கோயில் மணி/வேப்ப மரம்

விக்கிமூலம் இலிருந்து

வேப்ப மரம்

ந்த ஆண்டுதான் அது பூத்திருந்தது. பருவம் அடைந்த மங்கையைப் போல் அவருக்கு அது காட்சி அளித்தது. பச்சைப் பசிய வானத்திலே அங்கங்கே கொத்துக் கொத்தாக நட்சத்திரங்கள் ஒளிவிட்டால் எப்படி இருக்கும்? அப்படித் தான் இருந்தது. அடர்ந்து வளர்ந்த பசுமைச் சூழலினிடையே சிறிய சிறிய வெள்ளை மலர்கள். அதற்கு ஒரு தனி மணம். இறைவனுடைய படைப்பில் உள்ள கலை அழகைக் காட்டும் மரம் அல்லவா அது? இரு புறமும் ஒழுங்காகக் கத்தரித்து விட்டது போன்ற அமைப்பு; நடுவே நரம்பு. கிளை நரம்புகள் இரு பக்கத்திலும். அடர்த்தியான புருவத்துக்கு இந்த இலையைத்தானே புலவர்கள் உவமை கூறுகிறார்கள்?

மூன்று நான்கு ஆண்டுகளாக வளர்ந்தும் இப்பொழுதுதான் மலர்ந்திருக்கிறது. அதைத் திரும்பத் திரும்பப் பார்த்தார் அவர். தம்முடைய வீட்டில் தாம் வேலை செய்யும் அறையின் சன்னலுக்கு எதிரே அது இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு வளர்த்தார். வீடு மேற்குப் பார்த்தது. சன்னல் தெற்குப் பார்த்தது. அந்த மரத்தின்மேல் பட்டு வரும் காற்றுக்குத் தனி மகிமை உண்டல்லவா?

தாம் பெற்று வளர்த்த பெண் அலங்காரங்களுடன் மணப் பலகையில் உட்காரச் செல்லும்போது தந்தை கண் குளிரப் பார்ப்பானே, அப்படிப் பார்த்து மகிழ்ந்து போனார். இந்த ஆண்டு வருஷப் பிறப்புக்கு அது தன் மலர்களை உதவும். விலைக்கு வாங்க வேண்டாம். பிறரிடம் யாசகமும் செய்ய வேண்டாம்.

நீண்ட மெல்லிய பச்சைத் தண்டிலே சின்னச் சின்ன வெள்ளைப் பூக்கள் தொங்கின. சன்னல் வழியே அவற்றின் உருவம் நன்றாகத் தெரிந்தது. ‘இதன் இலை, பூ, பட்டை எல்லாம் மனிதனுக்குச் சஞ்சீவி அல்லவா ?’ என்று அதன் பெருமையை எண்ணினார்.

முத்துசாமி தாம் வைத்து வளர்த்த வேப்பமரத்தை அழகு பார்த்துக் கொண்டிருந்தார். அதன் முதல் மலர்ச்சியிலே அவர் தம் உள்ளத்தைப் பறி கொடுத்தார். அப்போது அவருடைய பெண் ஓடி வந்தாள். “அப்பா, அப்பா, அந்தச் சின்னப்பன் இல்லே......” என்று எதையோ ஒரு செய்தியைச் சொல்ல வந்தாள்.

முத்துசாமியின் கண்கள் தாம் வளர்த்த மங்கையினிடமிருந்து திரும்பித் தாம் பெற்ற செல்வத்தைப் பார்த்தன. அவர் வாயில் புன்முறுவல் அரும்பியது. இந்தக் குழந்தையும் ஒரு நாள் இந்த மரத்தைப் போல மங்கையாகப் பூசித்து நிற்கும் பருவம் வரும் என்று தினைத்தாரோ? ஆம். உடனே அந்த முறுவலிலே சிறிது வாட்டமும் தொடர்ந்து தோன்றியது. வேப்பமரம் பூத்துக் குலுங்கினால் அதைக் கவலையின்றிப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இந்தச் சிறு கொடி அப்படி அல்லவே? இந்தக் கொடி பூத்தால் இதைப் படாவிட ஒரு மரம் தேட வேண்டுமே! பெண்ணைப் பெற்ற தந்தைக்கு இது பெரிய பொறுப்பல்லவா? இந்த எண்ணந்தான் அவர் உள்ளத்துள்ளே வேகமாக ஓடியிருக்க வேண்டும். வேப்பமரம் அத்தகைய கவலையை அவருக்கு வைக்கவில்லையே!

“என்ன அப்பா, நான் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல்...” என்று அந்தச் சிறு கொடி முணுமுணுத்தது.

“என்ன அம்மா சொல்கிறாய்?” என்று அவளை இழுத்து மடிமேல் வைத்துக் கொண்டார்.

“இன்றைக்குக் காலையில் வந்த ரிக்‌ஷாக்காரச் சின்னப்பன் வேப்பமரத்தில் ஒரு கொத்தை மளுக்கென்று ஒடித்துக்கொண்டு போனான், அப்பா.”

“என்ன?”

“பல் குச்சிக்காக ஒடித்திருப்பான் என்று, வேலைக்காரி வேலம்மாள் சொல்கிறாள்.”

முத்துசாமிக்குக் கோபம் வந்நது. மங்கைப் பருவம் அடைந்த வேப்பமரத்தைப் பற்றியும் கவலைப்பட இடம் இருக்கிறதே!

“அந்தப் பயல் வரட்டும், சொல்கிறேன்” என்று உறுமினார்; “நான் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து வரும் இந்த மரத்தைத் தொட அவனுக்கு எப்படித் தைரியம் வந்தது? நாளைக்கு வரட்டும். கையை ஒடித்து விட்டு மறு காரியம் பார்க்கிறேன்.”

அப்பாவின் கோபத்தைக் கிளறிவிட்டு அந்தக் குழந்தை மெல்ல நழுவிவிட்டது. முத்துசாமி யோசனையில் ஆழ்ந்தார். ரிக்‌ஷாக்காரச் சின்னப்பன் அவர் அகக் கண்ணில் வந்து நின்றான். அவன் கையில் ஒரு கோடரி இருக்கிறது. வேப்பமரத்தின் கிளையை வெட்டுகிறான். அதிலிருந்து இரத்தம் வருகிறது. “அட பாவி!” என்று அவர் கத்துகிறார், எல்லாம் பகற்கனவு. ஆனாலும் அவர் பல்லைக் கடித்துக் கொண்டார்.

மறுநாள் காலையில் அவர் தம் அறையில் உட்கார்ந்திருந்தார். கையும் களவுமாகத் திருட்டைக் கண்டு பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அமர்ந்திருந்தார். தெற்குப் பக்கம் திறந்த வெளி. அங்கே போகிறவர்கள் எட்டி மரத்தில் இலையைப் பறிக்கலாம். சின்னப்பன் அவருக்குத் தெரியாத ஆள் அல்ல.

காலைப் பத்திரிகையில் கண்ணைப் பதித்திருந்தார். சுவாரசியமான செய்தி ஒன்றில் ஆழ்ந்து போனார். அப்போது சலசல சத்தம் கேட்டது. ஆம், திருடன் வந்து விட்டான். சின்னப்பன் வேப்பங் கொத்து ஒன்றைக் கையிலே வைத்துக் கொண்டிருந்தான்.

முத்துசாமி, “அட திருட்டுப் பயலே!” என்று சொல்லி எழுந்து சன்னலோரமாகச் சென்று எட்டிப் பார்த்தார்; “ஏண்டா இதை ஒடிக்கிறாய், கழுதை” என்று கூவினார்.

“வேப்பிலை ஐயா!” என்று அவன் கெஞ்சுவது. போலப் பேசினான்.

“தெரிகிறது. வேப்பிலை தான். ஆனால் அது உங்கள் வீட்டுச் சொத்தோ? குழந்தை கையை ஒடிக்கிற மாதிரி மளுக்கென்று ஒடிக்கிறாயே! உனக்குப் பல்குச்சிக் காகத்தான் நான் வளர்க்கிறேனோ?” என்று அவர் இரைந்தார்.

“என் மகளுக்கு மாரியாத்தாள் பூட்டியிருக்கிறாள். அதற்காக...”

“சரிதான், போ போ. ஒடித்தது போதாதென்று பொய் வேறு சொல்கிறாயா? இனிமேல் கை வைத்தாய், அந்தக் கையை வெட்டிப் போட்டு விடுவேன்.” முத்து சாமிக்கு உடம்பு படபடத்தது.

அவன் வேப்பிலக் கொத்தை அங்கேயே, போட்டு, விட்டுப் போய்விட்டான்.

“திருட்டு நாய்க்கு ரோசத்தைப் பார்!” என்று அவர் ஓடவிட்ட நாயைக் கண்டு குரைக்கும் நாயைப் போலக் கத்தினார்; “இந்தப் பயல்களுக்கு இடம் கொடுத்தாள் வீட்டுக் கூரையையே பட்டப் பகலில் பேர்த்துக் கொண்டு போய் விடுவார்கள். நான் என் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து வருகிறேன். இந்தக் கழுதை வந்து ஓடிக்கிறதாவது கேட்டால் வேப்பிலைதானே என்கிறான், வேப்பிலை என்னால் வீதியில் இறைபடுகிறதா?” அவர் கத்திக் கொண்டே இருந்தார். .

“அப்பா, அம்மா குளிக்கச் சொல்கிறாள்” என்று அவளுடைய பெண் குழந்தை நினைவு மூட்டினாள். குளிப்பறைக்குச் சென்று மடமடவென்று நாலைந்து செம்பு குளிர்ந்த நீரை எடுத்துத் தலையில் ஊற்றின பிறகே அவர் கோபம் கொஞ்சம் தணிந்து நிதானம் பிறந்தது.

‘இதற்குப் போய் இவ்வளவு பிரமாதப்படுத்தினோமே!’ என்ற எண்ணம் கூடத் தலை காட்டியது.

சாப்பிடத் தட்டின்முன் அமர்ந்தபோது அவருடைய பத்தினித் தெய்வம், “என்ன, காலை நேரத்தில் அப்படி இரைந்தீர்களே!” என்று கேட்டாள்.

“சின்னப்பனோடு சண்டை போட்டார் அம்மா” என்று பெண் குழந்தை விளக்கினாள்.

அவர் ஒன்றும் பேசவில்லை. சாப்பிட்டுவிட்டுக் கம்பெனிக்குப் போய்விட்டார்.

மாலை நேரம். அன்று ஏதோ புதிய நாவலை வாசித்துக் கொண்டிருந்தார் முத்துசாமி. ஏழைகளைப் பணக்காரர்கள் அலட்சியம் செய்வதையும், அவர்களுடைய உணர்ச்சிகளைக் கிள்ளுக்கீரையாக மதிப்பதையும் ஆசிரியர் அந்த நாவலில் நன்றாகக் கதைப் போக்கிலே எடுத்துக் காட்டியிருந்தார். முத்துசாமிக்கு அந்தக் கதையோட்டத்தோடே மற்றொரு நினைவோட்டமும் கூட வந்தது. ரிக்‌ஷாக்காரச் சின்னப்பனை வைது திட்டிய காட்சியும் கதைக்கு நிழல் போலத் தொடர்ந்தது. இரண்டு நாட்களுக்கு முன் நிகழ்ந்தபோது இருந்த சூடு இப்போது குறைந்து அமைதி வந்திருந்தது. எரிந்து போன நகரில் வெந்தொழிந்த சாம்பலினிடையே பொருள்கள் சில அரையும் குறையுமாகக்கிடப்பதுபோல, அவர் உள்ளத்தில் கோபக் கனலால் எரியாத நல்ல எண்ணங்கள் சில தலைகாட்டின. “பாவம்!” என்று முணுமுணுத்தார். அப்போது அவருடைய பத்தினித் தெய்வம் அங்கே வந்தாள். “பாவம்! சமாசாரம் கேட்டீர்களோ?” என்று சொல்லிக்கொண்டே அவர் நாற்காலியைப் பற்றிக் கொண்டு நின்றாள். அவர் முணுமுணுப்பின் எதிரொலியோ அது? அவர், “என்ன?” என்று கேட்டார். அவளும் சின்னப்பனைப் பற்றியே சொன்கனாள்.

“சின்னப்பனுடைய குழந்தை போய்விட்டதாம்!”

“என்னவாக இருந்ததாம் ?”

“அம்மை பூட்டி இருந்ததாம். அது கடுமையாகி இறந்து விட்டதாம். பாவம் ! ஒரே குழந்தையென்று வேலம்மாள் சொன்னாள்.”

“என்ன!” -முத்துசாமி இடிந்துபோய் விட்டார். அவருக்குப் பேச்சு எழவில்லை. ‘அப்படியானால் அவன் சொன்னது உண்மைதானா? தன் குழந்தைக்கு அம்மை வார்த்தது என்று சொன்னனோ! அதை நாம் சரியாகக் காதில் வாங்கிக் கொள்ளவில்லையே!’ அவர் இப்போது அகக் காட்சியில் சஞ்சரிக்கலனார்.

அடுப்பில் வேலையிருந்ததனால் அவருடைய மனைவி உள்ளே போய்விட்டாள்.

அவர் உள்ளத்தே காட்சி ஓடியது. “நீதான் என் குழந்தையைக் கொன்றாய்” என்று சின்னப்பன் அவரைப் பார்த்துக் கூவுகிறான். “ஏழை யென்றுதானே அவனை மிரட்டினாய்?” என்று மடிபில் கிடந்த நாவலாசிரியர் கேட்கிறார், “ஒரு கொத்தை ஒடித்தான் என்று உறுமினாயே! அவனுடைய குழந்தையையே கொன்று விட்டாயே!” என்று யாரோ ஒருவர் பேசுகிறார்.

கண்ணை மலர்த்திச் சன்னலுக்கு வெளியே பார்த்தார். எல்லாம் வெறும் பிரமை. அங்கே யாரும் இல்லை. வேப்பமரம் மாத்திரம் தன்னுடைய பூக்களாகிய சிறிய பற்களைக் காட்டிக்கொண்டு சிரித்தது. “அட முட்டாளே !” என்று அது சிரிக்கிறதோ?

முத்துசாமிக்குத் தாமே அந்தக் குழந்தையைக் கொலை செய்துவிட்டது போன்ற ஏக்கம். ‘ஒரு கொத்து ஒடித்தால் மரமே பட்டா போய்விடும்? மரம் எதற்காக இருக்கிறது? வருஷப் பிறப்புக்குப் பூங்கொத்தை ஒடிக்க வேண்டுமென்று நினைத்தோமே; அதுமட்டும் செய்யலாமா? மரமும் குழந்தையும் ஒன்றாவார்களா? மரம் வெட்ட வெட்டத் தளிர்க்கும், குழந்தை செத்துப் போனால்...’ அவருக்கு மேலே யோசனையை ஓட விடப் பயமாக இருந்தது. புத்தகத்திலே கண் ஓட்டினார். கண் ஓடியதேயன்றிக் கருத்து ஓடவில்லை. சின்னப்பனின் குழந்தை சவமாகத் தம் காலடியிலே கிடப்பது போன்ற உணர்ச்சி. காலை எடுத்து நாற்காலி மேலே வைத்துக் கொண்டார். தம் பேதைமையை நினைத்துக் கொஞ்சம் சிரிப்புக்கூட வந்தது. புத்தகத்தை வைத்துவிட்டு வெளியிலே போய்வரலாமென்று புறப்பட்டார்.

“ஒருகால் எதிரே சின்னப்பன் வந்தால்?” மறுபடியும் உள்ளே போனார். புத்தகத்தை எடுத்தார். வேப்ப மரத்தைப் பார்த்தார்.

அன்று அவருக்குச் சரியான தூக்கமே இல்லை. அந்த வேப்பமரத்திலே நூறு குழந்தைகள் ஏறிக் கொண்டு விளையாடுகிறார்கள். அடுத்த கணத்தில் அத்தனை பேரும் பாம்புகளாக மாறுகிறார்கள். மரத்தின் அடியில் நாலைந்து பிணம். காற்றுப் பேயாய் அடிக்கிறது. அந்தக் காற்றினிடையே அவருடைய பெண் குழந்தை கிடந்து தடுமாறுகிறது. அதனுடைய தலை முடியைக் காற்று அலைத்துப் பிய்க்கிறது. சின்னப்பன் ரிக்‌ஷா வண்டியை இழுத்துக்கொண்டு போகிறான். அதில் நிறைய வேப்பந்தழை; அடுத்த கணம் ஏதோ குழந்தையின் பிணம்! பாதிக் கனவில் அவர் விழித்துக்கொண்டார்.

ஒரு வாரம் ஆயிற்று, அவருக்கு நிதானம் உண்டாக. இனிமேல் வேப்பந்தழையை யார் ஒடித்தாலும் கேட்பதில்லை என்று ஒரு விரதம் மேற்கொண்டார்.

2

ர் ஆண்டு ஆகியிருக்கும். அவர் எங்கோ கம்பெனி வேலையாகப் போயிருந்தார், மறுபடியும் ஊருக்கு வந்தார். அவருக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. அவருடைய வேப்பமரத்தை நன்றாக மொட்டையடித்திருந்தார்கள். அவர் மனைவியைக் கேட்டார். “அது பேயாய்ப் படர்ந்து பழுப்பு இலைகளைக் குப்பை குப்பையாகக் கொட்டியது. யாரோ ஒருவன் இரண்டு ரூபாய் கொடுக்கிறேன் என்று சொன்னான். வெட்டிக்கொண்டு போ என்று சொல்லிவிட்டேன். நேற்றுத்தான் தழை முழுவதையும் வெட்டிக்கொண்டு போனான்” என்றாள். வேப்பமரத்தை அவர் நன்றாகப் பார்த்தார். முழு மொட்டையாக இருந்தது. இப்போது அவருக்குக் கோபம் வரவில்லை. சில மங்கையர் திருப்பதிக்குச் சென்று
கூந்தலைப் பிரார்த்தனைக்காகக் களைந்துவிட்டு வந்தால் எப்படித் தோற்றுவார்களோ அப்படி அந்த மரம் தோற்றியது. அவர் மொட்டை மரத்தைப் பார்க்கவில்லை. இன்னும் சில நாட்களில் தளதள வென்று புதுத் தளிர் விட்டுப் பளபளப்புடன் நிற்கும் கோலத்தையே உள்ளே கண்டார். வேப்பமரமே புதுப் பிறவி எடுக்கப் போகிறது.

ஆனால்—? சுரீரென்றது உள்ளம். செத்துப்போன சின்னப்பனின் குழந்தை அகக்கண்ணில் வந்து நிற்கிறது. இவ்வளவு மாதங்கள் மறந்திருந்த நினைப்பு எங்கிருந்தோ வந்து மேலே மிதந்தது. ஆனால் முன்பு போல் அத்தனை துன்பத்தை உண்டாக்கவில்லை.

இரண்டு நாட்கள் கழித்து அவருடைய பெண் குழந்தைக்குக் கடுமையான ஜூரம் வந்தது. டாக்டர் பார்த்தார். “இரண்டு நாள் பார்த்துக்கொண்டு சொல்கிறேன்” என்றார். பிறகு, “ஒருகால் அம்மை ஜூரமாக இருக்கலாமோ என்று பார்க்கிறேன்” என்றார்.

முத்துசாமிக்குத் தூக்கிவாரிப் போட்டது. “அம்மையா?” —அவர் கலக்கம் அந்தச் சொல்லில் புலம்பியது.

“பயப்படாதீர்கள்; அம்மையாக இருந்தால் என்ன ? ஜாக்கிரதையாக இருந்தால் போகிறது!” என்று சொல்லிவிட்டு டாக்டர் போய்விட்டார்.

முத்துசாமிக்குப் பழைய நினைவுகள் வந்தன; “கடவுளே, என்னையே தண்டித்துவிடு; என் குழந்தையை ஒன்றும் செய்யாதே” என்று மோனக்குரலில் அவர் கதறினார்.

டாக்டர் சொன்னபடியே குழந்தைக்கு வைசூரிதான் பூட்டியது. முத்துசாமி எத்தனையோ தெய்வங்களை வேண்டிக்கொண்டார்; என்ன என்னவோ செய்வதாக நேர்ந்துகொண்டார். நல்ல வேளை! குழந்தைக்கு அம்மை கடுமையாக இல்லை. பத்து நாட்கள் கழித்துத் தலைக்குத் தண்ணீர் விட்டார்கள். முத்துசாமி ஆறுதலாகப் பெருமூச்சு விட்டார்.

ன்று மாலே அவர் தம் அறையில் உட்கார்ந்திருந்தார். வேப்பமரத்தில் இலையே இல்லை; கொழுந்துகள் சிறிது சிறிதாகத் தோன்றியிருந்தன. ‘நம்முடைய வீட்டில் வேப்பிலை வேண்டியிருந்தபோது நம் மரம் உதவவில்லையே!’ என்ற எண்ணம் உண்டாயிற்று. அப்போது அவர் மனைவி வந்து நின்றாள்; “சமாசாரம் கேட்டீர்களா ?” என்றாள்.

“உனக்கு என்ன சமாசாரத்துக்கு? உன் சமாசாரங்களை வைத்துக்கொண்டு ஒரு தினப் பத்திரிகையே நடத்தி விடலாம். உனக்குத்தான் வேலம்மாள் என்ற பிரதான நிருபர் வேறு இருக்கிறாளே!” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

“ஆமாம்; வேலம்மாள் தான் சொன்னாள். குழந்தைக்கு அம்மை பூட்டி யிருந்தபோது வேப்பிலைக்கு என்ன செய்தேன் தெரியுமோ ?”

“ஆமாம், வேப்பமரத்தை மொட்டை யடித்து விட்டு ஊராரிடம் யாசகம் செய்திருப்பாய்.”

“வேலம்மாளிடம் சொன்னேன்; அவள்தான் வாங்கி வந்தாள். அவளுக்கு நாள் தவறாமல் சின்னப்பன்தான் கொண்டுவந்து தந்தானாம். நம் வீட்டில் அம்மை பூட்டியிருக்கிறதென்று தெரிந்து விசாரித்திருக்கிறான். வேலம்மாள் சொல்லியிருக்கிறாள். அவனே சிரத்தையாக ஒவ்வொரு நாளும் கொண்டு வந்து தந்தானாம்.”

முத்துசாமிக்கு அந்தக் கணத்திலே ஓடிப்போய்ச் சின்னப்பன் காலில் விழவேண்டுமென்று தோன்றியது. அவனுக்கு அவர் செய்த தீங்குக்கு, அவன் எவ்வளவு பெருந்தன்மையோடு நடந்துகொண்டான் !

“வேலம்மாளிடம் சொல்லி இங்கே அழைத்து வரச் சொல்கிறாயா?” என்று தாழ்ந்த குரலில் முத்துசாமி சொன்னார்.

“சொன்னால் வருகிறான்” என்று அலட்சியமாக அவள் சொன்னாள். அவளுக்கு அவன் ரிக்‌ஷாக்காரச் சின்னப்பன்தானே?

“ஐயா உன்னைக் கடிந்து கொண்டாரே; அதை, நினைத்து வருந்துகிறாராம்; ஒரு தடவை உன்னைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம் என்று சொல்லச் சொல்.”

“ஆமாம் எப்போதோ நடந்ததற்கு இப்போது சமாதானமாக்கும்! வாடா என்றால் வந்துவிட்டுப் போகிறான்!”

அவள் போய்விட்டாள். அவள் சொன்ன செய்தி முத்துசாமியின் உள்ளத்தை உருக்கியது. ‘நீ செய்ததற்கு அவன் செய்ததைப் பார்த்தாயா?’ என்று மனச்சாட்சி உறுத்தியது. அவனுக்கு எப்படி அபராதம் செலுத்துவது? நன்றிக் கடன் செலுத்துவது?—ஒன்றுமே தெரியாமல் விழித்தார்.

மறுநாள் சின்னப்பன் அவர் வீட்டுக்கு வந்தான்; “ஐயா! என்னைக் கூப்பிட்டீர்களாமே!” என்றான்.

அவனை நிமிர்ந்து பார்க்கக்கூட முத்துசாமிக்குத் திராணி இல்லை. “ஒன்றும் இல்லை. வந்து...வந்து... உனக்குப் பெரிய தப்புப் பண்ணிவிட்டேன்... உன்னுடைய குழந்தை...”

சின்னப்பன் இடைமறித்தான்; “இதெல்லாம் இப்போது எதற்கு ஐயா பேசவேண்டும்? உதிர்ந்த இலைகளைப் பொறுக்கி என்ன சுகம் அந்த இலைகளை எடுத்துச் சாம்பலாக்கி விடலாம். .அவ்வளவுதான். மறுபடியும் பசுமை ஏறுமா?”

முத்துசாமிக்கு அவன் ஞானம் தமக்கு இல்லையே என்று தோன்றியது.

“நம் வீட்டுக்கு வேப்பிலே தந்தாயாமே?”

“ஆமாம் குழந்தைக்குத் தலைக்குத் தண்ணீர் விட்டாயிற்றல்லவா ?”

“உன்னுடைய புண்ணியத்தாலே விட்டாயிற்று...”

“என்ன அப்படிச் சொல்கிறீர்கள்? சாமி புண்ணியத்திலே என்று சொல்லுங்கள்.”

“இவன் நந்தனாரைப் போலல்லவா பேசுகின்றான்?” என்றது உள்ளம்.

“எங்கிருந்து வேப்பிலை பறித்தாய்?” இது ஒரு பெரிய கேள்வியாக அவருக்குத் தோன்றியது.

“நீங்கள் வேப்பிலே ஒடிக்க வேண்டாம் என்று சொன்ன மறுநாளே எங்கள் குடிசைக்குப் பக்கத்தில் ஒரு செடி வைத்து வளர்த்தேன்.”

“ஆமாம் நான் பாவி! உன் குழந்தை...”

“கடவுள் சித்தம் எதுவோ அதுவே நடக்கும் ஐயா; குழந்தை போனாலும் வேப்பஞ்செடி வளர்ந்தது. அது சமயத்துக்கு உபயோகப்பட்டது. அதிலிருந்துதான் தழை ஒடித்துத் தந்தேன்.”

இது அவருக்கு மேலும் பிரமிப்பைத் தந்தது.

“ஒரு வருஷந்தானே ஆகியிருக்கும்? அதற்குள் அந்தச் செடியை மொட்டை யடிக்கலாமா ?”

“தழை பறித்தால் என்ன ? மறுபடியும் வளர்கிறது. அதற்குத்தானே அது இருக்கிறது?”

“அன்றைக்கு எனக்கு இந்த ஞானம் இல்லையே; உன்னை வீணாக வைதேனே! உனக்கு நான் என்ன செய்யப் போகிறேன்!” என்றார் நெஞ்சம் நெகிழ.

“அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். உங்கள் மரத்திலிருந்து நிறையக் கொத்துக் கொத்தாக ஒடிக்க வேண்டிய நிலை வரும். அப்போது தழைக்குத் தழை கொடுத்து விடுங்கள்.”

“சின்னப்பா, அப்படிச் சொல்லாதே; உனக்கு அந்த நிலை வரவேண்டாம்; போதும், ஒரு தடவை வந்தது!”

“என்ன ஐயா, அப்படிப் பயந்து போகிறீர்கள். மறுபடியும் அம்மை பூட்டவேண்டும் என்றா நான் சொல்கிறேன் ? வேறு சந்தர்ப்பம் வரத்தான் போகிறது.”

முத்துசாமிக்கு அவன் குறிப்பு விளங்கவில்லை; “என்னப்பா சொல்கிறாய்?” என்று கேட்டார்.

“அந்தக் குழந்தை போனபோதே முண்டகக்கண்ணியம்மாளை வேண்டிக்கொண்டேன். கொடுத்ததைத் திரும்பக் கொடுத்தால் அந்தக் குழந்தைக்கு வேப்பிலைப் பாவாடை கட்டி உன் சந்நிதிக்கு அழைத்துக்கொண்டு வருகிறேனென்று வேண்டிக் கொண்டிருக்கிறேன்.”

“அது எப்போது நடக்கிறதோ , நான் உனக்குக் கடனாளியாகி விட்டேன்” என்றார் முத்துசாமி.

“அப்படிச் சொல்லாதீர்கள். முண்டகக்கண்ணியம்மாள் கண்கண்ட தெய்வம். அவள் கண் பார்த்து விட்டாள், என் பிரார்த்தனை நிறைவேறத்தான் போகிறது” என்று சொல்லிப் புன்சிரிப்புச் சிரித்தான் சின்னப்பன்.

முத்துசாமிதான் பகற்கனவு காண்பதில் சமர்த்தராயிற்றே! பேசும்போதே அகக் காட்சி திடீரென்று அவருள் விரியும் அல்லவா? அவர் உள்ளத்தே ஏதோ காட்சியைக் கண்டார்.

“அப்படியா ? மிகவும் ஆனந்தம்!” என்று அவரும் வாய் நிறையப் பல்லாகக் சிரித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கோயில்_மணி/வேப்ப_மரம்&oldid=1382663" இலிருந்து மீள்விக்கப்பட்டது