நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/மூவரை வென்றான்
30. மூவரை வென்றான்
மதுரையிலிருந்து தென்காசி செல்லுகிற மங்கம்மாள் சாலையில் கல்லுபூபட்டி என்ற ஊருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் இடையில் ஒரு கிராமம் இருக்கிறது. சாலை தெற்கு வடக்காகச் செல்கிறது. சாலையின் மேல் மேற்கு நோக்கி நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு கைகாட்டி மரத்தில் ‘மூவரை வென்றான்-1 மைல் 4 பர்லாங்கு’ - என்று கறுப்புத் தார் பூசிய மரச்சட்டத்தில் வெள்ளை வார்னிஷால் பளிச்சென்று எழுதப்பட்டிருக்கும்.
நான் அடிக்கடி இந்தச் சாலை வழியே பஸ்ஸில் பிரயாணம் செய்கிறவன். ஏதோ ஒரு கிராமம் மேற்கே ஒன்றரை மைலில் இருப்பதாகவும், அந்தக் கிராமத்தின் பெயர்தான் அது என்றும் முதல் முதலாக நான் விசாரித்த போது அந்த ஊரைப் பற்றி ஒரு அன்பரிடம் அறிந்து கொண்டேன்.
பெயரைப் படித்தால், அந்தப் பெயர் அப்படிப்பட்ட ஒரு குக்கிராமத்திற்கு ஏற்பட்டிருப்பதில் ஏதாவதொரு காரணமோ, கதையோ அடங்கியிருக்க வேண்டுமென்று நம்பினேன் நான். 'மூவரை வென்றான்’- என்ற அந்தப் பெயர் அமைந்திருக்கிற விதத்திலிருந்து, பூர்வ சரித்திர நிகழ்ச்சியால் ஏற்பட்டதாகவும் இருக்கலாம் என்று கூடத் தோன்றியது. மேற்படி சாலையில் பிரயாணம் செய்யும் ஒவ்வொரு முறையும் என் மனதைக் கவர்ந்து, கற்பனையையும், சிந்தனையையும் கிளறச் செய்கிற அளவுக்கு 'மூவரை வென்றான் முக்கியத்துவம் பெற்று விட்டான்.
'அதிர்ஷ்டம்’ எப்படி வந்து வாய்க்கிறது பாருங்கள்! ஒரு நாள், நான் பிரயாணம் செய்து கொண்டிருந்த பஸ் என் மனோபீஷ்டத்தை நிறைவேற்ற விரும்பியோ என்ன வோ தெரியவில்லை, இந்தக் கைகாட்டிமரத்தருகிலேயே நிரந்தரமாக நின்று விட்டது.
பஸ் கிளம்பாது என்பது உறுதியாகி விட்டது. அப்போது மாலை நான்கு மணி. அதே கம்பெனியைச் சேர்ந்த மற்றொரு பஸ் மதுரையிலிருந்து புறப்பட்டு அந்த ‘ரூட்’டில் அந்த இடத்திற்கு வருவதற்கு இரவு எட்டரை மணி ஆகுமென்றும், அது வரை நாங்கள் காத்திருந்துதான் ஆக வேண்டும் என்றும் கண்டக்டர் கூறினார்.
“அந்த ஊரில் ஹோட்டல் இருக்கிறதா?” என்று விசாரித்துக் கொண்டு நாங்கள் ஏழெட்டுப் பேர் காப்பி சாப்பிடுவதற்காக ஒன்றரை மைல் தூரம் நடக்கத் தீர்மானித்து விட்டோம். காப்பியையும் சாப்பிட்டு விட்டு, அந்த ஊரின் பெயர் விசேஷத்தையும் அறிந்து கொள்ளாமல் பஸ்சுக்குத் திரும்புவதில்லை என்று நான் மட்டும் எனக்குள் தனிப்படத் தீர்மானம் ஒன்றும் செய்து கொண்டேன்.
வாய்க்கால், வரப்புகளின் மேல் குறுக்கிட்டுச் சென்ற, மேடு பள்ளம் மிகுந்த வண்டிப் பாதையில் நடந்தோம்.அந்தச் சின்னஞ்சிறு கிராமத்தில் 'ஹோட்டல்’ என்ற பெயருக்குரிய போர்டு மாட்டாத கூரைக் குடிசையைக் கண்டுபிடிப்பதுதான் கஷ்டமாக இருந்தது. அது மட்டுமா? அங்கே காப்பி என்ற பெயரில் கிடைத்த திரவத்தைச் சாப்பிடுவதும் கஷ்டமாகத்தான் இருந்தது.
காப்பி என்ற பெயரில் எதையோ குடித்துவிட்ட திருப்தியில் மற்றவர்கள் எல்லோரும் கார் நின்ற இடத்திற்குக் கிளம்பிவிட்டார்கள். 'நீங்கள் போங்கள். நான் கொஞ்சம் இருந்து வருகிறேன்’ என்று அவர்களிடம் கூறிப்பின் தங்கிவிட்டேன் நான்
ஹோட்டல் வாசலில் இருந்த வெற்றிலைப் பாக்குக் கடையில் உட்கார்ந்து கொண்டிருந்த வயதான பெரியவர் ஒருவரை அணுகினேன். மெல்லப் பேச்சைக் கிளப்பினேன். என்னுடைய வெளுத்த உடைக்கும் கைக்கடியாரத்திற்கும் நகரத்துப் பாணியில் வெளிவந்த பேச்சுக்கும் மரியாதை கொடுக்க எண்ணினார் போலும் அந்தப் பெரியவர். எனக்கு வேண்டிய விஷயமோ அவருடைய பதிலில் இருந்தது.
“சாமீ! அது ஒரு பழைய கதைங்க. பொழுதிருந்தா இங்கனே குந்திக் கேளுங்க, சொல்றேன்.”
"சந்தோஷம் பெரியவரே.அதைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்றுதானே நான் இங்கே வந்தேன், சொல்லுங்கள் கேட்கிறேன்.”
ஆவலோடு கடை வாசலில் போட்டிருந்த நீளமான பெஞ்சை மேல் துண்டால் தட்டிவிட்டு உட்கார்ந்தேன் நான்.
"அதுக்கென்னங்க? தாராளமாய்ச் சொல்றேன். வெத்திலை, பாக்கு, பொவையிலை, சோடா ஏதாச்சும் வேணுமுங்களா?”
பெரியவர் கதையை இனாமாகச் சொல்ல விரும்பவில்லை என்று குறிப்பாகத் தெரிந்து கொண்டேன். எனக்கிருந்த ஆத்திரத்தில் எப்படியாவது கதை வந்தால் போதுமென்றிருந்தது.
“எல்லாம் கொடுங்கள்! பெரியவரே!” என்று ஒரு முழு எட்டனாவை எடுத்து நீட்டினேன். பெரியவர் என்னை ஒரு தினுசாக வியப்புத் தோன்றப் பார்த்தார். வெற்றிலை, பாக்கு, புகையிலை, சோடா எல்லாம் பெஞ்சியில் எடுத்து வைத்தார்.நான் சோடாவை மட்டும் குடித்தேன்.
கதை கேட்கத் தயாராகிற பாவனையாகப் பெஞ்சியில் சப்பணங்கட்டி நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டேன். “சகோதர சகோதரிகளே!” என்று கூறிப் பேச்சு ஆரம்பிப்பதற்கு முன்னால் மேடைப் பேச்சாளர் கனைத்துக் கொள்ளுவார்பாருங்கள், அந்த மாதிரி ஒரு கனைப்புக் கனைத்துவிட்டுப் பெரியவர் கூறத் தொடங்கினார்.
அவருடைய தமிழ் மிகவும் கிராமியமாக இருப்பதால் இலக்கண சுத்தமான நடையில் மாற்றி உங்களுக்கு அதை நான் சொல்லிவிடுகிறேன். அந்தக் கிழவர் கூறியது எட்டனா விலைக்குத் தயார் செய்த கற்பனைச் சரக்கோ, அல்லது உண்மையேதானோ, எனக்குத் தெரியாது. அதற்கு நான் உத்திரவாதமும் அளிக்க முடியாது. இவ்வளவு கற்பனைத்திறன் இருக்குமானால் அவர் ஏன் வெற்றிலைக் கடை வைக்க வேண்டும், பாவம்!
***
இராணி மங்கம்மாள் காலத்தில் வீரமானியமாகக் கிடைத்த கிராமம் இது. "வீரமல்லுத் தேவன்' என்ற மறவர் குல வீரனே இதை முதன்முதலில் வீரமானியமாகப் பெற்றவன். இப்போது இந்த ஊரில் குடியிருப்பவர்களில் பெரும்பாலோர் அவனுடைய வம்சாவளியைச் சேர்ந்த மறவர்கள்தாம்.
மதுரைச் சீமையிலே மங்கம்மாள் ஆட்சி சீரும் சிறப்புமாக நடந்தவரை தனக்குக் கிடைத்த இனாம் கிராமத்தை வீரமல்லனும் சுதந்திரமாக அனுபவிக்க முடிந்தது. மங்கம்மாள் ஆட்சி ஒடுங்கிப் போனபோதுதான், இனாம் சொத்தாகப் பெற்ற வீரமானியத்தைச் சுதந்திரமாக அனுபவபாத்தியத்தை கொண்டாடுவதற்குத் தடைகளும் விரோதங்களும் ஏற்பட்டன. தடைகளையும் விரோதங்களையும் ஏற்படுத்தியவர்களோ ஆள் பலம் உள்ள ஜமீன்தார்கள். வீரமல்லனோ, கேவலம் ஒரு சிறு கிராமத்தின் தலைக்கட்டு நாட்டாண்மைதான்.
இங்கே மேற்குத் திசையிலுள்ள மலைத் தொடரில் உற்பத்தியாகி வரும் கன்னிமாலை ஆறு என்று ஒர் நதி பாய்கிறது. மூவரை வென்றான் கிராமத்தையும் இதன் தெற்கே இரண்டரை மைல் தொலைவில் இருக்கும் நத்தம்பட்டி என்ற ஜமீனையும் நடுவே பிரித்துக் காட்டும் எல்லையாக ஓடியது இந்தக் கன்னிமாலையாறு. ஆற்றின் வடகரையிலிருந்து வீரமல்லனுக்குரிய இனாம் நிலம் தொடங்குகிறது; தென் எல்லையிலிருந்து நத்தம்பட்டி ஜமீன் நிலம்.
மூவரை வென்றான் கிராமம் வீரமல்லனுக்கு மானியமாகக் கிடைத்த நாளிலிருந்தே, நத்தம்பட்டி ஜமீனுக்கும் அவனுக்கும் எத்தனையோ சில்லறைத் தகராறுகள் ஆற்றுத்தண்ணிiர் விஷயமாக ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் மதுரைச் சீமையிலிருக்கும் மங்கம்மாள் ஆட்சியின் அத்துக்குப் பயந்து நத்தம்பட்டி ஜமீன் அவனிடம் அதிகமாக வம்பு வைத்துக் கொள்ள அஞ்சியது. வீரமல்லனுடைய இனாம் நிலங்களுக்காக ஊரின் மேற்கே ஒரு பெரிய கண்மாய் அமைந்திருந்தது. அது பெரிய ஜமீன்.அதனால் மூன்று கண்மாய்கள் தண்ணிiர் வசதிக்குப் போதாது. மழை காலத்தில் கன்னிமாலை ஆற்றில் வருகின்ற அளவற்ற தண்ணிiர்ப் பிரவாகத்தைக் கொண்டுதான் வீரமல்லனின் ஒரு கண்மாயும், நத்தம்பட்டி ஜமீனின் மூன்று கண்மாய்களும் நிரம்பியாக வேண்டும்.
இனாம் கிராமமாக விடப்படுவதற்கு முன் 'மூவரை வென்றான்' பகுதி தரிசு நிலமாகக் கிடந்ததனால், ஆற்று நீர் முழுவதையும் நத்தம்பட்டி ஜமீன் பூரணமாக உரிமை கொண்டாடி வளமுற்றுக் கொழுத்துக் கொண்டிருந்தது. ஜமீன் நிலங்களில் இரண்டு போகம் மூன்று போகம் விளைவுக்குத் தண்ணிiர் கண்டது. இந்த ஏகபோக உரிமை நிலைக்கவில்லை.துரதிர்ஷ்டவசமாகவோ அல்லது அதிர்ஷ்டவசமாகவோ தெரியவில்லை . வீரமல்லன் கண்மாய் வெட்டியபோது ஆற்று மட்டத்தைவிடப் பள்ளமாக அமைந்துவிட்டது அவன் கண்மாய்.
இதன் விளைவு? ஆற்றுத் தண்ணிiரில் பெரும் பகுதி 'மூவரை வென்றான்'. கண்மாயில் பாய்ந்து அதை நிரப்பி விட்டு வடிகால் வழியே கலிங்கல் மட்டத்தைக் கடந்து கிழக்கேயுள்ள வேறு ஊர்களைச் சேர்ந்த கண்மாய்களுக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டது.
காட்டாறுதானே? மேற்கே மலையில் மழை பெய்தால் தண்ணிiர் கரை கொள்ளாமல் பொங்கி வரும். இல்லையென்றால் வறண்டு போகும். வீரமல்லனின் இனாம் கிராமத்தில் சாகுபடி நிலங்கள் மிகவும் குறைவுதான். ஒருமுறை கண்மாய் பூரணமாக நிரம்பினாலே இரண்டு மகசூலுக்குக் குறையாமல் வரும்.
நத்தம்பட்டி ஜமீன் நிலப் பரப்போ மிகப் பெரியது. கன்னிமாலையாற்றின் தண்ணீரால் ஜமீனின் மூன்று கண்மாய்களும் இரண்டுமுறை நிரம்பினாலும் ஜமீன் நிலங்களுக்குப் போதாது. இப்போதோ, வீரமல்லன் கண்மாய் வெட்டியதன் விளைவாக ஜமீன் கண்மாய்கள் ஒருமுறை நிரம்புவதே கஷ்டமாயிற்று.
அப்போது அந்தத் தலைமுறையில் நத்தம்பட்டி ஜமீன்தாராக இருந்தவர் வீரமருதுத் தேவர் என்பவர். முன்கோபமும், ஆத்திரமும், எதையும் யோசிக்காமல் பேசுவதும் செய்வதுமாக அமைந்த சுபாவமுடையவர். வீரமல்லனை நேரில் கூப்பிட்டனுப்பி அவர் தம் தேவையைக் கூறியிருந்தால் அவனே ஒப்புக் கொண்டிருப்பான். அப்படிச் செய்யாமல் வீம்பு பிடித்த ஜமீன்தார் நேரடி நடவடிக்கையில் இறங்கினார்.
ஆற்றில் மேற்கே வெகுதூரத்தில் அணைகட்டி, வீரமல்லனின் கண்மாய்க்குத் தண்ணீரே போகாதபடி செய்தார். கூலிக்குக் கொள்ளைக்காரர்களைப் பிடித்து 'மூவரை வென்றான்' கிராமத்து இனாம் நிலங்களில் விளைந்து கிடந்த பயிர்களை இரவோடிரவாக அறுத்துவரச் செய்தார். 'மூவரை வென்றான்' கண்மாயில் மடைவாய்களையும், வடிகால்களையும், வாய்க்கால்களையும் சிதைத்து அழித்தார். வீரமல்லன் சில நாளைக்குப் பொறுத்திருந்தான்.
***
இவைகள் எல்லாம் நடக்கும்போது மதுரைச் சீமையில் மங்கம்மாள் ஆட்சி ஒய இருந்த சமயம். சாது முரண்டினால் காடு கொள்ளாது என்பார்கள்; பொறுமையாக இருந்த வீரமல்லனுக்கும் ஒருநாள் ஆத்திரம் வந்தது. மதுரைச் சீமையில் வேறு வகையான தொல்லைகளுக்கு இலக்காகியிருந்த மங்கம்மாள் ஆட்சியின் துணையை அப்போது எதிர்பார்க்க விரும்பவில்லை அவன்.
வீரமல்லன் ஒருநாள் துணிந்து தனி ஆளாக நத்தம்பட்டி ஜமீன் மாளிகைக்குச் சென்றான்; ஜமீன்தாரைச் சந்திக்க வந்திருப்பதாகச் சொல்லி அனுப்பினான். "வீரமல்லன் தன்னைப் பார்க்க வந்திருக்கிறான்' என்பதைக் கேள்விப்பட்ட உடனே குடல் நடுங்கியது மருதுத் தேவருக்கு ."ஜமீன்தார் கையாலாகாத வெறும் பயல்களை எல்லாம் பார்க்கிற வழக்கம் இல்லை” என்று பயத்தை மறைத்துக் கொண்டு பதில் சொல்லி அனுப்பினார்.
இந்தப் பதில் வீரமல்லனிடம் கூறப்பட்டது.
"ஓஹோ பட்டப்பகலில் வாசல் வழியே அனுமதி கோரி வந்தால் உங்கள் ஜமீன்தார் சந்திக்கிற வழக்கம் கிடையாதா? சரி.வரவேண்டிய நேரத்தில், வரவேண்டிய வழியாக, அவர் விரும்பாவிட்டாலும் அவரை வந்து சந்திக்கிறேன் என்று சொல்.”
வாயிற்காவலனிடம் வீரமல்லன் ஆத்திரமாகக் கூறி விட்டுச் சென்ற இந்த வார்த்தைகளை அவனே புரிந்து கொள்ளவில்லை.ஏதோ ஆத்திரத்தில் உளறிவிட்டுப் போகிறான், இதைப் போய் ஜமீன்தாரிடம் சொல்லுவானேன்? - என்று பேசாமல் இருந்துவிட்டான். வீரமல்லனை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டோம் என்று இறுமாந்திருந்தார் ஜமீன்தார்.
***
அதேநாள் இரவு; ஒன்பது நாழிகை, ஒன்பதரை நாழிகை சுமாருக்கு, ஜமீன்தார் மருதுத் தேவர் நிம்மதியான உறக்கத்தை நாடி மாளிகையின் மேல் மாடியில் இருந்த சயன அறைக்குச் சென்றார்.
கட்டிலில் போய்ப் படுத்துப் போர்வையை இழுத்து விட்டுக் கொண்டிருந்தவர் யாரோ அறைக் கதவை மூடித் தாழிடுகின்ற ஒசை கேட்டுத் துள்ளி எழுந்தார். அவர் கண்கள் அவரை ஏமாற்றுகின்றனவா? இல்லையானால் வெறும் பிரமையா? கனவா?
கதவுத் தாழ்ப்பாளைப் போட்டுப் பூட்டிவிட்டு வீரமல்லன் அவர் எதிரே நின்று கொண்டிருந்தான். அவன் இதழ்களில் குறும்புத்தனமும் அலட்சிய பாவமும் நிறைந்த புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது. ஜமீன்தாருக்குக் கைகால்கள் வெடவெடத்தன. புலியைக் கண்ட பூனையானார் அவர்.
"ஜமீன்தார்வாள்! நான்தான் வீரமல்லன்! உங்களைச் சந்திப்பதற்கு இந்த நேரம்தான் எனக்கு வாய்த்தது. உங்களுடைய உறக்க நேரத்தில் குறுக்கிட்டதற்கு அடியேனை மன்னிப்பீர்களோ?” என்று வீரமல்லன் அலட்சியமாகச் சிரித்தான். கம்பீரமான தோற்றத்தோடு பின்னால் கையைக் கட்டிக் கொண்டு அவன் நின்ற விதமே ஜமீன்தாரை மலைத்துப் போகும்படிச் செய்தது.
“நீ வீரமுள்ள மறவனாக இருந்தால் மாற்றான் மாளிகையில் திருடனைப் போல் நுழைந்திருப்பதற்காக வெட்கப்பட வேண்டும்” என்று தைரியத்தைக் கஷ்டப்பட்டு வரவழைத்துக் கொண்டு கூறினார் ஜமீன்தார்.
“வீரனைப்போல் நுழைய முயன்றேன். 'ஜமீன்தார் வாள்' மறுத்துவிட்டார். என்னால் பொறுக்க முடியவில்லை. இனியும், கொள்ளை கொடுப்பதற்கும் விளைந்த பயிரைப் பறி கொடுப்பதற்கும் என்னுடைய இனாம் கிராமமும் நானும் தயாராத இல்லை. இரண்டிலொன்று தீர்த்துக் கட்டிக் கொண்டு போவதற்குத்தான் இப்போது இப்படித் திருடனைப் போல வந்திருக்கிறேன்.”
'உன்னுடைய இனாம் கிராமத்தில் திருடர்கள் பயிரை அறுத்துக் கொண்டு போவதற்கும், கொள்ளையடிப்பதற்கும் நானா பொறுப்பு? என்னைத் தேடி வர வேண்டிய காரணம்?”
“ஒகோ! அப்படியா! ஜமீன்தார் வீரமருதுத் தேவரே! நின்று நிதானித்துப் பேசும் வீரமல்லனை நீர் அவ்வளவு சுலபமாக ஏமாற்றிவிட முடியாது. கன்னிமாலையாற்றில் அணை போட்டுத் தண்ணிiரை அடைத்து வைத்திருப்பதும் கொள்ளைத்தொழிலுக்குக் கூலிப்படை தயார் செய்து என் கிராமத்தின் மேல் ஏவி விடுவதும் உம்முடைய திருவிளையாடல்தான் என்பதை நான் அறிவேன்.”
நீ மட்டும் பெரிய யோக்கியனோ? புதிதாகக் கிடைத்த இனாம் கிராமத்துக்குக் கண்மாய் வெட்டுகிறேன் பேர்வழியே என்று ஒரே பள்ளமாக வெட்டி ஏற்கனவே இருக்கும் என் கண்மாய்களுக்குத் தண்ணிர் வரவிடாமல் பாழ் செய்வது உன் திருவிளையாடல்தானே?”
"வீரமருதுத் தேவரே! நீர் கூறுகிற குற்றத்தை வேண்டுமென்றே நான் செய்யவில்லை என்பதை நீர் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஏதோ கண்மாய் வெட்டினேன். அது ஆற்று மட்டத்தைவிடப் பள்ளமாக அமைந்துவிட்டது. நீங்கள் ஒரு வார்த்தை கண்ணியமான முறையில் என்னிடம் கூறியிருந்தால் நானாகவே பள்ளத்தைத் தூர்ப்பதற்கு ஏற்பாடு செய்திருப்பேன். அதை விட்டுவிட்டு நீங்கள் என்னிடமே ஆழம் பார்க்கத் தொடங்கி விட்டீர்கள். நீரும் மறவர்; நான் மறவன்தான்.”
"இந்த பயமுறுத்தல் எல்லாம் என்னிடம் பலிக்காது தம்பீ! என் ஜமீனுக்கு முன்னால் உன்னுடைய கிராமம் கடுகுக்குச் சமம். நீ என்னிடம் வாலாட்டினால் உனக்குத்தான் ஆபத்து:”
வீரமல்லன் இதைக் கேட்டுக் கலகலவென்று வாய் விட்டுச் சிரித்தான்.
“உம்முடைய நத்தப்பட்டி ஜமீன் என்னுடைய இனாம் கிராமத்தைவிடப் பெரியதாக வேண்டுமானால் இருக்கலாம்; ஆனால் ஒன்று மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வீரமல்லனும் அவனுடைய இனாம் கிராமும் மனம் வைத்தால் உம்மை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிட முடியும். ஜாக்கிரதை! ஞாபகமிருக்கட்டும்!”
“யாரிடம் காட்டுகிறாய் இந்தப் பூச்சாண்டி? தேவதானம் ஜமீன் மேற்கேயும், சாப்டூர் ஜமீன் வடக்கேயும் எனக்கு உதவிசெய்ய எந்த நேரமும் தயாராக இருக்கின்றன. நீ மட்டும் எங்கள் மூன்று பேரையும் வென்று காட்டு; உன்னால் முடிந்தால். இந்த நத்தம்பட்டி ஜமீனையே உனக்கு ஜாரி செய்துவிட்டுச் சந்நியாசியாகி விடுகிறேன் நான்”"நீங்கள் வணங்கும் குலதெய்வத்தின்மேல் ஆணையாக,உங்களைப் பெற்ற தாயின் பத்தினித்தன்மைமேல் ஆணையாக நீங்கள் இதைச் செய்வீர்களா?”
“எங்கள் மூன்று பேரையும் நீ வென்றுவிட்டால் கண்டிப்பாக இதை நான் செய்கிறேன். நாங்கள் வென்றுவிட்டாலோ நீ உன்னுடைய இனாம் கிராமத்தை எனக்கு ஜாரி செய்துவிட்டுச் சந்நியாசியாகப் போக வேண்டும்! சம்மதந்தானா?”
“ஆகா! கண்டிப்பாக”
"வீரமல்லா யோசித்துப் பேசு, நாங்கள் மூன்று பெரிய ஜமீன்தார்கள். நீயோ ஒரு சிறு கிராமத்தின் இனாம்தார். எறும்பு, யானையோடு பந்தயம் போடலாமா?”
"வீண் பேச்சு எதற்கு மருதுத் தேவரே? நாளை மறுநாள் இராத்திரி ஏழரை நாழிகையிலிருந்து பத்தரை நாழிகை வரை உங்களுக்கு நேரம் தருகிறேன். அந்த மூன்று நாழிகை நேரத்தில் தெற்கேயிருந்து நீங்களும், வடக்கேயிருந்து சாப்டூர் ஜமீன்தாரும், மேற்கேயிருந்து தேவதானம் ஜமீன்தாரும், அவரவர் ஆட்களோடு என் இனாம் கிராமத்து எல்லைக்குள் நுழைய முயற்சி செய்ய வேண்டியது. முடிந்தால் உங்களுக்கு வெற்றி: முடியாவிட்டால் எனக்கு வெற்றி”
"அது சரிதான்! ஆனால் மூன்று நாழிகைக்குள்’ என்று நீ நிபந்தனை போடுவதன் சூக்ஷமம் என்ன?”
‘சூக்ஷமம் ஒன்றுமில்லை! நீங்கள் மூன்று பெரிய ஜமீன்தார்கள் மூன்று திசையிலிருந்து தாக்க முயலுகிறீர்கள். நான் ஒருத்தனாகச் சமாளிக்க வேண்டுமே! அதனால்தான் இந்த நிபந்தனை”
“சரி, அப்படியே வைத்துக்கொள்ளேன். மூன்று விநாடியில் உன் எல்லைக்குள் நுழைந்துவிட முடியுமே! மூன்று நாழிகைக்குள் முந்நூறு தடவை நுழையலாமே? எப்படி நிபந்தனை போட்டால் என்ன? தோற்றுச்சந்நியாசியாகப் போவதென்னவோ நீதான்.”
"முடிவு எப்படியோ? சந்நியாசியாக யார் போகிறோமோ அதை இப்பொழுதே பேசுவானேன்? நிபந்தனைகளைப் பரஸ்பரம் நாம் எழுத்து மூலம் எழுதிக் கொள்ள வேண்டும்.”
“அதற்கென்ன? என் பந்தயத்தையும் நிபந்தனையையும் நாளைக்கே நான் செப்புப் பட்டயத்தில் எழுதிக் கொடுக்கிறேன். நீ?...”
“நானும் நாளைக்கே செப்புப் பட்டயத்திலே எழுதிக் கொடுக்கிறேன்.”
“இது சத்தியம்தானா, வீரமல்லா?”
“நாளைக் காலையில் செப்புப் பட்டயத்தோடு வருகிறேன்.”
கூறிவிட்டு இருளில் கதவைத் திறந்துகொண்டு, தான் திருட்டுத்தனமாக எந்த வழியே வந்தானோ அதே வழியாக இறங்கிச் சென்றான் வீரமல்லன்.
***
ஜமீந்தார் வீரமல்லனுக்கு அளித்த பட்டயம்
இந்த ஜமீனுக்கு அருகிலுள்ள வீரமல்லனின் இனாம் கிராமத்தின் எல்லைக்குள் நாளை இரவு ஏழரை நாழிகையிலிருந்து பத்தரை நாழிகைக்குள் நானும் என்னுடைய சக ஜமீன்தார்களும் திசைக்கொருவராக நுழைந்துவிட்டால், வீரமல்லன் தன் கிராமத்தை எனக்கு ஜாரி செய்து விட்டுச் சந்நியாசியாகப் போக வேண்டியது. மேலே குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட மூன்று நாழிகை நேரத்திற்குள், நாங்கள் மூவரும் வீரமல்லனின் கிராம எல்லைக்குள் நுழையாமற்போனால், நான் என்னுடைய நத்தம்பட்டி ஜமீனை வீரமல்லனுக்குக் கொடுத்துவிட்டுச் சந்நியாசியாகப் போவேனாகுக.
இப்படிக்கு,
வீரமருத்துதேவர்,
நத்தம்பட்டி ஜமீன்தார்
ஜமீந்தாருக்கு வீரமல்லன் அளித்த பட்டயம்
என்னுடைய இனாம் கிராமத்துக்கு அருகிலுள்ள நத்தம்பட்டி ஜமீந்தாரும் அவருக்கு வேண்டிய சக ஜமீன்தார்களும் நாளை இரவு ஏழரை நாழிகையிலிருந்து பத்தரை நாழிகைக்குள் எனது கிராம எல்லைக்குள் நுழைந்து விட்டால், என் கிராமத்தை நத்தம்பட்டி ஜமீன்தார் வீரமுத்துத் தேவருக்கு ஜாரி செய்துவிட்டு நான் சந்நியாசியாகப் போவேனாகுக. ஜமீன்தார்கள் என் கிராம எல்லைக்குள் குறிப்பிட்ட மூன்று நாழிகைக்குள் நுழையாவிட்டால், நத்தம்பட்டி ஜமீனை எனக்கு ஜாரி செய்துவிட்டு வீரமருதுத் தேவர் சந்நியாசியாகப் போக வேண்டும்.
இப்படிக்கு,
வீரமல்லன்
பட்டயம் தன் கைக்கு வந்த உடனேயே தேவதானம், சாப்டூர், ஆகிய இரு ஜமீன்தார்களுக்கும் தன் பக்கம் உதவினால் வீரமல்லனுடைய இனாம் கிராமத்தைக் கைப்பற்றிப் பங்கு தருவதாகச் செய்தி அனுப்பினார் நத்தம்பட்டி ஜமீன்தார் வீரமருதுத்தேவர். ஜமீன்தார்கள் இருவருமே உதவச் சம்மதித்தனர்.
‘எப்படியும் வீரமல்லன் இனாம் கிராமத்தைப் பறி கொடுத்துவிட்டுத் தோற்றுச் சந்நியாசியாகப் போவதைத் தவிர வேறு வழியில்லை' என்றெண்ணி இறுமாந்து கிடந்தார் ஜமீன்தார் வீரமருதுத் தேவர். ‘மூன்று பேரில் யாராவது ஒருவர் எல்லைக்குள் நுழைந்தாலும் வெற்றி நமக்குத்தானே?’ என்பதே அவருடைய இறுமாப்புக்குக் காரணமாக இருந்தது. ஆனால் வீரமல்லன் தம்மைவிடச் சாமர்த்தியமாக நினைத்துச் சாமர்த்தியமாகச் செயலாற்றத் தெரிந்தவன் என்பதை அவர் மறந்துவிட்டார்.
அப்போது மழைக்காலமாகையினால் வீரமல்லனின் கண்மாய் நிறைந்திருந்தது.
முழுமையாக இல்லாவிட்டாலும், மேற்கே அடுக்கடுக்காக இருந்த நத்தம்பட்டி ஜமீன் கண்மாய்களும் முக்கால் பகுதி நிறைந்திருந்தன. கன்னிமாலை ஆற்றிலும் சுமாராகத் தண்ணீர் ஒடிக் கொண்டிருந்தது. கன்னிமாலையாற்றைக் கடந்து வீரமல்லனின் இனாம் கிராமத்தை அடைய ஒரு பாலம் இருந்தது. ஆற்றில் பிரவாகம் அதிகமாகிவிட்டால் மேற்கேயிருந்தும் தெற்கேயிருந்தும் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுவிடும். வீரமல்லனின் கண்மாய்க்கு வடிகால் வடபக்கம் இருந்தது. வடிகாலை உடைத்து விட்டுவிட்டால் வடக்கேயும் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுவிடும். மூன்று திசையையும் விட்டால் கிழக்கே கூடி ஒசூர் ஒரு வழியாகத்தான் வர முடியும்.
என்ன நோக்கத்தோடு செய்தானோ தெரியவில்லை? கிழக்கே கிராமத்து எல்லையை வளைத்து இரண்டடி உயரத்திற்குக் காய்ந்த விறகுகள், சுள்ளிகள், இலை தழைகள், வைக்கோல் இவைகளைக் குவித்து வைத்திருந்தான் வீரமல்லன். அது ஒரு குட்டிச் சுவர்போலக் கிழக்கே கிராமத்தைச் சுற்றி அமைந்திருந்தது.
பந்தய நாளில் போட்டிக்குரிய இரவு நேரம் வந்தது. வீரமல்லனின் ஏற்பாடுகள் எல்லாம் கமுக்கமாகவும் இரகசியமாகவும் தந்திரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. அங்கங்கே காரியங்கள் நடக்க வேண்டிய இடங்களிலெல்லாம் அவனுடைய ஆட்கள் மறைந்து பதுங்கியிருந்தனர். இரவு ஏழு நாழிகையாயிற்று.
தெற்கே ஆற்றின் அக்கரையில் வீரமருதுத் தேவர் ஜமீன் ஆட்களை ஆயுதபாணிகளாக வைத்துக் கொண்டு காத்திருந்தார். மேற்கே, தேவதானம் ஜமீன்தாரும், வடக்கே சாப்டூர் ஜமீன்தாரும் சரியாக அதே நேரத்திற்குத் தயாராக இருந்தார்கள். வீரமல்லனின் இனாம் கிராமத்தின் எல்லைக்குள் பாய மூன்று திசைகளிலும் ஜமீன் புலிகள் தயாராக நின்று கொண்டிருந்தன! ஏழரை நாழிகை ஆகவேண்டியதுதான்! அதற்காகவே அவர்கள் காத்திருந்தனர்.
சரியாக ஏழேகால் நாழிகை ஆயிற்று. மூன்று திசைகளிலும் யாரும் எதிர்பாராத திடீர் மாறுதல் நிகழ்ந்தன. ஜமீன் புலிகளைத் திடுக்கிடச் செய்த மாறுதல்கள் அவை.
தெற்கே நந்தம்பட்டியையும் வீரமல்லனின் கிராமத்தையும் இணைத்த பாலம் நடுவே உடைக்கப்பட்டது. அதே சமயம் மேற்கே ஜமீனுக்குச் சொந்தமான மூன்று கண்மாய்களையும் யாரோ உடைத்துவிட்டார்கள். ஆற்றில் ஆள் இறங்க முடியாதபடி பிரவாகம் சுழித்தோடத் தலைப்பட்டது. வடக்கே வீரமல்லனின் கண்மாய் வடிகால் உடைத்துக் கொண்டு வெள்ளக்காடாயிற்று மூன்று திசையிலும் நின்ற மூன்று ஜமீன்தார்களும் அண்டமுடியாதபடி, கிராமத்தைத் தீவாக ஆக்கிவிட்டுச் சுற்றி ஒரே பிரவாகமாகப் பெருகி ஓடியது உடைப்பு வெள்ளம்.மேற்கே நின்றதேவதானம் ஜமீன் ஆட்கள் ஒரு வகையிலும் மீள வழியின்றி வெள்ளக்காட்டின் இடையே திகைத்து நின்றனர்.
வடக்கே இருந்த சாப்டூர் ஜமீன் ஆட்களும், தெற்கே இருந்த நத்தம்பட்டி ஜமீன் ஆட்களும் கிழக்குத் திசையில் கிராம எல்லைக்குள் நுழைவதற்காக ஓடினார்கள்
என்ன ஆச்சரியம்! கிழக்கே கிராம எல்லையைச் சுற்றி வளைத்துக் கொண்டு, நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. உள்ளே நுழைய இம்மியளவும் இடம் கிடையாது.
மூன்று திசையிலும் வெள்ளப் பிரவாகம் மறுநாள் காலை வரை ஒயவே இல்லை. நெருப்பு, முதல் நாள் இரவு பன்னிரண்டு நாழிகைக்குத்தான் அணைந்தது.தலைகீழாக நின்று பார்த்தும் ஜமீன்தார்களால் குறித்த மூன்று நாழிகைக்குள் வீரமல்லனின் கிராம எல்லையில் நுழைய முடியவில்லை.
உதவிக்கு வந்த ஜமீன்தார்கள் வருத்தத்தோடு திரும்பிப் போனார்கள். வீரமருதுத் தேவர் சந்நியாசியாகிப் போனார்.
செப்புப் பட்டய நிபந்தனைப்படி நத்தம்பட்டி, ஜமீன் வீரமல்லனுக்குச் சொந்தமாய்விட்டது. வீரமல்லன் அன்று சாமர்த்தியத்தால் தனியாக இருந்து மூன்று ஜமீன்தார்களை வென்று வாகை சூடியதால், அவன் பரம்பரையினர் வாழும் இந்தக் கிராமமும் பிற்காலத்தில் 'மூவரை வென்றான்' என்றே வழங்கப்படலாயிற்று. இன்று கூட, இவ்வூரின் மேற்கு எல்லையில் வீரமல்லனுக்கு ஒரு கோவில் இருக்கிறது. இவ்வூராருக்கு அவன்தான் குலதெய்வம். அவன் கோவிலில் அந்தப் பழைய செப்புப் பட்டயங்களும் வைக்கப்பட்டுள்ளன.
இதுதான் ஐயா இந்த ஊருக்குப் பேர் வந்த கதை!
வெற்றிலை பாக்குக் கடைக் கிழவர் கதையை முடித்தார். பஸ்ஸுக்கு நேரமாகிவிட்டது. இன்னும் ஒன்றரை மைல் நடந்தாக வேண்டுமே? நான் அவரிடம் பாக்கிச் சில்லறையைக்கூட வாங்கிக் கொள்ளாமல் விடைபெற்றுக் கொண்டு நடந்தேன். கற்பனையோ, நிஜமோ, அல்லது பொய்யோ, எனக்குப்பிடித்தமான அந்த ஊரின் பெயருக்கு அந்தக் கிழவர் காரணம் சொல்லிவிட்டார். அவ்வளவு போதும் எனக்கு!