உள்ளடக்கத்துக்குச் செல்

நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/வழுக்கு மரம்

விக்கிமூலம் இலிருந்து

28. வழுக்கு மரம்

ந்தப் பெண் சிரித்தாள்!

வெற்றிலை போட்டுக் கொண்ட வெளிர்ச் சிவப்புப் படிந்த அழகான, அளவான பல் வரிசையில் அவளுடைய நெஞ்சின் களிப்பெல்லாம் ஒரு கணம் நிழலாடிமறைந்தன.

அவளுக்கும், எனக்கும் இடையே நாலரை அடி அகலமும் இரண்டு மூன்று அடி நீளமுமுள்ள ஒரு மேஜை கிடக்கிறது. மேஜைக்கு அப்பால் எதிரே மற்றொரு நாற்காலியில் அவள் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்.

வெளியே காம்பவுண்டுச் சுவருக்கு அருகில் புழுதி நிறைந்து மேடும், பள்ளமுமாக தூய்மையற்று விளங்கும் கிராமத்துச் சாலையில் அவள் வந்து இறங்கிய அழகான கார் நிற்கிறது. பலாப் பழத்தை மொய்த்துக் கொள்ளும் ஈக்களைப் போல் காரை அதிகம் பார்த்திராத கிராமத்துச் சிறுவர்கள் அருகில் வர அஞ்சி, எட்டி நின்றே வேடிக்கைப் பார்க்கிறார்கள்.

அது ஒரு கிராமத்துப் பள்ளிக்கூடம்! சிறுவர் சிறுமிகளின் குரல்கள், ஆசிரியர்களின் அதட்டல், பிரம்படி ஓசை இவ்வளவும் நிறைந்த சூழ்நிலையின் நடுவே நாங்கள் எதிரும் புதிருமாக உட்கார்ந்து கொண்டிருந்தோம்.

அவள் அமைதியைக் கலைத்துப் பேசினாள்.

“இரயில் பாதைக்கு முப்பது மைலுக்கு இப்பாலும், கார்கள் செல்லும் சாலைக்கு எட்டு மைல் அப்பாலும் உள்ள இந்தப் பட்டிக்காட்டுக் குக்கிராமத்தில் இருந்து கொண்டு உங்களால் எப்படிப் பத்திரிகைகளுக்கு எழுத முடிகிறது?”

“அப்படி இருப்பதனால்தான் நிறைய எழுத முடிகிறது” என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னேன்.

நாங்கள் அமர்ந்திருந்த அறையைச் சுற்றிலும் கசுமுசுவென்று பேச்சுக் குரல்கள் கேட்டன. பக்கத்தில் ஆசிரியர்கள் ஒய்வு நேரத்தில் தங்கும் அறை. அதற்கும் நாங்கள் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்துக்கும் நடுவே இடையிடையே கிழிந்த ஒரு மூங்கில் தட்டியை மறைப்பாக வைத்திருந்தார்கள்.தட்டியின் இடுக்குகள் வழியே எத்தனையோ கண்கள் எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன! எத்தனை சிறுவர்கள் அந்தப் பெண் என்னோடு உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதை ஒரு அதிசயமாக எண்ணி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்!

தரையில் புரளுவது போல் அணிந்த வாயில் புடவையும் குதிகால் உயர்ந்த, வெள்ளை நாகரிகத்தை வெளிக்காட்டும் பூட்சும், முழங்கை வரை இறுக்கிப் பிடித்த சோளியுமாக ஒரு அழகிய இளம்பெண் தானே காரை ஓட்டிக் கொண்டு வந்து இறங்கினால் கிராமத்தில் அது ஆச்சரியம்தானே?

"யாரோ ஒரு அம்மா உங்களைத் தேடிக் கொண்டு காரில் வந்து காத்திருக்கிறார்கள்” என்று படிப்பு நடத்திக் கொண்டிருந்த என்னிடம் பள்ளிக்கூடத்துச் சேவகன் வந்து சொன்னதே எனக்கு வியப்புத் தாங்கவில்லை.

துள்ளி எழுந்து வரும் மான்குட்டிப் போல் காரின் முன்புறத்துக் கதவைத் திறந்து கொண்டு அவள் இறங்கினாள்; வணங்கினாள். பதிலுக்கு வணங்கி வைத்தேன். 'வாருங்கள்' என்று கூற நினைத்தேன். சொற்கள் வரவில்லை. 'யார்?’ என்று கேட்க எண்ணியும் கேள்வி வரவில்லை.‘'சகுந்தலை! உங்கள் வாசகர்களில் ஒருத்தி. உங்களை நேரில் பார்த்துவிட வேண்டுமென்று ஆசை. காரை எடுத்துக் கொண்டு வந்தேன்." அவளே முந்திக் கொண்டு சொல்லிவிட்டாள்.

"ஓ! நீங்களா? அடிக்கடி கடிதங்கள் எழுதியிருக்கிறீர்களே?”

"கடிதங்கள் எழுதியது மட்டும் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஒருவரி பதிலைப் போடுவதற்கு மட்டும் உங்களுக்கு நினைவில்லை போலிருக்கிறது?” குறும்பு கொப்பளிக்கும் குமிண் சிரிப்பு. அதோடு குத்தலாக ஒரு கேள்வி.

“எங்கே பதில் எழுத முடிகிறது?” இந்தப் பதிலில் மட்டுமன்று, இதைச் சொல்லிவிட்டு நான் சிரித்த சிரிப்பிலும் அசடு வழிந்திருக்க வேண்டும். இதற்குள்ளேயே காரைச் சுற்றிலும் பள்ளிக்கூடத்து வாசலிலும் கூட்டம் கூடிவிட்டது.

‘'சகுந்தலை! வாருங்கள் உள்ளே உட்கார்ந்து பேசலாம்.”

அங்கே அப்படிப் பல பேர்கள் கூடிய கூட்டத்துக்கு நடுவில் தெருவில் நின்று அவளோடு பேசுவது என்னவோ போலிருந்தது எனக்கு.ஆகவேதான் அவளை உள்ளே அழைத்துச் சென்றேன். இதுதான் சகுந்தலை என்ற அந்த அழகி என்னைத் தேடிவந்த விவரம்.

உள்ளே அழைத்துச் சென்று எதிரே உட்கார வைத்துப் பேசிக் கொண்டிருந்தேன். நான் எழுத்தாளன். அவள் ரசிகை. அது மற்றவர்களுக்குப் புரிந்தால்தானே? கூடிக் கூடிப் பேசுவதும், குறிப்பாக வந்து எட்டிப் பார்ப்பதும் அநாகரிகமாகப் பட்டது எனக்கு.

பள்ளியில் விடுமுறை பெற்றுக் கொண்டு “வாருங்கள், வீட்டுக்குப் போகலாம்" என்று அவளையும் அழைத்துக்கொண்டு அவள் காரிலேயே வீட்டுக்குப் புறப்பட்டேன். வழியில், வாசலில், தெருவில், எங்கும் ஏதோ நடக்கக்கூடாதது நடந்து அதைப் பார்ப்பதுபோல் ஒரு பார்வை. வீட்டு வாசலில் கார் வந்து நின்ற ஓசையைக் கேட்டு உள்ளே கை வேலையாக இருந்த என் தாய் கதவைத் திறந்தாள். அவளுக்கே ஆச்சரியம், பயம், பிரமிப்பு எல்லாம் ஏற்பட்டிருக்க வேண்டும். நானும், சகுந்தலையும் காரிலிருந்து இறங்கி வீட்டுக்குள் நுழைந்தபோது அம்மாவின் கண்களிலும்

முகத்திலும் ஒடி மறைந்த உணர்வின் சாயல்களைக் கண்டு அதை நான் புரிந்து கொண்டேன்.

"ஏன் இப்படிக் காணாததைக் கண்டுவிட்டதுபோல் வெறித்துப் பார்க்கிறார்கள்? இந்த ஊர் மக்களின் கண்களுக்கு இலக்கான முதல் மோட்டார் கார் இதுதானா?” வீட்டுக்குள் நுழையும்போது சகுந்தலை சிரித்துக்கொண்டே என்னிடம் இப்படிக் கேட்டாள்.

‘சகுந்தலை இது கிராமம்.இங்கே அறிவைவிட உணர்ச்சிக்குத்தான் அதிக மதிப்பு. நல்லதை நினைக்க எவ்வளவோ நேரமாகும். தீயதை உடனே நினைப்பார்கள்! செய்வார்கள்.”

“கதைகளில் எழுதுவதுபோலவே அழகாகப் பேசுகிறீர்கள்! பேச்சுக்குச் சொல்லவில்லை. உண்மையாகவே சொல்கிறேன்.”

அவள் சிரித்துக்கொண்டே என்னைத் தன் மலர்விழிகளால் பார்த்தாள்.

வரிசை வரிசையாகப் புத்தகங்கள் அடுக்கிய கண்ணாடி பீரோக்களும், மூலைக்கு மூலை குவிந்து கிடக்கும் பத்திரிகைகளும், மாத இதழ்களும்,கடிதங்களும் நிறைந்த என் எழுத்தறைக்குள் அவளை அழைத்துச் சென்று உட்காரச் சொன்னேன். சந்தேகமும், பீதியும், பரபரப்பும் கொண்ட அம்மாவின் முகம் அறைக்குள் அப்போது எங்களை எட்டிப் பார்த்துவிட்டுச் சென்றதைக் கவனித்தேன். சகுந்தலையும் கவனித்தாள் போலும்.

"உங்கள் தாயாரா?"

"ஆமாம்! இங்கே உட்கார்ந்து ஏதாவது படித்துக்கொண்டிருங்கள், இதோ வந்துவிடுகிறேன்."

அவளை அங்கே உட்காரச் செய்துவிட்டு வீட்டின் உட்புறம் சென்றேன். தேன் நாடிப் பசித்துத் திரியும் அழகும் துறுதுறுப்பும் மிக்கவண்டு ஒன்றைத் தேன் துளும்பும் மலர்கள் ஏராளமாகப் பூத்துக் கிடக்கும் ஒரு சோலைக்குள் விட்டுவிட்டு வந்தது போன்ற உணர்ச்சி அப்போது என் மனத்தில் நிறைந்திருந்தது. எல்லைக்கு அடங்காத பெருமித உணர்ச்சி ஒன்று என் மனம் நிறையத் தளும்பி வழிந்து கொண்டிருந்தது என்றும் சொல்லலாம்.

"ஏண்டா! இதெல்லாம் உனக்கே நன்றாயிருக்கிறதா? யாரோ, ஊர் பேர் தெரியாத வயதுப் பெண்ணைக் கூப்பிட்டுக்கொண்டு வந்து இப்படி வீட்டுக்குள் உட்கார்த்திப் பேசுகிறாய்! இதெல்லாம் வீண் பழியாகப் பேச்சுக்களை உண்டாக்கும். நாலுவிதமாக நாக்கில் நரம்பின்றிப் பேசுவார்கள். ஊர் வாயில் விழுந்து கெட்ட பெயரைக் கட்டிக் கொள்ளாதே!

என் நெஞ்சத்துப் பெருமிதங்கள் சுக்கு நூறாக உடைந்து சிதறின. முகத்தைச் சுளித்துச் சினம் பொங்கும் பார்வையால் அம்மாவைப் பார்த்தேன். படபடப்பாகப் பேசி முடித்த சாயலோடு அம்மா எதிரே நின்று கொண்டிருந்தாள்.

நல்லவேளை அம்மா கூறிய இந்த வார்த்தைகள் சகுந்தலையின் செவிகளில் விழுந்திருக்க முடியாது.உள்வீட்டில் அடுக்களையின் ஒரு மூலையில் ஒடுங்கிய குரலில் என்னை நோக்கிக் கூறப்பட்ட சொற்கள் முன்புற அறையில் வீற்றிருக்கும் அவளுக்குக் கேட்டிருக்க நியாயமில்லை.

"அம்மா! இரையாதே. அந்தப் பெண்ணின் காதில் விழுந்தால் ஏதாவது நினைத்துக் கொள்வாள். பாவம் என்னைப் பார்த்துப் பேசிவிட்டுப் போக வேண்டுமென்று வெகு துரத்திலிருந்து தேடி வந்திருக்கிறாள். காப்பி பலகாரம் தயார் செய் அம்மா!”

என் வார்த்தைகளைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் மறுபடியும் ஆத்திரப்பட்டுப் பேசினாள் அம்மா. கோபம் குமுறிக் கொண்டு வந்தும் தாயாரிடம் அதை வெளிக் காட்டிக் கொள்ள முடியாமல் தவித்தேன். நீண்ட நேரத் தர்க்க விவாதத்துக்குப் பின் தாயாரிடம் நயந்து பேசி ஒரு வழியாகக் காப்பி பலகாரத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டு மீண்டும் முன்புறத்து அறைக்குத் திரும்பினேன்.

"சகுந்தலை! நீங்கள்."அவள்முகத்தை ஏறிட்டுப்பார்த்த நான், திகைத்துப் போய்ப் பேச்சைப் பாதியிலேயே நிறுத்திவிட்டேன். தாயாரிடம் சாப்பிடமாட்டேனென்று முரண்டு பிடிக்கும் சிறு குழந்தை போல் முகத்தை 'உம்'மென்று வைத்துக் கொண்டிருந்தாள் அவள். அவள் கையில் தூசி படிந்து சுருண்டு மடிந்த காகிதம் ஒன்று இருந்தது.

எனக்குப் புரிந்துவிட்டது. சில வாரங்களுக்கு முன் வெளி வந்த என்னுடைய சிறுகதை ஒன்றை அவள் மனம் திறந்து பாராட்டி எழுதிய விரிவான கடிதம் அது. கடிதங்களைப் பத்திரப்படுத்தி அழகாக மடித்து 'ஃபைல்' செய்து வைக்கும் 'கெட்ட பழக்கம்' என்னிடம் கிடையாது. அறைக்குள் மூலைக்கு மூலை கவனிப்பாரற்றுச் சிதறித் தூசி படிந்து கிடக்கும் அவை எப்போதாவது இரண்டு மூன்று மாதங்கள் கழித்து அம்மா அறையைப் பெருக்கி மெழுக வரும்போது அவைகளுக்கு விமோசனம் பிறக்கும்.

குழந்தைத்தனமான அவள் இரசிகத்தன்மை, குழந்தைத்தனமான அவள் கோபம், இரண்டையும் எப்படிச் சமாளிப்பதென்றே எனக்கு விளங்கவில்லை.

"சகுந்தலை! வந்து நீங்கள் தப்பாக நினைத்துக் கொள்ளக்கூடாது." நான் சிரித்து மழுப்பிப் பேசி அவள் கோபத்தைத் தணிக்க முயன்றேன்.

"நீங்களெல்லாம் பெரியவர்கள். இலட்சிய எழுத்தாளர்கள். என்னைப்போல் ஒரு அசட்டுப் பெண் பாராட்டித்தான் உங்கள் எழுத்து வளர வேண்டுமா? ஏதோ தத்துப்பித்தென்று எழுதித் தொலைத்திருக்கிறாளே என்று கிழித்துக் குப்பைத் தொட்டியில் போடாத குறையாக வாங்கி மூலையில் போட்டு வைத்திருக்கிறீர்கள்!"

சரியான சவுக்கடி சகுந்தலை என் உள்ளத்தில் மிக மிருதுவான பாகத்தில் அடித்துவிட்டாள். சற்றுமுன் அவள் தேடி வந்தபோது என் மனத்தில் எத்தனை ஆயிரம் பெருமிதக் கனவுகளை அவள் எழுப்பினாள். தற்செயலாக நேர்ந்த ஒரு சிறிய தவற்றினால் அவள் மனத்தை வருத்த நேர்ந்துவிட்டதே. எனக்கே நான் தவறு செய்துவிட்டேனென்று தோன்றியது.

பலகாரம் வந்தது; காப்பி வந்தது. சகுந்தலையின் வயிறு நிறைந்திருக்கலாம்! ஆனால் மனம்? அவள் அந்தக் கடிதத்தைப் பார்ப்பதற்கு முன்பிருந்த மலர்ச்சி, சிரிப்பு, குறும்புப் பேச்சு எல்லாம் பார்த்தபின்பு எங்கோ போய் ஒளிந்து கொண்டன. சாயங்காலம் ஐந்து மணி வரை இருந்தாள். பின்பு விடைபெற்றுக் கொண்டு போய்விட்டாள். மனத்தில் குறைவோடு சடைவோடுதான் அவள் போனாள். எனக்கும் புழுதியில் நடந்து வந்த காலோடு பூவை மிதித்துவிட்டதுபோல் - தெரியாமல் மிதித்துவிட்டுத் தெரிந்தபின் அருவருப்பும் தன்னை நொந்து கொள்ளுதலும் அடைவது போல் அந்த நிகழ்ச்சி உள்ளத்தில் தைத்து நிலைத்துவிட்டது.

அன்றிரவு முழுவதும் தூக்கமில்லை. வட்ட முழுமதியும் அதில் கருவண்டுகளாய்ச் சுழலும் கண்களும், அழகும், அளவும் பொருந்திய அந்த செம்பவழமாய்ச் சிறு முறுவலும், நினைவில் வந்து வந்து என்னை நோகச் செய்தன

அமைதியும், மந்தமும் உள்ள கிராமத்தில் நாட்கள் ஆமைகளாய் நகர்ந்தன. திரும்பத் திரும்பக் குசேலர் கதையையும், நளன் கதையையும் அறிவுக் கூர்மையற்ற கிராமத்துச் சிறுவர்களுக்குக் கற்பித்து அலுத்த பள்ளிக்கூடவேலையின் போக்கிலும், எழுத்தின் முனைப்பிலும் அதை மறந்துவிட முயன்றேன்.

இரண்டு மூன்று மாதங்களுக்குப் பின் கடுமையான டைபாய்டு ஜுரத்தினால் ஒரு மாதம் படுத்த படுக்கையாகக் கிடந்தேன். அந்தச் செய்தி எப்படியோ சகுந்தலையின் காது வரையில் நூற்றைம்பது மைல்களைக் கடந்து சென்று எட்டியது போலும்,

"செய்தி கேள்விப்பட்டேன்! தைரியமாக இருங்கள்! மனத்தை அலட்டிக் கொள்ளாதீர்க்ள. உங்களைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. இரண்டு நாட்களில் புறப்பட்டு வருகிறேன்” என்று அவளிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.

அந்தக் கடிதம் கைக்குக் கிடைத்தவுடன் முன் யோசனையாக மனோதத்துவ ரீதியில் சிந்தித்து ஒரு தந்திரமான காரியம் செய்து வைத்தேன் நான்.

முன்பு எப்போதோ அவள் எழுதியிருந்த பழைய கடிதம் ஒன்றை எடுத்துப் படக் கடையில் கொடுத்து கண்ணாடிச் சட்டம் போட்டுக் கொண்டு வரச் செய்தேன்.முத்து முத்தான அவள் எழுத்துக்களுக்கு மேலே "என் எழுத்து ஏற்றுக் கொண்ட ஈடு இணையற்ற சன்மானம்" என்று தலைப்பு எழுதி அறையில் பார்வையில்படும்படியான இடத்தில் தொங்கவிட்டேன். மறுநாளைக்கு மறுநாள் சகுந்தலை வந்தாள். தொண்ணுாறு நாட்களுக்குப்பின் மறுபடியும் அந்தக் கார் என் வீட்டில் வந்து நின்றது.

அந்த முறை சகுந்தலை நான்கு நாட்கள் என் வீட்டில் தங்கினாள். அப்போது அவளுக்குக் கல்லூரியும் விடுமுறையாக இருந்தது. பி.ஏ. இறுதியாண்டும் எழுதிவிட்டாள். அந்த நான்கு நாட்களும் அவள் ஒடியாடி எனக்குச் செய்த பணிவிடைகளைக் கண்டபோது என் தாய்கூடமனம் மாறிவிட்டாள். சகுந்தலையைப் பற்றிக் கள்ளங்கபடமில்லாத பெண், தங்கமான குணம்,படித்ததற்குக் கொஞ்சமாவது கர்வம் இருக்காதோ?’ என்று என்னிடமே புகழத் தொடங்கிவிட்டாள்.

நான் நினைத்தபடி சகுந்தலை என் அறையில் அவள் கடிதத்துக்குத் கிடைத்திருக்கும் மரியாதையையும் பார்த்துக்கொண்டாள். என்னிடம் அவள் அதுை பற்றிக் கேட்கவில்லையானாலும் மழை பெய்த சில நாட்களுக்கெல்லாம் புல்வெளிகளில் தென்படும் பசுமையைப் போல் அவள் அதை என் அறையில் கண்டபின் அவளிடம் நிலவிய மகிழ்ச்சியை நானே பார்த்தும் சிந்தித்தும் அறிந்து கொண்டேன்.

ஐந்தாவது நாள் மாலை அந்தப் பச்சை நிறக் காருக்குள் ஏறிக் கொண்டு இந்தப் பச்சைக்கிளி பறந்து போய்விட்டது.

அதன்பின் ‘சகுந்தலை என்ற கந்தர்வ உலகத்துக் கனவை நான் ஏறக்குறைய மறந்தே போகவேண்டிய சூழ்நிலைகள் என் வாழ்வில் ஏற்பட்டுவிட்டன.

மறு வருடமே நான் நகரவாசியாக மாறிவிட்டேன்.

கிராமத்துப் பள்ளிக்கூட வேலையை உதறிவிட நேர்ந்தது. வேகமும், நின்று நினைக்க அவகாசமும் இல்லாத நகரத்தில் எத்தனையோ புதிய சிநேகிதர்கள், சிநேகிதிகள் எல்லோரும் கிடைத்தார்கள். தை மாதத்தில் எனக்குத் திருமணமும் முடிந்துவிட்டது.

குடும்ப வாழ்வில் இறங்கினேன். பத்திரிகைகளுக்கும், புத்தகங்களுக்கும் எழுதும் வழக்கம் மட்டும் என்றும்போல் அப்படியே இருந்தது. எப்போதாவது ஏதாவதொரு வாசகரிட (பெண் வாசகர்) மிருந்து கடிதம் வந்தால் அப்போது சில விநாடிகள் சகுந்தலை நினைவுக்கு வருவாள். அடுத்த கணமே அந்த நினைவும் மறைந்துவிடும். வயதும், குடும்பப் பொறுப்பும், குழந்தை குட்டிகளும் அதிகமாக அதிகமாக நளினமான நினைவுகளை உல்லாசமாக சிந்தனைகளை எழுதும் ஆற்றல் என்னிடமிருந்து குறைத்து வருவதாக எனக்குத் தோன்றியது. அது என்னுடைய தனிப்பட்ட தாழ்வு மனப்பான்மையோ என்று நினைக்கவும் முடியவில்லை. வரவரப் பெண் வாசகர்களின் பாராட்டே குன்றி வந்தது போல் எனக்கு ஒரு பிரமையும் உண்டாயிற்று.

ஐம்பத்தெட்டு ஆண்டுகள், அரை நூற்றாண்டுக்கும் அதிகம். வெளுத்து நரைத்த தலையும், வரி வரியாய்ச் சுருங்கிய நெற்றியும் எனக்கே என் பொறுப்பை நினைவுபடுத்தும் வயது.

பதினெட்டு வயதில் எனக்கு ஒரு பெண். அவளுக்கு வரன் தேடி ஊரூராய் அலைந்துகொண்டிருக்கிறேன். எழுத்தாளன் பெற்ற பெண் என்றால் மாப்பிள்ளைகள் போட்டி போட்டுக்கொண்டா வருகிறார்கள்? புகழ் வேறு! பணம் வேறு ஐயா! இரண்டும் இரு வேறு உலகத்து இயற்கை.

கும்பகோணத்தில் ஒரு வரன் குதிரும் போலிருந்தது. பார்த்துப் பேசிவிட்டு ஊர் திரும்பினேன். இரவு ரயிலில் கூட்டமில்லை. திருமணச் செலவுகள் பற்றி யோசித்துக் கொண்டே ரயிலில் அலுப்பு மிகுதியால் கண்ணயர்ந்துவிட்டேன். அந்தக் 'கம்பார்ட்மெண்டு' முழுவதும் அநேகமாகக் காலியாகத்தான் இருந்தது. வண்டி புறப்பட்ட பின் அடுத்தடுத்து வரும் ஸ்டேஷன்களில் யார் யாரோ ஏறினார்கள் போலிருக்கிறது. எனக்குத் தூக்கக் கலக்கம். பேச்சுக்குரல்கள், குழந்தையின் அழுகை எல்லாம் எழவே தூக்கம் கலைந்து சும்மா கண்ணை மூடிக் கொண்டு படுத்திருந்தேன்.

"ஏண்டி தடிக்கழுதை! எப்போதிருந்து சொல்லிக் கொண்டு வருகிறேன் நான்? கண்டவன் எழுதின குப்பைப் புத்தகத்தையெல்லாம் படித்து ரயிலில் கண்ணைக் கெடுத்துக்கொள்ளாதே தலையைச் சுற்றி வெளியில் எறிந்துவிட்டுத் துங்கு!" வயதான, பெண் குரல் ஒன்று ரயில் ஒடும் 'கடக், கடக்' ஓசையையும் மீறிக் கூப்பாடு போட்டு இறைந்தது. மெல்லக் கண்களைத் திறந்து எதிர்வரிசைப் 'பெஞ்சை'ப் பார்த்தேன்.

என் நெஞ்சில் யாரோ ஓங்கி அடிக்கிற மாதிரி இருந்தது. காரணம் அந்த யுவதி கையில் வைத்துப் படித்துக்கொண்டிருந்தது நான் இளம் வயதில் எழுதிய நாவல். காதற்சுவையைச் சித்தரிப்பதில் இணையற்ற நவீனமென்று பத்திரிகைகளில் மதிப்புரை பெற்று ஆறேழு பதிப்பு விற்ற புத்தகம் அது! ஆ! இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது இப்போது. இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டுத்தான் சகுந்தலை என்ற பெண் முதன்முதலாக எனக்குக் கடிதம் எழுதினாள். என்னைத் தேடி ஒரு நாகரிகமான பெண் வந்ததைப் பார்த்து அந்தக்காலத்தில் சினிமாவும் தினப்பத்திரிகையும் நுழைய முடியாத அந்தக் கிராமத்து மக்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

ஏன்? நானே அவளையும் அவள் வந்திருக்கிற விஷயத்தையும் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனேன். என்னைத் தேடி வந்திருக்கும் ரசிகைதான் எவ்வளவு அழகானவள்! எத்தகைய இலக்கியப் பண்பு நிறைந்த நளினமான உள்ளம் படைத்தவள்! புத்தம் புதிய காரிலே தானே சவாரி செய்து கொண்டல்லவா என்னைத் தேடி வந்திருக்கிறாள்.இந்த வாலைப் பருவத்துக் குமரிக்குத்தான் எவ்வளவு துணிச்சல் நான் பாக்கியசாலி! உலகத்திலேயே பெரியவன். 'காளிதாசனுக்கு சகுந்தலை என்ற பெயரில் ஒரு கதாபாத்திரம்தான் கிடைத்தாள், எனக்கோ ஒரு ரசிகையே கிடைத்திருக்கிறாள்!:” என்றெல்லாம் எண்ணி எண்ணி வியந்து போனேன். அதன்பின் அவள் என்னிடம் எவ்வளவோ நெருங்கிப் பழகினாள்.

அவ்வளவு அருமையான நாவலை இழித்துப் பேசிய அந்த மூதாட்டியின் முகம் எப்படி இருக்கிறது என்று நன்றாக எழுந்து உட்கார்ந்து திரும்பிப் பார்த்தேன். பார்த்த கண்களை பார்த்துக்கொண்டே இருந்தன. அடுத்த கணம் என் நெஞ்சைக் கிழித்துக் கொண்டு, “சகுந்தலை நீயா? நீயா இப்படிச் சொன்னாய்!” என்ற அலறல் கிளம்ப இருந்தது. அதிகச் சிரமப்பட்டு என் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டேன். "கண்ட கண்ட புத்தகத்தைப் படித்துக் கெட்டுப் போகாதே" என்று தன் மகளை அக்கறையோடு கடிந்து கொண்ட அந்தத் தாய் யார் தெரியுமா?

வேறு யாருமில்லை! சகுந்தலையேதான்! ஒரு காலத்தில் படிப்பும், அழகும், முற்போக்கும் கொண்ட புதுமைப் பெண்ணாக விளங்கிய சகுந்தலை இன்று எல்லா விதத்திலும் உருமாறிப் போய்விட்டாள். பெற்றுப் பட்டு, வாழ்ந்து தாயாகிப் பாட்டியாவதற்கு இருந்த அவள் கோலம் என் நெஞ்சைக் குத்தியது. இத்தனை வருடங்களாக என் புகழ்க் கொடி எந்தக் கம்பத்தை ஆதாரமாகக் கொண்டு யாருடைய துண்டுதலால் பறப்பதாக நான் கனவு கண்டு கொண்டிருந்தேனோ அந்தக் கம்பம் கொடிமரமாக இல்லை; வெறும் வழுக்குமரமாகிவிட்டது. தாபத்தோடு நான் மறுபடியும் கிழடுதட்டின அவள் முகத்தைப் பார்த்தேன்.

அந்த மூதாட்டி என்னைப் பார்த்துச் சிரிக்கவில்லை! என்னை யாரென்று அவளால் இனங்கண்டு கொள்ளவும் முடியவில்லை. ரயிலில் இப்படி மூன்றாவது மனிதன் அநாகரிகமாகப் பார்க்கிறானே என்று எண்ணி, முகத்தைச் சுளித்தாள்!


(கல்கி, தீபாவளி மலர், 1958)