அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்/063-383
59. நமது கருணைதங்கிய ராஜாங்கத்தார் கண்ணோக்கம் வேண்டும்
அதாவது, காயப்பட்டுள்ள மாடுகளையும் குதிரைகளையும் காப்பாற்றும்படியான ஓர்கூட்டம் இயற்றி வண்டிக்காரர்களால் ஏழை ஜெந்துக்களின் இடுக்கங்களையும், உபத்திரவங்களையும் நீக்கும்படியான கண்ணோக்கம் வைத்துக் காப்பாற்றி வருகின்றார்கள்.
வண்டிக்காரர்களோ தங்கள் வண்டிகளில் ஏற்றியுள்ள மநுக்களுக்கு ஓரிடையூறு செய்யாமலும், அவர்களின் பொருட்களை அபகரித்து ஒளியமுடியாமலும் இருக்கக்கூடிய பித்தளை பில்லைகளை வண்டிக்காரர்கள் கைகளில் கட்டி கண்ணோக்கம் வைத்து ஏழைமநுக்களைக் காப்பாற்றி வருகின்றார்கள். அதுபோல் இந்த ரெயில்வேவிஷயங்களிலும் தக்க ஏற்பாடுகளைச் செய்து அவைகண்மீதுங் கண்ணோக்கம் வைத்துக் காப்பாற்றக் கோறுகிறோம்.
இரயில்வே ஏஜண்டுகளோ தங்கள் மனம்போன போக்கில் ஒவ்வோர் ஏற்பாடுகளை செய்துவிடுகிறார்கள். மானேஜர்களோ அம்மேறை நடந்துக்கொள்ளுகிறார்கள். டிரைவர்களோ தங்கள் உழைப்பிற்குத் தக்கக் கூலியில்லையென்று வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு வண்டிகளை ஓட்டாமல் நின்றுவிடுகின்றார்கள். ஏஜண்டுகளோ தாங்கள் சொன்ன வார்த்தையை மீறிய டிரைவர்களை நீக்கிவிட்டு புதுடிரைவர்களைப் போட ஆரம்பிக்கின்றார்களன்றி பழைய டிரைவர்களுக்கே வேண புத்திகளைக்கூறி அவர்கள் உழைப்பிற்கேற்ற கூலிகளைக் கொடுத்து காப்பாற்றுவதுடன் தங்கள் வண்டிகளை நம்பியேறுகிறவர்களுக்கு இடுக்கம் வராது காப்பாற்றுவதைக் காணோம்.
மங்கப்பட்டினத்து இரயில்வேயின் துக்கம் இன்னும் மாறாதிருக்க என்னூர் இரயில்வே துக்கம் எழும்பிவிட்டது.
இவ்வகையான துக்கம் இன்னும் நேரிடுமாயின் இஸ்டீமருக்கு பயந்து இரயில் ஏறுகிறவர்களெல்லாம் இரயிலுக்கு பயந்து பிரயாணஞ்செய்வார்களோ செய்யமாட்டார்களோ தெரியவில்லை.
ஓர்வகையால் துணிந்து ஏறியபோதினும் சுகமாகத் தூங்கமாட்டார்களென்பது நிட்சயம்.
குடிகளுக்குத் தாய்தந்தையர்போல் விளங்கும் கருணை தங்கிய ராஜாங்கத்தோரே சற்றுக் கண்ணோக்கம் வைத்து இரயில்வே ஏஜண்டுகள் ஏற்படுத்தும் சட்டதிட்டங்கள் யாவையுந் தங்களுக்குத் தெரிவித்தே நடத்திவரவும் தெரிவிக்காமல் நடத்தும் காரியாதிகளில் குடிகளுக்கு ஏதேனும் குறைகள் நேரிடுமாயின் அதின் நஷ்டங்களுக்கு ஏஜண்டுகளே உத்திரவாதமென்றும் கூறுவதுடன் பழைய டிரைவர்களுக்கு ஓர்வகை அடையாளமும் புது டிரைவர்களுக்கு ஓர்வகை அடையாளமும் கொடுத்து கைகளில் கட்டிக்கொள்ளச்செய்து வண்டிகளை ஜாக்கிரதையில் ஓட்டும்படியான ஏதுக்களைத் தேடி, இடைவிடாது கண்ணோக்கம் வைத்துக் காப்பாற்றக்கோறுகிறோம்.
- 3:3; சூன் 30, 1909 -