அணியும் மணியும்/சில சொற்கள்

விக்கிமூலம் இலிருந்து
1. சில சொற்கள்

‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே’ என்று பாரதியார் தமிழ்ச் சொல்லின் உயர்வைப் பாராட்டினார். தமிழைச் சொல்லுவதில் இன்பமும், அதைக் கேட்பதில் இனிமையும், அச்சொல்லைச் சொல்லும் திறனில் கலையமைப்பும் உண்டாகின்றன என்றால், தமிழ்ச் சொல்லின் பெருமையைச் சொல்லி முடியாது.

சொல்லத் தெரிந்தவர்கள் எதைச் சொன்னாலும் அதில் இன்பத்தைக் காண முடிகிறது. அச் சொல்லுக்கு ஆற்றலும், ஆற்றலால் செயலும் பிறக்கின்றன. உள்ளத்தில் ஊற்றெடுக்கும் கவிப்பெருக்கும், கற்பனையில் வடித்தெடுக்கும் கதையமைப்பும் சொல்லுவோனின் சொற்றிறனால் சிறப்புப் பெறுகின்றன. கம்பர், இளங்கோ, வள்ளுவர் போன்ற ஆன்ற புலவர்களின் ஆழ்ந்த கவிதைகளும் சொல்லும் திறனால் வெல்லும் வாழ்வைப்பெற்று, அழியாப்பெருஞ் செல்வமாக நிலைபெற்றிருக்கின்றன. ‘பொழுது போக்குக்கு’ என ஒழிந்த நேரங்களில் படித்து இன்புறும் பல்வகைத் தொடர்கதைகளும் நடித்து இன்புறும் நாடக உரையாடல்களும் சொல்லும் திறனாலேயே உள்ளத்தைக் கவர்கின்றன. தேர்ந்த சொல்லால் ஒர்ந்த பொருள்கள் இழுமென் ஓசையும், விழுமிய கருத்துங் கொண்டு விளங்கும் பொழுது அவை கற்போரின் உள்ளத்தை ஈர்க்கும் கவின்மிகு இலக்கியங்கள் ஆகின்றன.

வள்ளுவர் வாய்மொழியும் சொல்லும் திறன்படச் சொல்லப்படவில்லை என்றால் அஃது அறத்தை வற்புறுத்தும் நீதிநெறி நூலாகவோ, பொருளைப் பொருட்படுத்தும் பொருளியல் நூலாகவோ, இன்பத்தை வகைப்படுத்தும் இன்பவியல் நூலாகவோ, தருக்க வாதங்கள் மிக்க தத்துவ நூலாகவோ அமைந்திருக்குமேயன்றி, உலகம் போற்றும் உயர்ந்த இலக்கியங்களுள் ஒன்றாக விளங்கியிருக்காது.

வள்ளுவர் வாய்ச்சொல்லின் திறத்தைத் திறம்பட அறிவதால், அச்சொல்லின் நலமும், அச் சொல்நலத்தால் சிறப்புறும் பாநலமும் அறிய முடிகின்றன. திறன் மிக்க சொற்களுக்கு ஆற்றலும், அவ்வாற்றலால் அறச்செயலும், அறச்செயலால் பொருளும் மிகும் என்பது அவர்தம் கருத்தாகும்.

திறனறிந்து சொல்லுக சொல்லை; அறனும்
பொருளூம் அதனினூஉங் கில் – 644

என்பது அவர் குறளாம். திறனறிந்து எதையுஞ்சொல்ல வேண்டும் என்பதை வற்புறுத்தும் அவர், திறம் தெரிந்து சொல்லைப் பயன்படுத்தித் தம் பாநலத்தை மிகுவித்திருப்பதற்கு. அவர்தம் திருக்குறட்பாக்கள் தக்க சான்றாகும்.

திறனறிந்து சொல்லப்பெறும் சொற்களும், அவற்றால் உணர்த்தப்பெறும் கருத்துக்களும் கேட்டாரைப் பிணித்துக் கேளாரையும் ஈர்க்கும் இயல்பைப் பெற்று விளங்கும் இயல்பினவாம்.

கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல் - 643

என்பது அவர் தரும் விளக்கமாகும். பிறர் விரும்புமாறு, அவர் உள்ளத்தைக் கவரக்கூடிய சொற்களால், சொல்லுவனவற்றை ஒழுங்குபடுத்திச் சொல்ல வேண்டும் என்பது அவர்தம் அறிவுரையாகும்.


வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயனகோடல்
மாட்சியின் மாசற்றார் கோள் - 646

எனத் தாம் சொல்லும்போது எவ்வாறு சொல்ல வேண்டும் என்பதையும், பிறர் சொல்வதில் உள்ள பொருளை எவ்வாறு கொள்ளவேண்டும் என்பதையும் கூறுகின்றார்.

மேலும், எடுத்தாளுஞ் சொற்களில் தக்கசொல்லை எடுத்தாளுவதோடு, மிக்க சொல்லையும் அமைப்பது சிறப்புதரும் என்பது அவர் கருத்துரையாகும். வெல்லுஞ் சொல் அதனினும் வேறு இல்லாத வகையில், அச் சொல் அமைய வேண்டும் என்பதை,



சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை யறிந்து - 645

என்ற குறட்பாவால் நன்கு விளக்குகின்றார்.

இவ்வாறு நிரந்து இனிமையாகச் சொல்லுதல் வல்லாரைப் பெறின், அவர் சொல்லை உலகம் கேட்டுச் செயலாற்ற முன்வரும் என்பது அவர்தம் நம்பிக்கையாகும். வள்ளுவர் குறள் நிரந்து இனிது அமைந்திருப்பதால்தான் அதில் உள்ள கருத்துக்கள் உள்ளத்தில் நன்கு பதிந்து. உலகினரை நன்னெறிக்கண் செயல்படுத்துகின்றன என்று கூறலாம்.



விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்
- 648

என்பது அவர்தம் நூலுக்கே தரும் சிறந்த விளக்கவுரை எனக் கூறலாம். இக் குறட்பாக்கள் சொல்லின் திறத்தைப் பொதுப்படையாக விளக்குவன எனினும், அவை அவர்தம் திருக்குறளின் சொல் திறத்தையே விளக்குவன எனக் கூறலாம்.

குறைந்த சொற்களால் நிறைந்த பயன் விளைவிப்பதே சிறந்த மொழிநடையின் சிறப்பாகும். நீண்ட சொற்றொடர்களுக்கே இருக்கும் ஆற்றலைவிடப் பழகிப் பண்பட்ட சிறிய சொற்றொடர்களுக்கே ஆற்றல் மிகுதியாகும் என்பதை எழுத்து மொழிக்கும் பேச்சு மொழிக்கும் உள்ள வேறுபாடு உணர்த்தும். பேசும் பொழுது சுருங்கிய தொடர்களால் சிறிய சொற்களைக் கொண்டு கருத்தை எளிதில் வெளிப்படுத்த இயல்கிறது. அவை உடனே செயலைத் தூண்டி ஆற்றல் மிக்கனவாக விளங்குகின்றன. எழுத்து மொழியாகிய இலக்கியநடை நீண்ட சொற்றொடர்களைக் கொண்டு உடனே செயலலைத் தூண்டாமல் மனிதனைச் சிந்தனையில் ஆழ்த்துகிறது. நீண்ட சொற்றொடர் களுக்கு இருக்கும் ஆற்றலைவிடச் சுருங்கிய சொற்களுக்கும். அவை அமையும் தொடர்களுக்குமே ஆற்றல் மிகுதியாக உள்ளது.

வள்ளுவர் வாய்மொழியும் பேச்சு மொழியின் மரபைப் பெற்றுக் குறைந்த சீர்களைக் கொண்ட குறட்பாவால் விளங்கி, ஆற்றல் மிக்கவையாக விளங்குகின்றது. ஏழு சீர்களைக் கொண்டு, இரண்டினும் குறைந்த அடிகளால் இயங்கிச் சுருங்கிய சொற்றொடர்களால் நிறைந்த கருத்தை உணர்த்திச் சிறந்த நடையாக அமைந்துள்ளது.

குறைந்த அடிகளால் விளங்கும் காரணத்தாலேயே இந்த நூலுக்குக் 'குறள்' எனப் பெயர் அமைந்து, சிறப்பு அடையாகிய 'திரு' என்பது சேர்ந்து 'திருக்குறள்' என்ற பெயர் நிலவியது என்பர். சிறு சொற்களால் ஆகிய சீர்களால் இயங்குவதும் இதன் சிறப்பியல்பு எனக் கூறத்தகும்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற – 34

என்ற குறளில், மனம், மாசு, நீர, அறன், பிற போன்ற சிறு சொற்களே மிகுதியாக அமைந்திருக்கக் காண்கிறோம். சிறு சொற்களை அமைத்து அரிய பெரிய கருத்துக்களை உணர்த்தும் பெற்றி இந்நூலில் யாண்டும் காணலாம்.

பாவின் அடியும், சீரும், சொல்லும், சுருங்கி அமைந்திருப்பதோடு, அவர் எடுத்தாண்டுள்ள சொற்களின் எண்ணிக்கையிலும் சுருக்கம் அமைந்திருக்கக் காண்கின்றோம். ஏழு சீர் கொண்ட திருக்குறளில், மிகச் சுருங்கிய எண்ணிக்கை கொண்ட சொற்களை மீண்டும் மீண்டும் வருமாறு அமைத்து, அவர் சொற்றிறனின் பெருமையை நிலைநாட்டிவிட்டார் என்று கூறலாம். ஒரு குறளில் மூன்றே சொற்களை எடுத்தாண்டுள்ள இடங்கள் பல உள்ளன. துப்பு' 'மழை', 'ஆதல்' என்ற மூன்று சொற்களைக் கொண்டே எழுசீர்களைக் கொண்ட பாவினை அமைத்து, விண்ணையும் மண்ணையும் தொடர்புபடுத்தி, மண்ணில் வாழும் உயிரையும் உயிர்க்கு உணவாகிய மழையையும் பற்றி அரிய செய்தியைத் தெரிவித்திருக்கின்றார்: அக் குறட்பாவின் பெருமைக்கு நிகர் அவர் பாக்களே எனலாம்.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை – 12

இக் குறட்பாவில் அவர் எடுத்தாண்டுள்ள சொற்கள் துப்பு', 'மழை', 'ஆதல்' என்பவையேயாகும். இதைப் போலவே,

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி யனைய செயின் – 365

என்ற பாவும்,

செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம்
அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை – 411

என்ற பாவும், எண்ணிக்கையில் குறைந்த சொற்களைக் கொண்டு அவை மீண்டும் வருமாறு அமைந்திருக்கின்றன. இவ்வாறு வருதல், சொற் சுருக்கம் என்ற சிறப்போடு ஒரு தனி அழகையும், ஓசை நயத்தையும் தருகிறது என்பதுபற்றி, அணி நூலாரும் சொற்பின்வருநிலையணி என்று பாராட்டுவர். வந்த சொல்லே மீண்டும் வருவதால், அந்த ஒலிகள் காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன. அதனால் அவை உணர்த்தும் கருத்துக்களும் நம் மனத்தைவிட்டு அகலாமல் நிலைபெறுகின்றன.

யாகாவா ராயினும் நாகாக்க; காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு – 127

என்ற குறளில், 'கா', 'கா' என்ற ஒரே ஒலி மீண்டும் மீண்டும் வந்து செவியில் பட்டு, நாவைக் காத்தல் வேண்டும் என்ற நீதியை வற்புறுத்துகிறது.

பா, அடி, சீர், சொல் என்ற வகையில் சுருக்கத்தை ஆண்ட அப் பாவலர், எழுத்தினும், எழுத்தானாய அசைகளிலும் சுருக்கத்தை ஆண்டுள்ளமை அவர் குறளின் சொல் மாட்சியைக் காட்டுகிறது.

கற்கக் கசடறக் கற்பவை கற்றபி
னிற்க அதற்குத் தக – 391

என்ற குறட்பாவில் இரண்டாவது அடியில் முதற்சீரில் 'னி' என்ற ஒலியைத் தவிர வேறு மெல்லொலியே அமையவில்லை; முதலடியிலும் இரண்டாமடியிலும் வகர ஒலியைத் தவிர வேறு இடையொலியே அமையவில்லை. வல்லொலிகளையே முற்றிலும் அமைத்து, அவற்றிலும் ககரமும் றகரமும் மீண்டும் மீண்டும் ஒலிக்குமாறு செய்து, அவற்றை இயக்க அகர உயிரையே பலமுறையும் பயன்படுத்தி இகரத்தை இரண்டிடத்தில் மட்டும் துணைப்படுத்தி, ஒலியில் செறிவையும் ஒழுங்கையும் அமைத்து, ஒலியமைப்பில் சுருக்கத்தைக் கண்டது அவர் ஒலிகளிலும் கருக்கத்தைக் கையாளும் இயல்பைப் புலப்படுத்துகிறது. ஒரே வகையான ஒலிகள் காதில் படுவதால் சொல்லின்பம் உண்டாதலோடு கருத்தும், ஆழமாகப் பதியும் என்ற கருத்தால், அவர் இவ்வாறு ஒலியமைப்பிலும் சுருக்கத்தை எடுத்தாண்டுள்ளார் எனலாம்.

இதைப் போலவே, 'குழலினிது யாழினிது என்ப தம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்' என்ற குறளில் ழகர எழுத்தையும், குழல் யாழ் மழலை போன்ற சொற்களையும் அமைத்துக் குழந்தையின் மழலைச் சொல்லை நம் காதில் ஒலிக்கச் செய்கின்றார். மழலைச் சொல்லின் இன்பத்தை அக்குறள் செவிக்கு ஊட்டிவிடுகின்றது என்று கூறலாம்.

இவ்வாறு பிறர் வேட்கும்படி தேர்ந்த சொல்லால் நிரந்து இனிது சொல்லும் திறம் அவர் சொற்களுக்கு இருப்பதற்கு அடிப்படைக் காரணம் சுருங்கச் சொல்லலாகும். சில சொற்களால் எதையுஞ் சொல்ல முற்படுவார்கள் என்றும், அவ்வாறு பல சொற்களை எடுத்தாள்வது சொற்றிறனாகாது என்றும் வள்ளுவரே,

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றாதவர் – 649

என்ற குறளில் விளக்குகின்றார். அந்தச் சில சொற்களும் மாசற்ற சொற்களாக அமையவேண்டும் என்று வற்புறுத்துகின்றார். மாசற்ற சில சொற்களால் சொல்லுவதுதான் சொற்றிறன் என்பதை வற்புறுத்தப் "பல சொல்லக் காமுறுவர் மன்ற" என்று. பிறர் குறையை எடுத்துக் காட்டுகின்றார்.

எழுத்தானும், சொல்லானும், சீரானும், அடியானும் சுருக்கத்தைப் போற்றி. அதனால் பொருள் நுட்பத்தைத் திட்பமாக உணர்த்தும் திறனால்தான் இந்நூலுக்குக் குறள் எனப் பெயர் வழங்கலுற்றது எனக் கூறலாம். பொருள் கருதி வைக்கப்பட்ட முப்பால் என்ற பெயர் வழக்கிழந்து, சொல்திறன் கருதிச் சிறப்பிக்கப்பட்ட திருக்குறள் என்ற பெயரே நிலைத்து விட்டது.

சொற்களைச் சொல்லும் பொழுது மக்கள் பேச்சு மொழியின் போக்கை ஒட்டிச் சுருங்கக்கூறி விளங்க வைப்பது போலவே, மக்கள் பேசும் மரபை ஒட்டியே உவமைகளும் பிற அணிகளும் அமைந்துள்ளன. 'அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு' என்ற பேச்சு மரபை ஒட்டியே,

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின – 475

என்ற குறள் அமைந்திருக்கிறது.

பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெருஉம் புலிதாக் குறின் – 599

என்பதும் இதைப் போன்ற அமைப்பை உடையதாகும். பொருளை விடுத்து உவமையை மட்டும் அமைப்பது இவற்றில் காணும் சிறப்பியல்பாகும். பொருளைக் கூறாது விடுவதால் சொற் சுருங்கியிருத்தல் இவ்வமைப்பின் தனியழகாகும். இவ்வாறு, உவமையை மட்டும் சொல்லிப் பொருளோடு தொடர்பு படுத்தாமல் விடுவதால் மற்றொரு சிறந்த நன்மையும் உண்டாகிறது. ஒரு குறிப்பிட்ட பொருளோடு மட்டும் உவமை தொடர்புபெறாமல் யாண்டும் பொருந்தத் தக்க வகையில் அமைகிறது. மேலே குறிப்பிட்ட குறள்களுள் முறையே எடுத்துக்கொண்ட பொருளாகிய வலியறிதல், ஊக்கமுடைமை என்பவை அரசியற்கன்றி ஏனைய சூழ்நிலைக்கும் பொருந்துவனவாக அமைகின்றன. இதனைப் பிறிதுமொழிதல் அணி என்று அணி நூலார் பாராட்டுவர்.

இவர் சொற்றிறனின் மற்றொரு சிறப்பியல்பு. உவமையும் பொருளும் கூறி இடையே உவம உருபு கொடாதிருத்தலாகும்.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு – 398


வெள்ளத் தனையது மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு – 595

என்ற குறட்பாக்களில், அதுபோல் என்ற உவம உருபு கொடாமல் கூறியிருப்பது அவர் சொற்சுருக்கத் திறனையே காட்டுகிறது. இதனை அணி நூலார் எடுத்துக்கர்ட்டு உவமை அணி என்று சிறப்பிப்பர்.

மற்றொரு வகையாகவும் சுருங்கச் சொல்லும் திறன் இவர்பால் காணப்படுகிறது. உவமையைவிட உருவகங்களாகக் கூறுவதில் சுருங்கச் சொல்லல் என்ற அழகு அமைகிறது. அவ்வாறு உருவகித்துக் கூறுங்காலும் முழுமையும் உருவகமாகக் கூறாமல் ஓரளவு உருவகமாகக் கூறிவிட்டு எஞ்சியவற்றை விடுவதில் சொற்சுருக்கம் காண்கின்றார்.

உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
தெழுவாரை யெல்லாம் பொறுத்து – 1032

என்ற குறளில், உழுவார் தேரின் அச்சாணி போன்றவர்கள் என்று உருவகித்தாரேயன்றி ஏனையவற்றையெல்லாம் உருவகிக்கவில்லை. இஃது அவர் சொற்றிறனின் சிறப்பாகும். இதனை அவயவ உருவகம் என்று அணி நூலார் கூறுவர்.

இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும் – 1068

என்ற குறளும், இவ்வாறு அமைந்ததேயாகும். 'வறுமையாகிய கடலைக் கடக்க இரவு என்னும் பாதுகாப்பற்ற தோணி கரத்தல் என்னும் வன்னிலத்தின் தாக்குமாயிற் பிளந்துபோம்' என்பது இக்குறளின் கருத்தாகும். வறுமையைக் கடலுக்கு உருவகிக்காமல் ஏனையவற்றைத் தக்க உருவங்கள் கொண்டு விளக்கியிருப்பது அவர் சொற்றிறனின் சிறப்பியல்பாகும்.

சுருங்கச் சொல்லுதல் என்ற அணிமட்டுமன்றி. விளங்க வைத்தல் என்ற சிறப்பும் இவர் குறளுக்குள்ள தனிச் சிறப்பாகும். சொல்லைப் பயனபடுத்தும் பொழுது அக்கருத்தை விளக்க அதன் இனமான சொல்லை உடன் பயன்படுத்தும் சிறப்பு அவர் பாக்களில் மிளிர்கின்றது. கல்வி என்றால் அதனோடு இனமான கல்லாமை என்பதையும் உடன் வைப்பது அவர்தம் மரபாக விளங்குகிறது. நட்பு என்றால் உடனே அதற்கு இனமாகத் தீநட்பையும் விளக்கிக் காட்டுதல் அவர் சிறப்பாகும். பெரியாரைத் துணைக் கோடல் என்றால் அதனோடு இணையாகச் சிற்றினஞ் சேராமை என்பதையும் உடன் கூறி விளக்குகிறார்.

அதைப் போலவே தனிக் குறளிலும், ஒரு கருத்தைக் கூறினால் அதற்கு இனமான கருத்தையும் சொல்லையும் உடன் வைத்துச் சுருங்கக் கூறி விளங்க வைக்கும் இயல்பைக் காண்கிறோம்.

இனிய வுளவாக வின்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று – 100

என்ற குறளில் இனிய என்பதற்கேற்ப இன்னாத என்ற சொல்லையும், கனி என்பதற்கு இனமாகக் காய் என்ற சொல்லையும் அமைத்துத் தொடர்புடன் முரணும்படக் கூறிக் கருத்தை விளங்கவைக்கக் காண்கிறோம்.

அறத்திற்கே யன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை – 76

என்ற குறளிலும், அறமும் மறமும் ஒருங்கு அமைக்கக் காண்கிறோம்.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார் – 104

என்பதில், தினையையும் பனையையும் ஒரே இடத்தில் காட்டி அமைக்கின்றார்.

இவ்வாறு சுருங்கச்சொல்லி விளங்கவைத்தல் என்ற பண்பு அடிப்படையாக அமைந்திருப்பதால்தான். திருக்குறள் சொற்றிறனில் மிக்கது என்று கூறலாம். ஒலியிலும், எடுத்தாளும் சொல்லிலும், இசைந்து அசைத்துச் சீராக அமைக்கும் சீரிலும், சீர்பெற்று நடக்கும் அடிகளிலும், அழகுபட அமைக்கும் அணியிலும் சுருக்கத்தை ஆண்டு, பொருள் நிறைவை உணர்த்தும் பெருமை திருக்குறள் ஒன்றிற்கே உண்டு என்று கூறலாம். 'சில சொல்லல்' என்ற அழகு அவர் சொற்றிறன் என்பதும், அதுவே அவர் கூறும் பொருட்டிறனை இலக்கிய வளமுடையதாகச் செய்கிறது என்பதும் தெளிவாகின்றன.