கவிபாடிய காவலர்/தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
14. தலையாலங் கானத்துச்
செருவென்ற நெடுஞ்செழியன்
நெடுஞ்செழியன் என்பது பாண்டியர்குலத்துப் பார்த்திபர் பலர்க்கும் பெயராக அமைந்துள்ளது. நெடுஞ்செழியன் என்ற பெயரைத் தாங்கி அறிவு சான்று கவிபாடும் காவலராகத் திகழ்ந்த வர் இருவர். ஆனால், அவ்விருவரும் வேறு வேறு ஆவர் என்பதை விளக்க நம் முன்னோர் அவர்கட்கு முன்பு சில சொற்களை அடைமொழியாக அமைத்துக் குறிப்பிட்டு வந்தனர். அவர்களுள் ஒருவர் பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ் செழியன். மற்றவர் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்பவர். இவரது பெயர் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியர் எனவும் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற செழியன் எனவும் நெடுஞ்செழியன் எனவும் வழங்கப் பெறும். ஈண்டுப் பின்னவர் வரலாற்றைச் சிறிது பார்ப்போமாக.
இவ்வரசர் பெருமான் பாண்டிய மரபினர் என்பது இவர்க்கு முன்னும் பின்னும் அமைந்த சொற்களே விளக்கி நிற்கின்றன. இவர் பல புலவர்களால் பாடப்பட்ட பெருமை சான்றவர். இவரைக் கல்லாடனார், மாங்குடி கிழார், இடைக்குன்றூர் கிழார், மாங்குடி மருதனார், நக்கீரனார் என்பவர்கள் சிறப்பித்துப் பாடியுள்ளார். புலவர்கள் பலரால் பாடப்பட்ட புரவலர் இவர் எனில், இவரது பெருமை சொல்லாமலே புலப்படுவதாகும்.
இவர் தம் இளமைப் பருவத்தில் தலையாலங்கானத்தில் கோச்சேரமான் யானைக் கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையோடு போர் புரிந்து, அவனைச் சிறைப்படுத்தியவர். இக் காரணம் பற்றியே தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று சிறப்புப் பெயர் பெற்றனர், இம் மன்னனை வென்றதோடு அல்லாமல், சேரன், சோழன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான்; பொருநன் என் பாரையம் வென்றவர். வேள் எவ்வியின் மிழலைக்கூற்றத்தையும் கைக்கொண்டவர். மறக் கள வேள்வி, அறக்கள வேள்விகளைச் செய்தவர். மறக்கள வேள்வியாவது, பேய் மகள் வயிறார உண்ணும்படி வீரன் களவேள்வி செய்தல் ; அறக்கள வேள்வியாவது யாகாதி காரி யங்கள் புரிதல். புலவர்களிடத்துப் போர் அன்பு கொண்ட உத்தம குணத்தர் இம் மன்னர். இத்தகைய மன்னர்பிரானைக் குடபுல் வியனார் பாடும்போது, இம் மன்னரது முன்னோர் அகன்ற உலகைத் தம் முயற்சியால் கொண்ட புகழுடையவர் என்றும் இயமனும் இரங்கத்தக்க நிலையில் போர்க்களத்தில் இரு பெரு வேந்தரையும் ஐம்பெரு வேளிரையும் வென்றவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.கல்லாடனார் என்னும் புலவர் இவரது தலையாலங்கானத்துச் செருவென்ற செய்தி யினைக் குறிப்பிட்டுள்ளார்.
மாங்குடி மருதனார் இவர் எவ்வியின் மிழலைக் கூற்றத்தையும் முத்தூர்க் கூற்றத்தையும் வென்ற சிறப்பையும், இவர் மறக்கள வேள்வி அறக்கள வேள்வி செய்த சிறப்பினையும், இம்மன்னரால் தோல்வியுற்ற பகை மன்னர் வீரசுவர்க்கம் புகுந்து பேறு பெற்றனர் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
இடைக்குன்றூர் கிழார் இம்மன்னரது குணப்பண்பினை அழகுறப் புலப்படுத்தியுள்ளார். இவ்வரசப் பெருமகனார், “தம்மீது வெகுண்டுவரும் வீரரைக் கண்டு மதித்ததோ, அன்றி அவமதித்ததோ இலர். பகைவரைப் பற்றிக் கொன்றதற்காக மகிழ்ந்ததோ அன்றி இங்ஙனம் எல்லாம் செய்தோமே என்று தம்மை மிகுத்து எண்ணியதோ இல்லை” என்பன இப்புலவர் மகிழ்ந்து கூறும் கருத்துக்கள். இம் மன்னர்பிரானுடைய மாண்புகளைப் பரக்கக் காணவேண்டுமானால் மாங்குடி மருதனார் பாடியுள்ள மதுரைக்காஞ்சி என்னும் தனி நூலிலிருந்தும் நக்கீரர் பாடியுள்ள நெடுநெல்வாடை என்னும் நூலின் மூலமும் அறியலாம்.
மாங்குடி மருதனார் தம் மதுரைக்காஞ்சியில், இம்மன்னர் தம் பகை மன்னர்மீது படை எடுத்துச் சென்றதையும் அம் மன்னர்களின் அரண்களையும் காவல் மரங்களையும் அழித்த நிலைகளையும் தம் ஏவல்படி கேட்டவர்கட்கு அருள் செய்த அருளிப்பாட்டையும், அங்ஙனம் கேளாதவர்களை அழித்து அவர்கள் நாடுகளைப் பாழாக்கிய தன்மைகளையும் அழகுறக் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.
இம் மன்னர் வேற்றரசரை வென்று கொணர்ந்தவற்றைத் தமக்கு என்று வைத்துக் கொள்ளாது, பிறர்க்கு என்று கொடுக்கும் பெற்றியர். இஃது, “உரிய எல்லாம் ஓம்பாது வீசி,” என்ற தொடரால் விளக்கமாகிறது. இம்மன்னர் பொய்க்குணத்தை அறவே வெறுத்தவர் ஆவர். பொய் கூறுவதனால் தேவர் உலகமும் தேவாமுதமும் கிடைப்பதேனும், அவற்றையும் கைவிட்டு மெய்யையே நிலை நிறுத்தும் பெற்றியர். இந்தப் பண்பினை மாங்குடி மருதனார் “உயர் நிலை உலகம் அமிழ் தொடு பெறினும், பொய் சேண் நீங்கிய வாய் நட்பினை” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந் நெடுஞ்செழியன் தம் வெற்றிக்குப் பிறகு தமக்குரிய யாவரையும் வரவழைத்து அவர் அவர்கட்கு நற்பொருள்கள் ஈந்து மகிழ்ந்தவர். இத்தகைய குறிப்புக்கள் பல அம் மதுரைக்காஞ்சியில் காணப்படுகின்றன. அவற்றை எழுதப்புகின் அதுவே ஒரு தனி நூலாக முடியும்.
இம் மன்னர் சார்பில் பாடப்பட்ட நெடு நெல்வாடை இம் மன்னர் பகைமேல் சென்ற போது, பிரிந்து வருந்தும் தலைவிக்கு அவ் வருத்தம் தீரும்படி “இவர் பகையை வென்று விரைவில் வருவாராக” என்று வெற்றி தரும் தேவதையைப் போற்றுபவர் கூறும் முறையில் நக்கீரரால் பாடப்பட்டது. இதன் மூலம் இப் பாட்டுடைத் தலைவருக்கும் தலைவிக்கும் இருக்கும் உண்மைக் காதல் அன்பு தெற்றத் தெளியப் புலனாகும். இதன் விரிவை அப் பெருநூலில் காண்க. விரிப்பின் அது பரந்து படும் என்று இந்த அளவில் இது குறிப்பிடப்பட்டது.
இனி இம் மன்னர் ஏறு, பிற புலவர்களால் பாடப்பட்ட பெருமை நிறைந்ததோடு நில் லாமல் தாமாகப் பாடியுள்ள பாட்டின் பொருள் நயம் கண்டு இவரது வரலாற்றுச் சுருக்கத்தை இனிதின் முடிப்போமாக.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுந்செழியர் பாடல் ஒன்று புற நானூற்றில் காணப்படுகிறது. அப்பாடல் இவரது உள்ளக்கிடக்கையின் உண்மையினை உணர்த்துவதாகும். பாட்டின் வேகம் இவரது விறு விறுப்பைக் காட்டவல்லது. அது சபதம் செய்யும் நிலையில் அமைந்த பாடல்.
பகை வேந்தர் தம்மை வெல்ல எண்ணவும் கூடாது என்பது இவரது கருத்து. இவரது யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை கண்டு பகைவர் அஞ்ச வேண்டும் என்பதும், இவர் கருத்து. அங்ஙனம் அஞ்சாது தம் செருக்குக் காரணமாகப் போர்க்கு எழுந்தால் அவர்களை வென்று அடக்குவேன் என்ற உறுதிப் பாட்டையும் உடையவர். அவ்வாறு அப் பகைவேந்தரை வென்றிலேன் எனில், "எந் நிழலில் வாழும் குடி மக்களும் மற்றும் உள்ளாரும் இவ் விறைவன் கொடியன்" என்று கூறிக் கண்ணீர் விட்டு என் குடியினைப் பழித்து, "கொடுங்கோலன் இவன்" என்று கூறத்தக்க நிலையைப் பெறுவேனாக" என்றும், புலவர் என் நாட்டைப் பாடாது ஒழிவாராக என்றும், இரப்பவர்க்கு ஈயாத உலோபத் தன்மை என்னை வந்து உறுவதாக" என்றும் வஞ்சினம் கூறியவர்.
இவ்வாறு இவர் கூறிய வஞ்சினமொழிகளில் இம் மன்னரது உளப் பண்புகள் பல வெளியாகின்றன. இவர் தம் நிழலில் வாழும் மக்கள் தம்மைக் கொடியன் என்று கூறாத வகையிலும், கண்ணீர் சிந்தாத நிலையிலும், கொடுங்கோலன் என்ற பெயரை எடுக்காத நிலையிலும் அரசு புரிய வேண்டும் என்ற கொள்கையும், அவ்வாறே அரசு புரிந்தவர் என்பதும், தம்மைப் புலவர்கள் பாடாது இருப்பது தம் வாழ்க்கைக்கே இழுக்கு என்று அறிந்து, புலவர் பாடும் வகையில் கொடையும் வீரமும் கொண்டு விளங்க வேண்டும் என்பதை அறிந்து வீரமும் ஈரமும் கொண்டு விளங்கத் தம் வாழ்நாட்களைக் கழித்தவர் என்பதும் மாங்குடி மருதைைரக் குறிப்பிட்டுப் பேசு கையில் "ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன்" என்று பாராட்டி இருப்பதால் அவர்மாட்டு இவர்க்கு இருந்த மதிப்பும் புலனுகின்றன.
இவரது பாட்டின் இறுதி அடி "இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே" என்று முடிவதில் இருந்து, இம்மன்னர் இரப்பதற்கு ஈயா வறுமை நிலையினை அடையாதிருக்கும் பொருட்டேனும் பகை மன்னரை வெல்ல முயன்று நின்றவர் என்பது உறுதியாகிறது.
இங்ஙனமெல்லாம் அரசர்கள் தம் அரச போகத்தில் தாம் இருந்தும், அவ்வரச போகத்தில் அழுந்திக் கிடக்காமல் அருங்கவி பல புனைந்து அருங் கருத்துக்களையும் மக்களுக்கு அறிவுறுத்திச் சென்றிருக்கின்றனர். அவர் கட்கு நாம் என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.