கட்டுரைக் கதம்பம்/திருமுகப்பாசுரம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

2. திருமுகப் பாசுரம்

செம்மை சான்ற திருந்திய மொழிகளில் தன்னேரில்லாத் தகைமையொடு விளங்குவது நந்தம் தண்டமிழ் மொழி என்பது எவர்க்கும் ஒப்பமுடிந்த முடிபாகும். இம் மொழி சிறந்து விளங்குவதற்கு உரிய காரணங்கள் பலவாக இருப்பினும், அவற்றுள் ஒன்று இம்மொழி இலக்கண இலக்கியங்களைப் பெற்றுத் திகழ்வதனாலேயே என்க. நந்தம் செந்தமிழ் இலக்கிய இலக்கணங்களில் தலை சிறந்தது என்பதை மேனாட்டு அறிஞர்கள் பலரும் ஒரு முகமாகக் கூறியிருப்பதிலிருந்து நன்கு உணர்ந்து கொள்ளலாம் “இலக்கியப் பெருமையில் இலத்தீன் மொழியையும் வெல்ல வல்லது தமிழ்” என்று வின்ஸ்லோ பெருமகனார் கூறி இருப்பதை ஒரு சான்றாகக் காட்டலாம். இத்தகைய பெருமை மிக்க மொழியில் கடித அமைப்பில் அமைந்த இலக்கியத்தினைப் பற்றிச் சிறிது ஆராய்தலே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

கடிதம் என்னும் பொருள் கொண்ட சொற்கள் முடங்கல், திருமுகம், மடல், ஒலை முதலியன. இங்ஙனம் ஒரு பொருளைக் குறிக்கப் பல சொற்கள் இருத்தலை நோக்குங்கால், கடிதம் எழுதுதலில் நம்மவர்கள் தலை சிறந்து விளங்கினர் என்பதையும், அக்கடிதங்கள் வெறும் செய்திகளை அறிவிக்கும் திருமுகங்களாக மட்டும் இன்றி, பொருட் செறிவுடைய மடல்களாகவும் திகழ்ந்தன என்பதையும் சிலப்பதிகாரம், சிந்தாமணி, திருமுறைகள், தனிப் பாடல் திரட்டு போன்ற நூல்களில் பரக்கக் காணலாம்.

இத் திருமுகங்கள் மேற்கு நாட்டு அறிஞர்கள் போற்றுகின்ற செஸ்டர்பீல்டு, சிஸ்ரியோ, ஷில்லர், ஹெரேஷியஸ் வால்போல், கூப்பர் போன்றவர்களின் கடிதங்கட்கு எட்டுணையும் பின் வாங்குதலின்றிச் சிறப்புடையனவாக உள்ளன. “கடிதம் எழுதுவது ஒர் ஒப்பற்ற அருங்களையாகும்,” என்று செஸ்டர்பீல்டு தன் மகன் பிலிப்புக்கு அறிவுறுத்தியிருக்கும் கருத்தை நம்மவர்கள் பன்னூறு ஆண்டுகட்கு முன்பே நன்கறிந்தவர்கள் என்பதில் ஆசங்கை எழ இடமில்லை.

இக்காலத்தில் கடிதம் எழுதும் முறைளைக் கண்டு அவை மேனாட்டு அறிஞர்களின் போக்கைத் தழுவி எழுதப் படுகின்றன என்று கூறி வியப்புறுகின்றவர் ஒரு சிலர். அதாவது, மேற்கு நாட்டவர் தாம், கடிதம் எங்கிருந்து வருகின்றது என்பதை அறிவிக்க, முன்னர் வருகையினைக் (From) குறித்துப் பின்னர் இக்கடிதம் இன்னாருக்கு (To) எழுதப்படுகிறது என்பதையும் குறிப்பிட்டு, அதன் பின்னர்ச் செய்திகளை (Subject matter) அறிவிக்கின்றனர் என்று கூறிப் பெருமிதம் கொள்கின்றனர். இம் முறைகளை நம் செந்தமிழ்மொழியினரும் உணர்ந்திருந்தனர் என்பதை நன்கு விளக்க நம் பதினோராம் திருமுறைக்கண் முதலில் விளங்கும் திருமுகப் பாசுரத்தினைத் துணையாகக் கொள்வோமாக. அப்பாசுரம்,

மதிமலி புரிசை மாடக் கூடல்
பதிமிசை நிலவும் பால்கிற வரிச்சிறகு
அன்னம் பயில்பொழில் ஆல வாயில்
மன்னிய சிவன்யான் மொழிதரும் மாற்றம்;
பருவக் கொண்மூஉப் படியென பாவலர்க்கு
உரிமையின் உரிமையின் உதவி, ஒளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்கும் சேரலன் காண்க.
பண்பால் யாழ்பயில் பாண பத்திரன்
தன்போல் என்பால் அன்பன்; பண்பால்
காண்பது கருதிப் போந்தனன்.
மாண்ப்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே.

என்பது. இது திருவாலவாயுடையாரால் சேரமான் பெருமாண் நாயனாருக்குப் பாணபத்திரரது வறுமை தீரப் பொருள் கொடுக்கச் செய்யுள் வடிவில் எழுதப்பட்ட கடிதமாகும். இக்கடிதத்தில் “மதிமலி...சிவன் யாம்” என்பது வரையில் இன்னாரிடமிருந்து இது வருகிறது என்பதும், பருவக் கொண்மூ....சேரன் காண்க” என்பது வரையில், இன்னாருக்கு எழுதப் படுகிறது என்பதும், “பாண்பால் யாழ்பயில்... வரவிடுப்பதுவே” என்பது வரையில், எழுதப்படும் செய்தி இன்னது என்பதும் எத்தனை அழகாக பொறிக்கப் பட்டுள்ளன என்பதை நாம் நினைந்து பார்க்குங்கால், தமழ்மொழியின் இலக்கிய நுட்ப அமைப்பின் முறைமை நன்கு புலனாகின்றதன்ரறோ? செஸ்டர்பீல்டு தம் திருமகனான பிலிப்புக்கு எழுதிய கடிதத்தில் “கடிதம் எழுதுவது ஒர் அருங்கலை” என்று கூறியது உண்மைதான் என்பதை இத்திருமுகப் பாசுரங் கொண்டே நன்கு உணரலாம்.

இப்பாசுரம் பேரறிவுப் பொருளாய் விளங்கும் இறைவரால் எழுதப்பட்டது என்பது தொன்று தொட்ட முடிவாகும். இறைவரோ, “பேரறிவே, இன்பப் பெருக்கே பராபரமே” என்று தாயுமானார் வாக்கிற்கும், “சிறந்த அறிவு வடிவமாய்த் திகழும் நுதற்கண் பெருமானே!” என்ற சிவப்பிரகாசரது மொழிக்கும் பொருளாய் விளங்குபவர். அத்தகைய பேரறிவுப் பிழம்பாகிய இறைவரால் பாடப் பெற்ற இத்திருமுகப் பாசுரம் சொல்நோக்கும், பொருள் நோக்கும் மற்று எந்நோக்கும், கொண்டு இலங்குவது என்பதைக் கூறவும் வேண்டுமோ? இத்திருமுகப் பாசுரத்தினைத் தொடங்கும் பொழுதே இறைவனார் “மதிமலி புரிசை” என்று தொடங்கி மதுரையின் மதிலின் மாண்பைப் புலப்படுத்தத் தொடங்குகிறார் அல்லரோ? மதுரையின் மதில் பல மாட்சிமைப்பட்ட அறிஞர்களின் அறிவுக் கூறுபாடுகள் பெற்று விளங்கியது என்பதைச் சிலப்பதிகாரம் மதில்களில் அமைந்த பொறிகள் இன்ன என்பதைக் குறிப்பிட்டிருப்பதிலிருந்து நாம் உணரலாமே. இதனை உட்கொண்டன்றோ “மதி மலி புரிசை” என்றனர் மதிமுடி சொக்கேசர்.

“மாடக் கூடல்” என்பதும் பொருள் பொதிந்த தொடராகும். மதுரையம்பதியில் குடிவளத்தையும், அக் குடிமக்கள் வாழும் கட்டட அமைப்புக்களையும் காட்ட எழுந்த தொடரே இது. இவ்வாறே நாட்டின் மாடங்களைச் சிறப்பித்து, “செல்வ நெடுமாடம் சென்று சேணோங்கி” என்று ஞானசம்பந்தப் பெருமானார் நவில்வதனாலும் அறிந்து கொள்ளலாம்.

“அன்னம்பயில் பொழில் ஆலவாய்” என்பது மதுரையம்பதியின் நீர்வளத்தையும் நில வளத்தையும் குறிப்பதாகும். நீர் மிக்கு இருந்தாலன்றி, அன்னங்கள் வாழா அல்லவா? “அன்னங்கள் பயிலும் ஆலவாய்” என்பதனால், நகரில் பல சோலைகள் அமைந்து, அச்சோலைகளில் நீர் நிலைகளும் பொருந்தி, மக்கள் மாலை நேரங்களில் நறுமணமும், நல்ல தென்றலும் துய்க்க அங்ககரினை அமைத்திருந்தனர் நகராண்மைக்கழகத்தினர் என்பதும் தெரிய வருகின்றது அன்றோ? இதனால், அக்கால நகராண்மைக் கழகத்தினர் நற்றோண்டும் புலனாகிறது.

இங்ஙனம் இறைவனார், மதுரையம்பதியின் மாண்தரு வளங்களை முன்னர் அறிவித்துத் தம் திருமுகத்தினைத் தொடங்குவதன் உட் பொருள், வளமற்ற,வரண்ட நகரத்தினின்று எழுதப்பட்டதன்று என்பதன் பொருட்டும், பாணபத்திரரது வறுமையைப் போக்கத்தக்க வளம் இல்லாதது போலும் என்று சேரர் எண்ணாதிருக்கும் பொருட்டும் இவ்வாறு மதுரையினைச் சிறப்பித்தனர் என்க. எழுதுகின்றவர் இறைவர் என்பதையும் அறிவிக்க “மன்னிய சிவன்யாம்” என்ற தொடர் மூலம் விளக்கியருளினர்.

அடுத்தாற்போல், சேரமான் பெருமாண் நாயனார் சிறப்பையும் எடுத்தியம்ப எண்ணி, அவர்க்குரிய சிறப்புக்களுள் கொடைச் சிறப்பினையே விதந்து கூற உளங்கொண்டு “பருவக் கொண்மூஉப் படியென பாவலர்க்கு உரிமையின், உரிமையின் உதவி” என்று வரைந்தனர். சேரர் பெருமானார், கொடைக் குணத்தில் ஒப்பாரும், மிக்காரும் இன்றித் திகழ்ந்தனர் என்பதைச் சேக்கிழார் பெருமானார் “இம்பர் உலகில், இரவலர்க்கும், வறியோர் எவர்க்கும் ஈகையினால் செம்பொன் மழையாம் எனப்பொழிந்து” என்று செப்பியதனாலும் தெள்ளிதின் உணரலாம். சேரர்மரபே பொதுவாகப் புலவர்கட்குப் பொன்னும் பொருளும் ஈந்து புகழ்பெற்றது என்பதைப் பதிற்றுப் பத்து என்னும் சங்கமருவிய நூலால் சங்கையறத் தெளிகின்ரறோமல்லமோ ? இந்த மரபின் உரிமை சேரர் மெருமானார்க்கு இருத்தல் கருதியும், நினைவுபடுத்தக் கருதியும், “உரிமையின், உரிமையின்” என்றனர். இந்த அளவில் சேரர் பெருமானாரது புகழினைப் புகழ்ந்து நிறுத்தினாரல்லர் நீல மேனி வால் இழைபாகத் தொருவர். அம் மன்னரது குடையினையும் சிறப்பிக்க எண்ணியவராய் “குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ் செருமா உகைக்கும் சேரலன் காண்க” என்றனர். இவ்வாறு, குடையினைச் சிறப்பித்ததன் நோக்கம், அக்குடை வெயிலை மறைப்பதற்கு மட்டும் உரியதன்று குடிமக்களின் துன்ப வெம்மையை மறைக்கவும் வல்லது; காக்கவும் வல்லது என்பனவற்றை அறிவிக்கவே என்க. இக் காரணங்களைப் பற்றியே மன்னர்களின் குடைகள் மாண்புற்றிலங்குகின்றன என்பதை,

“கண்பொர விளங்கும்நின் விண்பொரு வியன்குடை
வெயில்மறைக் கொண்டன்றே வருந்திய குடிமறைப் பதுவே”

என்ற புறநானூற்றடிகளாலும்,

“திங்களைப் போற்றுதும், திங்களைப் போற்றுதும்
கொங்கலர்ச் சென்னி குளிர்வெண் குடை போன்றிவ்
அங்கண் உலகளித்த லான்”

என்ற சிலப்பதிகார நூலாலும் அறிந்து கொள்ளலாம்.

“செருமா உகைக்கும் சேரலன் காண்க” என்று கழறிற்றறிவாரைச் சுட்டிக் கூறியதன் நோக்கம் பின்னால் இவர் நம்பி ஆரூரருடன் கைலைக் கேகுங்கால், கலினமாவில் கடிது ஊர்ந்து செல்ல வேண்டி இருக்கும் குறிப்பினை முன்கூட்டி அறிவிக்கும் பொருட்டே ஆகும். இவ்வாறு பின்னர் நிகழ்வதை முன்னரே அறியும் வண்ணம் சில அருந் தொடர்கள் அமைந்து விடுவதை இன் தமிழ் இலக்கிய நூல்களில் இனிதுறக் காணலாம். தயரதன் தன் திருமகனான இராமனைக் கெளசிக முனிவருடன் அனுப்ப விழைந்து, அவனை அழைக்கக் கட்டளையிட்ட பணியாளரிடம் “திருவின் கேள்வன்” என்று குறிப்பிட்டது, பின்னர்ச் சீதையைத் திருமணம் முடித்தலை முன் கூட்டி அறிவிக்கும் மங்கலச் சொல்லாகவன்றோ அமைந்து விட்டது? இங்ஙனம் பின்னால் நிகழ்வதை முன்னால் அறிவிக்கும் சொற்றொடர்களை அமைப்பதற்குக் கம்பர் யாங்ஙனம் உணர்ந்தனர்? அவர் திருமுறைகளை நன்கு பயின்ற பயிற்சியினால் என்று கூறின் அது மிகையாகாதன்றோ ?

செருமா உகைக்கும் சேரலன் காண்க

என்ற தொடர்ப் பொருளைச் செவ்வன் சிந்தித்த தன் பயனன்றோ,

திருவின் கேள்வனேக் கொணர்மின்”

என்று செப்பச் செய்தது?

இங்ஙனம் தம் நாட்டையும், சேரர் பெருமானார் சிறப்பையும் புகழ்ந்து கூறிய இறைவர், தாம் கடிதம் தந்து அனுப்பும் பாணபத்திரரையும் சேரர்க்கு அறிமுகப்படுத்தி வைக்க விரும்பியவராய், முன்னர் அவரது இசைப்புலமையினை உணர்த்தவேண்டி “யாழ்பயில் பாணபத்திரன்” என்று குறிப்பிட்டருளினர். அவ்யாழ்ப் பயிற்சியினையும் நன் முறையில் பெற்றவர் என்பதை, “பண்பால் யாழ்பயில் பாணபத்திரர்” என்ற தொடரால் விளக்கியருளினர். யாழ்ப் பயிற்சி உடையராயினும், கல்விச் செருக்குக் காரணத்தால் கடவுளே மறந்த கயவர் அல்லர்: எம்மால் உன்பால் அனுப்பப்படுபவர் என்பதை நன்குணர்த்த “எம் பால் அன்பன்” என்று எடுத்து மொழிந்தனர். “எம்பால் அன்பன்” என்று எடுத்து மொழிந்ததனால் “நாம் அன்புடையோம் அல்லமோ” என்று சேரர் நினையாதிருக்கும் வண்ணம், மிக்க விழிப்புடன் “உன் போல்என்பால் அன்பன்” என்றும் எழுதி மன்னர்க்கு அத்தகைய எண்ணம் எழாதவாறு செய்தனர்.

என்னே இறைவர் பேரறிவுடைமை! தம்மால் அனுப்பப்படுபவர் வறுமையுற்ற காரணத்தால் உம்பால் அனுப்புகின்றோம் என்று கூறிப் பாணபத்திரருக்கு இழுக்கு உண்டாகுமாறு செய்ய எண்ணமற்றவராய், அவரது மாண்புமணக்க, “காண்பது கருதிப் போந்தனன்” என்றே திருமுகத்தில் தீட்டியருளினர்.இவ்வாறு எழுதிமுடித்து முடங்கலினைக் கொடுத்தனுப்பின், பொருள் கொடாமல் சேரர் அனுப்பிவிடுவரோ என்ற ஐயத்தினராய் “மாண்பொருள் கொடுத்து” என்றும் குறிப்பிட்டுப் பொருளினை அளிக்குமாறு தூண்டினர். ஒருவேளை சிறுபொருள் கொடுத்துச் சென்று வருக என்று சொல்லி விடுவாரோ என்று சிந்தித்த சிவனார், பெரும் பொருளைக் கொடுக்க என்று கட்டளையிடுவார் போல் “மாண் பொருள் கொடுத்து” என மாண்புற மடலை வரைந்தனர். இந்த அளவிலும் திருமுகப் பாசுரத்தினைத்தீட்டி முடிக்காது, இறுதியில் “வர விடுப்பதுவே” என்று வரைந்து முடித்துள்ளதை என் சிற்றறிவு கொண்டு என்னென்று செப்ப வல்லேன்? ஆ! “வர விடுப் பதுவே” என்னும் செழும் தொடரைப் பன்முறையும் பன்னிப் பன்னிச் சிந்திக்க வேண்டியவராகின்றோம். இத்தொடரின் ஆழ் பொருள் அமைப்பினை அனுபவிக்க வேண்டியவராகின்றோம்.

பாணபத்திரர் யாழ் இசையில் வல்லவர். அத்துடன் இறைவர்தம் அன்பை எய்தப் பெற்றவர்; மேலும் இறைவரால் அனுப்பப்பட்டவர். இன்னோரன்ன சிறப்புடைய சீரியரைச் சின்னாளேனும் உடன் வைத்து உவகையும் உறவுங் கொள்ள வேண்டும் என்று உளங்கொண்டு, சேரர் பெருமானார் பாணபத்திரரை நிறுத்திக் கொள்ளாதிருக்கும் பொருட்டே “வர விடுப்பதுவே” என்றனர். நாளும் யாழிசை கேட்டு இன்புறும் இறைவர், யாங்ஙனம் பாணபத்திரரைத் தணங்திருப்பார்? ஏழிசையாய், இசைப்பயனாய் இருப்பவர் இறைவர். ஆகவே, உடனே பொருள் தந்து அனுப்பி வைக்க உளங்கொண்டே “வர விடுப்பதுவே” என்று கட்டளையிட்டருளினர். இத்தகைய மாண்பொருள் பலவும் மாண்புறப் பெற்ற இத்திருமுகப் பாசுரத்தினைப் பலகாலும் பயின்று இன்பத்தினைத் துய்த்து வாழ்தல் நம்கடமையாகும்.