உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாண்டியன்...பள்ளித் துஞ்சிய நன்மாறன்

81


மருதனிள நாகனார்:- அந்நாடுகளுக்கு இனிமேற் கடி மரங்கள் வேண்டுவதில்லை. நம் அரசர் தலைமையின் கீழ் அடங்கியுள்ள நாட்டை எதிர்க்கப் பகைஞர் இருக்கவியலாதாகையால், பகைவர் வருகையை அறிதற் பொருட்டு உதவுவதாகிய கடிமரம் இனிவேண்டியிராதன்றோ? நம் அரசர் ஆணை செல்லும் இடங்களில் அவர் ஆணையே அறந் துணையாகக் காவல் செய்யும் ஆகையால், காவல் மரமாகிய கடி மரம் வேண்டுவதில்லை.

காரிக் கண்ணனார்:- ஆயினும், நாம் அமைத்த கருத்தையும் சிறிது கவனிக்க வேண்டுகிறோம். இவர்கள் கடி மரத்தைத் தடிவராயின், தமிழ் நாட்டரசின் படையில் உள்ள களிறுகள் கட்டுத் தறியின்றிக் காட்டில் ஓடிவிட நேரிடும் அன்றோ?

நன்மாறன்:- சோழ நாட்டுப் புலவராகிய நீவிர் கூறிய கருத்தும் நம் நாட்டுப் படைக்குப் பெருமையே விளைக்கின்றது, ஆகையால், நம் படைஞர் பெருமை எதிர் காலத்தும் அறியலாம்படி தாம் கூறிய பொருள் அமையத் தக்கது என எண்ணுகிறோம்.

நக்கீரனார்:- அன்பரே, நம்மனோர் பெருமை எதிர் காலத்து வழங்க வேண்டுமாயின், இத்தகைய கருத்துக்கள் செய்யுள் உருவம் பெறலே சிறப்பாம். நீவிர் இங்குப் பேசிய பேச்சைப் பிற்காலத்தார் வேறு எவ்வழியால் அறிய வியலும்?

மருதனிள நாகனார்:- புலவர் பேசியதே செய்யுள் போல இருந்தது. செய்யுள் என்பது, உள்ளக் கருத்தை ஒளியாது உலகிற்கு உணர்த்துவதற்கு உள்ள ஒரு வழிதானே!

6