கோயில் மணி/கண்ணனுக்குக் கால் வலித்தது
கண்ணனுக்குக் கால் வலித்தது
“நாரதா, வா, இன்று பஜனைக் கோஷ்டிகளையெல்லாம் ஒரு நோட்டம் விட்டு விட்டு வரலாம்” என்றான் கண்ணபிரான்.
“இன்று என்ன இப்படித் தங்கள் திருவுள்ளத்துக்குத் தோன்றியது?” என்று கேட்டார் நாரதர்.
“இப்பொழுது புரட்டாசி மாதம், சனிக்கிழமைகளில் பஜனை அமர்க்களமாக இருக்கும். இந்தப் பெரிய பட்டணத்தில் எனக்கு எத்தனை பக்தர்கள் இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டாமா? எத்தனை பாகவதர்கள், எத்தனை பஜனைகள் இங்கே நடக்கின்றன தெரியுமா? நீயும் பஜனை செய்கிறவனாயிற்றே. அவர்களையெல்லாம் பார்க்க வேண்டாமா?” என்றான் கண்ணன்.
“இப்படியேயா போகிறது?”
“நான் இளைஞனாக வருகிறேன். நல்ல சாரீரத்தோடு பஜனைப் பாட்டுப் பாடுகிறேன். நீ என்னுடன் வயசு முதிர்ந்த கிழவனாக வா. போகிற இடங்களில் ‘இந்தப் பிள்ளையாண்டான் பஜனைப் பாட்டுக்களை நன்றாகப் பாடுவான்’ என்று சிபாரிசு பண்ணு. எங்கேயாவது பாட நேர்ந்தால் நானும் பாடுகிறேன்; நீயும் பாடலாம். ஆனால் நாம் இன்னர் என்பதைக் காட்டிக் கொள்ளக்கூடாது” என்றான் மாயக் கண்ணன்.
‘இன்றைக்கு என்ன திருவிளையாடல் செய்யப் போகிறானே கண்ணன்!’ என்ற வியப்போடு நாரதர், “தங்கள் திருவுள்ளப்படி ஆகட்டும்” என்றார்.இருவரும் கோலம் மாறினார்கள். கண்ணன் இருபத்தைந்து வயசு இளைஞனாகவும் நாரதர் அறுபது வயசு முதியவராகவும் உருக் கொண்டார்கள். கழுத்தில் ஆளுக்கு ஒரு துளசி மாலை. நெற்றியில் கண்ணன் கோபி நாமம் போட்டுக்கொண்டான். நாரதர் பட்டை பட்டையாக விபூதியைப் பூசிக்கொண்டார்.
இருவரும் புறப்பட்டுத் தென்னாட்டில் இருந்த அந்தப் பெரிய பட்டணத்துக்கு வந்தார்கள். அங்கே ஒரு பகுதியை அடைந்தார்கள். அந்தப் பக்கம் ஒரு தெருவில் கம்பீரமான குரல் ஒன்று கேட்டது. நடுநடுவே நாமாவளியின் சப்தமும் கேட்டது. அந்த இடத்தை இருவரும் அடைந்தார்கள்.
வீதி முழுவதும் பந்தல் போட்டிருந்தார்கள். ஆண்களும் பெண்களுமாகப் பெருங் கூட்டம். ராதாகிருஷ்ண படத்தை அலங்கரித்து நடுவில் ஒரு மேடையில் வைத்திருந்தார்கள். அதற்கு எதிரே பல பாகவதர்கள் அமர்ந்திருந்தார்கள். ஜாலராவைச் சிலர் தட்டினார்கள். வெவ்வேறு விதமான சப்பிளாக் கட்டையைச் சிலர் தட்டினார்கள். ஒருவர் ஜல் ஜல் என்று ஒலிக்கும் சிம்ட்டாவைக் குலுக்கிக்கொண்டிருந்தார்.
ஒரு பாகவதர் பாடிக்கொண்டிருந்தார். அவருடைய குரல் சிம்மகர்ஜனபோல் இருந்தது. அவர் பாட மற்றவர்கள் பின்னே பாடினார்கள். நல்ல சாரீரம், வார்த்தைகளைத் தெளிவாக உச்சரித்துப் பாடினர் பாகவதர்.
“ஆஹா! என்ன பக்தி என்ன பாட்டு” என்று. நாரதர் வியந்துகொண்டு கண்ணை முடியவாறே பாட்டை அநுபவித்துக கொண்டிருந்தார்.
ஒரு பாட்டு முடிந்தது. பாடினவர் மறுபடியும் பாடுவதற்கு அடியெடுத்தார். வேறு ஒரு பாகவதர் ஏதோ முணுமுணுத்தார். பாடின பாகவதர், “என்ன ஐயா முணுமுணுக்கிறீர்? நீர் பாட வேண்டுமா? நான் இன்னும் அரைமணி பாடிவிட்டு வேறு இடத்துக்குப் போகவேண்டும். அப்புறம் நீங்கள் எல்லாரும் சேர்ந்து அழுங்களேன், ஆர் வேண்டாம் என்கிறார்கள்?” பேச்சில் கள்ளும் கொள்ளும் வெடித்தன; இல்லை. இல்லை. இடியும் புயலும் குமுறின.
நாதர், யார் இப்படிப் பேசுகிறார் என்று கண்ணைத் திறந்து பார்த்தார். முன்பு அழகாகப் பாடின. அந்தப் பாகவதரே என்று தெரிந்துகொண்டபோது அவருக்கு ஒன்றும் புரியவில்லை.
நடுவிலே ஒரு கிழவர், “இவர் தஞ்சாவூரிலிருந்து வந்திருக்கிறார், கொஞ்சம் பாடவிடுங்கள்” என்று ஒருவரைக் காட்டி மெல்லச் சொன்னார்.
“தஞ்சாவூரிலிருந்து வந்தால் என்ன? நேரே துவாரகையிலிருந்துதான் வந்தால் என்ன? எல்லோரும் அப்புறந்தான் பாடவேண்டும், உஞ்சவிருத்தி பஜனைக்கு ஒரு பயல் வருகிறதில்லை. கூட்டம் கூடினால் நான், நீ என்று வருகிறான்கள்! இந்த ஓர் ஆசாமியே எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது” என்று சொல்லிப் பாகவதர் மார்பில் ஓர் அடி அடித்துக் கொண்டார். ‘நான் என்று மார்தட்டும்’ மகாவீரம் அது
நாரதருக்கு நடுக்கம் கண்டது; ‘துவாரகையிலிருந்து தான் வந்தால் என்ன என்று இவர் சொல்கிறாரே! நம்மைத் தெரிந்துகொண்டிருப்பாரோ?’ என்று கொஞ்சம் துணுக்கங்கூட உண்டாயிற்று. கண்ணனைப் பார்த்தார். அவன் நாரதரைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டிப் புன்முறுவல் பூத்தான். நாரதர் அருகில் சென்று, “நாங்கள் துவாரகையிலிருந்தே வந்திருக்கிறோம் பாடவேண்டும் என்று சொல்” என்று பணித்தான். அவர் சிறிதே தயங்கினர். “தைரியமாகச் சொல்லப்பா” என்றான் மாயன்.
“சுவாமி, இதோ இவர் துவாரகையிலிருந்தே வந்திருக்கிறார். நன்றாகப் பாடுவார். ஒரு பாட்டுப் பாட இடம் கொடுங்கள்” என்று மெல்லச் சொன்னர் நாதர்.
அப்போது அந்தப் பாகவதருக்கு வந்த ஆவேசத்தைப் பார்க்கவேண்டுமே! “ அப்படியா சமாசாரம்? என்னைப் பரிகாசமா செய்கிறீர்” என்று குமுறினார். துவாரகை என்று சொன்னது உண்மை என்பது அவருக்கு எப்படித் தெரியும்? எல்லோரும் நாரதரையும் கண்ணனையும் பார்த்தார்கள்.
கலவரம் அதிகமாகப் போகிறதே என்று பயந்து ஒருவர் எழுந்து வந்து பாகவதர் காலில் விழுந்து, “சுவாமி, கோபித்துக்கொள்ளக் கூடாது. நீங்களே பாடுங்கள். அறியாதவர்கள் ஏதாவது சொன்னால் நீங்கள் அதைப் பொருட்படுத்தலாமா?” என்று வேண்டினார்.
“அதுதான் சொல்கிறேன். இந்த முட்டாள் பயல்கள் எல்லாம் பாட வருகிறார்களாம். அந்தக் கண்ணனே வந்து நான் பாடுகிறேன் என்றாலும் இந்தப் பாகவத சிரோமணி இடம் கொடுப்பானா, என்ன?” என்று இரண்டாம் முறையும் மாரைத் தட்டிக்கொண்டார்.
கண்ணன் மெதுவாக நாரதர் காதில், “நமக்கு இங்கே இனி வேலை இல்லை; வா போகலாம்” என்று சொல்லி, அவரை அழைத்துக்கொண்டு நழுவி விட்டான்.
★
கூட்டத்துக்கு நடுவே ஒரு கோஷ்டி பாடிக்கொண்டிருந்தது. எல்லோரும் நவநாகரிகக் கோலத்துடன் இருந்தார்கள். சில்க் ஷர்ட் அணிந்திருந்தார்கள். இடக் கையில் கடியாரம், வலக் கையில் மோதிரம் மின்னின. ஒருவர் மாறி ஒருவர் பாடினர்கள். எல்லாம் கச்சிதமாக இருந்தன.
கண்ணனும் நாரதரும் அங்கே போய் உட்கார்ந்தார்கள். பஜனையில் ஒரு பாட்டு முடிந்தவுடன் ஒவ்வொருவரும் தம் கையில் இருந்த நிகழ்ச்சி நிரலைப் பார்த்தார்கள். ஒருவர், அடுத்த பாட்டு இன்னதென்றும் இன்னர் பாடுவாரென்றும் ஒலிபெருக்கியில் அறிவித்தார். பாட்டு அமைதியாக வந்தது.
“எத்தனை ஒழுங்காக, எல்லோருக்கும் சந்தர்ப்பம் கொடுத்துப் பாடுகிறார்கள்!” என்று வியந்தார் நாரதர்.
ஒரு கட்டத்தில் பாடினவர்களுக்கெல்லாம் காபி கொண்டு வந்து கொடுத்தார்கள். ஒருவர் வாரப் பத்திரிகை ஒன்றின் பிரதிகள் ஐந்தாறு கொண்டு வந்து பாடின கோஷ்டியாரிடம் காட்டினர். அதில் ஒரு பக்கத்தில் ஒரு பஜனைக் கோஷ்டியின் படம் இருந்தது. “இதை ஸ்பெஷலாக ஆசிரியரிடம் சொல்லிப் போடச் சொன்னேன். நன்றாகப் போட்டிருக்கிறார் அல்லவா?” என்று பத்திரிகையைக் காட்டினவர் கேட்டார்.
“இதோ நீ இருக்கிறாயே! இதோ சாம்பு இருக்கிறார். இது, யார்? ஓகோ, நம் ராமனா அதென்ன வாயை அப்படித் திறந்து கொண்டிருக்கிறான்?”
எல்லாரும் ஆவலுடன் பத்திரிகைப் பிரதிகளைப் பார்த்தார்கள். அவர்களுள் ஒருவர் மாத்திரம் உற்சாகத்தோடு இல்லை.
“என்ன முத்து, படம் எப்படி?” என்று ஒருவர் கேட்டார். .
“என்னவோ போட்டிருக்கிறார்கள். என்னை மாத்திரம் வேண்டுமென்று விட்டிருக்கிறார்கள். இப்படி என்னை அவமானப்படுத்த வேண்டாம். இந்தப் படத்தில் என்னை விட்டதற்கு யார் பொறுப்பு என்பதை விசாரிக்க வேண்டும்” என்றார் அவர்.
பத்திரிகையைக் காட்டினவர், “யாரும் பொறுப் பில்லை. நீங்கள் ஒரமாக உட்கார்ந்திருப்பீர்கள். பத்திரிகைக்கு இசைவாகப் படத்தைப் போடும்போது அந்தப் பகுதியைக் கத்தரிக்க வேண்டியிருந்திருக்கும். இது ஒரு பெரிய தவறா?” என்றார்.
முத்துவுக்குக் கோபம் ஏறிவிட்டது; “நீர் சொல்வீர் ஐயா! உம் வீட்டுக்குக் காசு பணம் வாங்கிக்கொண்டா தாங்கள் பாட வருகிறோம்? அவமானம் செய்வதும் செய்துவிட்டுச் சமாதானம் வேறு கூற வருகிறீரே! இதில் உமக்குப் பொறுப்பு இல்லையா?”
அந்த மனிதர் நயமாக, “நான் படத்தை அப்படியே கொடுத்தேன். அவர்கள் வெட்டிவிட்டதற்கு நான் எப்படிப் பொறுப்பாளி. இவருடைய படத்தைப் போட வேண்டாம் என்று நான் சொல்லுவேனா? பத்திரிக்கைகாரரை அல்லவா கேட்கவேண்டும்?” என்று பணிந்த மொழியில் கூறினார்.
முத்துவின் கோபத்தீ மண் எண்ணெய் விட்டாற் போல் கொழுந்துவிட்டது; “ஓகோ, உம்முடைய இடத்துக்கு வந்து பஜனை செய்வதும் செய்துவிட்டு, பத்திரிகைக்காரன் மேல் தாவாபோடச் சொல்கிறீரோ!” அவர் இரையத் தொடங்கினார்.
“இப்பொழுது ஒரு முழுப் படமாக எடுத்துவிட்டால் போகிறது. எங்கே அப்பா, போட்டோக்காரர்?” என்று ஒருவர் இடையே கூறினார்.
“இந்தக் கட்டத்தில் இனிப் பஜனை எப்போது தொடருமோ, தெரியாது; வா அப்பா, போகலாம்” என்று சொல்லிக் கண்ணன் நாரதரை அழைத்துக்கொண்டு வெளியேறினான்.
★
அங்கேயும் பெரிய கூட்டம். ஆண்களும் பெண்களும் கூடியிருந்தார்கள். இளவட்டங்கள் அதிகமாக இருந்தார்கள். எல்லோரும் தலையை அசைத்துத் தாளம் போட்டுக்கொண்டிருந்தார்கள். நடுவில் அமர்ந்து ஒரு புெண்கள் கோஷ்டி பாடிக்கொண்டிருந்தது; பஜனைதான். சுவாமி படங்களை வைத்த இடம் ஒரு மூலையில் இருந்தது. பஜனைக் கோஷ்டியைச் சுற்றி ஜனங்கள் நெரிசலாக உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.
தன்னை அழகாக அலங்கரித்துக் கொண்டிருந்த மங்கையொருத்தி கையில் சப்பளாக் கட்டையுடன் பாடிக் கொண்டிருந்தாள். அவளுக்குப் பின் மற்றப் பெண்கள் பாடினார்கள். தேனினும் இனிய குரலில் அந்தப் பெண் பாடினாள்.கூட்டத்தில் வந்து அமர்ந்தார்கள், கண்ணனும் நாரதரும். நாரதர் அந்தப் பாட்டைக் கேட்டு மெய்ம் மறந்து போனார், ஒரு பாட்டு முடிந்தது. அங்கே ஏதோ கிசுகிசு என்ற குரல் கேட்டது. பாடின பெண், “தாராளமாகப் பாடட்டுமே”! என்ருள். ஒரு பாகவதர் முன்னே வந்து உட்கார்ந்தார்.
அப்போது கூட்டத்தின் ஒரு மூலையிலிருந்து, “வேண்டாம், எழுந்து போ!” என்ற குரல்கள் எழும்பின. பாடின. பெண்மணி அந்தப் பக்கமாகப் பார்த்துப் புன்முறுவல் பூத்தபடி தன் கையால் அமர்த்தி, “அவர் பெரியவர்; பாடட்டும்” என்றாள்.
அந்த ஆணைக்கு அடங்கினர் அந்த இளவட்டங்கள். சிறிது நேரம் பேசாமல் இருந்தார்கள். பாகவதர் நன்றாகத்தான் பாடினார். ஆனாலும் முழுதும் கேட்க அவர்களுக்குப் பொறுமை இல்லை. “போதும், போதும்” என்ற குரல்களும் கைதட்டல்களும் ஒலித்தன. அந்தப் பெரியவர் ஒரு புண்டரிகம் போட்டுவிட்டு நிறுத்திக் கொண்டார்.
மறுபடியும் அந்தப் பெண் பாடினாள். கண்ணன் நாரதருக்குக் கண்சாடை காட்டினன். எதிர்ப்பு வந்த கூட்டத்திற்குப் பக்கத்தில் போய் உட்காரச் சொன்னான். அவர் அவன் குறிப்பறிந்து அங்கே போய் உட்கார்ந்து, கண்மூடியபடியே பாட்டை ரசித்துக் கொண்டிருந்தார்.
“இந்தப் பைத்தியம் அங்கேயிருந்து ஏன் இங்கே வந்தது?”—ஒரு குரல். இது அரை குறையாக நாரதர் காதில் விழுந்தது.
“போகட்டும், கிழம். பாட்டிலே லயித்துவிட்டது. கண்ணை மூடிக்கொண்டு யோக சமாதியில் இருக்கட்டும்.”—இப்படி ஒரு பேச்சு.“கண்ணை மூடிக்கொண்டா? அட பைத்தியமே! இங்கே கண்ணை மூடிக்கொள்ளலாமா? கண்ணுக்குத் தானே இங்கே அதிக விருந்து”
நாரதருக்கு இது விளங்கவில்லை.
“அவள் முகம் அசைக்கிறது மதனவல்லி மாதிரி இல்லை?”
“அவள் புன்சிரிப்பு ஒன்று போதுமே! மோகினி சினிமாவில் மோகினியாக யாரோ ஒரு கைராத்து வந்ததே; இவளைப் போட்டிருந்தால்?—”
இந்த ரீதியிலே பேச்சுப் போய்க்கொண்டிருந்தது. நாரதர் காதில் பட்டதும் படாததுமாக விழுந்தது. அவர்களுடைய பேச்சிலே அடிபட்ட மதனவல்லி, பிரமீளாபாய் முதலிய பெயர்கள் எல்லாம் சினிமா நட்சத்திரங்களின் திருநாமங்கள் என்பதை அவர் கண்டாரா என்ன? எப்படியாவது அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடவேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. அங்கே உட்கார்ந்திருக்க அருவருப்பாக இருந்தது.
மெல்ல நகர்ந்து கண்ணள் பக்கத்தில் வந்து அமர்ந்தார். அப்போது, பஜனை செய்கிறவர்களுக்கு அருகில் இருந்த சில கிழவிகள் எழுந்து போனார்கள். அந்த இடத்தைப் பிடித்துக்கொள்ள இள வட்டங்கள் முண்டியடித்துக் கொண்டு பாய்ந்தார்கள்.
“போதும்; இனிமேல் வேறு இடம் போகலாம் என்று” நாரதரையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டான். கண்ணன்.
“என்ன, நாரதா, நெடுநேரம் சுற்றிச் சுற்றிக் கால் வலிக்கிறது. ராத்திரி காலம் வந்து விட்டது. இன்னும் எங்காவது ஓரிடம் மட்டும் போய்விட்டுத் திரும்பலாம் என்று தோன்றுகிறது.”"சுவாமியின் திருவுள்ளம் எப்படியோ, அப்படியே செய்யலாம்.”
★
எங்கோ ஒரு மூலையில் இருந்த தெரு அது. அங்கே தெருவில் முக்கால் பகுதி கூரை வேய்ந்த குடிசைகள். ஒரு குடிசையில் ஜாலராச் சத்தம் கேட்டது. யாரோ சிறு பிள்ளைகள் பாடுவதுபோல இருந்தது. கண்ணன் அந்தக் குடிசைக்குள் புகுந்தான்.
குழந்தைகள் தப்புத் திப்பென்று தாளம் போட்டுப் பாடினர்கள். ஒருபையன், பதினெட்டு வயசுஇருக்கும்; நின்றபடியே ஆடிக்கொண்டிருந்தான். “கண்ணா மணி வண்ணா கருணை செய்வாய் கண்ணா” என்று பாடினன். அந்தப் பாட்டிலே சங்கீதத்தின் மெருகு இல்லை. குழந்தைகள் கீச்சுக் குரலில் பின்தொடர்ந்து பாடினார்கள்.
ஒரு சின்ன மேடையின்மேல் இரண்டு மண் பொம்மைகள். பழையனவாகி விட்டதனால் வேண்டாமென்று யாரோ எறிந்து விட்டிருக்கவேண்டும். ஒன்று கண்ணன், ஒன்று ராதை. கண்ணன் பொம்மையில் தலையிலுள்ள மயில் குஞ்சம் அடிப்பாகம் மட்டும் இருந்தது. முகத்திலிருந்த மூக்குப் பெருவியாதிக்காரன்போல அமுங்கியிருந்தது. கை இருந்ததே ஒழிய அதில் புல்லாங்குழல் இல்லை. அதைப் பிடித்த பாவனை மாத்திரம் இருந்தது. ராதையையோ கேட்க வேண்டாம். அவளுக்கு ஒரு நீலக் கந்தையைக் கட்டியிருந்தார்கள். இருவருடைய கழுத்தையும் மலரால் அலங்கரித்தார்கள். வெள்ளைக் காசரளி மாலையைக் கண்ணனுக்கும்,சிவப்புக் காசரளியை ராதைக்கும் போட்டிருந்தார்கள். இதுதான் அலங்காரம்.
நின்றுகொண்டிருத்த பையன் அசைந்து ஆடினான்; சுழன்று ஆடினன். சோர்வு வந்த போதெல்லாம், “கோபிகா ஜீவன ஸ்மரணம்” என்று புண்டரீகம் போட, குழந்தைகள், கோவிந்தா கோவிந்தா!' என்று முழங்கினார்கள்.
கண்ணனும் நாரதரும் நிலைக்கு வெளியிலே உட்கார்ந்துகொண்டு கவனித்தார்கள்.
அரைமணி இந்தப் பஜனை நடந்தது. “சரி, சரி, இனிமேல் என் கண்ணனைப் படுக்கப் போடவேண்டும். நெடுநேரம் நின்று கொண்டே இருந்துவிட்டான்” என்று சொல்லி, ஒரு பலகையில் ஒரு துணியை நாலாக மடித்துப் போட்டான் அந்தப் பையன். அதன்மேல் மெல்லக் கண்ணனை எடுத்துவிட்டான். பிறகு ராதையையும் அருகிலே எடுத்து வைத்தான். எடுக்கிற போது பொம்மையென்றா எடுத்தான்? பூப்போல எடுத்தான். பலவீனமான சிறு குழந்தையைத் தாய் தொட்டிலில் எடுத்து விடுவாளே, அப்படி மெல்ல வாற்சல்யத்தோடு எடுத்துவிட்டான். “ஆராரோ ஆரிரரோ!” என்று தாலாட்டுப் பாட்டுப் பாடினன். “கிட்டப்பா தூங்குகிறான். இனிமேல் பாட்டு வேண்டாம். யாரும் பேசாதீர்கள். அவனுக்குக் கால் வலிக்கும். நான் காலைப் பிடிக்கிறேன்” என்று மெல்லக் கண்ணன் காலை - அந்தப் பொம்மையின் காலைத்தான் - வருடினான். சத்தியபாமைக்குக்கூட அவ்வளவு மெத்தென்று வருடத் தெரியாது. சாட்சாத் கண்ணனுக்கே உபசாரம் செய்வதாக அவனுக்கு எண்ணம்.
நாரதர் அந்தக் கண்ணனைப் பார்த்தார். கண்ணன் கால் வலிக்கிறது என்று சொன்னது நினைவுக்கு வந்தது. திரும்பித் தம்முடன் வந்த கண்ணனைப் பார்த்தார். என்ன ஆச்சரியம்: அவன் அப்படியே சாய்ந்தபடி குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான். அங்கே நடக்கிறது உபசாரம்: இங்கே இருக்கிறது அதன் விளைவு! நாரதர் கண்ணில் குபுக்கென்று நீர் வந்துவிட்டது.