உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிள்ளைக்கலி.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6


படுக்க, நாலு பேர் வந்தால் பேச-இவை எல்லாவற்றிற்கும் பொது இடம். முதலில், முருகதாசர் பொருளாதாரச் சலுகையை உத்தேசித்தே, அதில் குடியிருக்கலாம் என்று துணிந்தார். அதனால், தமக்கும் தம் சகதர்மணிக்கும் இப்படி நிரந்தரமான 'பிளவு' இருக்கும் என்று சிறிதும் எட்டி யோசிக்கவில்லை; மேலும் அவர், யோசிக்கக் கூடியவரும் அல்லர்.

பக்கத்தில் இருந்த அரிக்கன் விளக்கை எடுத்துக் கொண்டு, அவர் சமையல் பகுதியை நோக்கிப் பிரயாணமானார்.

இடைவழியில், குழாயடியில் உள்ள வழுக்குப் பிரதேசம், அடுத்த பகுதிக்காரர் விறகுக் கொட்டில் முதலிய விபத்துகள் உள்ள 'பிராட்வேயை' எல்லாம் பொருட்படுத்தாது, ஒருவாறு வந்து சேர்ந்தார். சமையல் அறை வாசலில் ஒரே புகை மயம். 'கமலம்' என்று, கம்மிய குரலில் கூப்பிட்டுக் கொண்டு, உள்ளே நுழைந்தார்.

உள்ளே புகைத் திரைக்கு அப்பாலிருந்து, "வீடோ லட்சணமோ, விறகைத்தான் பாத்துப் பாத்து வாங்கிக் கொண்டு வந்தியளே! ஒங்களுக்கிண்ணு தண்ணிலே முக்கிக் குடுத்தானா? எரியவே மாட்டுதில்லை; இங்கே என்ன இப்பொ? விறகு வாங்கின சீரைப் பாத்து மகிழ வந்திட்டியளாக்கும்!" என்று வரவேற்புப் பத்திரம் வாசிக்கப்பட்டது.

"தீப்பெட்டியை இப்படி எடு! அதுக்காகத்தான் வந்தேன்!” என்று நடைப்பக்கமாகப் பின்நோக்கி நடந்தார்.

“இங்கே குச்சியுமில்லை, கிச்சியுமில்லை! அலமுவைத் தீப்பெட்டி வாங்க அனுப்பிச்சேன். மண்ணெண்ணெய் விளக்கை நீங்கதான் துடைச்சுக் கொள்ளணும்!” என்றாள் கமலம்.

"குழந்தையை அந்தியிலே வெளியிலே அனுப்பிச்சையே, நான் வந்த பிறகு வாங்கிக் கொள்ளப்படாதா?" என்று அதட்டினார் முருகதாசர்.

"ஆமாம், சொல்ல மறந்தே போயிட்டுதே.......... செட்டியார் வந்து விட்டுப் போனார்; நாளை விடியன்னை வருவாராம்!' என்றாள் கமலா.

முருகதாசர் இந்த பாசுபதாஸ்திரத்தை எதிர்பார்க்கவில்லை.

"வந்தா வெறுங்கையை வீசிகிட்டுப் போகவேண்டியதுதான்! வர்றதுக்கு நேரம் காலம் இல்லை?" என்று முணுமுணுத்துக் கொண்டே வெளியேற முயற்சித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/4&oldid=1406605" இலிருந்து மீள்விக்கப்பட்டது