உள்ளடக்கத்துக்குச் செல்

நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/நெருப்புக் கோழி

விக்கிமூலம் இலிருந்து

37. நெருப்புக் கோழி

ப்போதுதான் முதல் முதலாக நான் காட்டிலாகாவில் பாரஸ்ட் ரேஞ்சர் உத்தியோகத்தை அடைந்திருந்தேன். மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு நடுவே முன்பின் பழக்கமில்லாத ஏதோ ஒரு மலையாளப் பகுதியில் என்னை ரேஞ்சராக நியமித்திருந்தார்கள். தெரிந்த நண்பர் ஒருவர் நான் நியமனம் பெற்றிருந்த பகுதியிலுள்ள ஓர் ரப்பர் எஸ்டேட் மேஸ்திரிக்கு என்னை அறிமுகப்படுத்திக் கடிதம் கொடுத்திருந்தார். என்னுடைய ரேஞ்சில் போய் வேலையை ஏற்றுக் கொண்டதும், அந்த மேஸ்திரி குஞ்சுப் பணிக்கரிடம் கடிதத்தைக் கொடுத்து என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். நான் இருந்து கொள்ள ஓர் அறை பார்த்துத் தரும் வேலையை அவனிடம் ஒப்படைத்தேன். இரண்டு மூன்று நாள் கழித்துப் பணிக்கர் எனக்கு ‘ரூம்’ பார்த்திருந்த வீட்டைக் காண்பிப்பதற்காக என்னை அழைத்துக் கொண்டு போனான்.

மலைச் சரிவிலுள்ள பயங்கரமான தனிமைக்குள் பிடிபட்டுக் கிடப்பது போல் வெறிச்சோடிப் போய்த் தோற்றமளித்தது அந்த வீடு. 'மூலங்கோட்டு மனைப் பட்டாத்திரிநம்பூதிரிகள்’ என்று அந்த வீட்டுக்காரரின் பெயரைக் கூறினான் பணிக்கர். அவருக்குத் தொழில் மாந்திரிகமாம்.

வீட்டுக் கூடத்தில் நம்பூதிரி உட்கார்ந்திருந்தார். வைதிகக் கோலத்தில் பரிசுத்தமாக இருந்தார். ஒல்லியான தேகம். நல்ல உயரம். எலுமிச்சம் பழ நிறம். முன் நெற்றியில் உருண்டையாகச் சிறியதாக முடிந்து தொங்கும் முன் குடுமி. நெற்றியில் வரிவரியாகச் சந்தனக் கீற்றுகள். அதன் நடுவே குங்குமப் பொட்டு. அவரைச் சுற்றி ஐந்தாறு தாமிரத் தகடுகள் பெரிது பெரிதாக இறைந்து கிடந்தன. அவற்றில் சக்கரங்களும் எழுத்துக்களும் செதுக்கியிருக்கின்றன. இன்னொரு பக்கம் வெள்ளிப் பூண் பிடித்த பிரம்புகள் இரண்டு கிடந்தன. நானும் குஞ்சுப் பணிக்கரும் உள்ளே நுழைந்த போது கூட அவர் ஒரு தாமிரத் தகட்டில் இரும்பு ஆணியால் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தார்.

“தம்பிரான்,இவர்தாம் புதிதாக வந்திருக்கிற பாரஸ்ட் ரேஞ்சர். உங்கள் வீட்டு முன் அறையை இவருக்கு வாடகைக்கு விடலாம் அல்லவா?” என்று அறிமுகம் செய்து விட்டுக் காரியத்தைச் சொன்னான் பணிக்கர். நம்பூதிரி எங்களை நிமிர்த்து ஏறிட்டுப் பார்த்தார்.

“வாடகைக்கு விடுவதைப் பற்றி ஆட்சேபம் இல்லை. அறையைத் திறந்து காண்பிக்கிறேன். அவருக்குப் பிடித்தால் இருந்து கொள்ளட்டும்” என்று சொல்லி விட்டு, உள் பக்கமாகத் திருப்பி, “தினகர், அத்த வாயிற்புறத்து அறையின் சாவியை எடுத்துக் கொண்டு வா, அம்மா” என்று குரல் கொடுத்தார்.

மலையாளத்துப் பெண்மை வனப்பெல்லாம் ஒன்று சேர்ந்து உருவாகி வந்ததுபோல் ஒர் இளம்பெண் சாவிக்கொத்துடனே வந்தாள். “நம்பூதிரியின் பெண்” என்று என் காதருகே மெல்ல சொன்னான் பணிக்கர். ஒரே ஒரு கணந்தான் பரிபூரணமான அந்த அழகைப் பார்க்க முடிந்தது. சாவிக் கொத்தை நம்பூதிரியிடம் கொடுத்துவிட்டு அவள் மறுபடியும் சமையற்கட்டுக்குள் மறைந்துவிட்டாள்.

நம்பூதிரி என்னையும் குஞ்சுப் பணிக்கரையும் அழைத்துக்கொண்டுபோய் வாயிற் பக்கத்து அறையைத் திறந்து காட்டினார். ஆள் பழக்கமில்லாத அறை தூசி படிந்து ஒட்டடை மலிந்து சுத்தமின்றி இருந்தது.

“இந்த அறைக்கு இதுதான் ஒரே ஜன்னல்” என்று சொல்லிக் கொண்டே மேற்குப் பக்கமாக இருந்த ஜன்னலின் கதவுகளைத் திறந்துவிட்டார் நம்பூதிரி.

ஜன்னலைத் திறந்ததும் பேய்க் காற்றுப்போல் காற்று உள்ளே வீசியது. திறந்த ஜன்னல் கதவுகளின் வழியே மேகம் மூடிய நீலமலைச் சிகரங்கள் அழகாகத் தெரிந்தன.

அலமாரியிலிருந்த புத்தகங்களும் சாமான்களும் அப்படியேதான் இருக்கும். நாளைக்கு அறையைச் சுத்தம் செய்து கொடுத்துவிடுகிறேன். மாதம் ஐந்து ரூபாய் வாடகை, உள்ளே விறகு அடுப்பு உபயோகித்துச் சமையல் செய்யக்கூடாது. அவசியமானால் கரியடுப்போ ஸ்டவ்வோ உபயோகித்துக் கொள்ளலாம்” என்று நிபந்தனைகளை அடுக்கினார் நம்பூதிரி.

அவருடைய விருப்பப்படியே இரண்டு மாத வாடகையை முன் பணமாகக் கொடுத்துவிட்டு மறுநாள் காலையில் சாமான்களோடு வந்துவிடுவதாகச் சொல்லிய பின் நானும் பணிக்கரும் விடைபெற்றோம்.

அப்போது இருள் சூழும் நேரம், கருநீலப் பசுமையாய் ஓங்கிக் ககனவெளியோடு உறவு கொண்டாடுவதுபோல் நிமிர்ந்த மேற்கு மலைத் தொடரின் அழகை அனுபவித்துக் கொண்டே பணிக்கரோடு நடந்தேன். இடைவெளியின்றி மிடைந்த பசுமையான மரக்கூட்டம், கலகலக்கும் சிற்றருவிகள், வானத்தினின்று நழுவி நீலச்சல்லாத் துணிகள் போல் மலைச் சிகரங்களில் மேகச்சாரல்கள் இறங்கும் அழகு! கூடு அடையும் பறவைகளின் குரல் பேதங்கள், எங்கோ தொலை தூரத்தில் மிளாமான்களும், யானைகளும் இருப்பதற்கு அடையாளமான ஒசைகள்; அடடா! அந்த மலைச்சிகரங்களில் பல அழகுகள் கொள்ளை கொள்ளையாக மலிந்து காட்சியளித்தன. மலைச் சரிவில் இறங்கித் தென்மேற்குப் பக்கமாகத் தேக்குமரக் கூட்டங்களில் புகுந்து சிறிது தொலைவு நடந்தால் பாரஸ்ட்ரேஞ்சு ஆபீஸ்: அதாவது என் அலுவலகம்.

“ஸார், உங்கள் ஆபீஸ் இருக்கிற இடம் அவ்வளவாகப் பாதுகாப்பு உள்ளதல்ல. இருட்டு முன்பு வீடு திரும்பிவிடுவதென்று வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று நடந்து கொண்டே என்னை எச்சரித்தான் பணிக்கர்.

"அது சரி, பணிக்கர்,"இந்த நம்பூதிரி என்ன பேயா, பிசாசா? நாலு பேர் குடியிருக்கிற இடத்தை விட்டு எதற்கு இப்படி எட்டாத இடத்தில் வீடு கட்டிக் கொண்டு இருக்கிறார்? பெண்டு பிள்ளைகளோடு வசிக்கிறவருக்கு இது என்ன செளகரியமோ?” என்று பணிக்கரைக் கேட்டேன்.

“பெண்டுகளாவது, பிள்ளைகளாவது அவர் ஒண்டிக்கட்டைதான்.அந்தப் பெண் தினகரி இருக்கிறாள். தாயில்லாப் பெண். நம்பூதிரி இளம் வயசிலேயே மனைவியை இழந்தவர். தினகரியின் புருஷன் எங்கேயோ வடக்கே மிலிடரியில் இருக்கிறர்னாம். நம்பூதிரிக்குச் சொந்த ஊர் குட்ட நாட்டுப் பக்கம். நாலைந்து வருஷங்களுக்கு முன் அவராக இங்கு வந்து வீடு கட்டிக் கொண்டு குடியேறியிருக்கிறார்” என்று அவன் சொன்னான்.

மறுநாள் காலையில் நான்நம்பூதிரி வீட்டு அறையில் குடியேறிவிட்டேன் .நம்பூதிரி என்னோடு அளவாகப் பேசினார். நன்றாகப் பேசினார். தம் குடும்பத்தில் ஒருவன்போல் கருதி ஒட்டுறவு காட்டினார். நான் அவரிடம் மலையாளம் படிக்க ஆரம்பித்தேன். புதிய மொழியான மலையாளத்தை உச்சரிக்கத் தெரியாமல் அவருக்கு முன் நான் திணறுவதைச் சமையலறைத் தட்டி மறைவிலிருந்து கருவிழிகளின் வெண்பரப்பு அகல ஒரு நிலவு முகம் எட்டிப்பார்த்துச் சிரிக்கும். கபடமில்லாத சிரிப்பு அது."தினகரி, இவர் உனக்குத் தமையன் மாதிரி, அம்மா” என்று நம்பூதிரி ஒருநாள் தம் பெண்ணிடம் என்னை வைத்துக் கொண்டு கூறியபோது எனக்குப் புனிதமானதொரு சிலிர்ப்பு உண்டாயிற்று. கந்தர்வ உலகத்துச் சிற்பி ஒருவனின் தனிக் கவனத்தில் உருவாகி வந்த தந்தச் சிலை போல் விளங்கும் தினகரிக்குத் தமையன் என்று ஒருவர் சொல்லிக் கேட்பதே இன்பமல்லவா?

‘அண்ணன் அண்ணன்' என்று என்னிடம் தனி ஒட்டுதலோடு பழகினாள் நம்பூதிரியின் பெண் தினகரி. மிகச் சில நாட்களிலேயே அந்தக் குடும்பத்தில் ஒருவனைப்போல் நான் நெருக்கம் பெற்றுவிட்டேன்.

தலை நிறைய பூச்சூடிக் கொண்டு நெற்றி நிறைந்த திலகத்தோடும் இதழ் நிறைந்த சிரிப்போடும் அவள் எதிரே வந்துவிட்டால் வேறு வேலையே ஓடாது எனக்கு. நம்பூதிரியிடம் படித்தேன் என்று பேரே ஒழிய, அந்தப் பெண் தினகரியிடம் வேடிக்கையாகவும் பொழுதுபோக்காகவும் பேசியே முக்கால்வாசி மலையாளம் தெரிந்து கொண்டேன்."அண்ணன் இந்தக் கடிதத்தைப் படித்துச்சொல்ல வேண்டும்" என்று விகல்பமில்லாமல், கணவனிடமிருந்து வந்திருக்கும் தபாலைக் கொண்டு வந்து நீட்டுவாள். அவள் கணவன் கிருஷ்ணன் நம்பூதிரி எப்போதாவது இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அவளுக்குக் கடிதம் போடுவான். பூனாவுக்கு அருகிலுள்ள கிரக்கியில் மிலிட்டரி முகாமில் இருக்கிறானாம் அவன். அவன் எழுதுகிற கடிதங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருக்கும். மனைவிக்கு மலையாளத்தைத் தவிர வேறு எந்த மொழியும் படிக்கத் தெரியாதென்று அறிந்து கொண்டே ஆங்கிலத்தில் அவளுக்குக் கடிதம் எழுதும் அவன்மேல் எனக்குக் கோபம் உண்டாகும்.நம்பூதிரிக்கும் ஆங்கிலம் தெரியுமாதலால் வழக்கமாக அவர்தாம் படித்து மலையாளத்தில் அதன் சுருக்கத்தை மகளுக்குச் சொல்வாராம்.அவர் தொழில் சம்பந்தமாக வெளியூர்களுக்குப் போகும்போது என்னிடம் கொண்டு வந்து கொடுத்துப் படிக்கச் சொல்லுவாள் தினகரி.

கணவனுடைய கடிதத்தைப் படித்துச் சொல்லும்போது அவள் முகத்தைப் பார்க்க வேண்டுமே! அப்போது அந்த முகத்தில் நாணத்தின் அழகும் நளினமும் கொஞ்சும், புதுமணப் பெண்ணின் பொலிவு தோன்றும். அவளுடைய கணவனின் கடிதத்தைப் படித்துச் சொல்லும்போது இதயமில்லாத அந்த முரட்டு மிலிடெரிக்காரன் மேல் எனக்குக் கோபம் கோபமாக வரும். காரணம்? வழக்கமாக ஒரே விதமான பல்லவியை மாற்றி மாற்றி எழுதியிருப்பான். நாலைந்து ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து இருப்பவனின் ஏக்கமோ அன்போ அந்தக் கடிதங்களின் வாக்கியங்களில் பெருக்கெடுத்து ஓடாது.

'தினகரிக்குக் கிருஷ்ணன் எழுதிக் கொண்டது. நீயும் அப்பாவும் நலமென்று நினைக்கிறேன். எனக்கு லீவு கிடைப்பது அருமையாக இருக்கிறது. கல்யாணமான புதிதில் உன்னைப் பிரிந்து வந்தவன் இத்தனை வருடங்களாக ஒரு தடவை கூட வந்து பார்க்க முடியாமல் போயிற்று. நினைத்தால் எனக்கே வருத்தமாகத்தான் இருக்கிறது. கவலைப்படாதே. விரைவில் லீவு கிடைக்கும், வருகிறேன்!” வழக்கமாக நான் படித்துச் சொல்லிய இரண்டு மூன்று கடிதங்களில் இதே விஷயத்தைத்தான் எழுதியிருந்தான்.

கல்யாணமாகும்போது தினகரிக்குப் பத்து வயசாம். பேதமை கலையாத இளமையிலேயே நம்பூதிரி குட்ட நாட்டில் தம் சொந்த ஊரியிலேயே அந்தக் கல்யாணத்தை நடத்தினாராம். கல்யாணம் முடிந்த மூன்றாம் மாதம் வடக்கே போன அவள் கணவன் இன்றுவரை ஒருமுறைகூட வந்து செல்வதற்கு லீவு கிடைக்கவில்லையாம். பின்பு, சில மாதங்கள் கழித்துத்தான் நம்பூதிரி சொந்த ஊரை விட்டு இந்த மலைப் பகுதிக்கு வந்து வீடு கட்டிக் கொண்டு குடியேறினாராம்.

தினகரி பேதை, சூதுவாதில்லாதவள். மண்ணுலகத்துச் சிறுமைகள் என்னும் வெப்பக் காற்றுப் படாத பனிமலராய் மலைகளின் சூழலில் தனிமையில் வளர்ந்தவள் அவள். நினைவு மலராத பருவத்தில் பார்த்திருந்த கணவனிடமிருந்து கடிதம் வருகிறது என்பதே போதும். அவன் குரலையே காதில் கேட்பதுபோல் அவனது ஒவ்வொரு கடிதத்தையும் ஆர்வத்தோடு வரவேற்க அவளால் முடியும். ஒரே மாதிரி எழுதிய ஒவ்வொரு கடிதத்தையும் படிக்கச் சொல்லிக்கேட்கும்போது புதிது புதிதாக நாணமும் நளினமும் கொள்ளத் தெரியும் அவளுக்கு.

இரண்டு மூன்று நாட்களாக மலைப்பகுதியில் நல்ல மழை. நான் வீட்டை விட்டு வெளியேறவே இல்லை. "மழைக்காலம் முடிகிறவரை அண்ணன் வெளியே சாப்பாடு வைத்துக் கொள்ளக்கூடாது. இங்கேதான் சாப்பாடு” என்று தினகரி உத்தர்வு போட்டுவிட்டாள். நம்பூதிரிகள் ஊரில் இல்லை. சாப்பாட்டை முடித்துக் கொண்டு அறைக்குள் வந்து உட்கார்ந்தவன் பொழுது போகாமல் அலமாரியிலிருந்து ஒரு தடிமனான புத்தகத்தை உருவினேன். தூசி படிந்து போயிருந்த அந்த மலையாளப் புத்தகத்தின் நடுவிலிருந்து ஒரு கற்றைப் பழைய கடிதங்கள் விழுந்தன. ஏதோ ஒர் ஆவல் அந்தக் கடிதங்களைப் பிரித்துப் பார்க்க வேண்டுமென்று தூண்டியது. புத்தகத்தை வைத்துவிட்டு அந்தக் கடிதங்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பிரித்துப் பார்த்தேன். எல்லாம் தினகரிக்கு அவள் கணவனிடமிருந்து வந்திருந்த பழைய கடிதங்கள். யாவும் பூனாவிலிருந்து எழுதப்பட்டிருந்தன. லீவு கிடைக்கவில்லை, கிடைத்ததும் வர முயலுகிறேன்' என்பதுதான் அவற்றின் சுருக்கம்.

தற்செயலாகப் பார்த்துக்கொண்டே வந்தவன். அந்தக் கடிதங்களுக்கும் அவை வந்திருந்த உறைகளுக்கும் முரண்பாடு இருப்பதைக் கண்டு திகைத்தேன். எல்லா கடிதத் தாள்களின் தலைப்பிலும், கிருஷ்ணன் நம்பூதிரி - மிலிடரி குவாட்டர்ஸ் - ரேஞ்சு ஹில்ஸ்-கிரிக்கி-பூனா’ என்ற விலாசம் இருந்தது.ஆனால் கடிதங்கள் வந்த உறைகளின் தபால் முத்திரையில் வெவ்வேறு ஊர்களில் போஸ்ட் செய்ததற்கு அடையாளமான ஊர்ப் பெயர்கள் காணப்பட்டன. ஓர் உறையில் பாலக்காட்டு முத்திரை, இன்னொன்றில் கோட்டயம், மற்றொன்றில் ஆலப்புழை என்று மலையாளத்துப் பக்கத்தைச் சேர்ந்த ஊர்களாகவே தபால் முத்திரைகள் விழுந்திருந்தன. வேறு கடிதங்கள் வந்த உறைகளில் இந்தக் கடிதங்களைத் தவறி வைத்திருப்பார்களோ என்று சந்தேகம் ஏற்பட்டது. என் சந்தேகம் தீர்வதற்கு நான் ஒரு வழி செய்தேன்.

தினகரியிடம் போய் சமீபத்தில் அவள் கணவனிடமிருந்து அவளுக்கு வந்த கடிதங்களைக் கேட்டேன்.

"அண்ணனுக்கு அந்தக் கடிதங்கள் எதற்கோ?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் அவள்.

“கொடுத்தால் எதற்கென்று அப்புறம் சொல்கிறேன்” என்றேன். மறுபேச்சுப் பேசாமல் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்துவிட்டாள். அவள் கொடுத்த கடிதங்களை என் அறைக்குக் கொண்டு போய் உறைகளையும் உள்ளே எழுதியிருந்த விலாசங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். அந்த உறைகளிலும் அதேமாதிரி முரண்பாடு இருந்தது. பூனாவில் எழுதிய கடிதத்தைத் திருவனந்தபுரத்திலிருந்தும், நீலாம்பூரிலிருந்தும் எப்படித் தபாலில் போடமுடியும்?' என்று எண்ணித் திகைத்தேன்.

தினகரியின் கணவன் பூனாவில் மிலிடரியில் வேலை பார்ப்பதாக ஏமாற்றிக் கொண்டு மலையாளப் பிரதேசத்திலேயே ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருக்கிறானோ என்றும் ஐயுற்றேன். ‘அடடா! தினகரிதான் பேதைப் பெண்; ஏமாந்திருக்கிறாள். நம்பூதிரி கூடவா இதைத் தெரிந்து கொள்ளாமல் மாப்பிள்ளை புனாவில் மிலிடரியில் இருப்பதாக நம்பிக் கொண்டிருக்க வேண்டும்? கோட்டயத்திலும், ஆலப்புழையிலும் இருந்து கொண்டு இத்தனை ஆண்டுகளாகத் தினகரியைச் சந்திக்க வராததை நினைத்தால், அந்தப்பயல் வேறு எவளையாவது மணந்து கொண்டு விட்டானோ? என்றுகூடச் சந்தேகம் ஏற்பட்டது எனக்கு. இதில் ஏதோ குது இருக்கிறது. அதைக் கண்டுபிடித்து நம்பூதிரியும், தினகரியும் ஏமாந்துவிடாமல் காப்பாற்ற வேண்டும்' என்று முடிவுசெய்துகொண்டேன். பூனாவில் தினகரியின் கணவன் இல்லையானால் இங்கிருந்து அவள் அவனுக்கு எழுதும் பதில் கடிதங்கள் எப்படிப் போய்ச் சேரமுடியும்? என்று மறுபடியும் வேறொரு சந்தேகம் ஏற்பட்டது.

'தினகரி! நீ உன் கணவருக்குப் பதில் கடிதங்கள் எழுதுவதுண்டோ?” என்று அவளிடம் போய்க் கேட்டேன்;

"ஓ! நான் மலையாளத்தில் கடிதம் மட்டும் எழுதிக் கொடுப்பேன். அப்பா அதை வாங்கிக் கொண்டு போய்க் கவரில் பூனா விலாசம் ஆங்கிலத்தில் எழுதி அனுப்பிவிடுவார்” என்ற அவள் உற்சாகமாகப் பதில் சொன்னாள்.என் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள நான் ஒரு தந்திரம் செய்தேன். அப்போது கிறிஸ்துமஸ் சமயம். உறையின் மறுபுறம் என் ஆபீஸ் முகவரியைத் தெளிவாக எழுதித் தினகரியின் கணவன் பெயருக்குக் கிறிஸ்துமஸ் வாழ்த்துக் கடிதம் ஒன்றை பூனா விலாசத்துக்கு அனுப்பினேன்.

நான் அனுப்பிய எட்டாவது நாள், 'விலாசதார் இல்லை' என்று சிவப்பு மையால் அடித்து எழுதப்பட்டு எனக்கே திரும்ப வந்துவிட்டது கிறிஸ்துமஸ் வாழ்த்து.ஆனால், அதைவிடப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால், அன்றைக்கு அதே தபால்காரன் தினகரிக்குப் பூனாவிலிருந்து அவள் கணவன் எழுதிய வேறொரு கடிதத்தையும் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் போயிருந்தான். அதை நான்தான் தினகரிக்குப் படித்துச் சொன்னேன்.

“லீவு கிடைக்கவில்லை. முடிந்தால் ஒணம் பண்டிகைக்கு வந்துவிடுகிறேன். கவலைப்படவேண்டம்” என்று வழக்கம் போல் எழுதியிருந்தான். அந்தக் கடிதத்திலும் தலைப்பில் பூனா முகவரி இருந்தது. உறையின் மேல் 'கோட்டயம் தபாலாபீஸ் முத்திரை விழுந்திருந்தது. என் சந்தேகம் மேலும் உறுதிப்பட்டது.

அன்றைக்குப் பகலில் நம்பூதிரி ஊரிலிருந்து வந்துவிட்டார். நேரம் வாய்க்கும்போது என் சந்தேகத்தை அவரிடம் கூறி எச்சரிக்க வேண்டுமென்று எண்ணினேன். பூனாவில் அவள் கணவன் இல்லையானால் தினகரி அவனுக்கு எழுதும் கடிதங்கள் மட்டும் திரும்பி வராமல் எப்படிக் கிடைத்துக் கொண்டிருக்க முடியும்? என்ற கேள்விக்கு மட்டும் தெளிவான விடை கிடைக்காமல் குழப்பம் ஏற்பட்டது எனக்கு.

அன்றைக்கு வந்திருந்த கணவனின் கடிதத்துக்குப் பதில் எழுதிப் போஸ்ட் செய்யுமாறு தினகரி தந்தையிடம் கொடுத்தாள். அப்போது நானும் அருகில் இருந்தேன்.

"ஐயா! மாப்பிள்ளையின் முகவரியை எழுதிக் கடிதத்தை என்னிடம் கொடுங்கள். நான் தபாலாபீஸ் பக்கந்தான் போகிறேன். நானே போட்டு விடுகிறேன். உங்களுக்குச் சிரமம் வேண்டாம்” என்று நம்பூதிரியிடம் போய் வலுவில் கேட்டேன். என்னை ஒரு மாதிரி கடுமையாக நிமிர்ந்து பார்த்தார் நம்பூதிரி. அதற்குமுன் அவர் அவ்வளவு கடுமையாகப் பார்த்து நான் கண்டதே இல்லை. எனக்கு ஏன் கேட்டோம் என்றாகிவிட்டது. " "அவசியமில்லை! நீங்கள் போகலாம். எனக்குப் போஸ்ட் செய்யத் தெரியும்" என்று வெடுக்கென மறுமொழி கூறிவிட்டார் அவர் நான் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு திரும்பினேன். என் மனத்தில் மேலும் மேலும் சந்தேகங்கள் குழம்பின.

சிறிதுநேரத்தில் நம்பூதிரி தபாலாபீசுக்குப் புறப்பட்டுப் போவதை என் அறை வாசலிலிருந்தே பார்த்தேன். தினகரி வந்தாள். "அப்பா ஏதோ முன்கோபத்தில் வெடுக்கென்று சொல்லிவிட்டார்.அதை மனத்தில் வைத்துக் கொள்ளாதீர்கள்” என்று மன்னிப்புக் கேட்பதுபோல் சொன்னாள். அப்போது அவள் முகத்தைப் பார்த்தேன். பேதையே! இப்படி ஒன்றும் தெரியாத பெண்ணாக எத்தனை நாள் இருக்கப் போகிறாய் என்று நினைத்துக் கொண்டேன். கூந்தல் நிறைய மல்லிகைப் பூவும், நெற்றி நிறையத் திலகமுமாய்ச் சிரித்துக் கொண்டு நின்றாள் தினகரி,

“கொஞ்சம் இரு, தினகரி. இதோ வந்துவிடுகிறேன்” என்று அவளிடம் சொல்லிவிட்டு நம்பூதிரியைப் பின்பற்றிப் போஸ்ட்டாபீசுக்குச் சென்றேன். தினகரியின் கடிதத்தை எந்த முகவரி எழுதி அவள் கணவனுக்குப் போஸ்ட் செய்கிறார் என்பதைப் பார்த்துவிடத் துடித்தது என் உள்ளம். போஸ்ட்டாபீசுக்குப் போகிற வழியில் தேக்கங்கன்றுகளின் புதருக்கருகில் ஏதோ வெள்ளையாகத் தெரிந்தது. சந்தேகத்தோடு அருகில் சென்று குனிந்து கையில் எடுத்தேன். உறையோடு அப்படியே இரண்டாகக் கிழிக்கப்பட்ட கடிதம் அது. மேலே தினகரியின் கணவனுடைய முகவரி ஆங்கிலத்தில் நம்பூதிரியின் கையெழுத்தால் தெளிவாக எழுதப்பட்டுக் கிழிந்திருந்தது.

என் கைகள் நடுங்கின. மனம் கொதித்தது. உள்ளே இரு துண்டாகக் கிழிந்திருந்த கடிதத்தை மெல்ல எடுத்துத் தினகரி என்ன எழுதியிருக்கிறாள் என்று ஒன்று சேர்த்துப் படிக்க முயன்றேன்.அது தன் கணவனுக்கு அனுப்புவதற்காகத் தினகரி அன்று எழுதித் தந்தையிடம் தபாலில் சேர்க்கச் சொல்லிக் கொடுத்த கடிதந்தான். அவள் மலையாளத்தில் எழுதியிருந்ததை நான் புரிந்து கொண்ட வகையில் கீழே கண்டவாறு தமிழாக்கித் தருகிறேன்.

“அடியாள் தினகரிதங்கள் பாதாரவிந்தங்களுக்குக் கோடானுகோடி வணக்கங்கள். உங்கள் கடிதம் கிடைத்தது. அப்பா, நான் எல்லோரும் செளக்கியம். இப்போது நம் வீட்டு முன் அறைக்கு ஒரு பாரஸ்ட்ரேஞ்சர் குடி வந்திருக்கிறார். மிகவும் நல்ல மனிதர் நான் அந்த அண்ணனிடம் உங்களைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறேன். உங்கள் கடிதங்களைக்கூட அப்பா ஊரில் இல்லாதபோது அண்ணன்தான் எனக்குப் படித்துச் சொல்லுகிறார்.நீங்கள் எப்போது இங்குவரப்போகிறீர்கள்? அண்ணனுக்கு உங்களைப் பார்க்க வேண்டுமென்று நிரம்ப ஆசை. 'உன் கணவர் ஒரே மாதிரி கடிதமாக உப்புச் சப்பில்லாமல் எழுதுகிறாரே! மனைவிக்குக் கணவன் எழுதுகிற கடிதத்தில் அன்பைக் கொட்டிக் கொட்டி எழுத வேண்டாமா? என்று அண்ணன் உங்கள் கடிதத்தைப் படித்துச் சொல்லும்போது என்னைக் கேலி செய்கிறார். எனக்கு வெட்கமாக இருக்கிறது. அண்ணன் சொல்லுகிற மாதிரி இனிமேல் நீங்கள் எனக்கு அன்பைக் கொட்டி எழுதாவிட்டால் அந்தக் கடிதத்தை நான் உங்களுக்கே திருப்பி அனுப்பிவிட வேண்டியதுதான்.

“இங்கே மழை விடாமல் பெய்கிறது. நம் வீட்டு முல்லைக்கொடி நன்றாகப் பூக்கிறது. அவ்வளவு பூவையும் நான் ஒருத்தியே வைத்துக் கொள்கிறேன். அப்பாவிடம் சொல்லி எஸ்டேட் தோட்டத்திலிருந்து குண்டுமல்லிகைச் செடியும் ரோஜாப் பதியனும் கொண்டுவர இன்று ஏற்பாடு செய்திருக்கிறேன். நம் வீட்டுத் தோட்டத்தில் வைக்க வேண்டும். நீங்கள் சீக்கிரம் இங்கு வர வேண்டும். இந்த வருட ஒணம் பண்டிகையையாவது நீங்கள் வீட்டில் கொண்டாட வேண்டுமென்பது அடியாளின் ஆசை.

இப்படிக்கு
உங்கள் பிரியமுள்ள தினகரி”


இந்தக் கடிதத்தைப் படித்தவுடன் என் உள்ளம் உருகியது. தான் எழுதுகிற கடிதங்கள் கணவனுக்கு அனுப்பப்படாமலே கிழிக்கப்படுகின்றன என்பதை அறிந்தால் அந்தப் பேதைப் பெண்ணின் மனம் என்ன பாடுபடும் வேதனை மிக்க மனத்தோடு அந்தக் கிழிந்த கடிதத்தை அப்படியே சட்டைப் பையில் வைத்துக் கொண்டு வீடு திரும்பினேன்.

'தினகரி எழுதும் கடிதங்களை அவள் தந்தை போஸ்ட் செய்யாமலே கிழித்தெறிந்து விடுகிறார். அதேபோல் தினகரிக்கு வரும் கடிதங்களையும் எழுதுகிறவன், அவள் கணவன் அல்லன். நம்பூதிரியே எழுதிப் போஸ்ட் செய்கிறார்’ என்று தெளிவாகத் தெரிந்தது எனக்கு அவர் அடிக்கடி மாந்திரிகத் தொழிலுக்காகக் கோட்டயத்துக்கும், திருவனந்தபுரம் முதலிய பிற ஊர்களுக்கும் போக நேரும்போது அங்கிருந்தே கடிதங்களைப் போஸ்ட் செய்ய வசதி இருந்தது. தினகரிக்கு வந்த கடிதங்களையும், அவள் எழுதிய கடிதத்தின் உறையில் நம்பூதிரி எழுதிய விலாசத்தையும் ஒப்பிட்டு நோக்கியபோது கையெழுத்துக்களின் ஒற்றுமையை என்னால் அநுமானம் செய்து உணர முடிந்தது. தம்முடைய மலையாளக் கையெழுத்தைத் தினகரி அடையாளம் கண்டுகொள்வாளென்று எண்ணியே அவள் கணவன், எழுதுவதாகத் தாமே எழுதி அனுப்பும் கடிதங்களை எல்லாம் நம்பூதிரி ஆங்கிலத்தில் எழுதுவதாகத் தோன்றியது எனக்கு.

'பெற்ற தந்தையே இப்படி மகளை ஏமாற்றிக் கெடுதல் செய்ய முடியுமா?’ என்று எண்ணியபோது என் மனம் அதை நம்புவதற்கே தயங்கியது; பயந்தது. நம்பூதிரி வந்ததும் அவரைப் பார்த்துக் கேட்க வேண்டுமென்று துடித்தேன்.

"உடம்புக்கென்ன? சோர்ந்து போய் உட்கார்ந்திருக்கிறீர்களே!” என்றாள் தினகரி.

“ஒன்றுமில்லை தினகரி,தலையை இலேசாக வலிக்கிற மாதிரி இருக்கிறது.அப்பா போஸ்டாபிசிலிருந்து திரும்பி வந்ததும் நான் அவரைப் பார்க்க வேண்டும்” .

"போஸ்டாபீஸிலிருந்து திரும்பி வரும்போது அப்பாவை எஸ்டேட் தோட்டத்துக்குப் போய்க் குண்டுமல்லிகைச் செடியும் ரோஜாப் பதியணும் எடுத்துக்கொண்டு வரச்சொல்லியிருக்கிறேன். நம் வீட்டுத் தோட்டத்தில் வைக்க வேண்டும்.” இதைச் சொல்லும்போது தினகரி சிறு குழந்தை போல் கைகொட்டிச் சிரித்து ஆர்வத்தோடு சொன்னாள்.

“குண்டு மல்லிகையும் ரோஜாவும் எதற்கு தினகரி?”

“பூவுக்கு, பூ என்றால் எனக்குக் கொள்ளை ஆசை. அவ்வளவு பூவையும் நானே வைத்துக்கொள்ளுவேன்” என்றாள் தினகரி. இதைக் கூறும்போதுதான் அந்த முகத்தில் எத்தனை மலர்ச்சி!

இருட்டுவதற்குச் சிறிது நேரத்துக்கு முன் குண்டு மல்லிகைச் செடியும் ரோஜாப் பதியனும் எடுத்துக் கொண்டு நம்பூதிரி வந்தார். தினகரி அவற்றை வாங்கிக் கொண்டு நடுவதற்காகத் தோட்டத்திற்குப் போய்விட்டாள்.

“உங்களிடம் ஒரு விஷயம் தனியாகக் கேட்க வேண்டும். இப்படிக் கொஞ்சம் வருகிறீர்களா?” என்று நம்பூதிரியை என் அறைக்குள் அழைத்தேன். நம்பூதிரி வந்தார்; உட்காரச் சொன்னேன். உட்கார்ந்தார். அறைக் கதவைச் சாத்தி உட்புறமாகத் தாழிட்டேன். கிழிந்த கடிதத்தை எடுத்துக்காட்டி, “இதற்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டேன். அவர் முகம் பயந்து வெளிறியது. என்னைப் பார்க்க வெட்கப்படுவது போல் தலையைக் குனிந்து கொண்டு கீழே பார்த்தார்.

“உங்கள் குடும்ப விஷயத்தில் தலையிட்டுப் பேசுவதற்காக என்னை மன்னிக்க வேண்டும். தினகரியின் கணவன் பூனாவில் மிலிடரியில் இல்லை என்பதையும், அங்கிருந்து அவன் தினகரிக்கு எழுதுவதாக நீங்கள் ஆங்கிலத்தில் எழுதிக் கோட்டயத்திலும் நீலாம்பூரிலும் கடிதங்களைப் போஸ்ட் செய்கிறீர்கள் என்பதையும் நான் தெரிந்துகொண்டேன. எதற்காக இப்படியெல்லாம் செய்து உங்களையும் உங்கள் பெண்ணையும் ஏமாற்றிக் கொள்கிறீர்கள்?” என்று ஜன்னல் பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டு அவர் காதில் படும்படி கேட்டேன். எனக்கு அப்போது அவர் முகத்தைப் பார்ததுக் கொண்டு பேசப் பிடிக்கவில்லை.

அவர் மறுமொழி கூறவில்லை. மெல்ல விசும்பிக் கொண்டே அழும் ஒலி என் செவிகளில் விழுந்தது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். நம்பூதிரி அழுது கொண்டிருந்தார். பச்சைக் குழந்தைபோல விக்கலும் விசும்பலுமாகக் குலுங்கக் குலுங்க அழுது கொண்டிருந்தார். நான் திகைத்துப் போய் நின்றேன். நம்பூதிரி அழுது கொண்டே எழுந்திருந்து அந்த அறையில் இருந்த அலமாரியிலுள்ள பழைய புத்தகங்களைக் கலைத்து மேலும் கீழுமாக எதையோ தேடினார். சிறிது நேரத்தில் அழுக்குப் படிந்த பழைய கவர் ஒன்று அவர் கையில் கிடைத்தது. அதைப் பிரித்து என்னிடம் நீட்டினார். அதை என்னிடம் கொடுக்கும்போது அவருடைய கைவிரல்கள் நடுங்கின. அழுகை அதிகமாகியது. வாங்கிப் படித்தேன். நாலைந்து ஆண்டுகளுக்கு முன் மிலிடரியிலிருந்து அனுப்பப்பட்ட கடிதம் அது.

“நாகபுரிக்கு விமானப் பயிற்சிக்காக அனுப்பப்பட்ட உங்கள் கணவர் விமானத்திலிருந்து விபத்துக் காரணமாக கீழே விழுந்து இறந்து போனார்.”

என்ற தினகரியின் பெயருக்கு மிலிடரியிலிருந்து வந்திருந்தது அந்தச் செய்தி. அதைப் படித்து முடித்ததும் எனக்குத் தலையில் இடி விழுந்தாற் போலிருந்தது.

நம்பூதிரி அதே அலமாரியில் இருந்த ஒரு பழைய தோல் பெட்டியைத் திறந்தார். தூசி படிந்து பாச்சை அரித்துப் பழுப்பேறியிருந்த மிலிடரி உடைகளின் ‘ஸெட்” ஒன்றைத் தூக்கி என் முன் எறிந்தார். இறந்து போனவர்களின் உடையை உரியவர்களுக்கு அவ்வாறு அனுப்பி வைப்பது மிலிடரி வழக்கம்.

நம்பூதிரிகளின் கண்களிலிருந்து மாலை மாலையாகக் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. அவருடைய அழுகை நிற்கவில்லை. அருகில் வந்து என் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சும் குரலில் கூறலானார்:"ஐயா, என் பெண் பேதை கசப்புத் தெரியாமல் வளர்ந்தவள், தாயில்லாப் பெண், இன்றுவரை அந்த முகத்தில் வாட்டம் தெரியவிடாமல் வளர்த்துவிட்டேன். பூவும் திலகமுமாகச் சிரித்துக்கொண்டு திரியும் வானம்பாடியாக இருக்கிறாள். இந்த உண்மையை மறைப்பதற்குத்தான் நாலைந்து வருடங்களுக்கு முன் சொந்த ஊரைவிட்டு மனிதப் பழக்கம் அதிகமில்லாத இந்த மலைக்காட்டில் வீடு கட்டிக் கொண்டு குடியேறினேன். என்ன என்னவோ பொய்க் கடிதங்களை எழுதியும் ஏமாற்றியும் இந்த விநாடிவரை அந்தக் கசப்பான உண்மை அவளுக்குத் தெரியவிடாமல காப்பாற்றிவிட்டேன். இன்று உங்களால் அது தெரிந்துவிடும்போல் இருக்கிறது. தயவுசெய்து அவளிடம் உண்மையைச் சொல்லிவிடாதீர்கள். உங்களைக் காலில் விழுந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு ஒரே பெண். அவளுக்கு விதவைக் கோலம் பூட்டிப் பார்க்க வேண்டாம். அவள் நித்திய கல்யாணியாய் உதட்டில் சிரிப்பும் நெற்றியில் திலகமும் தலையில் பூவுமாக என்முன் தெரிந்து கொண்டே இருக்கவேண்டும்.நான் உயிர் வாழ்வதன் ஒரே லட்சியம் அதுதான்” என்று சோகம் கனிந்த குரலில் கதறி, பராசக்தி ஆணையாக அந்தச் செய்தியை தினகரியிடம் கூறுவதில்லை என்று என்னிடம் சத்தியமும் செய்து வாங்கிக் கொண்டார்.

அப்போது அறை வாசலில் காலடியோசை கேட்டது. 'தினகரி தோட்டத்திலிருந்து வந்துவிட்டாள். நான் போகிறேன்” என்று கண்களைத் துடைத்துக் கொண்டு அறைக் கதவைத் திறந்து வெளியேறினார் அவர்,

"அப்பா, ரோஜாப் பதியனும் மல்லிகைச் செடியும் ஊன்றித் தண்ணிர் ஊற்றியாயிற்று. ஒணம் பண்டிகைக்குள் அரும்பு கட்டிப் பூத்துவிடும். ஒனத்துக்கு அவர் வரும்போது என் தலைக்கு ரோஜா வைத்துக் கொள்ளலாம்” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறிக் கொண்டே தோட்டத்திலிருந்து ஓடி வந்தாள் தினகரி.

"ஆமாம், பெண்ணே ஒணத்தின்போது நிச்சயமாக உன் கணவன் புனாவிலிருந்து வந்துவிடுவான். நான் நாளைக்கு இன்னொரு கடிதமும் அவனுக்கு வற்புறுத்தி எழுதுகிறேன். மிலிடரியில் லீவு கிடைப்பது அருமை” என்று அறை வாசலில் உற்சாகமாக அவர் தினகரியிடம் கூறிக் கொண்டிருந்த பொய் அறைக்குள் எனக்குக் கேட்டது. அந்த உண்மையை மனத்தில் வைத்துக் கொண்டு அதே வீட்டில் நடமாட முடியுமா என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டது. அன்றிரவு நெடுநேரம் எனக்குத் துாக்கமே இல்லை. தினகரியின் பேதைமை மிளிரும் மதிமுகம் உருவெளியில் என் கண்முன் தோன்றி, "எனக்குப் பூ என்றால் ரொம்பப் பிடிக்கும்” என்று கள்ளமில்லாச் சிரிப்போடு கூறுவது போல ஒரு பிரமை.

பொழுது விடிந்தது. நான் குஞ்சுப் பணிக்கரைக் கூப்பிட்டனுப்பினேன்.“பணிக்கர், நான் இரண்டு மாதம் லீவு போட்டுவிட்டு ஊருக்குப் போகிறேன். லீவு முடிந்ததும் அநேகமாக வேறு ரேஞ்சுக்கு மாற்றல் வாங்கிக் கொள்ளலாமென்று பார்க்கிறேன்” என்றேன்.அவன் ஒன்றும் புரியாமல் திகைப்போடுதலையை ஆட்டினான்.அங்கிருந்து புறப்படுகிற முதல் பஸ்ஸில் கிளம்பிவிடத் தீர்மானித்தேன்.

நான் புறப்படுகிற சமயத்தில் நம்பூதிரி வீட்டில் இல்லை. அந்த மிலிடரி உடையையும் கடிதத்தையும் அங்கே தங்கவிடாமல் என்னோடு எடுத்துக் கொண்டு போய்விடுவது நல்லதென்று எனக்குத் தோன்றியது. அப்படியே அவற்றை 'ஒல்டா' லில் வைத்துக் கட்டி எடுத்துக் கொண்டுவிட்டேன். பணிக்கர் சாமான்களைத் துரக்கிக் கொண்டு முன்னால் நடந்தான். தினகரி வாசலில் முல்லைக்கொடியில் பூப்பறித்துக் கொண்டிருந்தாள். பணிக்கர் சாமான்களோடு முன்னே சென்றதைக்கூட அவள் கவனிக்கவில்லை. நான் அருகிற் சென்றேன். 'தினகரி' என்று அழைத்தேன்.

“இன்றைக்குக் கொள்ளை போகிறாற்போல் பறிக்கப் பறிக்க மாளாமல் பூத்துத் தள்ளியிருக்கிறது இந்த 'முல்லைக்கொடி' என்று சொல்லிக் கொண்டே திரும்பினாள் அவள் என்பயணக் கோலத்தைப் பார்த்துவிட்டு, "அண்ணன் எங்கோ வெளியூருக்குக் கிளம்புகிறாற் போலிருக்கிறதே" என்றாள்.

"ஆமாம்” என்றேன்.

"திரும்ப எத்தனை நாட்களாகுமோ?”

“ரொம்ப நாளாகும்.”

"அப்படியானால் அண்ணன் திரும்பும்போது ரோஜாப்பூ பதியனில் அநேகமாக அரும்பு கட்டிவிடும்” என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள் தினகரி. அந்தச் சிரிப்பும் அறியாமையழகும் என்றும், அப்படியே அவளிடம் இருக்கட்டும் என்று மனத்தில் வாழ்த்திக் கொண்டே புறப்பட்டேன்.

பஸ் புறப்பட நேரமிருந்தது.ஒரு காகிதத்தை எடுத்து "நம்பூதிரிகளுக்குப் பாரஸ்ட் ரேஞ்சர்.அநேக வணக்கம்.நீங்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் உங்களிடம் சொல்லிக் கொள்ளாமலே நான் ஊருக்குப் போகிறேன். நான் பலவீனமுள்ள மனிதன். என் மனத்துக்கும் நாவுக்கும் அவ்வளவு உறுதி போதாது. நெருப்புக் கோழியைப்போல எவ்வளவு கடுமையான உண்மையானாலும் அதன் வெம்மையைச் சீரணித்துக் கொண்டு திடமாக வாழ உங்களுக்கு முடிகிறது. உங்கள் பேதைப் பெண்ணை நீங்கள் என்றும் சுமங்கலியாகவே பார்த்துக் கொண்டிருப்பதற்கு என்னால் இடையூறு நேர்ந்துவிடக்கூடாது. பூவும் திலகமுமாக உங்கள் பெண் சிரித்துத் திரிய வேண்டும் என்பதே எனக்கும் ஆசை.ஆனால் தினகரியின் கள்ளமற்ற முகத்தைப் பார்க்கும்போது என் நெஞ்சு இளகி விடுகிறது. நாக்கு உண்மையைச் சொல்லிவிடத் துடிக்கிறது. எப்போதாவது வாய் தவறிச் சொன்னாலும் சொல்லிவிடுவேன். அதனால் நான் இங்கிருந்தே போய்விடுகிறேன். போகும்போது உங்களுடைய அநுமதியில்லாமல் அந்த உண்மையின் சின்னங்களான மிலிடரி உடையையும் அந்தக் கடிதத்தையும் என்னோடு கொண்டு போகிறேன். தினகரியின் குது கலம் என்றென்றைக்கும் இப்படியே பேதமை நிறைந்து வாழ இறைவனைப் பிராத்திக்கிறேன்” என்று எழுதி உறையிலிட்டு ஒட்டிக் குஞ்சுப் பணிக்கரிடம் கொடுத்து நம்பூதிரியிடம் சேர்க்கச் சொன்னேன்.

(கலைமகள், தீபாவளி மலர், 1959)