நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/அமெரிக்காவிலிருந்து பேரன் வருகிறான்

விக்கிமூலம் இலிருந்து

162. அமெரிக்காவிலிருந்து பேரன் வருகிறான்

னகசபையிடமிருந்து அந்த விமானத் தபால் கிடைத்த போது கிழவர் வேதகிரிக்கு மிகவும் மகிழ்ச்சியாயிருந்தது. அவர்கள் தன்னைப் பார்க்கக் கிராமத்துக்கு வரப் போவதில்லை என்ற விவரத்தைக் கடிதத்தில் படித்த போது, கூடவே துயரமாகவும் இருந்தது. மகனையும், தான் இதுவரை பார்க்காத மருமகளையும், பேரனையும் பார்க்க வேண்டுமானால், சென்னைக்குப் புறப்பட்டுப் போவதைத் தவிர வேறு வழியில்லை என்பதும் புரிந்தது. அமெரிக்காவிலிருந்து அவர்கள் சென்னைக்கு வருகிறார்கள் என்று கடிதம் சொல்லியது.

வெறும் தனிக் காட்டு மரமாக - ஒற்றைக் கிழட்டு மரமாகப் பல ஆண்டுகளைக் கிராமத்தில் கழித்த துயரங்கள், தனிமை வேதனைகள் எல்லாம் தீர மகனையும், மருமகளையும், பேரனையும் பார்க்கப் போகிறோம் என்று எண்ணிய போதே உள்ளத்தில் பற்றும், பாசமும், உறவும் சிலிர்த்துப் பொங்கின.

தாயில்லாப் பிள்ளையாக மகனை வளர்த்து ஆளாக்கிப் படிக்க வைத்து, ஒரு ‘ஸ்காலர்ஷிப்’ கிடைத்து அவனை அமெரிக்காவிற்கு மேற்படிப்புக்கு அனுப்பிய நாட்கள் நினைவு வந்தன. பின்பு, அவன் அங்கேயே தன்னைப் போலப் படிக்க வந்திருந்த ஒர் இலங்கைத் தமிழ்ப் பெண்ணைக் காதலித்ததும், மணந்து கொண்டதும், அமெரிக்காவிலேயே வசதியான வேலை கிடைத்து இருவரும் அங்கேயே தங்கி விட்டதும், பேரன் பிறந்ததும், கடிதங்கள் மூலமே அவர் அறிந்த செய்திகள்.

“இங்கிருந்தே நீங்கள் வந்து, திரும்ப வசதியாக ஒரு விமான டிக்கெட் எடுத்து அனுப்புகிறேன், வருகிறீர்களா? என்று மகன் கேட்ட போது தம் வயது-தள்ளாமையை நினைத்து, ‘நீங்கள் எப்போதாவது விடுமுறையில் வரும் போது பார்த்துக் கொள்கிறேன். டிக்கெட் எடுத்து அனுப்ப வேண்டாம்’ என்று பதில் எழுதி விட்டார் கிழவர் வேதகிரி.

கல்யாணப் புகைப்படம், பேரனின் புகைப்படம் என்று அடுத்தடுத்து மகன் விமானத் தபாலில் அனுப்பிய புகைப்படங்களைப் பார்த்துப் பார்த்தே பூரித்துப் போனார் அவர். ஆற்றிற்குக் குளிக்கப் போகும் போதோ, மாலையில் உலாவச் செல்லும் போதோ தம் வயதுக் கிழவர்கள் இடுப்பில் பேரனுடனோ, பேத்தியுடனோ எதிர்ப்படும் போது இவரது மனம் குறுகுறுக்கும். எங்கோ பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் தம் பேரனை நினைத்துக் கொள்வார். ‘பையனுக்கு உங்கள் பெயரைத்தான் வைத்திருக்கிறேன். வீட்டில் செல்லமாகக் குமார் என்று கூப்பிடுகிறோம். பள்ளியில் கே.வி.கிரி என்று பெயர் கொடுத்தாயிற்று' - என்று பேரனைப் பள்ளிக்கு அனுப்புகிற வயதில் மறுபடி கனகசபை அவருக்கு எழுதியிருந்தான். படிப்பதற்கு மகிழ்ச்சியாயிருந்தது. அவர் பெயரைத் தாங்கிக் கொண்டு அமெரிக்காவில் ஒரு தளிர் பெருமிதப்பட்டார்.

அமெரிக்காவிலிருந்து சென்னை வந்து இரண்டு நாள் தங்கிவிட்டு இலங்கைக்குப் போய் இலங்கையிலிருந்து அப்படியே சிங்கப்பூர் மார்க்கமாகக் கனகசபை திரும்ப திட்டமிட்டிருந்தான். கிழவரைப் பார்ப்பதற்காக அவன் வரகுப்பட்டிக்கு வந்து திரும்ப வேண்டுமென்றால் மேலும் ஐந்தாறு நாட்கள் செலவாகும். பத்துப் பதினைந்து நாள் லீவில் வருகிற மகனுக்குச் சிரமம் வைக்க வேண்டாம் என்று அவரே சென்னைக்குப் போய் அவன் தங்குகிற ஹோட்டலில் அவனையும், மருமகளையும், பேரப்பிள்ளையையும் பார்த்துவரத் திட்டமிட்டிருந்தார்.

எப்போதுமே குழந்தைகள் என்றால் அவருக்குக் கொள்ளைப் பிரியம். பென்ஷன் பணத்திலிருந்து செலவழித்து மிட்டாய் வாங்கிக் காந்தி ஜெயந்தி அன்றைக்கும், சுதந்திர தினத்தன்றைக்கும் வருடம் தவறாமல் பள்ளிக்கூடத்துக் குழந்தைகளுக்குக் கொடுத்து மகிழ்வார் வேதகிரி. சில ஏழைக் குழந்தைகளுக்குத் தம் செலவில் பாடப் புத்தகங்களும், நோட்டுப் புத்தகங்களும்கூட வாங்கியளித்து வந்தார் அவர்.

இப்போது சொந்தப் பேரனையே போய்ப்பார்க்கப் போகிறார். பேரனுக்கு என்ன வாங்கிக் கொண்டு போய்ப் பார்ப்பதென்று யோசித்தார். கை முறுக்கு முதலிய எண்ணெய்ப் பலகாரங்கள் செய்து விற்கும் பணியாரக் கடை ஆச்சியிடம் சொல்லி முறுக்கு, சீடை, வெல்லச்சீடை, பொரிவிளங்காய் எல்லாம் ஸ்பெஷலாகத் தயாரிக்க ஆர்டர் கொடுத்தார். அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் பேரனுக்குத் தமிழ்நாட்டின் சுவையான பணியாரங்கள் வாய்க்கு ருசியாக இருக்கும் என்பது அவரது நம்பிக்கையாயிருந்தது.

மொறுமொறுவென்று தேங்காய் எண்ணெய் வாசனை கமகமக்க ஒரு பெரிய எவர்சில்வர் சம்புடம் நிறையப் பட்சணங்களை நிரப்பிக் கொண்டு வந்து கொடுத்துவிட்டாள் ஆச்சி. தனக்குச் சேர வேண்டிய பணத்தையும் கிழவரிடமிருந்து கணக்குத் தீர்த்து வாங்கிக் கொண்டு போய்விட்டாள். . கிழவர் சென்னைக்குப் போய் மகனையும், மருமகளையும், பேரனையும் சந்திக்கப் போவதைப் பற்றிய கற்பனைகளில் மூழ்கினார். பேரனைக் கபாலீசுவரர் கோயில், மெரீனா கடற்கரை, அடையாறு ஆலமரம் எல்லாவற்றுக்கும் அழைத்துக் கொண்டு போய்க் காட்ட வேண்டும் என்றும் எண்ணினார். மகனுக்கும் மருமகளுக்கும் வேறு வேலையிருந்தாலும் தானே ஒர் ஆட்டோ ரிக்க்ஷாவில் பேரனை அழைத்துப் போய்ப் பிரியத்தோடு எல்லாம் சுற்றிக் காட்டவேண்டும் என்று நினைத்துக் கொண்டார். அந்த நினைப்பே படு சுகமாயிருந்தது.

அவர் சென்னைக்கு ரெயிலேற வேண்டிய மாலை நேரமும் வந்தது. பட்சணச் சம்புடம், பேரனுக்குக் காட்டுவதற்காக மகனைப் பெற்ற சில ஆண்டுகளிலேயே காலமாகிவிட்ட தன் மனைவியின் அதாவது அவனுடைய பாட்டியின் படம், எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு ரெயிலேறினார். மனம் நிறையப் பாசம். வற்றி வறண்டு கிழடு தட்டிய அந்த உடல் நிறைய உற்சாகத்தை உண்டாக்கிக் கொண்டு பயணத்தைத் தொடங்கினார் அவர் தனியாகப் பயணம் செய்வதற்கு ஏலாத வயதுதான். ஆனாலும் பேரனைக் காணும் ஆசையில் துணிந்திருந்தார்.

'நீ என்னை எதிர்கொண்டு வரவேற்க ஸ்டேஷனுக்கு வரவேண்டும் என்ற அவசியமில்லை. நான் புறப்பட்டு வருகிற செங்கோட்டைப் பாஸஞ்சர் எழும்பூருக்கு அதிகாலையில் வருகிறது. அந்த நேரத்துக்கு நீ தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு சிரமப்பட வேண்டாம். நானே ரெயிலிலிருந்து இறங்கி ஹோட்டலுக்கு வந்துவிடுகிறேன்’ என்று மகன் கனகசபைக்கு அவன் வந்து தங்கப் போவதாகக் குறித்திருந்த ஹோட்டல் விலாசத்துக்கு ஒரு முன் கடிதமும் எழுதிப் போட்டிருந்தார் கிழவர். ஆனாலும் தன் மேலுள்ள மரியாதை காரணமாக அவன் ஸ்டேஷனுக்கு வந்தாலும் வரக்கூடும் என்று அவர் மனம் எதிர்பார்த்தது. தன் மகனை மணந்தபிறகு அந்தப் பெண்ணை அதாவது புதிய மருமகளை அவர் இப்போதுதான் முதல் முதலாகப் பார்ப்பதால் அவள் தன் கால்களில் விழுந்து வணங்கி ஆசி பெறக்கூடும் என்றும் தோன்றியது. 'ஆல் போலத் தழைத்து அறுகுபோல் வேரோடிப் பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க!” என்று அவளை மனம் நிறைய வாழ்த்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்ததால் இந்திய மரபுகள், மரியாதைகள், பற்றித் தன் மகனே பேரனுக்கு எடுத்துச் சொல்லி, டேய் தாத்தாவை கால்லே விழுந்து சேவிச்சு ஆசீாவாதம் வாங்கிக்கனும்டா என்று வற்புறுத்துவான் என்று நடக்கப் போகும் காட்சிகளைக் கற்பனையில் எண்ணிப் பார்த்துக் கொண்டார் கிழவர். “அமெரிக்காவிலேர்ந்து, பிள்ளையும் மாட்டுப் பெண்ணும் பேரனும் மெட்ராஸ்வரா! போய்ப் பார்க்கணும்” என்று குறைந்தது நூறு பேரிடமாவது தினமும் சொல்லியிருப்பார் அவர்.

சென்னையில் அவர்கள் இருக்கப் போவது வெறும் நாற்பத்தெட்டு மணி நேரங்களே. அதிலும் ஒரு நாள் கழிந்திருக்கும். அவர் போய்ச் சேரப் போவதே இரண்டாம் நாள் காலையில்தான்.அவரைச் சந்திக்கிற தினத்தன்று மாலையிலேயே 6 மணிக்கு அவர்கள் கொழும்புக்கு விமானம் ஏற வேண்டும். இரவு 9 மணிக்கு அவர் ஊர் திரும்ப ரெயில் இருந்தது. அவர்களை விமான நிலையத்தில் வழியனுப்பி விட்டு வந்து கிழவர் திரும்பவும் கிராமத்துக்கு ரெயிலேற வேண்டியதுதான். பார்க்கப் போனால் அவர்களோடு.அவர் கழிக்கப் போவது பன்னிரண்டு மணி நேரத்துக்கும் குறைவான அவகாசம்தான்! ஆனாலும் என்ன?அமெரிக்க மழலைத்தனம் மாறாத குரலில் அந்தச் சிறுவன் 'தாத்தா' என்று கூப்பிடப் போகும் ஒரு விநாடியின் மகிழ்ச்சி என்பது அப்படியே ஒரு யுகத்துக்கு நீடிப்பதுபோல் தோன்றாதா? அந்த மகிழ்ச்சியில் கால ஒட்டமே திகைத்துத் தேங்கி நின்று போகாதா? இனிய நினைவுகளிலும் கற்பனைகளிலுமாக ரெயில் பெர்த்தில் அவர் புரண்டு புரண்டு படுத்தார். துக்கமே வரவில்லை. அன்று ரெயில் சென்னையை அடையத் தாமதமாகிவிட்டது. எழும்பூரில் போய் நின்றபோது காலை ஏழு மணி ஒரு கையில் பட்சணச் சம்புடமும், இன்னொரு கையில் துணி மூட்டையுமாக இறங்கிய இவர், 'மகன் ஸ்டேஷனுக்கு வந்திருப்பானோ' என்ற அச்சானியத்தோடும், ஆதங்கத்தோடும் பத்து நிமிஷம் நின்று, பிளாட்பாரம் காலியாகிற வரை இருபுறமும் கண்களால் துழாவித் துழாவிப் பார்த்தார், ஊஹும் அவன் வரவில்லை.

தன்னுடைய மகன் தங்குவதாக எழுதியிருந்த இன்டெர் கான்டினென்டல் ஒட்டலுக்குப் போக ஒர் ஆட்டோ ரிக்க்ஷா வாடகை பேசி ஏறினார் கிழவர்.

நீர்க்காவியேறிய பழுப்பு வேஷ்டியும், சட்டையும், காதில் சிவப்புக்கல் கடுக்கனும், ஒரு பக்கத்துக் கம்பி ஒடிந்து பழைய பூணூல் கயிற்றால் காதில் இழுத்துக் கட்டிய மூக்குக் கண்ணாடியும், துணிமுட்டையும், சம்புடமுமாக வந்து இறங்கிய கிழவரை ஹோட்டல் ரிஸப்ஷனில் வெறித்துப் பார்த்தார்கள். ஆட்டோவில் வராமல் நடந்து மட்டும் வந்திருப்பாரானால் ,"இது ஒட்டல்! இங்கே பிச்சை போடமாட்டாங்க.போ என்று வாட்ச்மேன் சொல்லி வெளியே துரத்தியிருப்பான்.

“அமெரிக்காவிலேருந்து கனகசபைன்னு என் ஸன் இங்கே தங்கியிருக்கான்” என்று அவர் கூறியதும் “வி.கே.சபாய் தானே? ரூம் நம்பர் ஒன் நாட் டு - தேர்ட் ஃப்ளோர்”' என்றாள் ரிஸப்ஷன் பெண்மணி, லிஃப்ட் பாயைக் கூப்பிட்டு அவரை அழைத்துப் போக ஏற்பாடு செய்தாள். அறை முகப்பை நெருங்கியதும் மகிழ்ச்சிப் பரபரப்பு என்பார்களே அதில் முற்றத் திளைத்திருந்தார் அவர். மனம் வேகமாக அடித்துக் கொண்டது. லிஃப்ட் பையன் அறை முகப்பில் இருந்த 'காலிங் பெல்லை’ அவருக்குக் காட்டிவிட்டுச் சென்றான். மகிழ்ச்சியின் மிகுதியில் பதறும் கைகளோடு காலிங் பெல்லை அழுத்தினார் கிழவர்.

நீண்டநேரம் மணியை அழுத்திய பின்பும் உள்ளிருந்து பதிலே இல்லை. தந்தை கிராமத்திலிருந்து வரப்போகிறார் என்ற ஆர்வத்தில் மகனும், பேரனும் சீக்கிரமே விழித்தெழுந்து காத்திருப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தார் வேதகிரி, ஏமாற்றம்தான் மிஞ்சியது.

நீண்டநேரத்துக்குப்பின் கடைசியில் மகன்தான் வந்து கதவைத் திறந்தான். முதல் ஒரு விநாடி அவரை அவனுக்குப் புரியவே இல்லை. "யாரைப் பார்க்கணும்?” என்று யாரோ அந்நியமான ஒருவரை விசாரிப்பது போல் விசாரித்த அவனை, “நான் தாண்டா - உங்கப்பா வந்திருக்கேன்” - என்று அவர் முந்திக் கொண்டு சொல்ல வேண்டியதாயிற்று.

“உள்ளே வாங்கோ...” என்று சுதாரித்துக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றான்.

உள்ளே 'நைட்டி’யுடன் தூங்கி எழுந்த கோலத்தில் ஒர் இளம் பெண் காபி அருந்திக் கொண்டிருந்தாள். ஜீன்ஸும் 'ஐயாம் ஃப்ரம் டெக்ஸாஸ்' என்ற ஆங்கில வாசகத்தோடு கூடிய பனியனும் அணிந்த பையன் ஒருவன் சோபாவில் சாய்ந்து எதிர்த்த சோபாவில் காலைத் தூக்கிப் போட்டபடி நியூஸ் பேப்பரில் மூழ்கி இருந்தான். கால்களில் முரட்டுக் கான்வாஸ் ஷூ. ஜீன்ஸில் அங்கங்கே வட்டவட்டமாகத் தோலில் ஒட்டுத் தையல் வேறு.

“பிரேமா! அப்பா கிராமத்திலேயிருந்து வந்திருக்கார்” என்று நைட்டி அணிந்து காபியருந்திக் கொண்டிருந்த பெண்ணிடம் கனகசபை கூறியவுடன் "ஹலோ' என்று கிழவரை நோக்கி முகம் மலர்ந்தாள் அவள். அவன் அவளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டதிலிருந்து அவள் தான் அவனுடைய மனைவி என்பதும் புரிந்தது. கலியாணமான பின் முதல் முதலாகக் காணும் தன்னை ஆசி வேண்டி அவர்கள் சேர்ந்து வணங்காததே வியப்பாயிருந்தது அவருக்கு.

"உட்காருங்கோ” என்று அவரை ஒரு சோபாவில் உட்காரச் சொல்லிவிட்டு இன்டர்காமில் மேலும் ஒரு காபிக்கு ஆர்டர் செய்தான் மகன். சோபாவில் சரிந்தாற்போல் அடுத்த சோபா மேல் கால்களைத் தூக்கிப் போட்டபடி தினசரியில் மூழ்கியிருந்த பேரனின் கான்வாஸ் ஷூப் பாதங்கள் இவரது முகத்தருகே துருத்திக் கொண்டிருந்தன. ஏதோ சகஜமற்ற இறுக்கம் ஒன்று அவர்களுக்கிடையே நிலவியது. நீண்ட காலத்துக்குப் பின்னால் சந்திக்கும் தகப்பனுக்கும் மகனுக்கும் இடையிலான நெகிழ்ச்சியோ, பாசமோ, பந்தமோ, உறவின் இளகலோ அதில் இல்லை. பழுப்பு நிற வேஷ்டியும், ஷேவ் செய்யாத முகமும், ஒடிந்த மூக்குக் கண்ணாடியும், மூட்டை முடிச்சுக்களுமாக அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் அறைக்குப் பொருந்தாத ஒர் ஆளை அங்கே எதிர்கொள்ள விரும்பாத தயக்கமே தெரிந்தது.

பேரன் ஒரு நிமிஷம் தினசரியிலிருந்து தலையை நிமிர்த்தி ஒர் அபூர்வ மிருகத்தைப் பார்ப்பது போல் கிழவரை வெறித்துப் பார்த்தான். பின்பு கனகசபையின் பக்கம் திரும்பி அமெரிக்க உச்சரிப்பின் கொழகொழப்பான முழுமையோடு, “ஷூ இஸ் திஸ் டர்ட்டி ஒல்ட் மேன் யா?” என்று கேட்கவும் கனகசபை சிறிது பதறி, “டோண்ட் ஸே லைக் தட் ஹி இஸ் யுவர் கிராண்ட் ஃபாதர்” என்று அவசர அவசரமாகக் குறுக்கிட்டான். அதை அறிந்த பின்னும் பேரன் கால்களைத் தூக்கிப் போட்டு அட்டகாசமாக இருந்ததில் மாற்றம் எதுவுமில்லை. கனகசபை கூறியதற்கு ஒரு பதில் 'யா'வுடன் மறுபடி தினசரியில் மூழ்கிவிட்டான் அவன்.

கிழவர் வேதகிரிக்கு ஒரே அதிர்ச்சி. கல்லில் தேடிவந்து தாமே முட்டிக் கொண்டது போலிருந்தது அவருக்கு.

"அப்பா! தப்பா நெனைச்சுக்காதீங்கோ! இந்தக் காலத்துப் பசங்களுக்கு மட்டு மரியாதை எல்லாம் தெரியறதில்லே.” என்று பேரனுக்காக மகன் அவரிடம் மன்னிப்புக் கேட்டான்.

பேரனை அங்கம் அங்கமாகத் தொட்டுக் கொஞ்சும் ஆசையோடு வந்த அவருக்கு நெஞ்சு வலித்தது. கலாச்சார ரீதியான இந்தியத் தன்மையின் பற்று, பாசம் எதுவுமே அவர்களிடம் தெரியவில்லை. மகன் கனகசபை மட்டும் ஏதோ உதட்டளவில் அவரை விசாரித்தான்.

 'சரி எப்படியும் தொலையட்டும். கொண்டு வந்த பட்சணங்களையாவது கொடுப்போம் என்று சம்புடத்தைத் திறந்து வெல்லச் சீடையையும், பொரிவிளங்காயையும் பேரனின் அருகே சென்று நீட்டினார் கிழவர்.

அந்தப் பையன் தயக்கத்தோடு அதைத் தொட்டுப் பார்த்துவிட்டு, "ஐ கான்ட் ஈட் ஸ்டோன்ஸ்” என்று கதறாத குறையாக அலறி மறுத்தான். - "சாப்பிட்டுப் பாருடா அப்புறம் விடமாட்டே. டேஸ்டா இருக்கும்” என்று கிழவர் கெஞ்சியபோது அந்தச்சொற்கள் புரியாமல் தந்தையின் பக்கம் திரும்பி,"டாட் வாட் த ஒல்ட்மேன் ஸேய்ஸ்” என்று வினவினான் பேரப்பிள்ளையாண்டான். வாய் தவறிக்கூட அவன் தன்னை கிராண்ட் ஃபாதர்' என்றோ தாத்தா என்றோ கூறத் தயாராயில்லை என்பதைக் கிழவர் கவனித்தார்.

சீடை முறுக்கு எதையும் பேரன் விரும்பவில்லை. கனகசபையே, "அவனுக்கு இதெல்லாம் பிடிக்காதுப்பா! வற்புறுத்தாதீங்கோ' - என்று கிழவரைத் தடுத்தான். தாத்தாவாயிற்றே என்ற கனிவு, மரியாதை, பாசம், பயபக்தி எதையுமே அந்தச் சிறுவனிடம் அவர் எதிர்பார்க்க முடியவில்லை.

கனகசபையோ, அவன் மனைவியோ கண்டிப்பான குரலில், “டேய் அவர் தாண்டா உன் தாத்தா! அவரைக் கிழவர்னோ, ஒலட்மேன்'னோ கூப்பிடாதே. மரியாதையாத் தாத்தான்னோ, கிராண்ட் ஃபாதர்னோ, கிராண்ட்பான்னோ கூப்பிடனும்” என்று அவனை ஒருமுறை கூடக் கடிந்து கொள்ளாதது வேறு அவருக்கு எரிச்சலூட்டியது. பேரனைத் தோள் மேல் தூக்கி அமர்த்திக் கொண்டு திருவிழாக் கூட்டத்தில் நடக்கும் கிராமத்துத் தாத்தாவின் பற்றோடும் பாசத்தோடும் புறப்பட்டு வந்திருந்த அவருக்கு மனசு வெடித்துவிடும் போலிருந்தது. இப்போது.

மேலே அங்கிருக்கும் ஒவ்வொரு விநாடியும் முள்மேல் இருப்பது போல் உணர்ந்தார் வேதகிரி, கனகசபையை விட உயரமாயிருந்த அந்தச் சிறுவன் பிஞ்சிலே பழுத்த முரண்டுடையவனாகத் தோன்றினான். அவனுக்குத் தமிழ் தெரியாது. அப்பனை மிஞ்சிய வளர்த்தி உடலிலே தெரிந்தது. ஆனால் மனம் வளரவே இல்லை.

செடிகளை ஒரிடத்தில் இருந்து பெயர்த்து இன்னோர் இடத்தில் நடும்போது முந்திய இடத்து மண்ணைக் கொஞ்சம் கொண்டு போய்ப் புதிய இடத்தில் நிரப்பி நடுவார்கள். அதற்குத் தன்மண் போடுதல் என்று பெயர். அமெரிக்காவிலேயே பிறந்து வளரும் இந்தியக் குழந்தைகள் தன் மண் போடாமலேயே வளர்ந்த செடிகள். அவர்களிடம் இந்திய மண்ணின் குடும்பவுண்ர்வு, பற்று, பாசம், மரியாதை, உறவு எதுவும் இருக்கமுடியாதுதான் என்றெண்ணி மனத்தைத் தேற்றிக்கொள்ள முயன்றார் கிழவர். ஆனாலும் மனம் வேதனைச் சுமையால் கனத்தது.

மாலையில் அவர்கள் விமானத்துக்கும், கிழவர் இரயிலுக்கும் புறப்படுகிற நேரம் வரை இந்த இறுக்கம் அப்படியே நீடித்தது. சிறிதும் தளரவே இல்லை. அவர் கிராமத்திலிருந்து பிரியமாகச் செய்து வந்த பட்சணங்களைப் பேரன், மகன், மருமகள்  யாருமே தொடக்கூட இல்லை. எண்ணெய் ஆகாது என்றார்கள். மாவுப் பண்டம் ஒத்துக் கொள்ளாது என்றார்கள்.

“இந்தத் தள்ளாத வயசிலே எங்களை வழியனுப்பவிமானநிலையத்துக்கு நீங்க வர வேண்டாம்! நாங்களே போய்க் கொள்கிறோம். நீங்க ரயிலடிக்குப் போங்கோ அடுத்த வருஷம் டெல்லியிலே ஒரு ஸெமினாருக்காக நான் மட்டும் தனியா வருவேன். அந்த ட்ரிப்பின்போது நானே வரகுப்பட்டிக்கு வந்து ரெண்டு நாள் உங்களோட தங்கறேன்” - என்று மகன் அவருக்கு விடைகொடுத்தான்.

மருமகளும் பேரனும் அதிகம் பேசவே இல்லை.'புறப்படு முன்பேரனின் தலையை உச்சி மோந்து அவனைத் தழுவிக் கொள்ளலாம் என்று துணிந்து அவனருகில் நெருங்கிய அவரைக் கண்டு மிரண்டு, “டோண்ட் டச் மீ யூ புல் ஷிட்” என்று கத்தியபடியே விலகி ஓடினான் பேரன். -

“வேண்டாம்ப்பா இதெல்லாம் அவனுக்குப் புரியாது. விட்டுடுங்கோ” என்று - கனகசபையே அவரை விலக்கினான்.

கிழவர் மறுபடி ஒரு ரிக்ஷா பிடித்து அதே மூட்டை முடிச்சுக்கள் சம்புடத்தோடு எழும்பூர் வந்தார். இரயிலுக்கு நிறைய நேரம் இருந்தது. இரவு 9 மணிக்குத்தான் அவருக்கு இரயில், - - ஸ்டேஷனுக்காகப் படியேறுகிற இடத்தில் சுருண்ட தலை முடியும், அழகிய கண்களும் மேலே சட்டையணியாத திறந்த உடம்புமாக ஒரு சிறுவன்,"தாத்தா இந்த மூட்டையை நான் தூக்கியாறேன், நாலணாக் குடுங்க போதும்” என்று அவரைக் கெஞ்சாத குறையாக மன்றாடினான்.

"தாத்தா என்ற அந்த அழைப்பு நெஞ்சில் பட்டு ரோஜாவால் அர்ச்சித்த மாதிரி மிருதுவாக இருந்தது.கிழவர் அழுக்கும் கிழிசலுமான அரை டிராயர் அணிந்த அந்தச் சிறுவனையே இமையாமல் உற்றுப் பார்த்தார். - . “என்ன தாத்தா! அப்பிடிப் பார்க்கிறீங்க. நான் லைசென்ஸ் உள்ள போர்ட்டர் இல்லே. எங்கிட்டே வில்லை கிடையாது. 'வில்லை' உள்ள லைசென்ஸ் போர்ட்டர்னா உங்ககிட்டரெண்டு ரூபா கேப்பானுக. நான் வெறும் நாலணாத்தான் கேட்கிறேன்.” “எங்கிட்ட அதிகச் சுமையே இல்லையேப்பா?” "இருக்கிறதைக் கொண்டாந்து தாரேன் தாத்தா?”

அவன் ஒவ்வொரு முறை தாத்தா என்று கூப்பிடும்போதும் அவருடைய சுமைகள் மேலும் மேலும் குறைந்து லேசானது போலிருந்தது. :- - .

கிழவரின் கண்களிலோ நீர் பனித்தது. கீழே உட்கார்ந்து சம்புட்த்தைத் திறந்தார். . அப்படியே சிறுவனிடம் நீட்டினார். "ஸ்டேஷனுக்கு அப்புறம் போகலாம்! முதல்லே இதைச் சாப்பிடுடா குழந்தை!”

பையன் பயந்து தயங்கியபடியே ஒரே ஒரு வெல்லச் சீடை மட்டும் எடுத்துக் கொண்டான்.

"அவ்வளவும் உனக்குத்தான் பயப்படாமே நிறைய எடுத்துச்சாப்பிடுடா கண்ணு”

அவன் மேலும் எடுத்துக் கொண்டான். இப்போது பரட்டைத் தலையும் கிழிசல் பாவாடையுமாக ஒரு சிறுமி அருகே நிழலாடினாள்.

“தாத்தா, எனக்கில்லையா?”

"நீயும் எடுத்துக்கோம்மா." மூக்குச்சளி ஒழுக மற்றொரு சிறுவன் வந்தான்.

"தாத்தா. தாத்தா. பல குழந்தைகள் அவரை மொய்த்தன.

சம்புடம் காலியாகிற வரை எல்லாக் குழந்தைகளுக்கும் வாரி வாரி வழங்கினார் கிழவர் வேதகிரி.

செவி நிறையத் 'தாத்தா -- தாத்தா' என்று பிஞ்சுக் குரல்கள் ஒலித்து அவரை மகிழ்வித்தன.

அமெரிக்காவிலிருந்து வந்த சொந்தப் பேரனை இப்போது அவர் மறந்து போய்விட்டார். எழும்பூர் இரயில் நிலையப் பிளாட்பாரத்தில் தற்செயலாகச் சந்தித்த இந்தப் புதிய பேரன்கள் பேத்திகள் அவரை மனநிறைவோடும் நன்றி விசுவாசத்தோடும் பிரியமாக இரயிலேற்றி ஊருக்கு வழி அனுப்பி வைத்தார்கள்.