உள்ளடக்கத்துக்குச் செல்

நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/வாழ்க்கையின் கடிதம்

விக்கிமூலம் இலிருந்து

35. வாழ்க்கையின் கடிதம்

ருயிரே,

அன்றொரு நாள் அந்தி நேரத்திலே ‘அத்தான்! என் பிரிவைத் தாங்குமோ உனது இதயம்?’ என்று வாய்மொழியிலே கேட்டு விடைதந்த என் இன்னமுதே! இன்று எனது இதயத்தைக் கசக்கிப் பிழிகிறதடி நமது பிரிவும், நமக்கிடையேயுள்ள ஒரு நூறு கல் தொலைவும். கடந்த காலத்தைச் சுற்றியலைந்து அந்த நினைப்பிலே ஆறுதலடைகிறதடி எனது நெட்டுயினைத்த நெஞ்சம்!

சிறு வயதிலிருந்தே சேர்ந்து வளர்ந்தோம். எனக்காக நீ, உனக்காக நான் என்ற எண்ணம். அந்த எண்ணத்திலே பிறந்த ஏக்கம் உனக்குத் தெரிந்தது தானே என் இன்பமே! யாரோ உன் தாய் மாமனாம் தறுதலை - பிழைப்பைத் தேடி சிங்களம் சென்றவன் பின்னர் ஏன் இங்கு திரும்ப வேண்டும்? திரும்பியவன் உன்னை ஏன் விரும்ப வேண்டும்? விரும்பியவன் நேரே உன் தாயை நெருங்கி நான் உன் மகளை மணக்க வேண்டும். மறுக்காது மகிழ்வுடன் இசைவு தா என்றல்லவா கேட்டிருக்க வேண்டும் அந்த எத்தன்? அதை விடுத்து, அழகுச் சோலையில் நீ ஆடி மகிழ்ந்திருந்த வேளையிலே உன் கண் பொத்தி, விளையாட அந்தக் கயவன் துணிந்ததும், நீ கதறக் கதற உன் கரம் பற்றி இழுத்ததும் என்னை காப்போர் இங்கு யாருமில்லையா? என்று நீ கூவியதும், ஏதோ சிந்தனையால் அடைக்கப்பட்டு நான் அச்சோலை வழியே வந்ததும், என்னால் அவன் இடர்ப்பட்டு ஓடியதையும் நினைத்தால், என் இன்பமே திரைப்படம் போல் தோன்றுகிறது.

கண்ணோடு கண் நோக்கப் பின் நீ நிலம் நோக்க வானத்துச் செம்மை உன் வட்ட முகத்துக்கேறியது எவ்வாறு? மேகத்துக் கருமை உன் கூந்தலுக்கும், முல்லையின் வெண்மை உன் முத்துப் பற்களுக்கும் தோற்று ஓடியது ஏன்? எனக்குப் பயந்து பள்ளிப் பருவத்தில் துள்ளித் துள்ளி நீ ஓடியதும், உனைத் துரத்தி நான் ஓடியதையும் நினைத்தால் என் அஞ்சுகமே! வாழ்க்கை முழுவதும் பிள்ளைப் பருவத்திலேயே கழியக் கூடாதா என்ற எண்ணம் எனக்கு ஏற்படுகிறது! பிள்ளைப் பருவத்திலே நமது விளையாட்டும், பின்னர் கல்லூரியிலே நாம் பயிலும் போது கண் பார்வையாலேயே என்னைக் கொல்லாமல் கொன்ற விந்தையையும் நினைக்க நினைக்க நான் வானத்தில் பறந்து வட்டமிடுவதைப் போன்ற உணர்ச்சியடைகிறேன்.

உனக்கு நினைவிருக்கிறதா என் இன்பமே, நாம் கல்லூரியிலே பயின்ற போது பாலாற்றிலே பெரு வெள்ளம் வந்தது? அந்நாளைய நிகழ்ச்சிகளை நம்மால் நம் வாழ் நாள் அளவும் மறக்க இயலாதே கரையோரம் சென்ற நீ கால் வழுக்கி நீரில் மூழ்கியதும், சுற்றிச் சுழன்றோடும் அப்புதுப் புனலில் நீந்தத் தெரியாத நான் பாய்ந்து உன்னைக் கைப் பற்றிக் கரை சேர்க்க முடியாமல் தவித்துப் பின்னர் நம்மிருவரையும் ஆங்கிருந்தோர் கரை சேர்த்ததும் கண்ணே! என் உயிர்ச்சுழலுக்கு உவமை காட்டியதே!

பின்னர் நீயின்றேல் நனில்லை என்ற முடிவுக்கு நான் வந்ததும், என் அன்னையிடம் அதனைக் கூறுவதற்குத் தவித்த தவிப்பும் என் தங்கமே! இன்னும் என்னை நகைக்க வைக்கிறது. பிறகுதானே கண்ணே! நமக்கு எதிர்ப்பு ஆரம்பமானது. என்னால் இடர்ப்பட்ட உன் தாய் மாமன், உன் தாயை அணுகி உன்னைத் தனக்குத் தருமாறு கேட்டதும், உன் தாயும் உறவு விட்டுப் போய்விடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக அதற்கு ஒப்புதல் தந்ததும் பிறகு நீ என்னைத் தவிர வேறு யாரையும் மணக்க முடியாது என்று உறுதியாகக் கூற, அந்த உறுதியை உனக்கு உற்ற துணையாக விட்டுவிட்டு நான் வேற்றூர்க்கு வேலையின் நிமித்தம் வந்ததும் என்னால் மறக்கவே முடியாத நிகழ்ச்சிகள்.

நான் வேலை பார்த்த அலுவலகத்தின் அதிகாரி உன் தாய் மாமனின் உற்ற தோழனாம். ஒரு நாள் தோழனைக் காண வந்தவன் உன்னைக் கண்டதும் திடுக்கிட்டடான். திடுக்கிட்டவன் பின்னர் தீராப் பார்வையை என் மேல் வீசினான். கலங்கினேனில்லை கண்ணே! அன்று மறு நாள் என்னை வேலையை விட்டு நீக்கிய உத்தரவுக் கடிதத்தைச் சுமந்து கொண்டிருந்தேன். எதிர்பார்த்தேன் ஏந்திழையே இந்த நிகழ்ச்சியை ஏசலும் எதிர்ப்பும் தான் கண்ணே நம் பிணைப்பை ஒன்றுபடுத்தியவை. உறுதிபடுத்தியவை.

எதிர்பார்த்த நிகழ்ச்சிதான் என்றாலும் எனது எதிர்காலத்தை எண்ணி வேலையில்லாமல் திண்டாடுவது, வேற்றூரிலே பசியும் பட்டினியும் அலைக் கழிக்க ஏங்கித் திரிவது என் எதிர்காலத்தை எண்ணி, மனத்திலே பெரும் புயல் வீசிக் கொண்டிருக்க மாலையிலே கடற்கரைக்குச் சென்றிருந்தேன். கொந்தளிக்கும் கடல் குமுறும் என் உள்ளத்தை நினைவூட்டியது. அசதியும் அலைச்சலும் என் கண்களைச் சுற்றியது. எவவளவு நேரம் கழிந்ததோ எனக்குத் தெரியாது.

ஐயா என்ற பெருங்கூச்சல் என்னைத் திடுக்கிட்டு எழச் செய்தது.நிலவின் மங்கிய ஒளியிலே சிறிது தொலைவில் கண்ட காட்சி என்னைப் பதறியடித்தது. ஒரு வயதான மனிதனை இரு முரடர்கள் கத்தியைக் காட்டிப் பயமுறுத்திக் கொண்டிருந்தனர். மனிதனது உணர்ச்சிகள் அலையில்லாத கடல் போன்றது. அதில் இரக்கம் என்ற பெருங்காற்று வீசினால் வீரம் என்ற கொந்தளிப்பு ஏற்படுகிறது. என்னையும் அறியாமல் நான் அவர்களருகே ஒடினேன். நான் ஓடி வருவதைக் கண்ட முரடர்கள் கத்தியை என் மீது வீசி எறிந்தனர். நான் சிறிது ஒதுங்கிக் கொள்ளவே கத்தி கடலிலே விழுந்து மறைந்தது. உதவிக்கு ஆள் வந்ததைக் கண்டதும் அவர்களிடையே அகப்பட்ட மனிதனும் தன்னை விடுவித்துக் கொண்டான். கத்தியும் போய் களைப்பும் மேலிடவே அந்த முரடர்கள் ஓடிவிட்டனர்.

இதை மறந்துவிட்டேனே! அந்த வயோதிகர் மிகுந்த செல்வந்தர். நகரத்திலே பிரபல நகை வியாபாரி. தன் உயிரைக் காத்தவன் என்ற உணர்ச்சி மேலிட என்னைத் தன் மாளிகைக்கு அழைத்துப் போனதும் எனக்கு நிழற்படம் போலத் தோன்றுகிறது. காலையிலே என் கதையைக் கேட்டவர், வாழ்க்கைச் சூழலிலே சிக்கிச் சீரழிந்தவன் நான் என்ற அனுதாபமும், தன் உயிரைக் காத்தவன் என்ற நன்றி உணர்வும் உந்த, என்னைத் தம் கடையிலேயே நல்ல ஊதியத்தில் மேற்பார்வையாளன் வேலையிலமர்த்தினார்.

பிறகுதான் கண்ணே! நான் விடுமுறை பெற்று ஊர் வந்ததும். உன் தாயைக் கண்டு உன்னை எனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு கேட்டதும், அவர்கள் பின்னர் யோசித்து முடிவு கூறுகின்றேன் என்றதும். அப்போது தான் ஏதோ ஏமாற்றுக் குற்றத்துக்காக உன் தாய்மாமன் என்று உன் தாய் ஏங்கித்தவித்ததும், பிறகு உன்னுடைய எண்ணம் இலகுவாக நிறைவேறியதும். நாமிருவரும் மணப்பந்தலிலே ஒன்றுபட்டதும் என் அன்பே ஆருயிரே! இன்பம்! மறக்க முடியாதவை!

வாழ்க்கைத் தோணியை நாமிருவரும் மனமுவந்து நடத்தினோம். உல்லாச ஊஞ்சலிலே ஆடினோம். இன்பக் கடலிலே மூழ்கினோம். திருமணமான சில திங்களுக்குள் நமக்குப் பிரிவா? திருமணம் நடந்த சில மாதங்கள் கழித்து தம்பதிகளிடையே பிரிவு ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒரு நிகழ்ச்சி. மேலும் எழுத வெட்கம் திரைபோடுகிறது. தெளிவாகவே சொல்லுகிறேன் - எனக்கு ஆண் குழந்தைதான் வேண்டும்; என்ன? சிரிக்கிறாயா? என் சிங்காரச் சிலையே! என் எண்ணத்தை நிறைவேற்றுவாயா?

என்றுமுன்.......