உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்சும் பசியும்/014-028

விக்கிமூலம் இலிருந்து

14


கைலாச முதலியாரின் மரணச் செய்தி காட்டுத்தீ போல் பரவியது.

சிறிது நேரத்தில் ஆணும் பெண்ணுமாக அந்தத் தெருவிலுள்ளவர்கள் அனைவரும் அங்கு கூடிவிட்டார்கள்; தன்னந் தனிமையில் நிர்க்கதியாக அழுது புலம்பித் தவித்த தங்கம்மாளோடு வந்திருந்த பெண்கள் அனைவரும் சேர்ந்து அழத்தொடங்கி, தங்கள் அனுதாபத்தைக் காட்டிக் கொண்டார்கள். வந்திருந்த ஆண்களின் துணையோடு இருளப்பக் கோனார் மாடியிலுள்ள பூஜையறைக் கதவை உடைத்து, கயிற்றை அறுத்து, கைலாச முதலியாரின் உயிரற்ற சடலத்தைக் கீழே இறக்கிக் கொண்டு வந்தார். தன்னைக் கைப்பிடித்து மணந்த கணவனின் உடலைக் கண்டதும், தங்கம் அதன் மீது விழுந்து முகத்திலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறிப் புலம்பினாள்.

கைலாச முதலியார் தூக்கிட்டு இறந்துபோன போதிலும் அவரது முகம் விகாரமாயிருக்கவில்லை; சோர்ந்து படுத்துறங்கும் நோயாளியைப் போல் அவர் தோற்றமளித்தார்; வாயும் கைகளும் கிட்டித்து இறுகிப் போயிருந்தன; முகத்தில் நிம்மதி ததும்புவது போலிருந்தது. கடன்காரர்களையும், கஷ்டங்களையும், கடவுளையும் ஏமாற்றிவிட்டுத் தப்பித்துச் செல்கிறோம் என்ற இறுதிநேர எண்ணத்தில் பிறந்த நிம்மதியோ, என்னவோ?

தந்தையும் மகனும் ஒரே தினத்தில் காலன் வாய்ப்பட்ட கோரத்தைக்கண்டு வந்திருந்த பெண்கள் கண் கலங்கினார்கள்; தங்கள் தாலிப் பாக்கியம் எப்படி எப்படியோ என்ற அச்சத்தால் உள்ளம் நடுங்கினார்கள்! அந்தப் பயங்கரக் காட்சியைக் காணவே அஞ்சினார்கள்; கூசினார்கள்.

வீட்டுக்குள்ளிருந்து பெண்களின் அழுகையும் ஓலமும் இடைவிடாது சப்திக்கும் கடலலையைப் போல், கும்மென்று இரைந்து எதிராலித்துக் கொண்டிருந்தது. இருளப்பக் கோனார் இன்னது செய்வதெனத் தெரியாமல், வெளி முற்றத்தில் ஒரு மூலையில் உட்கார்ந்து வாயில் வேட்டியை வைத்துப் பொத்திக் கொண்டு, விக்கி விக்கி அழுது கொண்டிருந்தார். வந்திருந்த தறிகாரர்களும், வியாபாரிகளும் வெளி முற்றத்தில் கிடந்த பெஞ்சியிலும் திண்னையிலும் தரையிலுமாக உட்கார்ந்து, அந்தத் துக்ககரமான சம்பவத்தைப்பற்றிப் பேசி, தத்தம் மனப்பாரத்தைத் தணித்துக் கொண்டிருந்தார்கள்.

"இருந்திருந்து இவருக்கு இந்தக் கதி வந்திருக்க வேண்டாம். எவ்வளவு நல்ல மனுசன்!" என்று கூறினார் ஒரு நெசவாளி

"நல்ல மனுசினைத்தான் உலகத்திலே பிழைக்க விடுறதில்லையே. எல்லாம் அந்தப் பெரிய முதலாளியும், மைனர்வாளும் சேர்த்து செஞ்ச வேலையாலேதான் இவுக கதி இப்படியாச்சி!" என்று பக்கத்திலிருந்த வடிவேலு முதலியார் ஆத்திரப்பட்டுக் கொண்டார்.

வே, வீணா எதுக்கு அவுற பேரையெல்லாம் இழுக்கிய? என்னமோ கைலாசமுதலியார்வாளுக்கு விதிச்ச விதி அவ்வளவுதான்!' என்று அந்தப் பேச்சைத் தட்டிக் கழித்தார் சுப்பையா முதலியார்.

சுப்பையா முதலியாருக்குத் தக்கவாறு பதில் கொடுக்க வேண்டுமென்று வடிவேலு முதலியார் நினைத்தார். ஆனால் சந்தர்ப்பம் சரியில்லையென்பதை உணர்ந்து, தம் மனத்திலிருந்து துள்ளி வந்த பதிலைப் பல்லைக் கடித்து உள்ள முக்கிக் கொண்டு, "விதியாமில்லெ! என் வாயிலே என்னமாத் தான் வருது. என்று கூறியவாறே, சுப்பையா முதலியாரை முறைத்துப் பார்த்துக்கொண்டார்.

இதற்குள் இன்னொரு சிறு வியாபாரி, ஆழ்ந்த பெரு மூச்செறித்தவாறே, "என்னமோ, கைலாச முதலியார் கதை முடிஞ்சி போச்சி இருக்கிற நிலைமையிலே யாரார் கதி எப்படியாகப் போவுதோ? இனிமே நம்ம கதை என்னென்னைக்கோ?" என்று நீட்டி முழக்கிச் சலித்துக் கொண்டார்.

”பாவம், அந்தச் சின்னவனுமில்லெ செத்துப் போனான், மணிக்குப் பலத்த அடியாம். ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்காகளாம். கடைசி நேரத்திலே செத்தவுங்க முகத்தைப் பார்க்கக்கூட அவனுக்குக் குடுத்து வைக்கலெ போலிருக்கு" என்றது மற்றொரு குரல்

"அதுவும் ஒரு வழிக்கு நல்லதுதான். இந்தக் கண்றாவியைப் பார்க்கிறதை விட" என்று பதிலளித்தது மற்றொன்று.

வந்திருந்தவர்கள் அனைவரும் இவ்வாறு தத்தம் அபிப்பிராயங்களைப் பரிமாறி, மனத்தைச் சாந்தி செய்து கொண்டிருந்த வேளையில் வெளியே கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டது. தொடர்ந்து, அவசர அவசரமாக உள்ளே ஓடிவந்தான் சங்கர்.

சங்கர் உள்ளே வந்ததும் ஓரிருவர் பெரிய முதலாளியின் மகன் என்ற காரணத்துக்காக, "வாங்க தம்பி" என்று வரவேற்றுக் கொண்டனர்,

சங்கர் எதையுமே காதில் வாங்கிக்கொள்ளாமல் நேராக உள்ளே வந்தான்; சங்கரைக் கண்டதும் இருளப்பக் கோனார் வாய்விட்டுக் கோவென்று அலறி விட்டார்,

"கோனாரே, அழுது என்ன பயன்? நடந்தது நடந்து விட்டது. இனி ஆகவேண்டியதை கவனியுங்கள்" என்று தேற்றியவாறே சங்கர் வீட்டுக்குள் சென்று, நடுவீட்டில் கிடத்திப் போட்டிருக்கும் சடலங்களை கவனித்தான்.

"பாருடாப்பா, சங்கர் பாரு, எங்க அலங்கோலத்தை!" என்று பயங்கரமாக அலறிக் கதறினாள் தங்கம்மாள்.

சங்கருக்கு நெஞ்சில் வேதனை முட்டிக்கொண்டு வந்தது; அவன் கண்கள் கலங்கிச் சிவந்தன; கண்ணீர் துளித்துச் சொட்டியது. பிரமை பிடித்தவன் போல் அந்தப் பிணங்களை ஒரு நிமிஷ நேரம் பார்த்து விட்டு, கண்ணைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தான்.

வெளியே வந்த சங்கர் இருளப்பக் கோனாரைக் கூப்பிட்டு, "என்ன கோனார்; செலவுக்குப் பணம் இருக்கா?" என்று ரகசியமாகக் கேட்டான். கோனார் இன்னது சொல்வதெனத் தெரியாமல் மாலை மாலையாகக் கண்ணீர் சொரிந்து நின்றார். "நான் போய் உடனே ஆள்மூலம் பணம் அனுப்பி வைக்கிறேன். மணியை நான் இப்போதே பார்த்தாகணும். அடி, பலமோ" என்று சொல்லியவாறு நடை இறங்கினான் சங்கர்.

சிறிது நேரத்தில் சங்கரின் கார் உள்ளடங்கிய மெல்லிய உறுமலோடு புறப்பட்டுச் சென்றது.

சங்கர் தன் வீட்டுக்குச் சென்று, ஒரு வேலைக்காரன் மூலமாய் இருளப்பக் கோனாருக்குப் பணத்தை அனுப்பி விட்டு, நேராக ஆஸ்பத்திரிக்குக் காரை ஓட்டினான்.

'ஆஸ்பத்திரி போர்டிகோவில் காரை நிறுத்திவிட்டு அவசர அவசரமாக உள்ளே சென்று, அங்கிருந்த கம்பவுண்டரிடம் "டாக்டர் எங்கே" என்று கேட்டான்,

"வாங்க, மிஸ்டர் சங்கர்.டாக்டர் உள்ளே வேலையாய் இருக்கிறார். உங்கள் சிநேகிதர் மணி..."

கம்பவுண்டர் பேச்சை முடிக்குவரை சங்கர் காத்து நிற்கவில்லை.

"மணிக்கு எப்படி இருக்கிறது? அதைத் தெரிந்து கொண்டு போகத்தான்வந்தேன்" என்று ஆத்திரப்பட்டான் சங்கர்.

"ஆபத்து ஒன்றுமிராது. டாக்டர் வந்தால் தெரியும். மணிக்கு வைத்தியம் செய்யத்தான் போயிருக்கார்."

"இப்போது பார்க்க முடியாதா?"

"யாரையும் உள்ளே விடக்கூடாது என்று உத்தரவு."

சங்கர் பதிலொன்றும் பேசாமல் ஆஸ்பத்திரி வராந்தாவிலேயே குறுக்கும் மறுக்கும் நடக்கத் தொடங்கினான்; அவனுடைய உள்ளம் மணியின் நிலைமையைத் தெரிந்து கொள்ளத் துடியாய்த் துடித்தது. 'மணியும் அவன் தம்பியைப்போலவே ஒரே தினத்தில் மூன்று பேரா_ அதைப்போல் வேறு கோர பயங்கரமே கிடையாது! எல்லாம் என் தந்தையால் வந்த வினை! தந்தை மட்டும் தானா? எல்லாம் இந்த சர்க்காரால் வந்த வினை!. மணியின் உயிருக்கு. சேச்சே! அப்படியிருக்காது. அப்புறம் கமலா என்ன பாடுபடுவாள்? மணியைப் போன்ற நல்ல பையன் கிடைப்பானா? நல்ல சிநேகிதன் கிடைப்பானா? சங்கரின் மனம் நிலைகொள்ளாமல் அலைமோதிக் கொண்டிருந்தது.

அவனது மனப் போக்கின் வேகத்தைப் போலவே அவனும் ஓரிடத்தில் தரித்து நிற்க முடியாமல் மேலும் கீழும் அலைந்து கொண்டிருந்தான்.

திடீரென்று ஆஸ்பத்திரிக் கட்டிடத்தின் கடப்பைக் கற்களின் மீது பூட்ஸ் காலின் சப்தம் 'டக் டக்' கென்று ஆரோகணித்து வரத் தொடங்கியது.

சங்கர் திரும்பிப் பார்த்தான்; டாக்டர் நடராஜன் வந்து கொண்டிருந்தார்.

"வணக்கம், டாக்டர்" என்று கூறியவாறே அவரை நோக்கிச் சென்றான் சங்கர்.

டாக்டரும் மறு வணக்கம் கூறிவிட்டு, "வாருங்கள் உள்ளே” என்று அவரது அறைக்குள் அழைத்துச் சென்றார்.

சங்கர் பரபரப்போடு அவருடன் சென்றவாறே, "டாக்டர் ஸார், மணிக்கு எப்படி இருக்கிறது? ஆபத்தில்லையே!"என்று கேட்டான்.

"பயமில்லை வாருங்கள், சொல்கிறேன்" என்றவாறே டாக்டர் உள்ளே சென்று தமது ஆசனத்தில் அமர்ந்தார்' சங்கர் அவருக்கு எதிராகக் கிடந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான். "என்ன சங்கர், நீங்கள் மணியின் வீட்டுக்குப் போய் விட்டுத் தானே வாரீங்க?” என்று சந்தேகாஸ்பதமாய்க் கேட்டார் நடராஜன்.

"ஆமாம் டாக்டர்! ஒரே நாளில் இரண்டு சாவு; மணியின் தகப்பனார், கைலாச முதலியாரும் தற்கொலை பண்ணிக்கொண்டார்; அந்தப்பையனும் போய்விட்டான். மகா பயங்கரமான சம்பவம், ஸார்!" என்று அங்கலாய்த்தான் சங்கர்,

கைலாச முதலியாரும் இறந்து விட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் டாக்டர் எதையோ யோசித்தவாறே, "தற்கொலையா?" என்று வியந்தார்; மறுகணமே,"நான் அப்படித்தான் நினைத்தேன்" என்று கூறி முடித்தார்.

சங்கரால் ஒரு கணம்கூட அமைதியோடிருக்க முடியவில்லை; அவன் நிலை கொள்ளாமல் புழுங்கிக் கொண்டிருந்தான்,

“டாக்டர் ஸார்,மணியை நான் பார்க்கமுடியுமா?"

"மன்னிக்க வேண்டும்" என்றார் டாக்டர். "சங்கர், மணியை இப்போது பார்ப்பதால் எந்தப் பயனும் இல்லை. மணிக்கு மண்டையில் நல்ல அடி; ரத்தக் காயம். ரத்த சேதத்தாலும், இருதய பலவீனத்தாலும் பிரக்ஞை இழந்துவிட்டார். இப்போதுதான் தையல் போட்டுக் கட்டிவிட்டு வந்தேன். ரத்தம் செலுத்தியிருக்கிறேன்."

இன்னது சொல்வதெனத் தெரியாமல் திகைத்துப் போனான் சங்கர்.

"நீங்கள் ஒன்றும் பயப்படத் தேவையில்லை. ஆபத்து ஒன்றுமில்லை. இருந்தாலும், அதிர்ச்சி பாருங்கள். கவனமாகத்தான் பார்க்க வேண்டும்" என்று டாக்டர் ஆறுதல் கூறினார்.

திகைப்புணர்ச்சியிலிருந்து விடுபட்ட சங்கர் டாக்டரின் பதிலுக்கு என்ன மறுமொழி கூறுவதென்று தெரியாமல் ஒரு கணம் மௌனமாயிருந்தான். ஆனால் மறுகணமே அவன் டாக்டரை நோக்கி "டாக்டர் ஸார், மணியைத் தாங்கள் தான் காப்பாற்ற வேண்டும். என்ன செலவானாலும் நான் தருகிறேன்" என்று ஆவலோடு கூறினான்.

சங்கரின் பேச்சைக் கேட்டு டாக்டர் மெல்லச் சிரித்துக் கொண்டார். ஒரு நிமிஷ மௌனத்துக்குப் பிறகு அவர் மிகுந்த நிதானத்தோடு சங்கருக்குப் பதில் சொல்ல முனைந்தார்.

"சங்கர் பிறவிகளில் உயர்ந்தவனான மனிதனை நோய்நொடியிலிருந்தும், மரணத்திலிருந்தும் காப்பாற்றும் பணியை நான் செய்வதாக நீங்கள் தான் ஒருநாள் என்னைப் பாராட்டினீர்கள். ஞாபகமிருக்கிறதா? உங்கள் நண்பரைக் காப்பாற்றிக் கொடுப்பதும் அந்தப் பணியில் ஒரு பகுதிதானே. அது என் கடமையில்லையா? 'மனிதனுக்கு மனிதன் தான் உயர்ந்தவன்' என்றுதான் நீங்கள் அன்று சொன்னீர்களே ஒழிய பணம்தான் பெரிது என்று சொல்லவில்லையே"

டாக்டரின் சமத்காரமான பதிலைக் கேட்ட பிறகு தான் சங்கருக்குத் தன் தவறு புரிந்தது; இவ்வளவு தூரம் நெருங்கிப் பழகும் ஒரு நண்பரிடம் எடுத்த எடுப்பில் பணத்தைப்பற்றிப் பிரஸ்தாபித்திருக்கக் கூடாதுதான் என்று அவன் உள்ளூர உணர்ந்து கொண்டான்; எனவே அவன் தன் சொல்லுக்கு‌ நாணிலேசாகத் தலைகவிழ்ந்தான்.

"சங்கர், ஸ்மோக் பண்ணுறீங்களா?" என்று அன்போடு கேட்டவாறே தமது சிகரெட்கேஸை நீட்டினார் டாக்டர்.

"வேண்டாம், டாக்டர்" என்று கூறியவாறே தலை நிமிர்ந்தான் சங்கர்.

டாக்டர் தாம் மட்டிலும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து, அதன் புகைச் சுருள்கள் காற்றில் உலைந்து உலைந்து கலைவதைச் சுவாரசியத்தோடு கவனித்துக் கொண்டிருந்தார். பிறது திடீரென்று சங்கரிடம் திரும்பிப் பேசத்தொடங்கினார்.

"சங்கர்,கைலாச முதலியார் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? காரணம் என்ன? உங்களுக்கு ஏதாவது தெரியுமா?"

டாக்டரின் கேள்வியைக் கேட்டதும் சங்கரின் முகம் உணர்ச்சியினால் கன்றிச் சிவந்தது.

"அவரா தற்கொலை செய்தார்? இல்லை, டாக்டர்! இந்த அரசாங்கத்தின் ஜவுளிக் கொள்கைதான் அவர் உயிரைக் குடித்து விட்டது!" என்று ஆவேசத்தோடு பதில் கூறினான் சங்கர்.

டாக்டர் உள்ளிழுத்த புகையை வெளிவிட மறந்தவராய் "என்னது?"என்றுவியப்புடன் கேட்டார்.

சங்கர் நிமிர்ந்துஉட்கார்ந்து பேசமுனைந்தான்.

"ஆமாம், டாக்டர் உண்மையைச் சொல்லப் போனால், அதுதான் அடிப்படைக் காரணம். சர்க்காரின் ஜவுளிக் கொள்கையால் நெசவாளர் சமூகமே சீர்குலைந்து விட்டது. சர்க்காரின் போக்கால் கைத்தறி ஜவுளிகளுக்கு ஏற்றுமதியும் இல்லை; விற்பனையும் இல்லை; இதனால் வியாபாரம் மந்தம்; தொழில் முடக்கம். பின் ஏழை நெசவாளிகளும் அவர்களை நம்பி வாழும் சிறு வியாபாரிகளும், ஏன் ஸார் சீரழிய மாட்டார்கள்? அந்தச் கீரழிவைச் சுட்டிக் காட்டும் களபலிதான், கைலாச முதலியாரின் மரணம்!"

சங்கர் உணர்ச்சி வசப்பட்டவனாய் சர்க்காரின் ஜவுளிக் கொள்கையின் இலாப நஷ்டங்களையெல்லாம் எடுத்துக் கூற முனைந்தான்.அமெரிக்கப் பஞ்சை அதிக விலை கொடுத்து வாங்குவதால் ஏற்படும் பாதக

விளைவுகளைச் சுட்டிக்காட்டினான். ஏற்றுமதிக்குவிதித்த தடையால் ஏற்பட்டஜவுளித்தேக்கத்தை எடுத்துரைத்தான்; கைத்தறித் தொழிலாளர்கள் நசித்து நசித்து புழுவாய்ச் செத்து மடியும் பல செய்திகளைக் குறிப்பிட்டும் பேசினான்.

சங்கர் சொல்வதையெல்லாம் ஆர்வத்தோடும்கவனத் தோடும் கேட்டுக் கொண்டிருந்த டாக்டர் ஏதோ ஞாபகம் வந்தவராக இடைமறித்துப் பேசினார்.

"சங்கர் நீங்கள் அன்னிக்குக் கொடுத்தீர்களே ஒரு புத்தகம். அதைப் படித்த பின்புதான் அன்னியர் மூலதனத்தால் நமது தொழில் வளர்ச்சி எவ்வளவு தூரம் பாதிக்கப்படுகிறது என்ற விஷயமே எனக்குப் புரிந்தது."

"ஆமாம் டாக்டர் "வெள்ளையனே வெளியே போ" என்று கோஷித்த கோஷத்தின் வேலை இன்னும் தீரவில்லை. இந்த சர்க்கார் வெள்ளையனின் சொத்தைப் பாதுகாத்துக் கொடுப்பதில்தான் கவனமாயிருக்கிறதே ஒழிய இந்த நாட்டு மக்களின் உயிரைப் பாதுகாத்துக் கொடுக்க முனையவில்லை. மனித உயிரின் விலை இந்த நாட்டில் அத்தனை மலிவாகப் போய் விட்டது பாருங்கள். நித்த நித்தம் எத்தனை பட்டினிச் சாவுகள்! இதுவா சுதந்திரம்?"என்றுவருத்தமும் ஆக்ரோஷமும்கலந்தகுரலில் பேசினான் சங்கர்.

டாக்டர் சங்கருக்கு உடனே பதில் சொல்லவில்லை. தலையை மட்டும் ஆட்டிவிட்டு சிறிது நேரம் மௌனமாயிருந்தார். பிறகு "வாஸ் தவம்தான் சங்கர்" என்று ஆமோதித்தவராய் மேலே பேச முனைந்தார்.

"பாருங்கள், இங்கே ஆஸ்பத்திரிக்கு வருகிறநோயாளி சுளைப் பார்த்தால் ஒரே பரிதாபமாயிருக்கிறது. இங்கு வருகிறவர்கள் பெரும்பாலும் நோயாளிகளே அல்ல. சத்தான உணவோ, வேளா வேளைக்குச் சாப்பாடோ, போதுமான ஓய்வோ இல்லாமல் உடல் நலம் கெட்டு வருகிறவர்கள் தான் அதிகம். இந்த ஜனங்களுக்கெல்லாம்

நல்ல ஓய்வும் சாப்பாடும் இருந்தால் இங்கு வருவார்களா?"

"உங்கள் அனுபவத்தைக் கொண்டே பாருங்கள். நாட்டு நிலைமையின் பிரதிபலிப்புத்தானே உங்கள் அனுபவம் இல்லையா?" என்று கூறியவாறே சங்கர் கைக் கடிகாரத்தைப் பார்த்து விட்டு இடத்தைவிட்டு எழுந்தான்.

"என்ன புறப்பட்டாச்சா?".

"ஆமாம் டாக்டர் மணி வீட்டுக்குப் போகணும். சரி, மணியை எப்போது பார்க்கலாம்?"

"காலையில் வாருங்கள் சொல்லுகிறேன்" என்றுபதில் கூறியவாறே கையிலிருந்த சிசுரெட்டை அணைத்துவிட்டு சங்கரை வழியனுப்புவதற்காக இடத்தை விட்டு எழுந்து வெளியே வந்தார் டாக்டர்.

இருவரும் வெளியே வந்த சமயத்தில் எதிரே கமலா அவசர அவசரமாக வந்து சேர்ந்தாள். அவளது முக மெல்லாம் வியர்த்து விதிர்விதிர்த்துக் களையிழந்து போயிருந்தது. ஆத்திரமும் ஆவலும் கொண்ட கமலாவின் முகத்தில் படிந்திருந்த சோகத் திரை சங்கரைக் கண்டதும் திடீரென்று விலகியது.

படிக்கட்டில் ஏறியும் ஏறாமலும்‌ "அண்ணா அத்தானுக்கு ஒன்றுமில்லையே!" என்று ஆத்திரத்தோடு கேட்டாள் கமலா.

டாக்டர் அவளுக்குப் பதிலளிக்க முந்திக்கொண்டார்.

"பயப்படாதேம்மா உன் அத்தான் உயிருக்கு நான் ஜவாப்தாரி!"

கமலா தன்னை மீறியெழுந்த நாணத்தோடும் உதட்டில் தோன்றிய புன்னகையோடும் "தாங்க்யூ டாக்டர்!" என்று வாய்க்குள்ளாகவே சொல்லிக் கொண்டாள்.

சங்கர் அவளருகில் சென்று "வா கமலா மணிக்கு ஒன்றும் ஆபத்தில்லை" என்று கூறியவாறே காரின் கதவைத் திறந்தான்.

சிறிது நேரத்தில் அந்தக் கார் ஆஸ்பத்திரி போர்டி கோவைலிட்டுக் கிளம்பிச் சென்றது.தாதுலிங்க முதலியாருக்குத் தப்பிப் பிறந்து விட்ட அந்த இளம்பிள்ளைகளைக் கண் மறையும் வரையிலும் வைத்த கண் வாங்காமல் வியந்து பார்த்துக் கொண்டு நின்றார் டாக்டர் நடராஜன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பஞ்சும்_பசியும்/014-028&oldid=1684113" இலிருந்து மீள்விக்கப்பட்டது