உள்ளடக்கத்துக்குச் செல்

அசோகனுடைய சாஸனங்கள்/அசோகன் சரிதை

விக்கிமூலம் இலிருந்து

II. அசோகனின் சரிதை

கி. மு. நான்காம் நூற்றாண்டில் மகததேசம் வட 
மகததேசத்தின்
பெருமை.

இந்தியாவிலுள்ள தேசங்களில் முதன்மையை அடைந்திருந்தது. இந் நாட்டை ஆண்டுவந்த நந்தர் என்ற அரசர்கள் இழிவு குலத்தோராகக் கருதப்பட்ட போதிலும் பராக்ரமசாலிகளாகவும் யுத்தசைன்னியங்களிலும் தளவாடங்களிலும் வலிமை மிகுந்தவராகவுமிருந்தனர். அகநானூறு என்ற பண்டைத் தமிழ் நூலிலுள்ள ஒரு பாட்டில் இவ் வமிசத்தினர் “பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்” என்று சிறப்பித்துக் கூறப்பட்டிருத்தலை இங்கு குறிப்பிடுவது தகுதியாகும். இந்த நூற்றாண்டின் இறுதியில், அதாவது சுமார் கி மு. 325ம் ௵ல், மகதநாட்டில் ஒரு புரட்சி ஏற்பட்டது. சாணக்கியன், விஷ்ணுகுப்தன், கௌடல்யன், கௌடில்யன் என்ற பெயர்களையுடைய ஓர் பிராமண மந்திரியின் சூழ்ச்சிகள் காரணமாக நந்தர் அரசுரிமையை இழக்கவும் சந்திரகுப்தன் என்ற மௌரியவம்சத்தினன் அரசனாகவும் நேர்ந்தன. சந்திரகுப்தன் எல்லா வட இந்திய ராஜ்யங்களையும் கைப்பற்றி யாவற்றையும் ஒரே குடையின் கீழ்க் கொண்டுவந்தான். அதற்கு முன் இத்தகைய விசாலமான ஏகாதிபத்தியம் இந்தியாவில் ஏற்படவில்லையென்று நாம் சொல்லலாம். சந்திரகுப்தனின் வரலாற்றை விரித்துரைப்பது நம் விஷயத்துக்குப் புறமாயினும் கௌடல்யனால் எழுதப்பட்ட ‘அர்த்தசாஸ்திரம்’ என்ற நூலைப் பற்றி இவ் வவதாரிகையின் மற்றொரு பாகத்தில் கூறுவது அவசியம். இந்த நூல் இக்காலத்துக்கு முன்னும் பின்னுமுள்ள துரைத்தனத்தின் அமைப்பையும் ராஜீய நோக்கங்களையும் நன்றாக விளக்குகிறது.

ஜெயின நூல்களில் சந்திரகுப்தன் இருபத்தையாண்டு (கி,மு.325-301) அரசு நடத்திய பிறகு உலகவாழ்க்கையில் வெறுப்படைந்து பத்திரபாகு என்ற ஜெபின முனிவருன் சீடனான தாகவும் அம் முனிவருடன் தக்கணம் சென்று பன்னிரியாண்டு தவம்புரிந்து கடைசியில் பட்டினி விரதமூலமாகத் தமது உடலைக் களைந்ததாகவும் கூறப்படுகின்றன. மைசூர் சம்ஸ்தானத்தில் சந்திரகிரி என்ற இடத்தில் இவ் வைதிஹ்யங்களைக் குறிப்பிடும் கல்வெட்டுகளும் சிற்பங்களும் காணப்படுகின்றன.

மௌரிய வம்சத்து இரண்டாவது அரசனான பிந்துசாரன் 
பிந்துசாரன்

அசோகனுடைய தந்தையாதலால் இவனைப்பற்றிப் பௌத்தக் கிரந்தங்களில் சில ருசிகரமான கதைகள் காணப்படுகின்றன. இவற்றில் உண்மையைத் தேடி அறிவது கஷ்டமாயிருக்கிறது. இவன் காலத்தில் ஆட்சி முறையில் விசேஷ மாறுதல்கள் ஏற்படவில்லையாயினும் ராஜ்ய காரியங்கள் ஒழுங்காக நடந்தேறினவென்றும், தக்ஷிணம் மௌரியரின் ஏகாதிபத்தியத்தில் ஐக்கிய மடைந்தது இக்காலத்திலென்றும் கூறுவதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. சந்திரகுபதன் காலத்தில் இந்தியாவுக்கும் ஸிரியா முதலிய குண திசை நாடுகளுக்கும் நே உறவு ஏற்பட்டது; இவ்வுறவு பிந்துஸாரன் காலத்திலும் நீடித்து வந்தது. பிந்துஸாரன் யவனருடைய விஞ்ஞான சாஸ்திரங்களை வியந்து, இவற்றின் சூக்ஷுமத்தைத் தெரிந்துகொள்ள, ஸிரியா தேசத்து அரசனிடம் தேர்ந்த வித்துவான்களைத் தனக்கு அனுப்பிக் கொடுக்கவேண்டுமென்று கேட்டதாக ஒரு க்ரீக் வரலாறு இருக்கின்றது. இவன் இருபத்தேழு வருஷங்கள் அரசுபுரிந்து பின் மரணமடைந்தான் (காலம், கி, மு. 301-273)

அசோகனுடைய ஜீவிய சரிதைக்கு அவனது சாஸனங்களையும் 
அசோகனைப்
பற்றி ஐதிஹ்யங்
களிலிருந்து கிடை
க்கும் விவரங்கள்.

புராதன ஆராய்ச்சியால் தெரியவந்திருக்கும் சில செய்திகளையும் நாம் முக்கிய ஆதாரமாய் வைத்துக் கொள்ளலாம். அசோகனைப்பற்றிய ஐதிஹ்யங்கள் இரண்டு சார்பிலிருந்து வந்திருக்கின்றன. (i) திவ்யாவதானம் என்ற ஸம்ஸ்கிருதக் கிரந்தத்திலுள்ள வட இந்திய ஐதிஹ்யம். (ii) சிலோன் தீவிலுள்ள பௌத்தரின் இதிகாஸ கிரந்தங்களாகிய தீபவம்சம், மஹாவம்சம் என்பனவற்றிலிருந்து கிடைக்கும் சிலோன் ஐதிஹ்யம். இந்த இரு சார்பு ஐதிஹ்யங்களிலிருந்து அசோகனைப்பற்றித் தெரியவரும் செய்திகள் எல்லாம் நாம் ஒப்புக்கொள்ளக் கூடியவனவா யிருக்கவில்லை. ஆனால் அவை முற்றிலும் தள்ளத்தக்கவையுமல்ல. இந்துக்களுடைய புராணங்களில் பூர்வசரித்திர விஷயமான பல செய்திகள் அடங்கியிருப்பினும் அங்கு அசோகனுடைய அரசாட்சியைப்பற்றி ஒரு விவரமுமில்லை. பண்டைய அரசரின் பெயர்களுக்கிடையில் அசோகனுடைய பெயரும் இருப்பது ஒரு மேன்மையாமோ? பதின்மூன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பெற்ற ராஜதரங்கிணி என்ற காச்மீர சரித்திரத்தில் அசோகனுடைய சில வரலாறுகள் கூறப்பட்டிருக்கின்றன. காச்மீர நாட்டின் பல கோயில்களும் அரண்களும் அசோகனால் ஆக்கப்பட்டவை யென்று குறிப்பிடப்படுகின்றது. எவ்விதமும், நமக்கு பௌத்த ஐதிஹ்யங்களை விட உறுதியான சரித்திரசாதனங்களில்லையென நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். சாஸனங்களில் குறிப்பிடாமலும் பௌத்த ஐதிஹ்யங்களிலிருந்து மட்டும் தெரிய வருவதுமான செய்திகளுக்குப் பின் புராதன வஸ்து ஆராய்ச்சியிலிருந்து அத்தாட்சி அகப்பட்டிருக்கிறது. இதற்கு உதாரணம் பின் கூறுவோம்*[1]. ஆயினும் சாஸனங்களில் சொல்லப்பட்டிருப்பதற்கு விரோதமாயிருக்கிற விவரங்களையும் வினோதக் கற்பனைகளென்று வெளிப்படையாய்த் தெரிகின்ற செய்திகளையும் நாம் உண்மைச் சரித்திரமாய் ஒப்புக்கொள்ள முடியாது. இப்படிப்பட்ட கட்டுக்கதைகளை இங்கு விரித்துக் கூறுவது அனாவசியமென்று நமக்குத் தோன்றுகிறது.

அசோகனின் இளமைப் பருவத்தைப்பற்றிய விவரங்கள் யாவும் ஐதிஹ்யங்களில் மட்டுமே உள்ளன, அசோகன் பிந்துஸாரனின் மூத்தமகனல்ல. பட்டத்துக்கு அதிக பாத்தியதையுடைய பல சகோதரர் அவனுக்கிருந்தனர். ஆயினும் அவனது புத்தி நுட்பமும் சாமர்த்தியமும் பற்றி அவனுக்கு முக்கியமான அரசாங்க அதிகாரங்கள் கொடுக்கப்பட்டன. அவன் முதலில் தக்ஷசிலா என்ற மாகாணத்தின் அதிபனாய்ச் சிலகாலம் வேலை செய்தபின் உஜ்ஜெயினியின் அதிபனாக நியமிக்கப்பட்டான். பிந்துஸாரன் தீேகவியோகமானவுடன் அசோகன் பாடலிபுரத்தை அடைந்து உபராஜன் என்ற பட்டத்துடன் ராஜ்யத்தின் தலைமையை வகிக்க ஆரம்பித்தான், நான்கு வருஷங்களுக்குப்பின் அசோகன் பட்டாபிஷேகம் செய்து கொண்டான்.

இச் செய்திகளை நாம் நம்பலாம்; ஆனால் அசோகன் சிங்காதனத்தைக் கைப்பற்றுவதற்குத் தொண்ணூற்றொன்பது சகோதரரை அவர் மனைவி மக்களுடன் கொலை செய்தானென்றும் ஜனங்களைப் பல விதத்தில் கசக்கிப் பிழிந்தானென்றும் கூறுகின்ற கதைகள் உண்மையென்று தோன்றவில்லை. இவ் விஷயங்கள் அசோகனுடைய குணத்தைப்பற்றிச் சாஸனங்களைப் படிப்பதிலிருந்து நமக்கு ஏற்படும் அபிப்பிராயத்துக்கு முற்றிலும் முரண்படுகிறது. மேலும், பெருந் துஷ்டனான ஒருவன் திடீரென்று வெகு புண்ணியவானாய் விடுவது இயற்கையல்ல. பக்தியின் அனுகுணத்தால் மனிதனின் உள்ளம் சீரடையுமென்பது உண்மையே. அசோகனும் புத்தருடைய சுவிசேஷத்தை'ச் செவியுற்றதினால் பல பழைய தீய வழக்கங்களையும் சுபாவங்களையும் தவிர்த்துத் தர்மாத்மாவாய் மாறியிருக்கலாம்.

ஆனால் அசோகன் முதலில் மிகக் கெட்டவனாகவும் கொடுங்கோல் அரசனாகவும் இருந்தான் என்பதும் பின் திடீரென்று பெரிய முனிசிரேஷ்டனானான் என்பதும் இயற்கையல்ல. சரித்திர சம்பவங்கள் ஐதிஹ்யங்களில் கூறப்படும் பொழுது அவை இவ்விதம் திரிந்துபோகின்றன, ஒரே ஒரு அரசன், மிக மூர்க்கனாகவும் கெட்டவனாகவும் இருந்தவன், தர்மத்தைச் சிரவணம் செய்த மாத்திரத்தில் ஸன்மார்கத்தின் உருவே போன்ற பரிசுத்த மனிதனாய் விட்டானென்ற செய்தி தர்மத்தின் மேன்மையையும் குணத்தையும் எடுத்துக்காட்ட, எவ்வளவு நேர்த்தியான கதை! தர்மத்தைப் போதிக்க வேண்டுமென்ற உத்தேசத்துடன் தொகுக்கப்பட்ட இதிகாசங்களுக்கு இக் கதைகள் எவ்வளவு உசிதமாயிருக்கின்றன ! சரித்திர சம்பவங்கள் தர்மீய நோக்கத்துடன் எழுதப்படும் புராணங்களில் இவ்வித மாறுதல் அடைதல் இயற்கையல்லவா?

இக் காரணங்கள்பற்றி நம்முடைய முடிவு என்னவென்றால், அசோகன் தன் அரசாட்சியை ஆரம்பித்த பொழுது கொடுங்கோலனாயிராமல் தனது வீரபராக்ரமத்தில் நம்பிக்கையும் வேட்டையாடுதல் முதலிய வியாயாமங்களில் அபிலாஷையும் அயல் நாடுகளை ஜயிக்க வேண்டுமென்ற நோக்கமுமுடைய சாதாரண அரசனாயிருந்தான். புத்த பகவானுடைய காற்று அவன்மேல் அப்போது அடிக்காததால் ஆகார விஷயமாகவும் தெய்வ ஆராதனைக்காகவும் அரசனுடைய அரண்மனையில் பிராணிவதை நடந்து வந்தது[2]. அசோகனுடைய பதினான்காவது பட்டாபிஷேக வருஷத்தில் எழுதப்பட்ட ஐந்தாம் சாஸனத்திலிருந்து அரசனுடைய சகோதர சகோதரிகள் அப்போது வாழ்ந்து வந்தனரென்று நாம் அறிகிறோம். அதனால் அசோகன் தனது உறவினர் யாவரையும் கொலைசெய்த விவரம் நம்பத்தக்கதல்ல. பிந்துஸாரன் இறந்ததும் அசோகன் உடனே அடுத்த அரசனாவதற்குத் தடை யிருந்தது உண்மையாயிருக்கலாம்; சகோதரர்களுக்கிடையில் சண்டை சச்சரவுகள் நடந்திருக்கலாம்; இவ்வளவு தான் நாம் ஐதிஹ்யத்திலிருந்து கிரகிக்கக் கூடியது. அரசுரிமை கைபற்றியதைக் குறித்துள்ள மற்ற விவரங்கள் உண்மையெனத் தோன்றவில்லை.

அசோகன் நாலு வருஷம் இளவரசனாக அரசாட்சி 
அரசனின்
பட்டாபிஷேகம்

நடத்தியபின் தனக்குப் பட்டாபிஷேகம் செய்துகொண்டான். ‘பியதஸி முடிசூடிய இத்தனை வருஷங்களான பின்’ என்று பல சாஸனங்களில் அரசன் காலத்தில் நடந்த பல சம்பவங்களுக்குக் காலம் கூறப்பட்டிருக்கிறது. அதனால் அசோகன் கருத்துப்படித் தான் பட்டாபிஷேகம் செய்துகொண்ட தினமே தனது ஆட்சியின் ஆரம்பதினம் போலும். அத் தினத்தில் வருஷா வருஷம் உற்சவம் கொண்டாடப்பட்டது. அப்போது மரண தண்டனை விதிக்கப்பெற்ற குற்றவாளிகளில் சிலரை விடுதலைசெய்வது வழக்கம்.[3]


அசோகனுடைய ஜீவிய சரிதையில் கலிங்க யுத்தம் 
கலிங்க யுத்தம்

மிக முக்கியமான சம்பவமாகும். அவனுடைய ஒன்பதாவது பட்டாபிஷேக வருஷத்தில் அரசன் கலிங்க தேசத்தைக் கைப்பற்றுவதற்காகப் படையெடுத்தான். தனது ஏகாதிபத்தியம் இமயமலை முதல் தெற்கே பாலாறு வரையும் இடைவிடாமல் தொடர்ந்திருப்பதற்குக் கலிங்கர் நாடு மட்டும் விலக்காயிருந்தது. இப் பிரதேசம் ஒரு மூலையிலிருந்ததினாலும் அடர்த்தியான காடுகளால் சூழப்பட்டிருந்ததினாலும் அது அசோகனின் முன்னோரால் ஏகாதிபத்தியத்தோடு சேர்க்கப்படவில்லை. இக் குறையைத் தீர்ப்பதற்கு யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. அசோகனுடைய எண்ணமும் கைகூடிற்று. ஆனால் அவன் மற்ற அரசரைப்போல் தனது வெற்றியில் சந்தோஷமடையவில்லை. யுத்தத்துக்கு இயற்கையான கொலையும் கொடுமையும் கஷ்டங்களும் அவன் மனத்தில் திகிலைச் செய்தன. பெரியதோஷம் செய்தோமே யென்று அவனுக்கு ஏக்கம் பிடித்தது. சுயமாகவே அசோகன் இரக்கமுள்ளவன் ; அதோடுகூட இதே சமயத்தில் அரசன் பௌத்த தர்மத்தைக் கேட்கவும் நேர்ந்தது. அவன் தான் படும் பச்சாத்தாபத்தைப் பதின்மூன்றாம் சாஸனத்தில் கண்ணுங் கண்ணீருமாய் எழுதிவைத்திருக்கிறான். எவ்வளவு பெரிய லாபத்துக்காயினும் இனிமேல் ஒரு போதும் யுத்தம் செய்வதில்லையென்று அசோகன் பிரதிக்ஞை செய்தான். அப்பிரதிக்ஞை காப்பாற்றப்பட்டது அவனது நிஷ்கபடமான சுபாவத்தை விளக்குகிறது.

எப்படியாயினும் கலிங்கதேசம் ஜயிக்கப்பட்டது; நடந்துபோன காரியம் அவனால் மாற்றக்கூடியதா யிருக்கவில்லை. புதிதாக ஜயிக்கப்பட்ட ஜனங்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் அருகாமையிலுள்ள காட்டு ஜாதியாரைச் சம்ரக்ஷணை செய்வதற்கும் அதிகாரிகளுக்கு விசேஷ எச்சரிக்கை செய்யப்பட்டது. கலிங்க தேசத்து அதிகாரிகளுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளை இன்னதென்று கலிங்க சாஸனங்கள் என்ற லிகிதங்களிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

அசோகன் முடிசூடிய ஒன்பதாமாண்டு முதல் அவனுக்குப் 
பௌத்த மதத்
தின் ஸ்பர்சம்

பௌத்த தர்மத்தில் பக்திச்ரத்தை அதிகரித்துக்கொண்டே வந்தது. இம் மாறுதலுக்குக் கலிங்க யுத்தத்தின் கொடுமை மட்டுமல்ல காரணமென்று தோன்றுகிறது. உபகுப்தன் என்ற துறவி அரசனுக்குப் புத்தரின் சுவிசேஷத்தை உபதேசித்தாரென்று வட இந்திய ஐதிஹ்யங்கள் சொல்லுகின்றன. சுகந்த வஸ்துக்கள் செய்யும் குப்தன் மகன் உபகுப்த னென்று இவர்பெயர் விரித்துரைக்கப்படுகிறது. இத்துறவி விவேகமும் பரிசுத்தமும் நிறைந்திருந்தாரென்றும் புத்தருக்குப்பின் பௌத்த சங்கத்தின் தலைமை ஸ்தானத்தை வகித்த ஆசாரியருள் ஐந்தாவதாக நின்றாரென்றும், வெகுநாள் அசோகனுக்குக் குருவாகவும் துணைவராகவும் வாழ்ந்து வந்தாரென்றும் சொல்லப்படுகின்றன. கி. பி. ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவில் சஞ்சாரஞ்செய்த யுவன்சுவங் என்ற சீன யாத்திரிகன் இத்துறவியின் ஞாபகச் சின்னங்களாகக் கட்டப் பட்ட விஹாரங்கள் ஹிந்து தேசத்திலும் வட மதுரையிலும் செழித்திருந்தன வென்று கூறுகிறான். சிலோன் ஐதிஹ்யத்தில் இவர் பெயர் மோகலீ புத்திர திஸ்ஸன் என்று கூறப்படுகின்றது.

அசோகன் பௌத்த தர்மத்தில் ஈடுபட்டு முதலில் உபாஸகன் என்ற நிலைமையைக் கைக்கொண்டான். உபாஸகன் என்பது இல்லறத்தில் ஒழுகும் பௌத்தருக்குப் பெயர். இரண்டரை வருஷங்களுக்குப்பின், அதாவது அரசன் முடிசூடிய பன்னிரண்டாம் வருஷத்தில், அவன் காட்டிய ஊக்கம் தனக்கே திருப்திகரமாயிருக்கவில்லை. முன்னிலும் அதிக ஊக்கத்துடன் தர்மத்தைத் தழுவியொழுக வேண்டுமென்று அவன் நிச்சயித்தான். இப்படி ஒரு வருஷமான பின் அரசன் பௌத்த ஸங்கத்தையே அவலம்பித்தான். இது நிகழ்ந்தது அரசனுடைய பதின்மூன்றாம் பட்டாபிஷேக வருஷத்தில், இவ்வருஷமும் இதற்கு முன்னும் பின்னுமுள்ள வருஷங்களும் அசோகனின் - ஜீவிய சரிதையில் மிகவும் முக்கியமானவை. அவனுடைய எல்லாச் சீர்திருத்தங்களும் நன் முயற்சிகளும் இவ்வாண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டன. அரண்மனைச் சமையல் அறையில் மாமிச வகை தவிர்க்கப்பட்டது ஜீவ இம்ஸையும் பிராணிவதையும் ராஜத் துரோகமாகக் கருதப்படுமென்று ஜனங்கள் எச்சரிக்கை செய்யப்பட்டனர். தனது தர்மத்தின் கொள்கைகளைக் கற்களிலும் ஸ்தம்பங்களிலும் எழுதி அவற்றை எல்லோருக்கும் தெரியப்படுத்தவேண்டுமென்று அரசன் நிச்சயித்தான். வேட்டையாடுதல் முதலிய பழைய பொழுது போக்குகள் தவிர்க்கப்பட்டன. அதற்குப் பதிலாக அவன் புண்ணிய ஸ்தல யாத்திரைகள் செய்யத் தொடங்கினான். ஆங்காங்குள்ள ஞானசிரேஷ்டர்களைத் தரிசிப்பதும், தர்மத்தைப் போதிப்பதும், தர்ம விவாதங்களை நடத்துவதுமே அரசனுடைய பொழுதுபோக்காயிற்று, அரசனுடைய வாழ்நாட்களில் இப்படிப்பட்ட புனித யாத்திரைகள் பல ஏற்பட்டன.

இவற்றில் பிரதானமானது அசோகனின் இருபத்தோராவது 
தீர்த்த
யாத்திரைகள்

பட்டாபிஷேக வருஷத்தில் நடந்த யாத்திரை. பாடலிபுரத்திலிருந்து புத்தரின் சுதேசமாகிய கபிலவஸ்துவுக்குச் செல்லும் பாதையில் இப்போது ஏழு ஸ்தம்பங்கள் காணப்படுகின்றன. இந்த ஸ்தம்பங்களிற் சிலவற்றில் அசோக சாஸனங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஒன்றிரண்டில் ஒருவித லிகிதமுமில்லை. இந்த ஸ்தம்பங்கள் முன் சொல்லப்பட்ட தீர்த்தயாத்திரையின் ஞாபகச் சின்னங்களென்று நாம் ஊகிக்கிறோம். ஐதிஹ்யத்தின் படி அசோகன் இந்த யாத்திரையில் உபகுப்தனையும் அழைத்துச் சென்றான் போலும், அவர்கள் முதலில் புத்தரின் பிறப்பிடமாகிய லும்பினி கிராமத்தைத் தரிசித்தார்களாம் ; பின்னர், கபிலவஸ்து நகரத்தையும், புத்தர் பூர்ணஞானம் அடைந்த இடமாகிய புத்தகயாவையும், அம்மகான் தமது தர்ம சக்கரத்தைச் சுழற்ற ஆரம்பித்த ஸார்நாதத்தையும், அவர் கடைசியாய் பரிநிர்வாணமடைந்த குசிநகரத்தையும், அவர் தர்மப் பிரசாரம் செய்துகொண்டு பலகாலம் வசித்துவந்த ஸ்ரீநாவஸ்தியையும் இவைகளல்லாமல் வேறு இரண்டு க்ஷேத்திரங்களையும் அவர்கள் தரிசித்தார்களாம். புத்தரின் பிறப்பிடமாகிய லும்பினி தற்காலம் ரும்மின்தேயி என்று அழைக்கப்படுகிறது. இந்த க்ஷேத்திரத்தை அசோகன் தரிசித்ததின் அறிகுறியாய்நாட்டப்பட்ட ஸ்தம்பம், வெகு காலமாக மறைந்து கிடந்தது; அது சமீபகாலத்தில் திரும்பவும் உத்தாரணம் செய்யப்பட்டிருக்கிறது. அசோகன் இந்த ஊரிலிருந்த ஜனங்களுக்கு நிலத்தீர்வையைக் குறைத்தானென்று ரும்மின் தேயி ஸ்தம்பத்திலுள்ள லிகிதம் நமக்குத் தெரிவிக்கின்றது. அசோகன் இதே சமயத்தில் கொனாகமனன் என்ற பூர்வபுத்தரின் க்ஷேத்திரத்தைத் தரிசனம் செய்து, அங்கிருந்த ஸ்தூபத்தைப் புதுப்பித்து ஒரு ஸ்தம்பத்தையும் நாட்டிய செய்திகள் ஐதிஹ்யத்தில் கூறப்படவில்லையாயினும் சிலாசாஸன பரிசோதனை மூலமாக நாம் தெரிந்துகொள்ளுகிறோம். இச்செய்திகள் எழுதப்பட்டிருக்கும் ஸ்தம்பமும் ரும்மின்தேயின் அருகிலிருந்து நமக்கு அகப்பட்டிருக்கிறது. இவ்விவரங்கள் அசோகனது தர்மம் எத்தன்மையது என்று தீர்மானிக்க உபயோகமானவை.

நேப்பாளத்தின் தலைநகரமாகிய காத்மாண்டு அல்லது லளிதாபட்டணம் அசோகனால் ஸ்தாபிக்கப்பட்டதென்று சொல்லப்படுகிறது. அங்கு அரசன் பல கோயில்கள் கட்டினானென்றும் அரசன் மகள் சாருமதி அவனுடன் அங்குச் சென்று தன் தகப்பனாரின் வேலைக்கு உதவியாயிருந்து பின் அங்கேயே நிலைத்திருந்தாளென்றும் ஐதிஹ்யத்தில் கூறப்படுகின்றன. இப்பட்டணம் ரும்மின்தேயியின் அருகிலுள்ளதால் இந்நகரத்தின் ஸ்தாபனம் ரும்மின்தேயி லிகிதத்தில் குறிப்பிட்டிருக்கும் அரசனின் இருபத்தொன்றாம் பட்டாபிஷேக வருஷத்திலேயே நடந்திருக்கலாம்.

தனது பன்னிரண்டாவது பட்டாபிஷேக வருஷத்தில் அரசன் 
துறவி அரசு
நடத்திய விந்தை

பௌத்த ஸங்கத்தைச் சேர்ந்ததால் அவன் சந்நியாஸி ஆனான். கடைசிவரையும் அவன் இந்த ஆசிரமத்திலிருந்து மாறவில்லை போலும். கி. பி. ஏழாவது நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவில் சஞ்சரித்த இத்ஸிங், துறவியுடையணிந்த அசோகப் பிரதிமையைக் கண்டதாக எழுதுகிறான். ஆனால் ஐதிஹ்யங்களிலும் சாஸனங்களிலும் அசோகனுடைய மனைவிமார்கள் குறிப்பிடப்படுகின்றனர். பிக்ஷூவானபின் தன் ராஜ்ய காரியங்களை அசட்டைசெய்தானென்றும் வடஐதிஹ்யத்தில் கூறப்படுகிறது. தலையைச் சிரைத்துக் , காஷாயவஸ்திரமுடுத்த அரசன் எப்படி சிங்காதனத்தில் வீற்றிருந்தானென்றும் ராஜ்ய காரியங்களைக் கவனித்தானென்றும் நமக்கும் சங்கை உண்டாகிறது. அசோகனுடைய சாஸனங்கள் இந்த சம்சயத்தை முற்றிலும் நிவிர்த்திசெய்கின்றன . “எனது கடமையாக ஏற்பட்டுள்ள வேலையில் நான் காட்டும் ஜாக்கிரதை எனக்கு ஒருபோதும் திருப்திகரமாகிறதில்லை. ஸர்வ ஜனங்களின் அபிவிர்த்திக்காக சதா உழைப்பது என் கடமை.” “எவ்விடத்திலும் ஜனங்களின் வழக்குகளை விசாரணை செய்ய நான் தயாராயிருக்கிறேன்.” இப்படிப் பேசும் அரசன் தன் கடமையை அசட்டை செய்தானென்று சொல்வதை நம்புவது எப்படி? துறவறமும் உலக நன்மைக்குரிய பிரவிர்த்தியும் ஒன்றுக்கொன்று முரணல்லவென்று பகவத்கீதையில் வற்புறுத்தப்படும் கொள்கையே அசோகன் கொள்கைபோலும்.

மேலும், சாஸனங்களில் அரசனுடைய ராணிகளையும் பிள்ளைகளையும்பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. துறவியான பின் அரசன் அவர்களுடன் வாழவில்லையென்று நாம் அனுமானஞ்செய்து கொண்டாலும் அவர்களுடைய யோகக்ஷேமங்களை அவன் கவனித்துவந்தானென்பது தெளிவு.[4] அசோகன் கடைசிவரையும் தனது கடமைகளை நிறைவேற்றுவதில் கண்ணுங் கருத்துமாயிருந்தானென்று நாம் கூறுவது மிகையன்று. இப்படிப்பட்ட ஊக்கமுடைமை, அரசருக்கு இன்றியமையாததென்று கௌடல்யனுடைய அர்த்தசாஸ்திரத்திற் கூறப்பட்டிருப்பதால் அசோகன் இவ் விஷயத்தில் தம் முன்னோர்வழியை அனுசரித்து வந்தானன்றி வேறில்லை.

ஸங்கத்திற் சேர்ந்தபின் அரசன் ஊக்கமுடைமை முன்னிலும் 
தர்மப் பிரசா
ரம் செய்தல்

அதிக விசாலமடைந்தது. துரைத்தனக் காரியங்களில் மட்டும் தனது ஊக்கத்தை நிறுத்திக் கொள்ளாமல் உலகமெங்கும் தர்மப்பிரசாரஞ்செய்யவேண்டுமென்ற அவா. அசோகனைப் பற்றியது. தனது ராஜ்யத்தினுள்ளும் வெளியிலும் தர்மப் பிரசாரம் நடத்தினான் அவனது ஏகாதிபத்தியத்துக்குப்பட்ட யவனர், காம்போஜர், நாபகதேசத்து நாபபந்தியர், போஜர், பிதேனிகர், ஆந்திரர், புலிந்தர், ராஷ்டிரிகர், காந்தாரர் முதலிய ஜனங்களுக்குப் பல தர்ம ஆசிரியர் அனுப்பப்பட்டனர். அந்த ஜனங்கள் அசோகன் போதனையை அன்புடன் கேட்டார்களென்று நாம் ஊகிக்கலாம்.

தர்ம போதனைகள் செய்யப்பட்ட பிரதேசங்களின் பெயரும் அந்தந்த இடங்களுக்கு அனுப்பப்பட்ட ஆசிரியரின் பெயரும் சிலோன் ஐதிஹ்யத்தில்[5] கூறப்பட்டிருக்கின்றன. கன்னிங்ஹாம் துரை 1873-ம் ௵ல் ஸாஞ்சியின் அருகேயுள்ள ஏராளமான புராதன வஸ்துக்களைச் சோதனை செய்தபோது பௌத்த முனிவரின் எலும்புகள் நிக்ஷேபிக்கப்பட்ட பாத்திரங்கள் அகப்பட்டன. இரண்டு பாத்திரங்களின் புறத்தில் “ஹிமவந்தப் பிரதேசத்தின் ஆசாரியனாகிய காசியப கோத்திரன் சாம்பல்” என்றும், “ஹிமவந்தப் பிரதேசத்தின் ஆசாரியனாகிய மஜ்ஜிமன் சாம்பல்” என்றும் லிகிதங்கள் காணப்பட்டன. மகாவம்சத்திலும் இப்பெயர்களுடைய ஆசாரியர் அசோகன் காலத்தில் இமயமலை அல்லது ஹிமவந்தப் பிரதேசத்தில் தர்மத்தைப் போதித்தனரென்று கூறப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸுவர்ண பூமி, அல்லது ஸோவன பூமி என்று கூறப்படும் பர்மா தேசமும் அசோகன் தூதர் மூலமாக பௌத்த தர்மத்தைச் செவியுற்றதென்று இங்கு சொல்லப்படுகிறது. அசோகனுடைய ராஜ்யத்துக்கு உட்படாத வேறு பலதேசத்தார் அசோகன் மூலமாகவே பௌத்த தர்மத்தை அறிந்தனரென்பது உண்மையே. தென் இந்தியாவில் சுதந்திர அரசர்களாயிருந்த சோழர் பாண்டியர், ஸத்தியபுத்திரர், கேரள புத்திரர் நாடுகளில் தர்ம போதனைகளும் தர்மீயமான உபகாரச் செய்கைகளும் நடந்துவந்தன. சிலோன் தீவிலுள்ள ஜனங்களும் முதன் முதல் புத்தரின் ஸந்தேசத்தைக் கேட்டது அசோகன் மூலமாகவே. அசோகனுடைய சகோதரன் மகேந்திரனும், சகோதரி ஸங்கமித்திரையும் இங்கு தர்மப் பிரசாரஞ் செய்யும்பொருட்டு அனுப்பப்பட்டார்களென்று இதிகாஸங்கள் கூறுகின்றன. தென் இந்தியாவிலும் இவர் பௌத்த தர்மத்தைப் பரவச் செய்தனர்போலும். மகேந்திர விஹாரம் என்ற பெயருடைய மடம் ஒன்று தென்னாட்டில் இருந்ததாக யுவன்சுவங் கூறுகிறான். மகாவம்சத்தின்படி இவ் விருவரும் அசோகனுடைய மக்களாம்.

ஏறக்குறைய அசோகன் காலத்தது என்று அனுமானிக்கப்படும் சிற்பம் ஒன்றில் சிலோனில் பௌத்த மதத்தைப் பிரசாரஞ்செய்த விஷயம் குறிப்பிட்டிருப்பதுபோல் தோன்றுகிறது. ஸாஞ்சி ஸ்தூபத்தின் ஓர் வாசலின் உத்தரக்கல்லில் உயரமான ஓர் மனிதன் யானையிலிருந்து இறங்குவதையும் போதிலிருஷத்தின் கிளை அம்மரத்தினின்று ஒடிக்கப்பட்டு அம்மனிதனிடம் கொடுக்கப்படுவதையும் விளக்கிக்காட்டும் சிற்பம் ஒன்றுண்டு. போதிவிருக்ஷத்தின் கிளை சிலோனுக்கு தேவர் பிரியனான திஸ்ஸன் என்ற அரசன் காலத்தில் கொண்டுவரப்பட்ட செய்தி சிலோன் இதிகாஸங்களில் மிக விமரிசையாகக் கூறப்பட்டிருக்கிறது. முன் கூறப்பட்ட சிற்பம் இந்தச் சம்பவத்தின் அறிகுறியா யிருக்கலாமன்றோ ?

அசோகனால் தர்மப்ரசாரம் செய்யப்பட்ட நாடுகளுள் மிக 
வெகு தூரத்
துள்ள ஐந்து
அரசருடன் உறவு.

முக்கியமானவை அறுநூறு யோஜனைக்கப்பாலுள்ள ஐந்து அரசரின் நாடுகள். ஆசியா ஐரோப்பா ஆப்பிரிக்காக் கண்டங்கள் ஒன்றுக்கொன்று சந்திக்கும் பிரதேசங்களை ஆண்டுவந்த அரசர் இவர். இங்கு கிரீக்கு ஜாதியாருடைய நாகரிகம் மிகுந்திருந்தது, அலக்ஸாந்தர் என்ற மாஸிடோணியா தேசத்துப் பராக்ரம வீரன் கி. மு. 335-ல் தனது திக்விஜயத்தை ஆரம்பித்து நூற்றுக்கணக்காய் ராஜ்யங்களை ஜயித்து இந்தியாவுக்கும் படையெடுத்துவந்த விவரங்கள் சாதாரணமாய்த் தெரிந்தவையே. அவ்வீரன் பராக்கிரமத்தால் ஏற்பட்ட ஏகாதிபத்யம் அவனுடைய முடிவுடன் சீர்குலைந்தது. அலக்ஸாந்தரின் முக்கிய போர்வீரர்கள் அப்போது அந்த ஏகாதிபத்தியத்தைப் பங்கிட்டுக் கொண்டனர். பதின்மூன்றாம் சாஸனத்தில் கூறியிருக்கும் ஐந்து அரசர்களின் ராஜ்யங்கள் அலக்ஸாந்தரின் ஏகாதிபத்தியத்திலிருந்து உண்டானவை. சாஸனத்தில் ஐந்து அரசரின் பெயர் மட்டும் கூறப்பட்டிருக்கிறது. இவருடைய காலமும் தேசமும் பின் வருமாறு:-


ஐந்து அரசருக் இவ்வரசரின் இவர் ஆண்டு காலம்
குச் சாஸனங்க
ளில் வந்துள்ள ஐரோப்பியப் பெயர். வந்த தேசம் கி.மு.
ளில் வந்துள்ள
பெயர்,

அன்டி யோக்க இரண்டாம் ஆண்டி ஸிரியா 261-246
யாக்கஸ் (தியாஸ்)
அதுல மாய ப்டாலமியாஸ் (பை எகிப்து 285-247
லாடெல்பாஸ்)
அன்தேகின அண்டிகோனஸ் மாஸிடோணியா 277-239
(கொனாடஸ்)
மக மகாஸ் கைரீனே 285-258
அலக ஸுதர அலக்ஸாந்தர் எப்பைரஸ் 272-258


ஸிரியா தேசத்துக்கும். மோரியரின் ஏகாதிபத்தியத்துக்கும் ஸெல்யுக்கஸ் காலத்திலிருந்தே நேசபாவம் இருந்து வந்தது. மெகாஸ்தனிஸ் போன்ற யவன தூதர்கள் மோரிய ராஜதானியில் யவன அரசரின் காரியங்களை நோக்கி வந்தனர். அதனால் அசோகன் இந்த அயல் அரசருக்கும் தனக்கும் மிக அருமையென்று தோன்றிய சுவிசேஷத்தைத் தெரிவித்தது ஆச்சரியமில்லை. அசோகன் இங்கு தர்மத்தைப் போதித்ததுடன் திருப்தியடையாமல் வைத்தியசாலைகளையும் மிருக ஆஸ்பத்திரிகளையும் ஸ்தாபித்து அவற்றைப் பரிபாலித்து வந்தான்.

அசோகனுடைய சாஸனங்களில் ஐந்து அரசர் கூறப்பட்டிருப்பது 
இதிலிருந்து
கிடைக்கும்
ஸமகாலத்துவம்

பூர்விக இந்திய சரித்திரத்தின் காலநிர்ணயத்துக்கு மிகவும் முக்கியமான ஆதாரமாயிருக்கிறது. இந்த ஐந்து அரசர்களும் சேர்ந்து ஜீவித்திருந்தது நான்கு வருஷங்கள் மட்டுமே. இத் தூரதேசங்களுக்கு அசோகன் தூதரை அனுப்பியது தனது பன்னிரண்டாவது பட்டாபிஷேக வருஷத்திலென்று சாஸனங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. அதனால் அசோகனுடைய பன்னிரண்டாவது வருஷத்தை நாலு வருஷங்களுக்கு அதிகம் முன்பின் போகாமல் நாம் நிச்சயிக்கலாம். கி. மு. 258-௵ல் அசோகனும் இந்த ஐந்து அரசர்களும் ஒருமித்து ஜீவந்தராயிருந்தனர். இதை ஸமகாலத்துவம் (Synchronism) என்று சொல்லலாம். இந்த ஸமகாலத் துவத்திலிருந்து அசோகனுடைய ராஜ்யபாரகாலத்தையே நாம் தீர்மானிக்கலாம். இதல்லாமல் மற்றொரு ஸமகாலத்துவமும் பூர்விக இந்திய சரித்திரத்துக்கு மிகவும் முக்கியம் ; அதாவது கிரீக்கு பாஷையிலுள்ள அலக்ஸாந்தர் வீரன் சரிதைகளில் ஸந்திரகோட்டாஸ் என்ற இந்திய அரசன் பெயர் கூறப்பட்டிருப்பது. இந்த ஸ்ந்திரகோட்டாஸ் முத்திராராக்ஷஸம் என்ற சம்ஸ்கிருத நாடகத்தின் பாத்திரனான சந்திரகுப்தன் என்ற மோரிய வம்ச ஸ்தாபகன் தான் என்ற அனுமானம் பூர்விக இந்தியா சரித்திரத்தில் முதலாவது ஏற்பட்ட ஸமகாலத்துவம். இரண்டாவதாக ஏற்பட்ட ஸமகாலத்துவம் அசோகன் சாஸனங்களொன்றில் ஐந்து தூரதேசத்து அரசர்கள் கூறப்பட்டிருப்பதே.

அசோகனுக்கு ஐந்து மேனாட்டு அரசருடன் ஏற்பட்ட உறவானது இந்திய சரித்திர ஆராய்ச்சிக்கு ஓர் ஸமகாலத்துவத்தை அளித்திருப்பதன்றி வேறு விதத்திலும் 
குணதிசை
உலகம் குடதிசை
உலகத்தைச்
சந்தித்தது

முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய ஓர் விஷயமாகும். பௌத்தமதமானது பின் காலங்களில் கீழ்ஆசியாவில் பிரபலமானதுபோல மேல் ஆசியாவில் பிரபலமாசவில்லை. ஆயினும் இப்பிரதேசங்களிலும் அசோகனுக்குப் பின் சில நூற்றாண்டுகள் பௌத்த சமயத்தின் காற்று வீசியது. பௌத்த ஆலயங்களும் மடங்களும் ஏற்பட்டன. இந்தியாவுக்குப் புறம்பான நாடுகளில் கடுமையான நியமங்களும் தவமுமுடைய பல துறவிகள் சஞ்சாரஞ் செய்வதும் வசித்துவருவதும் சகஜமாயின. இதனால் மேனாடுகளில் இவ்வித துறவிச்சங்கங்கள் ஏற்பட்டு, வாழ்வு துன்பமே, என்ற கொள்கையும், புனர்ஜன்மத்தில் நம்பிக்கையும், புலால் உண்ணாமை யோகாப்பியாசங்கள் முதலிய வழக்கங்களும் வெகுவாகப் பாராட்டப்பட்டன. இம்மாறுதல்களுக்கு மூலகாரணம் இப்பாகங்களில் அசோகன் செய்த தர்மப்பிரசாரமே, . கிறிஸ்தவ மதஸ்தாபகராகிய இயேசு கிறிஸ்து பாலஸ்தீன் நாட்டில் அவதரித்தபோது அங்கே இந்தியருடைய அத்தியாத்ம சாஸ்திரங்களும் துறவறங்களும் செல்வாக்கடைந்திருந்தன. இதிலிருந்து ஒரு சரித்திர உண்மை விளங்குகிறது. அதாவது, பூகோளப் படத்தில் தூரத்தாலும், பாஷையினாலும், காடு மலை கடல் முதலிய இயற்கையின் தன்மைகளாலும் அதிகமாகப் பிரிக்கப்பட்ட நாடுகளுக்கிடையிலும் ஆதிகாலங்களிலிருந்து பண்டமாற்றுதல் மட்டுமன்று, எண்ணங்களின் கொடுத்துவாங்கலும் நடந்தேறினவென்பதே. இப்போது இந்தியாவில் ஐரோப்பிய நாகரிகமும் இந்நாட்டு நாகரிகமும் சந்தித் திருப்பதுபோல எகிப்து, வரியா, பாலஸ்தீன் முதலிய தேசங்களில் கி. மு. மூன்று, இரண்டு, ஒன்றாவது நூற்றாண்டுகளில் குணதிசை உலகம் குடதிசை உலகத்தோடு சந்தித்தது.

அசோகனின் பதின்மூன்றாம் ஆண்டிலும் இருபதாம் 
ஆஜீவகர்களுக்
குக் குகைகள்
செய்தல்

ஆண்டிலும் இப்போது கயையின் அருகில் காணப்படும் மூன்று குகைகள் வெட்டப்பட்டன. இந்தக் குகைகள் கடுந்துறவிகளாகிய ஆஜீவகர்களுக்கு தானம் செய்யப்பட்டவை. இதை நாம் அசோகன் ஆளுகையில் விசேஷ சம்பவமாகக் கொள்ளவேண்டியதில்லை. அவனால் செய்யப்பட்ட மற்ற பல தான தர்மங்களின் லக்ஷியங்கள் அழிந்துபோயின, இவை மட்டும் நிலை நிற்கின்றன, அவ்வளவே.

இருப்பத்தேழாவது இருப்பத்தெட்டாவது பட்டாபிஷேக 
ஸ்தம்ப
சாஸனங்களைப்
பிரசுரஞ்செய்தல்

வருஷங்களில் அசோகனுடைய ஏழு ஸ்தம்பசாஸனங்கள் வரையப்பட்டன. அசோகனுடைய அரசாட்சியின் தன்மையை அறிந்துணர இவை மிகவும் முக்கியமானவை. இவற்றில் ஏழாவது ஸ்தம்ப சாஸனம் விசேஷமாகக் குறிப்பிடத்தக்கது. இதில் அசோகனால் செய்யப்பட்ட எல்லாச் சீர்திருத்தங்களுடையவும் மதிப்புரை இருக்கிறது. இவ்வகை லிகிதங்கள் எழுதப்பட்டுள்ள ‘தூண்கள்’ அசோகனால் முன்னமேயே நாட்டப்பட்டிருக்கலாம். அவனுடைய முன்னோர்களும் இப்படிப்பட்ட ஸ்தம்பங்களை நாட்டியிருக்கலாம். அரசன் முடிசூடிய இருபத்தோராம் வருஷத்தில் நடந்த தீர்த்தயாத்திரையின் ஞாபகச்சின்னமாக நாட்டப்பட்ட ஸ்தம்பங்களைப்பற்றி முன்னே கூறினோம். சில ஸ்தம்பங்கள் முதலில் கீர்த்தி ஸ்தம்பங்களாக நாட்டப்பட்டிருக்கலாம். அசோகன், தான் ஜனங்களுக்குத் தெரிவிக்கக் கருதிய விஷயங்களை இவற்றிலெல்லாம் எழுதவேண்டுமென்று தீர்மானித்தான்.

அசோகன் காலத்தில் கடைசியாக நடந்த சம்பவம் 
பௌத்த
மகா ஸபை

மூன்றாவது மகா சபையாயிருக்கவேண்டும். சிலோன் ஐதிஹ்யத்தில் இந்த மகா சபை அரசனது பத்தொன்பதாமாண்டில் நடந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. இது சரியென்று தோன்றவில்லை. இருபத்தேழாவது அல்லது இருபத்தெட்டாவது பட்டாபிஷேக வருஷத்துக்கு முன் இந்த மகா ஸபை நடந்திருந்தால் அத்தனை முக்கியமான சம்பவம் ஏழாம் ஸ்தம்பசாஸனத்தில் கூறப்படாமலிராது. ஆனதால் ஸபை நடந்தது கி.மு; 240-ல் ஆயிருக்கலாம். இது எவ்வாண்டில் நடைபெற்றதாயினும், மூன்றாவது மகா ஸபை பௌத்த சமயத்தின் வளர்ச்சியில் மிகவும் முக்கியமான துறை என்பதில் ஐயமில்லை. இதை விளக்குவதற்குப் பௌத்த ஸங்கத்தின் முன் சரித்திரம் சற்று உணர்வது அவசியம், இச்சங்கங்களின் வரலாற்றை அடுத்த அதிகாரத்தில் எடுத்துரைப்போம்.

சாஸனங்களில் பிரதிபலித்துக் காணும் தோற்றமே 
அசோகன்
குணம்

அசோகனுடைய உண்மையான உருவமென்று முன்னே கூறினோம். இங்கு அரசனுடைய கொள்கைகளும் மனமும் பளிங்கிற்போல் விளங்குகின்றன ; அவன் உள்ளத்தில் துறவியின் பக்தி சிரத்தையும் அரசனின் ஞானமும் ஊக்கமும் ஒருங்கே கலக்கின்றன. மனிதனாகக் கணித்தாலும் அரசனாகக் கணித்தாலும் அசோகன் மேன்மை குன்றுவதில்லை. அரசனாகக் கணிக்குமிடத்து, அசோகனுடைய போர் செய்யாவிரதமும் மதங்கள் பால் சமமான பார்வையும் விசேஷமாகக் குறிப்பிடத்தக்கனவாம். ஸ்ரீ. வின்ஸென்ட் ஸ்மித் என்ற பிரசித்திபெற்ற இந்திய சரித்திர ஆசிரியர் அக்பரையும் அசோகனையும் சீர்தூக்கி எழுதுகிறார்.[6] மதங்கள் விஷயத்தில் இவ்விருமன்னரின் சமதிருஷ்டியும் எச்சமயத்தாருக்கும் ஒன்று போல் சுரந்த அன்பு மாதரவும் மெச்சத்தக்கனவே. இவ்விஷயத்தில் இவ்விரு சுடர்களின் ஒளியும் நிகரெனினும், புறச்சமயங்களைப் பழிப்பவரிடையில் தோன்றி வளர்ந்த அக்பருடைய சமதிருஷ்டி அசோகனதைவிட விசாலமும் பெருமையுமுடையதென நாம் ஒப்புக்கொள்ளலாம். ஆயினும், முன் கூறிய ஆசிரியர் குறிப்பிடுவதுபோல, அக்பர் புத்திக்கு யுத்தங்களைத் தவிர்த்து தர்மத்தைமட்டும் பரவச்செய்வதென்பது பேதைமையாகத் தோன்றுமேயன்றி வேறில்லை. அசோகனோ, அயல் நாடுகளைக் கைப்பற்றுவதின் கொடுமையைத் தனது ஆளுகையின் தொடக்கத்திலேயே உணர்ந்தான். அக்பர் அசோகனுடைய பதின்மூன்றாவது சாஸனத்தைப் படித்திருந்தால் அவனைப் பயங்கொள்ளியாகவே கருதியிருப்பர். அரசர் பூமியில் பேராசையைத் தவிர்க்கவேண்டுமென்பது அக்பர் புத்திக்கே எட்டவில்லை. இக்கசப்பான அரிய உண்மை தற்காலத்தில் பல ராஜாங்க நிபுணர்களால் ஒப்புக்கொள்ளப்படுகிறது, இவ்வுண்மையை உணர்ந்ததே அசோக ராஜனுடைய அழியாப் புகழாம்.

அரசனாயிருந்தும் மனிதனுக்குரிய லக்ஷியங்களை மறக்காது, சுக போகங்களில் மயங்காது வாழ்ந்துவந்த மன்னர் மிகச் சிலரே. சரித்திரமூலமாகிய ஆதாரங்களில் மிகுந்த வித்தியாசமுள்ளபோதிலும், கபடமற்ற உள்ளத்திற்கும் எல்லோர் காட்சிக்கும் எளியனாயிருக்க வேண்டுமென்ற ஆர்வத்திற்கும் தனது கடமைகளில் ஓயாக்கவனத்திற்கும் அறநெறியைத் தழுவும் சிரத்தைக்கும் அசோகனை ரோமராஜ்யத்தின் சக்கரவர்த்தியான மார்க்கஸ் ஒளரெலியஸ் என்ற மகானுடன் ஒப்பிடலாம். ஊன் தவிர்த்தல், கொல்லாமை, ஆடம்பரமற்ற வாழ்க்கை முதலிய நோன்புகளைக் கைக்கொண்டவரும் துறவியாக அரசு நடத்தியவரும் சிலருண்டு. ஆனால் அவர் மற்றப்படி அசோகனுக்கு ஒப்பாகாராதலின் அவரை இங்குக் குறிப்பிடவேண்டிய அவசியமில்லை. அவன் பௌத்த நூல்களில் அருகன் என்ற ஆன்மீய நிலைமையை அடைந்தானென்று சொல்லப்படுகிறது. அசோகன் ஒரு மகா புருஷனென்று நாமும் கூறலாம். அப்படியிருந்தும் அவன் கர்வமடைந்ததாகத் தோன்றவில்லை. அவனுடைய கர்வமின்மைக்கு பாப்ருசாஸனம் சான்றாகும். தான் ராஜாதிராஜனாயிருந்தும் அவ்வூரிலுள்ள பிக்ஷுக்களுக்கு, எழுதியிருக்கும் கடிதத்தில் அடிசன் தனது நமஸ்காரத்தை அவர்களுக்குச் சமர்ப்பித்து எழுதத்தொடங்குகிறான். ஆன்ம பரிசீலனை எவருக்கும் அவசியமென்று வற்புறுத்தும் மூன்றாம் ஸ்தம்பசாஸனமும் இங்கு பிரத்தியேகமாகக் குறிப்பிடத்தக்கது. இவ்வித உயர்ந்த சுபாவங்கள் அமைந்தவனாயிருந்தும் அக்காலத்துப் பாமர ஜனங்களுக்கு அசோகனுடைய மேன்மையைவிட, அவனது மடமை தான் நன்றாகப் புலப்பட்டது. நன்மையில் நம்பிக்கையற்ற உலகமானது, அரசன் அறநெறியைப் பரவச்செய்வதில் கொண்ட உற்சாகத்தையும் எல்லோரும் நன்கறிந்த நற்போதனைகளை வற்புறுத்துவதில் காட்டிய ஊக்கத்தையும் அவனுடைய பேதைமைக்குத் திருஷ்டாந்தமாகக் கொண்டது. அவன் தனக்குப் பெருமையெனக் கருதிய தேவானாம்பிரியன் என்ற விருதானது பிற்காலங்களில் சம்ஸ்கிருத மொழியில் மூடனென்னும் பொருளில் வழங்குவதும் வியக்கத்தக்கதே.

அசோகனுடைய விசாலமான நோக்கங்களும் எண்ணங்களும் கைகூடவில்லை. ஆயினும், இது அரசனின் குற்றமென்று கூறுவது தவறு. முயற்சி மட்டுமே மனிதனுக்கு உரியது. எண்ணங்களின் வெற்றி அல்லது தோல்வி இயற்கையிலுள்ள வேறு பல நிமித்தங்களைப் பொறுத்திருக்கிறது. இவை ஏகோபித்தால் மனிதனின் நோக்கங்கள் கைகூடுகின்றன. அதினால் அசோகனுடைய எண்ணங்கள் கைகூடவில்லையென்பது அவன் புகழைக் குறைக்கவில்லை. தர்மத்தைப் போற்றுவதில் ஏற்பட்ட சிரத்தையிலும், மதவிஷயமான சண்டைகள் ஓய்ந்து மடிந்துபோகவேண்டுமென்ற நோக்கத்திலும், ஜனங்கள் ஒற்றுமையுடனும் சுபிக்ஷத்துடனும் சந்தோஷத்துடனும் வாழ்ந்துவரவேண்டுமென்ற கோரிக்கையிலும், ஜனங்களுடைய க்ஷேமம் அரசனுடைய நடத்தையைப் பொறுத்திருக்கிறதென்ற உண்மையின் உணர்ச்சியிலும் அசோகனுடைய சரிதை மானிடருக்குப் பெரிய மலையிலக்காயிருக்கிறது.

நாட்டின் க்ஷேமத்தைப் பலவாறு வளரச் செய்து அசோகன் 
அசோகனுக்குப்
பின் வந்த
மோரிய அரசர்

முப்பத்தேழு வருஷங்கள் ஆண்டபின் காலகதியை அடைந்தான், அரசனுடைய இறுதிக் காலம் கி. மு. 232 என்று கணக்கிடப்படுகிறது. அசோகனுக்குப் பல குமாரர் இருந்தனர். மகததேசத்தில் அசோகன் பேரனான தசரதன், அசோகனுக்குப் பின் அரசனானான், இவன் தன் மூதாதை செய்துள்ள குகைகளின் அருகில் ஆஜீவகர்களுக்கு மூன்று குகைகளைச் செய்திருக்கிறான். இது தான் இவனைப்பற்றி நமக்குத் தெரிந்தது. ஸம்பிரதி என்ற பெயருடைய அசோகனின் மற்றொரு பேரன் ஜயினமதத்தைப் பரிபாலிமாக அந்த மதத்தாருக்கிடையில் பெரும்புகழ் பெற்றானென ஜயினக் கிரந்தங்கள் கூறுகின்றன. அசோகனுடைய ஸந்ததியார் அவனது தர்மசிந்தையையோ திறமையையோ பின்பற்றவில்லை. தன் ஸந்ததியாருக்கென்று சாஸனங்களில் எழுதப்பட்டிருக்கும் எச்சரிக்கைகள் கவனிக்கப் படவில்லையென்று நாம் ஊகிக்கலாம். புராணங்களிலுள்ள வம்சாவளியின் படி அசோகனுக்குப்பின் வந்த மௌரிய அரசர், அறுவர். அவர் மகதராஜ்யத்தை கி. மு. 232 முதல் 185-௵ வரையும் ஆண்டு வந்தனர். அப்போது ஏகாதிபத்தியத்தின் பல பாகங்கள் வேறுபட்டு சுதந்திர ராஜ்யங்களாய் மாறின. இதுவன்றி, இவ்வரசரைப் பற்றி நமக்குத் தெரிந்ததும் கொஞ்சமே. அவற்றை இங்கே எடுத்துச்சொல்லவேண்டிய அவசியமுமில்லை. கடைசியாக பிருஹத்ரதன் என்ற மோரியனிடமிருந்து புஷ்யமித்திரன் என்ற சுங்க வம்சத்து அரசன் ராஜ்ய லக்ஷ்மியைக் கைப்பற்றிக் கொண்டான். அதற்குப் பின்னும் மௌரியர் பாடலீபுரத்தில் சிற்றரசராய் வாழ்ந்தனர்.

குறிப்புகள்

[தொகு]
  1. கீழ் 20- ம் பக்கம் பார்க்க ,
  2. முதற்சாஸனம்.
  3. ஐந்தாம் ஸ்தம்ப சாஸனம்.
  4. ஐந்தாம் சாசனம்.
  5. மகாவம்சம், அத். 12.
  6. The Oxford History of India by V. A. Smith p. 115.