உள்ளடக்கத்துக்குச் செல்

அணியும் மணியும்/அன்புடை நெஞ்சம்

விக்கிமூலம் இலிருந்து
5. அன்புடை நெஞ்சம்

வெறும் வெளித்தோற்றங்களை வருணிக்கும் கவிஞனைவிட மனவியல்பை விவரிக்கும் கவிஞனே சிறந்தவனாகப் போற்றப்படுவான். நெஞ்சின் இயல்பையும், அதில் தோன்றும் பலவித உணர்வுகைளையும், அதனால் வெளிப்படும் எண்ணங்களையும் பாங்காகக் காட்டுவதே சங்கவிலக்கியப் பாடல்களின் அடிப்படையெனலாம். ஒருவன் ஒருத்தியரிடைத் தோன்றும் காதலையும், அக்காதல் வளரும் அன்புடை நெஞ்சங்களையும், அக்காதலால் மகிழும் மகிழ்ச்சியையும், பிரிவால் நேரும் துன்பத்தையும் காட்டுவதில், இப்பாடல்கள் தலைசிறந்து விளங்குகின்றன. உள்ளத்தெழும் அகவுணர்வுகளைப் பாடுவதால், இப் பாடல்களுக்கு அகப்பாடல்கள் எனப் பெயர் வழங்குவர். அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை முதலியன இவ்வகையைச்சாரும். அன்புடை நெஞ்சத்தை விளக்கும் காட்சிகள் பலவற்றை இப்பாடல்களால் நாம் அறிகிறோம்.

தலைவன் ஒருவனும் தலைவியொருத்தியும் சந்தித்து உள்ளம் ஒன்றுபட்டு உவகை கொள்ளுகின்றனர். அவ்வவ்வகையில் அவர்கள் பாடி மகிழ்வது அந்த உள்ளம் ஒன்றுபட்ட நிலையைத்தான் என்பதைக் குறுந்தொகைப் பாட்டு ஒன்று விளக்குகிறது. “உன்னுடைய தாயார் எவரோ, என்னுடைய தாயார் எவரோ, அவர்களுக்குள் இதற்குமுன் எந்த உறவும் ஏற்பட்டதில்லை; அதைப்போலவே உன்னுடைய தந்தைக்கும் என்னுடைய தந்தைக்கும் இதற்குமுன் எந்த உறவும் இருந்ததில்லை. நீயும் நானும் முன் உறவு கொண்டவர்கள் அல்லர். எனினும் நம்முடைய உள்ளம் அன்பால் ஒன்றுபட்டுப் பிணைக்கப்பட்டுள்ளன. வானத்திலிருந்து வையகத்தில் விழும் மழைத்துளிகள் செம்மண்ணில் கலந்து செங்குழம்பாகிவிட்டால், அவற்றைத் தனித்துப் பிரித்துக் காண முடியாதவாறு போல இனி ஒன்றுபட்ட நம் உள்ளத்தைப் பிரிக்கமுடியாது; அன்புடை நெஞ்சம் தாமாகக் கலந்துவிட்டன” என்று கூறுகிறான்.

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுத்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சந் தாங் கலந்தனவே

- குறுந்தொகை - 40

என்று தம் அன்புடை நெஞ்சம் ஒன்றுபட்ட செய்தியைப் பண்பு குன்றாமல் பாடுகிறான்.

மற்றொரு குறுந்தொகைப் பாடல், தலைவன் தலைவியர் வாழ்வில் காணும் அன்புடை நெஞ்சத்தைக் காட்டுவதோடு அதனை விளக்க விலங்குகளின் வாழ்வில் காணும் அன்புடை நெஞ்சத்தையும் உடன் சுட்டுகிறது. ஒரு தோழி தலைவன் வரும் வழியருமையை அவனுக்குக் கூறி அக்கொடிய வழியில் அவன் வருவதால் தலைவி நெஞ்சம் துடிப்பாள் என்ற செய்தியை அவனுக்குத் தெரிவிக்கிறாள். அதை விளக்க, அவன் நாட்டில் உள்ள பெண் குரங்கின் அன்பு உள்ளத்தையும் அதன் செயலையும் சேர்த்துக் கூறுகிறாள்.

ஆண் குரங்கு இறந்துவிட்டது என்ற செய்தியைப் பெண்குரங்கு அறிகிறது. இனித் தனித்து வாழ்ந்து கைம்மை நோன்பு நோற்க விரும்பாத மந்தி தன் குட்டிகளைத் தன் சுற்றத்திடம் ஒப்படைத்துவிட்டுப் பெரிய மலையின் உச்சியில் ஏறிக் கீழே விழுந்து உயிர்விடுகிறது. இச்செய்தியைக் கூறி அத்தகைய பண்புமிகு அன்புடை நெஞ்சத்தையுடைய மந்தி வாழும் நாடனே! என்று அவனை விளித்துக் கூறுகிறாள்; அதனால் தலைவியும் அவன் நடு இரவில் வருவதை அஞ்சுகிறாள் என்று அவள் நடுங்கும் நெஞ்சத்தைக் காட்டுகிறாள். மக்களின் அன்புடை நெஞ்சத்தைக் காட்ட விலங்குகளின் அன்பான வாழ்வைப் புலவர்கள் காட்டுவதற்கு இப்பாடல் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றெனக்
கைம்மை யுய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி
ஓங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்
சாரல் நாட நடுநாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே

- குறுந்தொகை, 69

மந்தியின் அன்புடை நெஞ்சின் இயல்பைக் காட்டித் தலைவியின் நெஞ்சு அதைவிட நெகிழ்வும் பிரிவாற்றாமையும் உடையது என்று உணர்த்துகிறாள்.


அன்பால் பிணைக்கப்பட்ட நெஞ்சங்கள் நடத்தும் இல்லற வாழ்க்கை இன்பமும் நிறைவும் கொண்ட வாழ்வாகும் என்பதை இவ்வகப்பாடல்கள் உணர்த்துகின்றன.

திருமணமான பிறகு ஒரு தலைவனும் தலைவியும் வாழ்க்கை தொடங்குகின்றனர். அவள் உணவு இட அதனை உண்டு மகிழ அவன் விழைகிறான். அவளுக்கும் அவனுக்குத் தன் கையால் முதன்முதலில் உணவு பரிமாற வேண்டும் என்ற ஆவல் எழுகிறது. விரைவில் உணவு அட்டு அவனுக்கு இடவேண்டும் என்ற ஆர்வம் அவளை உந்துகிறது. புளிக்குழம்பு செய்யும் பொருட்டு அக் குழம்பினைக் கூட்டி வைக்கத் தன் கையால் துழாவி அதனை அமைக்கும் ஆர்வத்தால், அப்படியே தான் அணிந்துகொண்டிருந்த புடவையில் கையைக் கழுவாமல் துடைத்துக்கொண்டு, அந்தக் குழம்பைத் தாளிதம் செய்து, அக்குய்ப்புகை அவள் கண்களில் படியத் தானே துழாவி அட்ட புளிக் குழம்புச் சோற்றினை அவனுக்கு இட்டு, ஆர்வமும் அன்பும் பெருக அவன் முன்னால் நின்று அவன் பாராட்டுதலை எதிர்பார்க்கிறாள். அவள் குறிக்கோளெல்லாம் அவ்வுணவை உண்ணும் அவன் வாயிலிருந்து ‘இனிது’ என்ற சொல்லைக் கேட்பதாக இருக்கிறது. அவள் துழந்து அட்ட உணவு இனிதாக இருக்கிறது என்று அவன் கூறும் சொற்கள் அவள் உள்ளத்து மகிழ்ச்சியை மிகுதிப்படுத்துகின்றன. புதுமண வாழ்வால் பொலிவு பெற்ற அவள் அழகிய முகம் நுட்பமாக அச் சிறு மகிழ்ச்சியை மிகுதிப்படுத்துகின்றது. அவ்வன்புடை நெஞ்சங்கள் நடத்தும் அகவாழ்வு இச் சிறுநிகழ்ச்சிகளால் பொலிவு பெறுகின்றது.

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை உண்கண் குய்ப்புகை கமழத்
தான்துழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒள்நுதல் முகனே

- குறுந்தொகை, 167

மற்றொரு தலைவன் தனக்கும் அவளுக்கும் நேர்ந்த ஊடல் தீர்வதற்கு விருந்தினர் வருகையை எதிர்பார்க்கிறான். விருந்தால் அவள் உவந்து முறுவல் கொள்ளும் முகத்தைக் காணும் காட்சியை எதிர்நோக்கும் ஆவலில் அவர்கள் அன்புடை நெஞ்சம் சித்திரிக்கப்படுகின்றன. விருந்து வந்தால், அவள் அவனோடு அவர்களை வரவேற்க முறுவல் கொள்வாள். அதனால் அவள் மகிழும் முகத்தைப் பார்க்கமுடியுமே என்று அவாவுகிறது அவன் நெஞ்சு.

கணவனோடு பிணக்குக் கொண்ட காரணத்தால், கதவைத் தாளிட்டுக்கொண்டு தனியே சமையலறையில் தன் கடமையில் கண்ணுங் கருத்தும் செலுத்தியவளாய், அவனிடம் பேச மனமில்லாதவளாய் விருவிருப்பாகத் தன் கடமைகளைச் செய்துகொண்டிருக்கிறாள் ஒரு தலைவி. அவள் வாளைமீனைக் கழுவி அறுத்து வகைப்படுத்திச் சமையல் செய்யத் தொடங்குகிறாள். கண்களில் புகைபடிய, நெற்றியில் வியர்வை துளிர்க்க, அவற்றைத் தன் புடைவையில் துடைத்துக் கொண்டு, அவனிடம் பேசாமல் சமையலறையில் தன் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாள். அவள் முகத்தில் புன்னகை தவழுமா என்று எதிர்பார்த்து நிற்கிறான். புன்னகை தவழவில்லையென்றாலும், புன்முறுவலாவது அவள் முகத்தில் மெல்லத் தோன்றக்கூடாதா என்று ஏங்குகிறது அவன் நெஞ்சம். “முன்பெல்லாம் வரும் விருந்தினர் இப்பொழுது வரக்கூடாதா? அவர்கள் பொருட்டாவது அவள் முகம் மலருமே அம் மலர்ந்த முகத்தை அப்பொழுதாவது பார்க்க முடியுமே! எங்கள் ஊடலும் மெல்லத் தணியுமே!” என்று அவன் அன்புடை நெஞ்சம் எதிர்பார்க்கும் காட்சியை நற்றிணைப் பாடல் ஒன்று காட்டுகிறது.

தடமருப்பு எருமை மடநடைக் குழவி
தூண் தொறும் யாத்த காண்தகு நல்லில்
கொடுங்குழை பெய்த செழுஞ்செய் பேதை
சிறுதாழ் செறித்த மெல்விரல் சேப்ப
வாளை ஈர்ந்தடி வல்லிதின் வகைஇப்
புகையுண்டு அமர்த்த கண்ணள் தகைபெறப்
பிறைநுதல் பொறித்த சிறுநுண் பல்வியர்
அந்துகில் தலையின் துடையினள் நப்புலந்து
அட்டி லோளே அம்மா அரிவை
எமக்கே வருகதில் விருந்தே சிவப்பான்று
சிறியமுள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம் காண் கம்மே - நற்.120

முள் போன்ற சிறு எயிறு தோன்ற அவள் முகத்தில் புன்முறுவல் தோன்ற வேண்டும் என்று அத்தலைவன் எதிர்பார்க்கின்றான். துகில்தலைப்பால் நெற்றியில் தோன்றும் சிறு வியர்வைகளைத் துடைத்துக் கொண்டு, அந்த அட்டில் இடத்தைவிட்டு அகலாமல் அவனோடு புலந்து வெறுத்து இருக்கிறாள். அத்தகைய நிலையில் அவள் மனம் சிறிது வேறு வகையாகத் திரும்பினால் நலமாக இருக்குமேயென்று கருதுகிறான். அந்த வீடு எருமையும் அதன் கன்றும் தூண்தோறும் கட்டப்பட்டு அழகாக விளங்குகிறது. அந்த இல்லில் வாளை மீனை வகைப்படுத்தி அட்டில் தொழிலில் ஈடுபடும் தலைவியின் நிலை இவ்வாறு வருணிக்கப் பட்டிருக்கிறது. அவள் அன்புடை நெஞ்சத்தில் ஏற்பட்டிருக்கும் சிறு வெறுப்பை அவன் உள்ளம் மாற்ற அவாவும் நிலைமையை இப்பாடல் காட்டுகிறது.

ஒருவரை ஒருவர் பிரிவதால் ஏற்படும் ஆற்றாமையால் அல்லலுறும் நெஞ்சின் துயரைச் சங்கத்துச் சான்றோர் காட்டுவதில் வல்லவராக விளங்கினர் என்பதைப் பாலைத் திணையில் வரும் பாடல்கள் அறிவுறுத்தும். தலைவன் பொருள் காரணமாகவோ போர்வினை காரணமாகவோ பிரியும் பிரிவுக்குப் பாலை என்றும், அவ் வொழுகலாற்றைப் பாலைத் திணை என்றும் கூறுவர். இப் பாலைத்திணைப் பாடல்கள் அன்புடை நெஞ்சங்கள் பிரிவால் உறும் அல்லலை அழகுபடக் கூறுகின்றன.

செய்வினை முடிக்கச் சேண் தூரஞ் சென்றுவிட்ட தலைவன் காதல்நெஞ்சு ஒருபுறம், கடமை உணர்வு ஒருபுறம் என இவ்விரு நிலைகளால் அலைக்கப்பட்டுக் கரைகாண முடியாமல் திகைக்கின்றான். நெஞ்சு அவளிடத்தில் கொண்ட விழைவால், விரைவில் வீடுதிரும்ப வேண்டும் என்ற வேட்கையை மிகுதிப்படுத்துகின்றது. அவனுடைய அறிவு கடமை பெரிது என்றும், அதனால் செய்வினை முடித்துவிட்டு வீடு திரும்புதலே சிறப்பு என்றும் அறிவுறுத்துகிறது. அறிவுக்கும் உணர்வுக்கும் இடையே நடக்கும் மனப்போராட்டத்தின் நடுவில் உடம்பு அகப்பட்டு மெலிந்துவிடுகின்றது. இந்நிலை வலிய மருப்புடைக்களிறு இரண்டு இருபுறம் தனித் தனியே நின்று தேய்ந்த பழங்கயிறு ஒன்றன் இருபுறத்தையும் பற்றி இழுக்க, அது மெலிந்து அறுந்துபோகும் நிலைக்கு உவமிக்கப்பட்டுள்ளது. களிறுகளால் ஈர்க்கப்படும் தேய்புரிப் பழங்கயிற்றின் நிலையைப் போல் இருவேறு உணர்வுகளால் அலைக்கப் பெற்று மெலிந்த தலைவன் உடல் நலிந்து விடுகிறதென்று கூறப்படுகிறது. தலைவன் நெஞ்சில் எழும் அலைகளின் அலைப்பால் மெலியும் அவன் உடல், அறுந்து விழும் தேய்ந்த பழங்கயிற்றுக்கு உவமைப் படுத்துகின்றார்:

புழந்தாழ்பு இருண்ட கூந்தற் போதின்
நிறம்பெறும் ஈரிதழ் பொலிந்த உண்கண்
உள்ளம் பிணிக்கொண்டோள்வயின் நெஞ்சம்
செல்லல் தீர்க்கம் செல்வாம் என்னும்
செய்வினை முடியாதுஎவ்வம் செய்தல்
எய்யா மையோடு இளிவுதலைத் தருமென
உறுதி தூக்கத் தூங்கி அறிவே
சிறிதுநனி விரையல் என்னும் ஆயிடை
ஒளிறேந்து மறுப்பிற் களிறுமாறு பற்றிய
தேய்புரிப் பழங்கயிறு போல
வீவது கொல்என் வருந்திய உடம்பே

—நற்றிணை, 284

என்று மனப் போராட்டங்களைத் தக்க உவமை கொண்டு விளக்கும் நிலையைப் பார்க்கிறோம். அன்புடை நெஞ்சம் தாங்கும் அல்லலை அவ்வுவமை அழகு பட உணர்த்துகிறது.

தலைவியைப் பிரிந்த தலைவனின் தனிமை நெஞ்சம் மேலே விவரிக்கப்பட்டவாறு போலவே மற்றொரு புலவர் தலைவனைப்பிரிந்து தனிமையால் வாடும் தலைவியின் நெஞ்சத்தின் தன்மையைப் புலப்படுத்துகின்றார், தலைவன் உடனிருந்தபோது உவகை கொண்டு வளமான வாழ்வைப் பெற்ற தலைவி, அவன் அவளைப் பிரிந்துவிட்ட காரணத்தால் தனிமையுறுகிறாள். அவள் நெஞ்சு அவன்மாட்டுச் சென்றுவிட்ட காரணத்தால் உணர்வு குன்றி உடம்பை மட்டும் வீணுக்காகப் பேணுவது போன்ற உணர்வால், வாழ்வில் வெறுப்பும் சலிப்பும் கொள்கிறாள். அவள் அடைந்த தனிமை நிலைமைக்கு வேறோர் தனிமை நிலைமை உவமையாகக் கூறப்படுகின்றது. வெஞ்சின வேந்தனின் வெம்பகையால் அலைப்புண்ணல் அஞ்சி, மக்கள் தாம் வாழும் பேரூரை விட்டு அகன்றுவிட, அதனைக் காக்கும் தனி மகன் ஒருவன் தனிமைத் துயராலும் விருப்பற்ற உணர்வாலும் வாழ்க்கையை வெறுத்து, வாழ்வைச் சுமையாகக் கருதி நாட்களைக் கடத்தும் நிலையைப் போன்று இவள் வாழ்வு அமைந்திருப்பதாகக் கூறுகிறாள் பாழ் காத்திருக்கும் தனிமகன் உடலை விருப்பின்றிப் பேணுமாறு போல் இவ்வுடம்பைக் காக்க வேண்டிருப்பதாகத் தலைவி கருதுகிறாள்:

நெஞ்சம் அவர்வயின் சென்றென ஈண்டொழிந்து
உண்டல் அளித்துஎன் உடம்பே விறற்போர்
வெஞ்சின வேந்தன் பகையலைக் கலங்கி
வாழ்வோர் போகிய பேரூர்ப்
பாழ்காத் திருந்த தனிமகன் போன்றே

- நற்றிணை, 153

வாழ்வோர் போய்விட்ட காரணத்தால் வெறுமையுற்ற பேரூராகிய பாழிடத்தைக் காக்கும் தனிமகனைப் போன்று, நெஞ்சு நீங்கிவிட்ட காரணத்தால் தனிமையும் உடம்பு உணர்வற்றுக் கிடக்கிறது என்று உணர்த்துகிறாள். இவ்வாறு பிரிவால் அன்புடை நெஞ்சங்கள் படும் அல்லலைப் பாலைத்திணைப் பாடல்கள் உணர்த்தக் காண்கின்றோம்.

முல்லைத் திணைப் பாடல் ஒன்று, இல்லிருந்து ஆற்றித் தலைவன் வருகையை எதிர்பார்க்கும் தலைவியின் ஆவலுள்ளத்தை அணிபட எடுத்துக் காட்டுகின்றது. கார்காலம் வருவதற்குள் செய்வினை முடித்து வீடுதிரும்பி வருவதாகச் சொன்ன தலைவன் குறித்த காலத்தில் வீடு திரும்பவில்லை. காரோ வந்தது; அவன் தேர்மட்டும் வரவில்லை. அந்த நிலையில் கார்காலத்து முல்லை மலர்கள் பூக்கத் தொடங்கிவிட்டன. முல்லை முகைகளைப் பற்களாகக் கொண்டு கார்காலம் அவள் தனிமையைப் பார்த்துச் சிரிப்பது போல் இருக்கிறது என்று தலைவி கூறுவதாக ஆசிரியர் அமைக்கிறார். வினைமுடித்து வரவேண்டிய தலைவன் வராததால் உலகமே அவளைப் பார்த்துச் சிரிப்பதுபோல இருக்கிறது. இளமை பாராமல் வளம் விரும்பிப் பிரிந்து சென்ற தலைவர் எவணரோ என ஏங்கும் தலைவியின் நெஞ்சு, முல்லை மலரைப் பார்த்து மகிழாமல், அவை கார்காலம் வந்துவிட்ட செய்தியை அறிவிப்பனவாக உணர்கிறது. முல்லை மலர்ந்தும் அவன் ஒல்லையில் வரவில்லையே என்று அவள் ஏங்குகிறாள்.

இளமை பாரார் வளநசைஇச் சென்றோர்
இவனும் வாரார் எவணரோ வெனப்
பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத்
தொகுமுகை யிலங்கெயி றாக
நகுமே தோழி நறுந்தண் காரே

- குறந்தொகை 126

என்று அவள் அன்புடை நெஞ்சம் அவன் வராமையால் அடைந்த கவலையைக் காட்டுகிறது. அந்தக் கவலையை இயற்கை நிகழ்ச்சியான மலரின் மலர்ச்சியோடு தொடர்பு படுத்திச் சொல்வது அணிநயம்பட அமைந்துள்ளது. “முல்லையின் முகை என்னைப் பார்த்து நகைக்கின்றதே” என்று தலைவி சொல்லும் இக்கூற்றில் அவனுக்காக ஏங்கும் அவளுடைய அன்புடை நெஞ்சம் வெளிப்படுகின்றது.

இல்லிருந்து நல்லறம் ஒம்பும் இல்லாளின் இனிய முகத்தைக் காண ஆவலுறும் தலைவனின் அன்புடைய நெஞ்சை நற்றிணைப் பாடல் ஒன்று காட்டுகிறது. அவர்கள் அன்பு அவர்கள்பால் மட்டும் பரவாமல் பெற்ற மகனிடத்தும் உற்ற உறவினரிடத்தும் பரவுகிறது. இச் செய்தியை இப்பாடல் நன்கு காட்டுகிறது. கார்காலம் வந்துவிட்டதை உணர்ந்து தலைவன் குறித்த காலத்தில் வீடுதிரும்ப விழைகிறான். அதனால் தேரினை விரைவில் செலுத்துமாறு பாகனை ஏவுகிறான். வீட்டில் விடியற்காலையில் தன் மனைவி குழந்தையை எழுப்பி இன்னுரையாடும் இனிய சொற்களைக் கேட்க அவன் அவாவுகிறான். தலைவி விருந்து விரும்புவள் ஆதலின், அவன் விரைவிற் சென்று, விருந்தினரை ஏற்ற இல்லறம் சிறப்புற நடைபெறச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறான். அதனால் அவன் மனம் தலைவியை மட்டும் நாடாமல் மகனிடத்தும் இருவரும் இருந்து வரவேற்கும் விருந்தினரிடத்தும் பரவுகிறது என்று அறிய முடிகிறது.

செல்க பாக! நின் செய்வினை நெடுந்தேர்;
விருந்து விருப்புறுஉம் பெருந் தோள் குறுமகள்
........................................................
பூங்கண் புதல்வன் தூங்குவயின் ஒல்கி
வந்தீக எந்தை என்னும்
அந்தீம் கிளவி கேட்க நாமே
- நற்றிணை, 221


குழந்தையையும் தாயையும் ஒருசேரக் காண வேண்டும் என்ற அவன் அன்பு நெஞ்சம் அவாவுகின்றது. இல்லறத்தின் மாட்சியை நன்குணர்ந்த தலைவன் விருந்தினரை வரவேற்பதில் தலைவி கொண்டுள்ள விருப்பைக் குறிப்பிடுகின்றான். தான் இல்லாமல் அவள் தனியாக விருந்தினரைப் போற்ற முடியாதே என்பதால், விரைவில் செல்லவேண்டும் என்று அவன் விரும்புகிறான். பண்பட்ட அவன் உள்ளம் தன் அன்பை எதிர்பார்க்கும் மனைவியிடத்தும், இருவரும் வளர்க்கும் அன்புச் செல்வமாகிய குழந்தையிடத்தும், அவர்கள் இருந்து போற்றும் விருந்தினரிடத்தும் சுற்றி வளர்ந்துள்ளமையை இப்பாட்டுக் காட்டுகின்றது.

பலநாள் பிரிந்து இருந்த தலைவிக்குத் தலைவனின் வருகையில் ஒரு புதுமை காண்பது இயல்பு. அதனால் விருந்து விருப்புறும் தலைவி என்பதற்குத் தலைவனின் புதிய வருகையை எதிர்பார்க்கும் தலைவி என்று கொள்ளினும் அமையும் ‘தலைவியின் ஆவல் நிறைந்த நெஞ்சு மகிழ, நீ விரைவில் தேரைச் செலுத்து’ என்று தலைவன் கூறுவதாகவும் கொள்ளலாம். தலைவியின் ஆவல் நெஞ்சையும் மகனோடு மகிழ்ந்து பேசும் அன்புக் காட்சியைக் காண அவாவும் தலைவனின் நெஞ்சையும் இப் பாடல் வெளிப்படுத்துகிறது என்றும் கூறலாம்.

அன்புடைய நெஞ்சம் என்பது தலைவன் தலைவியரிடை மட்டும் நிலவுவதொன்றன்று என்பதையும், ஏனையவரிடத்தும் அவ்வன்பு நெஞ்சம், உடனிருப்பதால் மகிழ்ச்சியையும் பிரிவதால் துயரத்தையும் தரவல்லது என்பதையும் சங்கப் பாடல்களே அறிவுறுத்தும். மகளைப் பெற்று வளர்த்த தாய், தன் மகள் தன் ஆருயிர்த் தலைவனோடு அருஞ்சுர வழியில் உடன்போக, அதனால் அவளை நாடித் தேடி அலமந்து மணஞ்சோர்ந்து கூறும் கூற்றில், பெற்ற மனத்தின் அன்புள்ளம் வெளிப்படுகிறது.

தலைவி ஒருத்தி தான் விரும்பும் தலைவனோடு வேற்றூர் சென்றுவிடுகிறாள். வீட்டில் அவளை வளர்த்த தாய் அவள் சென்ற இடமெல்லாம் தேடி, வருவாரையெல்லாம் அவர்கள் சென்றவிடம் தெரியுமா என்று வினவுகின்றாள். அவர்கள், பெண்கள் தம் தலைவரோடு உடன்போவது இல்லறத்தின் நல்லறம்தான் என்றும், யாழிலே பிறக்கும் இசை யாழுக்குரிய தாகாமல் கேட்பவர்க்கே உரியது போலவும், கடலிலே பிறக்கும் முத்து அணிபவர்க்கே உரியது போலவும், மலையிலே பிறக்கும் சந்தனம் துய்ப்பவர்க்குப் பயன்படுவது போலவும் பிறந்த அகத்தைவிட்டுத் தலைவன் அகம் செல்வதுதான் பெண்களின் இயல்பு என்றும், இன்ன பிறகூறி அவலத்தை ஆற்றியிருக்குமாறு வற்புறுத்துகின்றனர். அந்த அவலத்தை ஆற்றுதல் ஒல்லாது என்று அவள் வெளிப்படுத்தும் கருத்தில் அன்பு நெஞ்சத்தின் ஆழத்தைக் காணமுடிகிறது.

“எனக்கு இருப்பது ஒரே மகள். அவளும் நேற்று வீரமிக்க தலைவனோடும் பெருமலையில் அரிய வழி கடந்துசென்று விட்டாள். இனி நீங்கள், ‘அவலத்தைத் தாங்கு’ என எளிதில் கூறிவிடுகின்றீர்கள். அஃது எவ்வாறு ஒல்லும்? அறிவால் ஆராய்ந்து எளிது என்று கூறுவதை யெல்லாம் உணர்வால் எளிதில் ஏற்றுக் கெள்ள இயல்வதில்லை. என் குறுமகள் விளையாடிக் கொண்டிருந்த நொச்சி மரத்தையும் அதனருகில் உள்ள வீட்டுத் திண்ணையையும் கண்டால், அவள் இல்லாத காரணத்தால் வெறுமையான காட்சி ஈந்து அவலத்தைத் தருகிறது; என் உள்ளம் வேகிறது. அவளின்றித் தனித்திருக்கும் அந்த இடங்களைக் கண்டு அத் தனிமைக் காட்சியைத் தாங்க என் உள்ளத்திற்கு ஆற்றலில்லை. அவள் பயின்ற இடமெல்லாம் இப்பொழுது வெறுமையுற் றிருக்கின்றது” என்று கூறுகிறாள்.

ஒருமகள் உடையேன் மன்னே அவளும்
செருமிகு மொய்ம்பிற் கூர்வேற் காளையொடு
பெருமலை அருஞ்சுரம் நெருநற் சென்றனள்
இனியே, தாங்குநின் அவலம் என்றிர் அதுமற்று
யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடை யீரே
உள்ளின் உள்ளம் வேமே உண்கண்
மணிவாழ் பாவை நடைகற் றன்னஎன்
அணியியல் குறுமகள் ஆடிய
மணியேர் நொச்சியுந் தெற்றியும் கண்டே

- நற்றிணை, 184

“கண்ணிலுள்ள மணிப்பாவை வெளியே வந்து நடைகற்பது போல அழகாக நடந்து விளையாடிய அச் சிறுமகள் இப்பொழுது அகன்றுவிட்டதால் கண்களில் ஒளியிழந்து நிற்கிறேன்” என்ற கருத்தை, ‘மணிவாழ் பாவை நடை கற்றன்ன என் அணியியல் குறுமகள் ஆடிய’ என்ற தொடரில் அமைத்துள்ளமையை அறிகின்றோம். “அக் குறுமகள் இப்பொழுது பெருமகளாகிவிட்டது தான் என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை. அத்தகைய அறிவு எங்ஙனம் வந்ததோ” என்றெல்லாம் எண்ணி அலைந்து வருந்தும் அன்னையின் அன்புடைய நெஞ்சம் அவளைக் ‘குறுமகள்’ என்ற தொடரால் குறிக்கின்றது.

இவ்வாறு அன்புடை நெஞ்சத்தின் பண்புமிக்க எண்ணங்களையும் அவற்றால் தோன்றும் செயல்களையும் சங்கப் பாடல்கள் அறிவுறுத்தும் அழகை நாம் அப்பாடல்கள் கொண்டு அறியமுடிகிறது. அவை உணர்வின் ஓவியங்களாக அமைந்து, நெஞ்சில் எழும் அலையோசைகளாக நம் செவியில்படுகின்றன.