நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/ஆத்மாவின் குரல்
29. ஆத்மாவின் குரல்
அந்தச் சிறிய கிராமத்தின் குறுகலான தெருவில் அத்தனை பிளஷர் கார்கள் நிற்பதற்கு இடம் போதவில்லை. சிறிதும், பெரிதுமாக, பழைய மாதிரியும், புதிய மாதிரியுமாக எத்தனை நிறங்களில் எத்தனை விதங்களில் அவை தெருவை அடைத்துக் கொண்டு நிற்கின்றன?
“எவ்வளவு பெரிய வித்துவான் அவர்? சிஷ்யர்களெல்லாம் தேடிக் கொண்டு வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது! இன்றைக்கு அறுபதாண்டு நிறைவு நாளில்லையா? அதனால் குருவைத் தரிசித்து விட்டு, அவரவர்கள் தங்களாலானதைச் செய்து விட்டுப் போகலாமென்று வந்திருப்பார்கள்.”
“யார்? அருள் நந்திக்குத்தானே? மனிதர் முரட்டுச் சுபாவமுள்ளவராயிற்றே? இதெல்லாம் அவருக்குப் பிடிக்காதே? பம்பாய், டில்லி, மதராஸ், பாலக்காடு, எங்கெங்கேயிருந்தெல்லாமோ சிஷ்யர்கள் பொன்னும் பணமுமாகக் குவிப்பதற்கு ஓடி வந்திருக்கிறார்கள். மனமிருந்தால் வீட்டுக்குள் விடுவார்; இல்லாவிட்டால், ‘இதையெல்லாம் கொண்டு போய்க் குப்பையில் கொட்டுங்கள்’ என்று கோபமாகக் கத்தித் துரத்தி விடுவாரே! இவ்வளவு பிடிவாதக்காரரை நான் எங்கேயுமே பார்த்ததில்லை. ஞானம் இருந்தால் மனிதனுக்கு இவ்வளவு கர்வமும் இருக்க வேண்டுமா?”
“அந்தக் கர்வம்தானே மனிதரை இத்தனை வருடங்களாகச் சோற்றுக்குத் திண்டாட வைத்திருக்கிறது? இவருக்கு இருக்கிற ஞானத்துக்குக் கூப்பிட்ட கச்சேரிகளுக்கு ஒழுங்காகப் போயிருந்தால் இதற்குள் லட்சம் இலட்சமாகக் குவித்திருக்கலாமே? சிஷ்யர்களுக்குத்தான் குறைவா என்ன? ஒவ்வொருவரும் மாதத்திற்கு ஆயிரம் இரண்டாயிரம் என்று சம்பாதிக்கிறார்கள். சினிமாவிலும், ரேடியோவிலுமாக, ஒவ்வொருத்தரும் பெரிய இடங்களில் அண்டியிருக்கிறார்கள்.”
“சிஷ்யர்கள் யாராவது செலவுக்கு வைத்துக் கொள்ளச் சொல்லி இருநூறு, முந்நூறு மணியார்டர் செய்தால், மணியார்டரை வாங்கிக் கொள்ள மாட்டேனென்று மறுத்துத் திருப்பி அனுப்பி விடுவாராமே?”
“அதையேன் கேட்கிறீர்கள்? போன வருஷம் இவரிடம் படித்த சிஷ்யன் ஒருத்தன் ஐயாயிரம் ரூபாய்க்கு ஒரு செக் எழுதி அனுப்பியிருந்தான். சினிமாவில் பின்னணி பாடி ஏராளமான புகழும், பணமும் சம்பாதிக்கிறான் அவன். இந்த மனிதர் என்ன செய்தார் தெரியுமா? அந்தச் செக்கை நாலு துண்டாகக் கிழித்து, இன்னொரு கவருக்குள் வைத்து, அவனுக்கே திருப்பியனுப்பி விட்டார். எவ்வளவு திமிர் இருக்க வேண்டும் இவருக்கு?”“ஊம்! ஏதாவதொரு கலையில் அபாரமான ஞானமிருந்து விட்டால், அவர்களெல்லாம் இப்படித்தான் விநோதமாகப் பைத்தியம் போல் நடந்து கொள்கிறார்கள்.”
‘'பைத்தியமென்றாலும் இந்த அருள் நந்தியைப்போலப் பைத்தியம் நான் பார்த்ததே இல்லை. இருபத்தைந்து வயதிலிருந்து இன்றைக்குத் தேதி வரை இந்த முப்பத்தைந்து வருடங்களில் ஐம்பது பேர்களாவது இந்த பஸ், இரயில் போக்குவரவில்லாத குக்கிராமத்தைத் தேடி வந்து இவரிடம் படித்துவிட்டுப் போயிருப்பார்கள். இவரிடம் ஆறு மாதம், மூன்று மாதம், வேட்டி துவைத்துப் போட்டுக் கொண்டிருந்தவன்கூட அரைகுறை சாரீரத்தை வைத்துக் கொண்டு, பத்து விரலிலும் வைர மோதிரம் மின்ன, பட்டு அங்கவஸ்திரத்தைப் போட்டுக் கொண்டு திரிகிறான். இவர் அந்தப் பழைய நீர்க்காவி வேஷ்டியும், காஞ்சீபுரம் பட்டைக் கரைத் துண்டுமாக ஒருவேளை சாப்பிட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.”
“விட்டுத் தள்ளு பேச்சை! உலகம் தெரியாத மனிதரைப் பற்றிப் பேசி என்ன பிரயோசனம்?" இவ்வளவும் அந்தக் கிராமத்தில் தெருவோடு போய்க் கொண்டிருந்த யாரோ இரண்டு பேருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல். தெருவோடு போய்க் கொண்டிருந்தவர்கள், கார்களையும், அருள்நந்தியின் வீட்டு வாசலில் கூட்டத்தையும் பார்த்துவிட்டுத் தங்களுக்குள் தற்செயலாக இப்படிப் பேசிக் கொண்டு போனார்கள்.
அருள்நந்தி பூஜையறைக்குள் தியானத்தில் அமர்ந்திருந்தார். தியாகராஜ சுவாமிகளின் பெரிய படம் பூமாலையால் அலங்கரிக்கப் பெற்றுச் சுவரில் காட்சியளிக்கிறது. தீட்சிதர் படமும் சியாமா சாஸ்திரி படமும் இன்னொரு புறம் காட்சியளிக்கிறது. நடராஜர் படம், கலைமகள் படம், இன்னும் எண்ணற்ற சங்கீத உலக மேதைகளின் படங்கள் அறை முழுவதும் காட்சியளிக்கின்றன.
தூபக்காலில் இருந்து சாம்பிராணிப் புகை சுருள் சுருளாக எழுந்து பரவிக் கொண்டிருக்கிறது. உடை கழித்த கன்னிப்பெண்ணின் உடல்போல், புனிதமான வீணை உறை கழித்து, அவருக்கு முன் வைக்கப்பட்டிருந்தது. இன்னொரு புறம் பழமையான சங்கீத ஏட்டுச் சுவடிகள். அந்த அறையின் காட்சிகளை சூழ்நிலையைப் பார்க்கும்போதே மனத்தில் ஒரு பயபக்தி தானாகவே ஏற்பட்டது.அந்த அறை அப்படி ஏற்படுத்தியது என்று சொன்னாலும் பிழையில்லை. எல்லாவற்றிற்கும் மேலாகத் தியாராஜ சுவாமிகளின் படத்திற்கு மேல் காவிநிற எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தன அந்த வாக்கியங்கள்! எப்படிப்பட்ட கல் நெஞ்சனுக்கும் அவற்றைப் படித்தவுடன் உடல் புல்லரிக்கும். நெஞ்சு சிலிர்க்கும்! ஆகா! சாதாரண வாக்கியங்களா அவை? அட்சர லட்சம் பெறும் பொன்மொழிகளல்லவா? முப்பத்தைந்து தை மாதப் பிறப்புக்கள் அந்த வாக்கியங்கள் அவருடைய பூஜையறையில் எழுதப்பட்டபின் வந்து போயிருக்கின்றன. ஒவ்வொரு தை மாதப் பிறப்பின்போதும் அறைக்குப் புதிதாக வெள்ளையடிப்பதுண்டு. அப்போதெல்லாம் அந்த வாக்கியங்களை அதே இடத்தில் அதே தியாகராஜர் படத்திற்குமேல் மீண்டும் எழுதச் செய்வது அவருடைய வழக்கம்! அந்த எழுத்துக்கள் சிறிது மங்கினால்கூட அவருக்குப் பொறுக்காது. அப்படி என்ன விந்தை அந்த வாக்கியங்களில் அடங்கியிருக்கிறது? பார்க்கலாமே!
'சங்கீதம் ஆத்மாவின் குரல் ஆத்மாவைக் காட்டிலும் உயர்ந்ததை ஆத்மாவினால் எட்டிப் பிடிக்க முடியாததை உரக்கக் கூவி அழைப்பதற்கு அதைப் பயன்படுத்த வேண்டும். காசுக்காக அல்ல!’
எங்கெங்கிருந்தெல்லாமே வந்திருந்த சிஷ்யர்கள், பயபக்தியோடு மேல் வேஷ்டியை அரையில் கட்டிக் கொண்டு பூஜை அறை வாசலில் நின்றார்கள். சிஷ்யைகளான பெண்மணிகளும் இரண்டொருவர் வந்திருந்தனர்.அவர்களும் அடக்க ஒடுக்கமாக நின்று கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் குருநாதரின் அறுபதாண்டு நிறைவு விழாவில் அவருக்குக் கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கில் செலவழித்து ஒவ்வொரு பொருளை வாங்கிக்கொண்டு வந்திருந்தார்கள். பணமாகக் கொடுத்தால், அவர் வாங்கமாட்டாரென்று அவர்களுக்குத் தெரியும்.அதனால்தான் பொருள்களாக மாற்றிக் கொண்டு வந்திருந்தனர்.
அவர்களில் ஒருவர் பத்தாயிரம் ரூபாய்க்குப் பவுன்களாக வாங்கி, அந்தத் தங்கம் முழுவதையும் சிறு சிறு காசுகளாக அடித்து ஒரு சிறு பட்டுப்பை நிறைய அடைத்துக் கட்டிக் கொண்டு வந்திருந்தார்; குருவை உட்காரச் சொல்லி, அப்படியே கனகாபிஷேகம் செய்ய வேண்டுமென்பது அவருடைய ஆசை. இன்னொருவர் கல் மூவாயிர ரூபாய் பெறுமானமுள்ள இரண்டு புஷ்பராகக் கற்கள் வாங்கிக் குருவினுடைய காதுகளில் அணிவிப்பதற்காக இரண்டு வைரக் கடுக்கண்கள் செய்து கொண்டு வந்திருந்தார். வேறொருவர் தந்தத்தில் வெற்றிலைப் பெட்டியும், தங்கத்தில் சிறிய சுண்ணாம்புச் சிமிழும் வெள்ளியில் பாக்குவெட்டியும் செய்து கொண்டு வந்திருந்தார். ஒரு பெண் - சமீபத்தில் அவரிடம் வந்து முறையாகப் படித்து வெளியேறிய சிஷ்யை இரண்டாயிரம் ரூபாய்க்கு வெள்ளிப் பாத்திரங்களாக வாங்கிக் கொண்டு வந்திருந்தாள். இன்னொரு சிஷ்யை புது மாதிரி ஒரு வீணைசெய்து, அதன் குடத்தில் (பத்தரில்) அறுபது நல்முத்துக்களை, அவருக்கு அறுபது வயது ஆனதற்கு அடையாளமாகப் பதித்துக் கொண்டு வந்திருந்தாள். டில்லி ரேடியோவில் வேலை பார்க்கும் சிஷ்யர் தங்கத்தில் சிறிய தாஜ்மஹால் உருவமும் ஆயிர ரூபாய்க்கு மேல் விலையுள்ள ஒரு காஷ்மீர் சால்வையும் வாங்கி வந்திருந்தார்.
இன்னும் எத்தனை எத்தனையோ? கூடை கூடையாகப் பழங்கள்! கூடை கூடையாகக் காய்கறிகள்! கூடைகூடையாகச் சந்தனம்-மல்லிகை-ரோஜாமாலைகள்!
எல்லோரும் எல்லாவற்றோடும் காத்துக் கொண்டிருந்தனர். ஆவல் அலை மோதும் உள்ளங்களில் குரு பத்தியின் சுமையோடு நின்றனர். அவர்கள் வந்ததே அவருக்குத் தெரியாது. வரப்போவதும் முன்கூட்டித் தெரியாது. அவருடைய முரண்டும், பிடிவாதமும்தான் எல்லோருக்கும் தெரியுமே! அதனால் அவர் எதிர்பாராமலிருக்கும் போது திடீரென்று போய்த் தங்கள் அன்பைச் செலுத்திவிட வேண்டுமென்று ஒடோடி வந்திருந்தனர் அவர்கள். அவர் இன்னும் தியானம் கலைந்து கண்களைத் திறக்கவில்லை.மூடிய கண்கள் மூடினபடியே இருந்தன.கை, வீணையைத் தேடி எடுத்து, விரல்களால் வருடியது.
அடுத்த கணம் அந்த அறையிலிருந்து கல்லை, மரத்தை, மண்ணை, ஏன் காசினியை முழுதும் அடிமை கொள்ளும் நாதவெள்ளம் பெருகிப் பாய்ந்தது.
‘ராம நன்னு ப்ரோவரா!' நின்று கொண்டிருந்தவர்கள் மூச்சு விடுகிற ஒசைகூடத் கேட்காமல் நாதப் பிரம்மத்தின் சுருதி வெள்ளத்தில் யான், எனதென்ற உணர்வற்றுக் கட்டுண்டு கிடந்தனர். பேச்சொடுங்கி மூச்சொடுங்கிப் புலன்களொடுங்கி நின்றனர் அவர்கள்.
நேரம் ஆகிக் கொண்டே இருந்தது. நாதத்தின் வெள்ளம் அலை அலையாக உயர்ந்து, அந்த அறையிலிருந்து பாய்ந்து கொண்டே இருந்தது.
பாட்டா அது? அறுபது வயது வாழ்ந்து மூப்படைந்த தொண்டையில் பிறக்கிற சாரீரமாகவா இருந்தது? ஒர் ஆத்மா தன் நாதத்தால் பல்லாயிரம் பேராத்மாக்களைக் கூவிக் கூவி அழைக்கிறதோ? அமுதம் மடை உடைந்து பாய்கிறதோ?
இரண்டு மணி நேரமாயிற்று அந்த ஒரு கீர்த்தனை முடிய. அருள்நந்தி மெல்லக் கண்களைத் திறந்தார். அவர் பார்வை தியாகராஜ சுவாமிகளின் படத்தில் நிலைத்து, அதற்குமேல் எழுதியிருந்த எழுத்துக்களில் பதிந்து, பின் வாயிற் பக்கமாகத் திரும்பியது.
"அடேடே! நீங்களெல்லாம் எப்போது வந்தீர்கள்?”
"அண்ணா பாடத் தொடங்குவதற்குச் சிறிது நேரத்துக்கு முன்னாலேயே வந்துவிட்டோம்!” சிஷ்யர்களில் ஒருவர் அவருக்குப் பதில் சொன்னார்.
“என்ன காரியமோ?”
‘அண்ணாவுக்கு இன்றைக்கு அறுபதாண்டு நிறைகிறது இல்லையா? சிஷ்யர்கள் எல்லாம் வந்து தரிசித்து, ஆசீர்வாதமும் அனுக்கிரகமும் பெற்றுக் கொண்டு போகலாமென்று வந்தோம்”
“ஏண்டா இந்த அறுபது வயது எனக்கா என் சாரீரத்துக்கா?” அருள்நந்தி வேடிக்கையாகச் சிரித்துக் கொண்டே, அவர்களைப் பார்த்துக் கேட்டார்.
"அபசாரம்! அபசாரம் அண்ணாவின் சாரீரத்துக்கு வயது ஏது? இதோ இந்த ஒரு கீர்த்தனையை இவ்வளவு நேரம் கேட்பதற்கு ஜன்ம ஜன்மாந்திரங்களில் நாங்கள் எவ்வளவோ புண்ணியம் செய்திருக்க வேண்டும்!” ஒருவர் விநயமாகப் பவ்வியத்தோடு அடக்க ஒடுக்கமாகப் பதில் சொன்னார்.
அருள்நந்தி அதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டார்.
“எல்லாரும் செளக்கியமாக இருக்கிறீர்களோ இல்லையோ?” மொத்தமாக விசாரித்தார்.
‘'அண்ணாவின் கிருபையால் ஒரு குறைவுமில்லை. எல்லாம் இவ்விடத்து ஆசீர்வாதப் பலன்தான்.”ஓவ்வொருவராக அவருடைய பாதத்தைத் தொட்டு வணங்கினார்கள். பூஜை செய்த அட்சதையை எடுத்து, ஒவ்வொருவர் தலையிலும் தெளித்து, ஆசீர்வதித்தார்.
“புகழும் பொருளும் பெருகி நன்றாக வாழுங்கள்!”
அருள்நந்தி எல்லோரையும் வாழ்த்தினார்.கற்பூர தீபாராதனை காட்டிப் பூஜையை முடித்தார்.
சிஷ்யர்கள் இந்த நல்ல சமயத்தை நழுவவிடக்கூடாதென்று ஒவ்வொருவராக அவரவர்கள் கொண்டு வந்திருந்த காணிக்கைப் பொருள்களைப் பிரித்து வெளியே எடுத்தனர்.
பட்டுப் பை நிறையப் பொற்காசுகளைக் கொண்டு வந்திருந்த சிஷ்யர் பையை அவிழ்த்துக்கொண்டு, அருள்நந்திக்கு அருகே சென்றார்.
அருள்நந்தி அப்போது தியாகராஜ சுவாமிகள் படத்தில் நழுவி விழுந்து மறைத்த பூமாலையைச் சரி செய்துவிட்டு ஆசனப் பலகையிலிருந்து எழுந்திருக்க இருந்தார்.
“அண்ணா! அப்படியே கொஞ்சம் உட்கார வேண்டும்.”
“என்னடா அது?”
“ஒன்றுமில்லை! ஏதோ என் சக்திக்கு இயன்றது. அண்ணாவுக்குக் கனகாபிஷேகம் செய்துவிட வேண்டுமென்று எனக்கு ஆசை! அதுதான்...”
குத்து விளக்கொளியில் பட்டுப் பை நிறையச் சல்லி சல்லியாகப் பொற்காசுகள் ஜொலித்தன. அருள்நந்தியின் முகம் ‘ஜிவ்'வென்று சிவந்தது. கண்களில் நெருப்புப்பொறி பறக்க, புருவங்கள் வளைந்து நிமிர, உதடுகள் துடிக்க, அவேசம் வந்தவர் போல ஆசனத்திலிருந்து துள்ளிக் குதித்து எழுந்திருந்தார் அவர்.
“அடே! பாவீ! இதென்ன காரியம் செய்கிறாய்? என் சங்கதத்திற்கு விலையா? இந்த உலகம் முழுவதும் கொடுத்தாலும் ஈடில்லாத கலையடா அது! போ... போய் விடுங்கள். வெளியேபோகிறீர்களா? அடித்துத் துரத்தட்டுமா? நீங்கள் கொண்டு வந்தவற்றில் ஒரு துரும்புகூட இங்கே வைத்துவிட்டுப் போகக்கூடாது. தெருவில் தூக்கி எறிந்துவிடுவேன்!” இடி இடிப்பது போன்ற குரவில் இரண்டு கைகளையும் மறித்து ஆட்டிக் கொண்டே, கூப்பாடு போட்டார். அப்போது அவரைப் பார்ப்பதற்கே பயமாக இருந்தது. கால சம்ஹார மூர்த்திபோல் நெற்றிக்கண் திறந்து, கனல் வீசி நிருத்தமிடும் கூத்தன்போல் குதித்தார் அவர்.
பட்டுப் பையில் தங்கக் காசுகளோடு கனகாபிஷேகம் செய்ய வந்த சிஷ்யர் பயந்து பின் வாங்கினார். மற்றவர்கள் திகைத்துத் தயங்கி நின்றார்கள்.
“அற்பப் பயல்களா! அதோ, தியாகராஜ சுவாமிகளின் படத்திற்குமேல் என்ன எழுதியிருக்கிறது பாருங்களடா!” அருள்நந்தி வெறி கொண்டவர்போல கத்தினார்.
“போகிறீர்களா இல்லையா? ஒரு நிமிஷம் தாமதித்தீர்களானால் கொலை விழுந்துவிடும் இங்கே?” கத்திக் கூச்சலிட்டுக் கொண்டே,பூஜையறைக்கு வெளியே கூடத்திலிருந்த விறகு அடுக்கின்மேல் கிடந்த கோடாரியைக் கையில் தூக்கி விட்டார் அவர்,
ஒவ்வொருவராகத் தெரு வாசலை நோக்கி நகர்ந்தனர். அடுத்த ஐந்தாவது நிமிஷத்தில் அந்தக் குறுகலான தெருவில் ஒரு பிளஷர் கார் கூடத் தென்படவில்லை. கார்கள் புறப்பட்டபோது கிளம்பிய தெருப்புழுதிதான் மேலெழுந்து வட்டமிட்டுச் சுழன்று கொண்டிருந்தது.
இரண்டொருவர் மறந்து போய் வைத்துவிட்டுப் போய்விட்ட பழக்கூடைகள் வீட்டு வாசல் வழியே நடுத்தெருவில் வந்து விழுந்தன.
பத்து நிமிஷத்தில் அந்த வீட்டில் கலகலப்பு ஒய்ந்து, சூனிய அமைதி நிலவியது.
சாந்தமடைந்து மறுபடியும் பூஜையறைக்குள் போய் உட்கார்ந்தார் அருள்நந்தி, வீணையை மடியிலெடுத்து வைத்துக் கொண்டார், ஒரு செல்லக் குழந்தையை எடுத்து வைத்துக் கொள்வதுபோல.
அந்தச் சமயத்தில் சமையலறையிலிருந்து அவருடைய தர்மபத்தினி தலையை நீட்டினாள். கவலை தோய்ந்த அந்தப் பதிவிரதையின் முகத்திலிருந்து துயரம் பதிந்த விழிகளின் பார்வை அவரையும் அவர் கையிலிருந்த வீணையையும் மாறி மாறிப் பார்த்தது. அவரும் அவளைப் பார்த்துவிட்டார்.
“என்ன? உனக்கு என்ன வேண்டும்?”
“அடுப்பில் உலை கொதிக்கிறது:”
"கொதித்தால் கொதிக்கட்டுமே”
“போடுவதற்கு ஒரு மணி அரிசிகூட வீட்டில் இல்லை”
கேட்டுவிட்டு அவர் கலகலவென்று வாய்விட்டுச் சிரித்தார்.
“சபாஷ்! இப்போதுதான் உண்மைக் கலைஞனுடைய வீடு இது! வா நீயும் இப்படி வந்து எனக்கெதிரே உட்கார் இருவருடைய பசிக்கும்போதுமான அமுதம் என்னிடம் இருக்கிறது.”
அந்த அம்மாள் தயங்கினாள்.
“வந்து உட்காரப் போகிறாயா இல்லையா?” இரைந்து ஒர் அதட்டுப் போட்டார் அருள்நந்தி. அவர் மனைவி பயந்துபோய் அவரெதிரே உட்கார்ந்தாள். “இதோ கேள்! பசிக்கு அமுதம்”
“நாத தனு மனுஸம்.... வீணையின் இனிய ஒலியோடு அவருடைய கண்டத்தின் அமுத ஒலியும் இணைந்து தொடங்கியது.இனி அந்த ஒலிக்கு முடிவு ஏது? ஆத்மாவின் குரல் அல்லவா அது?