிகரமான சமாசாரம் எப்படியும் போய்த் தந்தியைக் குடுத்தாகனும் சார்.
“சும்மா கர்மயோகி மாதிரித் தந்தியைக் கொடுத்திட்டு வந்திடாதே. முழுசா ஒரு நூறு ரூபாயாவது இனாம் வாங்கியாகணும். அத்தனை அதிர்ஷ்டமான சேதி இது.”
குமரகுரு மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தான். ஒரே ஆனந்தம். தந்தியை நனைந்துவிடாமல் ஒரு பாலிதின் பையில் பத்திரப்படுத்திக் கொண்டு, அந்த அடை மழையிலேயே அவரைப் பார்த்து எப்படியும் தந்தியைக் கொடுத்துவிட வேண்டும் என்ற பிடிவாதத்துடன் கிளம்பினான். தந்தி குமாஸ்தா கூறியதுபோல் நூறுரூபாய் இனாமுக்காக அல்ல, அந்த மகாகவியின் முகத்தில் ஒரு மலர்ச்சியைப் பார்ப்பதற்காக. அந்த மலர்ச்சியே பல நூறு ரூபாய் இனாமுக்குச் சமம் என்ற மனநிறைவோடு புறப்பட்டிருந்தான் அவன். இருட்டியபின் காட்டு வழியாகப் பூங்குன்றம் போகவே பயப்படுவார்கள். வனவிலங்குகளின் அட்டகாசம் ஒருபுறம், மழைக் கொடுமை மற்றொரு புறம் துணிந்து பூங்குன்றத்தையும் பிரதான நிலப்பகுதியையும் பிரிக்கும் காட்டாறு வரை சைக்கிளில் போய்ச்சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு நீந்திப் போய் தந்தியை அவரிடம் அக்கரையில் சேர்த்துவிடலாம் என்ற நம்பிக்கையில் கிளம்பியிருந்தான் குமரகுரு மின்சாரமும், டெலிபோனும் நுழையாத மலையடி வாரத்துக் கிராமமான பூங்குன்றத்தை விரும்பி அதில் வந்து தங்கியிருந்த அந்த மகாகவிக்கு அவன் போய்த் தந்தியைக் கொடுக்காவிட்டால் அந்த இனிய செய்தியே தெரியமுடியாது. வேறு உலகத் தொடர்பே அக்கிராமத்துக்குக் கிடையாது.
குமரகுரு காட்டாற்றின் கரையை அடைந்தபோதே இரவு எட்டேமுக்கால் மணி இருக்கும். தற்செயலாக மழை கொஞ்சம் தணிந்திருந்தது. எப்படியும் சைக்கிளில் ஆற்றைக் கடக்க முடியாது. ஆற்றின் இக்கரையையும், அக்கரையையும் இணைத்த கல்பாலம் தணிவானது.அந்தக் கல்பாலத்தின் கீழே அங்கங்கே இருந்த மதகுக் கண்கள் தவிரப் பாலத்தை மீறி அதற்கு மேலேயும் ஒரடித் தண்ணீர் ஓடியது. பாதிப் போய்க் கொண்டிருக்கும் போதே நீரோட்டம் வேகம் அதிகரித்துவிட்டால் சைக்கிள் ஆற்றோடு போய்விடும்.நடந்து போனால் இருபுறமும் இருந்த கருங்கல் துண்களைப் பற்றிப் பற்றி எப்படியாவது அக்கரையை அடைந்து விடலாம்.
இக்கரையிலிருந்த ஒரு பாழ் மண்டபத்து முகப்பில் சைக்கிளை நிறுத்திப் பூட்டிவிட்டுத் தந்தியுடன் ஆற்றைக் கடக்கத் தொடங்கினான் குமரகுரு வேகமும், இழுப்பும் அதிகமாக இருந்த இடங்களில் கல்தூண்களைப் பிடித்து சமாளித்துச் சமாளித்து மெல்ல மெல்ல முன்னேறி அக்கரையை அடையப் பத்துமணி ஆகிவிட்டது. நல்ல கும்மிருட்டு.
பூங்குன்றம் அடங்கியிருந்தது. ஊர் நாய்கள் அத்தனையும் ஒன்றாக அவன் வரவை எதிர்த்துக் கோரஸ் பாடின. அவன் கவிஞரின் தோட்டத்தை அடைந்து மூங்கில் படலால் ஆன வாசல் கதவைத் திறந்த போது அவர் விழித்திருந்தாலும் யாரது!' என்று கவிஞரின் மனைவி குஞ்சம்மாள்தான் எதிர்கொண்டு வந்தார். “நான் தான் குமரகுரு. தந்தி வந்திருக்கு..” என்று பதில் குரல் கொடுத்தான் அவன்.
"ஐயா தூங்கலையா ஏன் இன்னும் முழிச்சிக்கிட்டிருக்காரு?”
“வேலையென்ன? அடைமழையும், ஈரமும் தாங்காமே தோட்டத்தில் இவர் வச்சிருந்த சண்பக மரக்கன்று அழுகிப்போச்சாம். ரெண்டு நாளா அதே புலம்பல்தான்! அது சரி, ஏதோ தந்தீன்னு சொன்னியே.?”
"ஆமாம்மா! ஐயாவுக்கு இந்த வருஷக் காவிய பீடப் பரிசு அஞ்சு லட்ச ரூபாய் கிடைச்சிருக்கு..!.”
"நிஜமாவா? எங்கே தந்தியைக் குடு.”
தந்தியைக் கிருக லட்சுமியான அந்த அம்மாளிடம் கொடுத்தான் குமரகுரு. அந்தம்மாள் ஒடிப்போய் அவரிடம் கூறினாள். அவரோ ஒரு சிறிதும் சலனமோ, பரபரப்போ அடையாமல் தலைக்கு மேலே பொழியும் தங்கமழையைக் கவனிக்காமல் காலடியில் உடைந்துவிட்ட மண் பொம்மைக்காக அழும் குழந்தையைப்போல்,
'குமரகுரு!' நான் அத்தனை சிரமப்பட்டும் பிரயோசனமில்லே! அந்த செண்பகக் கன்னு ஈரத்திலே அழுகிப் போச்சுப்பா..” என்று அழமாட்டாத குரலில் கலக்கத்தோடு ஆரம்பித்தார். அவர் மனைவி குறுக்கிட்டு அவரைக் கடிந்து கொண்டாள்.
“அஞ்சு லட்ச ரூபாய் அவார்டு வந்திருக்குன்னு இந்த அடைமழையிலே தந்தியோட ஓடிவந்திருக்கான். நீங்க என்னடான்னா..?”
“மழைக்காலம்னு தெரிஞ்சதும், அந்தச் செடியைத் தொட்டியிலே மாத்தி வீட்டு வராந்தாவிலே வைக்காமப் போன என் புத்தியைத்தான் செருப்பாலடிக்கனும்!”
அவர் அந்தச் செடி அழுகிப் போன இழப்பிலேயே இன்னும் மூழ்கியிருந்தார்.
உலகின் எந்த ஒரு மூலையிலாவது ஒரு சிறு தளிர் வாடுவதையோ, அழுகுவதையோ கூடத் தாங்க முடியாத இந்த இங்கிதமான மெல்லிய கவி உள்ளத்தை எத்தனை பெரிய பரிசுகளும், லட்சங்களும் வந்தாலும் மூப்படையச் செய்ய முடியாதென்று தோன்றியது குமரகுருவுக்கு 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வரிகளை நினைத்தான். அவர் முகத்தை அந்த மங்கலான அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் கூர்ந்து பார்த்தான். அந்த எழுபத்து மூன்று வயதுக் குழந்தையை அப்படியே கையெடுத்துக் கும்பிட்டான், குமரகுரு.