கட்டுரைக் கதம்பம்/பத்துப்பாட்டின் பண்பு

விக்கிமூலம் இலிருந்து

3. பத்துப்பாட்டின் பண்பு

பாட்டு இன்னது என்பதைப் பலபடப் பகர்கின்றன பன் மொழிகள். பலவகைத் தாதுக்களினால் உயிர்க்கு இடனாக இயற்றப்பட்ட உடம்பு போலப் பல்வகைச் சொற்களாலும் பொருளுக்கு இடனாகத்தங்கள் அறிவினால் கற்றுவல்லோர் அலங்காரம் தோன்றச் செய்வது பாட்டு என்றும், அறிவு உலகிற்கு அழகு செய்வதாய், நிறைந்த பொருட் பொலிவு உடையதாய்த் துலங்குவது பாட்டு என்றும் செந்தமிழ் நூல்கள் செப்பிக் களிக்கின்றன. மக்கள் மன அறிவினின்றும் வடித்து இறக்கப்பட்ட தூய அமிழ்தம் ஆகும் என்று அறைகின்றனர் ஆங்கில அறிஞர்கள், இங்ஙனம் இயம்பப் பெறும் பாட்டின் இலக்கணம் அனைத்தும் பொருந்தப்பெற்றதே பத்துப்பாட்டு என்னும் பன்னரும் புகழுடைய நூலாகும்.

உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் வரைந்த உரைகளில் இந்நூற்குரிய உரையும் ஒன்றாதலின், அதனை அச்சிட்டு வழங்கிய ஐயர் அவர்கள் தம் முகவுரையில்

“அமிழ்தினில் சிறந்த தமிழெனும் மடந்தை
கந்தரத் தணிமணிக் கலன்அர சென்ன

உத்தமர் புகழும் இப் பத்துப் பாட்டு,”

என்றும், தமிழ்விடு தூது என்னும் தனிப்பெரும் பனுவல்,

“மூத்தோர்கள் பாடி அருள்பத்துப் பாட்டும்,”

என்றும், உரைச் சிறப்புப்பாயிரம் உரைத்த ஆசிரியர் ஒருவர்.

“ஆன்றோர் புகழ்ந்த அறிவினில் தெரிந்து
சான்றோர் உரைத்த தண்டமிழ்த் தெரியல்

ஒருபது பாட்டும்,”

என்றும், பாண்டிமண்டல சதக ஆசியர்.

தமிழ்ச்சங்கத்தின், நிலைபெற் றுயர்பத் துப்பாட்டும்,”

என்றும், இந்நூலைப் புகழுமாற்றால் இதன் பண்பினை நன்கு உணரலாம். இப் பத்துப்பாட்டுப் பனுவலின் சுவையை நன்கு துய்ப்பவர்கள் ஏனைய இடைக்கால நூல்களைப் படிக்க உள்ளம் கொள்ளார் என்பதையும், பத்துப்பாட்டே உள்ளதை உள்ளவாறு உரைக்கும் வரலாற்று நூல் ஆகும்; பின்வந்தவை கற்பனை நிறைந்தவை; அக்கற்பனையும் பொருட்கிசைந்த கற்பனை அன்று; இலக்கணத்திற்கு இயைந்த கற்பனையும் அன்று, என்பதையும் அறுதியிட்டு உறுதியாக எடுத்துக்காட்டுவார் போலப் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள்,

“பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே,”

என்று பாடி மகிழ்கின்றார்.

இத்தகைய மாண்பு வாய்ந்த பெருநூற் கடலினின்று கிடைக்கும் நித்திலங்களை எடுத்துக் காட்டுவது இச்சிறுகட்டுரையால் ஏலாது. இஃது இயற்கைக்கு ஓர் இருப்பிடம், ஓவியத்திற்கோர் உறைவிடம், உவமை பயணிக்கோர் உயர்விடம். தமிழக நாகரிகத்தினைத் தனிச்சிறப்புடன் காட்டுதற்குரிய தகவிடம் என்று கூறின் அது மிகையாகாது.

“இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த
முள்தாள் தாமரைத் துஞ்சி வைகறை
கள்கமழ் நெய்தல் ஊதி எல்படக்
கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர்

அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும், குன்று.”
என்னும் திருமுருகாற்றுப் படையின் அடிகளில் இயற்கை யழகின் இயல்பு எத்துணைச் சிறப்புடன் எடுத்து இயம்பப்பெற்றிருக்கின்றது பாருங்கள்!

அழகு நிறைந்த சிறகுகளையுடைய வண்டின் கூட்டம் சேறு நிறைந்த வயலில் மலர்ந்த தாமரை மலரில் இரவு முழுவதும் உறங்கி, விடியற்காலத்தே எழுந்து நெய்தல் மலரை ஊதி மாலைப்போது கண் போன்று மலர்ந்த சுனைப்பூக்களிலேசென்று ஒலிக்கும் திருப்பரங்குன்றம் என்பதன்றோ இவ்வடிகளின் பொருள்!

“அறல்போல் கூந்தல் பிறைபோல் திரு நூதல்
கொலைவில் புருவத்துக் கொழுங்கடை மழைக்கண்
இலவிதழ் புரையும் இன்மொழித் துவர்வாய்ப்
பலவுறும் முத்தில் பழிதீர் வெண்பல்
மயிர்குறை கருவி மாண்கடை அன்ன
பூங்குழை ஊசல் பொறைசால் காதின்
நாண்அடச் சாய்த்த நலங்கிளர் எருத்தின்
ஆடமைப் பணைத்தோள் அரிமயிர் முன்கை
நெடுவரை மிசைஇய காந்தள் மெல்விரல்
கிளிவாய் ஒப்பின் ஒளிவிடு வள்உகிர்
அணங்கென உருத்த சுணங்கணி ஆகத்து
நீர்ப்பெயர்ச் சுழியின் நிறைந்த கொப்பூழ்
உண்டென உணரா உயவு நடுவின்
இரும்பிடித் தடக்கையின் செறிந்து திரள் குறங்கின்
வருந்துநாய் காவில் பெருந்தரு சீறடி

பெடைமயில் உருவில் பெருந்தகு பாடினி.
இப்பொருநர் ஆற்றுட்படை அடிகள் ஒரு பெண்ணின் எழில் உருவ ஓவியத்தை யன்றோ எழுதிக் காட்டுகின்றன. இவ்வடிகளைப் படிக்கும்தோறும் படிக்குந் தோறும் பாடினியின் உறுப்புக்கள் ஒவ்வொன்றையும் நாம் நேரில் காண்பதுபோன்று அல்லவோ இவ்வடிகள் காட்சி அளிக்கின்றன.

ஆற்று மணல் போன்ற கூந்தலும், பிறைமதி போன்ற நெற்றியும் வில்போன்ற புருவமும், குளிர்ந்த கண்களும், செந்நிற வாயும், முத்தன்ன பற்களும், குழை அணிந்த காதுகளும், குனிந்த கழுத்தும், மூங்கில் போன்ற தோளும், முன்கையும், காந்தள் மலர் போன்ற விரல்களும் கிளிமூக்கன்ன நகங்களும், நீர்ச் சுழி போன்ற கொப்பூழும் நுண்ணிய இடையும், யானையின் தடக்கை போன்ற திரண்ட தொடைகளும், நாயின் நாப்போன்ற பாதங்களும் உடைய பாடினி என அப்பாடினியைச் சித்திரத்தில் எழுதிக்காட்டு வார் போலக்காட்டி இருக்கும் இச்சொல் ஓவியத்தைக் காணும் தோறும், எத்துணை இன்பம் பயக்கின்றது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்! செம்மையும், பசுமையும், வெண்மையும், கருமையும் முதலான வண்ணங்களைச் சொல்லால் சித்திரித்துக் காட்டும் திறனை என்னென்றும் இயம்புவது! இவ்வடிகளையே உவமை நயத்திற்கு எடுத்துக்காட்டாக இயம்பலாம். நகத்திற்குக் கிளிவாயும், விரல்கட்குக் காந்தள் மலரும், சீறடிக்கு நாயின் நாவும் எத்துணைப் பொருத்தமான உவமைகள் என்பதை இயம்பவும் வேண்டுமோ?

இனி, இப்பத்துப் பாட்டின்கண் நாகரிக நயத்திற்கு இரண்டோர் இடங்களைச் சுட்டிக்காட்டி, இக் கட்டுரையினை இனிதின் முடிப்போமாக. “இக்காலத்தில் வாழும் மாதர்கள் தாம் எதற்கும் முன்னணியில் நிற்கவல்லவர். இதோ பாருங்கள்! இம் மாதராள் உந்து (Motor Car) வண்டியினை மொய்ம்புடன் விடு கின்றனள். இம்மங்கையினைக் காணுங்கள்! எத் துணை வீரமான செயல்களைச் செய்கின்றனள்! இத்துணையும் மேனாட்டு நாகரிகம் நம் நாட்டில் புகுந்த பின்னரே நிகழ்ந்த நிகழ்ச்சியாகும்” என்று கூறிப் பெருமிதம் கொள்கின்றனர். அன்னார் நம் தொன்னூல்களைக் காணாத் தொகுதியினர் என்று கூறாது வேறு அவர்களைக் குறித்து என்ன கூறுவது?

“மகவுடை மகடூஉப் பகடுபுறந் துரப்ப”

என்னும் அடியினைப் பெரும்பாணாற்றுப் படையில் பார்க்கும் பொழுது, எருதுகளை முதுகில் புடைத்து வண்டிகளைப் பூட்டும் திறம் மாதர்கள் பெற்றிருந்தனர் என்பது பெறம்படுகின்றதன்றோ? உந்து வண்டிகளை ஓட்டுவதுகூட எளிது. ஆனால், பீடு நடைக்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டாக உள்ளதும், வீரத்திற்கு உறைவிடமாக உள்ளதுமான எருதுகளின் முதுகினை அடித்து அதட்டி ஓட்டும் ஆண்மையினைத் தமிழக மாதர் பெற்றிருந்தனர் என்றால், அவர்கள் மென்மையுடன் வன்மையும் கலந்த வனிதையர்கள் என்பது அறியக்கிடக்கின்ற தன்றோ!

தமிழர்கள் வீரத்திலும் சிறந்தவர்கள் என்பதற்குப் பல சான்றுகள் நம்தண்டமிழ் நூல்களில் காணப்படுகின்றன. இப்பத்துப்பாட்டில் மாதர்கள் வாள் ஏந்தி அரசனை அல்லும்பகலும் போர்க்களத்தில் மெய்க் காப்பாளராக இருந்து காத்து வந்தனர் என்பதைப் படிக்கும்போது உணர்ச்சியற்றவரும் வீரம் கொண்டு எழவேண்டியவர்களாவார்.

“குறுந்தொடி முன்கைக் கூந்தல் அம் சிறுபுறத்து
இரவுபகல் செய்யும் திண்பிடி ஒள்வாள்

விரவுவரிக் கச்சில் பூண்ட மங்கையர்.”

என்பன முல்லைப்பாட்டு அடிகளாகும்.

இன்னோர் அன்ன நயங்கள் பலபடப் பொதிந்து இப்பத்துப் பாட்டுக் காணப்படுகின்றது. அந்நூலைத் துருவி அறிந்து சுவைத்து இன்பம் பெறுதல்தக்கதாகும்.