நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/நிறை காக்கும் காப்பு
36. நிறை காக்கும் காப்பு
கதவைத் திறந்து விட்டு அலட்சியமாக இரண்டு கைகளாலும் நிலைப் படியைப் பிடித்துக் கொண்டு நின்றாள் அந்தக் கிராமத்து அழகி. சொருக்குக் கொண்டை, உயரமும், பருமனுமாகத் திணித்துத் திணித்துப் பஞ்சு அடைத்த பட்டுத் தலையணைப்போல் வாளிப்பான உடம்பு. திமிர் தெரியும் அழகுக் கண்களில் ஏனென்று கேட்கிற துடுக்குப் பார்வை. அலட்சியம் தவழும் சிரிப்பை மறைக்காத இதழ்கள். கருங்கல்லில் செதுக்கிய சிற்பம் போல் எடுப்பான மூக்கு முழி, கொஞ்சம் அதிகமான அழகுதான்! தண்ணீரில் எண்ணெய் மாதிரி அந்தக் கிராமத்துத் திமிரோடு அழகு ஒட்டாமல் தெரிந்தது. செருக்கா? வீறாப்பா? கர்வமா? ஏதோ ஒன்று அழகுக்கு மீறி, அளவுக்கு மீறி அந்தப் பெண்ணின் முகத்தில் தெரிந்தது.
முத்தழகு இதை எதிர்பார்க்கவில்லை. கதவைத் தட்டினபோது இப்படி ஒரு 'பெண் புலி' வந்து திறந்துவிட்டு முறைத்துப் பார்க்கும் என்றும் அவன் நினைக்கவும் இல்லை.
“இதுதானே வீரப்ப மல்லுக்காரர் வீடு?” என்று கேட்டான் குறட்டில் ஏறித் திண்ணையில் உட்கார்ந்து கொண்டே. அவன் சிவந்த பாதங்களில் கருப்பு நிறத் தோல் செருப்பு எடுப்பாகப் பொருந்தி இருந்தது. அந்தப் பெண் அவன் காலைப் பார்த்துச் சீறினாள்.”எந்திருச்சி வாசப் படிக்கிக் கீழே செருப்பைக் கழட்டிட்டு உட்காரு, ஐயா!”
“ஏனாம்? கழட்டாட்டி என்ன செய்வே?”
“ஐயாவுக்கு இந்த வீட்டு வளமுறை தெரியாது போலிருக்கு. ஐயா, பட்டணத்து இங்கிலீசுத் துரையோ! இது சிலம்ப வாத்தியாரு வீடு, வித்தை குடியிருக்கிற இடம். சரசுவதி பீடம்பாங்க. வாசற்படிக்கு அப்பாலே யாரையும் செருப்போடே விடறதில்லை இங்கே. இந்த ஊரிலே பச்சைப் பிள்ளையைக் கேட்டாக் கூடத் தெரியுமே இது?”
“அப்படியா? நான் பச்சைப் பிள்ளை இல்லே பாரு அதனாலேதான் எனக்குத் தெரியாமப் போச்சி. நீ போயி உங்க அப்பாவைக் கூப்பிடு. இப்படியே உட்கார்ந்து இரண்டு வார்த்தை பேசிட்டுப் போயிடறேன்.”
“கூப்பிடறது இருக்கட்டும்!. முதல்லே குறட்டுக்குக் கீழே இறங்கி வாசல்லே செருப்பைக் கழட்டிப் போடு ஐயா...!”
- “இது புதுச்செருப்பு. சோடி பன்னண்டரை ரூபா. அந்தச் சாக்கடைப் புழுதியிலே போட மாட்டேன். வேணும்னா இங்கேயே காலடியிலே கழட்டிப் போட்டுக்கறேன். நீ போய் அப்பாரைக் கூப்பிடு”“இங்கே போட்டாத் தூக்கித் தெருவாசல்லே எறிஞ்சிடுவேன். தெரியுமில்லே. அந்தப் பெண்ணின் கண்களில் சினத்தின் ஆணவம் பொங்கியது.
முத்தழகுக்கு ஆண் பிள்ளையின் தன்மானம் கொதித்தது. அவள் பெண் புலியாக இருக்கலாம். வீரப்பமல்லுக்காரரின் திமிர்பிடித்த மகளாயிருக்கலாம். ஆனால், அவன் ஆண் பூனையல்லவே? அவனும் ஆண்பிள்ளைச் சிங்கம்தானே? பட்டணத்துக் கல்லூரியில் 'ஆனர்ஸ்' கடைசி வருடம் எழுதிவிட்டு முதல் வகுப்புத் தேர்ச்சியை நம்பிக்கொண்டு வந்திருக்கிறவனாயிற்றே. அவனுடைய வெள்ளையுடைக்கும் நாகரிகத் தோற்றத்துக்கும் கொஞ்சமாவது மதிப்புக் கொடுத்துப் பேச வேண்டாமா அந்தப் பெண்!
“நான் இங்கேதான் கழற்றிப் போடுவேன்; உன்னால் முடிந்ததைச் செய்து கொள்.” - முத்தழகு திண்ணையிலேயே செருப்பைக் கழற்றிப் போட்டான்.
"செய்து கொள்ளலாந்தானே?”
“ஆகா முடிந்தால் - தாராளமாக.” அவள் குபீரென்று கதவிடுக்கிலிருந்து ஒரு நீண்ட சிலம்பக் கழியை உருவினாள். நிலைப்படிக்கு அந்தப்புறமிருந்தே கழியில் இரண்டு செருப்புக்களையும் கோத்து தெருவை நோக்கி ஓங்கி வீசினாள். நடுத்தெருவில் மழை பெய்து சேறாகியிருந்த அளற்றுக் குழியில் போய்ச் 'சொத்'தென்று விழுந்தன. அந்தப் புது பாதரட்சைகள். '‘போய் எடுத்துக் கழுவிக்கிட்டுப்போங்க” என்று சொல்லி அலட்சியமாகச் சிரித்தாள் அவள்.
“என்ன திமிர் உனக்கு!” என்று அடிபட்ட புலிபோல் சீறிக் கொண்டு பாய்ந்தான் முத்தழகு.
“சும்மா நில்லுங்க அப்படியே. இது வீரப்ப மல்லுக்காரர் மகள். பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது. கிட்ட வந்தால் ஆம்பிள்ளைங்கிற மானம் போயிடும். செருப்புக் கிடக்கிற இடத்திலே நீங்களும் கிடப்பீங்க. செருப்போட உடம்பையும் கழுவிட்டுப் போகனும் சிலம்பக் கழியை இரண்டு கைகளாலும் குறுக்கே பிடித்து மறித்துக் கொண்டு காளி மாதிரி நிமிர்ந்து நின்றாள் அந்த முரட்டுப் பெண். ஆண்பிள்ளை அடிக்கக் கையை ஓங்கிக் கொண்டு வருகிறானே என்ற பயம்கூடவா ஒரு பெண்ணுக்கு இராது!
"நீ என் அருகில்கூட நெருங்க முடியாது ஊதித் தள்ளிவிடுவேன் ஊதி” என்கிற மாதிரி நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சிலம்பக் கழியோடு நிற்கிற பெண்ணைப் பார்த்தால் யாருக்குத்தான் பயமாக இருக்காது?
சும்மா அரட்டிச் சீறிக் கொண்டு பாய்ந்ததுதான் மிச்சம் முத்தழகு ஒன்றும் செய்யவில்லை. ஒன்றும் செய்ய முடியாது. பெண் பிள்ளையை அடித்தாலும் அவமானம் அடி வாங்கினாலோ அதைவிட படு அவமானம் பெண்ணின் உடம்பும் ஆணின் மதர்ப்புமாக வீறு கொண்டு நின்ற அந்தப் பெண் பிள்ளையைப் பார்த்தால் அடித்து நொறுக்குகிறவளாகத் தென்பட்டாளே ஒழிய, அடி வாங்கிக் கொண்டு நிற்கிறவளாகத் தெரியவில்லை.
நல்ல வேளை; சீற்றத்தோடும் சீற்றத்தைக் காட்டுவதற்குத் தயக்கத்தோடும் அவன் இப்படித் திணறிக் கொண்டிருந்த சமயத்தில் வீரப்பமல்லுக்காரரே உள்ளேயிருந்து வந்துவிட்டார்.
“என்னம்மா அது கூப்பாடு? யாரோடே வம்பு பண்ணிகிட்டு நிற்கிறே?” என்று கேட்டுக் கொண்டே வந்தார் வீரப்பமல்லுக்காரர்.
“யாரா? பட்டணத்து இங்கிலீசுத் துரை. இப்பத்தான் ஏரோப்ளேன்'லே வந்து குதிச்சாரு நீங்களே வந்து பார்த்துக்குங்க” என்று தந்தைக்கு உள்பக்கம் பதில் குரல் கொடுத்துக் கொண்டே அவனைப் பார்த்து முகத்தை ஒரு ‘வெட்டு வெட்டி அழகு காட்டிவிட்டு உள்ளே சென்று மறைந்தாள் அந்தப் பெண்புலி.
“போ,போ,இன்னிக்கில்லாவிட்டாலும் ஒருநாள் வகையாமாட்டிக்குவே” என்று சொற்களைத் தனக்குள் முணுமுணுத்துக் கறுவிக் கொண்டான் முத்தழகு.
"அடேடே பண்ணையார் வீட்டுத் தம்பியா? வாங்க சுகந்தானே? இப்ப லீவாக்கும் பட்டணத்திலிருந்து என்னிக்கு வந்தீங்க?"வீரப்பமல்லுக்காரர் விசாரித்துக் கொண்டே அவனுக்கு எதிர்த்தாற்போல் திண்ணையில் வந்து உட்கார்ந்தார். மல்லுக்காரருக்கு மதுரை வீரசாமி கோடாலி முடிச்சு பன்னரிவாள் நுனி மாதிரி மீசை, காதுகளில் பெரிதாகச் சிவப்புக் கடுக்கன்கள். அந்த வயதிலும் கட்டுத் தளராமல் 'மல்லுக்காரர்' என்கிற வன்மையைக் காட்டும் உடம்பு.
“என்ன தம்பி? அதுகிட்ட ஏதாவது வாக்குடுத்திங்களா? கொஞ்சம் துடுக்கா எடுத்தெறிஞ்சு பேசியிருக்கும். அதுக்குச் சுபாவமே அப்படி, மனசிலே வச்சுக்கிடாதீங்க”
அவருடைய சமாதானம் இன்னும் வயிற்றெரிச்சலைக் கிளப்பியது அவனுக்கு அந்த நிலையில் அவரிடம் அதிகம் பேசிக் கொண்டிருப்பதற்கு நாணமும், பயமும் அடைந்தான் அவன். நேரடியாக வந்த விஷயத்தைத் தொடங்கினான். "அப்பா உங்களைப் பார்த்திட்டு வரச் சொன்னாங்க. 'வட்டி நிறையச் சுமந்து போச்சாம். அசலைத் தீர்க்காட்டாலும், வட்டியையாவது அப்பப்ப ‘பைசல்' செய்திட்டா நல்லாருக்கும்னாங்க”
“நான் மட்டும் வேண்டாமின்னா சும்மா இருக்கேன், ஏலாமைதான் காரணம். இந்த வருஷம் எனக்கு வெள்ளாமை ஒண்ணும் சுகமில்லை. சாவியும், பொக்குமா ஏமாத்திடிச்சு எப்படியாச்சும் பார்த்துக் கொடுத்திடணும்னு தான் இருக்கேன்.”
மல்லுக்காரர் குரலில் இரக்கம் கொடுத்துத் தணிந்து பேசினாலும் அந்தப் பணிவும், தாழ்வும், இரங்கிய குரலும் - செயற்கையாக இருந்தன. வம்சத்துக்கே பழக்கமில்லாதவை போல் தோன்றின. அவன் புறப்படுவதற்காக எழுந்துவிட்டான்.
"சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்.வாரேன்.” எழுந்திருந்தவன், உங்க பொண்ணுக்குத் துணிச்சலும், துடுக்கும் ரொம்பத்தான் அதிகமாயிருக்கு கொஞ்சம் அடக்கியே வையுங்க” என்று சொல்ல நிமிர்ந்தான். நிலைப்படியில் கையூன்றி மறுபடியும் அவள் வந்து நிற்பதைக் கண்டதும் அவன் வாயில் வார்த்தைகள் வரவில்லை. தனியாக அவமானப்பட்டது போதாதென்று மறுபடியும் அவருக்கு முன்னால் அவமானப்பட விரும்பவில்லை அவன். தான்.அவமானப்பட்ட விவரம் அவருக்குத் தெரியவிடுவதற்கும் அவன் தயாராயில்லை. சேற்றில் விழுந்திருந்த புதுச் செருப்புகளை எடுத்துக் கொள்ளாமலே வெறுங்காலோடு தெருவில் இறங்கி விறுவிறுவென நடந்தான்.நிலைப்படியில் நின்றிருந்த அவள் கலீரென்று சிரித்த சிரிப்பு அவன் செவிகளை எட்டி ஆண்மையைக் கொதிக்கச் செய்தது.அந்தச் சிரிப்பை ஒட்டி, “என்னம்மா சிரிப்பு வேண்டிக் கிடக்கு? கடன் வாங்கின லட்சணந்தான் சிரிப்பாச் சிரிக்குதே! நீ வேறே சிரிக்கணுமா?” என்று மல்லுக்காரர் மகளைக் கடிந்து கொண்ட குரலும் அவனுக்குக் கேட்டது.
ஒரு பெண் பிள்ளைக்கு இத்தனை திமிரா? ஒரு விநாடிநேரமாவது இந்தத் திமிரை அடக்கிப் பார்த்தாலல்லவா ஆண் பிள்ளை என்ற வார்த்தைக்கு ஏதாவது அர்த்தம் இருக்க முடியும். 'நான் பொம்பளை!, என்னை விட்டுடுங்க' என்று கண்ணில் நீர் மல்க அவள் கெஞ்சிக் கொண்டு மண்டியிடும்படி ஒரு நிமிஷமாவது ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திப் பார்த்துவிடவேண்டும் என்று கொதித்தது முத்தழகுவின் நெஞ்சம் பெரிய பஞ்சு மூட்டையில் ஒரு பொறி நெருப்பு விழுந்து சிதறின மாதிரி இந்த அவமானச் சம்பவம் அவன் மனத்துள்ளிருந்து விலகாமல் ஒரு மூலையில் கனிந்து கனன்று கொண்டேயிருந்தது.
அந்த முரட்டுப் பெண்ணின் தகப்பனார் தன் தந்தையிடம் பணத்துக்குக் கடன் பட்டிருந்ததுபோல் - தான் அவளிடம் துணிச்சலுக்குக் கடன் பட்டுக் கொண்டு வந்து விட்டது போல் அவனுக்குத் தாழ்வு மனப்பான்மை உண்டாயிற்று. அதோடு அவளுக்குப் பட்ட துணிச்சல் கடனை வட்டியும், முதலுமாக, எவ்வாறாவது தீர்த்துக் கொண்டுவிட வேண்டும் என்று அவன் மனத்தில் ஒரு வைரம் ஏற்பட்டது.
2
விடுமுறையை நிம்மதியாகவும், இன்பமாகவும் கழிக்கலாமென்று கிராமத்துக்கு வந்த முத்தழகுவுக்குக் கிராமத்தில் கால் வைத்த முதல்நாளே இப்படிக்கடன் வசூலிக்கப் போன இடத்தில் ஒரு பெண் பிள்ளையிடம் மாட்டிக் கொண்டு அவமானப்பட நேரிடுமென்று தெரியாது. - . . . மறக்க முடியாமல் அதே நினைவில் கொதித்துக் கொண்டிருந்த மனத்தை அமைதிப்படுத்த இயலாமல் சாயங்காலம் மாந்தோப்புப் பக்கம் உலாவப் போனான் அவன். ஊரிலேயே பெரிய மாந்தோப்பு அது. அவர்களுடைய பண்ணைக்குச் சொந்தமானது. மரங்களடர்ந்து இருண்டு பசுமை செறிந்தது. தோட்டத்தின் நடுவில் நான்கு கமலை கட்டி நீர் இறைப்பதற்கு வசதியான பெரிய கிணறு.
கிணற்றைச் சுற்றிலும் பச்சரிசி மாங்காய் என்ற வகையைச் சேர்ந்த மாமரங்கள். உயர்ந்தரக 'பிஸ்கட்'டைச்சுவைத்துச் சாப்பிடுகிற மாதிரி அந்த மாங்காய்க்கு ஒரு தனி ருசி உண்டு. முத்தழகு பச்சரிசிமாமரத்தடியில் போய் உட்கார்ந்தான். உட்கார்ந்தபடியே கைக் கெட்டுகிறாற் போலிருந்த ஒரு மாங்காயைப் பறித்துச் சுவைக்க ஆரம்பித்தான். கிளிகளின் மிழற்றுதல்,அணில்களின் கீச்சொலி, குயிலின் குரல், எல்லாமாகச் சேர்ந்து மாலை நேரத்தில் அந்தத் தோட்டத்துக்குத் தனி அழகு உண்டாக்கிக் கொண்டிருந்தன.
’சொத்'தென்று முத்தழகுவின் பிடரியில் ஒரு மாங்கொட்டை விழுந்தது."சே! சே! கிளியும், அணிலும், இந்தத் தோப்பிலே முக்கால்வாசி மாங்காயை வேட்டு வச்சிடுது” என்று முணுமுணுத்தவாறே பிடறியைத் தடவி விட்டுக் கொண்டான் அவன்.
மறுபடியும் நன்றாகக் கடிக்கப்பட்ட கொட்டை ஒன்று '‘ணங்' ’கென்று அவன் உச்சி மண்டையில் விழுந்தது."இதென்னவம்பு? இந்தத்தோப்பிலே கிளிகள் தொல்லை அதிகமாப் போச்சி” என்று எறிவதற்காகக் கீழே குனிந்து ஒரு கல்லை எடுத்துக் கொண்டு நிமிர்ந்தான் அவன்.
நிமிர்ந்தவன் அப்படியே திகைத்து நின்றான். மரக்கிளை மேல் கிளி இல்லை. வீரப்பமல்லுக்காரர் வீட்டுப் 'பெண் கிளி' படுஅட்டகாசமாக உட்கார்ந்து கால் நீட்டி மாங்காயைக் கடித்துக் கொண்டிருந்தது. ஒரு விநாடி மரக்கிளையில் அவள் ஒயிலாகவும், அநாயாசமாகவும் உட்கார்ந்திருந்த தோற்றத்தில் மனத்தைப் பறி கொடுத்துவிட்டு நின்றான் முத்தழகு. பட்டை உரித்த வாழைத்தண்டு மாதிரி முழங்கால்வரை தெரிய அவள் அமர்ந்திருந்த கோலம் அவனை என்னவோ செய்தது. ஆனால், மனித இயற்கையான இந்தச் சிறிய பலவீனமெல்லாம் ஒரே ஒரு விநாடிதான். அடுத்த விநாடியே அவள் தன்னை அவமானப்படுத்திய முரட்டுப் பெண் 'அவள் மேல் தன் கோபத்தை முழு அளவில் ஒன்று திரட்டிக் காட்ட வேண்டும்' என்ற உணர்ச்சிகளை மிக விரைவாக அடைந்தான் அவன்.முகத்தில் கடுமை பரவிப் பதிந்தது.
“கீழே இறங்கி வா, சொல்கிறேன் - இப்படிச் சர்வ சுதந்திரமாக ஏறி உட்கார்ந்து மாங்காய் பறித்துத் தின்பதற்கு இது உங்கள் அப்பன் வீட்டுத் தோப்பு என்ற எண்ணமோ? உள்ளே நுழைகிறபோதே காலை முறிக்க ஆளில்லாததனால் தானே இப்படித் துணிந்து, மாங்காய் திருட முடிகிறது?” என்று தோப்பே அதிரும்படி கூப்பாடு போட்டான் முத்தழகு.
அவனையோ, அவன் கூப்பாட்டையோ, இலட்சியமே செய்யாதவள்போல் மெல்ல மரத்திலிருந்து இறங்கினாள் அவள் பதற்றமோ, பயமோ சிறிது கூட இல்லை. உடைமைக்காரன் திருடும்போது பார்த்துவிட்டானே என்ற தடுமாற்றமாவது இருக்க வேண்டாமா? கிடையவே கிடையாது. அலட்சியப் புன்னகை. மறவர் குடிப் பெண்ணுக்கே இயல்பான வீறும் பீடும் கலந்த நடை 'நாணமும் வெட்கமும் நான் அறியமாட்டேன்’ என்பதுபோல் ஒரு திமிர்.இரண்டு கைகளையும் இடுப்பில் ஊன்றிக் கொண்டு அவனுக்கு முன்னால் வந்து நிமிர்ந்து நின்றாள் அவள். அவனுக்கு அழகு காட்டிக் கேலி செய்வது போலிருந்தது அவள் நின்ற விதம். அவனைப் பதிலுக்கு விளாச ஆரம்பித்தாள்; "ஐயா! ஆண் பிள்ளைச் சிங்கமே! எங்கள் அப்பன் வீட்டில் இப்படி ஒரு தோப்பு இருந்தால் இரண்டு மாங்காய்க்காக இப்படி மட்டு மரியாதை இல்லாமல் பேசமாட்டோம். உங்கள் தோப்புக்கு வருகிறவர்களின் கால் ஒன்றும் முருங்கைக் குச்சி இல்லை, முறித்து விடுவதற்கு”
"சீ, வாயைப் பாரு. திருடித் தின்னிட்டுப் பேச்சு வேறே. மரியாதை தெரிஞ்சவள் நீ ஒருத்திதான் என்கிறதைக் காலையிலே உங்க வீட்டுக்கு வந்திருந்தப்ப நல்லாக் காட்டினியே!”
"கொஞ்சம் நாக்கை அளந்து பேசுங்க. பணத்துக்குத்தான் உங்ககிட்டக் கடன் பட்டிருக்கோம் மட்டு மரியாதை, மானம் இதுக்கெல்லாம் கடன் படலை”.
'அம்மா, பெண்புலியே! இந்தத் திமிர்ப் பேச்செல்லாம் உங்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டு பேசலாம். இங்கே பேசினால்.”
“பேசினால் என்ன செய்வீங்களாம்?”
அவன் கைகள் அவள் பிடரியை நோக்கிச் சினத்தோடு உயர்ந்தன.
“என்ன செய்வேனா? இதோ இப்படித்தான் செய்வேன்!” மனத்திலும் கைகளிலும் ஏற்பட்ட ஒரு வெறியில் தான் என்ன செய்கிறோம் என்பதையே சிந்திக்காமல் அவளைத் தள்ளிவிட்டான் முத்தழகு. பின்புறம் நீர் நிரம்பிக் கிடந்த கிணற்றில் விழுந்தாள் அவள். ஏதோ அசட்டுத் துணிச்சலில் அதைச் செய்துவிட்டாலும் அவன் உடம்பு பயத்தால் நடுங்கியது. நீரில் அவள் விழுந்ததால் எழுந்த ஒசையைக் கேட்டபோது அவனுக்குத் திகில் பிடித்தது. நீந்தத் தெரியுமோ, தெரியாதோ - தான் குருட்டுத்தனமாகப் பிடித்துத் தள்ளிவிட்டதன் விளைவு என்ன ஆகுமோ?’ என்று நிதானமாக நினைத்துப் பார்த்தபோது தான் முரட்டுத்தனமாக ஏதோ பெரிய தப்புக் காரியம் செய்து விட்டதை உணர்ந்தான்.
எப்படியாவது தன்னைத்தப்பிக்கச்செய்துகொண்டு ஓடிவிட்டால் போதுமென்ற ஒரு கோழைத்தனமான முடிவு அப்போது அவன் மனத்தில் தோன்றியது. திரும்பிப் பாராமல், ஒட்டமும் நடையுமாக வீட்டுக்கு விரைந்தான் முத்தழகு, உள்ளங்காலில் முறிந்து நின்று வெளிவராத முள்ளைப்போல் அவளைக் கிணற்றில் தள்ளிவிட்டு வந்த குற்ற நினைவு மட்டும் மனத்தில் குறுகுறுத்துக் கொண்டே இருந்தது. அவன் மனமும் உடம்பும் ஒரு நிலை கொள்ளவில்லை. முகத்தில் வேர்த்துக் கொட்டியது. அதற்கேற்றாற்போல், “என்னடா முத்து? எங்கேயிருந்து இப்படி வேர்க்க விறுவிறுக்க ஒடி வருகிறாய்? முகத்தைப் பார்த்தால் என்னவோ கொலை பண்ணிவிட்டு ஒடி வருகிறவன் மாதிரி இருக்கிறதே?” என்று வீட்டுக்குறட்டில் உட்கார்ந்து வட்டிக் கணக்குப் பேரேட்டைப் பார்த்துக் கொண்டிருந்த தகப்பனார் வேறு அவனைக் கேட்டுவிட்டார். பதறிப் போனான் அவன்.
"ஒண்னுமில்லேப்பா, தோப்பிலேயிருந்து வரேன்” என்று அப்பாவுக்குப் பதில் சொல்லிவிட்டு உள் வீட்டுக்குள் போய் ஒரு இருண்ட மூலையில் ஈஸிசேரைப் போட்டுக் கொண்டு சாய்ந்தான். அவனுடைய மனக்கண்களுக்கு முன்னால் பயங்கரமான கற்பனை நிழல்கள் ஆடின. வீரப்பமல்லுக்காரரும், அவரிடம் சிலம்பம் படித்த சீடப் பிள்ளைகளும் கத்தியும், வெட்டரிவாளும், பாலாக்கம்பும் தூக்கிக் கொண்டு, கலகக்காரர்களைப்போல் அவன் வீட்டை நோக்கித் 'திமுதிமு’வென்று ஓடி வருகிறார்கள். “ஒரு கன்னிப் பெண்ணைத் தொட்டுப் பிடித்துக் கிணற்றிலே தள்ளுவதாவது? வெளியே இழுத்துக்கொண்டு வா, அந்தப் படித்த நாய்ப் பயலை. பெண் பிள்ளையைத் தொட்ட கையை முறித்துப் போட்டு விடுகிறேன்” என்று வீரப்ப மல்லுக்காரர் உறுமுகிறார். ஊரே அவரோடு ஒன்று சேர்ந்து கொண்டு நியாயம் கேட்டு அவன் வீட்டுக்கு முன் வந்து கூடிக் கொதித்து நிற்கிறது.
இருட்டில் ஈஸிசேரில் சாய்ந்து கொண்டு இப்படி நடக்குமோ என்று நினைக்கும்போதே கொலைக்களத்தில் கொண்டு போய் நிறுத்தினதுபோல் அவன் உடம்பு வெடவெடத்தது.எதையோ பெரிதாக இழக்கப் போகிற மாதிரி நெஞ்சு படக் படக் கென்று அடித்துக் கொண்டது.
பிடித்துத் தள்ளியதில் இசைவு பிசகாகக் கிணற்றுச் சுவரிலாவது பாறையிலாவது மோதி அடிபட்டிருக்குமோ? அல்லது தண்ணீரைக் குடித்து, முங்கி, முங்கி இறந்து மிதந்துவிட்டாளோ?
அந்தப் பெண் நீரில் நிலைகுலைந்து வீழ்வதுபோலவும் முங்கியும், மேலெழுந்தும், தண்ணீரைக் குடித்து மரண அவஸ்தைப்படுவது போலவும் அவன் கண்கள் முன் காட்சிகள் விரிந்தன.
வெகுநேரம் அசையாமல் இருளில் கண்ணை மூடியவாறு ஈஸிசேரில் கிடந்தான் அவன். உடம்பு நெருப்பாய்ச் சுட்டது. கண்கள் கபகபவென்று எரிச்சல் எடுத்தன. தலையை வலித்தது. ஜன்னி கண்டமாதிரி ஒரு நடுக்கமும், குதுகுதுப்பும் ஏற்பட்டிருந்தன.
'நீ கொலை செய்துவிட்டாய்! அநியாயமாக ஒரு பெண்ணைக் கைகூசாமல் அத்தனை உயரத்திலிருந்து கிணற்றில் பிடித்துத் தள்ளலாமா? பாவி பாதகா என்று அவன் மனமே அவனை இடித்துக் காட்டுவது போலிருந்தது. ஈஸிசேரில் உடம்பு துக்கித் துக்கிப் போட்டது.
“அட பாவி உடம்பு ஏண்டா இந்தக் கொதி கொதிக்குது? ஏண்டா இப்படிப் பிசாசு அறைப்பட்டவன் மாதிரி முழிக்கிறே? என்னடா உனக்கு? தோப்புக்குப் போனேன்னியே ஏதாவது பயந்துக்கிட்டியா?" என்று அவனுடைய அப்பா வந்து பார்த்துவிட்டுத் தடபுடல் படுத்தினார். கொளுமோர் காய்ச்சிக் கொடுக்கச் சொன்னார். உடம்பைத் தொட்டுப் பார்த்துவிட்டு, 'ஜன்னி கண்டவன் மாதிரி உதறுதேடா?” என்றார்.
"தோப்புலே கமலைக் கிணற்றண்டே போனியா? அங்கே தான் பண்ணைக்காரச்செங்கான் நாந்துக்கிட்டுச் செத்தான்!” என்று தாமாகவே வேறு காரணம் கற்பித்துக்கொண்டு பதறினார் அவனுடைய தந்தை.இரவு முழுவதும் முத்தழகுக்கு உறக்கம் வரவில்லை. 'நாளைக்கு விடிந்தால் ஊருக்கெல்லாம் தெரிந்துவிடும். அத்தனை பேரும் அந்தக் கிணற்றுக்குத்தானே குளிக்கப் போவார்கள்? காலையில் முதல் முதலாகக் குளிக்கப்போகிறவன் அவள் மிதப்பதைப் பார்ப்பான்.அலறிப்புடைத்துக் கொண்டு ஒடி மல்லுக்காரரிடம் போய்ச் சொல்லுவான்.
அப்புறம்? அப்புறமென்ன? சந்தி சிரிக்க வேண்டியதுதான். விடிகிற நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. மணி நாலரை. இன்னும் சிறிது நேரத்தில் வீடு கலகலவென்று வழிப்புப் பெற்றுவிடும். தெருவில் வாசல் தெளிக்கிறவர்கள், குளிக்கப் போகிறவர்கள், வயல்,வரப்பு என்று உழவு வேலையாகப் போகிறவர்கள்-எல்லோரும் நடமாடித் தெருவை கலகலப்பாக்கி விடுவார்கள். ஊர் விழிக்குமுன் எங்கேயாவது ஒடிப் போய்விட்டால் என்ன? ஐந்தே கால் மணிக்கு வடக்கே போகிற ரயில் ஒன்று இருக்கிறது.
முத்தழகு போர்வையை உதறித் தள்ளிவிட்டுப் படுக்கையிலிருந்து எழுந்தான். அவன் மனம் தீர்மானமாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. ஒசைப்படாமல் பெட்டியைத் திறந்து கைக்குத் தோன்றிய அளவு பணத்தை எடுத்துச் சட்டைப் பையில் திணித்துக் கொண்டான். கூடத்தில் அவன் தந்தை தூங்கிக் கொண்டிருந்தார். மெல்ல நடந்து அவரைக் கடந்து வாசற் கதவைத் திறந்து கொண்டு தெருவில் இறங்கினான். மேல் துண்டைத் தலையில் போட்டு மறைத்துக் கொண்டு நடந்தான்.
ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகிற போக்கில் இன்னொரு சந்தேகத்தையும் தீர்த்துக்கொண்டு போய்விட்டால் நல்லதென்று அவனுக்குத் தோன்றியது. அவனுடைய சந்தேகப்படி நடந்திருக்கும் பட்சத்தில் சமீபகாலத்தில் ஊர் திரும்ப வேண்டிய அவசியமே அவனுக்கு இருக்காது. எங்கேயாவது ஒடித் தலைமறைவாக இருந்துவிட வேண்டியதுதான்.
அவ்வளவு உயரத்திலிருந்து முரட்டுத்தனமாக அவன் கிணற்றுக்குள் அவளைத் தள்ளியதற்கு நீச்சுத் தெரியாதவளாயிருந்தால் இதற்குள் இறந்து போய்ப் பிணமாக மிதந்து கொண்டிருப்பாள். நீச்சுத் தெரிந்தவளாக இருந்தாலும் தானாக கிணற்றில் குதித்தால் அடிபடாது. விளிம்புச் சுவரோரத்திலிருந்து இன்னொருவர் பிடித்துத் தள்ளினதால் எங்கேயாவது அடிபடாமல் போகாது.
இரண்டில் எது நடந்திருந்தாலும் முத்தழகு குற்றவாளிதான்.இறந்துபோய் அந்தப் பெண் மிதந்து கொண்டிருந்தால் கொலைகாரன் என்று சொல்லுகிற அளவுக்குப் பெரிய குற்றவாளி அவன். மறுபடியும் ஊருக்குத் திரும்பியார் முகத்திலும் விழிக்கவே முடியாத அளவுக்குப் பெருங்குற்றம் அது. அடிபட்டுக் காயமடைந்திருந்தால் சிறிது காலத்தில் மறந்து மறைந்து போகிற சாதாரணக் குற்றம்தான்.
ஸ்டேஷனுக்குப் போகிற வழியில்தான் அந்த மாந்தோப்பு இருந்தது. போகிற போக்கில் ஒரு நடை உள்ளே நுழைந்து பார்த்துவிட்டுப் போய்விட்டால் இரண்டில் எது நடந்திருக்கிறதென்று சந்தேகமறத் தெரிந்துவிடும். கிணற்றில் ஒன்றும் மிதப்பதாகத் தெரியாவிட்டால் கவலைக்கிடமாக எதுவும் நடக்கவில்லை என்று சற்றே திருப்தியோடு இரயில் ஏறலாம் என்று எண்ணினான் அவன்.
மாந்தோப்புக்குள் நுழைந்தான் முத்தழகு, இருள் பிரிந்து ஒளி புலர்ந்தும் புலராமலும் இருக்கிற மங்கல நேரம் தோப்பு முழுதும் காடு"போல் "கீச்'சென்று தனிமையில் மூழ்கிக் கிடந்தது. நடந்து உள்ளே போவதற்கே பயமாக இருந்தது. கமலைக் கிணற்றடியில் பண்ணைக்காரன் செங்கான் நாந்து கொண்டு செத்த விஷயம் வேறு இந்தச் சமயம் பார்த்து நினைவுக்கு வரவா வேண்டும்? மருளும் மனமும், மிரண்ட கண்களும், தயங்கிய நடையுமாக அவன் கிணற்றடிக்குச் சென்று நின்றான். பயத்தினாலும், பதற்றத்தினாலும் வேகமாக அடித்துக்கொள்ளும் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு மெல்லக் குனிந்து கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தான்.
"அப்பாடா! கிணற்றில் எதுவும் மிதக்கவில்லை. நிம்மதியாக மூச்சு வந்தது முத்தழகுக்கு. ஆனாலும் ரயிலேறி ஒடிப் போய்விட வேண்டுமென்ற அவசரமும், பரபரப்பும் மட்டும் தணியவே இல்லை.
"செத்து மிதந்தால்தான் குற்றமா? சுவரிலோ, பாறையிலோ மோதிக் காயம் பட்டால்தான் குற்றமா? திருமணமாகாத பெண்ணைத் தனியாக இருக்கும்போது ஒரு ஆண்பிள்ளை தொட்டுக் கிணற்றில் தள்ளினதே பெருங்குற்றந்தானே? அவள் ஆயிரம் குற்றங்கள் செய்து என்னை ஏளனமாகப் பேசியிருக்கலாம். அவமானப்படுத்தி இருக்கலாம். ஆனால் அதை யாரும் குற்றமாக ஒப்பமாட்டார்களே! நான் செய்தது தானே குற்றமாகத் தோன்றும்? என்னுடைய அப்பா பெரிய பண்ணையார்! ஊரிலேயே அதிகமாகச் செல்வமுள்ளவர். ஆனாலும் இந்தப் பாழாய்ப் போன கிராமத்தில் பணத்தைவிட நியாயத்துக்குத்தானே அதிக மதிப்பு?:”
கைக்கடிகாரத்தைப் பார்த்தான். ரேடியம் டயல் நீல ஒளியை உமிழ்ந்தது. மணி ஐந்து அடித்து ஐந்து நிமிஷம் ஆகியிருந்தது. ‘ரயிலுக்கு இன்னும் பத்தே நிமிஷம்தான் இருக்கிறது. புறப்பட்டுவிட வேண்டியதுதான் என்று கிணற்றடியிலிருந்து திரும்பினவன் தனக்குப் பின்னால் கிணற்று மேட்டில் நின்று கொண்டிருந்த உருவத்தைப் பார்த்தவுடன் பேயறை வாங்கினவன் போல் திகைத்துத் திடுக்கிட்டு நின்றான். அவன் உடம்பு பதறிப் பயந்து நடுங்கியது.
கைகளை இடுப்பில் ஊன்றிய வீறாப்புடன் அன்று மாலை அவன் கிணற்றில் தள்ளுமுன் நின்றாளே அதே கம்பீரத் தோற்றத்தில் வீரப்பமல்லுக்காரர் மகள் அங்கு நின்று கொண்டிருந்தாள்.
இப்போது அவளுடைய வலதுகையில் பளபளவென்று மின்னும் வெட்டரிவாள் ஒன்றும் இருந்தது. கோபம் உள்ளடங்கிய கள்ளச் சிரிப்பு அவள் முகத்திலும், இதழ்களிலும் தெரிந்தது. வெறியுடன் பழிவாங்க வந்து நிற்பவள்போல் நின்றாள் அவள் வந்து நிற்பது, அவளாஅவளுடைய ஆவியா என்றுகூடச் சந்தேகம் ஏற்பட்டது அவனுக்கு .
பண்ணையார் வீட்டுப்பிள்ளைகளெல்லாம் இவ்வளவு சீக்கிரமாக எழுந்திரிச்சிக் குளிக்க வரலாமா? பன்னிரண்டு நாழிகை வரை தூங்கிட்டுக் கிடக்க வேண்டாமா?” அவள்தான் குத்தலாகக் கேட்டுக் கொண்டே அவனை நோக்கி நடந்து வந்தாள். விளையாட்டாகச் சுழற்றுவதுபோல் வெட்டரிவாளை வலது கையில் சுழற்றிக் கொண்டே வந்தாள்.
ஒடிந்து விழுகிறாற்போல் சோனிப் பயலாக உடல் வன்மையும், மனத்திடமும் குறைந்து கோழையாய் நிற்கும் தன்னை அவளோடு ஒப்பிட முயன்றான் முத்தழகு, முடியவில்லை. எட்டு வாலிபர்களைச் சிலம்பக் கழியால் அடித்துப் போடுகிற உடல் பலமும் மனப்பலமும் இருக்க முடியும் அவளுக்கு அவளெங்கே? தான் எங்கே? சூறைக் காற்றில் ஆடுகிற சோளத்தட்டைக் குச்சி மாதிரி அவன் உடம்பு வெடவெடத்தது. தன்னால் கிணற்றில் பிடித்துத் தள்ளப்படும்போது நேற்று அவள் எந்த இடத்தில் நின்று கொண்டிருந்தாளோ, அதே இடத்தில் இன்று தான் நின்று கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான்.
அவள் தன்னைப் பதிலுக்குப் பதில் கிணற்றில் பிடித்துத் தள்ளிவிட்டால் தனக்கு நீந்தக்கூடத் தெரியாதென்பதை நினைத்துக் கொண்டான். அவள் கையில் இருக்கிற வெட்டரிவாளைக் கண்டு குலைநடுங்கினான் அவன்.
'குதிகால் பிடரியில்பட ஒரே ஒட்டமாக ஓடிவிடலாமா? என்று தோன்றியது. அப்படி ஒடுவதற்கும் வழி இல்லை. பின்னால் கிணறு, முன்னால் அரிவாளோடு அந்தப் பெண் புலி. நாக் குழறித் தடுமாற்றத்தோடு அவளிடம் பேச ஆரம்பித்தான்.
‘நேற்று நான் வேணுமின்னு அப்படிச் செய்யலை ஏதோ கை தவறி. தெரியாமே. உங்க அப்பா கிட்டச் சொல்லிடாதே. என்னை மன்னிச்சிடு.”
அவன் உளறியதைக் கேட்டு அவள் கலீரென்று சிரித்தாள்."ஏன் இப்படி நடுங்கி உதறுது உங்க உடம்பு? ஏதோ பிசாசைக் கண்ட மாதிரி கண்வெள்ளை விழி தெரியுதே! நீங்க என்னா சொல்லுறீங்க? உங்களை எதுக்கு நான் மன்னிக்கணும்?” என்றாள் பாதாதிகேச பரியந்தம் அவனை உற்றுப் பார்த்துக் கொண்டே
அவள் வஞ்சகமாக ஒன்றும் தெரியாததுபோல் நடிக்கிறாளோ என்று தோன்றியது அவனுக்கு. சிறிது துணிவை வரவழைத்துக்கொண்டு அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். இப்போதும் அந்த முகத்தில் அலட்சிய பாவமும் சிரிப்பும்தான் தெரிந்தன. வஞ்சகத்தின் சாயல் சிறிதுகூட இருப்பதாகத் தெரியவில்லை. அவன் மறுபடியும் மன்னிப்புக் குழைகிற தொனியில், "நேற்று நீ என்னிடம் அதிகமாக வரப்பு மீறிப் பேசிட்டே, கோபத்திலே என்ன செய்கிறோம்னு தெரியாமே உன்னை நான் கிணற்றிலே பிடிச்சுத் தள்ளிட்டேன்; உனக்கு எங்கேயாவது அடிகிடி பட்டிருக்குமோன்னு இராத்திரி முழுவதும் உறங்கலை நான்." என்று ஆரம்பித்தான்.
இதைக் கேட்டு அந்தத் தோப்பே அதிரும்படி இரைந்து சிரித்தாள் அவள். ஏதோ மாபெரும் வேடிக்கையைக் கேட்டுவிட்டவள்போல் குலுங்கக் குலுங்கச் சிரித்தாள். அவனுடைய பயந்த முகத்தைப் பார்க்கப் பார்க்க மறுபடியும் சிரிப்புப் பொங்கிக் கொண்டு வந்தது அவளுக்கு.“அவள் ஏன் இப்படிச் சிரிக்கிறாள்? என்னுடைய மன்னிப்பை ஏற்றுக் கொள்ளாமல் எப்படியும் பழி வாங்கியே தீருவதென்று உறுதி செய்து கொண்டுதான் இப்படிச் சிரிக்கிறாளோ?' என்றெண்ணி அவன் மேலும் நடுங்கினான். கேட்பதற்குப் பயந்து கொண்டே, “நீ ஏன் இப்படிச் சிரிக்கிறாய்?" என்று கேட்டும் வைத்தான்.
"நீங்க என்னை எப்போது கிணற்றில் தள்ளினீங்க? ஏதாவது சொப்பனம் கண்டீர்களா? நான் குளிச்சிட்டுப் போகத்தான் நேற்று இங்கே வந்திருந்தேன். எனக்கு நல்லா நீச்சுத் தெரியும் கிணற்றங்கரை மேலே இந்தப் பச்சரிசி மாமரத்திலே ஏறி அங்கிருந்து தண்ணிலே குதிச்சு நீந்துவேன். அதுக்காகத்தான் மரத்துமேலே ஏறினேன். குதிக்கறத்துக்கு முன்னாலே ஒண்ணு ரெண்டு மாங்காயை ருசி பார்த்தேன். நீங்க வந்தீங்க. ஏதோ சத்தம் போட்டீங்க கீழே இறங்கி வந்து நானும் பதிலுக்குச் சத்தம் போட்டேன்! உடனே இந்தத் திமிர்ப் பேச்செல்லாம் பேசினால் உன்னைச் சும்மா விடமாட்டேன் அப்படீன்னிங்க. 'என்ன செய்வீங்களாம்?’ என்று பதிலுக்குக் கேட்டேன். 'இதோ என்ன செய்கிறேன் பாரு' என்று கையை ஓங்கிட்டுத் தொட வந்தீங்க, நீங்க எங்கே தொட்டிடுவீங்களோ என்கிற கூச்சத்திலே நானே தண்ணீரிலே குதிச்சுட்டேன். கிணத்திலே நல்லாத் துளைஞ்சு நீச்சலடிச்சுக் குளிச்சிட்டுக் கரையேறி வந்து பார்த்தேன். உங்களைக் காணலே. இதோ இந்தக் கைக்குட்டையை இங்கே போட்டுட்டுப் போயிட்டீங்க. அவனிடம் நீட்டினாள்.
அவள் சொன்ன பதிலைக் கேட்டு அவன் மலைத்துப் போய் நின்றான். அவள் கிணற்றில் குதித்த அதிர்ச்சியில் தானே பிடரியைப் பிடித்துத் தள்ளிவிட்டதாகப் பரபரப்படைந்து பதறி ஒடியிருக்க வேண்டுமென்று அப்போது தான் அவனுக்குத் தோன்றியது. தன்னுடைய வடிகட்டின கோழைத்தனத்தை எண்ணித் தானே வெட்கப்பட்டுக் கொண்டான் முத்தழகு அவள் கூறியவற்றைக் கேட்டபின் அவனுக்கு அவளிடமிருந்த பயமெல்லாம் போய்விட்டது. முதல் நாள் அவளுடைய வீட்டில் பட்ட சிறு அவமானம் கூட மறந்துவிட்டது.
அவளைக் கிணற்றில் தள்ளிவிட்டோமென்று வீண் பிரமையினால் விடிய விடியத் தான் பட்ட பயத்தையும் ஊரைவிட்டே ஓடிவிடலாமென்று இருளோடு ரயிலுக்குப் புறப்பட்டதையும் சிரித்துக்கொண்டு அவளிடம் சொல்லிவிட்டான் முத்தழகு. எல்லாவற்றையும் கேட்டு விட்டு அவளும் சிரித்தாள். "நீங்க சொல்கிறதைக் கேட்டா என்னைப் புலி, சிங்கம்னு நினைச்சு அரண்ட மாதிரியில்லே தோணுது?”
"சும்மாவா பின்னே? செருப்பைத் தூக்கி எறிஞ்சிட்டு முறைச்சே பாரு அதிலிருந்து எனக்குப் பயந்தான் உங்கிட்டே
"வேணும்முன்னா தூக்கி எறிஞ்சேன் வாசல்லே கழட்டிட்டு வாங்கன்னு எங்க வீட்டு வளமொறையைச் சொன்னேன். நீங்க கேக்க மாட்டேன்னீங்க, தூக்கி எறிஞ்சேன். வாயைக் கொடுத்தால் நானும் பதிலுக்குப் பதில் பேசிடுவேன். மத்தபடி நான் ஒண்ணும் நீங்க நினைக்கிற மாதிரி முரட்டுப் பொண்ணு இல்லை!” - இதைச் சொல்லும்போது நாணத்தினால் சற்றே முகம் சிவக்கத் தலை குனிந்தாள் வீரப்பமல்லுக்காரர் மகள்.“முதல்லே அந்த வெட்டரிவாளைக் கீழே போடு. உன்னை அதோட சேர்த்துப் பார்க்கறப்பப் பயமாயிருக்குது. நேற்று இரவு பூராவும் பயந்தது போதும்” என்றான் முத்தழகு,
"இராத்திரி பூரா ஏன் நீங்க பயந்தீங்களாம்?”
"ஏனா? கலியாணமாகாத உன்னை நான் தொட்டுப் பிடித்துக் கிணற்றிலே தள்ளிவிட்டேன்னு நீ உங்கப்பாகிட்டேச் சொல்லிட்டா, அவர் ஊரெல்லாம் திரட்டிக்கிட்டு அரிவாளும், கம்புமா எங்க வீட்டு வாசல்லே வந்து நிக்கப் போகிறாரேன்னுதான்.”
"அப்படி நினைச்சுப் பயந்தது நிசந்தானே?”
“நிசந்தான். ஏன் இப்படிக் கேட்கிறே?”
“இல்லே; எங்கப்பா அடிக்கடி சொல்லுவாரு எப்பவும் பெண்ணுங்கிறவள் நெருப்பு மாதிரி சூடுதான் நெருப்பை நெருங்கவிடாத குணம். பெண்ணுக்கு நிறைன்னு ஒன்று இருக்கு. அந்த நெறை அவளுக்குக் காப்பு. அந்த நிறைதான் ஆம்பளையை அவளிடம் நெருங்கவிடாமக் காக்குது. ஆம்பளை இந்த நிறைக்கு அருகில் வரத்தான் பயப்படுகிறான். ஒரே ஒருத்தன்தான் நிறையை மீறணும். அவன்தான் புருஷன்' - அப்பிடிம்பாரு”
"அப்போ நீ உன்னை நெருப்புன்னு சொல்றே?” என்று சிரித்துக்கொண்டே அருகில் நெருங்கி அவள் தோளைத் தொட்டான் முத்தழகு, அவள் அசையவில்லை.
“நெருப்புச் சுடவில்லையே?”
“உங்களைச் சுடாது.”
“ஏனோ?”
அவள் தலைகுனிந்தாள். அவன் முகம் மலர்ந்தது. “நான் வரேன், வேலிக்கு முள் வெட்டிட்டுப் போகணும். அதான்.அதிகாலையிலே எழுந்திரிச்சிப் புறப்பட்டேன்.” என்று நகர்ந்தாள் அவள்.
‘போயிட்டு வா! இனிமேல் தினம் உங்க வீட்டுப் பக்கம் வட்டி கேட்க வருவேன்.”
“வாருங்க.. ஆனால் செருப்புப் பத்திரம்” சிலேடையாகப் பதில் சொன்னாள் அவள்.
இரண்டு பேருடைய சிரிப்பொலி அமர்க்களமாகக் காற்றில் மலர்ந்தது.
'இந்த முரட்டுப் பெண்ணுக்குள் இத்தனை மென்மையான இதயம் இருக்கிறதா? என்று வியந்து கொண்டே அவள் கொடுத்த கைக்குட்டையைச் சட்டைப் பைக்குள் வைக்கும்போது அவன் மனம் முழுமையாக நிறைந்தது. விரைவில் அந்த நிறைவைத் - தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள விரும்பினான் அவன்.