உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்சும் பசியும்/004-028

விக்கிமூலம் இலிருந்து

4

சுமார் பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது இத்தாலிய 'பாஸிஸ்ட் ஜடாமுனி' அபிவீனியா மீது போர் தொடுப்பதற்கு முன்பு, கைலாச முதலியார் சாதாரணத் தறிகாரராய்த்தான் இருந்தார். ஏதோ முன்னோர்கள் தேடி வைத்துவிட்டுப் போன நாழி ஓடுப்போட்ட சிறு காரை வீடும், இரண்டு மரக்கால் விரைப்பாடும் கொண்ட சாதாரண மத்திய தர வர்க்கத் தொழிலாளியாகத்தான் இருந்தார். அந்தக்காலத்தில் அவர் உள்ளூர் பெரிய முதலாளியான தாதுலிங்கமுதலியாரிடம் நூல் வாங்கி நெய்து கொடுத்து அதற்குரிய கூலியைப் பெற்று வாழ்க்கை நடத்தி வந்தார். நாளாரம்பத்தில் அவர்

தமது சுய சம்பாத்தியத்தில் வாயை வயிற்றைக்கட்டி மிச்சம் பிடித்ததைக் கொண்டும், வயலை அடமானம் வைத்தும், நாலைந்து தறிகளை வாங்கிப்போட்டுத்தமது இனத்தாரில் சிலரை அதில் வேலைக்குவைத்துக்கொண்டு, நூல் வாங்கிக் கொடுத்து நெய்து சேலை துணிமணியாக்கித் தமது தொழிலை ஓரளவுவிருத்திபண்ணிக்கொண்டார்.

அதற்குப் பின்னால், ஹிட்லரின் பேராசையால் எழுந்த உலக யுத்தம் தொடங்கிய பிறகு, கவனிப்பற்றுக் கிடந்த கைத்தறித்தொழிலுக்குத் திடீரென்ற ஒரு மவுசு ஏற்பட்டுவிட்டது. யுத்தத் தேவையினாலும், ராணுவ விஸ்தரிப்பினாலும், மில் துணிக்கு ஏகப்பட்ட கிராக்கியும், பொதுமக்களிடையே துணிப் பஞ்சமும் ஏற்பட்டது. பகாசுரப்பசிகொண்டயுத்ததேவதைக்கு மில் துணி மட்டும் போதவில்லை. வெளிநாடுகளில் கைத்தறித் துணிக்கும் கிராக்கி அதிகமாயிற்று. இதன் காரணமாகவும், யுத்த காலத்தில் ஏற்பட்டிருந்த பணவீக்கத்தின் காரணமாகவும் கைத்தறி நெசவாளருக்குரிய கூலியும் உயர்ந்தது; கைத்தறித் துணி உற்பத்தியும் அதற்குரிய கிராக்கியும் உயர்ந்தது. பெருநாசச் சீரழிவை உலகத்துச் செல்வங்களுக்கும் மக்களுக்கும் கொண்டு வந்த யுத்தம், லாப வேட்டைக் காரர்களுக்கும் பெருமுதலாளிகளுக்கும் கொள்கை கொள்கையாகப் பணம் திரட்டிக் கொடுத்தது. பெரு மழையில் அடித்த தூவானம்போல், அந்தச் சூழ்நிலை! கைலாச முதலியார் போன்ற சிறு வியாபாரிகளையும் கைதூக்கி வளர்த்து விட்டது. யுத்த காலத்தில் கிடைத்த அபரிமிதமான வருவாயின்காரணமாக, கைலாசமுதலியார் தாமும் மற்ற வியாபாரிகளைப் போல் நூல் வாங்கி விற்பதற்குலைசென்ஸ் வாங்கினார். அத்துடன் தமது மகன் மணியின் பெயரால் ஒரு மாஸ்டர் வீவர் லைசென்சும் பெற்றார். அதன் மூலமாக, அவர் தாமும் நாலு வியாபாரிகளைப்போல் ஐம்பது அறுபது தறிகளுக்கு நூல் கொடுத்து நெய்து வாங்கி, ஜவுளிக் கொள் முதலும் வியாபாரமும் பண்ணத்தொடங்கினார். அத்துடன் தாதுலிங்கமுதலியார் போன்ற பெரும் புள்ளிகளிடமும் கள்ள மார்க்கெட்டில் நூல் வாங்கி நெய்யக் கொடுத்து வியாபாரம் நடத்தினார்.

இத்தியாதி - காரணங்களால், யுத்த காலத்தில் சாதாரணத்தறிகாரர் என்ற நிலைமையிலிருந்து முதலாளி' என்ற அந்தஸ்துக்கு கைலாசமுதலியார் உயர்ந்துவிட்டார். கையில் கிடைத்த புதுப் பணத்தின் மூலமாக, அவர் தமது பூர்விக, வீட்டை எடுத்துக்கட்டி விஸ்தரித்தார். நாழி ஓட்டைப் பிரித்து, மச்சு எடுத்து வீட்டைப் புதுப்பித்தார்; வீட்டுக்கு மின்சார விளக்கும் போட்டார். முன் வீட்டில், தூல்கட்டுக்களை ஸ்டாக்செய்யவும், ஜவுளிக் கொள்முதல் வியாபாரம் செய்யவும் ஒருகடையையும் திறந்துவைத்தார். கடையில் ஐம்பது ரூபாய் சம்பளத்தில், ஒரு கணக்கப் பிள்ளையையும், பதினைந்து ரூபாய்ச் சம்பளத்தில் ஒரு . எடுபிடி வேலைக்காரப் பையனையும் வேலைக்கு அமர்த்தினார். காலையில் அவர் ஸ்நானபானாதிகளை : முடித்துக் கொண்டு கையில் இரும்புப் பெட்டிச்சாவி கலகலக்க, ஈரத்தலையைச் சிக்கெடுத்து உதறியவாறே பட்டறைப் பலகையில் வந்து அமரும்போது, சிப்பந்திகள் இருவரும் எழுந்து நின்று மரியாதை செய்யும் போதும், 'மொதலாளி' என்று பவ்வியத்தோடு அழைக்கும் போதும், அவருக்குத் தம்மையறியாமலேயே சிறு அகந்தை உணர்ச்சி மேலோங்கும்.

வீட்டை எடுத்துக் கட்டியதோடு அவர் தாமிர பருணிப் பாசனத்தில் ஒன்றரைக் கோட்டை விரைப்பாடு கொண்ட வயலையும் கிரயத்துக்கு முடித்திருந்தார். இத்துடன் வாழ்நாளில் செம்பாதியை உழைத்துழைத்துச் சவித்து வாடிப் போன தம் மனைவி தங்கம்மாளுக்கு ஐயாயிரம் ரூபாய் பெறுமானத்துக்கு நகை நட்டுக்களும் பண்ணிப் போட்டிருந்தார். தங்கம்மாளும் புதுப் பண மோகத்தில் ஊரிலுள்ள நாலு பெரிய வீட்டுப் பெண்ணரசிகளோடு சம அந்தஸ்தில் பழகவேண்டும் என்ற காரணத்தால், வளர்த்துத் தொங்க விட்டுப் பாம்படம் போட்டிருந்தகாதை அறுத்து ஒட்டி, கால்துட்டு அகலத்தில் கம்மலும் போட்டுக் கொண்டாள், ஏதோ தன் மகன் மணிக்குக் காலாகாலத்தில் ஒரு கலியாணத்தைப் பண்ணி வைத்து விட்டால், மருமகளை ஆட்சி செலுத்திக் கொண்டு தான் நிம்மதியாக இருக்கலாம் என்ற நிரந்தர நப்பாசையும் அவள் மனத்தில் குடிகொண்டிருந்தது. வியாபாரி என்ற அந்தஸ்துக்கு வந்துவிட்டதால், கைலாச முதலியாரும் தமது மூத்த மகன் சுப்பிரமணியன் என்ற மணியை இங்கிலீஷ் படிப்புப் படிக்க வைத்து, பிஏ. கிளாஸ் வரையிலும் தள்ளி விட்டுவிட்டார். கைலாச முதலியார் தம் சம்பாத்தியத்தில் பெருமளவை வீட்டிலும் வயலிலும் வியாபாரத்திலும் போட்டு விட்டதால், அவரிடம் ரொக்கமாக அப்படி ஒன்றும் அதிகம் மிஞ்சிவிடவில்லை.எனவே வியாபாரத்தில் அடிக்கடி ஏற்படும் தேவைகளுக்கு தாதுலிங்க முதலியாரிடமும், மைனர் முதலியாரிடமும், வேறு சிலரிடமும் அவ்வப்போது ரொக்க லேவாதேவி செய்து, வாங்குவதும் அடைப்பதுமாக வியாபாரத்தை ஓட்டி வந்தார்.

கைலாச முதலியார் எந்தக் காலத்திலும் பாவ புண்ணியத்துக்கும் தெய்வத்துக்கும் அஞ்சி நடந்து வந்தார். திருச்செந்தூர் முருகப் பெருமான் மீது அவருக்குக் கரைகடந்த பக்தி. அவரது முருகப் பக்தியின் சாட்சியமாக அவர் தமது மூத்தமகனுக்கு சுப்பிரமணியம் என்று பெயரிட்டது போலவே தமது இரண்டாவது புத்திரனுக்கும் ஆறுமுகம் என்று பெயர் வைத்திருந்தார். ஆறுமுகத்துக்குப் பத்து வயதிருக்கும். கைலாச முதலியார் முருகனை நினைக்காத நேரமே கிடையாது. பட்டறைப் பலகையில் அமரும்போதும், சாப்பாட்டுக்கு இலைமுன் உட்காரும் போதும், அலுத்துப் போய்க் கொட்டாவி விடும்போதும், தூங்கி எழுந்திருக்கும் போதும் அவர் முருகன் பெயரை வாய்விட்டுச் சொல்லி வணங்க மறப்பதில்லை. அவரது வீட்டில் எங்கு பார்த்தாலும் தொங்கிக் கொண்டிருக்கும் முருகக் கடவுளின் ஆறுபடை வீட்டுப் படங்களும், பிற திருவுருவப் படங்களும் அவரது தெய்வ பக்தியைப் பறை சாற்றிக் கொண்டிருக்கும். மேலும் அவர் தமது வீட்டு மாடியில் ஒரு சிறு பூஜை அறையும் வைத்திருந்தார். காலையில் பூஜையெல்லாம் முடிந்த பிறகு தான் அவர் தொண்டையை நனைப்பார். அவர் சாதாரணத் தற்காரராயிருந்த காலத்திலேயும், வைகாசிவிசாகத்துக்கோ மாசித் திருவிழாவுக்கோ கூண்டு வண்டி கட்டிக் கொண்டு குடும்பத்தோடு திருச்செந்தூர் சென்று, நீராடி நேர்த்திக் கடன் முடித்துவருவதுவழக்கம். இப்போது அவர் முதலாளி என்ற அந்தஸ்துக்கு ஆளான பின்பும், சஷ்டியன்றும் கிருத்திகையன்றும் ஒரு போதும் விரதம் அனுஷ்டிக்கத் தவறுவதில்லை. அத்துடன் கடைசி வெள்ளிதோறும் தவறாது திருச்செந்தூருக்கு மாதாந்தமும் சென்று வந்து விடுவார்.

மாற்றுக் குறையாததெய்வபக்தியின் காரணமாகவும், தமது பூர்வ நிலையை மறந்தறியாத காரணமாகவும், அவர் தம்மிடம் தொழில் நடத்திய தறிகாரர்களிடத்தில் கூடிய பட்ச நாணயத்தோடும், மரியாதையோடும் நடந்து கொண்டார். பெரிய முதலாளிமார்களைப்போல், தறிகாரர் களின் வாயில் வயிற்றிலடித்துப் பணம் திரட்டவும், தறிகாரர்களிடத்தில் கண்ணியக்குறைவாகவோ, அதிகார முறுக்காகவோ நடந்து கொள்ளவும் அவர் முனையவில்லை. இதனால், தறிகாரர்கள் அனைவரிடத்திலும் பொதுவாக அவரைப்பற்றி நல்லெண்ணம் தான் நிலவி வந்தது.

வடிவேலு முதலியாருக்குக் கைலாச முதலியாரின் நாணயப் பொறுப்பிலும் நல்லெண்ணத்திலும் மிகுந்த நம்பிக்கை. எனவேதான் அவர் எப்படியும் நடப்பு வருஷத்தில் கைலாச முதலியாரைக் கோயில் தர்மகர்த்தா ஆக்கிவிடுவது என்றதீர்மானத்தோடு தறிகாரர்களிடையே அவ்வப்போது பிரசாரம் செய்து பலம் திரட்டி வந்தார். அன்றுமாலை நடக்கவிருந்த ஊர்க்கூட்டத்தில் கூலி உயர்வுப் பிரச்னையையும் தர்மகர்த்தாப் பிரச்னையையும் முடிவு செய்வது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது, அன்றைக்கும் பொழுது அநேகமாகக் கருக்கலாகி விட்டதால், வடிவேலு முதலியார் கைலாச முதலியாரைக் கூட்டத்துக்கு நேரில் சென்று அழைத்து வருவதற்காகச் சென்றிருந்தார்.

"அண்ணாச்சி, அண்ணாச்சி"

வாசலில் கூப்பிடு குரல் கேட்டதும் கைலாச முதலியாரின் மனைவி தங்கம்மாள் சேலையை இழுத்துத் தோளில் மூடிக் கொண்டு, வாசல் நடைக்கு வந்து எட்டிப் பார்த்தாள். வாசலில் வடிவேலு முதலியார் நிற்பதைக் கண்டதும், உள்ளே திரும்பிச் சென்று மாடிப் படிக் கட்டுக்கருகே நின்றவாறே மேல் நோக்கிச் சத்தம் கொடுத்தாள்.

"இந்தாங்க, உங்களத்தானே."

கைலாச முதலியார் மாடியிலிருந்து இறங்கி வந்தார். 'வந்தவரிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டுத் தன் வேலையைக்கவனிப்பதற்காக உள்ளே சென்றாள் தங்கம்.

கைலாச முதலியார் வாசல் நடைமீதிருந்த வெற்றிலைப் பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே வந்து, கடையை அடுத்துக் கிடந்த பெஞ்சியில் அமர்ந்தார். “வடிவேலுத் தம்பியா? வாங்க. என்ன நேரமாயிட்டுதா?" என்று விசாரித்தவாறேபெட்டியைத்திறந்தார்.

“ஆமா அண்ணாச்சி நேரத்தோடபோயிட்டா நல்லது தானே. பெரிய முதலாளிகூட வாரதாக இருக்கு” என்றார் வடிவேலு

கைலாச முதலியார் வெற்றிலையைப் போட்டு முடித்து விட்டு, “அப்ப இருங்க. வேட்டி மாத்திக்கிட்டு வந்திடுதேன்" என்றுகூறியவாறே உள்ளே சென்றார்.

கைலாச முதலியாரும் வடிவேலு முதலியாரும் கூட்டம் நடக்கவிருந்த இடமான அம்மன் கோயிலுக்குச் செல்லும் போது பொழுது நன்றாக இருட்டி விட்டது. தெருக்களில் மின்சார விளக்கும் போய் விட்டது. கோயில் முன் மண்டபத்திலும் தெருவிலுமாகத் தறிகாரர்கள் பலர் காத்துக் கொண்டிருந்தார்கள். கோயிலுக்குள்ளே வெளிப்பிரகாரத்தில் ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கு புஸ்ஸென்று இரைந்து கொண்டிருந்தது. சமுக்காள விரிப்பில் உள்ளூர் ஜவளி நூல் வியாபாரிகள் சிலர் உட்கார்ந்திருந்தனர், வடிவேலு முதலியார் கைலாச முதலியாரை உள்ளே அனுப்பி வைத்து விட்டு, மற்ற தறிகாரர்களோடு போய்நின்றுகொண்டார்.

"வாங்க கைலாச முதலியார்வாள். திருச்செந்தூரி லிருந்து எப்ப வந்தீக?" என்று விசாரித்தார் ஒரு வியாபாரி.

“நேத்து ராத்திரியே வந்துட்டேனே" என்று பதிலளித்து விட்டு, 'பெரிய முதலாளியும் வாரதாகச் சொன்னாகளாயில்லே வரலியா?" என்று அர்த்தபாவமற்று நிச்சிந்தையாய்க்கேட்டார்.

அவருக்குயாரோ ஒருவர் பதிலளிக்க முனைவதற்குள் வெளியே கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

"வந்தாச்சி போலிருக்கே"

பெரிய முதலாளி தாதுலிங்க முதலியாரும், தர்மகர்த்தாமைனர் முதலியாரும், சேர்ந்தாற்போல் உள்ளே வந்தார்கள்; பெரிய முதலாளியைக் கண்டதும் ஒரு சில வியாபாரிகள் மரியாதைக்காக எழுந்து நின்று உட்கார்ந்தார்கள்.

பெரிய முதலாளி என்ற பெயருக்கொப்பத் தாதுலிங்க முதலியார் பூதாகரமான சரீரமும்; அலட்சியம் நிறைந்த பார்வையும் கொண்டு விளங்கினார்.கை விரல்களில் வைர மோதிரங்கள் பளிச்சிட்டு டாலடித்தன. காதிலே கொண்டிக் கடுக்கனின் வைர ஒளி நேரத்துக்கு ஒரு நிறம் காட்டியது, மெல்லிய கிளாஸ்கோமல் துணியால் தொய்வாகக் கட்டிய பட்டத்தாரும், மேலே அணிந்திருந்த தும்பை வெள்ளை நிறமானதொளதொளத்த ஜிப்பாவும், நான்குவிரல் அகலக் கரை கொண்ட ஜரிகை அங்கவஸ்திர விசிறி மடிப்பும் அவரது பெரிய மனுஷத் தன்மையை அளந்து காட்டும் அளவுகோல்களாக விளங்கின. மைனர் முதலியார்வாளின் ஆடையணிகளிலிருந்து பரவிக் கமழ்ந்த 'கான்பூர் நைட்குயினி'ன் நறுமானமும், கூட்டத்தினரிடையே நிலவிய அமைதியும் பெரிய முதலாளியின் வருகைக்கு ஒருபவித்திரச் சூழ்நிலையை உண்டாக்கிக்கொடுத்தன.

தாதுலிங்க முதலியாரும் மைனர்வாளும் கூட்டத் தினருக்குத் தலைமை தாங்கும் பாவனையில் மத்தியில்போய் அமர்ந்து கொண்டனர். அங்கு நிலவிய அமைதியை மைனர் தான் முதலில் கலைக்கத் துணிந்தார்.

"வியாபாரிகள் எல்லாரும் வந்தாச்சா? இன்னும் வரணுமா?" :

"அநேகமாக வந்தாச்சி. கூட்டத்தை நடத்தலாம்" என்று ஒரு குரல் பதிலளித்தது.

தாதுலிங்கமுதலியார் முகத்தில் எந்தவிதமான பாவப் பிரதிபலிப்பும் இல்லாமல் கைலாச முதலியாரை நோக்கி, "என்ன கைலாச முதலியார்வாள், தறிகாரர்கள்ளாம் கூலி உசத்திக்கேக்கிறாங்களே. நீங்க என்ன சொல்லுதிய?" என்று கேட்டார்.

"கூடக்குறையன்னாலும் பாத்துக்குடுக்கவேண்டியது தான். இல்லேன்னு சொல்லிற முடியுமா?" என்றார் கைலாசம்.

கைலாச முதலியாரையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்த மைனர்வாளின் முகம் சட்டென்று வக்கிர உச்சம் பெற்றது. உடனே அவர் "இந்தத் தறிகாரர்களே இப்படித்தான். இதே வழக்கமாப் போச்சு. நூல் விலையானா, நாளுக்கு நாள் ஏறிக்கிட்டே போவுது. கூலியையும் உசத்திக் குடுத்துட்டா, அப்புறம் சரக்கு நகர்ந்த காலத்திலேதான் நிசம்!" என்று அடித்துப்பேசினார்.

"வாஸ்தவம்தான். ஆனால் நூல் விலை ஏறுதுங்கிறதுக்காக, கூலியைக் குறைச்சிச் சரிக்கட்ட முடியுமா? நாலஞ்சு வருஷத்துக்கு மின்னே கிடைச்ச கூலியலே, இப்போ தறிகாரங்களுக்கு அரைவாசிகூடக் கிடைக்கல்லே. இன்னிக்கி இருக்கிற விலைவாசியிலே அவங்க பாடும் ஒடியடைய வேண்டாமா?" என்றார் கைலாசம்.

"எல்லாம் பெரிய முதலாளி பார்த்துச் சொன்னா, சரிதான்" என்று பொறுப்பைத் தாதுலிங்க முதலியாரிடம் தள்ளிவிட முனைந்தார் ஒருவியாபாரி.

பிரச்சினை தாதுலிங்க முதலியாரிடம் கைமாறு வதற்குள் ஒரு சிறு வியாபாரி முந்திக்கொண்டு பேச முனைந்தார்; "அவாளுக்கு என்ன? நம்மைச் சொல்லுங்க. நமக்கும் தறிகாரர்களை வச்ச வாழ்வு; தறிகாரர்களுக்கும் தம்மை வச்ச வாழ்வு. கொஞ்சம் அனுசரித்துத்தான் போகணும், இல்லேன்னா, தறிகாரங்கள்ளாம் ஒண்ணு கூடிக்கிட்டு ஏதாவது தப்புத் தண்டான்னு ஆரம்பிச்சா, நம்பயாபாரமே தொலைஞ்சிது!"

இந்தப் பேச்சைக் கேட்டவுடன் தாதுலிங்க முதலியார் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேசத் தொடங்கினார்: "என்னய்யா பேசறிங்க? இப்ப மட்டும் வியாபாரம் ரொம்ப வாழுதாக்கும். வர வர ஜவுளி ஏத்துமதியே அத்துப்போச்சி, வியாபாரமோ நடக்கல்லெ. சரக்கெல்லாம் இடிச்சிவச்ச புளி மாதிரி இருக்கு, நூல் விலையோ ஏறுது கூலி உசத்திக் குடுக்கிறதுக்கு என்ன நியாயம் இருக்கு?”

தாதுலிங்க முதலியாரின் அதிகார மிடுக்கு நிறைந்த பேச்சு மைனர் முதலியாரின் வாயையும் திறந்து விட்டது."சிலபேர் குடுத்துக்குடுத்து வழக்கம் பண்ணப்போய்த்தான் தறிகாரங்களும் கூத்தாடுறாங்க" என்று கூறிவிட்டு அர்த்த பாவத்தோடு கைலாச முதலியாரைப் பார்த்தார்.

கைலாச முதலியார் அந்தக்குறிப்பை உணர்ந்தவராக, "மனமறிஞ்சி இனத்தான் வயிற்றில் அடிக்கக்கூடாது" என்று கூறி நிறுத்தினார்.

நம்பயாபாரி இதாவது தான், தறிகாரர் அனுசரித்து தொவைக் கண்டான் "யார் வயித்திலே யார் அடிக்கிறா? வேலைக்குத்தான் கூலியா? விருதாக்கூலியா?"மைனர்வாளின் குரல் மண்டபக் காலில் முட்டி மோதி எதிரொலித்தது.

சுமார் அரைமணிநேர வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு இரு சாராருக்கும் பொதுவாக ஒரு முடிவு செய்யப்பட்டது. தறிகாரர்களுக்கு அப்போது கழிக்கு எட்டணா கூலிதான் கிடைத்து வந்தது. குறைந்தபட்சம் பன்னிரண்டணா வேண்டும் என்பது தறிகாரர்களின் கோரிக்கை. கடைசியில் பெரும்பான்மையான வியாபாரிகளின் அபிப்பிராயப்படி கழிக்குப் பத்தணாக் கூலி என்று 'தென்காசி வழக்' காகக் கூலி நிர்ணயம் செய்யப்பட்டது.இந்த நிர்ணயிப்புக்கு வருவதற்கே கைலாச முதலியாரையொத்த சிறு வியாபாரிகள் பலரும் வெகு நேரம் வாதாட வேண்டியிருந்தது. பிறகு இந்த முடிவைத் தெரிவிப்பதற்காகத் தறிகாரர்கள் உள்ளே வரவழைக்கப்பட்டார்கள்.

முடிவு தெரிவிக்கப்பட்டது; தறிகாரர்களும் சம்மதித்துக் கொண்டார்கள்.

"அப்போ விஷயம் முடிஞ்சிது. கூட்டத்தைக் கலைச் சிரலாமா?" என்று கேட்டுக்கொண்டே இடத்தை விட்டு எழுந்திருக்க முனைந்தார் மைனர் முதலியார்,

உடனே ஒரு வியாபாரி குறுக்கிட்டு, "இருங்க அவசரப்படுதியளே!" என்று இடைமறித்துக் கூறி அவரைக் கையமர்த்தி உட்கார வைத்தார். இதற்குள் வடிவேலு முதலியார். "முதலாளி, நம்ம அம்மன் கோயில் தர்மகர்த்தா விசயமா ஒரு முடிவு பண்ணனும்னு பல பேருக்கு எண்ணம் அதையும் இங்கேயே " என்று ஆரம்பித்தார். அவரை ஆமோதித்தார் ஒரு சிறு வியாபாரி,

தறிகாரர்களும் வியாபாரிகளும் பொருளாதார அந்தஸ்தில் வேறுபாடு உடையவர்களானாலும், ஊர்ப் பொதுக் காரியங்களில் சமூகத்தினர். அனைவருக்குமே சரிசமானமான வாக்குரிமை உண்டு. மேலும் அன்று தறிநெசவாளிகள் பலர் வந்திருந்தார்கள். எனவே தர்மகர்த்தாப் பிரச்சினை தவிர்க்க முடியாததாகி விட்டது. எனிலும் தாதுலிங்க முதலியார் தமது அதிகார தோரணையைப் பிரயோகிக்கத் தயங்கவில்லை.

“என்னய்யாயோசனை? அருணாசலமுதலியார்வாள் தான் தர்மகர்த்தாவா இருக்காகளே, அவாளே இருந்துட்டுப் போகட்டுமே. எல்லாம் நிலைமை சீர்ப்பட்டு வந்த பிறகு பாத்துக்கிடலாம்” என்று அடித்துப் பேசினார்.

"மைனர் வாளை நான் குத்தம் சொல்ல வரலை. ஊர்ப் பொல்லாப்பு. நாலுபேர் நாலுவிதமாப் பேசுதாங்க. பொறுப்பைக் கைமாத்திக் குடுத்திட்டா, ஒரு வம்பு தும்பு இல்லை" என்று வடிவேலு முதலியாரை ஆதரித்த சிறு வியாபாரி அழுத்திப் பேசினார்.

இதைக் கேட்டதும் கூட்டத்தில் நின்ற சுப்பையா முதலியார், “அது என்ன அது? அண்ணாச்சியையும் கூட்டத்திலே வச்சிக்கிட்டு இப்படி அவமரியாதையாப் பேசுறதாவது?” என்று கண்டனக் குரல் எழுப்பி, தமது குடும்ப விசுவாசத்தை நிலைநாட்டிக் கொண்டார்.

“ஊர்க் காரியமின்னா நல்லதும் வரும்; பொல்லதும் வரும். நாலும் பொறுத்துத்தான் போகணும். கோவிச்சுக் கிட்டா முடியுமா?” என்று சூடாகப் பதில் அளித்தார் வடிவேலு முதலியார்.

கடைசியில் தறிகாரர்கள் அபிப்பிராயப்படியே தர்மகர்த்தா பிரச்சினை 'அஜண்டா'வில் இடம் பெற்றது. பெரிய முதலாளியும் மைனர்வாளும் கிளப்பிய ஆஷேபணைகள் ஒன்றும் நிலைக்கவில்லை. முடிவாக வடிவேலு முதலியாரின் திட்டமே நிறைவேறியது. பெரும்பான்மை யோரின் ஆதரவின் மூலம் கைலாச முதலியார் அம்மன் கோயிலின் புதிய தர்மகர்த்தாவாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். புதிய தர்மகர்த்தாவிடம் கோயில் கணக்கு வழக்குகளை யெல்லாம் அருணாசல முதலியார் கூடிய சீக்கிரம் ஒப்படைப்பதென்றும் கூட்டத்தார் முடிவு செய்தனர்.

புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்ட கைலாச முதலியார் முருகா' என்று தமக்குத் தாமே கூறிவிட்டு, சபையோரைப் பார்த்து, "எல்லாருமாகச் சேர்ந்து கொடுக்கிற இந்தப் பொறுப்பை என்னாலானமட்டும் கவனிச்சிப் பார்க்கிறேன். அம்மன் பணிக்கு அட்டி சொல்லப்படுமா?" ' என்று அவையடக்கத்தோடு கூறிக்கொண்டார்.

பின்னர் கோயிலுக்குப் பூஜை செய்யும் ஓதுவார். மூர்த்தி அம்மனுக்குத் தீபாராதனை காட்டிவிட்டு வந்திருந்தவர்கள் அனைவருக்கும் விபூதிப் பிரசாதம் வழங்கினார். விபூதிப் பிரசாதத்தை வாங்கி நெற்றியில் தரித்தவாறே கூட்டத்தினர் கலைந்து சென்றனர். மைனர் முதலியார் கோயிலைவிட்டு வெளியேறும் வரையிலும் வாபோட் திறக்கவில்லை. ஒன்றும் பேசாமல், பெரிய முதலாளியுடன் சென்று அவரது காரில் ஏறிக்கொண்டார்.

இரட்டைக்குழல் ஹார்னை உறுமிவிட்டு, அந்தபியூக் கார்தெருமூலையைக் கடந்து திரும்பியது.அப்போதுதான் டைனர் முதலியார் தம் திருவாயை மலரச் செய்தார் .

"பாத்தியளா. அண்ணாச்சி, உங்க பேச்சுக்குக்கூட மதிப்பில்லாமப் போச்சி எல்லாம் அந்தக் கைலாசம் கைவரிசைதான். இன்னிக்கி ஊர் விவகாரத்திலே தறிகாரங்களையெல்லாம் ஒண்ணு திரட்டிக்கிட்டு நினைச்சதைச் சாதிக்கிறவன், நாளைக்கு நம்ம வியாபார விசயத்திலேயும். இந்த மாதிரி ஏதாவது பண்ண மாட்டான்னு என்ன நிச்சயம்" ?

தாதுலிங்க முதலியாரிடமிருந்து இந்தக் கேள்விக்கு உடனே பதில் வந்து விடவில்லை. சில விநாடிகள் கழித்து அவர் சொன்னார்: "தம்பி, கைலாசம் நான் வளர்த்து விட்ட பயிர்; வளர்த்து விடத் தெரிஞ்சமாதிரி, அதைச் சாகடிக்கவும் எனக்கு வழி தெரியும். அந்தக் கவலையை விடுங்க."

தாதுலிங்க முதலியாரின் வர்ம மொழியைக் கேட்ட பின்னர்தான் மைனர் முதலியாருக்கு ஆசுவாசமாக மூச்சு வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பஞ்சும்_பசியும்/004-028&oldid=1684051" இலிருந்து மீள்விக்கப்பட்டது