நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/இவரும் ஒரு பிரமுகர்
67. இவரும் ஒரு பிரமுகர்!
அவருக்குப் பெயர் நித்தியானந்தம். நாள் தவறாமல் நாழிகை தவறாமல்-இன்னும் தெளிவாகச் சொல்லத்தான் வேண்டுமென்றால், விநாடி தவறாமல் துக்கமும், வேதனையும், வறுமையும் படுகிற, படுத்துகிற மனிதருக்கு நித்தியானந்தம் என்று பெயர் வைத்திருக்கக் கூடாதுதான். நஞ்சுள்ளதற்கு நல்ல பாம்பு என்று வைத்து விட்டது போல் இவருக்கு இப்படி வைத்தபின் என்ன செய்வது?
இவரைப் பெற்றவர்கள் அப்படி அன்றைக்கே இந்தத் தவறு செய்து விட்டார்கள். பெற்றதனால் அல்ல; பேர் வைத்தனால்தான். பையன் நித்தியமும் ஆனந்தமாக வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தினாலும் இதைச் செய்திருக்கலாம். ஆனால் அப்படி நடக்கவில்லை. இவருக்குப் பேர் வைத்ததனால் தங்கள் பேரை அநாவசியமாகக் கெடுத்துக் கொண்டு விட்டார்கள் அந்தப் பெற்றோர்கள்.
நல்ல வேளையாக அவர்கள் நீண்ட காலத்துக்கு முன்பே காலமாகி விட்டதனால் நித்தியானந்தம் அவர்கள் பேரை ஏற்கனவே கெடுத்தது தவிர இனிமேல் புதிதாகக் கெடுப்பதற்கு ஒன்றுமில்லை. -
உயர் திருவாளர். நித்தியானந்தத்தை ரொம்ப நல்லவர் என்றும் சொல்ல முடியாது. ரொம்பக் கெட்டவர் என்றும் சொல்ல முடியாது. ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு விதமாக நடந்து கொள்கிற மனிதரை ஒரு குறிப்பிட்ட குணத்துக்குள் எப்படி அடக்கி விட முடியும்? எப்படியெப்படியோ இருந்தாலும், மொத்தத்தில் அவர் ஒரு மனிதர் என்பதை யாரும் மறுத்து விட முடியாது.
அப்படி மறுப்பது ஒரு தனி மனிதனின் சுதந்திரத்தைப் பறிப்பதாகும். தாம் ஒரு தனி மனிதன் என்பதை நித்தியானந்தம் எப்போதுமே ஒப்புக் கொண்டதில்லை. தாமே ஒரு ஸ்தாபனம் என்பது அவருடைய கருத்து. பலவிதமான இலட்சியங்களும், அலட்சியங்களும் நிறைந்த ஸ்தாபனம் அவர்.
இந்த ஸ்தாபனத்தின் மணிபர்ஸ் எப்போதும் நிறைந்திருக்கும். பணத்தினால் அல்ல, யார் யாரோ எழுதிக் கொடுத்த விலாசங்கள் நிறைந்த காகிதங்களாலும், கிழித்தெறியப்படாமல் மறந்துபோய் வைத்த பஸ் டிக்கெட்டுகளாலும், எதற்காக - எப்போது - யாரிடமிருந்து குறித்து வாங்கினோம் என்று தெரியாத சில்லறைக் காகிதங்களாலும்தான் நிரம்பியிருக்கும்.
இவற்றை எல்லாம் தவிர ரூபபேதம் தெரியாமல் மழு மட்டையாய்ப் போன செப்புக்காசு ஒன்றும் அந்த மணிபர்ஸின் ஒரு மூலையில் அநாதி காலந்தொட்டு இருந்து வருகிறது. அவருடைய நாணயம் தேய்ந்து போயிருப்பதற்கு அந்தக் காசு ஒர் அடையாளம்.
திரு.நித்தியானந்தம் அவர்களுக்கு என்ன உத்தியோகம் என்று தெரிந்து கொள்ள ஆவலாயிருப்பீர்கள். ஆனால் அது ஒன்றும் நீங்கள் நினைப்பதுபோல் அவ்வளவு இலேசுப்பட்ட உத்தியோகமில்லை என்று துணிந்து சொல்லலாம்.
பலபேருக்கு உத்தியோகம் தேடித்தருகிற உத்தியோகம் அவருடையது. அவரே ஒரு ஸ்தாபனம் என்று கூறியபோதே இதை நீங்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அந்த ஸ்தாபனத்துக்கு அவர்தான் ஒரே நிர்வாகி.
ஒவ்வொரு நாளும் காலையில் ஒன்பது மணி வரை எழும்பூரிலும், கிராண்ட்டிரங்க் எக்ஸ்பிரஸ் புறப்படுகிற நேரத்துக்கு சென்ட்ரல் ஸ்டேஷனிலும் நித்தியானத்தைப் பார்க்கலாம். நடுப்பகலில் கிராண்ட்டிரங்க் எக்ஸ்பிரஸ் புறப்படுகிற நேரத்துக்கு அவரை சென்ட்ரலில் சந்தித்தீர்களானால் அதே தினம் காலையில் எழும்பூரிலே வந்திறங்கி மதுரை மனிதர் ஒருவருக்கு டில்லியில் ஆகவேண்டிய காரியத்துக்காகச் சொல்லி அனுப்ப ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.
கடைசியில் ஒரு நாள் யாரோ ஒரு மந்திரியைத் தனக்குத் தெரியுமென்று சொல்லி யாரோ ஒரு மனிதரிடம் இவர் கொஞ்சம் செலவுக்கு வாங்கப் புறப்பட்டு அது பெரிய வம்பாகி வெளிப்பட்டுப் பத்திரிகைகளில் நாறி ஒர் ஆறு மாதம் தாமும் தமது ஸ்தாபனமுமாகக் கம்பியெண்ணுவதற்குப் போயிருந்தார். அந்த ஸ்தாபனத்தின் பதிவு செய்யப்படாத பெயர் 'பித்தலாட்டம் அண்டு பொய் மோசடி லிமிடெட்' என்பது அப்போதுதான் பலருக்குத் தெரிந்தது.
நிம்மதியாக ஆறு மாதம் வரை நானும், உலகமும் நித்தியானந்தத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்தோம். மறுபடி அவர் வெளியே வந்ததும் எழும்பூரிலும் சென்ட்ரலிலும் அவரைப் பார்க்கலாமென்று எண்ணினேன். ஆனால் அவர் விடுதலையான மூன்றாவது நாளோ, நாலாவது நாளோ ஒரு பிரபல தினப்பத்திரிகையில் கீழ்க்கண்டவாறு விளம்பரம் வந்ததைப் பார்த்தபோது எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.
"உங்கள் நிலையான எதிர்காலத்தை அறிந்து கொள்ள வேண்டுமானால் உடனே சுவாமி நித்தியானந்த யோகியை அணுகுங்கள். நேரில் பார்த்துப் பேச ரூ. 10. தபால் மூலம் 5. பலன்கள் அவசியம் பலிக்கும்” என்று விளம்பரம் போட்டுக் கீழே நித்தியானந்தத்தின் முகவரி இருந்தது. இதைப் பார்த்ததும் எனக்கு மனம் தாங்கிக்கொள்ள முடியாத ஆச்சரியம். நித்தியானந்தத்துக்குத் தன் எதிர்காலத்தைப் பற்றியே இன்னும் சரியாகத் தெரியாதே!
இந்த இலட்சணத்தில் மற்றவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லு வதற்குப் புறப்பட்ட தைரியம் எப்படிக் கிடைத்தது என்றுதான் நான் வியந்தேன். ஒரு நாள் நேரிலே போய்ப் பார்த்தே விடுவதென்று புறப்பட்டுப் போனேன். அதை ஏன் கேட்கிறீர்கள்? ஒரே அமர்க்களம் அமர்க்களத்தின் இடையேதான் நித்தியானந்த யோகியைப் பார்க்க முடிந்தது. வீட்டு முன் அறையில் படங்கள் - ஊதுவத்திகள் புலித்தோல்கள் இவை புடைசூழத் தண்டு கமண்டல திரிசூலதாரியாய் நித்தியானந்தம் ஏதோ சிவபெருமான் மாதிரி உட்கார்ந்திருந்தார். சீடப்பிள்ளை வருகிறவர்களை வரிசைப்படுத்தி உட்கார வைத்திருந்தான். மற்றவர்கள் எல்லாரும் தங்கள் எதிர்காலத்தை விசாரித்துக் கொண்டு நகர்ந்தபின் நான் நித்தியானந்தத்தின் எதிர்காலத்தைப் பற்றி விசாரிக்க உள்ளே நுழைந்தேன்.
“எழும்பூர் பிளாட்பாரத்தில் வந்து இறங்குகிறவர்களின் தேவைகளை சென்ட்ரல் பிளாட்பாரத்துக்கு எட்ட விடும் பிரமுகராயிருந்தீர்களே? இப்போது ஏன் திடீரென்று இப்படி ஆகிவிட்டீர்கள் நீங்கள்?’ என்று கேட்டேன்.
நித்தியானந்தம் தம்முடைய மோவாயில் வளர்ந்திருந்த இளந்தாடியை வருடிக் கொண்டே ‘யோகி டிரேட் மார்க் புன்முறுவல் ஒன்று பூத்தார். “லெளகீக வாழ்வு அலுத்துவிட்டது. இப்படி ஆத்மார்த்தமாக ஏதாவது பண்ணலாமென்று இறங்கினேன்!” என்றாரே பார்க்கலாம்.
'லெளகீகத்தின் பேரால் இதுவரை மோசடி செய்தேன்.இனி வைதீகத்தின் பேரால் மோசடி செய்வேன்’ என்று அவரோடு பழகிய எனக்குப் புரியவைத்தன. அவர் வார்த்தைகள். எப்படிப் பிழைத்தால் என்ன? நித்தியானந்தம் தனி மனிதரல்ல. அவரும் அவருடைய ஏற்பாடுகளும் ஒரு தனி ஸ்தாபனம்.அதை யாராலும் அசைக்க முடியாது. திருப்பெருந்திரு. நித்தியானந்தம் யோகியான பிறகு மணிபர்ஸிலிருந்த குப்பைக் காகிதங்களை எடுத்தெறிந்துவிட்டார். தேய்ந்த நாணயத்தோடு தேயாத காசுகளும் அந்த மணிபர்ஸில் இப்ேபது பெருகின. இவையெல்லாம் சேர்ந்து உரசி உரசி நிலையான அந்த நாணயத்தை இன்னும் தேய்த்தன. நித்தியானந்தத்தின் எதிர்காலம் சரியாயிருந்தவரை இந்த யோகம் குறைவின்றி நடந்தது.
ஆறு மாதத்துக்கு அப்புறம் நான் மறுபடி நித்தியானந்ததைச் சந்தித்தபோது, “என்னிடம் சீடனாயிருந்த அயோக்கியப் பயலே, ‘சலகவிதமான இராசி பலனும் கூறப்படும் என்று எதிர்வரிசையில்போர்டுமாட்டிவிட்டான் ஐயா” என்று அலுத்துக் கொண்டார் அவர்.
“உங்கள் ஸ்தாபனத்திலிருந்து ஒரு பிரமுகர் உருவாகிப் புறப்பட்டுப் போனதாக நினைத்துத் திருப்திப்படுங்கள்” என்றேன்.
"அப்படியில்லை சார்பிரமுகர் முக்கியமாகச்செய்யவேண்டிய காரியம் தனக்குக் கீழே தொண்டராக இருக்கிற யாரும் பிரமுகராக உயர்ந்துவிடாமல் கவனித்துக் கொண்டிருப்பதுதான்; அதில் நான் தவறிவிட்டேன்” என்றார்.
“எங்காவது வாய் தவறி உங்கள் சீடனுக்கே அவனுடைய எதிர்காலத்தைப் பற்றி நினைவுபடுத்தியிருப்பீர்கள். அவன் அதைக் கவனிக்கக் கிளம்பிவிட்டான்.”
மறுபடி ஆறுமாதம் கழித்து நான் நித்தியானந்தத்தின் வீட்டுக்குப் போனபோது வாசல்புறமிருந்த அறையில், எதிர்காலம் தெரிய வேண்டுமா? - என்ற போர்டுக்குப் பதில், அசல் மாயவரம் வெண்ணெய் விற்கப்படும்’ என்ற புதுப் போர்டு மாட்டியிருந்தது. எப்படியானால் என்ன? அவர் ஒரு ஸ்தாபனம்.
இப்போது நித்தியானந்தம் தாடியை எடுத்துவிட்டு மீசையை மட்டும் வளர்த்திருந்தார். "எதிர்கால பிஸினஸ் என்ன ஆச்சு? கடைசியில் இப்படி வெண்ணையில் கை வைக்கும்படி ஆகிவிட்டதே?” என்று கேட்டேன் நான். அவர் மெல்லச் சிரித்தார்.
“இப்பொழுதெல்லாம் எதிர்காலத்தை யாரும் நாடுவதில்லை. ஏதோ தோன்றியது. உடனே வெண்ணெய்க் கடை வைத்துவிட்டேன். தினம் பத்து ரூபாய்க்குக் குறையாமல் இலாபம் கிடைக்கிறது” என்றார் நித்தியானந்தம்.
மீண்டும் நாலைந்து வாரத்துக்குப் பின் நித்தியானந்தம் மறுபடி கைதாகிச் சிறை சென்றதாகப் பத்திரிகையில் செய்தி வந்தது. செய்தியைப் படித்தேன். வெண்ணெய் விற்பதாகப் போர்டு மாட்டிவிட்டுச் சாராயம் விற்றால் சும்மாவா விடுவார்கள்?
வெளியே போர்ட்டில் போட்டிருப்பதைத்தான் விற்க வேண்டுமென்ற குறுகிய நோக்கம் நித்தியானத்துக்கு இருந்ததில்லை. நித்தியானந்தத்தின் பரந்த நோக்கம் போலீஸாருக்குப் புரியவில்லை. இந்தத் தடவை அவருக்கு இரண்டு வருடம் சிறைவாசம் கிடைத்தது. சிறைக்குள் இருக்கும்போதும் அவர் ஒரு ஸ்தாபனமாக இருப்பார் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. பின்பு இரண்டு வருடத்துக்கு நானும், உலகமும் நிம்மதியாக இருந்தோம்.
பொழுதும் காலமும் எந்த ஊரில் எப்படி வேகமாக ஒடுகிறதோ, இந்தப் பட்டினத்தில் அது சூப்பர் ஜெட் வேகத்தில் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடுகிறது. இரண்டு வருடமும் கழிந்து ஆறுமாதமும் மேலே ஆகிவிட்டது. பாரத நாட்டில் அடுத்த பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது. ஒருநாள் மாலை நுங்கம்பாக்கம் ஏரிப் பகுதியில் போய்க் கொண்டிருந்தபோது அந்தப் பக்கத்தில் ஏதோ ஒரு பொதுக்கூட்டம் நடப்பதைப் பார்த்து யார்பேசுகிறார்கள் என்று கேட்கிற ஆவலோடு போனேன். கூட்டம் பிரமாதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யாரோ ஒருவர் கூட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார்:"இதோ இங்கு அமர்ந்திருக்கும் நமது பேச்சாளர் 'எப்போதும் மகிழ்வார் நாட்டுக்காகப் பன்முறை சிறை சென்று துயருற்ற பெருமகனார்.வாழ்வில் இப்பெருந்தகையாளர் அனுபவிக்காத துன்பங்கள் இல்லை.” என்று அறிமுகப்படலம் தொடர்ந்தது.அந்தப்பெருந்தகையாளர் யார் என்று அறிந்து கொள்ளும் ஆவலால் உந்தப் பெற்று மேடையருகே சென்றேன்! என்ன ஆச்சரியம்! திருவாளர். நித்தியானந்தம் அவர்கள்தான் கழுத்து நிறைய மலர் மாலை சூடி நாற்காலியில் அமர்ந்திருந்தார். அடப்பாவமே பேரைக்கூட அல்லவா எப்போதும் மகிழ்வார்’ என்று மாற்றிக் கொண்டு விட்டார்? அன்று நித்தியானந்தனராகிய பெருமகனாரின் சொற்பொழிவு முழுவதையும் கேட்டேன். செத்துப்போன பத்தாம் பசலிக்கொள்கைகளைச் சீரிய கூரிய நடையில் முழங்கினார் எப்போதும் மகிழ்வார். அதைக் கேட்டு மகிழவில்லையானாலும் கூட்டம் கலைந்ததும் அன்னாரைத் தனியே சந்திக்க ஆவல் கொண்டுமேடையருகே சென்றேன்.பலர் நடுவே நான் அவரைப் பற்றி விசாரித்து மானத்தைக் கப்பலேற்றிவிடப் போகிறேனோ என்று பயந்த அன்னார் என்னோடு கீழே இறங்கித் தனியாக வந்துவிட்டார். "என்ன? புது 'பிஸினஸ்’ ஆரம்பித்திருக்கிறீர்கள் போலிருக்கிறது?”
"ஆமாம்! முன்னால் பிரமுகர் வேலை ஸைடு பிஸினஸ் ஆக மட்டும் இருந்தது. இப்போது முழுநேரப் பிரமுகர் ஆகிவிட்டேன்” என்றார் அன்னார் அவர்கள்.
“செய்ய வேண்டியதுதானே? இப்போதெல்லாம் உங்களைப் போன்றவர்களுக்கு ரொம்ப லாபகரமான வியாபாரம் பாலிடிக்ஸ்'தான்.”
"வாருங்கள்! நுங்கம்பாக்கம் நாயர் கடையில் டீ குடித்து நாளாச்சு.” என்று அழைத்தார் நித்தியானந்தம். எனக்கும் அவருடைய அழைப்பை மறுக்கத் தோன்றவில்லை. ஒரு பிரமுகருடைய அழைப்பை யாராவது மறுப்பார்களா? இருவருமாக நாயர் கடைக்குப் போனோம். டீ தயாராகிறவரை பல விஷயங்களைப் பேசினோம். ஒரு பிரமுகரோடு பேசுவதில் சுவாரஸ்யம் அதிகமாயிற்றே!
டீ வந்தது, குடித்தோம், நாயருக்குக் காசு கொடுக்க வேண்டிய சமயத்தில் பையைத் தொடப்போனதன் கையை அப்படியே அந்தரத்தில் திருப்பிக் கொண்டு, நீங்கள்தான் என்று என் தலையில் சுமத்திவிட்டார் நித்தியானந்தம். நான்தான் நாயருக்குப் பணம் கொடுத்தேன். வெளியே வந்ததும், “என்ன சார் முழு நேரப் பிரமுகர் ஆன பின்பும் உங்கள் மணிபர்ஸ் நிலைமையில் மாறுதல் ஒன்றும் இல்லை போலிருக்கிறதே?” என்று கேட்டேன். அவர் வறட்சியாகச் சிரித்தார்.
"இதோ நீங்களே பாருங்களேன். இதில் அன்றிலிருந்து இன்றுவரை இருப்பது இதுதான்” என்று அவருடைய மணிப்பர்ஸை என் கைக்கு நேரே தலை குப்புறத் தூக்கிக் கவிழ்த்தார் நித்தியானந்தம்.
அந்தப் பழைய செப்புக் காசு என் கையில் விழுந்தது. அந்த நாணயம் இப்போது முன்னைவிடத் தேய்ந்திருந்தது. நான் குறும்பாகச் சிரித்துக்கொண்டே அவரைக் கேட்டேன்.
“உங்கள் நாணயம் படிப்படியாகத் தேய்ந்து கொண்டே வருகிறது சார்” "வாஸ்தவம்தான். ஆனால் அதில் இன்னும் தேய்வதற்கு இடமிருக்கிறது என்பதுதான் நான் மகிழ்வதற்குக் காரணம்” என்று பதில் கூறினார் அவர்.