உள்ளடக்கத்துக்குச் செல்

கோயில் மணி/ஒட்டுறவு

விக்கிமூலம் இலிருந்து

ஒட்டுறவு

“இன்னிக்கு மாலை மூணு மணிக்கு மீட்டிங் இருக்குதுன்னு ரமணியம்மா சொல்லச் சொன்னாங்க” என்று ஆயா வள்ளி சொன்னாள்.

“நான் எங்கேதான் போகிறதென்று தெரியவில்லை. இதோ பத்து மணிக்கு மகாநாட்டுக் காரியக்கமிட்டிக்குப் போக வேண்டும். பன்னிரண்டு மணிக்கு மகளிர் சபையின் கூட்டத்துக்கு அஸ்திவாரக் கல் நாட்ட முதல்அமைச்சர் வருகிறார். அங்கே போய்த் தலை காட்ட வேண்டும். மூன்று மணிக்குக் கண்காட்சிக் கமிட்டிக் கூட்டம்; அதைத்தான் அந்த அம்மாள் சொல்லியிரூக்கிறாள். சரியாக ஐந்து மணிக்குக் காட்டு மாளிகையில் விருந்து. அங்கே முக்கியமானவர்கள் வருகிறார்கள். நான் அரை மணி பேச வேறு வேண்டும். ஏழு மணிக்குக் குழந்தைப் படக் காட்சியைப் பார்த்து என் கருத்தைச் சொல்ல வேண்டும்.”

“ராத்திரி பத்து மணிக்கு இன்று என்னவோ முக்கியமான வேலை இருக்கிறதென்று சொன்னீர்களே!” என்று அப்போது அங்கே வந்து நின்ற சமையற்கார அம்மாள் நினைவூட்டினாள்.

“ஆமாம், ஆமாம்; எதற்குப் போனாலும் போகா விட்டாலும் அதற்குத்தான் அவசியம் போக வேண்டும். குழந்தை வளர்ப்பைப் பற்றி ஒரு பெரிய புத்தகம் வெளியிட எங்கள் அன்னைமார் சங்கம் தீர்மானித்திருக்கிறது. நிதானமாக இருந்து ஆராய்ந்து இன்னார் இன்ன பகுதி— யைப் பற்றி எழுதுவது என்று தீர்மானமாக வேண்டும். அதற்கு...”

இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு குழந்தை அழுதுகொண்டே வந்தது. நளினிக்கு அதைக் கண்டவுடன் கோபம் வந்துவிட்டது. “எப்போதும் அழுகைதானா? ஏ வள்ளி, உனக்குக் குழந்தையைச் சமாதானப் படுத்தவே தெரியவில்லை. இங்கே வாடா ராஜா!” என்று அழைத்தாள்.

“நான் மாத்தேன் போ! எனக்கு அந்தக் கத்தி வேணும். ஆயாவைக் கேக்கறேன். நீ போ” என்று ஆயா வள்ளியிடம் ஓடி ஓவென்று கத்தியது. குழந்தைக்கு நாலு வயசு இருக்கும். மழலைச் சொல்லிலே பேசியது.

“என்ன அம்மா பண்ணுவேன்? எங்க வூட்டுப் புள்ளை அன்னிக்கு இங்கே வந்தபோது ஒரு கத்தியைக் கொண்டாந்தான். அதைப் பார்த்ததிலேருந்து அது வேணுமுன்னு கத்துது கொளந்தை. வேறு ஏதாவது வாங்கித் தரேன்னாலும் கேக்கமாட்டேனுங்குது.”

“சரி சரி; எப்படியாவது சமாதானம் செய்துகொள். எனக்கு நேரம் ஆகிறது... என்ன, சாப்பாடு தயாரா?” என்று கூவினாள் நளினி.

“ஓ! அரை மணிக்கு முன்பே தயார்” என்று உள்ளிருந்து குரல் வந்தது.

நளினி சாப்பிட உட்கார்ந்தாள். அவசர அவசரமாகச் சோற்றை வாயிலே போட்டுக் கொண்டாள். நடு நடுவே பேசினாள். “இந்தா, அவர் வந்தால், இன்று முழுவதும் கார் எனக்கு வேண்டும் என்று சொல், அவரை டாக்ஸி எடுத்துக்கொண்டு போகச் சொல். இப்போது அவர் எங்கே போயிருக்கிறார், தெரியுமோ?”

“என்னிடம் சொல்லவில்லையே அம்மா!” என்றாள் சமையற்காரி.

“யாரிடந்தான் சொல்கிறார்? அவருக்கு எத்தனையோ சிநேகிதர்கள். சரி, அவர் வந்தால் எனக்காகக் காத்திருக்க வேண்டாம், ராத்திரி நேரம் கழித்தே வருவேன் என்று சொல்லிவிடு” என்று படபடவென்று வார்த்தைகளைப் பொழிந்து தள்ளினாள். சாப்பிட்டுவிட்டு அவள் காரில் ஏறிப்புறப்பட்ட பிறகு புயல் ஓய்ந்து அமைதி உண்டானது போல இருந்தது.

ஸ்ரீமதி நளினி நாராயணன் பொதுத் தொண்டில் ஈடுபட்ட நாகரிக நங்கையரில் ஒருத்தி. அவள் பிறந்தகத்துச் செல்வி. புக்ககமும் மோசம் இல்லை. அழகான பங்களா, கார், மற்ற வசதிகள், ஒரே குழந்தை இப்போதைக்கு நாராயணன் ஒரு கம்பெனியில் மானேஜர் நளினி எத்தனையோ சங்கங்களில் வெவ்வேறு உத்தியோகம் வகித்து வந்தாள். எல்லாம் கெளரவ கைங்கரியங்கள். அன்னைமார் சங்கத்தில் அவள் காரியதரிசி. தோழியர் சபையில் அவள் தலைவி. மகளிர் முன்னேற்ற நிலையத்தில் அவள் புரவலர். குழந்தைப் பாதுகாப்பு மன்றத்தில் அவள் துணைத் தலைவி—இத்யாதி. இருபத்தைந்து வயசில் இத்தனை பொறுப்பை வகிப்பதென்றால் எவ்வளவு சாமர்த்தியம் இருக்கவேண்டும்! எந்தக் காரியத்திலும் நான் என்று முன்வந்து நிற்கும் துணிவுடையவள் அவள்.

வீட்டில் சமையற்காரி, குழந்தையைக் கவனிக்க ஆயா, வேலைக்காரன், தோட்டக்காரன், வேறு வேலைக்காரிகள் ஆகிய சிப்பந்திகளுக்குக் குறைவே இல்லை. அவளுடன் ஹைஸ்கூலில் படித்த தமயந்தி இரண்டு தெரு விட்டு ஒரு வீட்டில் இருக்கிறாள். அவளுடைய கணவர் ஏதோ ஒரு பள்ளிக்கூடத்தில் வாத்தியார்.

அவளைத் தனக்குக் காரியதரிசியைப் போல வைத்துக் கொண்டிருந்தாள். ஏதோ அவ்வப்போது பொருளுதவி செய்து வருவாள். அவளும் தோழியாகையால் நளினிக்கு உதவியாக இருந்துவந்தாள்.

குழந்தை மோகன் எப்போதும் ஆயாவின் பராமரிப்பில்தான் இருந்துவந்தான். அவனைக் குளிப்பாட்டுவது, சோறு ஊட்டுவது, விளையாட்டுக் காட்டுவது, வெளியே அழைத்துச் செல்வது - எல்லாம் வள்ளியின் வேலை. ஓர் அம்மாள் காலையில் அரை மணியும் மாலையில் அரை மணியும் வந்து அவனுக்குப் பொம்மை, படங்களையெல்லாம் காட்டி, “கழுதை, பூனை” என்று பாடம் சொல்லிக் கொடுத்துப் போவாள்.

நளினி புறப்பட்டுப் போன சிறிது நேரத்துக்கெல்லாம் தமயந்தி வந்தாள். நளினியின் பொதுத் தொண்டு சம்பந்தமான அலுவல்களைக் கவனிக்கத் தனி அறை ஒன்று அங்கே உண்டு. பல பைல்களும் புத்தகங்களும் வருவாரை வரவேற்க நாற்காலிகளும் உள்ள இடம் அது, தமயந்தி அங்கே போய்க் கவனிக்க வேண்டிய கடிதங்களைப் பார்த்தாள். சமையற்காரி வந்தாள்: “இன்று ராத்திரி பத்து மணிக்கு ஏதோ மீட்டிங்காமே! அதில் அம்மாள் பேச ஏதோ குறிப்பு வேண்டுமாம். நேற்று உங்களிடம் சொல்ல மறந்து விட்டார்களாம். உங்களைக் குறித்துவைக்கச் சொன்னார்கள்” என்றாள்.

“சரி, பார்க்கிறேன்” என்று சொல்லி நாற்காலியில் அமர்ந்தாள் தமயந்தி.

டெலிபோன் ஒலித்தது. “ஹலோ, நான் தான் தமயந்தி... கொஞ்சம் வேலை இருந்தது. சரி, சரி. சொன்னாள்... பார்க்கிறேன்... குழந்தைக்கு உடம்பு சரி இல்லை. இருக்கிறாள்... அம்மாதான் பார்த்துக்கொள்கிறாள்... கொஞ்சம் கஷ்டம். பார்க்கிறேன்” என்று பதில் சொன்னுள் தமயந்தி.

நளினிதான் எங்கிருந்தோ டெலிபோன் பண்ணினாள். தமயந்தி தாமதமாக வந்ததைப் பற்றிக் கேட்டாள். தமயந்தி தன் குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்றும், தன் அம்மா கவனித்துக் கொள்வதாகவும் சொன்னாள். இரவு பத்து மணிக் கூட்டத்துக்குத் தன்னுடன் வர வேண்டுமென்று நளினி சொன்னாள். கொஞ்சம் கஷ்டம் என்று தமயந்தி கூறினாள்.

தமயந்தி தன் வேலையைக் கவனிக்கப் புகுந்தாள். அப்போது ஆயா வள்ளி வந்தாள்; “தமயந்தி அம்மா, உனக்குப் புண்ணியமாப் போவுது. இந்தப் புள்ளைக்கு வேறே ஆயாவைப் பாக்கச் சொல்லம்மா. நம்மாலே முடியாது. எப்பப் பாத்தாலும் ஆயா ஆயான்னு தொணதொணக்குது. எங்க வூட்டுல்லே எம் மவ வந்திருக்குது. ரெண்டு கொளந்தைங்களோடே வந்திருக்கிறா. ஒரு மாசம் இருந்துட்டுப் போன்னு சொன்னேன். அந்தக் கொளந்தைங்களோடே போது போக்கலாமின்னா, நேரமில்லை” என்று முறையிட்டாள்.

"யாருக்குத்தான் இருக்கிறது? அதோ என் குழந்தை கண்ணைத் திறக்காமல் காய்ச்சலாய்ப் படுத்திருக்கிறது. என்னுடைய அம்மாள் இருந்தாளோ, பிழைத்தேனே? ரோஜாப்பூ வாடிக் கன்றிப் போகிறது போலக் குழந்தை வாடுகிறது. நான் பாவி! அதைக் கவனிக்க முடிகிறதில்லை. பழகின தோஷம்; இவளையும் விட முடிகிறதில்லை!”

“வூட்டுக்கு வூடு வாசப்படிதான் அம்மா! நான் இப்ப ஆட்டுக்குப் போகணும். இந்தக் கொளந்தை வுட மாட்டேங்குது. இதைப் பாத்தாலும் பாவமா இருக்குது. ஒரு ரோசனை சொல்றேன். அம்மாவிடம் சொல்றயா அம்மா?”

“என்ன அது?”

“இந்தக் கொளந்தையையும் எங்க வூட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போறேன். சாக்கிரதையாப் பாத்துக்கறேன். இதுன் கண்ணைக் கசக்கினாலும் மனசு பொறுக்க மாட்டேங்குது. இருபத்து நாலு மணி நேரமும் இங்கேயே இருக்க முடியுமாம்மா?”

“அம்மாவைக் கேட்காமல் ஒன்றும் செய்யக்கூடாது. நீ கேட்டுப் பாரேன்.”

“எனக்குக் கேட்கப் பயமாய் இருக்குது. பேசறத்துக்கு அம்மாவுக்கு நேரம் ஏது? நீ பொறுமைசாலி. அவங்க மனசுபோலப் போறே. அதனாலே தான் உன் கிட்டச் சொல்றேன். கொளந்தைக்குச் சாப்பாடு போட்டுட்டுத் தூங்கவச்சிட்டுப் போறேன். நடுவிலே வந்து. பாத்து எளுந்திரிச்சுட்டா அளைச்சுக்கிட்டுப் போறேன். வண்டி, பொம்மை எல்லாம் கொண்டு போய் வெளையாட்டுக் காட்டறேன். என் மவ கொளந்தைங்களும் இருக்குது. கூட வெளையாடலாம்.”

“சொல்லிப் பார்க்கிறேன்” என்று தமயந்தி சொன்னாள்.

இதற்கு முதலில் நளினி ஒப்புக்கொள்ளவில்லை; “நாகரிகம் இல்லாத ஜனங்களோடு பழகவிடக்கூடாது” என்று மறுத்தாள். ஆனால் வள்ளி சத்தியாக்கிரகம் செய்வாள் போல இருந்தது: “என்னை அனுப்பிச்சுடுங்க அம்மா. ஒங்களுக்குத் தக்கின. ஆளைப் பாத்துக்குங்க” என்றாள்.

வள்ளிக்குக் கை சுத்தம், வாய் சுத்தம். இது நளினிக்கு நன்றாகத் தெரியும். அப்படி ஓர் ஆள் கிடைக்கிறது மிகவும் அரிது என்பதும் தெரியும். புதிய ஆளைக் கூட்டிவந்து அவளைக் காவல் காப்பதென்றால் நடக்கிற காரியமா? ஆகவே ஒருவிதமாக வள்ளிக்கு இணங்கினாள்: "இந்தா, இதுதான் சாக்கென்று நீ வீட்டிலேயே இருந்துவிடாதே குழந்தைக்கு அங்கே ஒன்றும் கொடுத்துவிடாதே” உடம்புக்கு வந்துவிடும். எப்போதாவது அவசியமாக நீ போகவேண்டுமானல் போ. அப்போது இவன் வருவான் என்று பிடிவாதம் பிடித்தால் அழைத்துக்கொண்டு போ. இல்லையானால் வேண்டாம். சமையல்கார அம்மாளிடம் சொல்லிப் பார்த்துக் கொள்ளும்படி சொல்கிறேன். அவள் பார்த்துக் கொள்வாள். என்ன, நான் சொல்கிறது. தெரிகிறதா?”

“சரி அம்மா!”

குழந்தை மோகன் ஆயாவிடம் ஒட்டிக் கொண்டவன். கதை சொல்லிப் பாட்டுச் சொல்லிக் கன்னத்தில் முத்தமிட்டுச் சோறூட்டிப் படுக்கவைத்துத் தாலாட்டுப் பாடி வளர்க்கிறவள் அவள். அம்மா என்று நளினி பேருக்குத்தான் இருந்தாள். எப்போதாவது, “என் ராஜா இங்கே வா!” என்பாள். அநேகமாக ராத்திரி வேளைகளில் சமையல்காரி பக்கத்திலேதான் அவன் தூங்குவான். இப்போது வள்ளியின் வீட்டுக்கு அவன் போனான். அங்கே உள்ள குழந்தைகளோடு விளையாடினான். அதனால் வள்ளியின் பிணைப்புப் பின்னும் இறுகலாயிற்று.

நாராயணன் இப்போதெல்லாம் மாசத்தில் பாதி நாள் சுற்றுப் பிரயாணத்தில் இருந்தார். இன்று டில்லி, நாளை கல்கத்தா, மறுநாள் லண்டன்—இப்படி அவர் விமானத்தில் பறந்தார். நளினியோ காரில் பறந்தாள். அன்னைமார் சங்கத்துக் கூட்டத்தில் நளினி குழந்தைவளர்ப்பைப் பற்றிய புத்தகத்தில் முக்கியமான பகுதியை எழுதவேண்டுமென்று தீர்மானமாயிற்று. அதற்காக அவள் புத்தக சாலைகளை நாடிச் சென்று புத்தகங்களைக் கொண்டு வந்தாள். தமயந்தியைக் குறிப்புகளை எடுக்கச் சொல்லியிருந்தாள். பாவம் தானே அந்தப் பகுதியை எழுதி முடிக்க வேண்டியிருக்கும் என்பதைத் தமயந்தி நன்கு அறிவாள்.

ரு நாள் நளினிக்குச் சிறிது உடம்பு சரி இல்லை. அன்று வீட்டில் தங்கினாள். தமயந்தியைத் தன்னுடன் இருக்கும்படி சொன்னாள். அவள் படுத்திருந்த அறைக்கு வெளியே குழந்தை மோகன் விளையாடிக் கொண்டிருந்தான்.

“நளினி தமயந்தியிடம், நீ என்ன குறிப்புக்கள் எடுத்திருக்கிறாய்?” என்று கேட்டாள்.

“தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள ஒட்டுறவைப் பற்றிப் புதியதாக ஒரு புத்தகம் வந்திருக்கிறது. அதைப் படித்துக் குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறேன். உணவு, உடை, வசதி ஆகிய எல்லாவற்றையும் விட அன்புதான் இந்த உறவில் முக்கியம் என்று ஆசிரியர் எழுதியிருக்கிறார்.”

“சரி, சரி. நல்ல கருத்துக்களாகத் தொகுத்து வை, என்னுடைய கட்டுரை நல்ல பெயர் எடுக்கவேண்டும்; தெரிந்ததா?”

"புத்தகம் படிக்கப் படிக்கச் சுவையாக இருக்கிறது."

'என்ன அப்படிப் பிரமாதமான சுவை”

“ஆசிரியர் தம் அநுபவத்தில் கண்ட உதாரணங்கள் பலவற்றை எடுத்துக் காட்டியிருக்கிறார். குழந்தைகளைப் புறக்கணிப்பதால் வரும் தீங்கைக் காட்ட எத்தனையோ பேருடைய வாழ்க்கையிலிருந்து சம்பவங்களை எடுத்துக் காட்டியிருக்கிறார்.”

அப்போது குழந்தை வெளியிலே எதையோ போட்டு உடைத்தது. “மோகன், மோகன், வேண்டாண்டா! நான் இட்டுக்கிட்டுப் போறேன். அம்மா இருக்கிறாங்களே, நீ சமத்தா விளையாடுன்னுதானே சொன்னேன்?” இது வள்ளியின் குரல்.

“நான் மாத்தேன் போ: எனக்கு அம்மா வேணாம்: போ. ஆயா வூட்டுக்குத்தான் வருவேன். சங்கனோடே தான் வெளையாடுவேன்.”

“ராஜா, நான் இட்டுக்கிட்டுப் போறேன். இப்ப நீ அம்மாவோடே இரு. நான் மார்க்கெட்டுக்குப் போகவேணும். நான் வூட்டுக்குப் போறபோது நீ வரலாம்.”

"நான் மார்க்கத்துக்கு வரேன். ஊ ஊம்.”

“மோகன், நீ நல்ல புள்ளை இல்லையா? அம்மா கோவிச்சுப்பாங்க. உன்னை அங்கெல்லாம் அழைச்சிட் போப்படாது.”

“அம்மா கோவிச்சுக்கட்டுமே; எனக்கு என்ன பயம்?”

“அப்பறம் உன்னை எங்கேயும் அனுப்பமாட்டாங்க.”

"நான் ஆயா வூட்டுக்கு ஓடி வந்துடறேன்."

உள்ளே நளினி சொல்லிக் கொண்டிருந்தாள்: “தாயின் நேர்ப் பராமரிப்பு இல்லாத குழந்தை அன்புக்காக ஏங்கிப்போகும். பிடிவாத குணம் உடையதாக இருக்கும். வேறு யாரிடமாவது அன்பு வைக்கப் பார்க்கும். இப்படியும் எழுதியிருக்கிறார்.”

ஒரு காதில் குழந்தை மோகன் பேச்சு விழுந்தது. நடு நடுவே நளினியின் பேச்சும் விழுந்தது. “கொஞ்சம் இரு” என்று நளினியைக் கையமர்த்தி மோகன் பேச்சைக் கவனித்தாள். சிது நேரத்துக்குப் பிறகு, “வள்ளி!” என்று கூப்பிட்டாள்.

“இதோ வருகிறேன்” என்று அவள் வந்தாள்.

“மோகன் எங்கே?”

“அப்பா, மோகன், அம்மா கூப்பிட்ருங்க, பாரு.”

குழந்தை மெல்ல வந்தான். நளினி, “ராஜா, இங்கே வா” என்றாள்.

“மாத்தேன். நான் வெளையாடப் போகணும்” என்றான் குழந்தை.

“இங்கேயே விளையாடேன். பொம்மைகளை வைத்துக்கொண்டு விளையாடு. புதுப்பொம்மைகளை வாங்கிக்கொண்டு வருகிறேன்.”

“சங்கனோடதான் வெளையாடுவேன். பொம்மை பேசாது.”

அதற்குள் டெலிபோன் மணி அடித்தது, டாக்டர் பேசினர். தமயந்தி பதில் சொன்னாள்; “ஜூரம் இல்லை. வெறும் அசதிதான். சொல்லிப் பார்க்கிறேன். நமஸ்காரம்” என்று சொல்லிச் சிரித்தாள்; “உன்னை நன்றாக ஓய்வெடுத்துக்கொள்ளச் சொல்கிறார். மருந்தே வேண்டாமாம். ஒய்வுதான் மருந்தாம்” என்றாள்.

அதற்குள் மற்றொரு முறை டெலிபோன் அலறியது. “ஹல்லோ! நளினியா?”

“நளினி வீடுதான்: நான் தமயந்தி.”

“நளினி இல்லையா?”

“உடம்பு கொஞ்சம் சரியில்லை.”

“என்ன உடம்பு?”

"அசதி!"

“இவ்வளவுதானே? நளினியைப் பேசச் சொல்லுங்கள். ஒரு முக்கியமான சமாசாரம்.

“என்னிடமே சொல்லலாம்.”

“மன்னிக்கவேண்டும். அம்மாளையே கூப்பிடுங்கள்.”

“உன்னையே கூப்பிடுகிறாள்.”

நளினி பேசினாள். மறு நாளுக்கு மறுநாள் டெல்லியிலிருந்து மகளிர் முன்னேற்றச் சங்கத் தலைமை அலுவலகத்தின் தலைவி வருகிறாளாம். அவளை வரவேற்க வேண்டுமாம். பரதநாட்டியம் பார்க்க வேண்டுமென்று அந்தத் தலைவி ஆசைப்படுகிறாளாம். அதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். நளினியால்தான் அது முடியும்.

அதைக் கேட்டவுடனே நளினிக்கு உற்சாகம் வந்துவிட்டது. எல்லாவற்றையும் மறந்தாள். லண்டனில் இந்தியத் தூதுவராக இருந்த அம்மாள் அவள், அவளுக்குப் பரதநாட்டியம் பார்க்க வேண்டுமென்று ஆசையிருந்தால் அதற்கு ஏற்பாடு செய்வது எவ்வளவு, பெரிய காரியம்! “தமயந்தி, எங்கே, அந்த மருந்தை எடு; குடிக்கிறேன். எனக்கு ஜுரம் இல்லை. உடம்பு வலிதான் இருக்கிறது. அது ஒன்றும் பிரமாதம் இல்லை. மகளிர் சங்கத் தலைவி டெல்லியிலிருந்து வருகிறாளாம். பரதநாட்டியத்துக்கு ஏற்பாடு செய்யவேண்டும். கானலதாவுக்குச் சொல்லியனுப்பலாமா? நாமே போய்ப் பார்த்துவிட்டு வரலாமா?”

“உனக்கு உடம்பு சரியில்லையே!”

“என்ன உடம்பு எனக்கு? சும்மா உடம்பு, உடம்பு என்று சொல்லிக்கொண்டிருந்தால் ஒன்றும் நடக்காது. இதோ அவருக்குப் போன் பண்ணுகிறேன், காரை அனுப்பச் சொல்லி. இதற்குத்தான் இரண்டு கார் வேணுமென்கிறது. அவருக்கு அது தெரிவதில்லை. முக்கால் வாசி நான்தான் ஊரில் இருக்கிறதே இல்லையே என்கிறார். எனக்கு எப்போது வேண்டுமோ, அப்போது கிடைக்கிறதில்லை...வெந்நீர் தயாராக இருக்கிறதா?. டாக்டர் ரசஞ்சாதம் சாப்பிடலாம் என்று சொன்னார் அல்லவா?...சரி, சரி, வள்ளி, இவனை அழாமல் பார்த்துக்கொள்...உங்கள் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போய்விட்டு உடனே அழைத்துக்கொண்டு வந்துவிடு... போ ராஜா சமத்தாய் இரு அம்மாவோடே நீ வரலாம். சமத்தாய் நடந்துகொள்...கானலதா எங்கே இருக்கிறாள், தெரியுமா?... திருவல்லிக்கேணியில் என்னவோ தெரு என்று சொன்னாளே... மைதிலிக்குப் போன்பண்ணிக்கேள்; அவளுக்குத் தெரியும்...இந்தா, அந்தப் பைலைப் பார்த்தால் தெரியுமே!... சரி, சரி, அதை யார் புரட்டிக் கொண்டிருப்பார்கள்? மைதிலியையே கேள். அவள் எதற்காக என்று கேட்பாள். விஷயத்தைச் சொல்லாதே... என்ன, தெரிகிறதா?

சட்டென்று எழுந்திருந்தாள். வெந்நீரில், குளித்தாள். ஏதோ சிறிது உணவு கொண்டாள். புறப்பட்டுவிட்டாள், தமயந்தியையும் அழைத்துக் கொண்டு.

குழந்தை மோகனுக்கு ஜூரம். உடம்பு மழுவாய்க் கொதிக்கிறது. ஆயா வள்ளி தன் மடியில் கிடத்தியிருக்கிறாள். நாராயணன் அன்று ஊரில் இருக்கிறார். அலுவலகம் போகவில்லை. அவர் முகத்தில் ஈயாடவில்லை.

டாக்டர் இப்போதுதான் வந்து இஞ்செக்சன் போட்டுவிட்டுப் போயிருக்கிறார். “அதிகமாகக் கூட்டம் வேண்டாம். குழந்தைக்கு யார் பிரியமோ அவர்மட்டும் அருகில் இருக்கட்டும்” என்று சொல்லிப் போனார்.

நளினியும் இப்போது வாட்டமுற்றிருக்கிறாள். “என் ராஜா, என் ராஜா”. என்று புலம்பத் தெரிகிறதே ஒழியக் குழந்தைக்கு என்ன செய்தால் அநுகூலம் என்று தெரியவில்லை. தன் மடியில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அவனே ஆயாவிடந்தான் இருக்க வேண்டுமென்று கத்தினான். அவனைப் படுக்கையில் விட்டு விட்டு வள்ளியம்மாள் அருகில் நின்றாள். நளினி குழந்தையின் அருகில் அமர்ந்துகொண்டு மெல்ல வருடத் தொடங்கினாள். குழந்தை மயக்கமாகக் கண்ணை மூடிக்கொண்டிருந்தான். நளினி மெல்லக் குழந்தையை அணைத்துக்கொண்டாள். அவளுக்கு அப்போது சொல்ல முடியாத இன்பம் உண்டாயிற்று; அடுத்தபடி எதையோ நினைத்துக் கொண்டு அழுகை பொத்துக்கொண்டு வந்தது.

குழந்தை கண்ணை விழித்துக்கொண்டு, “ஆயா! ஆயா!” என்று கத்தினான். “இதோ, நான் அம்மா இருக்கிறேன், ராஜா!” என்று குழைந்து பேசினாள் நளினி.

“ஆயா! ஆயா! அம்மா வாண்டாம்.”

நளினிக்கு இப்போது அந்த வார்த்தை உயிர்க் குலையிலே பாய்ந்தது. தன்மேலேயே எரிச்சல் வந்தது.

வள்ளி கையில் ஹார்லிக்ஸைக் கொண்டு வந்து நளினியிடம் கொடுத்தாள். குழந்தை குடிக்கமாட்டேனென்று பிடிவாதம் செய்தான். வள்ளியே அதை ஊட்டினாள்.

"இப்படிக் குழந்தையினிடம் நீ உட்கார்” என்றாள் நளினி, வள்ளி சிறிது அஞ்சினாள். நளினி தான் எழுந்து அவளுக்கு இடம் கொடுத்தாள்.

நளினி குளிப்பறைக்குள்ளே போய்க் கதவைத் தாழிட்டுக்கொண்டு கால்மணி அழுது புலம்பினாள். தான் இழந்தது இன்னதென்று அவளுக்குப் புலனாயிற்று.

மறுபடியும் குழந்தை படுத்திருந்த அறைக்கு வந்தாள்: “சங்கன் யார் வள்ளி?” என்று கேட்டாள்.

"சங்கன் இல்லையம்மா, சங்கரன். நம்ம ராசா அவனைச் சங்கன்னுதான் கூப்பிடும். என் பேரப்புள்ளையம்மா."

"அவனை இங்கே அழைத்து வரச் சொல்.”

“எதற்கு அம்மா?”

“இவனுக்குத் துணையாக இருப்பதற்கு.”

“அவன் வந்து என்ன செய்வான் அம்மா?”

“டாக்டர் இவனுக்குப் பிரியமானவர்கள் உடன் இருக்க வேண்டுமென்று சொன்னார் அல்லவா?”

“நீங்களெல்லாம் இருக்கிறீங்களே!”—வள்ளி இயல்பாகத்தான் கேட்டாள்.

"நாங்களா?" மேலே நளினிக்கு வார்த்தை வரவில்லை. விம்மத் தொடங்கினாள்.

டுத்த மாதம் குழந்தை செளக்கியமாகி விளையாடத் தொடங்கினன். நளினி எல்லாச் சங்கங்களுக்கும் கால் கால் கடிதாசு அனுப்பினாள்; ராஜீநாமாக் கடிதந்தான். அன்று முதல் அவள் உண்மைத் தாயாகிக் குழந்தை மோகனுடன் ஒட்டிக்கொள்ளும் தூய திருத்தொண்டிலே ஈடுபட்டு விட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கோயில்_மணி/ஒட்டுறவு&oldid=1382671" இலிருந்து மீள்விக்கப்பட்டது