கட்டுரைக் கதம்பம்/வள்ளுவரும் கடவுள் வாழ்த்தும்

விக்கிமூலம் இலிருந்து

1. வள்ளுவரும் கடவுள் வாழ்த்தும்

திருவள்ளுவர் எம்மொழியினராலும் எம்மதத்தினராலும் எவ்வினத்தவராலும் போற்றப்பட்டு வரும் பெரும்புலவர் என்பது உலகு அறிந்த ஓர் உண்மையாகும். இங்ஙனம் இவர் மதிக்கப்படுதற்குரிய காரணம், இவரது வாக்குக்களாகிய திருக்குறட் பாக்கள் அத்துணைப் பொருட்செறிவுடையன என்பது தவிர்த்து, வேறு எதுவும் இன்று. இவர் யாத்த இப்பெரு நூலில் இல்லாதது ஒன்றும் இல்லை. இஃது எல்லாம் நிறைந்த ஓர் அறநூல். இதனால் தான் நத்தத்தனார் என்னும் புலவர்,

ஆயிரத்து முந்நூற்று முப்ப தருங்குறளும்
பாயிரத்தி னோடு பகர்ந்தன்பின்—போயொருத்தர்
வாய்க்கேட்க நூலுளதோ?

என்று விதந்து பாடினர்.

“அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூற்பயனே” என்பது ஒரு நூலால் எய்தும் பயனைக் குறிக்கும் விதியாகும். இவ்விதி முற்றிலும் பொருந்தப்பெற்றது நந்தம் வள்ளுவனார் வாய்மொழியாகிய திருக்குறள் என்றறிக. இதனை நன்கு உணர்ந்த கொடிஞாழல் மாணிபூதனார் என்னும் புலவர்,

அறன் அறிந்தேம் ஆன்ற பொருள் அறிந்தேம் இன்பின்
திறன் அறிந்தேம் வீடு தெளிந்தேம்—

என்று உண்மை அறிந்து உரைத்துள்ளார். இன்னோரன்ன சீரிய பண்புடைய நூலின்கண் கடவுளைப் பற்றிய குறிப்புக்கள் எந்த அளவுக்குக் காணப்படுகின்றன என்பதை எடுத்துக் கூறப்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இப்பகுதி திருக்குறளில் உள்ள கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதாகும்.

வள்ளுவனார் கடவுள் பண்புகளை எம்முறையில் பகுத்துத் தம் நூலில் சுட்டியுள்ளார் என்பதை உற்று நோக்கும்போது, முதலாவதாகக் கடவுள் உண்டு என்பதை உதாரண வாயிலாக உணர்த்தினர் என்பது தெரிகிறது. அவர் அக்கடவுளேத் தொழுதலாலும் அணுகுதலாலும் ஏற்படக்கூடிய பயனை மொழிந்து, எத்துணை அறிவு பெற்றிருந்தாலும், கடவுள் திருவடிகளில் பற்று இல்லையானால், பயன் எதுவும் இல்லை என்பதையும் திறம்படப் பேசியுள்ளார்.

வள்ளுவர் கடவுள் பண்பினை வகுத்துப் பேசிய முறைப்பாட்டினைக் குறித்து விரிந்த அளவில் அறிந்து அன்புறுதற்கு முன்பு, அவர் கடவுளே எவ்வெச் சொற்களால் சுட்டியுள்ளார் என்பதை முதற்கண் நாம் அறிதல் சாலப் பொருத்தமேயாகும்.

திருவள்ளுவராம் பொய்யில் புலவர், இறைவனை “ஆதிபகவன்” என்றும், “வாலறிவன்” என்றும், “மலர்மிசை ஏகினான்” என்றும், “வேண்டுதல் வேண்டாமை இலான்” என்றும், “இறைவன்” என்றும், “பொறிவாயில் ஐந்தவித்தான்” என்றும், “தனக்குவமை இல்லாதான்” என்றும் “அறவாழி அந்தணன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு செந்நாப் போதாராம் திருவள்ளுவர் கடவுளுக்குரியனவாக எடுத்துக்கூறிய மொழியும், தொடர்களும் பொருள் பொலிவுடையனவாகவும் செறிவுடையனவாகவும் கடவுளின் இயல்புகள் இன்ன என்பனவற்றை விளக்குவனவாகவும் உள்ளன.

எல்லாம் வல்ல இறைவன் தனக்குமேல் ஒரு பொருளையும் பெற்றிராமல், தானே முதன்மையானவனாக விளங்குதலின், அவன் ஆதி என்று கூறப்படுவதல் உண்மையாகும் அன்றோ? “முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி” என்ற வாகீசப் பெருமானார் வாக்கையும், “முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே” என்னும் வாதவூர் அடிகளார் கூறியுள்ளதையும் ஈண்டுப் பொருத்திக் காணலாம்.

இறைவனுக்கும் சீவனுக்கும் வேறுபாடு உண்டு. இவ்வேறுபாட்டை உணர்த்தவே இறைவனுக்குச் சில குணங்கள் இருப்பனவாக அறிஞர்கள் கற்பித்துக் கூறியுள்ளனர். தன் வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேர் அருள் உடமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை என்ற எண்குணங்களே யுடைமையால் அவன் எண் குணத்தினான் என்று குறிப்பிடப்பட்டுள்ளான். இங்ஙனமே சுந்தர மூர்த்திகள் இறைவனை ‘எண்குணத்தினானை’ என்று பாடியுள்ளார். இப்படி இவ்வருளாளர் கூறுதற்குக் காரணம் நம் வள்ளுவனர் தம் திருவாயால் இறைவனை “எண்குணத்தான்” என்று கூறிப் போந்தமையே அன்றி வேறன்று.

தூய அறிவன்; பேர் அறிவன் இறைவன். நாமோ சிற்றறிவினர்; தூய்மை அற்ற அறிவினர். அதனால்தான் வள்ளுவனார் வால் அறிவன் என்று வழுத்தினார் இறைவனை. இந்த உண்மையினால் அன்றோ “பேர் அறிவே இன்பப் பெருக்கே” என்றனர் தாயுமானார்!

இறைவன் கற்பனை கடந்த சோதியாக இருந்தாலும், கருணையே உருவமானவன். இப்பண்புடையவன் இறைவன் என்பதை அன்பால் தன்னை நினைப்பவர்களுடைய மனத்தாமரையில் விரைவில் சென்று குடிபுகுபவன் என்பதிலிருந்து நாம் உணரலாம். இதை வற்புறுத்தவே பெருநாவலராம் திருவள்ளுவர் “மலர்மிசை ஏகினான்” என்று இறைவனைக் கூறலுற்றனர். இக்கருத்தை ஒட்டியே திருநாவுக்கரசரும், இறைவனை “மனத்தகத்தான்” என்று போற்றியுள்ளார். “என் உடல் இடங்கொண்டாய் யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறு” என்று கூறினர் மணிமொழியார். “நஞ்சுடை கண்டர் நெஞ்சிடமாக நண்ணுவர் நம்மை நயந்து” என்றருளிச் செய்தனர் ஆளுடைய பிள்ளையார்.

இறைவன் விருப்பு வெறுப்பு இல்லாதவன். “இவன் தனக்கு வேண்டியவன்; இவன் தனக்கு வேண்டாதவன்” என்று கருதும் இயல்பு அவ்விறைவன்மாட்டு இல்லை. “ஈசன் அவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான்.” இதனால் அன்றோ அவன் கொடிய விடமுடைய பாம்பினையும் தன்மீது அணிந்து கொண்டனன் என்பர். விருப்பு வெறுப்பு இல்லாதது இறைமைக்குணம் என்பதை இறைவன் ஞானசம்பந்தர்க்கு ஞானப்பால் கொடுத்து, அவரைத் தனக்கு அன்பனாக ஆக்கிக்கொண்டதனாலும், அப்பர்சுவாமிகட்குக் கொடிய சூலைநோய் தந்து அவரையும் அன்பராக்கிக் கொண்டதாலும் நன்கு உணரலாம். இந்நிகழ்ச்சி இறைவனது விருப்பு வெறுப்பு உணர்ச்சியினையா காட்டுகிறது? அவனது அறக்கருணை, மறக்கருணே மாட்சியினை அன்றோ காட்டுகிறது?

இந்தப் பண்பாடுகளே அறிந்தன்றோ வள்ளுவப் பெருந்தகையார் முன் கூட்டியே தம் பாவில் இறைவன் இயல்பு இன்னது என்பதை “வேண்டுதல் வேண்டாமை இலான்” என்று விதந்து பேசியுள்ளார். இத்தொடரே அப்பர் பெருமானே “வேண்டாமை வேண்டுவதும் இல்லான்” என்று இறைவனைப்பற்றிப் பாடச் செய்தது.

பார்க்குமிடமெங்கும் ஒரு நீக்கமற நிற்கும் இயல்பு இறைவனுக்குரியதாதலின், அதனை ஒரு சொல்லால் உணர்த்தவே “இறைவன்” என்று இனிது எடுத்துப் பேசினர் நாயனார். இறுத்தலாவது தங்குதல். இறைவன் எங்கும் தங்கி இருப்பவன். ஆகவே, அப்பொருள் தரும் சொல்லால் இறைவன் என்று கூறப்பட்டான். தான் எங்கும் தங்கி இருந்ததனால் அன்றோ, திருக்குறிப்புத் தொண்ட நாயனார் கல்லில் தம் தலையை மோதியபோது, அதனின்றும் கையைத் தோற்றுவித்து அவர்தம் தலை மொத்துண்ணாவாறு தடை செய்தான் இறைவன் !

நாம் ஐம்புலன்களைப் பெற்றிருக்கிறோம். அப்புலன்களை அடக்கி ஆளுதல் என்பது எளிதில் முடியும் செயலும் அன்று. ஆனால், இறைவனை நம்மாட்டு வைத்த அருள் காரணமாக நம்போன்று வடிவம் கொண்டாலும், அவ்வடிவத்தில் அமைந்த ஐம்புலன்கள் அவனை ஒன்றும் செய்ய மாட்டா. இறைவன் நம்பொருட்டே, அதாவது நாம் இறவாப் பேர்இன்பம் பெறவே, அருள் திருமேனி கொள்கின்றான் என்பதைச் சிவஞான சித்தியார் நமக்கு நன்கு எடுத்து மொழிகின்றது. ஆகவே, அவன் ஐம்புலன்களையும் பெற்ற வடிவினனாகக் காட்சியளித்தாலும், அவ்வைம்புலன்களையும் செற்ற அறிஞன் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. ஐம்புலன்கள் ஆறத்துய்த்தற்குரியோர் போல அவனுக்கு மனைவி மக்கள் முதலியோர் இருப்பவராகக் கூறப்பட்டு வருகின்றதே எனில், இறைவனுக்கு அமைந்த மனைவி மானிடர்கட்கு அமைந்த மனைவி போன்று இன்றி, அருளே அவனுக்குரிய மனைவியாக உள்ளாள் என்பது தான் உண்மை நூல்களின் துணிபாகும். “ஆனா அருள் தன்னைத் தானாக இருத்திய தையல்” என்ற கச்சியப்பர் வாக்கைக் காண்க. இங்ஙனமே இறைவனுக்கு மக்களும் இலர். மக்கள் இருப்பவராகக் கூறுதல் உலகமக்கள் போல நடித்துக் காட்டும் நடிப்பே அன்றி வேறன்று.

ஒருபொருளின் உயர்ச்சியை அறிவிக்க மற்றொரு பொருளை உவமை தருதல் இயல்பு. அவ்வுவமை உபமேயத்தைப் போலச் சிறப்புடையதாகவோ, அன்றி அதனினும் சீரியதாகவோ இருக்கும் இயல்புடையது. அந்த முறைக்கிணங்க இறைவனுக்கு எதிராக ஒரு பொருளை ஒப்புமை கூறச் சிந்திக்கும்போது ஒன்றும் புலனாகாது; அவனுக்கு ஒப்புக் கூறவும் இயலாது. அதனால் தான் செந்நாப்போதார் “தனக்குவமை இல்லாதான்” என்று இறைவனைக் கூறிப்போந்தனர்” இதனை அடியொற்றியே அழுது அழுது அரனடிக்கு அன்பு பூண்ட மாணிக்கவாசகரும் “ஒப்புனக்கு இல்லா ஒருவனே” என்று உளம் மகிழ உரைத்தருளினர். அப்பர்பெருமானாரும் “ஒப்புடையன் அல்லன் ஓர் உவமன் இல்லி” என்று கூறியிருப்பனவற்றையும் ஈண்டு நினைவுகொள்வோமாக.

“அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும், செந்தண்மை பூண்டொழுக லான்” என்று வள்ளுவரே அந்தணர் என்ற சொல்லுக்குப் பொருள் கூறிப் போந்தனர் ஆதலின், அவ்வந்தணப் பண்பின் மூலகாரணர் இறைவர் என்பதை நமக்கு நாயனார் கடவுள் வாழ்த்துப் பகுதியில் இறைவனை “அந்தணன்” என்று கூறி அறிவுறுத்திவிட்டனர். அவ்வந்தணன் பின்னால் நீத்தார் பெருமையில் கூறப்பட்ட அந்தணரினும் ஒருபடி வேறானவன் என்பதையும் உணர்த்தவே, “அறவாழி அந்தணன்” என்றனர். இறைவன் அந்தணன் என்னும் பெயர்க்கு உரியவன் என்பதைத் திருவாசகத்தில் “கொந்தணவும் பொழில் சோலைக் கூங்குயிலே இதுகேள் நீ, அந்தணனாகி வந்திங்கே அழகிய சேவடி காட்டி” என்று கூறியிருப்பதால் அறியலாம். “அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே” என்றார் திருஞானசம்பந்தர். ஆகவே, இதுகாறும் கூறியதினின்று வள்ளுவர் பெருமானார் கடவுளைப் பற்றிக் கூறிய சொற்களினின்றும் சொற்றோடர்களினின்றும் கடவுளின் இயல்புகள் இன்ன என்பனவற்றை அறிந்தனம். இனி, இக்கடவுளிடத்து உயிர்களாகிய நாம் எந்த முறையில் தொடர்பு கொள்ளுதல் வேண்டும் என்பதையும் அறிவோமாக.

சீவர்களாகிய நாம் இவ்வுலகில் பிறந்து பிறந்து இறந்து இறந்து போவதில் பயன் இல்லை. பிறப்பும் இறப்பும் இடையறாது வருதலின் பிறப்பைப் பெரியகடல் என்று கூறி வருகின்றனர் ஆன்றோர். அப்பிறப்பாகிய கடலைக் கடத்தல் வேண்டும்; கடந்து பேர் இன்பமாகிய கரையினைச் சேரவேண்டும். இதுவே, சீவான்மாவின் குறிக்கோளாக இருத்தல் வேண்டும். அதனால்தான் நம்முன்னோர்கள் கடவுளை நோக்கி முறையிடும் போதெல்லாம் “வன்பிறவி வேதனைக்கு அஞ்சி உனை அடைந்தேன் ஐயா” என்றும், “பிறவாதிருக்க வரந்தரவேண்டும்” என்றும் வேண்டுவாராயினர், “இவ்வேண்டுகோள் நிறைவேற வேண்டுமானால் இறைவனது திருவடியாகிய தெப்பத்தைப் பற்றுங்கள். அத்தெப்பம் பிறவிக் கடலைக் கடக்கச் செய்து முத்திக்கரையினில் சேர்க்க வல்லது” என்று மக்களுக்கு அறிவுறுத்தவே, பொய்யில் புலவர் “பிறவிப் பெருங்கடல் நீங்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்” என்றும், “அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால், பிழவாழி நீந்தல் அரிது” என்றுங் கூறினர். மேலும், திருவடிப்பேறு ஞானப்பேருகும். இறைவன் திருவடி, ஞானமே என்பதைத் திருமங்திரப் பாடலாலும் தெள்ளத்தெளிய உணரலாம்.

வள்ளுவனார் பிறவிப் பெருங்கடல் நீந்துதற்கு மட்டும் கடவுள் திருவடியினைச் சேருமாறு வற்புறுத்திலர். இறைவன் இணையடியினைச் சேரப் பெற்றவர் இம்மை உலகத்துமட்டும் இன்றி, அம்மை உலகத்திலும் நீடுவாழ்வர் என்றும், எந்த இடத்தும் துன்புறார் என்றும், மனக்கவலை மாற்றி இன்பக் கடலில் ஆழ்வர் என்றும் கூறினர். ஆம், இறைவன் திருவடி அத்துணையும் தரவல்லதுதான். நம் வள்ளுவனார் கருத்தை ஒட்டியன்றோ வாகீசர், இறைவன் திருவடியினைப் பற்றிப் புகழ்ந்து பேசுகையில்,

சிந்திப் பரியன சிந்திப் பவர்க்குச் சிறந்துசெந்தேன்
முக்திப் பொழிவன முத்தி கொடுப்பன மொய்த்திருண்டு
பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன பாம்புசுற்றி
அந்திப் பிறைஅணிந் தாடும் ஐ யாறன் அடித்தலமே

எனக் குதுகலத்துடன் கூறுவராயினர்.

வள்ளுவர்க்குத் திருவடிப்பேற்றைப் பெறுவதோடு மக்கள் நில்லாமல், அவனது புகழையும் எந்நேரமும் இடைவிடாது சிந்தித்த வண்ணமும் செப்பிய வண்ணமும் இருத்தல்வேண்டும் என்பதும் உள்ளக்கிடக்கையாகும். அப்படி எண்ணினுல்தான் எந்தவிதமான வினைகளும் அவர்களை அணுகா என்று வ ற் பு று த் தி க் கூ று கி றா ர். இக் கருத்துத் தானே “இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு” என்ற குறட்பாவில் தெரிகிறது? சுந்தரர் தாம் இடைவிடாது இறைவனைச் சிந்தித்த வண்ணம் இருந்தார் என்பதை “நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லுகா நமச்சிவாயவே” என்று கூறியுள்ளார். இவ்வாறு சிந்தித்தலாகிய ஒழுக்க நெறியில் மக்கள் ஒழுக வேண்டும் என்பதே வள்ளுவர் கருத்து. இவ்வொழுக்க நெறியில் நின்றவர் நீடுவாழ்வர் என்று, இப்பண்புடையார் வாழ்க்கையின் நீட்டிப்பினே அறிந்து பேசினர். இப்பண்பினர் பருவுடல் நீங்கினும், அவர்களது நுண்ணுடல் பெருமையும் பண்பும் இன்றும் இவ்வுலகில் பேசப்படுதலே அவர்கள் நீடுவாழ்கின்றார் என்பதற்கு எடுத்துக் காட்டாகும்.

இறைவன் நமக்குக் கை கால் முதலான உறுப்புக்களைக் கொடுத்ததன் காரணம், உடுப்பதற்கும் உண்பதற்கும் உலக வாழ்க்கையில் உறைவதற்கும் மட்டும் அன்று. அவ்வுறுப்புக்களைக் கொண்டு இம்மைப் பயனைத் துய்த்தலோடு அம்மைப் பயனையும் எய்தற்கும் பாடுபடுதல் வேண்டும். அம்மைப் பயனை எதுபோது பெறலாம்? ஆண்டவனால் கொடுக்கப்பட்ட உறுப்புக்களை அவன் பொருட்டே பயன் படுத்தினால் தான் பெற இயலும், இதனை வள்ளுவனார், தலையினை பெற்றும் எவர்க்கும் தலைவனும் இறைவன் தாளை வணங்கவில்லை என்றால், அந்தத் தலையினைப் பெற்றுப் பயன் இல்லை ஆகவே, தலையால் அவன் தாளை வணங்குதல் வேண்டும் என்று கூறிய வள்ளுவர்வாக்கின் உண்மைப் பொருளை உணர்ந்த பரிமேல் அழகர் தலையால் வணங்கினால் மட்டும் போதாது என்பதை விளக்கக் “காணாத கண் முதலியன போல வணங்காத தலைகள் பயனில எனத் தலைமேல் வைத்துச் சொல்லினும், இனம் பற்றி வாழ்த்தாத நாக்களும் அப்படியே பயனிலவாம். என்க” என்று கூறிப்போந்தனர். ஆளுடைய அரசராம் அப்பர் பெருமானாரும் திருவங்கமாலையில் “தலையே! நீ வணங்காய், கண்காள் காண்மின்களோ, செவிகாள் கேண்மின்களோ, மூக்கே நீ முரலாய், வாயே வாழ்த்து கண்டாய், நெஞ்சே நீ நினையாய், கைகாள் கூப்பித்தொழிர், ஆக்கையால் பயன் என்?”, கால்களால் பயன் என்?, என்று அருளிச்செய்தனர். இங்ங்னமெல்லாம் பாட இடங் கொடுத்தது “கோளில் பொறியில் குணம்இலவே எண்குணத் தான், தாளை வணங்காத் தலை” என்ற வள்ளுவர் வாக்கே அன்றி வேறு வாக்கு உண்டோ ?

வள்ளுவர் முக்காலமும் உணர்ந்த மூதறிஞர். வருங்காலத்தில் கடவுள் உணர்ச்சி சிறிது குறைவு படும் போலும் என்று ஒர்ந்து உணர்ந்துள்ளார். அவ்வுண்ர்ச்சிக்குக் காரணம் கல்வியின் முதிர்வு என்றுகூடச் சிந்தித்துள்ளார். அன்னார் அச்சிந்தனை காரணமாகவே கல்வி அறிவால் முதிர்ந்தவர்கள் மாட்டுக் கருணை வைத்து, அவர்கட்குக் கடவுள் உணர்ச்சியினைப் புகட்ட வேண்டுமென்று, “கடவுள் திருவடியினைத் தொழாதுபோயின், கற்றுப்பயன் இல்லை” என்று கூறியருளினர். அங்கும் ஒரு நயம் தோன்ற அவ்வுண்மையைக் கூறியருளினர். கற்றவர்கள் தம் கல்வியின் அறிவைப் பெரிதாகவும், குற்றம் குறையற்றதாகவும் கருதிக் கடவுள் உணர்ச்சி குறைந்துள்ளார். ஆனால், அவர்களின் கல்வி அறிவு, இறைவன் அறிவின் முன் தாழ்வுடையது; தூய்மை அற்றது. இந்த உண்மையினை வலியுறுத்தவே இத் தருணத்தில் இறைவனை வேறு எந்தச் சொல்லாலும் குறிப்பிடாமல் “வால் அறிவன்” என்றே கூறிய மாண்பினை என்னென்றுவியப்பது!

கற்ற தனால் ஆய பயன் என்கொல் வால்அறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

என்று வள்ளுவர் திருவாய் மலர்ந்த குறட்பாவிற்கு விளக்கம் காட்டுவார் போன்று, சேக்கிழார் பெருமானார், உள்ளநிறை கலைத்துறைகள் ஒழிவின்றிப் பயின்றவற்றால் தெள்ளவடித் தறிந்தபொருள் சிவன் கழலில் செறிவென்றே கொள்ளுமுணர் வினில்முன்னே கூற்றுதைத்த கழற்கன்பு பள்ளமடை யாய்என்றும் பயின்றுவரும் பண்புடையார்

என்று பாடியருளிய பாட்டினையும் ஈண்டுப் படித்துப் பரவச முறுதல் சாலப்பயன் தருவதாகும்.

வள்ளுவனார் கடவுள் தன்மைகளையும் அக்கடவுளை அடைந்து பெறதத்க்க இன்பத்தினையும் கடவுளை எப்படியும் போற்றியே ஆதல்வேண்டும் என்பதையும் கூறியருளினார் எனக் கூறினோம். இனி, வள்ளுவனார் கடவுள் உண்டு என்பதை எப்படி நிலைநாட்டினார் என்பதைக்கூறி இக்கட்டுரையைமுடிப்போமாக.

வள்ளுவனார் கடவுளை நம் கண்முன் கொண்டு வந்து காட்ட முன்வந்திலர். கடவுள் ஒருவர் உண்டு என்பதை உதாரண வாயிலாகக் காட்டவே முனைந்து நின்றனர். புகை கண்ட இடத்து ஆண்டு நெருப்பு உண்டு என்று அறிவதுபோல, உலகத்தினைக் கண்டபோது இவ்வுலகத்திற்கு முதற் காரணமான ஒரு பொருள் இருக்க வேண்டும். அதுவே கடவுள் என்ற கருத்தில் “ஆதிபகவன் முதற்றே உலகு” என்று உலகிற்கு முதற் காரணன் கடவுள் என்பதைக் கூறினர். இந்தத் தொடர்க்கு விளக்கம் கூறவந்த பரிமேல் அழகரும் “காணப்பட்ட உலகத்தைக்கொண்டு காணப்படாத கடவுளுக்கு இருப்பைச் சொல்ல வேண்டுதலின், ஆதி பகவன் முதற்றே என்று உலகின்மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும் உலகிற்கு முதல்வன் ஆதி பகவன் என்பது கருத்தாகக்கொள்க” என்று எழுதிப் போந்தனர். ஆளுடைய அடிகளாம் மணிமொழியாரும் “ஞாலமேகரியாக நானுனை நச்சி நச்சிட வந்திடும்” என்று இந்த உண்மையினை அறிந்து பாடியுள்ளார். ஆகவே, கடவுள் உண்டு என்பதை வள்ளுவர் எடுத்துக்காட்டின் மூலம் கூறியருளினார் என்பதை உணர்வோமாக.