உள்ளடக்கத்துக்குச் செல்

கட்டுரைக் கதம்பம்/கம்பன் கவியும் காகுத்தன் கணையும்

விக்கிமூலம் இலிருந்து

8. கம்பன் கவியும் காகுத்தன் கணையும்

கம்பன் கவியும் காகுத்தன் கணையும் என்னும் தலைப்பு நான்கு சொற்களைத் தன்னகத்தே கொண்டு திகழ்வதைக் காண்கின்றோம். ஒவ்வொரு சொல்லும் விளக்கம் பெறுதற்குரிய சொல்லேயாகும். கம்பர் தமிழ் நாட்டில் தலைசிறந்து விளங்கிய இடைப் பட்டகாலத்துப் பெரும் புலவர்களில் ஒருவர் என்பதை எவரும் அறிவர். தமிழுக்குக் கதியாவார் கச்சியப்பரும் திருவள்ளுவரும் என்று ஒரு சிலர் கருதிலுைம், திருமணம் செல்வகேசவராய முதலியாரைப் போன்றவர்கள் கம்பரும் திருவள்ளுவரும் என்று கூறிவந்த கூற்றுக்கு ஏற்றவர் கம்பர் என்று கூறுவதும் மிகவும் பொருத்தமேயாகும். “கல்வியில் பெரியன் கம்பன்” என்று பல்லாண்டுகளாகக் கூறப்பட்டு வரும் பழமொழியும் அவரது கல்விப் பெருக்கத்திற்குப் பெருஞ்சான்றாக நிற்கிறது.

அடுத்தாற்போல் உள்ள கவி என்னும் சொற் பொருளையும் நாம் ஊன்றிப் பார்த்தல் வேண்டும். கவி என்பது பாடல், செய்யுள், யாப்பு, தூக்கு என்றபொருள் தரும் மொழியே யாகும். கவி எவ்வாறு இருத்தல் வேண்டும்? பாடப்படுதல் வேண்டும்? என்பனவற்றைப் பவணந்தியார் கூற்றாய,

“பல்வகைத் தாதுவின் உயிர்க்குடல் போல்பல
சொல்லால் பொருட்கிடன் ஆக உணர்வினின்

வல்வோர் அணிபெறச் செய்வன செய்யுள்”

என்னும் நூற்பாவினால் நன்குணரலாம். மேலே கூறப்பட்ட செய்யுள் அமைப்பு முழுமையும் கம்பர் கவியுள் உண்டு என்பதில் எள்ளளவும் ஐயமின்று. இன்றேல், கம்பர் கவிச்சக்கரவர்த்தி யென்று தமிழ் மக்களால் மதிக்கப் பட்டிருக்கமாட்டார். மேலும், கம்பரே சான்றோர் கவி எவ்வாறு இருக்க வேண்டுமென்பதை,

“புவியினுக்கு அணியாய் ஆன்ற பொருள் தந்து புலத்திற்றாகி
அவிஅகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறிஅ ளாவிச்
சவியுறத் தெளிந்து தண்ணென் றொழுக்கமும் தழுவிச்
                                                    சான்றோர்

கவியெனக் கிடந்த கொதா விரியினை வீரர் கண்டார்”

என்ற பாடலைப் பாடி விளக்கியிரார் அல்லரோ? இவ்வாறு சான்றோர் கவிக்கு ஒரு தனிச் சிறப்பிலக்கணம் தந்து பாடிய கம்பர், தம் கவியும் இம்முறையில் இருத்தல் வேண்டும் மென்பதைச் சிந்தியாமல் இராமாயணப் பெருங் காவியத்தில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியிரார்.

ஆகவே, கம்பர் கவிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டென்பதை உணர்தல் வேண்டும். கம்பர் கவிக்கு எடுப்பும் இணையும் அற்ற ஏற்றம் உண்டு என்பதைக் “கம்ப நாடன் கவிதையைப் போல் கற்றோர்க்கு இதயம் களியாதே.” என்ற அரும் பொருட்டொடர் எடுத்துக் காட்டுவதைக் காண்க. “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்ற பழமொழி கொண்டேனும் கம்பரது கவியின் பெருமையினை உணரலாம். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பது உயர்வு நவிற்சி அணியின்பால் பட்ட தெனினும், கம்பர் வீட்டில் பணிபுரிந்து வந்த ஒருத்தி, கம்பனைக் காணவந்த ஒரு புலவரை நோக்கி,

“வட்டமதி போலிருக்கும் வன்னிக் கொடிதாவும்
கொட்டுவார் கையினின்று கூத்தாடும்—சுட்டால்
அரகரா என்னுமே அம்பலசோ மாசி

ஒருநாள் விட் டேன்ஈ துரை”

என்று பாடி, அப்பாடற் பொருள் இன்னது என்பதறியாவாறு திகைப்புறும் வண்ணம் செய்தாள் என்பதைத் தனிப்பாடல் திரட்டுப்பாடல் மூலம் அறியலாம். இப்பாடலில் குறிப்பிடப்பட்டது வரட்டி யாகும். எனவே, கம்பர் கவி எனில் அதற்கு நாட்டில் தனிச் சிறப்புண்டு.

கம்பரது கவி, கற்றோர் இதயத்தைக் களிக்கச் செய்வதன் இரகசியம் யாது? கற்றார் களிக்க எம் முறையில் அவர் கவிகளைப்பாட முடிந்தது? என்பன போன்ற வினாக்களுக்கு விடையை அவரது கவிகளைப் பார்க்குங்கால் உணரலாம். அதுபோது கம்பரது பரந்த புலமையும் புலனாகும். கம்பரது பல நூற் பயிற்சியும் தென்படுகிறது. இவற்றிற்கு அரண்செய்வனவாகக் கீழ்வரும் பாடல்களைப் பயின்றால் மேலே கூறிய உண்மை புலனாகாமல் இராது.

“புள்ளி மால்வரை பொன்னென நோக்கிவான்

வெள்ளி வீழ்இடை வீழ்த்ததெனத் தாரைகள்”

என்பது,

“வெள்ளிவெண்
கோல்நி ரைத்தன போல்கொழுந் தாரைகள்

வானி ரைத்து மணந்து சொரிந்தவே”

என்னும் சிந்தாமணியை ஒட்டியது.

“வரம்பில தோற்ற மாக்கள்
இறக்குமா றிதுஎன் பான்போல் முன்னை நாள் இறந்
                                                    தான் பின்னாள்
பிறக்குமா றிதுவென் பான்போல் பிறந்தனன் பிறவா

                                                    வெய்யோன்”

என்பது,

“தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்

மாய்தல் உண்மையும் பி.சத்தல் உண்மையும்

அறியா தோரையும் அறியக் காட்டித்

திங்கள் புத்தேள் திரிதரும் உலகம்"

என்னும் புறநானூற்றைத் தழுவியது.

“ஊருணி நிறையவும் உதவும் மாடுயர்

பார்கெழு பழுமரம் பழுத்தற் றாகவும்”

என்பது,

“ஊருணி நீர்நிறைந் தற்றே"

என்றும்,

“பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால்”

என்றும் உள்ள குறட்பாக்களை நினைவூட்டுகின்றன.

கருமுகில் தாமரைக் காடு பூத்துநீ
டிருசுடர் இருபுறத் தேந்தி யேடவிழ்
திருவொடும் பொலியஓர் செம்பொன் குன்றின்மேல்

வருவபோல் கலுழன்மேல் வந்து தோன்றினன்

என்பது. “கருமாணிக்க மலைமேல், மணித்தடந் தாமரைக் காடுகள் போல் திருமார்பு, வாய், கண் உந்திகை காலுடை ஆடைகள் செய்யபிரான்" என்னும் திருவாய் மொழியின் கருத்தைச் சார்ந்ததே. இந்த எடுத்துக்காட்டுக்களினால் கம்பர் “முன்னோர் மொழி பொருளே அன்றி, அவர் மொழியும் பொன்னே போல் போற்றுவம்” என்ற கருத்தினை உளத்தில் கொண்டு தம் நூலைக் கவினுற யாத்துள்ளார் என்பது அறிய வருகின்றது. மேலே காட்டிய மேற்கோள்கள் கம்பரது பரந்த கல்வியறிவுடைமைக் குரிய அகச்சான்றுகளாக அமைவனபோலப் புறச்சான்றாகக் கம்பரே ஒருசமயம் தம்மை நோக்கி வினவினார்க்குத் தாம் அதில் அதில் ஓர் அகப்பை அள்ளிக் கொண்டேன். என்று கூறியதாகக் கூறப்படும் சொற்றொடரைக் கொள்ளலாம். அதில் அதில் ஓர் அகப்பை அள்ளிக் கொண்டேன் “என்பதன் பொருள், எனக்கு முன்னிருந்த நூற்களின் கருத்துக்கள் சிலவற்றை முகந்து எடுத்துக் கொண்டு, என் நூலில் அமைத்துக் கொண்டேன், ”என்பதன்றோ?

சேக்கிழார் பெருமானார் தம் நூலினை “உலகெலாம்” என்ற தொடரை முன்னதாக அமைத்துத் தொடங்கியுள்ளார்.

இவ்வுலகெலாம் என்னும் தொடரைச் சேக்கிழார் பெருமானார் தாமே படைத்துக் கொண்டு தம் முதற்செய்யுளை யாத்திலர். இத் தொடர் கூத்தப் பொருமானாரது கூர்த்த அருளால் தொண்டர் சீர்பரவுவார்க்கு எடுத்து மொழியப்பட்டதாகும். ஆகவே, அவ்வாக்குப் பசுவாக்கு ஆகாமல் பதிவாக்காயிற்று. அப்பதிவாக்கை முதலிடத்து மட்டும் வைத்துப் போற்றாமல், தம் நூலின் இடையிலும் கடையிலும் வைத்துப் போற்றியுள்ளார், சேக்கிழார், இடையில் வைத்துப் போற்றிய இடம், ஆளுடைய பிள்ளையார் இறைவர் கொடுத்த நித்திலச்சிவிகையில் இவரும் போதாகும். அதுபோது

“அஞ்செழுத் தோதி ஏறினார் உய்ய உலகெலாம்”

என்றுபாடிக் களித்தார், பின் தம் நூலை முடித்து வாழ்த்துக் கூறுமுகத்தால்,

வான்புகழ் நின்ற தெங்கும் நிலவி உலகெலாம்.

என்று பாடி இன்புற்றார். இதனைப் பாராட்டி, மகா வித்துவான் தரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் தாம் பாடிய சேக்கிழார் பிள்ளைத் தமிழில், “உலகெலாம் எனும் சுருதி நாப் பண்ணும் ஈற்றும் பொருத்திப் பேர்கொண்ட” என்று பாடியும் காட்டினார்.

இங்ஙனம் சேக்கிழார் செய்தது போலவே, கம்பரும் தம் நூலில் மூவிடத்து வைத்துப் பாராட்டத்தக்க சிறப்பினைச் செப்ப நீடு நினைந்தார். நினைந்த அவரது நினைவில் இராமனது அம்பு நினைவிற்கு வந்துற்றது. உண்மையில் இராமனது சிறப்பு இயல்பைக் காட்டக்கூடியவை பல இருந்தாலும், அவற்னுள் தலைசிறந்ததாக எடுத்துக் கூறத்தகும் பெருமை வாய்ந்தது அவ்விராமனது அம்புதான் என்று கூறின் இழுக்கு ஒன்றும் எய்தாது. தெலுங்கு மொழியிலும் இராமனது தனிப்பெருந் தகைமைகளுக்கு மூன்று செயல்கள் கூறப்படுகின்றன. அவையே “ஏகபாணம், ஏக தாரம், ஏகமாடா” என்பன. இங்குக் கூறப்பட்ட தொடர்களின் பொருள் முறையே, ஒரே அம்பு, ஒரே மனைவி, ஒரேசொல்” என்பதாகும். இதுகுறித்துத்தான் ஈண்டுக் காகுத்தன் கணை என்ற தொடர். கட்டுரையின் தலைப்பில் இணைந்துள்ளது. காகுத்தன் ஆவான் இராமபிரான் என்க. காகுத்தன் என்ற பெயரைக் குலசேகர ஆழ்வார் தயா தன் புலம்பல் என்ற தலைப்பில் தாம் பாடிய பாடல்களில் செம்மையுறத் தெரிவித்துள்ளனர்.

கொல்லணைவேல் வரிநெடுங்கண் கோசலை தன்
         குலமதலாய் குனிவில் ஏந்தும்
மல்லணைந்த வரைத்தோளா வல்வினையேன்
         மனம் உருக்கும் வகையே கற்றாய்
மெல்லணைமேல் முன்பயின்றாய் இன்று இனிப்போய்
         வியன்கானம் மரத்தின் நீழல்
கல்லணைமேல் கண்துயிலக் கற்றனையோ

         காகுத்தா கரிய கோவே!

என்ற பாடலில் காண்க.

கணையாவது அம்பு, ஆகவே, காகுத்தன் கணை என்பது இராமனது அம்பாகும். இவ்வாறான இராமனது அம்பின் மாட்சி சிறப்புறப் புலப்படுத்தப்பட்ட மூவிடங்கள் யாவை என்றாய்தலே அடுத்த கட்டமாகும்.

கோசிகர் தாம் செய்யும் வேள்விகட்கு இடையூறாக நின்ற தாடகையைக் கொல்ல இராமனை அழைத்துச் செல்லுகிறார். இராமனோ, எந்த வேட்டையும் ஆடி. அறியாதவன். அரசர் குலச்சிறுவர் முதல் முதல் வேட்டையாடினால், அது கன்னி வேட்டையெனப்படும். ஆகவே, கன்னிவேட்டை, முதல் வேட்டை என்ற பொருளது. ஆனால், இராமனுக்கமைந்த கன்னிவேட்டை, முதல் வேட்டை என்ற பொருளுடன் கன்னியாகிய பெண்ணை வேட்டையாடிக் கொல்லுதல் என்ற பொருள் தரும் முறையிலும் அமைந்துவிட்டது. இது குறித்து, இராமன் தாடகையைக் கொல்வது குறித்துச் சிறிது அஞ்சி னான். அவ்வச்சம் தாடகையைக் கண்டு அஞ்சிய அச்சம் அன்று. ஒருபெண்ணையா ஓர் ஆண் மகன் வேட்டையாடிக் கொல்வது என்பதுதான் அவனது அச்சத்திற்குக் காரணம். இந் நிலையில் விசுவாமித்திரர், இராமனது உட்கிடக்கையை யுணர்ந்து,

தீதென் றுள்ளவை யாவையும் செய்தெமைக்
கோதென் றுண்டிலள் இத்தனை யேகுறை
யாதென் றெண்ணுவ திக்கொடி யாளையும்

மாதென் றெண் ணுவ தோமணிப் பூணினாய்

என்று கூறிக்கொல்லுமாறு கட்டளையிட்டார். அவ் வளவு தான்! உடனே இராமன்.

ஐயன் அங்கது கேட்டறன் அல்லவும்
எய்தி னால்அது செய்கென்று ஏவினால்
மெய்ய நின்னுரை வேத மெனக்கொடு

செய்கை யன்றோ அறம்செயு மாறென்றான்

என்று கூறி அம்பை விடுத்தான். அவ்வம்பு வேகமாகச் சென்று தாடகையின் உடல் உரத்தை உருவி வெளிவந்துற்றது. இந்த நிலையைத்தான் கம்பர்,

சொல்லொக்கும் கடிய வேகச் கடுசரம் கரிய செம்மல்
அல்லொக்கும் நிறத்தி னாள்மேல் விடுதலும் வயிரக்குன்றக்
கல்லொக்கும் நெஞ்சில் தங்கா தப்புறம் கழன்று கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருனெனப் போயிற்

றன்றே

என்றி பாடிக் காட்டினார். இப்பாடலில் இராமனது அம்பு தாடகையின் மார்பகத்தை ஊடுருவிச் சென்று, முதுகுவழியே மின்வேகமாக வெளிவந்துற்றது என்பது கூறப்படுகிறது. அவ்வம்பு மிக்க விரைவுடன் ஊடுருவி. மிக்க விரைவிலும் வெளிவந்துற்றது என்பதை விளக்கவே நல்ல உவமையினைக் காட்டி விளக்கியருளினர் கம்பர், கல்லாதவர்கட்குக் கற்றவர் அறவுரைகளைக் கூறினால், அச்சொற்கள், ஒரு காதின் வழியே நுழைந்து, மற்றொரு காதின்வழியே அப்போதே விடப்படுகின்றன. அக்கருத்துக்கள், அவர்கள் நெஞ்சத்து இருப்பது மில்லை. ஆகவேதான், "கம்பர், கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளெனப் போயிற்றன்றே" என்றனர். எனவே, இ.:து இராமனது அம்பின் வேகத்தின் மாட்சியினைக் காட்டிய முதல் இடமாகும்.

இனி, அடுத்தாற்போல் இராமனது அம்பின் சிறப்பைக் கம்பர் யாண்டு வைத்து இயைத்துக் காட்டி உள்ளார் என்பதைப் பார்ப்போம்.

இராமன் வாலியின் மார்பில் அம்பினை விடுத்தனன். இராமன் அம்பு எத்தனை வேகமும், வெப்பமும் உடையதாக இருப்பினும், அது வாலியின் மார்பகத்தை ஊடுருவிச் செல்லும் ஆற்றலைப் பெற்றிலது. தன் மீது பாய்ந்த அம்பினை வாலி, தன் இரு கரத்தாலும், இரு காலாலும், ஒரு வாலாலும் பிடித்து, அது யாருடைய அம்பெனக் கூர்ந்து

நோக்கவும் தொடங்கினான். இங்ஙனம் வாலி அவ்வம்பினைத் தன் போக்கில் போகவிடாமல், தடுத்துப் பார்க்கவும் கம்பர் அமைத்தது, பல உண்மைகளை நம்மனோர்க்கு உணர்த்தவேயாம் என்பது உற்று நோக்குங்கால் உணரக் கிடைக்கிறது.

வாலி அம்பைப் பார்த்தான். அவ்வம்பில் இராமன் என்னும் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அச்சொல் எத்தகையது என்பதைக் கம்பர் ஈண்டு உணர்த்த விழைந்தவராய்,

மும்மைசால் உலகுக் கெல்லாம் மூலமந்திரத்தை முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தானே இம்மையே ஏழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும் செம்மைசேர் நாமந் தன்னைக் கண்களில் தெரியக் கண்டான் என்று பாடி இன்புற்றார். இந்த உண்மையினை உணர்த்துவதுடன் நின்றாரில்லை கம்பர்.

இல்லறத்தில் ஈடுபட்டவர்கள் இல்லக்கிழத்தியர் இல்லாதபோது, எத்தகைய செயல்களையும் ஆராயாது செய்து விடுவர் என்னும் சீரிய கருத்தினையும் ஈண்டே இயம்ப எண்ணி, வாலி இராமனை நோக்கி, இராமன் தன்னை மறைந்து நின்று அம்பு எய்து வருத்தியது அடாது என்பது குறித்து ஏசிப் பேசும் நிலையில், அவன் கூறியதாக,

"கோவியல் தருமம் உங்கள் குலத்துதித்தோர்கட்கெல்லாம் ஒவியத் தெழித ஒண்ணு உருவத்தாய் உடைமை அன்றோ ஆவியைச் சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த தேவியைப் பிரிந்த பின்னர்த் திகைத்தனை போலும் செய்கை' என்று பாடினார்.

முதல் இரண்டடிகளில் இராமனது அழகையும், குலப் பெருமையினயும் வாலி வருணித்துக் காட்டிய தன் நோக்கம், உடம்பு அழகு இருக்கின்றதேயன்றி, 

உனக்கு உள்ளழகு இல்லேயே என்பதையும், நீதி நெறியினின்றும் சிறிதும் பிசகாதத்தில் தோன்றிய ,நி அக்குலத்துக்கு மாசினைத் தேடித் தந்தனேயே என்பதையும் எடுத்து மொழிந்து இராமனே இடித்து உரைப்பதற்கேயாகும்.

இன்னோரன்ன இனிய கருத்துக்களை இவ்வுலகம் அறியவே கம்பர், இராமன் இரண்டாம் தரம் பயன்படுத்திய அம்பிற்கு வேகம் கொடுத்து விடுக்காமல், தடைசெய்து நிறுத்திக் காட்டினர். ஆகவே, இது காகுத்தன் கணையின் தோற்ற்ப் பொலிவு துலங்கும் இரண்டாம் இடமாகும். இனி மூன்றாம் இடத்தில் முகுந்தனாம் இராமன்து முனை அம்பின் சிறப்பைக் காண்போமாக. அந்த இடம் இராவணன் வதையுண்ட இடமாகும்.

இராகவனாம் காகுந்தன் இராவணனது மார்பகத்தில் தன் அம்பைப் போக்கினான். ஈண்டு அவ்வம்பு செய்த செயல் வியக்கத்தக்க செயலாகும். அவ்வம்பு தாடகையின் உடலலில் பாய்ந்தபோது, வேகமாகப் பாய்ந்து வெளியே வந்தரற்போல் வந்திலது. வாலியின் உரத்தில் ஊடுருவத் தொடங் கியபோது, வாலியினல் தடைப்ப்ட்ட்து போலத் தடையும் பட்டிலது. பின்னை, யாது செய்தது? இராவணன் மார்பகம் முழுமையும் துளை செய்து விட்டது. இங்ஙனம் செய்ததன் நேர்க்கம் யாது? இங்ஙனம் துளை செய்தது என்பது எங்ஙனம் புல்னாகிறது? இவற்றிற்குரிய விடையாக இராவண்ன் மனையாள் வய்விட்டுப் புலம்பிய பாடல்களுள் ஒன்றான,

வெள்ளெருக்கம் சடைமுடியான் வெற்பெடுத்த
திருமேனி மேலும் கீழும்
எள்ளிருக்கும் இடனின்றி உயிர் இருக்கும்
இடம்காடி இழைத்த வாறே

கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை
மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக்கருதி உடல்புகுந்து

தடவியதோ ஒருவன் வாளி

என்னும் பாடல் அறிவித்து நிற்கும்.

ஆகவே, இப்பாடலில் அம்பு பல துளைகள் துளைத்தமைக்குக் காரணம் தெள்ளத் தெளிய உணர்த்தப்பட்டுள்ளது. ஒன்று இராவணன் உயிர் யாண்டுள் ளது என்பதைத் தேடு தற்கும், மற்றொன்று சீதைமாட்டுக் கொண்டிருந்த காதல் உணர்ச்சியாண்டு நிலைத்திருந்தது என்பதற்கும் ஆகும்.

கம்பர் ஆரண்ய காண்டத்தில் இராவணன் சீதையினைத் தன் உளமாகிய சிறையில் அடைத்து விட்டான் என்பதை,

மயிலுடைச் சாய லாளை வஞ்சியா முன்னம் நிண்ட
எயிலுடை இலங்கை வேந்தன் இதயமாம் சிறையில்

வைத்தான்

என்று பாடினர்.

இங்ஙனம் இதயம் புகுந்த சீதா பிராட்டியினை விடுதலை செய்ய வேண்டியது கம்பர் கடமையாகிவிட்டமையின், அச் சிறைவீடு செய்யும் காரணத்தால் அவனது மார்பு, இதயம் பல துளைகளையுறுமாறு கம்பர் ஈண்டுப் பாடியமைத்து, இராமனது அம்பின் அருஞ்சிறப்பினை எடுத்துக் காட்டுவாராயினர்.

வானக வம் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்டதாயினும், அவ்வம்பின் மாட்சி தோன்றும் இடங்கள் மூன்றாகும். சேக்கிழார் பெருமானாரும் உலகெலாம் என்னும் அருள் வாக்கினைத் தம் நூலில் பல இடங்களில் அமைத்துப் பாடி இருப்பினும்.

முன்னர் எடுத்துக் காட்டப்பட்ட மூன்று இடங்களில் அமைந்த உலகெலாம் என்னும் தொடரையே அறிஞர் பெருமக்கள், யாவர்க்கும் அறிவித்து வருவர். அது போலவே கம்பரும் இராமனது அம்புக்குப் பல இடங்களில் வேலை தந்திருப்பினும், மேலே கூறிய மூன்று இடங்களில் தான் அதன் சிறப்பை எடுத்துக் காட்டித் தாமும் சேக்கிழாரை யொட்டி நடந்தமையினை ஊகித்துணர்வார்க்கு உணர்த்துவராயினர். ஆகவே, தமிழ் மக்களாகிய நம்மனோர் கடமை இவ்விரு நூற்களையும் நன்கு ஓதி அவற்றின் கவி இன்பங்களையும் துய்த்தலேபயன் தருவது ஆகும்.