உள்ளடக்கத்துக்குச் செல்

கோயில் மணி/காலக் குழப்பம்

விக்கிமூலம் இலிருந்து

காலக் குழப்பம்

காட்சி—1

[பிரமதேவனும் நிலமகளும் சீட்டாடிக் கொண்டிருக்கிறார்கள். கலைமகள் தூரத்தில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறாள்.]

நிலமகள்: ஆட்டத்தைச் சரியாகப் பார்த்து ஆடுங்கள். தப்பு ஆட்டம் ஆடுகிறீர்களே!

பிரமதேவன்: என்ன தப்பாட்டம் கண்டுவிட்டாய்?

நிலமகள்: சாதிச் சீட்டு இருக்கும்போதே துருப்பைப் போட்டு வெட்டினர்களே! இப்போது இந்தச் சீட்டு எப்படி வந்தது?

பிரமதேவன்: எங்கே வெட்டினேன்?

நிலமகள்: சற்றைக்குமுன் வெட்டினீர்களே! இந்தத் தப்பாட்டம் வேண்டாம். மறுமடியும் எடுத்து ஆடுங்கள்.

பிரமதேவன்: சீட்டையெல்லாம் போடு. மறுபடியும் கலைத்துப் போடுகிறேன். பழையமாதிரி வேண்டாம்.

காட்சி-2

[திருவள்ளுவர் வீடு. தென்னங்கீற்று வேய்ந்த கூரை வீடு, வெளியில் கோலம்போட்ட திண்ணையும் மஞ்சள் பூசிய நிலையும். பின்பு இடைகழி. உள்ளே தறிபோடும் ஓசை கேட்கிறது. கொழுகொழுவென்ற உருவமுடைய கம்பர் வீட்டுக்குள் நுழைகிறார், அவருடன் அழகான மாது ஒருத்தியும் செல்கிறாள்.]
திருவள்ளுவர்: (எட்டிப் பார்த்தபடி) யார் அது?

கம்பர்: அடியேன்தான், கம்பன்.

திருவள்ளுவர்: அப்படியா? வரவேண்டும், வரவேண்டும். ஏது, மிகவும் அருமையாக இருக்கிறதே! (தறியை விட்டு வந்து வரவேற்கிறார்.)

கம்பர்: (கீழே விழுந்து வணங்கியபடியே) தங்களேப் பார்த்து ஆசிபெற்றுப் போகலாம் என்று வந்தேன். (எழுந்து நின்று) ஏ, வல்லி, நீயும் வந்து வணங்கு, (இடைகழியை நோக்கிச் சொல்கிறார்.)

திருவள்ளுவர்: அங்கே யார்? உன் மனைவியா?

கம்பர்: இல்லை, இல்லை. என் மனைவிதான் ஒரு பிள்ளையை வைத்துவிட்டு இறந்துபோய் விட்டாளே! இவள்தான் என் கவிதை வளர ஊக்கம் அளிக்கிறவள்.

திருவள்ளுவர்: ஆம், ஆம்: கேள்வியுற்றிருக்கிறேன். இந்தப் பெண்ணினுடைய வீட்டைத்தானே சடையப்ப வள்ளல் கதிரால் வேய்ந்தார்?

கம்பர்: ஆமாம்; தாங்கள் எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக்கொண்டிருக்கிறீர்களே!

வல்லி: குறள் இயற்றிய பெருமானுக்குத் தெரியாதது ஏதேனும் உண்டோ?

திருவள்ளுவர்: (சிரித்துக்கொண்ட) அமருங்கள், அமருங்கள். (உட்காருகிறார்.)

கம்பர்: (அமர்கிறார்) உங்கள் இல்லுறை தெய்வத்தைத் தரிசித்து வணங்கவேண்டுமென்று இவளுக்குப் பெரிய ஆர்வம். நான் இங்கே புறப்படுவது தெரிந்து தானும் வருவதாகப் புறப்பட்டுவிட்டாள்.

[வல்லி நின்று கொண்டே இருக்கிறாள்.]

திருவள்ளுவர்: ஏன், அப்படியே அமரலாமே!

வல்லி: தங்களுக்கு முன் நான் அமரலாமா? இப்படியே நிற்கிறேன்.

திருவள்ளுவர்: கம்பநாடனுக்கு முன் அமர்கிறது இல்லையோ?

கம்பர்: அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. இவள் என்னைச் சிலசமயங்களில் வெருட்டுவதைப் பார்த்திருந்தால் இவளுடைய வீரம் தங்களுக்குத் தெரியும்!

திருவள்ளுவர்: பெண்மையில் ஆண்மை போலும்!

கம்பர்: என்ன, தங்கள் திருமேனி இளைத்துப் போயிருக்கிறதே!

திருவள்ளுவர்: இளைப்பதா? எப்போதும் இப்படித்தான் இருக்கிறேன். நான் தொழிலாளிதானே? என் விருப்பப்படி உடம்பு கேட்கவேண்டுமானல் இவ்வாறு இருப்பதுதான் சரி. அது கிடக்கட்டும். நீ சுகமாக இருக்கிறாயா? உன்னுடைய இராமாயணத்தினுல் உலகமே இன்பத்தை அடைகிறது. பலரும் புகழ்கிறார்கள். புகழோடு பொருளும் இருக்கிறதல்லவா? வீடு, வாசல், தோப்பு, துரவு எல்லாம் இருக்கின்றனவா?

கம்பர்: எனக்கு எதற்கு அவை எல்லாம்? அழகான வீடு ஒன்றைச் சடையப்ப வள்ளல் கட்டித் தந்திருக்கிறார், மற்றப்படி எனக்குவேண்டிய எல்லாவற்றையும் அவர் தருகிறார். எனக்கு என்ன குறை? அந்தக் கற்பகம் இருக்கும்போது எனக்குக் கிடைக்காத பொருளே இல்லை.

திருவள்ளுவர்: இந்தப் பொன்னடை எந்த மன்னர் தந்தது?

கம்பர்: மன்னரா? எந்த மன்னரிடமும் நான் போவதில்லை. எனக்கு மன்னரும், மன்னர்களுக்கெல்லாம் மன்னரும், ஏன், தெய்வமும் கூடச் சடையப்ப வள்ளல்தாம். அவர் அளித்த பரிசுகளில் இது ஒன்று.

வல்லி: (கம்பரைப் பார்த்து) அன்னையைத் தரிசித்துக் கொள்ள வேண்டாமா?

[திருவள்ளுவர் எங்கோ பார்க்கிறார்.]

கம்பர்: (வல்லியிடம்) அவசியம் தரிசித்துக் கொள்ள வேண்டியதுதான். (திருவள்ளுவரை நோக்கி) எங்கள் எஞ்சிய விருப்பத்தையும் நிறைவேற்றி யருள வேண்டும்.)

திருவள்ளுவர்: (கனைக்கிறார்) வந்து...வாசுகியைத்தானே பார்க்கவேண்டும்? (தடுமாறுகிறார்.) அவளே இவ்வளவு நேரம் வந்திருப்பாள். ஆனால்...ஆனால்...

கம்பர்: (பரபரப்புடன்) என்ன சொல்கிறீர்கள்? அம்மா இங்கே இல்லையா?

திருவள்ளுவர்: இருக்கிறாள்; இப்போது எங்கேயாவது போயிருப்பாள். அவசியம் பார்க்கவேண்டுமா?

கம்பர்: ஆம்; அவர்களைப் பார்க்காவிட்டால் கோயிலுக்குச் சென்று இறைவளை மட்டும் தரிசித்து வந்தது போல ஆகாதா?

திருவள்ளுவர்: அப்படியும் சில சமயங்களில் செய்ய வேண்டியதுதான். கணவன் மனைவியாக யார் வந்தாலும் குறிப்பு அறிந்து வந்து உபசாரம் செய்கிறவள் அவள். ஏனோ வரவில்லையே!

கம்பர்: (சிறிது யோசனையில் ஆழ்கிறார்) ஒரு கால்....

திருவள்ளுவர்: ஒருகால் ....

வல்லி: ஒருகால்....

திருவள்ளுவர்: ஆம்; அதை நம் உள்ளம் அறிந்தால் போதும். அவளைப் பார்க்காவிட்டால் என்ன?

[வாசலில் ஏதோ ஆரவாரம், பலர் பேசுகிறார்கள், பல்லக்கிலிருந்து இறங்கி ஒட்டக்கூத்தர் உள்ளே வருகிறார். காதில் குண்டலம், தலையில் பாகை, மார்பில் மணிமாலைகள். தோளில் பொன்னாடை ஒரு பெரிய மன்னரைப் போலத் தோற்றம் அளிக்கிறார்.

உள்ளே வருகிறார்.]

கம்பர்: (திரும்பிப் பார்த்தபடியே) ஒட்டக்கூத்தர் வருகிறார் போல் இருக்கிறதே!

திருவள்ளுவர்: ஓ, வாருங்கள், வாருங்கள். கூத்தமுதலியாரவர்களா? யாரோ சக்கரவர்த்தி என்னைத் தேடிக் கொண்டு வருவதாக எண்ணினேன்.

ஒட்டக்கூத்தர்: (வந்து அமர்ந்தபடியே) சக்கரவர்த்திக்கும் எனக்கும் வேறுபாடு இல்லாததில் வியப்பே இல்லை. அவன் புவிச்சக்கரவர்த்தி; நான் கவிச்சக்கரவர்த்தி. புவிச்சக்கரவர்த்தியை உலகம் அறிவது நம் கவியினாலே தானே? அவனுக்கு இருக்கும் பெருமையும் செல்வ வாழ்வும் நமக்கும் கிடைப்பது தானே நியாயம்?... இவர் யார்?

திருவள்ளுவர்: கம்பரைத் தெரியாதா உங்களுக்கு? இராமாயணம் பாடிய கவிஞர் பிரான் ஆயிற்றே!

கம்பர்: அப்படியெல்லாம் தாங்கள். சொல்லக்கூடாது. நான் ஒரு சிறிய கவிஞன்; அவ்வளவுதான்.

ஒட்டக்கூத்தர்: கம்பரா! இவரா கம்பர்? இவர் என்னை வந்து பார்க்கிறதே இல்லை. சடையப்ப வள்ளலை அழைத்தால் வருகிறார். இந்த மனிதர் மட்டும் வருவதில்லை.

திருவள்ளுவர்: இங்கே வந்த காரியம் யாதோ?

ஒட்டக்கூத்தர்: ஒன்றும் இல்லை; நான் கூத்தனூரில் ஒரு கலை மகள் கோயில் கட்டலாமென்று தொடங்கிவிட்டேன். கவிஞர்களிடம் பொருள் பெற்று அதைக் கட்டி முடிக்கவேண்டும் என்பது என் எண்ணம். அதற்காக ஒவ்வொரு புலவராகப் பார்த்து வருகிறேன். உங்களையும் பார்க்க வந்தேன். கம்பரும் இங்கே இருந்தது நல்லதாகப் போயிற்று.

திருவள்ளுவர்: புவிச் சக்கரவர்த்திகளுடன் பழகும் உங்களுக்குக் கோயில் கட்டுவதற்கு வேண்டிய செல்வம் கிடைக்காதா? இப்படிப் பல புலவரிடம் தொகுக்க வேண்டிய அவசியம் இல்லையே!

ஒட்டக்கூத்தர்: அப்படி இல்லை. கவிஞர்களின் தெய்வம் கலைமகள். அவள் தொண்டில் எல்லாப் புலவரையும் ஈடுபடுத்த வேண்டும் என்பது என் கருத்து. நான் இன்னும் பல இடங்களுக்குப் போகவேண்டும். உங்கள் பங்கை இப்போதே பெற்றுக்கொள்ளலாம் அல்லவா?

திருவள்ளுவர்: (உள்ளே சென்று ஒரு வெள்ளை ஆடையை எடுத்து வந்து கொடுத்து) வெள்ளைக் கலையுடுத்தும் கலைமகளுக்கு என் உழைப்பின் பயனான காணிக்கை இது.

ஒட்டக்கூத்தர்: (அதை அலட்சியமாக வாங்கிக்கொண்டு, கம்பரை நோக்கி) என்ன புலவரே, உமக்கு ஏதாவது கொடுக்க விருப்பம் உண்டா ?

கம்பர்: சடையப்ப வள்ளலிடம் கலந்துகொண்டு சொல்கிறேன்.

[ஒட்டக்கூத்தர் திடீரென்று புறப்பட்டுவிடுகிறார்.]

வல்லி: போகலாமா?

திருவள்ளுவர்: ஆம், நேரமாகிவிட்டது; போய்வாருங்கள்.

[இருவரும் வணங்கிவிட்டுப் போகிறார்கள்.]

காட்சி—3

[வெளியே ஒட்டக்கூத்தர் பல்லக்கில் ஏறப்போகிறார். முறுக்கிய மீசையும் உருட்டிய கண்களும் கறுப்புச் சட்டையும் தலைப்பாகையுமாகப் பாரதியார் வருகிறார்.]

ஒட்டக்கூத்தர்: (அருகில் உள்ள ஒருவரைப் பார்த்து ) இந்த மனிதர் யார்? இவ்வளவு விறைப்பாக வருகிறாரே! கண்ணைப் பார்த்தால் விளக்குப் போல ஒளி வீசுகிறதே

அவர்: இவர் பாரதியார்; இவரும் ஒரு புலவர்.

ஒட்டக்கூத்தர்: அப்படியா? இவரிடமும் ஏதாவது கேட்கலாமே! ஐயா, உம்மைத்தான். நீர் புலவராமே? நான் கலைமகள் கோயில் கட்டுகிறேன். புலவர் பலரிடம் பொருள் தொகுத்துக் கட்டத் தொடங்கியிருக்கிறேன். உம்முடைய காணிக்கையாக ஏதாவது கொடுக்க முடியுமா?

பாரதியார்: (ஏற இறங்கப் பார்க்கிறார்,) நீர் எந்த ஊர் ராஜா?

ஒட்டக்கூத்தர்: நான் அரசன் அல்லன்; சக்கரவர்த்தி; கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்.

பாரதியார்: (சிரிக்கிறார்.) அப்படிச் சொல், பாண்டியா! சபாஷ்! உன் செயலை மெச்சினேன், (தலைப்பாகையை அவிழ்த்து நீட்டுகிறார்.) இந்தா, கலைமகள் கோயிலில் வேலை செய்யும் தொழிலாளிகளில் முதல்வனுக்கு, இது மகாகவிச் சக்கரவர்த்தி சுப்பிரமணிய பாரதியின் சம்மானம் என்று சொல்லிக் கொடு, போய் வா, பராசக்தி உன்னைக் காப்பாற்றட்டும். (போய்விடுகிறார்.)

ஒட்டக்கூத்தர்: (கையிலிருந்து அது கீழே நழுவுகிறது.) இந்தப் பைத்தியம் யார்? (வெறிக்க வெறிக்கப் பார்க்கிறார்.)

காட்சி—4

நிலமகள்: இது என்ன கலவை? ஒன்றுக் ஒன்று பொருத்தம் இல்லாமல் சீட்டுக்கள் விழுந்திருக்கின்றனவே!

பிரமதேவன்: உன் விருப்பப்படியே எல்லாம் அடைவாய் விழுமாக்கும்!

நிலமகள்: பின்னே இது என்ன? ஒரே அலங்கோலம்! ஒரே குழப்பம்! எதை எதோடு சேர்க்கவேண்டுமோ, அது அது இங்கே காணோம். ஜோடியே சேரமாட்டேன் என்கிறது.

பிரமதேவன்: சீட்டாட்டம் என்றால் பின்னே எப்படி இருக்கும்?