உள்ளடக்கத்துக்குச் செல்

நல்ல தோழிதான்/வாழ்க்கை

விக்கிமூலம் இலிருந்து

வாழ்க்கை



வெயில் தீக்கங்குகளைச் சொரிவதுபோல், அனலைப் பரப்பிக் கொண்டிருந்தது. ஈவு இரக்கம் இல்லாதவர்களின் உள்ளம் போல் வறண்டு கிடந்தது நிலம்.

உழைப்பை நம்பி வாழ்பவர்கள் அப்போதும் அரும்பாடுபட்டுக் கொண்டுதான் இருந்தார்கள்.

ஒரு கிழவன் மண்ணைக் கொத்திக் கிளறி என்னவோ செய்து கொண்டிருந்தான்.

அவனுக்குத் துணை அவன் மனைவி கிழவி.

இரண்டு பேருக்கும் உயிர் வாழ்வதற்கு உரம் அளித்தது அவர்கள் உழைப்பு. அதற்கு ஆதாரம் கொஞ்சம் நிலம்.

கிழவன் மண்வெட்டியால் கொத்தி மண்ணைச் சரி செய்து பத்தி பிடித்தால், மண்ணில் கலந்து கிடக்கும் கற்கள், கட்டிகள் முதலிய வேண்டாத பொருட்களை அள்ளிக் கூடையில் சேர்த்து, சுமந்து சென்று அப்புறப்படுத்துவாள் கிழவி. அவன் விதைகளைத் தெளிப்பான்: அவள் தண்ணீர் இறைப்பாள். உழைப்பால் மெலிந்த கிழவனுக்கு உற்றதுணையாக உடனிருந்து ஊக்கம் கொடுத்து வந்தாள் அந்தக் கிழவி.

அவன் பெயர் யாருக்கும் தெரியாது. ‘ஏ கிழவா!’ என்றே எல்லோரும் அவனைக் கூப்பிடுவார்கள். அவளுக்கும் தனியாக ஒரு பெயர் இல்லாமலா இருக்கும்? எனினும் ‘கிழவி’ என்றுதான் அவள் அழைக்கப் பட்டாள்.

அவனது வயது.., அவனுக்கே தெரியாது. அவள் பிறந்த வருடத்தையும் நாளையும் எவரும் குறித்து வைத்திருக்கவுமில்லை. இரண்டு பேருக்கும் வயது அதிகமாகத்தான் இருக்கும். எவ்வளவு என்று கணக்கிட அவர்களும் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை: பிறரும் கவலைப்பட்டதில்லை,

அவர்கள் அறிந்தது உழைப்பு ஒன்றே. நேற்றுப் போல் இன்று, இன்றுபோல் நாளை. என்றும் ஒரே மாதிரித்தான். உழைப்பிலே உதயமாகி, உழைப்போடு அஸ்தமனமாகும்.

அவர்கள் தனிமைப்பட்டவர்கள். கிழவன் ஆகிவிட்ட அந்த மனிதனுக்குக் கிழவி ஆகிவிட்ட ஒருத்தி தான் துனை. இருவருக்கும் அவர்களது உழைப்பே வாழ்விக்கும் சக்தியாக இருந்தது. உழைக்கவும், உயிர் வாழவும் அவர்கள் மண்ணை நம்பி இருந்தார்கள்.

வெயில் செஞ்சூலம் பாய்ச்சும் கொடிய நாட்களிலும் அவர்கள் உழைத்தார்கள். மழை நாட்களிலும் பாடுபட்டார்கள். மழை கொட்டுகிறபோது நனைந்தும், ஓடிப் பதுங்கியும், மழை நின்றதும் மீண்டும் மண்ணில் இறங்கியும் உழைத்தார்கள். உழைக்காமல் இருக்க முடியாது அவர்களால். பாடுபட்டால்தான் அரை வயிற்றுக் கஞ்சியாவது கிடைக்கும்.

ஒரு சமயம் மழையில் நனைந்தபடி குடிசைக்குத் திரும்பினான் கிழவன். ஜூரம் அவனைப் பற்றிக் கொண்டது. இரண்டு மூன்று நாட்கள் விடாது அடை மழை பெய்தது. அவனுக்குத் துணையாகக் கிழவியும், இருவருக்கும் துணையாகப் பட்டினியும் என்ற நிலையே நீடித்தது. தந்த நேரங்கள் அவ்விருவரையும் சித்திரவதை செய்யும். குளிர் நிறைந்த அதிகாலை வேளைகள், காலத்தாலும் உழைப்பாலும் மெலிந்துவிட்ட அவ்வுடல்களை வெகுவாகச் சோதிக்கும். அத்தகைய நாட்களில் பல தினங்கள் அவர்களால் உழைக்க முடியாமல் போகும். உழைக்க ஆசை இருக்கும் உள்ளத்தில், ஆனால் உடலில் தெம்பு இருக்காது. அப்போதெல்லாம் அவர்கள் பட்டினி கிடக்க வேண்டிய அவசியமே ஏற்படும்.

அண்டை அயலார்கள் அபூர்வமாக எப்பொழுதாவது உதவி செய்வார்கள். ஒரு சில காசுகள்; ஒரு வேளை உணவு. சில சமயம் எப்பொழுது ரசம் அல்லது குழம்பு என்று உதவலாம். வாழ்க்கைக்கு தீயில் புடம் போடப்படுகிற சாதாரண மக்கள் வேறு என்ன உதவியைச் செய்யமுடியும்?

இவ்வித மனிதர்களுக்கு இயற்கை அணையாக நின்று உதவிபுரிய வேண்டும் எனும் அவசியமில்லையே. மேலும், இயற்கை இஷ்டம் போல் புரிந்து மகிழும் குறும்புத்தனச் சிறுவன் மாதிரி நடந்து கொள்கிறதே! பாடுகிறவர்களது உழைப்பின் பலன் எல்லாம் பாழாகும்படி—அவர்கள் நெஞ்சில் நெருப்பில் மூண்டெழவும், வயிற்றில் தீராத எரிச்சல் குடிபுகவும்—வழி செய்வதுக் இயற்கையின் போக்கிரித்தனமேயன்றோ? வேண்டாத பொழுது கடும் மழையைக் கொட்டியும் தவைப்படுகிற போது சுட்டெரிக்கும் வெயில் வீசியும், அவ்வப்போது புழுதிப் புயலையும் குறைக் காற்றையும் அனுப்பியும் வெறியாட்டம் போடவில்லையா? அதன் கூத்து மனிதருக்கு வேதனையாக முடிகிறது.

கிழவனும், கிழவியும் உயிரைக் கொடுத்து உழைத்தார்கள். மண்ணை நம்பி விதை விதைத்தார்கள்.

பயிர் வளர்ந்து பலன் தருவதற்கு அவசியமான மழை வரத்தான் செய்யும் என்று நம்பிக்கையோடு வானத்தைப் பார்த்தபடி இருந்தார்கள்.

வானம் பொய்த்தது. வறட்சி பரவியது. பயிரிட்டவர்களின் நம்பிக்கை கருகியது. அவர்கள் வாழ்வில் ஒட்டிக்கொண்டிருந்த கொஞ்ச நஞ்சப் பசுமைகூடத் தீய்ந்தது.

கிழவனும், கிழவியும் கடும் வெயிலில் வதங்கினார்கள். வாழ்க்கைச் சூட்டினால் உருக்கி எடுக்கப்பட்டார்கள். அவர்கள் வயிறு ஒட்டியது. உடல் வெறும் எலும்புக்கூடு ஆயிற்று. சாப்பாட்டுக்கு வழியே இல்லை. எத்தனை காலத்துக்குத்தான் கடன் வாங்கிக் கடன் வாங்கி நாளோட்ட இயலும்? இல்லை. எவ்வளவு நாட்களுக்குத்தான் அண்டை அயலார் அவர்களுக்குக் கடனுக்குமேல் கடன் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்? அப்படிக் கடன் கேட்கிறபோதெல்லாம் தாராளமாக இவர்களுக்குக் கொடுத்துக்கொண்டே இருப்பதற்கு அவர்களிடம்தான் என்ன வசதி உண்டு?

ஆகவே, பட்டினி நிலைமைதான். இந்தப் பயங்கரமான அனுபவத்திலும் கிழவனுக்குத் துணை கிழவிதான். அவளுக்குத் துணை அவனே.

மழை வரும்; இன்று பெய்யும் என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்பதும், நாள் முடிவில் ஏமாறுவதும், பெருமூச்சு விட்டுப் புலம்புவதும் அவர்களுடைய நித்திய நியதி ஆகிவிட்டது.

அன்றும் அதே நிலைதான்.

மழை வரும் என்று எண்ணினார்கள். வரவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள் வராதா என்று ஏங்கினார்கள்.

மனிதர்கள் எதிர்பாரக்கிறபடி பரஸ்பரம்ம் மனிதர்களே நடந்து கொள்வதில்லையே! இயற்கைதானா மனிதர் எண்ணுகிறபடி-எதிர் பார்க்கிறபடி- ஆசைப்படுகிறபடி நடந்து சகாயம் பண்ணப்போகிறது.

வெயில்தான் வறட்சியைப் படுவறட்சியாக்கிக் கொண்டிருந்தது.

கிழவன் பெருமூச்செறிந்தான். கிழவி தலைமீது கைவைத்தாள். அவர்கள் எப்படி வாழ்க்கையைக் கழிப்பது? பெரும் பகுதி கழிந்துபோன வாழ்க்கைதான்-இருப்பது வாழ்வின் எஞ்சிய துணுக்குத்தான். என்றாலும், உயிர் இருக்கிறவரை, உடலின் உணர்வுகள் அவியாது இருக்கிற வரை, அவஸ்தைகளும் உண்டு தானே? அவற்றின் தேவைகளைக் கவனிக்க வேண்டிய அவசியமும் அவர்களுக்கு உண்டு அல்லவா? அவற்றைச் சரி செய்வதற்குப் போதிய வலு இல்லாது போவின் ஈடு கொடுத்துத் தாங்கிக் கொள்வதற்கு வேண்டிய தெம்பும் இல்லையென்றால் -

ஒவ்வோரு கணமும் ஒரு பிரச்னையாய், பயமாய், பூதமாய் மீரட்டுவதை எப்படித் தடுக்க முடியும்?

அவர்கள் திணறினார்கள். செயலற்றுத் திகைத்தார்கள். முனகி, முணுமுணுத்து, என்னென்னவோ பேசினார்கள். துணிந்து திட்டமிட்டார்கள்.

திட்டமிட்டபடி செயலாற்ற இயலுமா என்ற ஐயம் கிழவனுக்கு எழுந்தது. கிழவன் கிழவியைப் பார்த்தான். அவள் அவன் முகத்தையே கூர்ந்து கவனித்தாள்.

“இந்த வயசு காலத்திலே நமக்கு ஏன் தான் இந்தத் துயரமெல்லாம் ஏற்பட்டிருக்கிறதோ?” என்று முணுமுணுத்தான் கிழவன்.

“எல்லாம் விதிப்படிதான் நடக்கும். அதை எழுதினவன் அழிச்செழுத மாட்டான்” என்றாள் கிழவி.

இரண்டு பேரும் சேர்ந்து குடிசைக்குள் போனார்கள். தங்களுக்குப் பழக்கமான பொருட்களை, இடத்தை, சூழ்நிலையை எல்லாம் வேதனையோடு உற்று நோக்கினார்கள். ஒருவர் முகத்தை ஒருவர் வெகு நேரம் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.

அவர்களுடைய கைகள் ஒரு சட்டியிலிருந்த தண்ணீரில் ஒரு பொடியைக் கொட்டின. தாராளமாகவே கொட்டின. கலக்கின. அவன் ஈயத்தம்ளரில் அவளுக்கு அதைக் கொடுத்தான்; சட்டியோடு தான் குடித்தான்.

வாழ்க்கையில் வேறு துணை அற்றுப்போன அவ்விருவருக்கும் முடிவில் ‘எலிப் பாஷாணம்’ துணையாக வாய்த்தது.

‘எழில்’ (தூத்துக்குடி) நவம்பர் 1972

"https://ta.wikisource.org/w/index.php?title=நல்ல_தோழிதான்/வாழ்க்கை&oldid=1382530" இலிருந்து மீள்விக்கப்பட்டது