கோயில் மணி/நன்றிக் கடன்
நன்றிக் கடன்
கூண்டில் நிற்கும் கைதி குனிந்தபடியே பதில் சொன்னன். மாஜிஸ்டிரேட் அவனைக் கேள்வி கேட்கும் போது வார்த்தைகளை விழுங்கிக்கொண்டே பேசினன். அவன் அழுகிறான் என்றும் தோன்றியது. “நான் திருடியது உண்மைதான். எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் சரி.” இதைச் சொல்வதற்குள் அவன் குரல் தழுதழுத்தது.
“திருடுவது தவறு என்று தெரிந்திருந்தும் திருடலாமா?” என்று மாஜிஸ்டிரேட் கேட்டார்.
“தவறுதான்; தெரிந்திருந்தும் செய்தது பெரிய தவறு. தண்டனை கொடுங்கள்.” —இப்போது அவன் அழுதே விட்டான். அவன் தலையைக் குனிந்து கொண்டே பேசினன். அருகில் இருந்த போலீஸ்காரர், “தலை நிமிர்ந்து ஐயாவைப் பார்த்துப் பேசடா” என்று மிரட்டியும் நிமிரவில்லை.
சாட்சி விசாரணைகள் ஆனபிறகு குற்றவாளியை மறுபடியும் கூண்டில் நிறுத்தினார்கள். அவன் அழுதபடியே இருந்தான். கைதியின் பெயர் நாகராஜன். அவன் இன்னும் நிமிர்ந்து மாஜிஸ்டிரேட்டைப் பார்க்காமலே கூண்டில் நின்றான்.
“ஏன் அப்பா, நிமிர்ந்து பார்த்துப் பேசு” என்று மாஜிஸ்டிரேட் சொன்னர். அவன் நிமிரவில்லை. போலீஸ்காரர் கைதியின் பக்கத்தில் சென்று, “நிமிர்ந்து பேசு. இல்லாவிட்டால்...” என்று மிரட்டினவுடனே அவன் ஒரு கணம் தலை நிமிர்ந்தான். உடனே குனிந்து கொண்டான்.
அந்த ஒரு கணந்தான் மாஜிஸ்டிரேட் அந்த முகத்தைப் பார்த்தார். அவரே ஐந்து நிமிஷம் தடுமாறிப் போனார், பிறகு விசாரணையை முடித்துக் கொண்டார்.
அடுத்த நாள் தீர்ப்புக் கொடுத்தார், மாஜிஸ்டிரேட் “குற்றவாளி முதல் முறையாகத் திருடியிருக்கிறானென்று தோன்றுகிறது. திருடுவது தவறு என்பதை உணர்ந்து வருத்தப்படுகிறான், பத்து நாள் ரிமாண்டில் இருந்திருக்கிறான். இந்தத் தண்டனையே போதும் என்று நினைக்கிறேன். இப்போது இவனுக்கு இருநூறு ரூபாய் அபராதம் விதிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, “மற்ற வழக்குகளையெல்லாம் நாளை ஒத்திவைக்கிறேன்” என்று கூறி, விரைவாக வீட்டுக்குப் புறப்பட்டு விட்டார்: போகும்போது போலீஸ் இன்ஸ்பெக்டரைத் தனியே அழைத்து ஏதோ சொன்னர்.
மாலை ஐந்து மணிக்கு மாஜிஸ்டிரேட் தம் வீட்டில் யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். மணி ஐந்தரை ஆயிற்று. இன்ஸ்பெக்டர் வந்தார்: “அந்த மனிதன் இங்கே வரமாட்டேன் என்கிறான் வருவதை விட உயிரை விட்டுவிடுகிறேன் என்கிறான்” என்றார்.
“அபராதத்தைக் கட்டியாகி விட்டதா?”
“நீங்கள் பணத்தைத் தந்தவுடனே ஒரு கான்ஸ்டபிளிடம் கொடுத்துக் கட்டச் சொல்லிவிட்டேன். அந்த ஆளையும் ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று நீராடச் செய்து, புது வேட்டியையும் கொடுத்தேன். அவன் லேசில் வாங்கிக் கொள்ளவில்லை. ஒரு விதமாகக் கட்டிக் கொள்ளச் சொல்லிச் சாப்பாடும் போடச் சொன்னேன்.”“அதட்டி மிரட்ட வில்லையே?”
“நீங்கள் சொல்லியிருக்கும்போது நான் அப்படிச் செய்வேன? ஏதோ சந்தர்ப்ப பேதத்தால் இந்தக் காரியம் செய்திருக்கிறான். தாங்கள் அவனுக்காக அபராதத்தைச் செலுத்தியபோதே அவன் இயல்பாகவே பொல்லாதவன் அல்ல என்பதைத் தெரிந்து கொண்டேன்.”
“இப்போது அவன் எங்கே இருக்கிறான்?”
“ஓட்டலில் ஓர் அறையில் படுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு வந்தேன். தாங்கள் பார்க்கவேண்டும் என்று சொன்னதாகவும், தாங்களே அவனுக்காக அபராதம் செலுத்திவிட்டதாகவும் சொன்னேன். அவன் கேட்டு முதலில் அழுதான். பிறகு அசட்டுச் சிரிப்புச் சிரித்தான்.”
“சரி, சரி; நான் அங்கே வருகிறேன்” என்று மாஜிஸ்டிரேட் புறப்பட்டார்.
ஹோட்டலுக்குப் போனவுடன் ஹோட்டல்காரர் மரியாதையுடன் வரவேற்றார்.
“15-ஆம் நம்பர் அறைக்காரர் டிபன் சாப்பிட்டாரா?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.
“அவர் சாப்பாடு சாப்பிட்டதோடு சரி. நீங்கள் இங்கிருந்து போன அரை மணியில் இங்கே வந்து சாவியைத் தந்தார். நான் அவசரமாகப் போகவேண்டியிருக்கிறது. இன்ஸ்பெக்டர் வந்தால் இந்தக் கடிதத்தை அவரிடம் கொடுங்கள் என்று சொல்லிப் போய்விட்டார்.”
கடிதத்தை வாங்கினார் இன்ஸ்பெக்டர். உறையின் மேல் இன்ஸ்பெக்டர் விலாசம் இருந்தது. அதைப் பிரித்துப் பார்த்தபோது, உள்ளே சிறு துணுக்கு ஒன்றும் மற்றோர் உறையும் இருந்தன. துணுக்கில், “இன்ஸ்பெக்டர் அவர்களுக்கு, வணக்கம். இதனுடன் உள்ள கடிதத்தை மாஜிஸ்டிரேட் ஐயா அவர்களிடம் கொடுக்க வேண்டும்” என்று இருந்தது. மாஜிஸ்டிரேட் வாங்கி உறையைக் கிழித்து உள் இருந்ததைப் படித்தார்.
“புண்ணிய மூர்த்தியாகிய திரு நடராஜன் அவர்களுக்கு அநேக கோடி நமஸ்காரங்கள். மகாபாவியாகிய நான் தங்கள் பெயரைச் சொல்லி எழுதுவதற்குத் தகுதியற்றவன். ஆனாலும் அதை மந்திரத்தைப்போல உச்சரித்துக் கொண்டு எழுதுகிறேன். எனக்காக அபராதம் செலுத்தினதை அறிந்தேன். இதைத் திருப்பிச் செலுத்துவதற்காகவாவது ஆண்டவன் என்னை உயிரோடு வைத்திருப்பான் என்று எண்ணுகிறேன். இதைத் தாங்கள் செலுத்தாமல் இருந்திருந்தால் நான் உயிரை விட்டிருப்பேன். தங்களுக்குக் கடன்படும்படி செய்துவிட்டீர்கள். தங்கள் முகத்தில் ஒரு கணம் விழிப்பதற்குள் என் உயிர் ஒரு முறை செத்துப் பிறந்தது. ஆனால் தங்கள் முகத்தைப் பார்த்தபிறகு, இனி மானமாகப் பிழைக்கவேண்டும் என்ற உறுதி வந்து விட்டது. தாங்கள் தீர்ப்பில் சொன்னபடி இதுதான் நான் செய்த முதல் குற்றம். இதுவே முடிவான குற்றமாக இருக்கத் தாங்கள் ஆசீர் வாதம் செய்யுங்கள்; தெய்வத்தினிடம் எனக்காக மன்றாடுங்கள். அன்று — அதை நினைக்கவோ, நினைப்பூட்டவோ எனக்குத் தகுதியில்லை; ஆனாலும் மனம் கேட்கமாட்டேனென்கிறது — அன்று, என் சிநேகிதன் நடராஜன் நெற்றித். திருநீற்றைப் பரிகாசம் பண்ணினேன். இன்று அந்தக் காட்சியே என்னைத் திருத்தி இருக்கிறது. இன்று முதல் எனக்கு வேறு தெய்வம் இல்லை. தாங்களே தெய்வம். தங்களைப் பார்க்காமல் போவதற்கு மன்னிக்க வேண்டும். பார்ப்பதற்கு வேண்டிய தகுதியையும் தைரியத்தையும் சேகரித்துக்கொண்டு என் தெய்வத்தை வந்து தரிசித்துக் கொள்வேன். — நாகராஜன்.”
கடிதத்தைப் படித்தார் மாஜிஸ்டிரேட் நடராஜன். அவர் கண்ணில் நீர் வழிந்தது; “வாருங்கள் வீட்டுக்குப் போகலாம்” என்று தழுதழுத்த குரலில் இன்ஸ்பெக்டரிடம் சொல்லி வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
“அந்த ஆள் தற்கொலை பண்ணிக்கொள்ளப் போவதாக எழுதியிருக்கிறானா? தாங்கள் கலங்குவதைக் கண்டு அப்படி ஊகிக்கிறேன்” என்றார் இன்ஸ்பெக்டர்.
மாஜிஸ்டிரேட் இப்போது கண்ணீர்த் தாரையையே புறப்படவிட்டார். பேச முடியவில்லை. கடிதத்தை இன்ஸ்பெக்டரிடமே கொடுத்தார். இன்ஸ்பெக்டர் அதைப் படித்துவிட்டு, “இவர் யார்?” என்று கேட்டார்.
தம்மை ஆசுவாசப் படுத்திக்கொண்டு மாஜிஸ்டிரேட் பேசலானார்; “இன்று நான் இந்த நிலையில் இருப்பதற்கு நாகராஜனுடைய தகப்பனாரே காரணம். நானும் அவனும் இளமைத் தோழர்கள். நான் ஏழை. ஆனால் புத்திசாலியென்று அறிந்து என்னையும் அவனையும் சேர்ந்து படிக்கும்படி ஏற்பாடு செய்தார், அந்தப் பெரியவர். இரண்டு பேருக்கும் ஒரே உபசாரம். நான் அவர்கள் வீட்டிலே இருந்து படித்தேன். நாகராஜனுக்கு அப்போதே கெட்ட பழக்கம் உண்டாயிற்று. நான் கண்டிப்பேன். என்னிடம் மட்டும் அவனுக்கு அளவற்ற அன்பு. இரண்டு மூன்று வகுப்புகள் என்னோடு வந்தான். பத்தாம் வகுப்பில் அவன் மட்டம் போட்டுவிட்டான். அவன் தந்தையார் என்னைக் கல்லூரியில் சேர்த்தார். அவனுக்கும் பாடம் சொல்லிக்கொடுக்கச் சொன்னார். எங்கள் நட்புறவு நீடித்தது. நான் இண்ட்டர் பரீட்சை முடித்தபோது பெரியவர் திடீரென்று இறந்து விட்டார். நான் காலேஜில் முதல்வனாக இருந்தமையால் உபகாரச் சம்பளம் பெற்று, பி. ஏ. படித்து முன்னுக்கு வந்தேன். நாகராஜன் பணத்தைத் தாம் தும் செய்கிறான் என்று கேள்விப்பட்டேன்.
“நான் வேலைக்காக அலைந்து கல்கத்தா போனேன். பம்பாய் போனேன். கடைசியில் சென்னைக்கே வந்தேன். நாகராஜன் இருக்கிற இடம் தெரியவில்லை. இப்போதுதான் பார்த்தேன். எவ்வளவோ வருஷங்கள் ஆகிவிட்டன. குரல், தோற்றம் எல்லாம் நாகராஜன்போலவே இருந்தன. முகத்தைப் பார்க்கிறவரையில் நிச்சயப்படவில்லை. முகத்தைக் கண்டேன். எனக்கு நிலை கொள்ளவில்லை. நான் இந்த இருநூறு ரூபாய் செலுத்தியது எந்த மூலை? அவனை நல்வழிக்குத் திருப்புவதற்கு என்னுடனே சில காலம் வைத்திருக்கலாம் என்று எண்ணினேன். ஆண்டவனுக்கு அது சம்மதம் இல்லை. என் நன்றிக்கடனைச் சரியாகத் தீர்க்க முடியவில்லை!”
கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர், "அவர் திருந்தி விடுவார் என்று தோன்றுகிறது. அவரும் நன்றிக் கடனைத் தீர்த்துக்கொள்ளும் உணர்ச்சியுடன் இருக்கிறார்” என்று தம் கருத்தைச் சொன்னர்.
"பார்க்கலாம். அந்தக் கடிதத்தில் அவன் எழுதியிருப்பதுபோல, அவன் திருந்த வேண்டுமென்று இறைவனை மன்றாடிப் பார்க்கிறேன்” என்று மாஜிஸ்டிரேட் ஒரு பெருமூச்சு விட்டார்.