நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/களவும் கற்று...
163. களவும் கற்று…
நண்பர்கள் எல்லாரும் விடை பெற்றுச் சென்ற பின் புலவர் அவனைக் கண்டித்தார்.
“இவ்வளவு வெளிப்படையா எல்லாத்தையும், எல்லாரிடமும் மனந் திறந்து பேசிக்கிட்டிருந்தா, அரசியல்லே உங்க எதிரிங்க உங்களை ரொம்ப சுலபமா நசுக்கிப்பிடுவாங்க, ஜாக்கிரதை.”
“அது சரிதான்! ஆனா அதுக்காக ஒரு நேர்மையான அரசியல்வாதி தனக்கு வேண்டியவங்க கிட்டக் கூட வஞ்சகமாகவும், கபடமாகவும், நடந்துக்கலாங்கிறதை நான் ஒப்புக் கொள்ள முடியாது புலவரே! உண்மையைப் பேசப் பயமும் தயக்கமும் எதற்காக?”
“வஞ்சகம் வேண்டாம்கிறது எனக்கும் உடன்பாடுதான். ஆனாக் கபடம் வேணும்! கபடமே இல்லாட்டி, அரசியலில் ஆளையே முழுங்கி ஏப்பம் விட்டுடுவாங்க”
“அப்புறம் நமக்கும் - நாம் யாரை எல்லாம் எதிர்க்கிறோமோ அவங்களுக்கும் என்ன வித்தியாசம்?” -
“வேற்றுமை வித்தியாசம்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். எல்லாத் தரப்பு அரசியல்வாதிக்கும் ‘ராஜதந்திரம்’ அவசியம் வேணும். இல்லாட்டி மேலே போகப் போகச் சிரமம்! இன்னிக்கி நிலமை அப்படி ஆயிப் போச்சு.”
வயது முதிர்ந்தவரும், அனுபவம் நிறைந்தவருமான புலவர் திரும்பத் திரும்பத் தான் முதலில் கூறியதையே வற்புறுத்தினார். திருக்குறள் படித்த புலவரா இப்படிப் பேசுகிறார்? கண்ணப்பனுக்கே வியப்பாயிருந்தது.
இன்று அரசியலில் முன்னணியில் இருப்பவனும், ஒருகாலத்தில் புலவரின் மாணவனுமாகிய கண்ணப்பன் ஒழுக்கமும், நேர்மையும் நிறைந்தவன். அரசியலில் லஞ்சமும், ஊழலும் ஒழிந்து ஏழை எளியவர்களுக்கு நலங்களும், நியாயங்களும் கிடைக்க வேண்டும் என்று பாடுபடுகிறவன். அப்படிப் பட்டவனுக்குக் கபடம் இல்லாத அரசியல் இன்று பயன்படாது என்று தன் ஆசிரியரான புலவரே கூறியது மீண்டும் வியப்பை அளித்தது. அவன் புலவரோடு கடுமையாக எதிர்வாதம் செய்தான்.
“அவங்க பொதுச் சொத்தை திருடறாங்க, ஊரைக் கொள்ளையடிச்சு உலையிலே போடறாங்கன்னு சொல்லித்தானே நாமே இந்தப் புது இயக்கத்தையே ஆரம்பிச்சோம்? இப்போ நாமே கபடமா இருக்கணும்னா எப்படி?”
“அதெல்லாம் சரிதான்! ‘களவும் கற்று மற’ங்கிற பழமொழி உங்களுக்கு நினைவிருக்கணும் தம்பீ! அந்தப் பழமொழியே அரசியலுக்காகவும், அரசியல்வாதிகளுக்காகவும் தான் ஏற்பட்டதுங்கறதை நீங்க ஞாபகம் வச்சுக்கணும்."ஒண்ணைக் கற்றால் அதைக் கடைசி வரை ஞாபகம் வச்சுக்கிட்டுக் கடைப் பிடிக்கனும் புலவர் ஐயா! மறக்க வேண்டிய ஒண்ணைச் சிரமப்பட்டுக்கத்துக்கிறதோ, சிரமப்பட்டுக் கத்துக்கிட்ட ஒண்ணை மறக்கிறதோ எனக்குப் பிடிக்காதுங்கிறது உங்களுக்கே நல்லாத் தெரியுமே!”
புலவர் இதைக் கேட்டு பதில் எதுவும் சொல்லாமல் புன்முறுவல் பூத்தார். கண்ணப்பனுடைய உறுதி அவருக்கே வியப்பை அளித்தது. உண்மையிலேயே இதே கொள்கைகளையும் உறுதியான இலட்சியங்களையும் எல்லா நாட்களிலும் அவன் விடாப்பிடியாகக் கடைப்பிடிக்க முடியுமானால் அவருக்கும் மகிழ்ச்சியாய்த்தானிருக்கும். கபடமும் வஞ்சகமும் லஞ்சமும் ஊழலும் கொழுத்துப்போன ஒரு கட்சியிடமிருந்து பிரிந்து வந்துதான் அவன் இந்தப் புதுக்கட்சியைத் தொடங்கியிருந்தான். இதற்கு மக்கள் ஆதரவு பெருகியிருந்தது. கண்ணப்பன் போகிற இடமெல்லாம் வெள்ளமாய்க் கூடினர் மக்கள். லஞ்ச ஊழல்களை ஒழிக்க வந்த அவதாரபுருஷனாக அவனை எல்லாரும் மதித்தார்கள்.விரைவில் வர இருந்த பொதுத் தேர்தலில் கண்ணப்பனின் புதிய கட்சியே பெருவாரியாக வெற்றி பெற்று மாநிலத்தின் ஆட்சியைக் கைப்பற்றிவிட முடியும் என்கிற அளவு பரவலாக ஒரு நம்பிக்கை எல்லார் மத்தியிலும் ஏற்படத் தொடங்கியிருந்தது. ஆட்சியிலிருந்த கண்ணப்பனின் எதிரிகள் கதிகலங்கிப் போயிருந்தனர். பத்திரிகைகள் எல்லாமே ஒட்டு மொத்தமாக அடுத்து ஆட்சியைப் பிடிக்கப்போவது கண்ணப்பனின் புதிய கட்சிதான் என்று எழுதத் தொடங்கியிருந்தன. நிலைமையும் கண்ணப்பனுக்குச் சாதகமாகத்தான் இருந்தது.
ஆட்சியில் இருந்த கண்ணப்பனின் எதிரிகள் அவனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் அடிப்பது, உதைப்பது, வெட்டுவது, கைது செய்து பொய்க்குற்றம் சாட்டிச் சிறையிலடைப்பது போன்ற காரியங்களைஅளவு கடந்து செய்ததால் மக்களின் பரிவும், அனுதாபமும் வேறு கண்ணப்பன் பக்கமே திரும்பின.
அவனுடைய வெற்றிக்கு அவன் பாடுபட்டதை விட அவனுக்கு அதிக இடையூறுகளைச் செய்வதன் மூலம் அவன் எதிரிகளும் கூடப் பாடுபட்டனர்.
ஒரு வழியாகத் தேர்தலும் வந்தது. பரபரப்பான பிரச்சார நாட்களும் கழிந்தன. அடிதடிகள், வன்முறைகள், குத்து, வெட்டு, சாராயப் பெருக்கு, பரஸ்பரம் சேற்றை வாரி இறைத்தல், எல்லாவற்றிற்கும் பின் தேர்தலும் முடிந்தது. முடிவுகள் வெளிவர ஆரம்பித்தன.
யாருமே நம்ப முடியாத அளவு இருநூற்று ஐந்து மொத்த இடங்களில் இருநூற்று ஒன்றைக் கண்ணப்பனின் கட்சி பிடித்துவிட்டது. முன்னாள் ஆளும் கட்சியும் கண்ணப்பனின் எதிரிகளும் மொத்தம் மூன்றே மூன்று தொகுதிகளில்தான் வெற்றி பெற முடிந்திருந்தது. மீதி ஓர் இடத்தில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றுவிட்டார். ஒரே ஒர் இடத்தில்தான்.
வெற்றி பெற்ற கண்ணப்பனைச் சந்தித்துப் புலவர் மாலையணிவித்து வாழ்த்தினார். "எதிர்பார்த்ததைவிட மகத்தான வெற்றி இது மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து தொடர்ந்து நல்ல பெயர் எடுக்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளில் கூறியபடி லஞ்ச ஊழலற்ற ஆட்சி நடத்த வேண்டும் சாராய வெள்ளத்தைத் தடுக்க வேண்டும். எளிமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.”
“அது மட்டுமில்லை புலவரே! எங்கள் தேர்தல் மேடைகளில் நாங்கள் பேசினாற் போலவே எளிமையையும் சிக்கனத்தையும் கடைப்பிடிக்கக் கருதி இனி மந்திரிகள் ஐநூறு ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்க மாட்டோம். சைக்கிளில்தான் அமைச்சரவைக்கும் அலுவலகங்களுக்கும் செல்வோம். பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசப் பால், குடிசைகளுக்கு இலவச மின்சாரம், குறைந்த சம்பளக்காரர்களுக்கு இலவச வீடுகள், ஒரு ரூபாய்க்கு இரண்டு கிலோ அரிசி எல்லாம் தரப்போகிறோம்.”
புலவர் இதைக் கேட்டு விட்டுச் சிரித்தார்.
“ஏன் சிரிக்கிறீர்கள் புலவரே?”
"வேறொன்றுமில்லை! விளிம்பில் நிற்கிற யாருக்கும் கால் இடறும் ரொம்ப யோக்கியமாக இருப்பது என்பது திடீரென்று விளிம்பில் ஓடிவந்து நிற்கிற மாதிரித்தான். ஏற்கனவே ஆண்டவன் ரொம்ப அயோக்கியத்தனமாயிருப்பது என்ற மற்றொரு விளிம்பில் இருந்தான். விழுந்தான். அதிலிருந்து நீங்கள் இன்னொரு விளிம்பிற்கு ஒரே தாவாகத் தாவி இடறி விழுந்து விடாமல் படிப்படியாக நல்லதுகளைச் செய்யத் தொடங்கினாலே போதுமானது. பிரமாதமாக ஆரம்பித்து மிகவும் சுமராக முடிந்துவிடக் கூடாது. சுமாராக ஆரம்பித்து மிகவும் பிரமாதமாக முடியலாம். தவறில்லை”
“நீங்கள் எங்களை நம்பவில்லை புலவரே! போகப் போகத் தெரிந்து கொள்வீர்கள்.”
சரி, பார்க்கலாம்' என்றார்.
கண்ணப்பன் சொன்னபடியே நடந்தது. மந்திரிகள் சைக்கிளில் போனார்கள். வெறும் ஐநூறு ரூபாய்தான் சம்பளம் வாங்கினார்கள். இலவச மின்சாரம், இலவசப் பால், இலவச உணவு, இலவச உடை எல்லாம் தடபுடல் பட்டது.
இடையே மரூஷியஸ் தீவுகளில் உள்ள தமிழர்களுக்குத் தமிழ் கற்பிக்கப் பொருத்தமான ஒர் ஆசிரியர் வேண்டும் என்று கல்வி இலாகா தேடியது. புலவரையே அனுப்பலாம் என்றார் முதலமைச்சர் கண்ணப்பன். புலவரும் அதற்கு இசைந்தார். ஒர் ஐந்தாண்டு ஒப்பந்த அடிப்படையில் புலவர் மரூஷியஸ் செல்ல நேர்ந்தது. கண்ணப்பனே புலவருக்கு ஒரு பிரமாதமான வழியனுப்பு உபசாரவிழா நடத்தி ஆளுயர மாலை போட்டு அவரை அனுப்பி வைத்தான். புலவர் வெளிநாட்டுக்குப் போய்ச் சேர்ந்தார்.
கண்ணப்பனின் ஆட்சியில் முதல் இரண்டு ஆண்டுகள் எல்லாம் சுமுகமாகவே நடந்தன. புதிய கட்சிக்கும், புதிய ஆட்சிக்கும் மக்கள் மத்தியில் பேரும் புகழும் போதுமான அளவுக்கு நீடித்தன. அவர்களது சிக்கனம், எளிமை, லஞ்ச ஊழலற்ற நிர்வாகம், ஏழைகளுக்கான இலவசத் திட்டங்கள் எல்லாமே நல்ல பேர் வாங்கித் தந்து கொண்டிருந்தன.
மூன்றாவது ஆண்டின் தொடக்கத்தில் மந்திரிகளின் சம்பளத்தை ஆயிரத்தைந்நூறு ரூபாயாகச் செய்தார்கள். விலைவாசி உயர்வு காரணமாகச் சொல்லப்பட்டது. சைக்கிளில் போவதில் செக்யூரிட்டி ரிஸ்க் இருப்பதாகக் காவல்துறையினர் சொல்வதாகக் கூறி மந்திரிகளுக்குக் கார்கள் ஒதுக்கப்பட்டன. பெரிய பெரிய கார்களே கிடைத்தன.
குடிசைவாசிகள், ஏழைகள், எளியவர்களின் மேம்பாட்டுக்கான திட்டங்களை நடத்தப் பணம் தேவை என்று கள், சாராயம், போதைப் பொருட்கள் விற்கும் கடைகளை அரசாங்கமே திறந்தது. கட்சி ஆட்களே அவற்றைக் குத்தகைக்கு எடுத்தார்கள்.
"என் தாய் மேலாணை! தமிழ் மேலாணை! ஏழைகளின் வாழ்வைப் பாழாக்கும் கள், சாராயக் கடைகளை நிரந்தரமாக மூடுவதே எங்கள் கொள்கை -என்று தேர்தல் உறுதி மொழியில் வாக்களித்திருந்த கண்ணப்பனே இப்போது அதை மறந்திருந்தான். சாராயக் கடைகளை மூலைக்கு மூலை திறந்திருந்தான்.
எப்படியோ ஆண்டுகள் ஒடி முடிந்தன. அடுத்த பொதுத் தேர்தலும் வந்தது. மறுபடியும் கண்ணப்பனின் கட்சியே பெருவாரியாக வெற்றி பெற்றது.
இம்முறை கட்சி வளர்ச்சிக்காக வியாபாரிகளிடமும், தொழிலதிபர்களிடமும் பணம் வாங்குவது தவறில்லை என்ற முடிவைக் கண்ணப்பனே இரகசியமாக மற்றவர்களுக்கு அறிவித்தான். கட்சியை நடத்த, எதிர்க்கட்சியின் பலத்தைக் குலைக்க எல்லாவற்றுக்கும் நிறையப் பணம் தேவைப்பட்டது. மெல்ல மெல்ல மந்திரிகளும், கட்சி முக்கியஸ்தர்களும் கூடப் பணவேட்டையில் இறங்கினார்கள். மெடிகல் காலேஜ் சீட் முதல் பாலிடெக்னிக் அட்மிஷன் வரை எல்லாவற்றிற்கும் 'ரேட்'கள் ஏற்பட்டன. கோடிக்கணக்கான அயிட்டங்களைக் கண்ணப்பனே நேரில் வாங்கினான். லட்சங்களை மற்றவர்கள் பார்த்துக் கொண்டார்கள். ஸ்விஸ் பாங்கில் கணக்கு ஏற்பட்டது. லஞ்சம் வாங்குவதிலும், பணம் பண்ணுவதிலும் இதற்கு முந்திய எல்லா அரசுகளையும் விடப் படுவேகத்தில் முன்னேறிவிட்ட பெருமை கண்ணப்பனின் அரசிற்குக் கிடைத்தது.
ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் முன்பு மரூஷியஸ் சென்றிருந்த புலவர் மேலும் சில ஆண்டுகள் ஒப்பந்தம் நீடித்தபின் அதுவும் முடிந்து ஒய்வுபெற்றுத் தாய்நாடு திரும்பினார்.
தாய்நாடு திரும்பியதும் முதல் வேலையாகத் தனது பணிவுள்ள மாணவனும், மாநிலத்தை ஆள்பவனுமாகிய கண்ணப்பனைச் சந்திக்க விரும்பினார். சந்திப்பது அவ்வளவு சுலபமாயில்லை. நாட்கள் கடந்தன. கேள்விப்பட்ட விஷயங்கள் அவருக்கு எரிச்சலூட்டின. கண்ணப்பனும், சக அமைச்சர்களும், கட்சிக்காரர்களும் லஞ்சத்தையே ஒரு வாழ்க்கை முறையாக்கி விட்டதாகத் தெரிந்தது. மனம் வெதும்பினார் புலவர்.அரும்பாடுபட்டுப் பல நாள் காத்திருந்து எப்படியோ முதல்வர் கண்ணப்பனிடம் ஒரு நிமிஷ இண்டர்வியூவுக்கு நேரம் வாங்கிவிட்டார் புலவர். அதற்கே முதல்வரின் காரியதரிசி, பி.ஏ.எல்லாரிடமும் தங்களது ஆதிநாளைய அந்தரங்க நட்பைச் சொல்லிக் காலில் விழாத குறையாகக் கெஞ்ச வேண்டியிருந்தது. ஒரு நிமிஷத்தில் கண்ணப்பனிடம் கேட்க வேண்டியவற்றை எல்லாம் வரிசையாக நினைவுபடுத்திக் கொண்டார் புலவர்.
கண்ணப்பன் அவரைக் கட்டித் தழுவி வரவேற்றான். அட்டகாசமாக நலம் விசாரித்தான். அவருக்கோ எவ்வளவோ முயன்றும் அவன் முன் சிரிப்பே வரவில்லை. அவன் நடிப்பதுபோல் அவருக்கு நடிக்க வரவில்லை. 'அரசியல்வாதிக்கும் கொஞ்சம் கபடம் தேவை - களவும் கற்று மறக்க வேண்டும்’ என்று அன்றைக்குத் தான் கூறியதையே தன்னிடம் எதிர்த்துக் கண்டித்த அவன் இன்று எப்படி இருக்கிறான் என்பதை எண்ணியபோது அவனது முகத்தை இயல்பாகப் பார்க்கவே அருவருப்பாய் இருந்தது அவருக்கு அவனைத் தன் பழைய மாணவனாக எண்ணிடக் கூட வெட்கமாக இருந்தது அவருக்கு.
அவர் அவனைக் கேட்டார்; கடுமையாகவே கேட்டார்.
“முன்னாலே இருந்தவங்க மாதிரி ஆயிடாமே லஞ்ச ஊழலற்ற நேர்மையான ஆட்சி அமைக்கப் போறேன்னு சொன்னது ஞாபகம் இருக்கா?”
“எப்போ சொன்னேன் அப்பிடி?”
“களவும் கற்று மறக்கணும்னு பழமொழி இருப்பதை நினைவூட்டி அரசியலுக்குக் கொஞ்சம் கபடமாவது வேணும்னு நான் சொன்னப்போ எனக்கு அன்னிக்கி நீங்க சொல்லியிருந்த பதில் அது...”
“அது சரி பழசெல்லாம் விட்டுத் தள்ளுங்க புலவரே! இப்ப என்ன வேலையா வந்தீங்க? உங்களுக்கு நான் என்ன செய்யணும்? சொல்லுங்க”
அவருக்கு ஒரே பிரமிப்பு! எப்படி மாறிவிட்டான்? 'களவும் கற்றுமற' என்பதுதான் பழமொழி. இவனோ இந்த ஆறேழு ஆண்டுகளில் களவைத் தவிர வேறு எல்லாவற்றையுமே மறந்திருக்கிறான்.
அரசாங்க நாற்காலிகளில் ஏதோ கோளாறு இருக்க வேண்டும். நாற்காலிகளில் போய் உட்காருகிறவரை நியாயம் பேசுகிற ஒவ்வொருவனும் நாற்காலிக்குப் போனதும் மக்களையும், நியாயங்களையும் மறந்துவிடுகிறான்.
முதல்வரின் பி.ஏ. குறுக்கிட்டான். “உங்கள் பேட்டிக்கு ஒதுக்கிய நேரம் முடிந்துவிட்டது."
“நன்றி! வருகிறேன்” என்று முதல்வரையோ பி.ஏ.யையோ திரும்பிப் பாராமல் சரேலென்று உடனே அங்கிருந்து வெளியேறினார் புலவர்.