கோயில் மணி/நிறைவு

விக்கிமூலம் இலிருந்து

நிறைவு

ர்வத குமாரி என்று அவளுக்கு அவள் தந்தை பெயர் வைத்தார். பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதெல்லாம் அதைத்தான் அவள் வைத்துக்கொண்டிருந்தாள். வீட்டில் அவள் பர்வதந்தான். அம்மா, அப்பா இருவரும் பர்வதம் என்றே அழைத்தார்கள். அவள் கல்லூரிக்கு வந்தாள். பர்வத குமாரி என்பது நீண்ட பெயராகத் தோன்றியது. அதைச் சுருக்கிக் குமாரி என்றே வைத்துக் கொண்டாள். இப்படியாக அவள் பெயரை இரண்டாக விண்டு வீட்டில் பர்வதமென்றும், கல்லூரியில் குமாரி என்றும் அழைக்கலானார்கள்.

அவள் படிப்பிலே அவள் தந்தை அதிகக் கவனமாக இருந்தார். மலையத்துவச பாண்டியன் மீனாட்சியை ஆண் குழந்தையைப் போலவே வளர்த்துப் படிப்பும் சொல்லிக் கொடுத்து ஆனையேற்றம், குதிரையேற்றம் எல்லாம் பழக்கி வைத்தானாம். குமாரியும் அப்படித்தான் வளர்த்தாள். அருணாசல வாத்தியாருக்கும் அவள் ஒருத்திதான் குழந்தை. அவர் சின்னப் பள்ளிக்கூடத்து வாத்தியாரானாலும் கையைக் கட்டி, வாயைக் கட்டி, ‘டியூஷன்’ சொல்லிக் கொடுத்து வந்த பணத்தைக் கொண்டு தம் மகளைப் படிக்க வைத்தார். அவள் எது கேட்டாலும் வாங்கிக் கொடுத்தார். கல்லூரியில், “நான் பி. எஸ்சி. யில் தான் சேருவேன்” என்று பிடிவாதம் பிடித்தாள். தடை சொல்லாமல் அதில் அவளைச் சேர்த்தார். ‘பொறியியல் கல்லூரியில் சேருவேன்’ என்று சொல்லியிருந்தாலும் எந்த மந்திரி காலிலாவது விழுந்து அதில் சேர்த்திருப்பார். அந்தக் காலத்தில் பெண்களுக்கு அவ்வளவு தூரத்துக்குத் துணிவு உண்டாகவில்லை.

அவள் சுறுசுறுப்பாகப் படித்தாள். “உங்கள் மகள் டாக்டராகப் போகிறாளாமே!” என்று யாரோ அவள் தந்தையைக் கேட்டார். அதற்கு ஊர்ப்பட்ட பணம் செலவாகுமென்று அவருக்குத் தெரியும். பெண்களுக்கு ஏற்ற வேலைதான் அது. ஆனால் பணத்துக்கு எங்கே போவது? இப்படி முதலில் மலைத்தாலும், முடிந்தால் எப்படியாவது தம் பெண்ணை மருத்துவக் கல்லூரியில் சேர்த்து விடுவதென்று உள்ளூற எண்ணிக் கொண்டிருந்தார். நாம் நினைக்கிறபடியெல்லாம் நடக்குமா? குமாரி—அவருக்குப் பர்வதம்—கல்லூரியில் பி. எஸ்ஸி. படித்து முடிப்பதற்கும் அவருக்குப் பாரிச வாயு வருவதற்கும் நாள் பார்த்து வைத்தது போலப் பொருத்தம் அமைந்தது. இனிமேல் அந்த மூன்று பேருக்கும் சாப்பாட்டுக்கு முதலில் வழிபண்ண வேண்டுமே! கடைசியில் குமாரியே ஒரு தீர்மானத்திற்கு வந்தாள். பல்லைக் கடித்துக்கொண்டு இன்னும் ஓர் ஆண்டு ஆசிரியப் பயிற்சி பெற்று, பி. டி. பட்டத்தையும் கையில் வாங்கிக்கொண்டு எங்காவது ஆசிரியையாகப் புகுவது என்று உறுதி செய்தாள். அவள் தந்தையார் வேலை செய்து வந்த பள்ளிக்கூடத்தில் அவருக்கு மொத்தமாக ஒரு தொகை வழங்கினார்கள். அதை வைத்துக்கொண்டு பயிற்சிக் காலத்தைத் தள்ளி விடலாம்.

இதெல்லாம் பழைய கதை. இப்போது குமாரி ஊரில் மிகவும் பெயர் பெற்ற உயர்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியை. மாதம் 400 ரூபாய் சம்பளம் வருகிறது. பரீட்சை, பாடப் புத்தகம், அது இது என்று மேலே நூறு ரூபாய் வரும். பாவம்! அவளுடைய இந்த வசதியான நிலைமையைக் கண்டு களிக்க அவள் தந்தை இல்லை. ஆசிரியையாகி முதல் சம்பளம் வாங்கியதைத்தான் அவர் பார்த்தார். அதற்குமேல் தம் மகளுக்குப் பாரமாக இருக்கக் கூடாது என்று கண்ணை மூடினார். அவளுடைய தாய் மட்டும் மேலே பத்து ஆண்டுகள் வாழ்ந்தாள். பர்வதம், பர்வதம் என்று அடிக்கொரு தரம் கூப்பிட்டு வேண்டியதை வாய்க்கு இனியதாகத் தன் பெண்ணுக்குச் சமைத்துப் போட்டுக் கொண்டிருந்தாள். “அந்தப் பெயர் வேண்டாமே! குமாரி என்று கூப்பிடேன்” என்பாள் மகள். “ஆமாம். குமாரி என்ன? குழந்தை என்றே கூப்பிடலாம்!” என்று தாய் கூறுவாள்.

தன் கணவர் மறைந்தது சிறிது துயரத்தை உண்டாக்கினாலும் தன் மகள் சம்பாதிப்பதைக் கண்டு பெருமிதம் கொண்டாள், குமாரியின் தாய். ஆனால் அந்தப் பெருமிதத்தைக் குலைக்க அவளிடம் ஓர் ஆசை பிறந்தது. தன் பெண்ணின் வயிற்றில் ஒரு குழந்தை பிறந்து. அதைப் பார்த்துவிட்டுச் சாகவேண்டும் என்பது தான் அவள் ஆசை. இன்னும் கல்யாணமே ஆகவில்லையே! அதற்கு வழி உண்டான பிறகு தானே பிள்ளை பெறவேண்டும்?

முதலில் சாடை மாடையாகத் தன் கருத்தை அவள் தன் மகளிடம் சொல்லி வந்தாள்; “நீ பிள்ளையாகப் பிறந்திருந்தால் நான் நீ என்று பெண்கள் உன்னைத் தேடி வருவார்கள். இவ்வளவு நாளில் என் மடியில் ஒரு பேரக் குழந்தை தவழ்ந்து கொண்டிருக்கும். உன் வயசில் நான்........”

“போதும் அம்மா உன் புலம்பல். எனக்கு வேலை இருக்கிறது” என்று தட்டிக் கழித்து விடுவாள், குமாரி.

தாயும் எத்தனையோ சொல்லிப் பார்த்தாள். குமாரிக்கு இந்தச் சுதந்தர வாழ்வு பிடித்துவிட்டது. வீட்டுக்கு வந்தால் அம்மா உணவு சமைத்து ஆதரவுடன் போடுகிறாள். பள்ளிக்கூடம் போனால் பொறுப்பான வேலைகள் குவிந்திருக்கின்றன. ஒரு நாளில் இருபத்து நான்கு மணி நேரம் போதவில்லை. இதில் கல்யாணம் எதற்கு? சுதந்தரத்தைப் பறி கொடுத்துவிட்டு ஒரு முரட்டு ஆடவன் சொன்ன சொல்லுக்கெல்லாம் அடிமையாக ஆடி நிற்க வேண்டுமா?—அதைப் பற்றி அவள் சிந்திக்க மறுத்தாள். குமாரி, குமாரியாகவே இருந்தாள்.

இருபத்திரண்டாவது வயசில் அவள் வேலையில் புகுந்தாள். சாதாரண வாத்தியாரம்மாவாக இருந்து உயர் நிலைப் பள்ளி ஆசிரியையாகி, இப்போது சில ஆண்டுகளாகத் தலைமை ஆசிரியையாக இருக்கிறாள். அவள் தன் பதவியை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று பாடுபட்டாள். அந்தப் பள்ளிக்கூடத்தில் ஆட்சிக் குழுவினர் அத்தனை பேரும் பெண்மணிகள். ஆகவே, ஆடவர்களோடு அதிகமாகப் பழக வேண்டிய நிலையும் அவளுக்கு இல்லை.

எப்போதாவது ஏதாவது உணர்ச்சி வருமானால் கோயிலுக்குப் போவாள். யாரையாவது சாமியாரைப் போய்ப் பார்த்து வருவாள். இல்லாமற்போனால் கடுமையான விஞ்ஞான நூல் ஒன்றிலே ஆழ்ந்து விடுவாள். பருவத்தின் தளிர்ப்பான காலங்களை இப்படியே போக்கிவிட்டாள். அம்மா இருந்ததும் இந்த விரத வாழ்க்கைக்கு ஒரு பெருந்துணையாக இருந்தது.

இப்போது அம்மா இல்லை. அவள் இறந்து மூன்று ஆண்டுகள் ஆயின. அவளுக்கு வயசு முப்பத்தைந்து. அம்மா இருந்த வரையில் தனக்கு வயசாகி வருகிறது என்ற நினைவே அவளுக்குத் தோன்றவில்லை. வீடு இல்லையானால் பள்ளிக்கூடம், பள்ளிக்கூடம் இல்லையானால் வீடு—இப்படி அவள் போது கழிந்து கொண்டிருந்தது.

ஆனால் அம்மா போன பிறகு இந்த மூன்று ஆண்டுகள் எவ்வளவு நீண்டு வளர்ந்தன. வீடு வெறிச்சோடிக் கிடந்தது. யாரோ ஒரு கிழவியைக் சமையல் செய்ய அமர்த்தியிருந்தாள். அவள் அம்மா ஆவாளா? சமைத்துச் சாப்பாடு போட்டுவிட்டு அவள் எங்கேயாவது படுத்துத் துங்குவாள். வேலைக்காரப் பையன்தான் கூப்பிட்ட குரலுக்கு வந்து நிற்பான்.

அம்மா இருந்தபோது அவள் அருமை தெரியவில்லை. இப்போதுதான் அது தெரிந்தது. அவள் கல்யாணம் பண்ணிக்கொள்ளும்படி, குறிப்பாகவும் வெளிப்படையாகவும், சாந்தமாகவும் கோபமாகவும், கெஞ்சியும் மிஞ்சியும் சொன்ன வார்த்தைகளெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாய் நினைவுக்கு வந்துகொண்டே இருந்தன. ‘அம்மா சொன்னபடி கேளாமல் போனோமே!’ என்ற எண்ணங்கூடத் தோன்றியது.

இத்தனை, காலம் அந்தப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக இருந்ததனால், வெளியிலே எங்காவது சென்றால் அவளிடம் படித்த பெண்கள் பலர் கண்ணிற் பட்டார்கள். பெரும்பாலோர் குடியும் குடித்தனமுமாக வாழ்வதையே அவள் கண்டாள். இதோ நேற்று. மங்கையர்க்கரசி கையில் ஐந்து வயசுக் குழந்தையை அழைத்துக்கொண்டு வந்தாள்.

“அம்மா, இவனை ஆசீர்வாதம் செய்யுங்கள். உங்கள் பள்ளிக்கூடத்தில் இவனுக்கு இடம் கிடைக்காதே! இவன் ஆணாகப் பிறந்து விட்டானே!” என்றாள்.

“இருந்தால் என்ன? அடுத்தபடி வருகிற குழந்தையைச் சேர்த்துவிட்டால் போயிற்று!” என்றாள் குமாரி.

வந்தவள் முகம் முழுவதும் நாணம் பூத்துக் குலுங்கியது. அதில்தான் எத்தனை பூரிப்பு! “உங்கள் ஆசீர்வாதம் பலிக்கட்டும்” என்று மெல்லச் சொல்லிவிட்டு அவள் நழுவினாள். அவள் அப்போது கருவுற்றிருந்தாள் என்பதைக் குமாரி பிறகுதான் தெரிந்துகொண்டாள்.

இது இப்போது நினைவுக்கு வந்தது. ஆசி கூற நமக்கு என்ன உரிமை இருக்கிறது? பெண் குழந்தை பிறக்க வேண்டுமென்று பிறரை வாழ்த்தும் எனக்குக் குழந்தையைப் பற்றி என்ன தெரியும்? அவள் உள்ளத்தில் ஏதோ வெறுமை தோன்றியது.

அன்று கோயிலுக்குப் போயிருந்தாள். அம்பிகையின் சந்நிதிக்குப் போய்க் கொண்டிருந்தாள். கணவனும் மனைவியுமாக இரண்டு பேர், ஒரு குழந்தையோடு கோயிலுக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள். பெண் குழந்தை; எடுத்துக்கொள்ள வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தாள்.

கணவன், “இவளைச் சற்றே எடுத்துக் கொள்ளேன்” என்றான்.

“நீங்கள்தாம் சிறிது நேரம் இவளைச் சுமக்கக் கூடாதா ?” என்றாள் மனைவி.

“குழந்தைச் சுமையெல்லாம் உன்னுடனே இருக்கட்டும். அதுதான் நியதி” என்று சொல்லிப் புன்முறுவல் பூத்தான் கணவன். ஆனால் உடனே அந்தக் குழந்தையைத் தாவி எடுத்துக்கொண்டான்.

“எதற்கு எது பேச்சு?” என்று பொய்க் கோபத்தைக் காட்டினாள் அந்தப் பெண்.

இதைக் குமாரி பார்த்தாள். அவளுக்கு ஒரு கணம் ஒன்றுமே தோன்றவில்லை. உடம்பு குப்பென்று வியர்த்தது. தான் யாரும் இல்லாத பாலைவனத்தில் தன்னந்தனியே நிற்பதுபோலப் பட்டது. கோயிலுக்குக் கூடப் போகவில்லை. பேசாமல் வீட்டுக்கு வந்து தலைவலி என்று படுத்துக் கொண்டாள்.

அன்றுதான் அவளுக்குத் தன் வாழ்க்கையின் வெறுமை தெரிந்தது. அம்மாவின் வாயை அடைக்க அவள் எத்தனை பேசியிருக்கிறாள்! சுதந்தரம் என்றும், அடிமை வாழ்வென்றும், ஆணும் பெண்ணும் சரி நிகர் சமானமென்றும், பெண்ணை ஆண் அடக்கி வாழும் வாழ்வுக்கு இடம் கொடுக்கக் கூடாதென்றும் அவள் பேசியிருக்கிறாள். மாலையில் கோயிலில் பார்த்த கணவன். மனைவி, குழந்தை என்ற மூன்று பேரையும் தன் உளக் கண்ணில் இப்போது கொண்டுவந்து நிறுத்திக்கொண்டாள். என்ன நிறைவான வாழ்க்கை! என்ன நுட்பமான அன்பு! அவளுக்கு அது புரிந்தது போலவும் இருந்தது; புரியாதது போலவும் இருந்தது. அவள் தன் அம்மாவை நினைத்துக்கொண்டு அழுதாள், விம்மினாள்; அப்படியே தூங்கிப்போய்விட்டாள்.

அன்று முதல் அவள் பார்வையிலேயே மாற்றம் உண்டாகிவிட்டது. சின்னஞ் சிறு குழந்தையைக் கண்டால் அழைத்து ஏதாவது கையில் கொடுப்பாள். அது போனவுடன் பெருமூச்சு விடுவாள். தாயும் குழந்தையும் சேர்ந்திருந்தால் கூர்ந்து பார்ப்பாள். கணவனும் மனைவியுமாகச் சென்றால் மறைந்து பார்ப்பாள்; குறிப்பாகப் பார்ப்பாள். தன் வாழ்வே சூனியமாகிவிட்டது என்ற உணர்ச்சி அவளிடம் தோன்றி வளரத் தொடங்கியது.

அவளுக்கு என்ன குறைவு? சொந்த வீடு கட்டிக் கொண்டிருக்கிறாள். நல்ல வேலை, மதிப்புக்கும் குறைவில்லை. ஆயிரத்தைந்நூறு பெண் குழந்தைகளும் அறுபது ஆசிரியைகளும் அவள் குடும்பம். மாதந்தோறும் கை நிறையப் பணம் வருகிறது. பாங்கில் நிறையப் பணம். இன்னும் என்ன வேண்டும்? சுதந்தரமான வாழ்வு. அவள் நினைத்தால் நினைத்ததைச் செய்யலாம். யாரையாவது கேட்க வேண்டுமா ?

ன்று ஒரு நாள் குமுதினி அவளைப் பார்க்க வந்திருந்தாள். அவள் பள்ளிக்கூடத்தில் படித்தபோதே மிக நன்றாகப் பாடுவாள். அதற்காகப் பரிசும் வாங்கியிருக்கிறாள். இன்னும் இரண்டு நாளில் ஒரு விழா அந்தப் பள்ளிக்கூடத்தில் நடக்கப் போகிறது. அதில் குமுதினியைப் பாடச் சொல்லலாம் என்று எண்ணினாள். தன் விருப்பத்தைக் குமாரி அவளிடம் கூறினாள்.

“நீங்கள் சொன்னால் வரமாட்டேனா அம்மா ? ஆனால்...” அவள் சிறிது தயங்கினாள்; “அவரிடமும் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வந்து சொல்கிறேன்” என்றாள். அப்படிச் சொன்னபோது அவள் முகத்தைப் பார்த்தாள் குமாரி. அடிமை, எசமானுக்குப் பயந்து சொல்வது போலவா அவள் சொன்னாள்? அவள் முகத்தில் ஒரு பெருமிதம், ஒரு நிறைவுதான் தோன்றியது.

இவ்வளவுக்கும் அந்தக் காலத்தில் பள்ளிக்கூடத்தில் குமுதினி எவருக்கும் அடங்காதவள் என்று பெயர் வாங்கினவள். சுதந்தர உணர்ச்சி பெற்றவள் என்று ஆசிரியைமார்கள் பேசிக்கொள்வதுண்டு. இப்போது, அந்த உணர்ச்சி போய் அவள் அடிமையாகி விட்டாளா? இப்படி நினைப்பதே முட்டாள்தனம் என்று குமாரிக்குத் தோன்றியது.

இப்போது அதை எண்ணிப் பார்த்தாள். குமுதினி ஏற்றுக்கொண்ட இன்ப அடிமை வாழ்வுக்காக எதனை வேண்டுமானலும் தியாகம் செய்யலாம் என்று தோன்றியது.

குமாரிக்கு அவரிடம் மதிப்பும் மரியாதையும் உண்டாயின. அவரும் ஒரு பள்ளிக்கூடத் தலைமையாசிரியர்தாம். வயசு நாற்பது இருக்கலாம். வேலாயுதம் என்று பேர். தன்னைப்போல அவர் பேரை உடைத்துக் கொள்ளவில்லை என்பதை உணர்ந்து கொண்டாள். ஆசிரியர் கூட்டங்களில் அவரைத் தெரிந்துகொண்டாள். அவருடைய பண்பு அவளுக்குப் பிடித்திருந்தது. கொஞ்சம் அதிகமாகவே அவருடன் பேசினாள். அம்மா போனதற்குப் பிறகு மனசு பொருந்தப் பேசுவதற்கு யாரும் இல்லை. அவரிடம் மனசு பொருந்துவது போல ஒரு பிரமை உண்டாயிற்று. ஒரு நாள், “நீங்கள் எங்கே குடியிருக்கிறீர்கள்?” என்று கேட்டு அவர் விலாசத்தைத் தெரிந்து கொண்டாள். ஏதோ ஒன்றைப் பற்றி விளக்கம் தெரிந்துகொள்ள அவரைத் தன் வீட்டுக்கு அழைத்தாள். அவர் வந்து பள்ளிக்கூட நிர்வாகம் சம்பந்தமாகக் குழப்பமாக இருந்த அரசியலார் உத்தரவை விளக்கமாகச் சொன்னார். இப்படியே இருவருக்கும் பழக்கம் முதிர்ந்தது. ஆனால் அந்த உறவினிடையே உள்ளத்தின் ஆழத்தில் உள்ள பூநரம்பைத் தொடும் உணர்ச்சி ஒன்றும் உண்டாகவில்லே. அவர் குடும்பி அல்லவா ?.

ஆனால் அன்று அவளுக்கு உலகம் மீண்டும் சுவையுடையதாகத் தோன்றுவது போல இருந்தது. காரணம் இதுதான் ; அவர் வந்திருந்தார். “அடுத்த முறை நீங்கள் வரும்போது உங்கள் மனைவியையும் அழைத்துக்கொண்டு வரவேண்டும்” என்று சொன்னாள் குமாரி. அவர் சற்றே தடுமாறிப் பிறகு தெளிந்து, “அதற்கு நான் பாக்கியம் செய்யவில்லை” என்றார்.

உடனே - குமாரியின் கற்பனை எப்படி எப்படியோ ஓடிவிட்டது. இவரும் நம்மைப் போலவே மணம் ஆகாதவரா ? இவர் வயசும் நம் வயசும்? கல்யாணம், கார்த்திகை... கொட்டு மேளம்... குழந்தை—எல்லாம் சினிமாவைப் போல அவள் உள்ளத்திலே ஓடின.

“என்ன யோசிக்கிறீர்கள்?” என்று வேலாயுதம் கேட்டார்.

“ஒன்றும் இல்லை. உங்களுக்குத் திருமணம் ஆகவில்லையேயென்று...”

“இல்லை, இல்லை. நான் மணமானவன்தான். ஆனால் இன்று அவள் இல்லை. என் கையில் ஒரு பச்சிளம் குழந்தையைக் கொடுத்துவிட்டு நான்கு ஆண்டுகளுக்கு முன் அவள் நித்தியப் பொருளோடு கலந்துவிட்டாள்” -- ஒரு பெருமூச்சு.

“மன்னிக்க வேண்டும். உங்கள் உணர்ச்சியைக் கிளறிவிட்டேன்.”

அவர் விடை பெற்றுக்கொண்டார்.

அன்று இரவு அவளுக்குத் தூக்கமே இல்லை. அவரைப்பற்றித் தான் முதலில் நினைத்ததைப் போல அவர் பிரம்மசரியாகவே இருந்திருந்தால்? இந்தப் பருவம் அல்லாத பருவத்தில் தான் ஆசைப்படுவது தவறு என்று தோன்றினாலும், வேண்டுமென்றே யாரோ ஒருவர் ஆசை காட்டி மோசம் செய்தது போன்ற ஏமாற்றம் உண்டாயிற்று, என்ன என்னவோ எண்ணினாள். இப்போது மற்றொரு யோசனை தோன்றியது. பிரமசாரியாக இல்லாவிட்டால், என்ன? அவருக்கு மனைவி இல்லை; அவளும் தனி.

இந்த எண்ணத்தை வளர்த்து இன்புற்றாள். அதற்கும் ஒரு தடை எழுந்தது. அவருக்கு எத்தனை குழந்தைகளோ? அவள் குழந்தை பெற்று இறந்தாள் என்று சொன்னார். இந்தக் குழந்தைக்கு முன் எத்தனை குழந்தைகளோ?

இந்தக் கேள்விக்கு உடனே விடை தெரிந்து கொள்ள வேண்டுமென்று துடித்தாள். அந்த நள்ளிரவில் ஓடிச் சென்று, “உமக்கு எத்தனை குழந்தைகள்” என்று கேட்பதா?

பொழுது விடிந்தது. அன்று அவர் வரவில்லை. அவளுக்கு உடனே உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவல் அளவுக்கு மிஞ்சி எழுந்தது. அவரைத் தேடிக்கொண்டே போனாள். அவள் அங்கே போனது அதுதான் முதல் முறை.

வீட்டை அவர் எவ்வளவு சுத்தமாக வைத்திருந்தார்: அவள் போனபோது அவர் குழந்தைக்குக் கதை சொல்லிச் சோறு ஊட்டிக் கொண்டிருந்தார். வீட்டில் யாரோ ஒரு வேலைக்காரன் மட்டும் இருந்தான்.

போனவுடனே கேட்பாளா? ஏதோ சந்தேகம் கேட்பவளைப் போல வந்தாள். உண்மையான ஐயங்களையும் பேச்சுப் போகிற போக்கிலே தெரிந்து கொண்டாள்.

அவருடைய மனைவிக்கு மூன்று குழந்தைகள் பிறந்து யாவும் இறந்து போயின. இந்த ஒரு குழந்தைதான் உயிரோடு இருக்கிறது. ஆனால் தாய் இறந்து விட்டாள். அவர் இங்கே வந்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. முன்பு இருந்த ஊரில் எல்லா வசதியும் இருந்தும் மனைவி இறந்தமையால் மனம் பொருந்தாமல் இங்கே வந்து விட்டார்.

அதுமுதல் அவளுக்கு நம்பிக்கை பிறந்தது. அவள் தன் இளமைப் பருவத்தைத் தனியே போக்கி விட்டாலும் இனியாவது ஒரு துணையுடன் வாழலாமே! காதல் என்பது பருவத்தோடு போய் விடுவதா? உள்ளம் ஒன்றி வாழ்வதற்கு எந்த வயசானால் என்ன? அவளுக்கு ஒரு துணை வேண்டும். அதற்கு மேல் ஒரு குழந்தை வேண்டும்.

எப்படியோ இருவரும் குறிப்பாகப் பேசிக் கொண்டார்கள். ஒருவர் மற்றொருவர் எண்ணத்தைத் தெரிந்து கொண்டு வெளிப்படையாகவும் பேசினார்கள். “நான் இல்வாழ்வுச் சுகத்தை அநுபவித்தவன். நீயோ இந்த வாழ்வுக்குப் புதியவள். உனக்கு என்னால் முழுமை உண்டாகுமோ உண்டாகாதோ நான் அறியேன். என் வாழ்க்கைக்கு ஒரு துணை அவசியம். எனக்காக இல்லா விட்டாலும் இந்தக் குழத்தைக்காகவாவது ஒரு தாய் வேண்டும். அதனால் உன்னை மணம் செய்துகொள்ள இசைகிறேன். ஆனால், நாற்பது வயசான என்னிடம் இளம் பருவக் காளையிடம் காணும் இன்பத்தை எதிர்பார்க்க முடியாது என்பதை உணர்ந்து, உன் வாழ்வைத் தியாகம் செய்ய முன்வருவாயானால், உன்னை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன்” என்றார் வேலாயுதம்.

“நானும் முப்பத்தைந்து வயசுக் கிழவிதான். பேர் தான் குமாரி, என்னை மணக்கத் துணிந்த நீங்களே தியாகம் செய்கிறீர்கள். ஆண்களுக்கு நாற்பது வயசு என்பது ஒரு வயசு அல்ல. நாற்பது பிராயத்தில் மணம் செய்து கொண்டு பல பிள்ளைகளைப் பெற்றவர்கள் இருக்கிறார்கள். உங்களுடைய தூய உள்ளத்தில் எனக்கும் ஓர் இடம் கொடுக்க நீங்கள் துணிந்தால், இந்த உலக வாழ்வே சொர்க்க வாழ்வாகிவிடும் எனக்கு."

“இன்னும் நன்றாக யோசனை பண்ணி உன் தீர்மானத்தைச் சொல்” என்று சொல்லி விடைபெற்றார் அவர்,

அவளுக்கு அவரை மணம் செய்து கொள்வதில் ஆசைதான். கணவன் கிடைப்பது மட்டும் அன்று; கொஞ்சுவதற்கு ஒரு குழந்தையும் உடனே கிடைக்கிறதல்லவா? அவருக்குள்ள பொறுப்பை அவள் ஏற்றுக் கொள்வாள். அந்தக் குழந்தைக்குத் தாய் இல்லாத குறை தீரும்படி செய்யலாம். அவருக்கும் வாழ்க்கைத்துணை இல்லாத குறை தீரும். தனக்கோ?—அவள் இப்போதே இன்பவாழ்வின் உச்சியில் இருப்பதாக எண்ணிப் பூரித்தாள்.

மறுபடியும் அவள் நெஞ்சு சற்றே திசைமாறியது. நாற்பது பிராயத்தில் மணம்செய்து கொண்டு பல பிள்ளைகளைப் பெறும் ஆண்களைப் பற்றித் தான் சொன்னது நினைவுக்கு வந்தது. கல்யாணத்துக்குப் பிறகு அவளுக்கும் குழந்தை பிறக்கும் அல்லவா? அப்போது இந்தக் குழந்தையை அன்பு குறையாமல் வளர்க்க முடியுமா? அவள் கேட்ட பல கதைகள் நினைவுக்கு வந்து குழப்பின. இன்பக் கனவு காணும்போது திடீரென்று படுக்கையிலிருந்து புரண்டு கீழே விழுந்தது போல இருந்தது. மேலே எண்ணத்தை ஒடவிடாமல் நிறுத்தினாள். பிறகு தூங்கிப்போனாள்.

தனக்கும் பல பிள்ளைகள் பிறந்தால்?

பிறக்காமல் பண்ணிக் கொள்ளலாமே!

சொந்தக் குழந்தையைப் போல அயலார் குழந்தை ஆகுமா?

எது அயலார் குழந்தை? அந்தக் குழந்தைக்காகத் தானே அவர் அவளை மணம்புரிந்து கொள்கிறார்?

முப்பத்தைந்து வயசுப் பெண் பிள்ளைக்கு என்ன பிரமாதமான சுகம் கிடைத்து விடப்போகிறது?

அம்மாவுக்குப் பிறகு தன்னைக் கொல்லும் தனிமையைப் போக்க யாராவது துணை வேண்டாமா?

துணை வேண்டுமென்று சிக்கலை வரவேற்பதா? என்ன இருந்தாலும் முதல் மனைவியோடு நன்றாக வாழ்ந்தவருக்குத் தன்னிடம் தூய காதல் உண்டாகுமா? அதைக் காதல் என்றுசொல்வதற்கில்லை; அன்பென்று சொல்லலாமா? இரக்கம் என்று சொல்லலாமா?

தனக்கு இருக்கும் பணத்துக்காகக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறாரோ?

சீ! என்ன பேதைமை!

ஒரு வாரம் அவள் இப்படிக் குழப்பத்திலே தத்தளித்தாள். பிறகு அவளுக்குத் தான் கசங்காத மலராகவே இருந்துவிடவேண்டுமென்று தோன்றியது. ஆனால் தன் குறையை ஒருவாறு நிரப்பிக் கொள்ள வேண்டுமென்ற ஆவலும் தோன்றியது. ஒரு விதமாக யோசித்துக் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தாள். அவரை அழைக்கவும் இல்லை.

அவர் ஒரு கடிதத்தைத் தபாலில் எழுதிப் போட்டிருந்தார். நேரே கேட்க நாணம். கடிதம் சுருக்கமாகத் தான் இருந்தது: "நான் என்ன செய்வதென்று நீ இன்னும் முடிவு சொல்லவில்லை. நீ நன்றாக யோசிக்க இந்த ஒரு வாரம் போதுமானதென்றே எண்ணுகிறேன். நீயே தோற்றுவித்த சிறிய ஆவலுக்கு முடிவு காண ஆசைப்படுகிறேன்.”

இதைக் கண்டு அவள் பொருமினாள்; தான் தவறு செய்து விட்டதாக எண்ணினாள். இல்லை இல்லை, செய்ய இருந்த பிழையினின்றும் தப்பிவிட்டதாக எண்ணினாள். இரண்டு நாள் கழித்தே விடை எழுதினாள்.

“நன்றாக யோசித்துப் பார்த்தேன். ஏதோ அவசரத்தில் உங்களிடம் சொன்னேன். ஆனால் புதிய மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் துணிவு எனக்கு உண்டாகவில்லை. உங்கள் உள்ளத்தில் ஒருத்திக்குத்தான் இடம் இருக்க வேண்டும். ஆனால் என் இப்போதைய வாழ்க்கையில் எனக்கு ஒரு குறை இருக்கிறதை உணர்கிறேன். அதை நிரப்ப உங்களால் முடியும். நாம் முன்பு நினைத்தபடி அல்ல. நீங்கள் தயை செய்தால் எனக்கு அந்தக் குறை நீங்கும். எனக்கு ஒரு குழந்தை வேண்டும். நான் உங்களுக்கு மனைவியாக வர என் உள்ளம் தயங்குகிறது. ஆனாலும் உங்கள் குழந்தைக்குத் தாயாக இருக்கும் பேற்றை மாத்திரம் எனக்கு அருளுங்கள்.”

அவரிடமிருந்து வந்த கடிதம் அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. “ஆம், அப்போதே நினைத்தேன். முதலில் உணர்ச்சியால் நீ ஆசைப்பட்டாய், கன்னி ஆதலினால், வயசு ஆகிவிட்டதனால் சிறிது நிதானித்து ஆராய்ந்து உன் கருத்தைத் தெரிவித்திருக்கிறாய். இதை நான் வர வேற்கிறேன். உண்மையில் கடவுளே உனக்கு இந்த எண்ணத்தை உண்டாக்கியிருக்க வேண்டுமென்று நம்புகிறேன். என் குழந்தையின் வாழ்வுக்கு ஒரு பெண் ஆதாரம் ஆவதுபோல, நான் ஆக முடியுமா? உனக்கு என் குழந்தையை மனமார வழங்குகிறேன். உன் சகோதரனுடைய குழந்தையை நீ உரிமையோடும் அன்போடும் பார்த்துக் கொள்வாய் என்பதில் ஐயம் இல்லை.

“உன்னிடம் குழந்தையை விட்டுவிட்டு நான் முன்பு இருந்த ஊருக்கே போய் விடலாமென்று தீர்மானித்து விட்டேன். மனித மனம் பொல்லாதது. நாம் அருகில் இருப்பதை விட இப்படிப் பிரிந்து வாழ்வதில் அன்பும் தூய்மையும் வளரும்.”

அவள் உண்மையிலே நிறைவு பெற்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கோயில்_மணி/நிறைவு&oldid=1382669" இலிருந்து மீள்விக்கப்பட்டது