கோயில் மணி/புண்ணியம் ஓரிடம்
புண்ணியம் ஓரிடம்
மழை என்றால் பேய் மழை. எப்போதோ இருபது ஆண்டுகளுக்கு முன் இப்படிப் பெய்ததாகச் சொல்கிறார்கள். அப்போது சென்னையில் இந்த மாதிரி மக்கள் நெருக்கம் இருக்கவில்லை. இப்போதோ எங்கே பார்த்தாலும் வீடுகள் முளைக்கின்றன. இந்த மாதம் ஓரிடம் தென்ன மரத்தோப்பாக இருக்கும்; அடுத்த மாதம் அங்கே போய்ப் பார்த்தால் அடையாளமே தெரியாது; ஒரு தெருவே மந்திரத்தாலே வந்து உட்கார்ந்து கொண்டது போல இருக்கும்.
மழை இல்லாதபோது எல்லாம் பார்க்க அழகாக இருக்கும். மழை பெய்து விட்டால் இந்தப் புதிய இடங்களுக்குப் போய் விட்டுப் போன உடையோடு திரும்பி வர முடியாது. ஒரு பக்கம் பள்ளம்; ஒரு பக்கம் மேடு. ஒரு பக்கம் சேறு; ஒரு பக்கம் ஆறு.
புதிய கட்டிடங்கள் இருக்கும் இடந்தான் இப்படி என்றால், வேறு ஒரு பகுதி இருக்கிறது. அங்கே போய்ப் பார்த்தால் ஒரே கண்ணராவியாக இருக்கும். நகர நாகரிகத்தின் நிழலாக, பேரூரின் சாக்கடையாக, ஆடம்பர வாழ்வின் குப்பைத் தொட்டியாக இருந்து நகரங்களில் இங்கும் அங்கும் காட்சி அளிக்கும் சேரிகளைத்தான் சொல்கிறேன். அங்கே மனிதர்கள்தாம் வாழ்கிறார்கள். மனிதன் இவ்வளவு குறைவான வசதிக்குள்ளும் ஒடுங்கிக் கொண்டு புகுந்து வாழ எப்படித்தான் கற்றுக் கொண்டிருக்கிறான் என்பதை அங்கே போய்ப்பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். சாதாரன நாட்களிலேயே அவலக் காட்சி நிரம்பிய அந்த இருட்டுக் குகைகளில் மழையும் பெய்து விட்டால் கேட்கவே வேண்டாம். குஞ்சும் குளுவானுமாகக் குடிசையிலிருந்து மரத்தடிக்கும், மரத்தடியிலிருந்து மாளிகைகளின் சுவரோரங்களுக்கும் ஏழைகள் குடியேறும்போது அவர்களுடைய வளர்ப்புப் பிள்ளைகளாகிய நாய்களும் ஆடுகளும் கோழிகளும் படைகளாக அவர்களைத் தொடரும்.
இவையெல்லாம் ஆண்டு தோறும் வழக்கமாகப் பெய்யும் மழையின்போது நிகழும் நிகழ்ச்சிகள். ஆனால் இப்போதோ, ஒரே பிரளயம். கடல் பொங்கவில்லை; ஆனால் மேகம் கடலையே வானத்திலே பொங்க விட்டுப் பொழிந்து தள்ளியது. சாதாரண மழைக்கே வெளியிலே பொங்கும் சாலைக்குழிகள் இந்த மழையில் எத்தனையோ பேர்களைப் பலி கொண்டு விட்டன.
சென்னையில் புனிதத்தை உண்டாக்கும் கூவமும் அடையாறும் வரலாற்றில் இல்லாத வகையில் வெள்ளம் பெருக்கெடுத்தோடின. மற்ற நாட்களில் கடல் நீர் செல்வதற்கு வெட்டிய கால்வாய்களைப் போன்று எதிரே வரும் நீரோட்டத்தை உடையனவாக இருந்த அவற்றில் இப்போது உண்மையாகவே வெள்ளம் நிரம்பிக் கடலில் போய் விழுந்தது.
மற்றொரு புண்ணிய ஆறு சென்னையில் இருக்கிறது. அதற்குப் பக்கிங்காம் கால்வாய் என்று பெயர். அதன் கரையில்தான் பலபல தலங்கள் - சேரிகள் - இருக்கின்றன. இந்த வெள்ளத்தில் சேரிகளிற் பல வெள்ளப் பரப்பில் மிதந்தன. குடிசைகளில் உள்ள தகரங்களையும் கந்தைகளையும் சுருட்டிக் கொண்டு ஏழைகள் பக்கத்து வீதிகளில் அடைக்கலம் புகுந்தனர். மழை நின்ற பாடு இல்லை. இந்த ஏழைகள் நூறா, இரு நூறா ஆயிரக்கணக்கில் நிற்க நிழலின்றி உண்ண உணவின்றித் திண்டாடினார்கள்.
அங்கங்கே உள்ள பொதுக் கட்டிடங்களையும் பள்ளிக்கூடங்களையும் ஏழைகளுக்குகத் திறந்து விட்டார்கள். அரசியலாரும், நகர மன்றத்தினரும் பல இடங்களில் உணவு சமைத்து ஏழைகளுக்கு வழங்கினர். பல கழகங்கள் உடைகளைத் தொகுத்து அளித்தன. நாள் தோறும் பத்திரிகைகளில் இங்கே இத்தனை பேர் வீடு இழந்தனர், அங்கே அத்தனைகுடிசைகள் பாழாயின, இந்த இடத்தில் இத்தனை ஏழைகள் தங்கியிருக்கிறார்கள் என்று செய்திகள் வந்து கொண்டே இருந்தன.
இத்தகைய சந்தர்ப்பங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் சிலர் ஏழைகளிடம் பரிவுள்ளவர்களைப் போலப் பேசியும், இப்போது பதவியிலிருக்கும் ஆட்சியாளர்களை ஏசியும் தொண்டைத் தண்ணீரை வற்ற அடித்துக் கொண்டிருந்தார்கள். பரபரப்பும் சுறுசுறுப்பும் உடையவர்களாய், அங்கே இத்தனை பேருக்கு உணவு கொடுக்கச் செய்தேன், இங்கே இத்தனை பணம் கொடுத்து வந்தேன் என்று கலப்பில்லாத பொய்களையும் முக்கால் பொய்களையும் அளந்து வந்தார்கள்.
இந்த ஆரவாரத் தலைவர்களின் கண்ணுக்குப் புலப்படாமல் மெளனமாக விளம்பரம் இன்றி ஏழைகளுக்கு உதவி செய்யும் மக்களும் தொண்டர் கூட்டத்தினரும் அங்கங்கே பல நல்ல செயல்களைச் செய்து வந்தார்கள். அப்படி ஒரு பகுதியில் பஜனை செய்யும் சங்கம் ஒன்று பலரிடம் அரிசி, பருப்பை வாங்கி ஓரிடத்தில் சமையல் செய்து ஏழைகளுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்தது.
அந்தச் சங்கத்தில் எந்த விழா நடத்தினாலும் ஏழைகளுக்கு உணவு வழங்குவது என்பது இன்றியமையாத நிகழ்ச்சியாக இடம் பெறும். வீதி தோறும் உஞ்ச விருத்தி எடுத்து அரிசி தொகுத்து அதைக் கொண்டு உணவு வழங்குவார்கள். மக்களும் வஞ்சகமின்றி வாரிக் கொடுப்பார்கள்.
அந்தப் பகுதிக்கு அருகில் இரண்டு சேரிகள். பஜனை நடக்கும்போது சேரியில் உள்ளவர்களில் சிலர் வந்து கேட்பதுண்டு. மார்கழி மாதப் பஜனையில் விடியற் காலையில் குழந்தைகள் நாமாவளி பாடுவார்கள். எல்லாக் குழந்தைகளுக்கும் பொங்கல் பிரசாதம் வழங்குவார்கள். அந்தக் குழந்தைகளின் கூட்டத்தில் சேரிக் குழந்தைகளும் வேறுபாடின்றிக் கலந்து கொள்ளும்; நாமாவளி சொல்லும்.
இப்போது சேரிகளுக்கு வந்த ஆபத்தை எண்ணி இந்தப் பஜனை சங்கத்தார் சில மூட்டை அரிசியைத் தொகுத்தார்கள். காய்கறி, பருப்பு முதலிய பண்டங்கள் வந்து குவிந்தன. அவரவர்கள் தங்கள் தங்களாலான தொண்டைப் புரிந்தார்கள். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் விறகு கொண்டு வந்தார்கள். ஒருவருடைய வீட்டுக்குப் பின் பக்கத்தில் கோட்டையடுப்பு வெட்டிச் சமையல் செய்ய ஏற்பாடு செய்தார்கள் ஏழைகள் வீதியில் உணவை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தார்கள்.
சமையல் நடந்து கொண்டிருந்தது. ஒரு பக்கம் சிலர் காய்கறிகளை நறுக்கினர்கள். ஒரு பக்கம் சிலர் பருப்பைச் சுத்தம் செய்தார்கள். ஒரு பக்கம் புளியைக் கரைத்துக் கொண்டிருந்தார்கள். இப்படியாக ஏழைகளுக்குச் சோறு படைக்க அந்தத் தொண்டர்கள் வேலை செய்து, கொண்டிருந்தார்கள்.
அப்போது வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து அரசியல்வாதி ஒருவர் இறங்கினார்.“என்ன செய்கிறீர்கள் ? எவ்வளவு பேருக்குச் சமையல் ஆகிறது?” என்று கேட்டார். தாமே இதற்கு ஏற்பாடு செய்தவரைப் போன்ற மிடுக்கோடு அவர் கேட்டார்.
“ஏதோ எங்களால் இயன்றதைச் செய்கிறோம். எங்களிடம் என்ன வசதி இருக்கிறது? பெரிய பாத்திரம் இருந்தால் முன்பே சாதத்தை வடித்திருக்கலாம், பாவம் ! ஏழைகள் காத்திருக்கிறார்கள்” என்று சொன்னார், தொண்டர்களில் ஒருவர்.
“எப்போது சோறு போடுவீர்கள்?” என்று கேட்டார் அந்த கனவான்.
“மூன்று மணிக்குப் போடலாம் என்று எண்ணுகிறோம்.”
“அவ்வளவு நேரமா ? இன்னும் சீக்கிரம் போட முடியாதா?” என்று கனவான் கேட்டார்.
இந்த அதிகாரக் குரலைக் கேட்டபோது தொண்டருக்குக் கோபம் வந்தது; “நீங்கள் யார் தெரிய வில்லையே!” என்றார்,
அரசியல்வாதி சிரித்துக் கொண்டார். “என்னைத் தெரியவில்லையா?” என்று கேட்டார், அவருடன் வந்த ஒருவர், “இவர்தாம் போசல ராவ் உங்களுக்குத் தெரியாதா? இவர் ஒரு தினசரிப் பத்திரிகை நடத்துகிறாரே!”
“ஓகோ சரி சரி” என்று அந்த தொண்டர் தம் வேலையைப் பார்க்கப் போய்விட்டார்.
“அப்படியானல் மூன்று மணிக்கு வந்தால் எல்லாம் தயாராக இருக்குமா?” என்று கேட்டுக் கொண்டே அவர் காரில் ஏறினார். .
‘மூன்று மணிக்கு இவர் இங்கே சாப்பிடவருகிறாரா, என்ன?’ என்று அங்கிருந்தவர்கள் எண்ணமிட்டனர். இருக்கிற பாத்திரங்களையும் விறகையும் வைத்துக் கொண்டு தொண்டர்கள் உழைத்தார்கள். விறகு புகைந்தது. மண்ணெண்ணெயைக் கொட்டினார்கள். எப்படியோ சாம்பாரை முதலில் செய்து இறக்கி வைத்து விட்டுச் சாதத்தையும் வடித்தார்கள். பெரிய மூங்கில் பாயை விரித்துச் சாதத்தைக் கொட்டி அதன்மேல் சாம்பாரை விட்டுக் கலந்தார்கள்.
“சாம்பார் வாசனை வீதியையே தூக்கி அடிக்கிறது” என்றார் ஒருவர்.
பருப்பு எப்படி வெந்திருக்கிறது தெரியுமா? என்றார் ஒருவர்.
“எல்லாம் கண்ணபிரான் திருவுள்ளம்; அவனுக்கே இது நிவேதனம். அவனேதான் இந்த ஏழைகளின் உருவில் வந்து நிற்கிறான்” என்றார் ஒரு கிழவர்.
“இங்கே சாப்பாடு போடுகிறது மற்றச் சேரிகளுக்குத் தெரியுமா?” என்று கேட்டார் ஒரு கிழவர்.
“நாம் என்ன தண்டோராவா போட்டோம்? இங்கே பக்கத்தில் இருக்கிறவர்களுக்கு நம்மைத் தெரியும்; நமக்கும் அவர்களைத் தெரியும்” என்றார் தொண்டர் களின் தலைவர்.
“ஆமாம். எல்லாச் சேரிக்காரர்களுக்கும் போட்டோம் என்று வெறும் பெருமை எதற்கு? இந்த ஏழைகளுக்கு வயிறு நிரம்பப் போட்டால் போதாதா?”
இடையிலே அந்தக் கிழவர் சொன்னர்; “ஆமாம் அப்பா ! நம்முடைய பையன்களிடம் சொல்லுங்கள். அதட்டி மிரட்டிக் கலவரம் செய்யப் போகிறார்கள். ஏழைகள் எத்தனை கேட்டாலும் போடுங்கள். யாருக்கும் குறை இருக்க வேண்டாம். அவர்கள் வயிறு குளிர்ந்தால் எம்பெருமான் உள்ளம் குளிர்வான்”.உணவு பரிமாறத் தொடங்கி விட்டார்கள். முதலில் ஒரே குழப்பம்; “எனக்கு, எனக்கு” என்று முந்திக் கொண்டு வந்தார்கள் ஏழைகள். சில தொண்டர்கள், “எல்லோருக்கும் நிச்சயமாக வயிறு நிரம்பச் சோறு கிடைக்கும். எல்லோரும் வீதியில் இப்படியே வரிசையாக உட்காருங்கள் என்று” சொல்லி அமர்த்தினார்கள். கூட்டம் ஒழுங்குக்கு வர அரை மணி ஆகிவிட்டது.
இப்போது ஏழைகள் தையல் இலையில் போட்ட சாம்பார் சாதத்தைச் சாப்பிடத் தொடங்கினார்கள். தொண்டர்கள் தூக்குச் சட்டியும் அகப்பையுமாக அங்கங்கே பரிமாறிக் கொண்டிருந்தார்கள்.
அந்தச் சமயத்தில் அந்தக் கார் வந்தது. ஆமாம், போசலராவ் கார்தான். அதிலிருந்து நாலைந்து பேர் இறங்கினார்கள். வீதியின் ஓரத்தில் காரை நிறுத்தி இறங்கி வர வேண்டி இருந்தது. வீதி முழுவதுந்தான் ஏழைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்களே.
எல்லாம் ஆயிற்றா? சரி, சரி, எங்கே என் கையில் சாம்பார் சட்டியைக் கொடுங்கள் என்றார் காரில் இருந்து இறங்கிய ஒருவர். அவருக்குச் சாம்பார் சாதம் கலந்து கொடுக்கிறார்கள் என்று தெரியாது. அவரே ஒரு தொண்டர் கையிலிருந்து வலிய ஒரு தூக்குச் சட்டியைப் பிடுங்கிக் கொண்டார். கனவான் ராவ் அவர்களும் ஒரு தூக்குச்சட்டியை வாங்கிக் கொண்டார்.
உம், உம், சீக்கிரம் சாப்பிடுங்கள், என்று அதட்டினார்கள்.
அதட்டாதீர்கள். அவர்கள் நிதானமாகச் சாப்பிடட்டும் என்றார் ஒரு தொண்டர்.
“வேறு வேலை இல்லையா? கவனிக்க வேண்டாமா?” என்றார் ஆடம்பரக்காரர்.“யாருக்கு வேலை? இவர்களுக்கா? இவர்களுக்கு இப்பொழுது சாப்பிடுகிறதுதான் வேலை” என்றார் தொண்டர்.
“கொஞ்சம் இந்தப் பக்கமாகத் திரும்பி நில்லுங்கள். ஐயா. நீங்கள் விலகி நில்லுங்கள். அவர்களை மறைக்காதீர்கள்.” குரல் படம் பிடிக்கிறவர் ஒருவரிடமிருந்து வந்தது. அவரும் அந்தக் காரில் வந்தவர். ‘க்ளிக்!’—படம் எடுத்தாகி விட்டது. மேலும் சில படங்களை அவர் எடுத்தார்.
“சரி சரி, எல்லோரையும் நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லித் தூக்குச் சட்டியைக் கீழே வைத்தார் கனவான்; “எங்கே தண்ணீர்? கொஞ்சம் கொண்டுவாருங்கள்; கையைக் கழுவிக் கொள்ள வேண்டும்” என்று கூவினர்.
இளம் தொண்டர் ஒருவர், “தண்ணீரா? அதுதான் வெள்ளமாகப் போகிறதே!” என்று குரல் கொடுத்தார். கனவானுக்கு அதிலிருந்த ஏளனம் புலப்பட்டது. “சரி, சரி, வாரும் போகலாம்” என்று மற்றவரையும் அழைத்துக்கொண்டு காருக்கு விரைந்தார். அவர்களைச் சேர்ந்த நாலைந்து பேர்களும் போய்விட்டார்கள்; படம் பிடிக்கிறவர் உட்பட.
அன்று அந்த ஏழைகள் எப்போதையும் விட இரண்டு மடங்கு உணவு உண்டார்கள். சிலர் வீதியிலேயே படுத்துக்கொண்டு விட்டார்கள். ஆறு மணி வரையிலும் இந்த அன்னம் பாலிப்பு நடைபெற்றது. தொண்டர்கள் மனத் திருப்தியுடன் அன்று இரவில் பேசிக்கொண்டார்கள்.
மறுநாள் பொழுது விடிந்தது. பஜனை சங்கத்துத் தொண்டர் ஒருவர் கிழவரிடம் ஓடி வந்தார் : “இந்தக் கூத்தைப் பார்த்தீர்களா?” என்று தம் கையில் இருந்த காலைப் பத்திரிகையைப் பிரித்துக் காட்டினர்.
அந்தப் பக்கம் முழுவதும் நிழற் படங்கள். மேலே கொட்டையெழுத்தில் தலைப்பு; “நம்முடைய தலைவர் போசல ராவின் அருமைத் திருத்தொண்டு அவரே ஏழைகளுக்குத் தம் கையால் பரிமாறுகிறார்” என்பது ஒரு படத்துக்கு விளக்கம்.
“நம் விளம்பர மானேஜர் ஏழைகளுக்குச் சாம்பர் பரிமாறுகிறார்.” இது மற்றொரு விளக்கம்.
கிழவர், “அட கலி காலமே” என்று வாயைப் பிளந்தார்.
“அப்படிச் சொல்லாதீர்கள். நீங்களும் கலிகாலத்தில் தான் இருக்கிறீர்கள். அரசியல் விளம்பரம் இது. அந்த விளம்பர மானேஜரே இந்த ஏற்பாடு செய்திருப்பார். அவருக்கு எத்தனை சம்பளம் வேண்டுமானலும் கொடுக்கலாம்” என்றார் தொண்டர்.
கிழவர் மெளனத்தில் ஆழ்ந்தார். பிறகு, “புண்ணியம் ஓரிடம், புகழ் ஓரிடம்” என்ற மொழி ஒன்று அவர் வாயிலிருந்து நழுவியது.