கோயில் மணி/மலர்ச்சி

விக்கிமூலம் இலிருந்து

மலர்ச்சி

“”ன்ன அம்மா,நீங்கள் இங்கேயா இருக்கிறீர்கள்?” என்ற குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன்; யாரோ பூக்காரி பேசினாள். அவளை உற்றுப் பார்த்தேன்.

“என்ன அம்மா, என்னைத் தெரியவில்லையா? நான் தான் செங்கமலம் அம்மா!”

“அட நீயா! உன்னை எங்கே இத்தனை வருஷங்களாகக் காணவில்லை?”

அவள் செங்கமலமா? எப்படி இருந்தாள் எப்படி ஆகிவிட்டாள்! புத்தம் புது ரோஜாப் பூவைப் போல இருந்தாளே! ரோஜாப் பூவைச் சொல்லக்கூடாது; அது தொட்டால் உதிரும். அழகான செந்தாமரையைப் போலத் தள தளவென்று இருந்தாள். அவள் முகத்தில் முல்லை பூத்திருக்கும். கன்னத்தில் மாம்பழம் பழுத்திருக்கும். அவளா இப்படி ஆகிவிட்டாள்?

“ஏண்டி, உனக்கு உடம்புக்கு என்ன? இப்படி வாடின வெற்றிலை ஆகிவிட்டாயே! நாராயணன் செளக்கியமா?” என்று கேட்டேன்.

செளக்கியந்தான் அம்மா. என் உடம்புக்கு ஒரு கேடும் இல்லை; வயசு ஆகிறதில்லையா?

“என்னடி இது? நூற்றுக் கிழவி மாதிரி பேசுகிறாயே. நேற்று உனக்குக் கல்யாணமானது எனக்குத் தெரியும். உன்னைப் பார்த்து அஞ்சு வருஷம் இருக்குமா?”

“கணக்காக அஞ்சு வருஷகாலந்தான் ஆச்சு அம்மா. உங்களை நான் எங்கெங்கோ தேடினேன். இங்கே புதுவீடு கட்டிக்கொண்டு வந்துவிட்டீர்கள் போல் இருக்கிறது.”

“ஆமாம்; எத்தனை நாளைக்கு வாடகை வீட்டில் குடி இருக்கிறது? நமக்கு என்று ஓர் இடம் இருந்தால் நம்முடைய பிரியப்படி ஏதாவது செடி கொடி போட்டுக் கொள்ளலாம். உனக்குக் குழந்தைகள் உண்டா”

“அதில் ஒன்றும் குறைவு இல்லை, அம்மா. இரண்டு பேர் இருக்கிறார்கள்.”

“அது சரி, நீ ஏன் கல்யாணமாகிச் சில மாதங்களுக்குப் பிறகு வரவே இல்லே?”

செங்கமலத்துக்குக் கல்யாணம் ஆனது எனக்குத் தெரியும். ஒரு வகையில் நானும் அந்தக் கல்யாணத்திற்குக் காரணமாக இருந்தேன். அக்காலத்தில் வேறு ஒரு வீட்டில் குடியிருந்தோம். தினந்தோறும் நாராயணன் பூக்கொண்டு வந்து தருவான். அவன் வராத இரண்டு மூன்று நாள் செங்கமலத்தினிடம் பூ வாங்கினேன். அதனுல் அவர்களுக்குள்ளே சிறு பூசல், கடைசியில் அது கல்யாணமாக முடிந்தது.

கல்யாணத்துக்குப் பிறகு இரண்டு மூன்று மாதங்கள் செங்கமலம் பூக்கொண்டு வந்து கொடுத்தாள்; பிறகு காணவில்லை. நாங்கள் இந்தப் புது வீட்டுக்கு வந்து விட்டோம். வந்து மூன்று ஆண்டுகள் ஆயின.

செங்கமலம் இப்போது வாடிய முகமும் மெலிந்த உடம்புமாகக் காட்சியளித்ததைக் கண்டு என் மனம் மிகவும் வேதனைப்பட்டது. அவள் தன் கதையைச் சொன்னாள்.

“இவருக்கு ஒரு மாமன் கடலூரில் இருந்தார். அவர் அங்கே தோட்டம் போட்டிருந்தார். இவரை அங்கே வந்தால் தோட்டவேலை பார்க்கலாம் என்று அழைத்தார். அவர் பேச்சைக் கேட்டுக்கொண்டு நாங்கள் இருவரும் அங்கே போய்ச் சேர்ந்தோம்.”

“அங்கே வசதியாக இல்லையா?”

“சொல்கிறேன், கேளுங்கள். போன புதிதில் எல்லாம் நன்றாகவே இருந்தன. மாமனுக்கு ஒரு பெண் உண்டு. அவளை இவருக்குக் கொடுக்க வேணுமென்பது அவருடைய ஆசை. இவர் என்னைக் கட்டிக்கொள்ளவே, அந்தப் பெண்ணை வேறு யாருக்கோ கொடுத்துவிட்டார்கள். மாமனுக்கு இவரிடத்திலே பிள்ளைபாசம். ஆனால் அவருடைய பெண்சாதிக்கு இவரைக் கண்டால் ஆகிறதில்லை. போய் ஒரு வருஷம் ஒரு சங்கடமும் இல்லாமல் இருந்தது. எங்களுடைய போதாத காலம், மாமனுக்குப் பாரிசவாயு வந்து படுத்த படுக்கையாகிவிட்டார். இனி மேல் எல்லாம் நீயே கவனித்துக் கொள் அப்பா என்று இவரிடம் சொல்லிவிட்டார்.”

“ஏன், அவனுக்குப் பிள்ளை குட்டி இல்லையா?”

“ஒரு பெண், ஒரு பிள்ளை, பெண்ணைத்தான் கட்டிக் கொடுத்துவிட்டார். மகன் சின்னப் பிள்ளை. மாமன் நினைத்தபடி ஒன்றும் நடக்கவில்லை. அவர் உடம்பில் வலிமையுடன் ஓடி ஆடி உழைத்தபொழுது அவர் பேச்சுக்கு மதிப்பு இருந்தது. கீழே படுத்தபிறகு அந்த மதிப்பு வர வரப் போய்விட்டது. அவருடைய மனைவி அதிகாரம் செய்ய ஆரம்பித்தாள். இவர் ரோசக்காரர். ஒரு பெண்பிள்ளை அதிகாரம் பண்ணுகிறதாவது என்று மனசுக்குள் வருத்தம். கொஞ்ச நாளில் அந்த அம்மாள் தன் மாப்பிள்ளையையே வருவித்துக்கொண்டாள். இவர் குறிப்பு அறிந்து மெல்ல நழுவிவிட்டார்.”"

“மாமன் ஒன்றும் சொல்லவில்லையா?”

“அவர் உயிருக்கு மன்றாடிக்கொண்டிருப்பவர் என்ன சொல்லுவார்? இவர் வீட்டை விட்டு வந்த அடுத்த மாசமே அவர் பரலோகம் போய்ச்சேர்ந்தார்.”

“அடடா! அப்புறம்?”

அப்புறம் என்ன? இவர் ஒரு சின்னப் பூந்தோட்டத்தைக் குத்தகைக்குப் பிடித்துப் பூ வியாபாரம் செய்யத் தொடங்கினார். எனக்கும் அது பிடித்ததாக இருந்தது. எங்கள் பழைய தொழில் அல்லவா? எனக்குக்குழந்தைகள் பிறந்தன. ஆனால் வாழ்க்கை சுகப்படவில்லை. கிணற்றில் தண்ணீர் இல்லாமல் தோட்டம் கெட்டுப்போயிற்று. குத்தகைப் பணம் கொடுக்கக் கூடத் திண்டாட்டமாகி விட்டது. இனி நமக்குப் பட்டணந்தான் சரியென்று கடலூருக்கு ஒரு முழுக்குப் போட்டு வந்துவிட்டோம்; மூன்று மாசங்கள் ஆகின்றன.

“நாராயணனும் பூ விற்கிறானா?”

இங்கே முன்போல வாடிக்கைக்கைக்காரர்களைப் பிடிக்க முடியவில்லை. நான்தான் விற்கிறேன். அவர் ஏதாவது கூலிவேலைக்குப் போகிறார்.

“வேலை கிடைக்கிறதா?”

“என்னைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியவில்லையா? வாரத்துக்கு ஒரு நாள் கிடைத்தால் பெரிது. எனக்கும் அவ்வளவு அதிகமாக வியாபாரம் ஆவதில்லை. ஏதோ ஒருவேளை கஞ்சி காய்ச்சிக் குடிக்கிறோம்.”

அவளைப் பார்க்கப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

“உங்களைப் பார்த்ததில் சந்தோஷம். தெய்வத்தைக் கண்டதுபோல இருக்கிறது. ஆனால்...”

அவள் ஏதோ சொல்லத் தயங்குகிறாள் போலிருந்தது. அவள் சுற்று முற்றும் உள்ள செடிகளைப் பார்த்தாள்.

“என்ன சொல்கிறாய்?”

“ஒன்றும் இல்லை அம்மா. நீங்கள் முன்போல் என்னிடம் பூ வாங்கமாட்டீர்கள் என்று தோன்றுகிறது.”

“ஏன், வேறு யாராவது கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறாயா?”

“இல்லை அம்மா, நீங்களே இத்தனை பூச்செடிகள் வைத்திருக்கிறீர்கள். உங்களுக்குப் பிரியமான மல்லிகைச் செடிகள் நன்றாக வளர்ந்திருக்கின்றன. நீங்கள் விலைக்குப் பூ வாங்கவேண்டிய அவசியம் இல்லையே”

அவள் சொன்னது உண்மைதான், நான் இப்போ தெல்லாம் பூ வாங்குவதே இல்லை. ஏதாவது விசேஷ காலங்களில் செவ்வந்தி, ரோஜாப்பூக்களே வாங்குவேன். எங்கள் வீட்டில் நாலு வகையான மல்லிகையையும் பயிரிட்டிருந்தேன்.

எனக்கு ஆசை, கண்படும் இடம் எல்லாம் பூவாகக் குலுங்கவேண்டுமென்று. இந்த வீட்டுக்கு வந்த புதிதில் தோட்டம் போடுவதுதான் என் வேலை. இவர் கம்பெனியில் காவலாளி முனிசாமியைக் கூப்பிட்டு ஊரில் இருக்கிற செடிகளையெல்லால் வாங்கி வரச்சொல்லிவிட்டேன்.

எருவென்று வீதியில் எந்த வண்டி போனாலும் வாங்கிக் கொட்டுவேன். “அந்த எருவைத் தொட்ட கையோடு சமையல் செய்யப் புகுந்துவிடாதே” என்று இவர் பரிகாசம் செய்வார்.

முல்லை, இருவாட்சி, ஜாதி, நித்தியமல்லிகை, ஊசிமல்லிகை, குண்டுமல்லிகை என்று மல்லிகைத் திணிசுகளாக வாங்கிவைத்தேன். நர்ஸரிக்களுக்கு நேரிலே போய்ப் பூஞ்செடிகளைப் பார்த்து வாங்கி வந்தேன்.

புதிய வீட்டுக்கு வந்து ஆறு மாசம் தோட்டவேலை மும்முரமாக நடந்தது. தெரியாமலா சொன்னர்கள், ‘நட்டதெல்லாம் மரமாகுமா? பெற்றதெல்லாம் பிள்ளேயாகுமா?’ என்று? சில செடிகள் வளர்ந்தன. சில செடிகள் பட்டுப்போயின. கம்பெனி வேலைக்காரன், முனிசாமி. அவன் நினைத்தால் வருவான்; பல நாள் வராமலே இருந்துவிடுவான். இவ்வளவுக்கும் அவனுக்குத் தனியே இதற்காகப் பணம் கொடுத்தேன்.

ஆரம்பத்தில் எவ்வளவு உற்சாகம் இருந்ததோ, அது வர வரக் குறைந்தது. முதலில் கண்ட செடிகளையெல்லாம் வாங்கிக் கொண்டு வந்து வைத்தேன். எனக்குத் தெரிந்தவர்கள் மிகவும் தாராளமாகப் பல செடிகள் தந்தார்கள். ஒரு பிரயோசனமும் இல்லாத செடிகளெல்லாம் காடாக மண்டின. மல்லிகைச் செடிகள் நிதானமாகவே வளர்ந்தன. பாரிஜாத மரம் மாத்திரம் நன்றியுள்ள வேலைக்காரனைப்போல வஞ்சகமின்றிப் பூவைச் சொரிந்தது.

புதுவிட்டில் தனியாகப் பூசைக்கென்று ஒரு பெரிய அலமாரி அமைக்கச் செய்தேன். விக்கிரகங்களும் படங்களுமாக அதை நிரப்பினேன். மல்லிகைச் செடிகள் சில மலர்ந்தன. ஒவ்வொரு நாளும் காலையில் பவள மல்லிகை, செம்பருத்தி, மல்லிகை, முல்லை இவற்றைப் பறித்துத் தொடுத்துப் பூசை அலமாரியில் உள்ள படங்களை அலங்கரிப்பதுதான் முக்கியமான வேலையாகப் போய்விட்டது. செவ்வந்திப்பூவும் ரோஜாப்பூவும் இருந்தால் நிறநிறமாக இருக்கும் என்று அந்தச் செடிகளை வாங்கி வைத்தேன். செவ்வந்திச் செடி காடுபோல் கிளைத்தது; பூவே பூக்கவில்லை. ரோஜாச்செடியோ வாடவும் இல்லை; வளரவும் இல்லை; பூவும் இல்லை; மலடியாக நின்றது.

செங்கமலம் இந்தச் செடிகளைப் பார்த்துக் கொஞ்சம் வியப்பை அடைந்தாள் என்றுதான் தோன்றுகிறது. அதோடு அவளுக்கு ஏமாற்றமும் உண்டாயிற்று.

“நான் இப்போதெல்லாம் ரோஜாப்பூவும் செவ்வந்திப்பூவுந்தான் வெள்ளிக்கிழமைகளில் வெளியில் வாங்குகிறேன். நீயே இனிமேல் கொண்டுவந்து கொடு. அது சரி; நான் நாராயணனைப் பார்க்கவேண்டுமே!” என்றேன்.

“வரச்சொல்லுகிறேன், அம்மா.”

அந்த வெள்ளிக்கிழமை அவள் ரோஜாப்பூக் கொண்டுவந்து தந்தாள். உடனே பணம் கொடுத்தால் நல்லது என்று. சொன்னாள். நான் கையில் நாலணாக் கொடுத்து அனுப்பினேன். நாராயணன் வரவில்லை.

ஒரு நாள் அவன் வந்தான். ஷவரம் செய்து கொண்டு எத்தனை நாளாயிற்றோ தெரியவில்லை. செங்கமலத்தைவிட அவன் இளைத்திருந்தான். இடையில் ஒரு கந்தல் துணி. “ஏண்டா இப்படி ஆகிவிட்டாய்?” என்று கேட்டேன்.

“என் தலைவிதி அம்மா. நான் கெட்டது போதாது என்று அவளையும் தொந்தரவு படுத்துகிறேன்” என்று சொல்லிக் கண்ணீர் சிந்தினான்.

“என்ன சமாசாரம்?”

“என் மாமனை நம்பிப் போய்த் தரித்திரத்தை விலைக்கு வாங்கிக் கொண்டேன். கூலிவேலை கிடைக்கிறதில்லை. குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை. செங்கமலம் ஓடியாடி நாலு காசு கொண்டுவந்தால் கஞ்சி கிடைக்கிறது. எனக்கு ஏண்டா உயிரோடு இருக்கிறோம் என்று ஆகிவிட்டது. அந்தப் பெண்பிள்ளை கண் கசங்குமே என்று பார்க்கிறேன். இது பழைய பட்டணம் இல்லை அம்மா: சூதுக்காரப் பாவிகளுக்குத்தான் இங்கே செல்லுபடி ஆகும்.”

அவன் மனம் நொந்து பேசினான்.

“ஆண் பிள்ளை வீட்டில் குந்திக்கிடக்கப் பெண் பிள்ளை சம்பாதித்து எவ்வளவு நாளைக்குத் தாங்கமுடியும்? மூட்டை தூக்கியாவது பிழைக்கலாம் என்றால் அதற்கும் வக்கில்லை. என்னைக் கண்டாலே அவர்களுக்குப் பரிகாசமாக இருக்கிறது. உங்களை வந்து பார்க்கவேண்டும் என்ற ஆசைதான். ஆனால் இந்தக் கோலத்தோடு வர வெட்கமாக இருந்தது.”

என்னடா நீ இப்படிப் பேசுகிறாய்? அப்போது எல்லாம் எவ்வளவு சுறுசுறுப்பாக இருந்தாய்!

“அதெல்லாம் பழைய கதை அம்மா. வீட்டில் நானே கஞ்சி காய்ச்சுகிறேன். பெண் பிள்ளை ஆண் பிள்ளையைப் போலச் சம்பாதிக்கிறாள். ஆண் பிள்ளை பெண் பிள்ளையைப்போலக் கஞ்சிகாய்ச்சுகிறேன்.”

“ஏன், செங்கமலம் சமைக்க மாட்டாளா?”

“அவள் நன்றாகச் சமைப்பாள்; நான்தான் விடுகிறதில்லை. அவள்தான் காலை நேரம் முழுவதும் எங்கே மலிவாகப் பூக்கிடைக்கிறதென்று சுற்றி வாங்கி வருகிறாளே மாலையில் பூவிற்கப் போகிறாள். வீட்டிலே பூக்கட்டுகிறது, குழந்தைகளைப் பார்த்துக்கொள்கிறது, இதெல்லாம் வேறு இருக்கிறது.”'

“சமைப்பது பெண்பிள்ளைகளுக்கு ஒரு பாரமா?”

“அதில் ஓர் இரகசியம் இருக்கிறதம்மா. அதை நான் சொல்லமாட்டேன். ஆனாலும் நீங்கள் தெய்வம் போல; உங்களிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்லுவது? அவளுக்கு இது தெரிய வேண்டாம்.”

“என்ன அது?”

“எங்களுக்குக் கிடைக்கிறது எங்கள் இரண்டு பேருக்கும் குழந்தைகளுக்கும் சில சமயங்களில் போதுவதில்லை. உழைக்கிறவளுக்குக் கால் வயிறு கஞ்சியாவது கிடைக்காமல் போனால் எப்படி உழைக்க முடியும்? நானாவது குறைத்துக்கொள்ளலாம் என்று தோன்றியது. அவளுக்கு அது தெரியக்கூடாது. இதற்கு என்ன வழி என்று பார்த்தேன். நானே சமைக்கிறேன் என்று, அதற்குச் சில பொய்க்காரணங்களைச் சொல்லி அவளைச் சம்மதிக்கச் செய்தேன். அவள் வருவதற்கு முன் நானும் குழந்தைகளும் சாப்பிட்டுவிடுவோம். வந்ததும் அவள் தனக்கு வைத்திருப்பதைச் சாப்பிடுவாள். சில நாள் அரிசி போதுமான அளவு கிடைக்காது. அப்போது நான் சாப்பாட்டைக் குறைத்துக்கொள்வேன்; கஞ்சியை வடித்துக் குடிப்பேன்...”

எனக்கு உள்ளம் உருகியது. கண்ணில் நீர் மல்கியது.

“ஏன் உனக்கு வேலை கிடைக்கிறதில்லை?”

“அது எனக்கு எப்படித் தெரியும் அம்மா? முன் போல் என்னல் உழைக்க முடிகிறதில்லை. ஆனாலும் ஏதோ தோட்டவேலை செய்வேன்; வேறு ஏதாவது சில்லறை வேலை செய்வேன். என்னைக் கண்டால் யாருக்கும் வேலை செய்வேனென்று நம்பிக்கை உண்டாவதில்லையோ, என்னவோ? எதற்கும் முகராசி வேண்டாமா, அம்மா?”

அவனுடைய வார்த்தைகள் என்னை உருக்கி விட்டன. “இந்தா, இந்த இரண்டு ரூபாயை வைத்துக் கொள்” என்று கொடுக்கப்போனேன். அவன் வாங்கிக் கொள்ளவில்லை. “பட்டினி கிடக்க உடம்பில் வலு. இருக்கிறது, அம்மா. பிச்சை வாங்க உள்ளத்தில் வலுவில்லை. எங்கேயாவது கம்பெனிகளில் காவல்காரன் வேலை கிடைத்தால் உங்கள் வீட்டு ஐயாவிடம் சொல்லி வாங்கித் தரச் சொல்லுங்கள். எனக்கு உயிரையே கொடுப்பதாகும்” என்று சொல்லிக் கண்ணேத் துடைத்துக் கொண்டே அவன் போய்விட்டான்.

நான் வைத்த ரோஜாச் செடியைப் போலல்லவா அவன் ஆகிவிட்டான்? எனக்கு அன்று இரவு தூக்கமே வரவில்லை. இவரிடம் அவன் வறுமை நிலையைச் சொல்லி ஏதாவது வேலை வாங்கித் தரும்படி சொன்னேன்.

“இப்போதெல்லாம் கண்டவர்களை வேலைக்கு வைத்து கொள்ளமாட்டார்கள். யோக்கியர்கள் கிடைப்பது அருமை. அப்படிக் கிடைத்து வேலை கொடுத்தால் மற்றவர்களோடு சேர்ந்துகொண்டு வேலை நிறுத்தம், அது, இது என்று தொல்லை கொடுக்கத் தொடங்குகிறார்கள் ” என்று சொல்லிவிட்டார். -

அந்த வெள்ளிக்கிழமை செங்கமலம் வந்தாள். அவளிடம், “ஏண்டி, நாராயணனை இங்கே வந்து இந்தச் செடிகளுக்குத் தண்ணீர் விடச் சொல்லேன்” என்றேன்.

வேறு யாரோ தோட்டவேலை செய்கிறார்களே: அவர்களை மாற்றினால் சண்டைபிடிக்க மாட்டார்களா? என்று கேட்டாள்.

“அவன் தோட்ட வேலைக்காரன் அல்ல; எங்கள் கம்பெனியிலே வேலை செய்கிறவன். அவன் சரியாகவே வருகிறதில்லை. அவனுக்குக் கொடுக்கிறதை நாராயணனுக்குக் கொடுக்கிறேன். ஒழிந்தபோது வந்து கவனித்துக்கொள்ளட்டுமே!” என்றேன்.

“ஒழிந்தபோது என்ன அம்மா? எப்போதும் ஒழிவு தான்!”

நாராயணன் வந்தான். செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினான். அவனுக்கு அதே ஐந்து ரூபாயைக் கொடுக்க மனம் வரவில்லை. பத்து ரூபாயாகக் கொடுத்தேன். அதற்கே இவர் மிகவும் கோபித்துக்கொண்டார். “வண்டி வண்டியாகப் புழுதி மண்ணை எருவென்ற பெயரில் பணம் கொடுத்து வாங்கிப் போட்டாய். எனக்குத் தெரிந்தும் தெரியாமலும் விலைக்குச் செடி வாங்கி வந்தாய். பூச்சட்டிகள் மூலைக்கு ஒன்றாகக் கிடக்கின்றன. அவையெல்லாம் அடிக்கடி உண்டாகும் செலவு அல்ல, போகட்டும் என்று சும்மா இருந்தேன். இப்போது என்னவென்றால், நிரந்தரச் செலவை நூறு சதவிகிதம் உயர்த்திவிட்டாய் ” என்று வியாபார தோரணையில் கடிந்து கொண்டார்.

“பாவம்! ஓர் ஏழை பிழைத்துப் போகட்டும்” என்றேன்.

“நீ தோட்டம் போடுகிறாயா? அன்ன சத்திரம் கட்டுகிறாயா? மாசம் பத்து ரூபாயில் ஒரு குடும்பத்தைக் காப்பாற்றிவிடலாம் என்று நம்புகிறாயா!”

இவருக்கு நான் என்ன பதில் சொல்வேன்? எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி நாராயணனை வேலைக்கு வைத்துக்கொண்டேன். மாசம் பத்து ரூபாய் கொடுத்தேன். அப்படியும் அவனுக்கு விடியவில்லை. செங்கமலம் கருத்தரித்துக் குறையாகப் பிரசவித்து, ஆஸ்பத்திரியில் கிடந்தாள். இருபது ரூபாய் இவருக்குத் தெரியாமல் நாராயணனுக்குக் கடன் கொடுத்தேன். அவன் வறுமை விடியா இரவாகவே இருந்தது. எனக்குப் பரிதாபமாக இருந்தது. ஆனால் அதை மாற்ற நான் யார்?

நாராயணன் வஞ்சகம் இல்லாமல் வேலை செய்தான். பூச்செடிகளை நன்றாகப் பாதுகாத்தான். புதிய செடிகளை வைத்தான்.

எனக்கு ஒரு நாள் ஒரு யோசனை தோன்றியது. பணமாக நமக்குக் கொடுக்க முடியாது. வேறு வகையில் அவனுக்கு உதவி செய்தால் என்ன என்று எண்ணினேன். எங்கள் வீட்டில் கிடைக்கிற பூவில் கொஞ்சம் செங்கமலத்துக்கு இனாமாகக் கொடுத்தால், அவள் அதைக் கட்டி விற்று ஏதோ கொஞ்சம் லாபம் அடைவாளே என்று எண்ணினேன். ஒரு நாள் ஒரு சிறு வட்டிலில் பூவை எடுத்து அவனிடம் கொடுத்து, என் கருத்தைச் சொன்னேன்.

“அம்மா, என்னை மன்னிக்க வேண்டும். உங்கள் தெய்வத்தை வஞ்சித்து எங்களுக்குத் தர்மம் செய்ய வேண்டாம். இப்படிச் செய்தால் நாளைக்கு என் மனசில் சபலம் தட்டும். உங்களுக்குத் தெரியாமல் பூவை விற்கும் ஆசை உண்டாகலாம்.”

“என்ன அப்படிச் சொல்கிறாய்? உன்னிடத்தில் எனக்குப் பரிபூரண நம்பிக்கை உண்டு.”

“நீங்கள் எனக்கு வேலை கொடுத்ததே போதும் அம்மா, இந்தத் தானம் வேண்டாம்” என்று சொல்லிவிட்டான். அவனுடைய உள்ளக்கிடக்கை எனக்கு விளங்கவே இல்லை.

ஒரு நாள் மத்தியான்ன வேளையில் செங்கமலம் வந்தாள். “எங்கே இந்த நேரத்தில் வந்தாய்” என்று கேட்டேன்.

“எங்கள் தெய்வத்தைப் பார்க்க வந்தேன்” என்றாள்.

“என்னடி இது, தோத்திரம் செய்யப் புறப்பட்டு விட்டாய்?” என்று சிரித்துக்கொண்டே கேட்டேன்.

“ருசி கண்ட பூனை என்னவோ செய்யும் என்று சொல்வார்களே; அப்படி இருக்கிறதம்மா எங்கள் நிலை. நீங்கள் பூவைக் கொடுத்துக் கட்டி விற்கச் சொன்னிர்களாம்.”

“ஆமாம். அவனுக்கு எத்தனை ஆணவம் வேண்டாம் என்று சொல்லிவிட்டானே!”

பொய்க் கோபத்தோடு பேசினேன்.

“எங்களைப் பிச்சைக்காரர்கள் ஆக்கிப் பிச்சை போட உங்களுக்கு ஆசையா அம்மா? உழைப்பாளியாக்கி ஊதியம் பெறச் செய்தீர்கள். அப்படியே இருக்கிறதைத்தான் அவர் விரும்புகிறார்.”

“நீ நன்றாகப் பேசுகிறாயே!”

“நான் வந்த காரியத்தைச் சொல்கிறேன்; நீங்கள் தவறாக நினைக்கக்கூடாது.”

“முகவுரை போதும்; காரியத்தைச் சொல்.”

“இந்த வீட்டில் இன்னும் நிறையப் பூச்செடிகளை வைத்து நன்றாப் பாடுபட்டால் அழகான பூந்தோட்ட மாக்கிவிடலாம் என்கிறார் அவர்.”

“செய்யட்டுமே!”

“நாள் முழுவதும் உழைத்தால்தான் அப்படிச் செய்ய முடியும். விடாமல் உழைத்தால் அதற்குப் பயன் உண்டு.”

“உழைக்கட்டுமே!”

“பத்து ரூபாய்க்கு நாள் முழுவதும் உழைக்க முடியுமா?” என்று சொல்லி அவள் சிரித்தாள்.

“ஏது? சம்பளம், கணக்கு எல்லாம் பார்க்கிற நிலைக்கு வந்துவிட்டாயா?” என்று முகத்தைச் சுளித்துக் கொண்டே சொன்னேன்; ’நன்றியில்லாத சென்மங்கள்' என்று என் உள்ளே ஒரு குரல் எழுந்தது.

“ஐம்பது ரூபாய் தந்தால் உழைக்கலாம்.”

செங்கமலந்தான் பேசினாள்.'

“என்ன!” எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. அஞ்சு ரூபாயைப் பத்து ரூபாயாக்க இவரிடம் நான் கெஞ்சியது கடவுளுக்கல்லவா தெரியும்?

செங்கமலம் கலகலவென்று சிரித்தாள். அவளிடம் அந்தச் சிரிப்பைப் பார்த்து எவ்வளவோ காலம் ஆகிவிட்டது. ஆனாலும் எனக்குக் கோபம் தாங்கவில்லை.

“என்னடி இது நாடகம்?”

செங்கமலம் கையைக் குவித்துக் கும்பிட்டாள்; “பெற்ற தாயிடத்தில் பேரம் பேசின என் நாக்கை அறுத்துவிடுங்கள், அம்மா. விளையாட்டுக்குச் சொன்னேன். நாங்கள் இருவரும் ஒரு யோசனை பண்ணினோம். உங்களிடம் இந்தப் பத்து ரூபாயைக்கூட வாங்காமல் உழைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம்.”

‘ஐம்பது ரூபாய் சம்பளம் கேட்டவள் இப்போது பத்து ரூபாய்கூட வேண்டாம் என்கிறாளே! இது என்ன சாலக்கு?’ நான் விழித்தேன்,

“என்னைப் பெற்ற தாய் நீங்கள்; தெளிவாகச் சொல்கிறேன். இங்கே இன்னும் பல செடிகளை வைத்துத் தோட்டத்தை விருத்தி பண்ண அவர் ஆசைப்படுகிறார்.

ரோஜா, செவ்வந்தி எல்லாம் வைத்து எருவிட்டுப் பயிரிட்டால் நல்ல பலன் கிடைக்கும். உங்களுக்கும் உங்கள் பூசைக்கும் வேண்டிய பூக்களை ஏராளமாகக் கொடுத்துப் பாக்கியுள்ளதை நாங்கள் உபயோகப் படுத்திக்கொள்ளலாம். அதனால் எங்கள் குடும்பம் பிழைக்கும். உங்களுக்கும் விற்கிறதில் ஒரு பங்கு கொடுக்கலாம் என்று அவர் சொல்கிறார்.”

யோசனை மிகவும் நன்றாக இருந்தது. "போடி, பைத்தியக்காரி எனக்குப் பங்கு வேண்டாம். தோட்டமும் நீங்களும் நன்றாக இருந்தால் போதும். எருவுக்குப் பணம் தருகிறேன்.”

மேலே புதிய ஏற்பாடு செயலுக்கு வந்தது. செங்கமலமும் உழைத்தாள், நாராயணனும் உழைத்தான்.

இப்போது ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. எங்கள் வீட்டுக்கு வந்து பாருங்கள். எங்கே பார்த்தாலும் மலர்கள்; நாராயணன் உழைப்பின் விளைவு அது. ரோஜாப்பூவைப் பார்ப்பேனா என்று ஏங்கின நான் தினந்தோறும் முருகனுக்கு ரோஜாப்பூ மாலை சாத்து கிறேன்.

புதிய ஒப்பந்தத்தின்படி வேலை தொடங்கிய பிறகு வாங்கின எருவுக்குக் கணக்கு வைத்துக்கொண்டு, “இந்தப் பணத்தையாவது நீங்கள் வாங்கிக்கொள்ளத் தான் வேண்டும்” என்று நாராயணன் மன்றாடுகிறான்.

எங்கள் வீட்டுத் தோட்டம் மாத்திரமா அழகு பெற்று விளங்குகிறது? செங்கமலம் புதிய பொலிவுடன் விளங்குகிறாள். நாராயணன் பழைய பிச்சைக்கார வேஷத்தோடா இருக்கிறான்?

ஒரு நாள் இவர் அவனோடு பேசுவதை நான் கேட்டேன். “ஏண்டா, உன் பெண்டாட்டியை எந்த ஆஸ்பத்திரியில் சேர்க்கப்போகிறாய்?” என்றார் இவர்.

“நீங்கள் சொல்லுங்கள்; அங்கே சேர்த்து விடுகிறேன்.”

“பெண் வேண்டுமா, பிள்ளை வேண்டுமா?’” என்றார் இவர்.

“பெண் தான் பிறக்கும் சாமி, அந்தப் பெண்ணுக்குப் பெயர்கூடத் தயாராக இருக்கிறது.”

“என்ன பெயர்?”

“நம் வீட்டு அம்மா பெயர்தான் சாமி!”

எனக்கு உள்ளத்துக்குள்ளே ஒரு கிளுகிளுப்பு!

"https://ta.wikisource.org/w/index.php?title=கோயில்_மணி/மலர்ச்சி&oldid=1382670" இலிருந்து மீள்விக்கப்பட்டது