உள்ளடக்கத்துக்குச் செல்

தும்பைப்பூ-நாவல்/அத்தியாயம் 7

விக்கிமூலம் இலிருந்து

7

காலைக் கதிரவன் வானத்தில் திட்டுத் திட்டுகளாய்ப் படர்ந்திருந்த வெண் மேகங்களை விலக்கிக் கொண்டு விரைவாக மேற்கு நோக்கிப் பிரயாணஞ்செய்து கொண்டிருந்தான். சூரிய வெப்பத்தால் சுறுசுறுப்புக்கொண்ட மக்கள் தத்தம் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். நெற்றி வியர்வை நிலத்தில் விழ உடம்பை உழைத்து வயிற்றுப் பிழைப்புக்கு வழி தேடும் பாட்டாளியிலிருந்து நகத்தில் அழுக்குப்படாமல் நாசூக்காக மேஜை முன் உட்கார்ந்து உத்தியோகம் பார்த்து விட்டு வரும் பெரிய உத்தியோகஸ்தர் வரை தம்தம் அலுவலை நாடி அவசர அவசரமாகப் போய்க் கொண்டிருந்தனர். சிறிதும் சிரமமின்றிக் காலத்தைத்தள்ளி எப்படியோ உணவுக்கும் உடைக்கும் வழி செய்து கொண்டு உயிர்வாழும் சோம்பேறிகளும் உடல் நலுங்காமல் ஒய்யாரமாக நடந்து உல்லாச வாழ்க்கை நடத்தும் உலுத்தர்களும், ஒரு கவளம் சோற்றையும் சீரணிக்க முடியாமல் மலைப்பாம்பு போல் படுக்கையில் புரண்டு கொண்டிருக்கும் பணத் தொந்திகளும் தவிர, மற்றவர்களெல்லாம் பரபரப்பாகத் தங்கள் பாட்டைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.

மணி ஒன்பதாய் விட்டது. சதானந்தம் பிள்ளை வீடு அன்று வழக்கத்தைவிட பரபரப்பாக இருந்தது. மாளிகையின் முற்பகுதியிலுள்ள ஆபீஸ் அறையில் கட்சிக்காரர்கள் சதானந்தம் பிள்ளையைச் சூழ்ந்து கொண்டிருந்தனர். மற்றொரு பக்கம் காங்கிரஸ்காரர்களும், பொதுநலத் தொண்டர்களும் அவருடன் பேசுவதற்காகக் காத்துக் கொண்டிருந்தனர். குமாஸ்தா அன்று கோர்ட்டில் ஆஜராகி வாதாட வேண்டிய வழக்குகளைப் பற்றிய விவரங்களே ஞாபகப்படுத்தி ‘கேஸ்’ கட்டுகளை ஒவ்வொன்றாக அவர் முன் வைத்தவாறு இருந்தான் வழக்கு தஸ்தாவேஜுகளை முறையாகப் பிரித்துப் பார்த்து வந்த பிள்ளையவர்கள் அவைபற்றித் தமக்குள் ஏற்படும் சந்தேகங்களையும் விவரமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய விளக்கங்களையும் சம்பந்தப்பட்ட கட்சிக்காரர்களை விசாரித்து அறிந்து கொண்டிருந்தார்.

உள்ளே சிவகுமாரனும், விசுவநாதனும் கல்லூரிக்குப் போக அவசர அவசரமாக ஆயத்தஞ் செய்து கெர்ண்டிருந்தனர். கோகிலா குளித்து விட்டு வந்து தலை வாரிக் கொண்டிருந்தாள். “ஊம்; மணியாகி விட்டது. சீக்கிரம் சாப்பிட்டு விட்டுப் போங்கள்.” திலகவதி பிள்ளைகளைத் துரிதப்படுத்திக் கொண்டிருந்தாள். மங்கையர்க்கரசி அவர்களுக்கு வேண்டியவைகளைக் கவளித்துச் செய்து விட்டு, கடைக்குட்டிக் கணேசனைக் குளிப்பாட்டி, கிராப் சீவி, சட்டை முதலியவைகளைப் போட்டுக் கொண்டிருந்தாள்.

புத்தகக் கட்டைக் கையில் எடுத்துக் கொண்டு பள்ளிக்குப் போகத் தயாரான விசுவநாதன் ஏதோ நினைத்துக் கொண்டு, “சித்தி, குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா” என்று கேட்டான். அதே சமயத்தில் சிவகுமாரனும், “நேற்றுக் கழற்றி மாட்டிய கோட்டு எங்கே காணோம், சித்தி?......” என்று வினவினான்.

ஏதோ கவனமாய், கணேசனுக்குச் சராய் போட்டுக் கொண்டிருந்த மங்கையின் செவிகளில் இவர்கள் சொன்னது விழவில்லை.

“சித்தி, நான் கேட்டது காதில் விழவில்லை.....?” என்று கத்தினான் விசுவம்.

சிவகுமாரனும், “மணியாய் விட்டதே! வேறே கோட்டாயினும் கொண்டு வாயேன், சித்தி!” என்று படபடத்தான்.

சிறிது தூரத்திலிருந்து மங்கையை உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்த திலகவதி, ம“ங்கை, எங்கே கவனமாயிருக்கே? பசங்க மணியாய் விட்டதென்று அடிச்சுக் கொள்கிறார்கள், நீ பாட்டுக்கு என்னமோ மகத்தாயாட்டம் ..... ” என்று கூவினாள். ஆத்திரம் மேலே பேசவொட்டாது அவள் தொண்டையை அடைத்துக் கொண்டது.

இப்போதுதான் சூழ்நிலையை யுணர்ந்து திடுக்கிட்டு எழுந்த மங்கை, “என்ன அக்கா? என்னையா கூப்பிட்டீங்க......?” என்று கேட்டாள். அவள் கைகள் பரபரப்பாக, கணேசனின் சட்டையில் பொத்தானைப் போட்டன.

அவளை விழுங்கி விடுவதுபோல் பார்த்துக் கொண்டே திலகவதி “வரவர மாமி கழுதை போலானாள் என்ற கதையாயிருக்கிறது உன் சங்கதி. வீட்டு வேலை மேல் கவனமில்லாமல் ஏதோ கோட்டையைப் பிடிக்கிறதுபோல் ஆகாசத்தை யும் பூமியையும் பார்த்துக் கொண்டு சதா யோசனையில் இருக்கிறாயே! உன் மனசில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறே?..” என்று படபடவெனப் பேசினாள்.

“சித்தி, நீ முதலிலே எனக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துவிட்டு அக்கா செய்கிற அதிகாரத்துக்கு அடங்கிப் பதில் சொல்லு....” என்று தாயையும் சின்னம்மாவையும் பார்த்துச் சிரித்துக்கொண்டே சொன்னான் விஸ்வம்.

இதற்குள் தன் கோட்டைத் தேடிப் பார்த்துப் போட்டுக் கொண்டு வந்த சிவகுமாரன். “ஏன் அம்மா வீணுக்காயினும் சத்தம் போடறே! பாவம், சித்தி சாதுவாயிருக்கவே ரொம்ப ஏமாற்றுகிறாயே! கூப்பிட்டது காது கேக்கல்லேன்னா......?” என்றான்.

விசுவநாதத்தின் கேலிப் பேச்சு திலகவதிக்கு அதிக ஆத்திரத்தை யுண்டு பண்ணிவிட்டது. ஆதலால் சிவகுமாரன் பேசுவதைச் சிறிதம் கவனியாமல், “சித்தியை எவ்வளவு நாளாடா கண்டிங்க? எதற்கெடுத்தாலும், எப்போ பார்த்தாலும் சித்தி, சித்தி என்று கூப்பிட்டுக் கொண்டு. ஏதாயினும் வேண்டுமென்றால் கோகிலாவைக் கூப்பிட்டுக் கேட்கிறது, இல்லை; என்னைக் கேட்டால் செய்கிறேன். அதைவிட்டு விட்டு, சித்தியாம், சித்தி! சித்தி இத்தனை நாளா இல்லாமே இப்போ எங்கே இருந்துடா வந்து விட்டாள்......?” என்று ஆங்காரம் பொங்க முழங்கினாள்.

தாயின் ஆர்ப்பாட்டத்தைப் பார்த்துப் பெரிய பிள்ளைகளும் அசந்து நின்றுவிட்டனர். விவரிக்க வொண்ணாத திகைப்பினுலும் பீதியினாலும் மங்கை வாயடைத்துப் போய் நிற்கலனாள். கணேசன் கோபத்தினால் சிவப்பேறியிருந்த தாயின் முகத்தைப் பார்த்தவாறு, மங்கையை அணைத்துப் பிடித்துக் கொண்டிருந்தான்.

அன்னை இதற்கு முன் இப்படிக் கோபமாகப் பேசி அதுவும் சிற்றன்னையிடம் உரத்துப் பேசிக்கூடப் பார்த்தறியாத தால், கோகிலா வியப்பும் வருத்தமும் ஒருங்கேகொண்டாள். ‘பணிப் பெண்ணைச்கூடக் கடிந்து பேசமாட்டாளே, அம்மா! சித்தியைப் போய் ஏன் இப்படிக் கோபித்துக் கொள்கிறாள்’ என்று அவள் பிஞ்சுள்ளம் பல எண்ணி வேதனைப்பட்டது. சிறிது தூர நின்றிருந்த அவள் மங்கைக்கு ஜாடை காட்டித் தாயின் எதிரிலிருந்து அப்புறம் வந்து விடுமாறு சொன்னான். ஆனால் மங்கை தலை கவிழ்ந்து கொண்டிருந்ததால் இக் குறிப்பைக் கவனிக்கவில்லை.

திலகவதி ஆத்திரம் அடங்காதவளாய், “பெரியவர்களுக்கே யோசனையில்லாதபோது. சிறுசுகளுக்கு எங்கே புத்தியிருக்கப் போகிறது? அப்பாவே எதற்கெடுத்தாலும் மங்கை மங்கை என்று வாய் ஒயாது கூப்பிட்டு வளைய வருகிறார் என்றால் அதைப் பார்த்த பிள்ளைகள் பிதற்றுவதற்குக் கேட்கவா வேண்டும்? அவருக்கு வயசு ஆச்சு என்று தான் பேரு.....” என்று பேசிக்கொண்டே போனாள்.

இத்தருணத்தில், ‘மங்கை, சாப்பாடு ஆயிட்டுதோ இல்லையோ! இலை போடு. நான் இன்றைக்குச் சீக்கிரமாகக் கோர்ட்டுக்குப் போகணும்’ என்று கூறிக்கொண்டே உள்ளே வந்த சதானந்தம் பிள்ளை அங்கு நிலவும் சூழ்நிலையைக் கவனியாமல், “ஏன், சிவா! விசுவம்! உங்களுக்கு மணியாகவில்லையா? இன்னம் இருக்கிறீர்களே! திலகம்! இவர்களுக்குச் சாப்பாடு போடவில்லை?” என்று பிள்ளைகளைப் பார்த்து விட்டு மனைவியைக் கேட்டார்.

தம் கேள்விகளுக்குப் பதில் ஒன்றும் வராததால் அவர் எல்லோர் முகங்களையும் சுற்றிப் பார்த்துக் கொண்டே, “என்ன சமாசாரம்? ஏன் இப்படி நிற்கிறீர்கள் எல்லோரும்?” என்று கேட்கலானார்.

“ஒன்றுமில்லை, அப்பா! இதோ போகிறோம்” என்று சொல்லியவாறே சிவகுமாரன் புத்தகங்களை எடுத்துக் கொண்டு வெளியே நடந்தான். விசுவம் அவனைப் பின் தொடர்ந்தான். கோகிலா ஏதோ எடுப்பதுபோல், உள்ளறைக்கு மெல்லப் போகலனான். கண்களிலிருந்து பொங்கி வழிந்து கொண்டிருந்த நீரைத் தடுக்க மாட்டாதவளாய்ச் செயலற்று நின்றிருந்த மங்கை, அத்தான் தன்னைக் கூப்பிட்டுக் கொண்டு வருவதை யறிந்ததும் பரபரப்பாக முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொள்ளலானாள். பின் அவர் என்ன விஷயம் என்று கேட்கத் தொடங்கியதுமே சடக்கெனச் சமையலறைக்குப் போய்விட்டாள். பற்றுக் கோடில்லாது துவளும் பைங்கொடி போல் கணேசன் துவண்டு நின்றுவிட்டான்.

திலகவதி கணவன் கேள்விகளுக்கு ஒன்றும் பதில் சொல்லவில்லை. கழுத்தை ஒருவிதமாகச் சொடுக்கிக் கொண்டு போய் அவருக்கு உணவு படைக்கலானாள். சதானந்தம் பிள்ளைக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏதோ நடந்திருக்கிறது என்று மட்டும் அங்கு காணப்பட்ட விசித்திரமான சூழ்நிலையிலிருந்து ஊகித்து உணர்ந்தார். மனைவியின் குணம், போக்கை அனுசரித்துப் போகக் கூடியவராதலால், அவள் மெளனஞ் சாதித்துக் கொண்டிருக்கையில், வாயைக் கிளறினால் வம்புதான் வளரும் என்று கருதி அவர் வாளா இருந்து விட்டார். அவர் சாப்பிட்டுவிட்டுக் கோர்ட்டுக்குப் போகும் போதுகூட திலகவதி வாய் திறக்கவேயில்லை. சிறிது காலமாகவே தம் மனைவியின் போக்கு ஒரு தினுசாகப் போய்க் கொண்டிருப்பதைப் பற்றிப் பிள்ளையவர்கள் சிந்தித்துக் கொண்டே போகலனார். அடிக்கடி எடுத்ததற்கெல்லாம் கோபங் கொள்வது, அனாவசியமான விஷயங்களுக்கெல்லாம் மூச்சைப் பிடித்துக்கொண்டு பேசி வாதாடுவது, முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு மெளனம் சாதிப்பது போன்ற செயல்கள் திலகவதியிடம் காணப்படுவதற்குக் காரணமென்ன? நோயினால் பாதிக்கப்பட்டுள்ள உடல் பலவீனங் காரணமா? அல்லது பிணியினால் உடம்பு நலிந்துள்ளதுபோல உள்ளமும் நொந்துள்ளதால் இவ்வித மாறுதல் ஏற்பட்டிருக்கிறதோ? என்றெல்லாம் அவர் வழி நெடுக யோசித்தவாறே சென்றார். மங்கையர்க்கரசிக் குண்டான துக்கம் சொல்லிமுடியாது. அவள் திலகவதி சொல்லிய ஒவ்வொரு சொல்லையும் நினைத்து நினைத்து மனவேதனைப் பட்டாள். ‘அக்காவா இப்படி எல்லாம் என்னைப் பேசினாள்? என்னிடம் அன்பும் ஆதரவும் அளவில்லாமல் காட்டி வந்த அக்காவா―உடன் பிறந்த சகோதரியைவிட உயர்வாக மதித்து வந்த அக்காவா, உயிருக்கு உயிராக நேசித்துவந்த அக்காவா இப்படி இழிவாகப் பழித்துப் பேசினாள்? அவள் இவ்விதம் ஏசிப் பேசுவதற்குக் காரணம் என்ன? அவள் இவ்விதம் ஆத்திரங் கொண்டு திட்டுவதற்கு நான் செய்த குற்றம் என்ன? என் மனமறிந்து ஒரு குற்றமும் செய்யவில்லையே? பிழை இழைக்கவில்லையே? அப்படி நான் ஏதேனும் செய்திருந்தாலும் ஏன் இப்படிச் செய்தாய் என்று நேரடியாகக் கேட்டுக் கண்டிக்கலாமே! அதை விட்டு மனதில் ஏதோ வைத்துக்கொண்டு மறைமுகமாக வைவானேன்! பிள்ளைகள் முன் வைத்து என்னைப் பேசியதோடல்லாமல் அவர்களையுமல்லவா அநியாயமாகக் கடிந்து கொண்டாள்?......’ என்றெல்லாம் எண்ணி அவள் ஏங்கினாள்.

சில காலமாகவே, அக்கா என்னைக் கண்டால் சீறி விழுகிறாள். ஒன்றுமில்லாத விஷயத்துக்குக்கூட மூச்சுப் பிடித்துக்கொண்டு ஒரு மணி நேரம் ஓயாமல் பேசுகிறாள். கணேசனும் கோகிலாவும் விளையாட்டுப்புத்தியால் ஏதேனும் விஷமம் செய்வதையும் தவறு புரிவதையும் பார்த்து, ‘இவ்விதம் செய்வது குற்றம். இனி அம்மாதிரி செய்யக் கூடாது’ என்று புத்தி கூறி நான் அன்பாகக் கடிந்து கொள்வதைக்கூட அக்கா குற்றமாக எடுத்துக் கொண்டு அவர்கள் என்ன செய்தார்கள் என்று இப்படிச் சத்தம் போடுகிறாய்? சின்னப் பிள்ளைகளாயிருந்தால் விஷமம் சில பண்ணத்தான் செய்வார்கள். இதற்குப் போய் சும்மா அதிகாரம் பண்ணுகிறாயே! என்று ஆத்திரத்தோடு கூறி ஆர்ப்பரிக்கிறாள். சிவகுமாரனும், விசுவநாதனும் இளமைத் துடிப்பால் விடுமுறை நாட்களில் சாப்பிட வேண்டிய நேரங்களில் சாப்பிடாமலும், உறங்க வேண்டிய நேரங்களில் உறங்காமலும் பந்தாட்ட விஷயங்களிலும் அரசியல் விஷயங்களிலும் ஆர்வங் காட்டி அதிகக் கவனஞ் செலுத்தி வருவதைக் கண்டு, ‘விளையாட்டு விஷயங்களில் கலந்து கொள்வது நல்லதுதான். ஆனால் வீண் விவகாரங்களில் கவனஞ் செலுத்தக் கூடாது. ஊணும் உறக்கமும் வேளா வேளைக்கு இல்லாவிட்டால், உடம்பு கெட்டுவிடும்’ என்று பரிவோடு சொல்லிக் குறிப்பிட்ட வேளையில் சாப்பிடவும் தூங்கவும் வைத்தால், ‘உபசாரம் செய்கிறாளாம். உபசாரம்; வெற்று உபசாரம் செய்து, பிள்ளைகளைச் சாப்பாட்டு ராமன்களாகவும், தூங்கு மூஞ்சிகளாகவும் ஆக்கப் பார்க்கிறாள். இவளுக்கென்ன?’ என்றும், ‘பெற்ற எனக்கில்லாத கனிகரம் உனக்கு வந்து விட்டதா?’ என்றும் ஏளனமாகக் கேட்கிறாள். இருந்தாற் போலிருந்து அக்கா ஏன் இப்படி மாறிவிட்டாள்?

“என்னைக் கண்டால் ஏன் அவளுக்குப் பிடிக்கவில்லை? நான் செய்த தவறு என்ன? என் மனமறிந்து நான் யாதொரு பிழையையும் செய்யவில்லையே!... என்மீது அக்கா எவ்வளவு அன்பாக இருந்தாள்? இப்போது எப்படி வேம்பாகி விட்டாள்? நான் நல்ல புடவைகளையும் நகைகளையும் போட்டுக்கொண்டு சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று வற்புறுத்தி வந்தவள், இப்போது மினுக்கிக் குலுக்குகிறேன் என்றல்லவா பழிக்கிறாள்? அத்தான் என்னை அடிக்கடி கூப்பிட்டுப் பேசுவதையும், வேலையிடுவதையும் அவள் விரும்பவில்லையா? ஒரு வேளை அத்தான் அந்தரங்கமாக என் மீது பரிவு காட்டிப் பேசி ஆறுதல் கூறி வருவது அவளுக்குத் தெரிந்து விட்டதோ! அவள் தப்பபிப்பிராயம் கொண்டிருக்கக் கூடுமோ! அதைக் காரணமாகக் கொண்டுதான் என்மீது கோபங்கொண்டு எடுத்ததற் கெல்லாம் குற்றஞ் சாட்டிப் பேசுகிறாளா? என்னவென்றே புரியவில்லையே! ஐயோ! கடவுளே! கவலையில்லாமல் காலந் தள்ளக் கடைசியாக ஒரு ஆதரவான இடம் கிடைத்தது என்று கருதியிருந்தேன்! அதுவும் உனக்குப் பொறுக்க வில்லையா?” என்று எல்லாம் எண்ணி மனம் பொருமினாள் மங்கையர்க்கரசி.

திலகவதிக்கும்தான் திராத சிந்தனை உண்டாயிற்று’ அன்று அவள் மங்கைமீது வெகுண்டு விழுந்ததை நினைத்து வெகுவாக வருத்தப்பட்டாள். ‘ஐயோ, நாம் அவளை ஏன் அப்படிக் கடிந்து கொண்டோம்? அவள் என்னசெய்தாள்?...’

‘என்ன செய்தாளா நம் குடியையல்லவா கெடுக்கப் பார்க்கிறாள்? நம் வாழ்க்கையை யல்லவா பறித்துக் கொள்ளப் பார்க்கிறாள்? இதைவிட வேறென்ன செய்ய வேண்டும்? அவரைக் கைக்குள் போட்டுக் கொள்ள இவள் வசியமல்லவா செய்வதாகத் தெரிகிறது?...’

‘சே! அப்படியிருக்காது. மங்கை அப்படிப்பட்டவளல்லவே! சரியாக உண்ணாமலும் உயிர் வாழ்வதிலே சிறிதும் பற்றில்லாமலும் தவசி போலிருக்கும் அவளா இப்படிச் சிற்றின்பம் நாடிச் சதி செய்வாள்?’

‘.......இதெல்லாம் வெளி வேடம்! பட்டிக்காட்டிலே இருந்து வந்த சமயத்தில் அப்படிப் பசப்பினாள்? பட்டணத்துத் தண்ணீர் உடம்பில் ஊறினதும் சினிமாக்காரி போல் சிங்காரித்துக் கொண்டு தளுக்கிக் குலுக்கி நடக் கிருளே! இப்போது அவள் அறுதலியாகவா இருக்கிறாள்?...’

திலகவதியின் உள்ளத்திலே இப்படி மாறி மாறிப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அவள் வீட்டு விலக்கமாயிருந்தபோது, ‘சித்தி கண்ணிலே விழுந்த துசை அப்பா துடைத்தார்’ என்று கணேசன் சொல்லிய தகவல் அவளுடைய கள்ளமில்லாத உள்ளத்தை மிகவும் கலக்கிவிட்டது. அப்போது அவளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியே ‘என்ன!’ என்று ஆத்திரம் பொங்கும் கேள்வியாக வெளிவந்தது.

இது கண்டு கணேசன் பயந்து போய், ‘இல்லேம்மா! சித்தி கண்ணிலே விழுந்த தூசை அக்காதான் ஊதி எடுத்துச்சி’ என்று திருத்திச் சொல்லியபோது, ‘ஓ! அப்படியா!’ எனச் சிறிது தணிந்து கூறினாலும் உள்ளத்தை மட்டும் அவ்வெண்ணம், குடைந்து கொண்டேயிருந்தது,

இந்தக் குறுகுறுப்பு நாளுக்கு நாள் அதிகமாய்க் கொண்டிருந்ததே யொழிய, குறைந்தபாடில்லை. பாலன் கணேசனின் வெள்ளைப் பேச்சினால் அவளுக்கு உண்டான சந்தேகம் வேகமாக வளர்ந்து கொண்டே போயிற்று. சந்தேகக் கண்ணோடேயே, மங்கையர்க்கரசியின் ஒவ்வொரு சிறு செயலையும் அவள் கவனித்து வரலானாள். மங்கை பேசும் சாதாரணப் பேச்சிலும், சிரிப்பிலும் செய்யும் செயலிலும் கூட ஏதோ வஞ்சகம் இருப்பதாகவும், களங்கம் இருப்பதாகவும் அவள் ஊகிக்கலானாள். இவளாகப் பலமுறை வற்புறுத்திச் சொன்னபடி, மங்கை துணிமணிகளை அணிந்து கொண்டது. இப்போது இவளுக்கு வித்தியாசமான அர்த்தத்தைக் கற்பித்தது. மங்கை இவள் கணவனுக்குப் பணிவிடை செய்யும் போதும் மறைவிலிருந்து கவனிக்கலானாள் அவர் கேட்பதற்கு மங்கை பதில் சொல்வதை இவள் ஒற்றுக் கேட்கலானாள்.

காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சளாய் இருப்பதுபோல் சந்தேகத்தால் பீடிக்கப்பட்ட திலகவதியின் கண்களுக்கு மங்கை ஒரு மாய்மாலக்காரியாய்க் காணப்பட்டாள். தன் கணவனுக்கும் மங்கைக்கும் இடையே கள்ள நட்பு ஏற்பட்டிருப்பதாக அவள் தீர்மானித்து விட்டாள்.

‘சே! அப்படியிருக்குமா? அவர் அப்படிப்பட்ட வரல்லவே?’

‘ஆம். பிள்ளைகள் என்ன செய்வார்கள்? பெண்கள் மேல் விழுந்துபோனால் மங்கை அவரை மயக்கி விட்டிருப்பாள்.’

‘அவள்தான் மானங்கெட்டுக் கையைப் பிடித்தாலும் பிள்ளை குட்டி பெற்ற இந்த மனுஷனுக்குப் புத்தி எங்கே போச்சு?’

‘மங்கை இவ்வளவுக்குத் துணிந்திருப்பாளா? அவர் முன்னே போகவே கூச்சப்படுவாளாயிற்றே! நானாகப் பலமுறை சொல்லியனுப்பிலுைம் நாணங்கொண்டு நிற்பவளாயிற்றே!’

‘வந்த புதுசில் அப்படித்தான் இருந்தாள்! பின்னல்தான் மெல்ல மெல்லக் கூச்சத்தை விட்டுச் சகஜமாகப் பழகத் தொடங்கி விட்டாளே! நெருங்கிப் பழகப் பழக நெகிழ்ந்து போக வேண்டியதுதானே?’

‘பாவம்! அவள் சின்னஞ்சிறுசுதானே! கட்டினவனிடம் என்ன சுகத்தைக் கண்டாள்? அதற்கு முன்பேதான் அவன் கண்ணை மூடிவிட்டானே! அவளுக்கு ஆசையிருக்காதா நெஞ்சத்தில் கொஞ்சமாயினும்? தன்னொத்த பெண்களெல்லாம் இன்ப சுகங்களை அனுபவித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து வருகிறாளல்லவா இன்ப நினைவு எள்ளளவாயினும் எழாமலிருக்குமா?’

‘அதற்கு? என் ஆம்படையானைப் பிடித்துக் கொள்ள வேண்டுமா, என்ன? எனக்குப் போட்டியாகவா புறப்பட வேண்டும்? உடன் பிறந்தவன் உதறித் தள்ளியவளை உவப்புடன் வரவேற்றுக் காப்பாற்றி வருகிறேனே! அதற்குக் கைம்மாறா இது?’

இப்படித் தனக்குள்ளாகவே கேள்விகளை எழுப்பிப் பதிலும் கண்டு வந்த திலகவதி, பருவப் பசியால் பரதவிக்கும் மங்கை இளமையிச்சையைப் பூர்த்தி செய்துகொள்ள, தன் கணவனை ஆளாக்கிக்கொண்டு விட்டாள் என்ற தீர்மானத்துக்கு வந்ததும், இடையிடையே அவள்பால் உண்டான இரக்கத்தையும் பச்சாதாபத்தையும் விரட்டி விட்டு ஆத்திரமும் வஞ்சமும் கொள்ளலானாள்

ஆகவே, அவள்தான் அடிக்கடி மங்கையை அநாவசியமாகக் கடிந்து கொள்வதற்காக வருத்தந் தெரிவித்து ஆறுதல் கூற வேண்டுமென்று முதலில் எண்ணியதை விட்டு, வீராப்பாகவே நடந்து கொண்டாள்.

பிள்ளைகளனைவரும் பள்ளிக்கூடம் போன பின்னர், மங்கை, இந்நிலையிலும் மனவருத்தத்தை மறைத்துக் கொண்டு, திலகவதியைச் சாப்பிடக் கூப்பிட்டாள். அப் போதும் அவள் மங்கையிடம் முகங்கொடுத்துப் பேசவில்லை. “எனக்குப் பசிக்கவில்லை, அப்புறம் சாப்பிடுகிறேன்; நீ போய்ச் சாப்பிடு” என்று வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டே சொன்னாள். அவள் இருக்கும் நிலையைக் கண்டு மங்கை மறுபேச்சுப் பேசாமல் போய்விட்டாள். அவளும் சாப்பிடவில்லை. பின் கட்டில் போய் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு தன் அவல நிலையை நினைத்து அவள் குமுறிக் குமுறியழலானாள்.

இவ்வி நிலையினால் பகல் முழுவதும் அவ்வீட்டில் அமைதி நிலவியது. பிற்பகலில் வேலைக்காரி வந்த பற்றுச் சாமான்களைத் துலக்கி வீடு வாசலைச் சுத்தஞ் செய்கையில் தான் திலகவதியின் குரல் கேட்டது

“சின்னம்மா எங்கே? எல்லாம் போட்டது போட்ட வாக்கில் இருக்கிறதே!”

வேலைக்காரி கேட்ட கேள்வியை முன் பக்கத்தில் இருந்து கேட்டுக் கொண்டு வந்த திலகவதி, “அவள்தான் கவர்னரம் மாவாய் விட்டாளே! இதையெல்லாம் எங்கே கவனிக்கப் போகிறாள்?” என்று சொன்னாள்.

இச்சொல்லின் கடுமை மங்கையைத் துடித்துப் பதைத்து எழுந்திருக்கச் செய்துவிட்டது. முந்தானையால் முகத்தைத் துடைத்துக்கொண்டு, “சாமான்களை எடுத்துக்கொண்டாயா, முத்தம்மா” என்று கேட்டுக் கொண்டே வந்தாள் அவள்.

“சோறு கறியெல்லாம் அப்படியே.....” என்று ஏதோ பதில் சொல்லி வந்த வேலைக்காரி மங்கையைப் பார்த்ததும், “என்னம்மா, மூஞ்செல்லாம் அழுதழுது வீங்கியிருக்கிறாப் போலிருக்கே?” என்று திகைப்புடன் கேட்டாள்.

“ஒன்றுமில்லையே!” என்று முகத்தைப் பரபரப்பாகத் துடைத்துக் கொண்டே மங்கை. சாமான்களை ஒழித்துப் போட உள்ளே போனாள்.

திலகவதியின் கடுகடுப்பான பேச்சையும், மங்கையின் அழுகை முகத்கையும் ஒப்பிட்டுப் பார்த்ததும் ஏதோ நிகழ்ந்திருக்கிறது என்று வேலைக்காரி ஊகித்துக் கொண்டாள். அதற்கு மேல் அவள் ஒன்றுங் கேட்காமல் தன் வேலைகளைக் கவனிக்கலானாள். ஆனால், அவள் மனம் மங்கையின் பரிதாப நிலைக்காகப் பச்சாதாபப் படலாயிற்று. பெரியம்மாளை விட சின்னம்மாளான இவள் எதையும் தனக்குத் தாராளமாய்க் கொடுக்கிறாள், எவ்விஷயத்திலும் சலுகை காட்டுகிறாள் என்பது மட்டுமல்ல: தன்னைப் போலவே இவளும் கைம் பெண்ணாக இருக்கிறாளே என்ற இரக்க எண்ணத்தால்தான் அவள் மங்கைமீது அநுதாபங் காட்டலானாள்.

அடுக்களையில் மங்கை சோற்றுப் பானையில் வெந்நீரை விட்டுக் கொண்டிருந்தாள். அச்சமயம் உள்ளே வந்த திலகவதி, “ஆமாம் சாதம் ஏன் அவ்வளவு மீந்து போச்சு? ஏன்? நீ சாப்பிடவில்லையா?......” என்று கேட்டாள்.

மங்கை ஒன்றும் பதில் சொல்லவில்லை.

“நான் கேட்கிறேன்; பேசாமல் இருக்கிறாயே?...”

அதற்கு மேலும் மெளனமாயிருக்கத் துணியாமல், ‘அப்படியே தூங்கிப் போய்விட்டேன், அக்கா!’ என மெல்லக் கூறினாள்.

திலகவதி தலையை அசைத்தவாறு, “தூங்கிவிட்டாயா? என்னண்டையா மறைக்கிறாய்? நீ என்ன செய்து கொண்டிருந்தாய் என்று எனக்குத் தெரியாதென்றா நினைக்கிறாய்?...” என்றாள்.

மங்கை தலையைக் குனிந்துகொண்டே, ஒழித்த சாமான்களை எடுத்துக் கொண்டு வேலைக்காரியிடம் கொடுக்க வெளியே போனாள்.

“உண்மையில் உறங்கி விட்டவளாயிருந்தால், எழுந்ததும் வந்து சாப்பிட்டிருக்கமாட்டாய்?...உம்; நீ செய்கிற அட மெல்லாம் செய்...” என்று திலகவதி கூறிய சொற்கள் அவளைப் பின்பற்றி வந்தன.

வேலைக்காரி வேலைகளையெல்லாம் செய்துவிட்டு மங்கை கொடுத்த சோறு, கறிகளை எடுத்துக் கொண்டு போனாள். மாலை மணி நான்கடிக்கவே, மங்கை அடுப்பில் காபி உலையை வைத்துவிட்டு, சிற்றுண்டி வகைகளைச் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யலானாள்.

மங்கை என்ன செய்கிறாள் என ஜாடையாகப் பார்க்க வந்த திலகவதி, “என்ன பலகாரம் செய்யப் போகிறாய், மங்கை?” என்று மெல்லக் கேட்டாள். அவள் குரலில் இரக்கம் தொனித்தது.

“என்ன, செய்யலாம், அக்கா!”

திலகவதியின் குரல்கேட்டுத் திரும்பிய மங்கை மரியாதையாகக் கேட்டாள்.

“இத்தனை நாள் என்னைக் கேட்டா செய்தாய்? ஏதோ செய்கிறதைச் செய்.”

இவ்விதங் கூறிவிட்டு, திலகவதி கூடத்துக்குப் போகலானாள். கேசரி செய்வதற்குக் கோதுமை ரவையை எடுத்து வைத்துக் கொண்டிருந்த மங்கை அவள் போவதைப் பார்த்து ‘அக்கா!’ என்று கூப்பிட்டாள்.

என்ன? எனத் திரும்பினாள் திலகவதி.

ஏதோ உணர்ச்சியின் உந்துதலால் கூப்பிட்டாளே யொழிய, அவள் என்ன எனக் கேட்டதும், வாயெழாமல் நிற்கலானாள் மங்கை.

“ஏதோ கூப்பிட்டாய்? என்ன என்று கேட்டால் பேசாமலிருக்கிறாயே, மங்கை!”

மங்கை, “ஒன்றுமில்லை, அக்கா” என்று தயக்கத்தோடு கூறியவள், பின், “ஊருக்குப் போய் வரலாம் என...” அவள் கூறி முடிக்கு முன்பே, “இப்போது திடீரென என்ன ஊருக்குப் போக வேண்டுமென்ற நினைவு?” எனக் கேட்ட திலகவதி இடையில் ஏதோ எண்ணமுண்டாகவே, “ஓ! நீ இருந்தாற்போலிருந்து ஊருக்குப் போக வேண்டுமென்று சொல்வதன் காரணம் இப்போது தெரிகிறது? பிகு பண்ணுகிறீஆய்? நீ இல்லாவிட்டால் இங்கு ஒரு காரியமும் நடக்காது என்று உன் நினைப்பு; இல்லையா? அதுதானே?” என்று கோபம் கொதித்து எழக் கேட்டாள்.

மங்கை தலையைக் கவிழ்த்துக் கொண்டாள்.

“ஊருக்குப் போக வேண்டுமென்றால், மகராஜியாப் போ நான் வேண்டாமென்று சொல்லவில்லை” என்று கூறிய திலகவதி, ‘நீ போகாதே, அம்மா! இரு’ என உன்னை வேண்டுவேன் என்று மட்டும் நினைக்காதே, மங்கை!......ஆமாம்.”

மங்கை கண்ணீர் சிந்தியவாறே காரியத்தைப் பார்க்கலானாள்.

“இன்னுமா அம்மா உங்களுடைய தகராறு முடியவில்லை” எனக் கேட்டுக்கொண்டே விசுவநாதன் வந்தான். வழக்கத்துக்கு மாறாக அவன் அன்று முன்னதாக வந்துவிட்டான்.

அவனைப் பின் தொடர்ந்தாற்போல் கோகிலாவும் கணேசனும் வந்தனர். கணேசன் வந்ததும் வராததுமாக “சித்தி! பட்சணம் கொடு முன்னே; எனக்குப் பசிக்குது” என்று கேட்டுக்கொண்டே மங்கையின் கால்களைக் கட்டிக் கொண்டான்.

கோகிலா திலகவதியின் முந்தானையைப் பிடித்து நெருடியவாறு, “என்ன அம்மா, நீ! சித்தியண்டை போய் சும்மா சண்டை பிடிக்கிறாய்?...” என்று மெதுவாகச் சொன்னாள்.

“அம்மாவுக்குக் குணம் கெட்டுப் போச்சு. கோகிலா! வயசாகிவிட்டதோ இல்லையோ! அதுதான் முசுடாகி...”

திலகவதிக்குத் தாங்கமுடியாத கோபம் உண்டாம் விட்டது. “ஆமாம்! எனக்கு வயசாகிவிட்டது. உங்க அப்பாவுக்கு வேறே கலியாணஞ் செய்து வைத்துவிடுங்கள், சிறுசாகப் பார்த்து. என்ன!”

விசுவநாதன் தாயின் கோபத்தைக் கண்டு அஞ்சினாயினும், தமாஷாகப் பேசி நிலைமையை மாற்றவேண்டும் எனக் கருதி, “அம்மா, காளியவதாரம் எடுத்துவிட்டார்கள். வா, கோகிலா! தம்பியை அழைத்துக்கொண்டு; போகலாம்...” என்று சிரித்துக்கொண்டே கூறினான்.

நீ“ங்களெல்லாம் என்னை மதிக்காமல் இப்படிப்பேசுவதால்தான், மங்கையும் மதிக்கமாட்டேன் என்கிறாள்” என்று அலுத்துக்கொண்டாள் திலகவதி.

“அம்மா பேசுகிறதைப் பேசிக்கொண்டே போகட்டும். ஏதாயினும் செய்திருந்தால் கொடுத்தனுப்புங்கள், சித்தி! கோகிலாவிடம்” என்று கூறியவாறு விசுவநாதன் அஷ் விடத்தைவிட்டுப் போனான்.

“நான் உங்களுடன்கூட வேலை செய்யட்டுமா, சித்தி!” என்று கேட்டுக்கொண்டே அருகே போனாள் கோகிலா.

“சித்தி, சித்தி என்று எதற்கெடுத்தாலும் அவளை நீங்கள் சுற்றிக்கொண்டு வருவதால்தான், மங்கை தலைக்குமேல் ஏறியிருக்கிறாள்” என்று எரிச்சலோடு கூறினாள் திலகவதி.

மங்கை, “நான் அப்படியொன்றும் இல்லை, அக்கா! நேற்று வந்து நாளே போகப் போகிறவள்; எனக்கென்ன அதிகாரம் வேண்டியிருக்கு...” என்று மெல்லக் கூறினாள்.

கோகிலா அவள் மோவாயைக் கனிவாகப் பற்றி, “நீங்கள் பேசாதிருங்கள், சித்தி அம்மாவுக்கு என்னவோ...”

திலகவதி மகளுடைய கரத்தை வெடுக்கெனப் பற்றி இழுத்து ஒரு பக்கம் தள்ளியவாறு, “எனக்கு என்னடி, வந்திருக்கு? எல்லோரும் சேர்ந்து என்னைப் பைத்தியக்காரி என நினைத்திருக்கிறீர்களா? என்ன! நான்தான் ஏதோ தப்பாக நடந்துகொள்கிற மாதிரி எண்ணி அந்தச் சிறுக்கிக்குப் பரிந்து பேசுகிறீர்கள். அவ்வளவு தூரம் சொக்குப்பொடி போட்டு அவள் உங்களையெல்லாம் மயக்கி வைத்திருக்கிறாள்...” என்று இரைந்தாள்.

அன்னையின் ஆர்ப்பாட்டத்தைக் கண்டு கோகிலா அசந்து போய்விட்டாள். ‘இதோ வெளி வருகிறேன் பார்’ என்பது போல் கண்ணீர் அவளுடைய விழிகளிலே மிதந்தது.

“எனக்காக நீங்களெல்லாம் ஏன் அம்மா, பேச்சு வாங்குகிறீர்கள்? துஷ்டியால் உங்கள் அனைவருக்கும் இந்தத் துன்பம் நீ போ, கோகிலா!” என்று இரக்கத்துடன் அவள் தோளைப், பற்றிச் சொல்லி அவ்விடத்தைவிட்டுப் போகச் செய்தான் மங்கை.

பின் அவள் அருவிபோல் வழிந்துவரும் கண்ணீரை முந்தானையால் துடைத்துக்கொண்டே, அடுக்களை நோக்கி அவசரமாகப் போனாள்.

ஆவேசம் வந்தவள்போல் மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க நின்றிருந்த திலகவதி, போகும் மங்கையைக் கண்ணால் சுட்டு எரித்து விடுபவள் மாதிரி வெறித்துப் பார்த்துவிட்டுத் திரும்பினாள். உரத்துச் சில வார்த்தைகள் பேசிய சிறிது நேரத்தில் அவள் மிகவும் களைத்துப் போய்விட்டாள். அவளுடைய முகமும் உடம்பும் குபிரென்று வியர்த்துவிட்டிருந்தது. ஆதலால் தன் சேலைத் தலைப்பால் முகத்தையும் கைகளையும் துடைத்துக் கொண்டே, சிரமத்தோடு கூடத்துக்குப் போய் உட்கார்ந்து, ‘அப்பாடா!’ என்று கூறியவாறு ஒரு தூணில் சாய்ந்துவிட்டாள்.

இதுவரை பக்கத்து அறை வாயிலண்டை இருந்து அன்னை செய்யும் தர்பாரைக் கவனித்துக் கொண்டிருந்த விசுவநாதன், அவள் அவ்வழியாக வருவது அறிந்ததும் அறைக்குள் விரைந்து போய் ஏதோ புத்தகத்தை எடுத்துப் புரட்டிக் கொண்டிருப்பதுபோல் பாவனை செய்யலானான்.

பிள்ளைகளுக்கெல்லாம் பட்சணம் கொடுப்பதற்கு முன் மங்கை திலகவதிக்குப் பலகாரத்தைக் கொண்டு போய்க் கொடுத்தாள். அவள் அலுத்துப் போயிருப்பதை நன்கு உணர்ந்த மங்கை காபியைக் கொடுக்காமல் ஹார்லிக்ஸைக் கலக்கித் தந்தாள். இவ்வளவு கனிகரத்துடன் அவள் கவனித்துச் செய்தும் திலகவதி, “வைத்துவிட்டுப் போ; இப்படி” என்று வேண்டா வெறுப்பாகச் சொன்னாள்.

“ஆறிவிடப் போகிறது. சூடாகச் சாப்பிடுங்கள்” எனப் பயபக்தியோடு மெல்லக் கூறினாள் மங்கை.

“எனக்குத் தெரியும், நீ செய்ய வேண்டியதைச் செய்து விட்டாயோ, இல்லையோ! போய் உன் வேலையைப் பார்” என்று வெடுவெடுப்புடன் சொன்னாள் திலகவதி.

மங்கை பேசாமல் அவ்விடத்தை விட்டு அகன்று பிள்ளைகளுடைய வேலையைக் கவனிக்கலானாள்.

படுசுட்டி கணேசன் முகத்தில்கூடக் கலகலப்பில்லை. எல்லோரும் மெளனமாக இருந்து சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு எழுந்து போயினர்.

குழாயில் கையைக் கழுவிக்கொண்டு திரும்பிய சிவகுமாரன், பற்றுப் பாத்திரங்களே எடுத்து வந்து அலம்ப வந்த மங்கையைப் பார்த்து, “சித்தி, மனதில் ஒன்றும் வைத்துக்கொண்டு வருந்தாதீர்கள். தம்பி சொன்னன் வந்ததும். காலையில் நடந்த பாரதம் சாயங்காலமும் தொடர்ந்து நடக்கும் என்று எண்ணவில்லை. அம்மாவுக்கு என்னவோ தெரியவில்லை. அவர்கள் எப்போதும் இப்படி இருந்ததில்லை......” என்று அனுதாபத்தோடு சொன்னான்.

“என் துரதிஷ்டம் அப்படி, சிவா இதற்கு யாரை நோவது!...” என்று மங்கை தழுதழுத்த குரலில் சொன்னான்.

“அதெல்லாம் ஒன்றுமில்லை சித்தி! இன்றைக்கு என்னமோ கிரஹணம் மாதிரி.....” என்று சொல்லிக் கொண்டு திரும்பினவன் ஏதோ நினைத்துக் கொண்டவனாய், “ஆமாம், சித்தி! இருந்தாற் போலிருந்து அம்மா ஏன் இப்படி எரிந்து விழுகிறார்கள்? நீங்கள் ஏதாயினும்......” என வர்த்தையை முடிக்காமலே கேட்டு நிறுத்தினான்.

இக்கேள்வி மங்கையின் உள்ளத்தில் சுருக்கெனத் தைத்தது. “நான் ஒன்றும் செய்யவில்லை. அம்மாதான்......” என்ன சொல்கிறோமென்று நினைக்காமல் படபடவெனப் பதில் சொன்னாள்.

“அப்படியா!” என மொழிந்தவாறே, யோசனையோடு நடந்து சென்றான் சிவகுமாரன்.

மாதா கோவில் மணி ஆறு அடிக்கலாயிற்று. நன்றாக இருட்டுவதற்குள்ளாகவே, மங்கை முதன் முதலாகப் பூசையறையில் தூங்காமணி விளக்குக்கு எண்ணெய் ஊற்றி நன்றாகத் தூண்டிவிட்டுப் பின் பக்கத்திலிருக்கும் விளக்குகளைப் பொருந்தினாள். பிள்ளையாருக்கும், நடராஜாவுக்கும் ஒரு கும்பிடு போட்டு விழுந்து வணங்கிவிட்டு எழுந்தாள். அவளுடைய நா ஏதோ உச்சரித்துக் கொண்டிருந்தது. கண்கள் பனித்திருந்தன. சில விநாடிகள் தியானத்துக்குப் பின் அவள் பூசையறையை விட்டு வெளியேறி மற்ற இடங்களில் மின்சார விளக்குகளை ஏற்றினாள். கோகிலாவும் அவளுக்கு உதவி செய்தாள். வெளியே விளையாடிக் கொண்டிருந்த கணேசன் விளக்கு வைத்ததுமே வீட்டுக்குள் வந்து புத்தகங்களை எடுத்து வைத்துக்கொண்டு படிக்கலானான். கோகிலாவும் மற்றொரு பக்கம் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்தாள்.

மங்கை அவசர அவசரமாகச் சமையல் வேலை செய்து கொண்டிருந்தாள். பொழுது போனது தெரியாமல் திலகவதி உன்மத்தம் பிடித்தவள்போல் உட்கார்ந்து கொண்டிருந்தாள். வெளியே எங்கே போவதாயிருந்தாலும் கோர்ட்டிலிருந்து நேராக வீட்டுக்கு வந்து விட்டே போகும் பழக்கமுடைய சதானந்தம் பிள்ளை அன்று வெகு நேரமாகியும் வரவில்லை.

6-45 மணிக்கு வக்கீல் குமாஸ்தா வந்தார். அவரைப் பார்த்துவிட்டு, “எங்கே ஐயாவைக்காணோம், நாயுடு? என்று கேட்டுக்கொண்டே எழுந்தாள் திலகவதி. அப்போ திருந்த மன நிலையில், குறித்த காலத்தில் கணவன் வராததற்கு அவள் மிக வருத்தப்பட்டுக் கொண்டிருந்தாள். அவர் இருந்தால் உரிமையோடு சண்டை போட்டிருக்கலாமே?” என்று நலிந்து போயிருந்த அவள் மனம் நினைத்தது. ஆகவே தான் வக்கீல் குமாஸ்தாவைக் கண்டதும், அவர் வராதது குறித்து ஆவலோடு விசாரிக்க எழுந்தாள்.

வக்கீல் குமாஸ்தா, வீட்டு எசமானியைக் கவனிக்கவில்லை. அப்போதுதான் உள்ளேயிருந்து வந்து கொண்டிருந்த மங்கையர்க்கரசியைப் பார்த்த அவர், ‘சின்னம்மா, ஐயா வர இன்னக்கு நேரமாகும். சாப்பாட்டுக்குத்தான் வருவாராம், காபி பலகாரம் எடுத்து வைத்துக்கொண்டு காத்திருக்க வேண்டாம் என்று சொல்லச் சொன்னார், கோனார் ஐயா கோர்ட்டண்டையே வந்து அழைச்சிக் கொண்டு போயிட்டார் நம்ம ஐயாவை’ என்று சொன்னர். “பொழுதோடவே வந்திருப்பேன், அம்மா! பஸ் கிடைக்க வில்லை. காத்துக் காத்துக் கால்கூடக் கடுத்தும் போச்சு.”

திலகவதி அப்படியே திகைத்து நின்றுவிட்டாள். ‘நான் கேட்டதைக்கூடக் காதில் வாங்காமல், அவளண்டையல்லவா போய்ச் சொல்லுகிறான் இந்தக் குமாஸ்தா! எல்லாருமல்லவா என்ன இப்படி அலட்சியப் படுத்தத் தொடங்கிவிட்டார்கள். என் வயிற்றில் பிறந்த பிள்ளைகளே என்னைச் சட்டை செய்யவில்லையென்றால், மற்றவர்கள் எங்கே மதிக்கப் போகிறார்கள்? எல்லாம் நான் கொடுத்த இடம.. எதற்கெடுத்தாலும் அவளை முன்னே கொண்டு வந்து நிறுத்திப் பேசியது எனக்கே தீம்பாகி விட்டது. உ.ம்... இருக்கட்டும்’ என்று நினைத்துக்கொண்டே எரிச்சலுடன் பின் பக்கம் போனாள்.

நிலைமையை எளிதில் ஊகித்துக்கொண்ட மங்கை, அம்மா இருந்தார்களே, பார்க்கவில்லையா? அவர்களிடம் சொல்லியிருக்கப் படாதா?” என்று சொல்வதற்குள் குமாஸ்தா திரும்பிப் போய்விட்டார்.

பந்தாடிவிட்டு வந்த விசுவநாதனும் சிவகுமாரனும் தத்தம் இடத்திலமர்ந்து படிக்கலாயினர்.

‘ஐயோ, இன்றைக்குப் பார்த்து அத்தான் காலதாமதமாக வரப் போகிறாரே! மணியாய் விட்டால்...?’ மங்கை நிலைகொள்ளாமல் கூடத்துக்கும் சமையல் உள்ளுக்குமாகப் போய் வந்து கொண்டிருந்தாள். அவள் சமையல் வேலையை முடித்து வெகு நேரமாயிற்று. பிள்ளைகளுக்கு முன் திலகவதியைச் சாப்பிடக் கூப்பிடலாம் என்றாலோ அவள் என்ன சொல்வாளோ என்ற பயத்தால் மங்கை மெளனமாயிருந்தாள்.

‘டாண்’ என்று மணியடித்து, கடியாரம் ஏழரையானதைக் காட்டியது. நிமிர்ந்து பார்த்த மங்கை திடீரென நினைத்துக் கொண்டு தன் உடைகளை யெல்லாம் எடுத்து மூட்டை கட்டலானாள்.

“என்ன மூட்டை கட்டுகிறீர்கள்? சித்தி! எங்காயினும் ஊர்ப் பிரயாணமா? என்ன!”

விசுவநாதனின் கலகலவென்ற சிரிப்புப் பேச்சு மங்கையை விதிர்ப்புற வைத்தது. பின் தன்னைச் சுதாரித்துக் கொண்டு, “ஆமாம்: விசுவம்! ஊருக்குத்தான்......” என்று சிரிப்பைச் சிரமப்பட்டு வருவித்துக்கொண்டு சொன்னாள்.

“என்ன விளையாடுகிறீர்களா? சித்தி!” என்று திகைப்புடன் கேட்ட விசுவநாதன், “வண்ணானுக்குப் போட அழுக்குத் துணிகளே மூட்டை கட்டுவது எனக்குத் தெரியாதா? நான் வேடிக்கைக்காக இப்படிக் கேட்டால், உடனே ஒரே போடு போடுகிறீர்களே!” என்று தன்னைச் சமாளித்துக் கொண்டு சொன்னான்.

“இல்லை, விசுவம்! நான் ஊருக்குத்தான் பயணப்படுகிறேன். மூட்டையைப் பார்; அழுக்குத் துணிகளா இருக்கிதென்று. உன்னிடம்கூட விளையாடுவேனா....”

“நீங்க சொல்வது உண்மையா? சித்தி......”

“நிசமாகத்தான் சொல்கிறேன், விசுவம்.”

“இப்ப என்ன ஊருக்கு? அம்மா இன்றைக்கு ஏதோ சத்தம் போட்டார்களே; அதற்காகவா கோபித்துக்கொண்டு போகிறீர்கள், சித்தி?”

“சே! அதற்கில்லை; விசுவம். முன்னமே ஊருக்குப் போக வேண்டுமென்று தீர்மானித்தேன். போய்விட்டு......”

“என்னமோ, சித்தி! நீங்க இந்தச் சமயத்தில் போவது, அவ்வளவு நன்றாயில்லை...”

தற்செயலாக அப்பக்கம் வந்த திலகவதி இவர்களுடைய உரையாடலே ஒற்றுக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“நீ வேறு விதமாக நினைக்காதே, விசுவம்! சாதாரணமாகத்தான்.....”

“என்ன, மகனும், சித்தியுமாக மந்திராலோசனையில் ஆழ்ந்திருக்கிருப் போலிருக்கு? அதுதான் கூப்பிடக் கூப்பிட மங்கைக்குக் காது கேட்கவில்லை......” என்று புன்சிரிப்புடன் கூறிக்கொண்டே அங்கு வந்தார் சதானந்தம் பிள்ளை. அவரைப் பின் தொடர்ந்தாற் போல் வந்த கோகிலா, “உங்களுக்குச் சங்கதி தெரியாதா, அப்பா......ஊம், சித்தியிடத்திலே அம்......”

விசுவநாதன் உதட்டின்மீது விரலை வைத்து அவ்விஷயத்தைச் சொல்ல வேண்டாம் என்று குறிப்புக் காட்டவே, கோகிலா அப்படியே பேச்சை நிறுத்திவிட்டாள்.

காலையில் நிகழ்ந்த சம்பவத்தை, வெளியே போய் எத்தனையோ, விவகாரங்களைக் கவனித்தும் மறவாதிருந்த பிள்ளையவர்கள் வந்துமே மங்கை மகிழ்ச்சியாய் இருக்கிறாளா? வருத்தமாயிருக்கிறாளா? என்று கவனிக்கலானார். அக்கவனத்தில் அவருக்குக் கோகிலாவின் பேச்சும் காதில் விழவில்லை. விசுவநாதனின் சைசையும் தெரியவில்லை.

“ஆமாம்; இது என்ன மூட்டை முடிச்சு? மங்கை......” என்று துணி மூட்டையை வியப்புடன் பார்த்தவாறே வினவினார் பிள்ளையவர்கள்.

மங்கையின் ஊர்ப் பிரயாணத்தை எப்படியும் நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தால் உந்தப்பட்ட விசுவநாதன், “சித்தி ஊருக்குப் போகப் போகிருர்களாம்......அப்பா” என்று சடக்கெனச் சொன்னான்.

இதைக் கேட்டதுமே பிள்ளையவர்களின் முகம் மாறிவிட்டது. “என்ன? திடீரென ஊர்ப் பிரயாணம், மங்கை?” எனக் கேட்டவர் சில விநாடி கழித்து, ஊரிலிருந்து கடிதம் ஏதாயினும் வந்திருக்கிறதா என்ன? உன்னை வரச் சொல்லி அண்ணன் அல்லது அம்மா.....” என்று யோசனையோடு கேட்டார்.

இதுவரை மறைவிலிருந்த திலகவதிக்கு அதற்கு மேல் இருக்க முடியவில்லை.

“அண்ணன் அன்பாக அழைக்கக்கூடிய பவிசு இருந்தால் இவளைப் பிடிக்கவே முடியாது. ஆட்டுக்கு வாலை அளந்து தானே வைத்திருக்கிறான் ஆண்டவன்” என முழக்கஞ் செய்து கொண்டு இவர்கள் முன் வந்தாள்.

திலகத்தைக் கண்டதுமே எல்லோருக்கும் கிடுகிடுத்து விட்டது. இவளுடைய சுடு சொல்லைக் கேட்டு மங்கை துடி துடித்துவிட்டாள். மனங் குமுறி யழலானாள்.

திலகவதி கணவனை விரைப்பாக நோக்கி, “உங்களால் தான் இவ்வளவு தூரத்துக்கு வந்திருக்கிறது. இங்கு தன்னால் தான் எல்லாம் நடக்கிறதென்று அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள். தான் போய்விட்டால் எல்லாமே, அஸ்தமித்துப் போய்விடும் என்பது இவள் எண்ணம். அதனால்தான் ஊருக்குப் போகவேண்டும் என ஜபர்தஸ்து பண்ணுகிறாள். ‘மங்கை, போகாதே, மங்கை’ என்று நான் மண்டியிட்டுக் கேட்பேன் என அவள் மனப்பால் குடிக்கிறாள். இவள் ஜம்பம் இந்தத் திலகத்திடம் நடக்காது, தெரியுமா?”

சதானந்தம் பிள்ளை, “திலகம், இதென்ன! ஒன்றுமில்லாததற்கு இப்படி களேபரம் பண்ணி ஊரை இரண்டாக்குகிறாய் மங்கை உனக்கு வைரியா, என்ன?....” என்று உணர்ச்சியை அடக்கமாட்டாமல் கேட்டார்.

திலகவதி, “அவள்தான் எனக்கு வைரியாகி எத்தனையோ நாளாகிவிட்டதே! இனிமேலா ஆக வேண்டும்? உங்களுக்கு வேண்டுமானல் உறவாயிருக்கட்டும், நீங்கள் அவளுடன் குலாவுங்கள்; உங்கள் பிள்ளைகள் குலாவட்டும். நான் வேண்டாம் என்று சொல்லவில்லை....?”

“திலகம், நீ பேசாமலிருக்க மாட்டாய்... ...” என்று இரைந்தார் பிள்ளையவர்கள். அவர் பொறுமையை இழந்து விட்டார்.

“அவள் எனக்கு வைரியாகி எத்தனையோ நாளாகி விட்டதே!” என்ற வார்த்தையைக் கேட்டதுமே மங்கை, “ஐயோ!” என்று ஆற்றாமையால் அலறினாள். விஷயம் வெகு தூரத்துக்குப் போய் விட்டது. அக்கா தன் மீது என்ன காரணத்தாலோ அளவில்லாத அசூயையும் வெறுப்பும் கொண்டுவிட்டாள். இனி ஒரு கணம் தங்குவது மரியாதையல்ல” என்று தீர்மானித்த அவள் அக்கணமே புறப்படக் கருதி, “அத்தான், அக்காவைக் கோபிக்காதீர்கள். அவர்கள்மீது எவ்விதத் தப்புமில்லை. என் மீதுதான் தவறு. என்னால் உங்களுக்குள் சண்டை வேண்டாம் நான் போகிறேன். எனக்கு விடை கொடுங்கள்.... ” என்று கூறிய வாறே மூட்டையைக் கையில் எடுத்தாள்.

“எங்கே போகப் போகிறாய்?” எனப் பதற்றத்துடன் கேட்டார் பிள்ளையவர்கள்.

“ஊருக்குத்தான், அத்தான்.”

“அவசரப்படாதீர்கள், சித்தி!” என்று கூறித் தடுத்தான் விசுவம். "போகாதீர்கள், சித்தி" என்று அழுது கொண்டே கூறிய கோகிலா மங்கையின் கையிலிருந்த மூட்டையைத் தான் வாங்கிக் கொள்ள முயன்றாள்.

"என்னை இப்போது தடுக்காதீர்கள்......." என்று விசுவத்தையும், கோகிலாவையும் விநயமாகக் கேட்டுக் கொண்டாள் மங்கை.

"அட! இவர்கள் வேண்டுவதும், அவள் பிகு பண்ணுவதும் பார்க்க வேடிக்கையாகத்தான் இருக்கிறது. வீட்டு இளக்காரம் வண்ணானுக்குத்தான் தெரியும் என்ற கதை போல இந்த வீட்டு எசமானின் ஏமாளித்தனத்தையறிந்து சிறுக்கி ஏய்க்கிறாள்" என்று ஏளனமாகப் பேசிய திலகவதி, "போயேன் கழுதை! உன்னை யார் இரு, இரு என்கிறது. நாடகம் நடிக்கிறாயே!...." என வெறுப்போடு சொன்னாள்.

"போகிறேன், அக்கா! நீ சொன்னாலும் நான் இனி இருக்கமாட்டேன்" என்றாள் மங்கை.

"இப்போது என்ன அவசரம்? நாளை, அல்லது நாளை மறுநாள் போனால் போகிறது" என்றார் பிள்ளையவர்கள்.

"அத்தான், உங்கள் பேச்சை மீறி நடப்பதாக எண்ணக் கூடாது. நான் அவசியம் போய்த்தான் ஆகவேண்டும்-" என்று சொன்னாள் மங்கை. அவள் பேச்சில் கண்டிப்பு தொனித்தது.

தன்னை ஏக்கத்துடன் பார்த்த பிள்ளைகளைப் பார்த்து, "சீக்கிரம் திரும்பி வந்துவிடுவேன், கோகிலா!" என்று ஆறுதல் கூறினாள்.

"உன்னை யாரும் திரும்பி வரும்படி வேண்டவில்லை. நீ வர வேண்டாம்" என்று கர்ஜித்தாள் திலகவதி.

"வரமாட்டேன்; அக்கா! நீங்க பயப்படாதீர்கள்; குழந்தைகளை ஆறுதல் படுத்த அப்படிச் சொன்னேனே யொழிய, மறுபடியும் இங்கு வரும் எண்ணம் எனக்குக் கிஞ்சித்தும் கிடையாது" என்று கூறியவாறு மூட்டையுடன் நடக்கலானாள் மங்கை.

மற்றவர்களுக்கு என்ன செய்வதென்றே தோன்றவில்லை. அவள் வெளியே போசையில், "எங்கே போகிறாய், சித்தி!" என்று கேட்டுக் கொண்டே கணேசன் ஓடிவந்து கையைப் பிடித்தான். குழந்தை அவனுக்கு அங்கு நிகழ்ந்த பிரளயம்;தெரியவே தெரியாது. சிவகுமாரன் மட்டும் சத்தத்தைக் கேட்டு வந்து வருத்தத்துடன் வழியில் நின்றிருந்தான்.

"இரு கண்ணு ; வருகிறேன்" என்று கூறி மங்கை அவனைக் கட்டி உச்சி மோந்து விட்டுப் போகலானாள். ஒன்றும் தோன்றாமல் அவன் திகைத்து நின்று விட்டான்.

மங்கை வாயிற்படியை விட்டு இறங்கிய பின்தான் பிள்ளையவர்கள் திடுக்கிட்டார். அவர் விசுவத்தை அருகழைத்து ஏதோ சொன்னார். பணப்பையிலிருந்து. நாலைந்து நோட்டுக்களை எடுத்துக் கொடுத்தார்.

"இரு, சித்தி வருகிறேன்" என்று விசுவநாதன் ஓடினான்.

"நானே போய்விடுவேன், நீ இரு, விசுவம்!"

திலகவதி கணவனை ஒருவிதமாகப் பார்த்து விட்டுக் கழுத்தைச் சொடுக்கிக் கொண்டு உள்ளே விரைப்பாகப் போனாள்.

தந்தையும், மகளும், மசனும் இருளில் போய்க் கொண்டிருக்கும் மங்கையை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். மங்கை போவதையும், மற்றவர்கள் வருத்தத்தையும் கவனித்த கணேசன், திடீரென ஏதோ புரிந்து கொண்டவன் போல, "சித்தி!" எனக் கதறியவாறு ஓட முயன்றான். சிவகுமாரன் அவனைப் பிடித்துத் தூக்கிக் கொண்டான்.