உள்ளடக்கத்துக்குச் செல்

நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1/இரவல் ஹீரோ

விக்கிமூலம் இலிருந்து

70. இரவல் ஹீரோ

ன்னாசியின் வாழ்க்கையில் அப்படி என்னதான் நேர்ந்து விட்டது? என்னவாவது? அது ரொம்பப் பெரிய விஷயம் சார்! ரொம்ப ரொம்பப் பெரிய விஷயம். மனிதனுடைய வாழ்க்கையில் துன்பங்கள் தொடர்ந்து இருக்கலாம். ஆனால் எல்லா நாட்களுமே அப்படி இருந்து விடுவதில்லை. ஒரு நாள் - ஏதோ ஒரே ஒரு நாள் அவன் மகிழ்வதற்காகவே வந்து நேர்கிறது என்பதை நிச்சயமாய் நம்பித்தான் ஆக வேண்டியிருக்கிறது. இந்த விநாடியில் அப்படி நம்பினான் சன்னாசி, அவனைப் போன்றவனைத் தேடி வருகிற சாதாரண அதிர்ஷ்டமா அது?

காலையில் எழுந்திருந்து, முதல் நாள் இரவு நினைவாகப் பாதியில் அணைத்துக் காதில் சொருகிக் கொண்டிருந்த அரைக் கட்டைப் பீடியை நாலு தம் உறிஞ்சிவிட்டுத் தெருச் சாக்கடைகளின் பிரவாகத்தில் நனைந்து, நனைந்து நாற்றத்தைத் தவிர வேறு குணங்களைக் கண்டறியாத அந்தக் காக்கி டிராயரை எடுத்து மாட்டிக் கொண்டு, ‘எதற்காகப் பொழுது விடிந்தது?’ என்ற அலட்சியத்தோடு அவன் சேரியிலிருந்து ‘உத்தியோகத்’துக்குப் புறப்பட்ட போது கூட இப்படி ஒர் அதிர்ஷ்டத்தைத் தன் வழியில் எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்க்கவில்லையாவது? சொப்பனத்தில் கூட இப்படியும் ஒன்று நடக்கும் என்று அவன் கண்டதில்லை. கற்பித்துப் பார்த்துக் கொண்டதுமில்லை. .

சன்னாசியின் உத்யோகம் இருக்கிறதே; அது இசக்கிமுத்து மேஸ்திரியின் ஆதிக்கத்துக்கு உட்பட்டது. சாக்கடையை விட அதிகமாக நாறக் கூடிய மனத்தை இசக்கி முத்து மேஸ்திரி என்கிற மனிதர் பெற்றிருந்தும், சன்னாசிப் பயல் அவருடைய டிவிஷனில் உள்ள இரண்டு மெயின் ரோடுகளைச் சுத்தம் செய்ய முடிந்தது போல அவர் மனத்தைச் சுத்தம் செய்ய முடிந்ததில்லை. என்ன செய்யலாம்? அதற்கென்று யாரும் கார்ப்பொரேஷன் வைத்து நடத்தவில்லையே? அப்படி நடத்தினாலும் அது முடிகிற காரியம் இல்லை என்பது அவனுக்குத் தெரியும். வட்டம் வட்டமாகத் தெருவில் இரும்புத் தகடுகள் இட்டு மூடியிருக்கும் பாதாளச் சாக்கடைக் குழிகளில் இறங்கி இந்த உலகத்தின் அழுக்குகள், ஓடாமல் தேங்கி விடாதபடி ஒழுங்கு செய்வது போல் இசக்கிமுத்து மேஸ்திரியின் மனத்தில் உள்ள அழுக்குகளை அவனால் போக்கி விட முடியாதுதான். -

“மேஸ்திரி ரொம்பத் தொந்தரவு புடிச்ச மனுஷனுங்க.எங்க சம்பளத்திலே லஞ்சம். தோட்டிப் பொம்பளைகளிடத்தில் எத்தினி எத்தினியோ வம்பு.அத்தெ என் வாயாலே சொல்லப் படாது ஸாமி. இந்தப் பட்டணத்திலே நெஜமா ஓடற சாக்கடை இந்த மேஸ்திரியோட மனசுதான்” என்று எப்பொழுதாவது சானிடரி இன்ஸ்பெக்டர் சூபர்வைஸர் போன்ற ஐயாமார்களிடம் ‘ஸ்ட்ராங்’காகச் சொல்லிவிட வேண்டுமென்று சன்னாசி பல நாட்கள் தவித்திருக்கிறான். ஆனால் அது வெறும் தவிப்புத்தான். காரியத்தில் ஒன்றும் நடந்ததில்லை.

“ஏண்டாலே! உனக்கென்ன பெரிய சினிமா ஷ்டாரின்னு நினைப்பாங்கறேன்? தோட்டிப் பயலா லட்சணமாக வந்து நிக்கிறதில்லே. வா, வா, உன்னைக் கவனிக்கிறபடி கவனிக்கிறேன்” என்று வயசுப் பெண்பிள்ளைகளான இளம் தோட்டிப் பெண்களுக்கு முன்னால் மேஸ்திரி தன்னை இறக்கிப் பேசிச் சிரிக்கிறபோதெல்லாம் ‘கடவுளே! இந்த மனிதருடைய வாயிலே பிறக்கிற சாக்கடையை எப்படி அடைப்பது?’ என்று சன்னாசி பலமுறை மனம் கொதித்திருக்கிறான். அந்தக் கொதிப்புக்கு இன்று விடிவு பிறந்துவிட்டது.

சன்னாசி இனிமேல் அப்படிக் கொதிக்க வேண்டிய அவசியமில்லை. நாளைப் பொழுது விடிந்து ‘அது நடந்ததும்’ அவனுடைய ஸ்டேட்டஸ் சேரியில் மட்டுமில்லை இசக்கிமுத்து மேஸ்திரியின் மனத்திலும்கூட உயர்ந்துதான் ஆக வேண்டும். சாதாரணமான விஷயமா என்ன அது?

சாக்கடை கழுவுகிற சன்னாசிக்கும் தன்மானம் உண்டு. இத்தனை பெரிய பட்டினத்தின் அழுக்கைக் கூசாமல் கழுவுகிறவனுக்குப் பெருமைப்பட உரிமையில்லையா என்ன? இந்தர அழுக்கை உண்டாக்குகிற புண்ணியவான்கள் எல்லாம் பெருமையும் கெளரவமும் கொண்டாட முடியுமானால் இதை அருவருப்பில்லாமல் கழுவுகிற கர்மயோகி இன்னும் அதிகமான பெருமையும் கெளரவமும் படலாம்தானே?

“ஐயாவை என்னன்னு நினைச்சே? ஐயா பெருமை வீதியெல்லாம் கொடிகட்டிப் பறக்குமில்லே? நடு ரோட்டிலே குச்சியை நிறுத்திச் சிவப்புத் துணியிலே ‘ரோடு குளோஸ்டு’னு போர்டு மாட்டிக்கிட்டு அண்டர்கிரவுண்டிலே ஹாஃப் டிராயரோட புகுந்துட்டா அப்பறம் நாமதான் ராஜா...” என்று யாருமில்லாத சமயத்தில் சேரிக் கிழவி குப்பச்சியிடம் சன்னாசி தற்சிறப்புப் பாயிரம் படிக்கிற வேளைகளில் அந்தத் தோட்டிக்கும் அசட்டுப் புகழாசை ஒன்று இருப்பது தெரிய வரும்.

இப்போது நிஜமாகவே அந்த அசட்டுப் புகழ் நிரூபணமாகப் போகிறது. தோட்டி சன்னாசிக்கு நல்ல உடம்பு. அகன்ற மார்பும் எடுப்பான தோள்களும் குண்டு முகமும் கருகருவென்ற தலை முடியுமாக ஆள் ராஜா மாதிரி ஜம்மென்றிருப்பான்.இந்த மாதிரி விஷயங்களுக்கு அங்கீகாரம் தருவதில் சேரியின் அதாரிடியான குப்பச்சிக் கிழவியே சொல்லியிருக்கிறாளே!

“போன பெறவியிலே ராசாவாக இருந்திருப்பேடா என் தங்கம்” என்று சன்னாசியைப் பார்க்கும்போது எல்லாம் கைவிரல்களைச் சொடுக்கித் திருஷ்டி முறித்திருக்கிறாள் அந்தக் கிழவி அப்படித் திருஷ்டி கழித்த அழகு வீண் போகுமா, என்ன?

அந்த அதிர்ஷ்டம் அவனைத் தேடிக்கொண்டு வந்தபோது சென்டிரல் ஸ்டேஷன் கடிகாரத்தில் பத்து மணி; பதினைந்து நிமிஷம் ஆகியிருந்தது. அவனுடைய அதிர்ஷ்டம் அவனைத் தேடிக்கொண்டு வருகிறபோது நடந்து வரவில்லை. காரில் வந்தது. கார் என்றால் அப்படி இப்படியா? கப்பலைப் போல் பெரிய கார் அது. அதில் வந்துதான் அந்த சினிமா டைரக்டர் அவனைப் பிடித்தார்.

சென்டிரல் ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் எங்கோ அண்டர் கிரவுண்டுச் சிக்கலைச் சரி செய்துவிட்டுச் சாக்கடை தோண்டுகிற நீண்ட இரும்புத் துடுப்புக் கரண்டியும் தள்ளுவண்டியுமாக அவன் தன்னுடைய அழுக்குத் தேடும் யாத்திரையை நடத்திக்கொண்டிருந்தபோது அதிர்ஷ்டம் அவனைத் தேடிக்கொண்டு காரில் வந்து சேர்ந்தது. சூட்டும் பூட்டுமாகக் காரில் இருந்து இறங்கிய நாலைந்து வாட்ட சாட்டமான ஆட்கள் அவனை மடக்கிக் கொண்டனர்.

“ஒம் பேரென்ன?”

“சன்னாசிங்கோ.”

“நீ தானே இந்த வார்டுலே அண்டர் கிரவுண்டு சாக்கடையெல்லாம் அள்ளுறே?”

“ஆமாங்கோ!”

“உன்னாலே ஒரு காரியம் ஆகணும். அது உனக்கும் பெருமையைத் தரப் போகிற காரியம்தான்.”

“நா என்ன செய்யனும் ஸாமீ?”

“இப்ப நான் சொல்றதைக் கவனமாகக் கேளு. நாங்கள்ளாம் சினிமாப் படம் புடிக்கிறவங்க. இப்ப நாங்க எடுத்திட்டிருக்கிற படத்திலே யதார்த்தமான வாழ்க்கையைச் சித்திரிக்கிறதாகச் சில காட்சிகள் இருக்கு. கதாநாயகியோட கைவளையல் அண்டர்கிரவுண்டு சாக்கடைக்குள்ளே தவறி விழுந்திடறதாகவும் ஹீரோ அவளுக்காக அதுக்குள்ளார இறங்கி அதைத் தேடறதாகவும் ஒரு காட்சி இருக்கு. படத்திலே ஹீரோவா நடிக்கிற நடிகர் மணி நாவுக்கரசுக்குப் பதிலாக ‘டம்மி’ ஆளு ஒருத்தர் சாக்கடையிலே இறங்கறதாகத் தொலைவுக் காட்சியிலே படம் பிடிச்சிருக்கலாம். காட்சி இயற்கையாத் தத்ரூபமா அமையனும்னாத் தெருச் சாக்கடையிலேயே படம் பிடிக்கணும். ஆனால் நடிகர் மணியைப் போல உள்ளவங்களை அப்படியெல்லாம் கண்ட இடத்துக்கு அழைச்சிட்டு வந்து படம் பிடிக்க முடியாது. கூட்டம் கூடிடும்னு பயப்படுவார்.அவரோட ஸ்டேட்டசுக்கு அது நல்லாவும் இருக்காது. ஹீரோயினோட சீனைப் பத்திக் கவலை இல்லே. ஹீரோ சர்க்கடையிலே எறங்கறப்போ ஹீரோயின் நாலு அஞ்சடி தள்ளி நிற்கிறாப் போலப் படத்தைப் பிடிச்சிடலாம். அப்படி நிற்கிறதுக்கும் ஹீரோயினா நடிக்கிறவங்க சம்மதிச்சாச்சு. அவங்க புது நடிகை சொன்னபடி ஒப்புத்துக்கிட்டாங்க. உனக்கு உயரம் முகத்தோற்றம் எல்லாம் ஏறக் குறைய நடிகர் மணியைப் போலவே இருக்கு தலையை மட்டும் இன்னும் நல்லாக் கிராப் வெட்டி மேக்-அப் செய்துட்டாப் போதும். இதுக்கு நீ சம்மதிக்கனும் நாலைக் காலையிலே ஷஅட்டிங் வைச்சுக்கலாம். ஒரு நிமிஷம் நீ காமிராவிலே தெரிஞ்சாப் போதும், மற்றதை எல்லாம் நாங்க கவனிச்சுக்குவோம்...” என்று விவரமாகக் கூறவேண்டியவற்றையெல்லாம் கூறி விளக்கிவிட்டு அவன் கையில் பத்துப் புதிய பத்து ரூபாய் நோட்டுக்களை எண்ணி வைத்தார் அவர்.

‘இந்தக் காரியத்தைச் செய்யிறத்துக்கு நூறு ரூபாயா?’ என்று மனத்தில் வியப்புடனே அந்தப் பணத்தைத் தன் அழுக்கடைந்த கையினால் வாங்கி டிராயர் பையில் வைத்துக்கொண்டு சன்னாசி அந்த சினிமா டைரக்டரை ஒரு கேள்வி கேட்டான்:

“ஹீரோ ஹீரோயின் அப்படீன்னா என்னங்க ஸாமி?”

“அதுவா? ஹீரோன்னாக் கதாநாயகன். ஹீரோயின்னாக் கதாநாயகி. அதாவது அவம் பொஞ்சாதி...”

"அப்படீன்னா இதுலே நான்தான் ஹீரோ! இல்லீங்களா?”

"ஆமாம். கொஞ்சம் நாழிகைக்கு நீ தான் ஹீரோ!”

“கொஞ்ச நாழிகைன்னாலும் ஹீரோ ஹீரோதானுங்களே?”

“சந்தேகமில்லாமல் ஹீரோதான்” என்று சொல்லிச் சிரித்தார் டைரக்டர். அவனுடைய குழந்தைத்தனமான இந்தக் கேள்வி அவருக்குச் சிரிப்பு மூட்டிற்று.

“படத்துலே காத்தவராயன் மகன் சன்னாசின்னு எம் பேரைக் காமிப்பீங்களில்லே.?”

“பேர்லே என்னாருக்கு? வேணுமின்னாக் கர்மிச்சாப் போச்சு நாளைக் காலையிலே ரெடியா இரு” மறு நாள் வருவதற்கு அவனுடைய சேரியின் இடத்தை அடையாளம் தெரிந்து கொண்டு டைரக்டர் முதலியவர்கள் புறப்பட்டார்கள்.

இதுதான் சன்னாசியின் வாழ்க்கையில் அன்று நடந்த பெரிய விஷயம். மறு நாள் விடிகிற வரை சேரியின் ‘பிரமுகி’யான குப்பாச்சிக் கிழவியிடம், “ஆயா! உனக்குத் தெரியாது! கொஞ்ச நாழின்னாலும் ஹீரோ ஹீரோதான்” என்று வாய்க்கு வாய் பெருமை பேசிப் பூரித்துக் கொண்டிருந்தான் சன்னாசி.

மறு நாள் விடிந்ததும் காலை ஏழு ஏழரை மணிக்கு ஸ்டூடியோ வேன் வந்து சன்னாசியை அழைத்துக் கொண்டு போய்விட்டது. அவன் வேலை பார்த்த வார்டில் அவனுக்குப் பழக்கமான ஒரு பொது இடத்திலேயே அந்த ஷூட்டிங்குக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். “அண்டர் கிரவுண்டுக்குள் இறங்கிச் சாக்கடை நீரில் நனைந்த கோலத்தோடு மேலே எழுந்தபின் இதோ இந்த இடத்திலே இவங்க நிற்கிற பக்கமாகச் சிரித்தபடி ஒரு தடவை திரும்பிப் பார்க்கணும் நீ” என்று கதாநாயகியாக நடிக்கும் நடிகையை வட்டச்சாக்கடைக் குழிக்கருகே ஓரிடத்தில் நிறுத்தி விட்டுச் சன்னாசிக்குச் சொன்னார் டைரக்டர்.

“இவங்கதான் ஹீரோயினா?” என்று கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமாகவே டைரக்டரை ஒரு கேள்வி கேட்டான் சன்னாசி. அவனுடைய இந்தக் கேள்வியைச் செவியுற்று அந்த நடிகை அருவருப்படைந்து முகத்தைச் சுளித்தாள். டைரக்டருக்கும் அந்தக் கேள்வி எரிச்சலைத் தான் மூட்டியது. ஆனாலும் காரியம் நடக்க வேண்டும் என்பதில் கண்ணாக இருந்த அவர் பொறுமையைக் கடைப்பிடித்தார். தரையில் சாக்கடையருகே நிற்கக் கூசிக் கொண்டே நிற்பதுபோல் செருப்பணிந்த கால்களோடு அருவருப்புடனே ஒதுங்கி ஒதுங்கி நின்றாள் ஹீரோயின்.

ஆனால் ஹீரோவோ தினம் தொழிலுக்காகத் தான் மூழ்குகிற வழக்கமான சாக்கடையை அன்றைக்குப் பன்னிர்க் குளமாக நினைத்துக் கொண்டு மிகுந்த உற்சாகத்தோடு மூழ்கி எழுந்தான்.

கண் மூடிக் கண் திறக்கிற நேரத்தில் அந்தப் படப் பிடிப்பு முடிந்து விட்டது. ஹீரோ சன்னாசி தோட்டி சன்னாசியாக மாறி விட்டான்.அந்த ஒரு கணத்துக் கனவும் மெல்லக் கலைந்து போயிற்று.வந்திருந்தவர்கள் எல்லாரும் ஸ்டூடியோவேனில் பறந்து கொண்டு போய்விட்டார்கள். சன்னாசி சாக்கடை நீரில் மூழ்கி யெழுந்த கோலத்தில் தெருவில் தனியாக நின்று கொண்டிருந்தான். புது நடிகையை வேடிக்கை பார்க்கக் கூடியிருந்த கூட்டமும் அவள் போனதும் கலைந்து விட்டது.

ஏதோ நினைவு வந்தவனாகச் சன்னாசி சென்டிரல் ஸ்டேஷன் கடிகாரத்தைப் பார்த்தான். மணி எட்டரைக்கு மேல் ஆகியிருந்தது. ஏழரை மணிக்கு இசக்கிமுத்து மேஸ்திரியிடம் ஆஜர் கொடுக்க வேண்டும்.

‘இன்றைக்குக் கொஞ்சம் லேட்டாகத்தான் ஆஜர் கொடுப்போமே! இந்த இசக்கிமுத்து மேஸ்திரி என்ன பெரிய ஹீரோவோ?’ என்று துணிச்சலாக நினைத்துக் கொண்டே போகிற போக்கில் டைரக்டர் அவன் பக்கமாக வீசி எறிந்துவிட்டுப் போயிருந்த உயர்தர சிகரெட் பெட்டியில் ஒன்றை உருவிப் புகைக்கத் தொடங்கினான். அந்தச் சுகத்தில் நேரம் போனதே தெரியவில்லை. அன்று வேலைக்கு மட்டம் போட்டாயிற்று. அந்தச் சினிமா டைரக்டரைப் போலச் சூட்டும், பூட்டும் போட்டுக் கொள்ள வேண்டும் என்று சன்னாசிக்கு ஆசையாயிருந்தது. கிடைத்திருந்த பணத்தில் எழுபது எண்பது ரூபாய் வரை செலவழித்து அப்படி இரண்டு ஜோடி உடுப்பு ரெடிமேடாக வாங்கிச் சேரியில் கொண்டுபோய்க் குடிசையின் பெட்டியில் இரகசியமாக வைத்துப் பூட்டினான். டாக்ஸியில் ஏறிச் சுற்ற வேண்டும் என்றும் அவனுக்கு ஓர் ஆசை வெகு நாட்களாக உண்டு. இரவில் அந்த ‘டைரக்டர் உடுப்பை’ அணிந்துகொண்டு டாக்ஸியிலே ஏறிப்போய் மாடியில் பெரிய கிளாஸ் டிக்கெட் வாங்கி இரண்டாம் ஆட்டம் சினிமாவும் பார்த்தான் சன்னாசி, அதற்குமுன் புகாரியில் போய் வயிறு புடைக்கச் சாப்பிட்டிருந்ததில் ஆன செலவும் அதிகம் தான். இரண்டு மூன்று நாட்கள் இப்படி ஒரே ஹீரோ மிதப்பில் எல்லாம் பரம சுகமாகக் கழிந்தது.

கையிலிருந்த பணமும், மனத்திலிருந்த ஹீரோ கனமும் கரைய இந்த மூன்று நாள் வேண்டியிருந்தது சன்னாசிக்கு. நான்காம் நாள் எட்டு மணிக்கு எழுந்து முதல் நாள் ஞாபகமாகப் பாதியில் அணைத்து வைத்திருந்த சிகரெட்டைப் புதைத்துக்கொண்டே ‘எதற்காக இந்தப் பொழுது விடிந்தது?’ என்ற அலட்சியத்தோடு இசக்கிமுத்து மேஸ்திரியிடம் ஆஜர் கொடுக்கப் போனான் சன்னாசி.

“ஏண்டாலே! உனக்கென்ன சினிமா ஷ்டாரின்னு நினைப்பாங்கறேன்? தோட்டிப் பயலா லட்சணமா..?” என்று வழக்கம் போல் மேஸ்திரி ஆரம்பித்தபோது எல்லா நாளும் போல இன்று அவனால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

“சர்த்தான் நிறுத்து சார்... நான் சினிமா ஷ்டாரில்லாட்டா நீயா ஷ்டாரு?” என்று பதிலுக்குப் பேசிவிட்டான் சன்னாசி. இசக்கிமுத்து மேஸ்திரி அந்த ஹீரோவுக்கு வில்லனானார். ஹீரோவின் கை வீழ்ந்துவிட்டது.

‘ஸீரியஸ் மிஸ் காண்டக்ட்’ என்று ஒரே வரி ரிப்போர்ட் எழுதிக்கொண்டு அவனை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார் இசக்கிமுத்து மேஸ்திரி. சன்னாசிக்கு வேலை போய்விட்டது. வேலை போனால் என்ன? இதென்ன பெரிய வேலை..?

சேரிக்குத் திரும்பி வந்து அவன் குப்பச்சிக் கிழவியிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

“ஆயா! இவனுக என்னமோன்னு நினைச்சுகிட்டிருக்காங்க... கொஞ்ச நாழின்னாலும் ஹீரோ ஹீரோதான்... அந்தப் பயாஸ்கோப்பு ரிலீஸாகி வரப்போவுது பாரு. அதுலே காத்தவராயன் மகன் சன்னாசின்னு எம் பேரு காமிப்பாங்க. அப்ப தெரியும் எம் பெருமை...”

“நீராசாவாப் பொறந்திருக்கணும்டா என் தங்கமே” என்று குப்பச்சிக் கிழவி அந்த ஹீரோவைத் தன் வழக்கமான வார்த்தைகளில் வாழ்த்தினாள். இன்னும் அரைமணி நேரம் வரை அந்த ஹீரோவுக்கு ஒரு கவலையும் இல்லை. ஏனென்றால் காதில் அரைக் கட்டை பீடித் துண்டு ஒன்று ‘ஸ்டாக்’ இருந்தது.

‘கொஞ்ச நாழின்னாலும் ஹீரோ ஹீரோதானே?’ இல்லையா, பின்னே?

(கல்கி, 1.4.1962)