உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் மணக்குடவருரை/அருளுடைமை

விக்கிமூலம் இலிருந்து

துறவற வியல்.

[துறவறமாவது, இல்லின் கண்ணின்று நீங்கித் தவம் முதலாயின செய்தல். அது கூறிய அதிகாரம் பதின்மூன்றினும் அருளுடைமை முதலாகத் தவமுடைமை ஈறாக இல்லின் கண்ணின்று நீங்கியாரால் செய்யப்படுவன நான்கும் கூடாவொழுக்கம் முதலாகப் பயனில சொல்லாமை ஈறாக அவரால் தவிரப்படுவன ஐந்துமாக ஒன்பது அதிகாரத்தால் கூறி அதன்பின் துறவிற்கு இன்றியமையாது அறிதற்பாலதாகிய நிலையாமை ஓர் அதிகாரத்தால் கூறி; அதன்பின் துறவிலட்சணம் ஓர் அதிகாரத்தால் கூறி; துறவினால் எய்தற் பாலதாகிய மெய்யுணர்தல் ஓர் அதிகாரத்தால் கூறி ; பிறப்பிற்கு ஏதுவாகிய அவாவினை அறுத்தல் ஓர் அதிகாரத்தால் கூறினாராகக் கொள்ளப்படும்.]

௨௫-வது.-அருளுடைமை.

அருளுடைமையாவது, யாதானும் ஓர் உயிர் இடர்ப்படின் அதற்காகத் தன்னுயிர்க் குற்ற துன்பத்தினால் வருந்துமாறு போல் வருந்தும் ஈரமுடைமை.

ல்லாற்றான் நாடி அருளாள்க; பல்லாற்றான்
தேரினும் அஃதே துணை.

இ-ள்:- நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க-நல்ல வழியாலே நாடி அருளை உண்டாக்குக; பல் ஆற்றான் தேரினும் அஃதே துணை-பல வழியிலும் (ஓடி) ஆராயினும் (தமக்கு) அருளே துணையாம்.

நல்லாற்றான் நாடி என்றது, அருளுடைமை யுண்டாகப் பல அறங்களையும் செய்து என்றவாறு. [நாடி-விரும்பி-செய்து.]

இஃது, அருளுடைமை வேண்டு மென்றது. ௨௪௧.

ருட்செல்வம் செல்வத்துட் செல்வம்; பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.

. இ-ள்:- செல்வத்துள் செல்வம் அருள் செல்வம்-செல்வத்துள் (வைத்துச்) செல்வமாவது அருளுடைமையாகிய செல்வம்; பொருள் செல்வம் பூரியார் கண்ணும் உள-பொருளாகிய செல்வங்கள் கீழாயினார் மாட்டும் உளவாதலால்.

இஃது, அருள் நிலை கூறிற்று. [அருள் நிலை-அருளின் தன்மை.] ௨௪௨.

ருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.

இ-ள்:- அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு-அருளைப் பொருந்தின நெஞ்சினை உடையவர்க்கு, இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல் இல்லை-இருளைப் பொருந்தின நரகலோகம் புகுதல் இல்லை,

[இன்னா உலகம்-துன்ப உலகம்-நரகலோகம்.]

இஃது, அருளுடையார் நரகம் புகா ரென்றது. ௨௪௩.

ன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க் கில்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.

இ-ள்:- மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு-நிலை பெற்ற உயிர்களை ஓம்பி அருள் ஆள்வார்க்கு, தன் உயிர் அஞ்சும் வினை இல் என்ப-தன் உயிர் அஞ்ச வரும் வினை (வருவது) இல்லை என்று சொல்லுவர் (நல்லோர்).

இஃது, அருளுடையார்க்குத் தீமை வராதென்றது. ௨௪௪.

ல்லல் அருளாள்வார்க் கில்லை; வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி.

இ-ள்:- அருள் ஆள்வார்க்கு அல்லல் இல்லை-அருளை உடையார்க்கு அல்லல் இல்லை; கரி வளி வழங்கும் மல்லல் மா ஞாலம்-(அதற்குச்) சான்று காற்று இயங்கும் வளப்பத்தினையுடைய பெரிய உலகம்.

[அல்லல்-துன்பம். உலகம்-உலகத்தார்-பெரியோர்.]

அருளுடையார்க்கு அல்லலின்மை உலகத்தார் மாட்டே காணப்படுமென்று இது கூறிற்று, ௨௪௫.

ருளில்லார்க் கவ்வுலகம் இல்லை, பொருளில்லார்க்
கிவ்வுலகம் இல்லாகி யாங்கு.

இ-ள்:- அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை-அருள் இல்லாதார்க்கு மேலுலகம் (கூறும் காட்சி) இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல் ஆகிய ஆங்கு-பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகின் கண் (நுகரும் நுகர்ச்சி) இல்லையானாற் போல.

இஃது, அருளில்லாதார் சுவர்க்கம் புகா ரென்றது. ௨௪௬.

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.

இ-ள்:- தேரின்-ஆராயின், அருளாதான் செய்யும் அறம்-அருளில்லாதவன் செய்யும் அறம், தெருளாதான் மெய்ப்பொருள் கண்டால் அற்று-தெருளாதான் மெய்ப்பொருளைத் தெளிந்தாற் போலும்.

இஃது, அருளில்லாதார் அறம் செய்யவும் மாட்டா ரென்றது. ௨௪௭.

பொருணீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருணீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.

இ-ள்:- அருள் நீங்கி அல்லவை செய்து ஒழுகுவார்-(முற்பிறப்பின் கண்) அருளினின்று நீங்கி அல்லாதவற்றைச் செய்து ஒழுகினவர், பொருள் நீங்கி பொச்சாந்தார் என்பர்-(இப்பிறப்பின் கண்) பொருளினின்று நீங்கி மறவியும் உடையவர் என்று சொல்லுவர் (ஆன்றோர்).

இஃது, அருள் இல்லா தார்க்குப் பொருள் இல்லையா மென்றது. ௨௪௮.

பொருளற்றார் பூப்பர் ஒருகால்; அருளற்றார்
அற்றார்; மற்றாதல் அரிது.

இ-ள்:- பொருள் அற்றார் ஒரு கால் பூப்பர்-பொருள் இல்லாதார் ஒரு காலத்தே பொருளுடையராகவும் கூடும்; அருள் அற்றார் அற்றார்-அருள் இல்லாதார் கெட்டார்; மற்று ஆதல் அரிது-பின்பு (ஒரு காலத்தும்) ஆக்கமுடையவராதல் இல்லை.

இஃது, அருளில்லார்க்குப் பொருளின்மையேயன்றி எல்லாக் கேடும் உண்டா மென்றது. ௨௪௯.

லியார்முன் தம்மை நினைக்க,தாம் தம்மின்
மெலியார்மேல் செல்லும் இடத்து.

இ-ள்:- தாம் தம்மின் மெலியார்மேல் செல்லும் இடத்து-தாம் தம்மின் மெலியார் மேல் வெகுண்டெழும் இடத்து, வலியார் முன் தம்மை நினைக்க-வலியார் முன் தாம் நிற்கும் நிலையை நினைக்க.

இஃது, அருள் உண்டாகும் ஆறு கூறிற்று. ௨௫0.