உள்ளடக்கத்துக்குச் செல்

அணியும் மணியும்/கவியும் கவிஞனும்

விக்கிமூலம் இலிருந்து
7. கவியும் கவிஞனும்

மிழுக்கு அணிசெய்யும் காவியங்கள் ஐந்தனை மட்டும் ஐம்பெருங் காவியங்கள் எனச் சிறப்பித்துக் கூறுவர். அவற்றுள் சிந்தாமணியும் ஒன்றாகும். இது காவிய நலன்கள் கவின் செய்யக் காதலும் வீரமும் மிடைந்து வர ஒன்பான் சுவையும் ஒன்றி நிலைக்கக் கற்போரின் கருத்தையும் உள்ளத்தையும் கவரும் கற்பனைன கலந்த இலக்கியமெனினும், மக்கட்கு அறிவு புகட்டும் திறம் இந்நூலுள் ஆங்காங்கு அழகுபட அமைந்துள்ளது.

கவியை இயற்றும் கவிஞன் சுவையும் அணியும் அமையக் காவியம் இயற்றினாலும், உலகுக்கு அறிவு புகட்டவேண்டும் என்ற உயர்ந்த நோக்கமும் அவன் பால் அமைந்து கிடக்கிறது. அவன் வெறுஞ் செய்யுள் மட்டும் இயற்றும் புலவனாக இல்லாமல் அறிவுகொளுத்தும் ஆசானாகவும் அமைகிறான். அவன் அறிவுரை சொல்லும்பொழுது அவன் சொந்த இயல்பு வெளிப்பட்டு அவனுடைய ஆழ்ந்த நம்பிக்கைகளும் கொள்கைகளும் வெளிப்படுகின்றன.

கவிஞன் தன், கொள்கைகளையும், உணர்த்த விரும்பும் நீதியையும் நேரே எடுத்துச் சொன்னால் அவற்றை அடுத்துக் கேட்பார் யாரும் இரார். அதனால் அருந்தக் கொடுக்கும் மருந்தை இனிப்பில் கலந்து இன்சுவை ஊட்டிக் கொடுக்கும் மருத்துவனைப் போலக் கசக்கும். உண்மைகளை இனிக்கும் காவியச் சுவையில் இசைத்து, மனத்தில் நிலைபெறுமாறு செய்து, மக்கள் வாழ்க்கையை அவன்போக்கில் திருப்ப முயல்கிறான் என்று கூறலாம். இதை நோக்க ஆசிரியன் தன்னை ஆசானாக மட்டும் கருதிக் கொள்ளாமல் உலகத்தின் துன்பத்தையும் மனிதரின் ஒழுக்கக் கேட்டையும் திருத்தி அமைக்கும் சீர்திருத்தவாதியாகவும் மதித்துக் கொள்கிறான். வாழ்வில் ஏற்படும் துன்பத்தையும் இன்பத்தையும் நன்மையையும் தீமையையும் அறத்தையும் மறத்தையும் ஆராய்ந்து எண்ணிப் பார்த்து, அவற்றைப் போக்கத் திண்ணிய கருத்துகளைச் சொல்வதை அவன் கடமையாகவும் கொள்கிறான். உலகமும், வாழ்க்கையைப் பற்றி அக்கவிஞன் கருதும் கருத்து யாது என எதிர்நோக்கிக் கவியின் வாயில் வரும் உண்மைகளை மருத்துவனின் வாயில் வரும் வாக்கைப் போலக் கொள்கின்றது. ஒரு சிலர் அவன் கொள்கைகளையும் கருத்துகளையும் மறுத்து அவற்றில் குறையும் காண்கின்றனர்.

இந்த வகையில், சிந்தாமணியின் ஆசிரியராகிய திருத்தக்க தேவரும் தாம் எடுத்துக்கொண்ட நூலாகிய சிந்தாமணியின் கதையையும் அதன் நிகழ்ச்சிகளையும் பயன்படுத்தித் தம் வாழ்வில் கொண்டுள்ள கொள்களைகளைத் தக்க சூழ்நிலைகளில் புகுத்திப் பிறர் அவற்றைச் செவிமடுத்து ஏற்றுக்கொள்ளுமாறு செய்துவிடுகிறார். மற்றைய கவிஞர்களைவிட அவரிடம் இப் பண்பு மிகுதியாகக் காணப்படுகிறது.

அவர் எடுத்துக்கொண்ட கதையின் உட்கோளை ஆராய்ந்தால், வஞ்சனை செய்பவர் இறுதியில் வாழ்வு இழப்பர் என்பதாக அமைகிறது. நட்புக்குக் கேடு சூழ்பவர் நன்றி கொன்ற கொடுஞ் செயலுக்கு ஆளாகி அழிவையே பெறுவர் என்பது இக்கதையின் உட்கோளாகக் கிடக்கிறது.

மன்னனாகிய சச்சந்தனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றிச் சூழ்ச்சியால் சிறப்புற்ற அவனுடைய அமைச்சனாகிய கட்டியங்காரனின் வீழ்ச்சியைக் காட்டும் பொருட்டே சீவகனின் பிறப்பு வரலாறு எழுகிறது. சீவகன் வளர்ந்து தன் தந்தையைக் கொன்ற கயவனைப் பழிதீர்க்கும் செய்தி இறுதியில் கூறப்படுகிறது. கதையின் நீதியும் வஞ்சனை செய்வார் வாழ்விழப்பர் என்பது ஆகும். இக்கொள்கையில் இவருக்கு அசையாத நம்பிக்கை இருக்கிறது என்பது இவர் எடுத்துக் கொண்ட கதையால் நன்கு விளங்குகிறது. ‘நட்பிடைக் குய்யம் வைத்தான் நரகம் நண்ணுவான்’ என்ற செய்தியை ஓர் அமைச்சன் நல்லுரையில் வைத்தும் கூறுகின்றார்.

காவியத் தலைவனாக எடுத்துக்கொண்ட சீவகனின் வாழ்க்கையில் ஒரு புதுமை காணப்படுகிறது. எண்மரைத் திருமணம் செய்துகொண்டு இன்பவாழ்வு வாழும் தலைவனாக அவன் காட்டப்படுகிறான். தமிழ்க் காவியங்களுள் எந்தத் தலைவனுக்கும் இத்தகைய இன்பவாழ்வு கூறப்படவில்லை. மேலும் இந்தக் கதையமைத்த ஆசிரியரோ வாழ்க்கையில் துறவியாக விளங்கியவர்; கூறும் செய்தியோ திருமணத்தைப் பற்றியதாக இருக்கிறது; அதிலும், எண்மரைத் திருமணஞ் செய்துகொண்ட வரலாற்றை எடுத்துச் சொல்லும் எழில்மிகு காவியமாக்கிக் காதற்சுவையும் கற்பனைத் திறனும் கலந்து அமைத்து இன்பச் சுவைக்கு எடுத்துக்காட்டாக இந்நூலை அமைத்துள்ளார். இவற்றோடு இக் கதையமைப்பை முடித்து விட்டு இருப்பாரானால் அங்கே அவர் கவிதைத் திறனை மட்டும் கண்டிருக்க முடியுமேயன்றிக் கவிஞனைக் கண்டிருக்க வியலாது.

சீவகன் எட்டுமணம் செய்துகொண்ட போதும் அவன் வாழ்வில் கொண்ட குறிக்கோள் துறவுநெறி என்று அமைக்கும் பொழுதுதான் கவிஞனின் கொள்கை வெளிப்படுகிறது. எட்டு மணஞ் செய்தும் அவ்வாழ்வை விட்டதில்தான் அவனுக்கு வீடுபேறு கிடைத்தது என்று காட்டியதில்தான் அவர் கொள்கை சிறக்கிறது.

இவ்வாறு கதையமைப்பில் தன் கொள்கையை நிலைநாட்டுவதோடன்றி, இடையிடையே வாய்க்கும் இடந்தோறும் தம் கொள்கைகளைப் புகுத்தி அவற்றிற்கு விளக்கந் தருவதைக் காண்கின்றோம். அங்கே கவிஞனின் கொள்கைகள் தலைசிறந்து வெளிப்பட்டு அவன் உள்ளப் பண்பையும் கொள்கைகளில் கொண்ட அசையாத நம்பிக்கையையும் காட்டுகின்றன. இதுவரையிலும் கதைச் சுவையில் திளைக்க வைக்கும் கவிஞன், தான் யார் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பகுதி இங்கேதான் அமைகிறது.

ஆசிரியர் தாம் எடுத்துக்கொண்ட கதையினை முடிக்கும்பொழுது வீட்டு நெறியின் சிறப்பைக் கூற ‘முத்தியலம்பகம்’ என்ற தனிப் பகுதியை அமைத்துத் தம் கொள்கைக்கு விளக்கம் தருகின்றார். இதனோடு மட்டும் நில்லாமல், இடையிடையே தக்க சூழ்நிலையில் சிறந்த கொள்கைகளை எடுத்துக்கூறும் பண்பினை ஆங்காங்குக் காண்கிறோம். கதை நிகழ்ச்சிகளில் ஏற்ற இடத்துச் சிறந்த நீதிகளையும் சமணசமயத்துக் கருத்துகளையும் நிலைநாட்டு வதைக் காணலாம்.

வள்ளுவர், அன்பு அறம் அருள் முதலிய அறன்களை வற்புறுத்தும் அதே வாயால், உலகின் இயல்பை அறிந்து அன்பு அருள் பண்பு முதலியனவும் சிறக்க வேண்டுமானால் பொருள் வேண்டும் என்று வற்புறுத்தக் காண்கிறோம். பொருளல்ல வரையும் பொருளாகச் செய்யும் பொருள் இல்லையென்றால் அவரை யாரும் பொருட்படுத்தமாட்டார்கள் என்பது அவர் துணிபு ஆகும். பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது அவர் அறிவுறுத்தும் உண்மையாகும். மறுமையைப் பற்றியும் இம்மை அறங்களைப் பற்றியும் வற்புறுத்தும் திருத்தக்கத் தேவரும் வள்ளுவரைப் போலவே பொருளின் பெருமையை வற்புறுத்தி அதனை ஈட்டவேண்டிய இன்றியமையாமையைக் காட்டக் காண்கிறோம்.

பொருளால்தான் இந்த உலக நெறியும் செயலும் நன்மையும் சிறந்து விளங்குகின்றன என்று எடுத்துக் காட்டுகின்றார். பொன்னிருந்தால்தான் பொருபடை திரட்ட முடியும் என்றும், அப்படை இருந்தால்தான் நாடுகளைக் கைப்பற்ற இயலும் என்றும், நாட்டாட்சி கிடைத்தால்தான் நற்பொருள் அனைத்தும் பெறலாம் என்றும் அந் நற்பொருளால் பெறக்கூடா இன்பமே இவ்வுலகில் இல்லை என்றும் கூறக் காண்கின்றோம்.

பொன்னின் ஆகும் பொருபடை; அப்படை
தன்னின் ஆகும் தரணி, தரணியிற்
பின்னை ஆகும் பெரும்பொருள்; அப்பொருள்
துன்னுங் காலைத்துன் னாதன வில்லையே -விமலை 34

என்று உணர்த்துகிறார்.

திருத்தக்கதேவர் சமண சமயத்தைச் சார்ந்தவராகவும் துறவியாகவும் இருந்தமையால், சமண சமயக் கொள்கைகளே அவருடைய அறக்கொள்கைகளாக விளங்குகின்றன. அவற்றை வாய்க்கும் இடமெல்லாம் புகுத்தித் தம் கொள்கைகளை நிலைநாட்டும் நிலையைக் காண்கின்றோம்.

சீவகன் சில துறவிகளைச் சந்திப்பதாகக் கதை நிகழ்ச்சியை அமைக்கின்றார். இக் கதை நிகழ்ச்சிக்கும் சீவகன் கதைக்கும் யாதொரு தொடர்பும் இல்லையெனினும், சில அறங்களை வற்புறுத்தவே இதுபோன்ற பகுதிகளை அமைப்பது ஆசிரியரின் இயல்பாக அமைகிறது.

சமண சமயத் துறவிகள் என்று சொல்லப்படுகின்ற அவர்கட்கே சீவகன் வாயிலாகச் சிறந்த கொள்கைகளையும் நெறிகளையும் உணர்த்தக் காண்கின்றோம். வள்ளுவர்,

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின்.

என்று துறவிகளுக்குச் சிறந்த நீதியை உணர்த்துகின்றார். வெளித் தோற்றத்தாலும் பிறர் மெச்சும்படி நடந்து கொள்வதாலும் எந்த அறமும் சிறவாது என்பது அவர் காட்டும் நெறியாகும். வள்ளுவரைப் போலவே திருத்தக்க தேவரும் சடங்குகளால் சாதிப்பது இயலாதென்பதையும், உள்ளத் தூய்மையே உறுதியளிக்கும் என்பதையும் தெள்ளத் தெளியக் காட்டிச் செல்கின்றார்.

நீண்ட சடையும் காவி உடையும் அணிந்தும், வேள்வி செய்தும், வேதம் விளம்பியும், கடிய விரதங்களை மேற்கொண்டும் கடுமையான நெறியோடு வாழ்ந்துவந்தாலும், உள்ளத்தினின்று வேட்கையை ஒழிக்காமல் இருந்தால் வாழ்க்கையில் வீடுபேறு கிடைக்காது என்பதை அழகாகக் காட்டி, உயர்ந்த கருத்தை நிலைநாட்டுவதைக் காண்கிறோம். “ஓங்கிய மரத்தில் தங்கும் வாவற்பறவை தலைகீழாகத் தொங்கிக் கிடந்து, அயலிலே கிடக்கும் பழங்களைத் தின்பதால் அதற்கு வீடுபேறு கிடைக்குமா? அதுபோல நீங்களும் உறிகளில் தலைகீழாகத் தொங்கிக்கொண்டு உணவு உண்டு வாழ்ந்தால் மட்டும் உங்கள் தீவினைகள் அகலுமா?” என்று கேட்டு, அவ்வாறு உணவு உண்ணும் வகையாலேயே உயர்வு அடைய முடியும் என்று கூற முடியாது என்றும், திண்ணிய எண்ணமும் தூய உள்ளமுமே வீடுபேறு அளிக்கும் என்றும் வற்புறுத்துகிறார்.

தூங்குறிக் கிடந்து காயும் பழங்களும் துய்ப்ப நில்லா
பாங்கல வினைகளென்றார் பகவனார் எங்கட்கு என்னின்
ஓங்குநீண் மரத்தில் தூங்கும் ஓண்சிறை ஓடுங்கல்வாவல்
பாங்களிற் பழங்கள் துய்ப்பப் பழவினை பரியும் அன்றே

- கேமசரி. 18


என்று, தக்க உவமை கொண்டு போலித் துறவால் ஞாலத்தில் வீடுபேற்றை அடைய முடியாது என்பதைத் துறவிகட்டே உணர்த்தும் அறிவுரைகளால் அமைத்துத் தம் உயர்கொள்கையைச் சீவகன் வாயிலாக ஆசிரியர் உணர்த்தக் காண்கிறோம். சமணத் துறவிகட்கு அறிவு உணர்த்த ஒரு சூழ்நிலையைக் கதையில் ஏற்படுத்திக் கொண்டதைப் போலவே உலகினருக்கு அறிவுறுத்தவும் ஒரு தக்க சூழ்நிலையை அமைத்துக்கொள்ளக் காண்கிறோம். கதையில் இத்தகைய தொடர்பு வேண்டப்படுவது இல்லை யெனினும், வேண்டுமென்றே சீவகன் ஒரு வழிப்போக்கனைச் சந்திக்குமாறு செய்து, அவனுக்கு வாழ்க்கையைப்பற்றி விளக்கம் தருவதுபோலத் தம் கொள்கைகளைப் புகுத்தக் காண்கிறோம். வழிப்போக்கனைத் தம் கருத்துகளைக் கேட்கத் தகுந்தவனாக அமைத்ததன் நோக்கம், வாழ்க்கையாகிய வழியிலே செல்வார்க்கு இக் கருத்துகள் ஏற்கும் என்ற கருத்தாலேயே என்று கொள்ளலாம். சீவகன் வழிப்போக்கனுடன் பேசும்பொழுது உள்ளம் ஏற்றுக்கொள்ளத் தக்க வகையில் சுவைமிக்க பேச்சுரைகளை அமைக்கக் காண்கிறோம்.

வழிப்போக்கன் ஒருவன், சீவகனைப் பார்த்து, “நீர் எவ்வூரீர்? எவ்வூருக்கு வந்தீர்? நும் மனைவியர் எத்துணையர்? அவர்களுள் மக்கள் எத்துணையர்? அவர்களுள் ஒழுக்கமிக்கார் எனைவர்?” என்று கேட்கிறான். அதற்கு விடையளிக்கும் சீவகன், “யான் இவ்வூரேன்; இப்பதிக்கே வந்தேன்; என் மனைவியர் நால்வருக்கும் சேர்ந்து நற்கதியளிக்கும் ஒரே மகன் உளன்” என்று விடையளிக்கிறான்.

“நால்வருக்கும் ஒரு மகன் எவ்வாறு பிறக்கக் கூடும்?” என்று வழிப்போக்கன் கேட்கிறான். அதற்குச் சீவகன் அளிக்கும் விடை எதிர்பாராதவாறு வேறு விதமாக அமைகிறது. அதில் சமய விளக்கத்தைப் புகுத்திக் கவிஞர் பெரிய ஆசிரியராக மாறுதைக் காண்கிறோம். தானம், சீலம், தவம், இறைவழிபாடு ஆகிய நான்கும் முன் சொன்ன மனைவியர் எனவும், இவற்றின் சிறப்பால் நல்வினை என்னும் மகன் பிறப்பான் எனவும், அவனே நற்கதிக்குக் கொண்டு போகும் உரவோன் எனவும் விளக்கம் தருகிறார்.

நற்றானம் சிலம நடுங்காத் தவம் அறிவர் சிறப்புஇந் நான்கும்,
மற்றாங்குச் சொன்ன மனைவியர்; இந் நால்வரவர் வயிற்றுள் தோன்றி
உற்றான் ஒருமகனே மேற்கதிக்குக்கொண்டு போம் உரவோன் தன்னைப்
பெற்றார் மகப்பெற்றார் அல்லாதார் பிறர்மக்கள் பிறரே கண்டீர்

- கேமசரி. 134

என்று கேட்பார் உள்ளம் ஈர்க்கும் வண்ணம் நால்வருக்கும் சேர்ந்து ஒரு நன்மகன் பிறப்பதாக நகை விளைவிக்கும் செய்திபோலக் கூறி நல்லறிவு கொளுத்தக் காண்கிறோம்.

வளமையுள்ள இளமையிலேயே நல்லறம் செய்ய வேண்டும் என்பதும், முதுமையில் அறஞ்செய்ய ஒல்லாது என்பதும், அவர்தம் கொள்கையாகும். அதனால் அவ்வழிப் போக்கனுக்குச் சீவகன் இக் கருத்தை உணர்த்துவதுபோலத் தம் கொள்கையை நிலைநிறுத்துகின்றார். அதை விளக்க அவர் கூறுவது சுவை பயப்பதாக உள்ளது.

முதுமை மிக்கான் ஒருவன் இளமை மிக்க கன்னி ஒருத்தியை மணந்து இல்லறம் நடத்துகிறான். வளமை இருந்த இளமை வயதில் வண்மை செய்யாது அறஞ்சாரா முதுமை பெற்று, வாழ்வின் இறுதியில் வண்மை செய்து நல்வாழ்வைப் பெறலாம் என்று ஆவல் கொள்கிறான். வயது முதிர்ந்து நோயும் கனிந்து வாழ்வு மறையும் அந்திக் காலம் வந்து சேர்கிறது. அறஞ்செய்ய எண்ணங்கொண்டு அவன் பொதிந்து வைத்த பொருட்கிழி ஒன்றை எடுத்துக் கொடுக்குமாறு தன் அயலில் இருந்த கயல்விழியாளிடம் அப்பொருள் திரளின் அளவைக் கையால் குறிப்புச் செய்து காட்டி, அதனைக் கொண்டுவருமாறு ஏவுகிறான். வாய் திறந்து பேசும் ஆற்றலை இழந்துவிட்டதால் கைகாட்டிக் கருத்தை உணர்த்த முற்படுகிறான். அவன் கருத்தை உணர்ந்த அக் காரிகையாளும் அதன் குறிப்பை அறியாதவள் போல் நடித்து மறைத்துவிடுகிறாள். ஏழையின் சொற்கள் அம்பலம் ஏறாவாறுபோலக் கிழவனின் சொற்கள் செயலில் இடம்பெறவில்லை. சுற்றியிருக்கும் சுற்றத்தாரும் அவன் கூறுவதை உணர முடியவில்லை.

“ஐயா விளாம்பழமா கேட்கின்றீர்? அஃது உடம்புக்கு ஆகாதே. தொண்டை அடைக்கும் இந்நிலையிலா விளாம்பழம் உண்பது” என்று மிகவும் அன்புடையாளைப் போலப் பேசி அவன் குறிப்பை மறைத்து விடுகிறாள். அவன் எவ்வளவு முயன்றும் தன் கருத்தைத் தெரிவிக்க இயலவில்லை. அவள் தன் திறமையால் அவன் கருத்தைப் பிறர் அறியாதவாறு மறைத்துச் சூழ்ந்திருக்கும் சுற்றத்தவர்க்கும் சாய்ந்து கிடக்கும் கணவனுக்கும் நல்லவளைப் போல நடித்து அவன் செயல் எடுபடாதவாறு செய்து விடுகிறாள். அவன் பொதித் துணையின் அளவைக் கையாற் குறிப்புச் செய்து காட்ட, “ஐயோ!உடம்புக்கு ஆகாதே” என்று கூறி மெய்யானவள் போல நடித்து அறத்தைச் செய்யாதவாறு தடுத்துவிடுகிறாள். இளமையிலேயே அறம் செய்யவேண்டும் என்ற செய்தியைச் சுவைமிக்க சூழ்நிலையில் வைத்து உணர்த்தக் காண்கிறோம்.

கையாற் பொதித்துணையே காட்டக்
    கயற்கண்ணாள் அதனைக் காட்டாள்;
ஐயா விளாம்பழமே என்கின்றீர்;
    ஆங்கதற்குப் பருவம் அன்றுஎன்
செய்கோ எனச்சிறந்தாள் போற்சிறவாக்
    கட்டுதரையாற் குறித்த எல்லாம்

பொய்யே பொருளுரையாம்; முன்னே
கொடுத்துண்டல் புரிமின் கண்டீர்

- கேமசரி. 142

என வழிப்போக்கனுக்கு உணர்த்துமாறு போல இச்செய்தியை உணர்த்துகின்றார். அவள் இளமை மிக்கவள் என்பதைக் காட்டக் ‘கயற் கண்ணாள்’ என்ற தொடரால் அவளைக் குறிப்பிடுகின்றார்.

இன்னும் இதைப்போன்ற பல அறங்களையும் கருத்துகளையும் ஆங்காங்குத் தக்க சூழ்நிலையில் அமைத்துக் கவிதையில் தம் கொள்கைகளைப் புகுத்தி விடுகின்றார். இளமையும், செல்வமும், யாக்கையும் நில்லா என்ற நிலையாமையை உணர்த்தும் கருத்துகளைப் பல இடங்களில் உணர்த்திச் செல்கிறார்.

அமைச்சனான கட்டியங்காரன் அரசனான சச்சந்தன் மீது போர் தொடுத்துவிட்டான் என்ற செய்தியை உணர்ந்த சச்சந்தன், போர்க்குச் செல்வதற்கு முன்னால் மயிலனைய தன் மனைவியை மயிலூர்தியில் ஏறிச்செல்லுமாறு பணிக்கின்றான். அதைக் கேட்டு அவள் அல்லலுற்று அழுங்கும் நிலையில், வாழ்வின் நிலையாமையை உணர்த்திச் சாதலும் பிறத்தலும் வினையின் பயனாகும் என்று அறிவிக்கிறான். ஈண்டு ஆசிரியர். வாழ்வைப் பற்றி அவர் கொண்டுள்ள நிலையாமைக் கருத்துகளைப் புகுத்துவதைக் காண்கின்றோம்.

சாதலும் பிறத்தல்தானும் தம்வினைப் பயத்தின் ஆகும்;
ஆதலும் அழிவும் எல்லாம் அவைபொருட்கு இயல்பு கண்டாய்;
நோதலும் பரிவும் எல்லாம் நுண்ணுணர்வு இன்மையன்றே

- 269

என்று வினையின் இயல்பையும், ஆதலும் அழிதலும் ஆகிய பொருளின் இயல்பையும் உணர்த்தி நிலையாமைக் கருத்தை மெல்லப் புகுத்துகின்றார்.

தொல்லை நம் பிறவியின் எண்ணிக்கைகளை எண்ணிப் பார்த்தால் அவற்றிற்கு எல்லையே இல்லை என்றும், அதைப் போல நம் வாழ்வும் ‘இல்லினுள் இரண்டு நாளைச் சுற்றம்’ போன்றது என்றும் சச்சந்தன் கூறுகின்றான். இவ்வாறு கூறி விசயமாதேவியாகிய அவன் மனைவிக்கு ஆறுதல் கூறுகிறான்.

இதே போலச் சீவகனைப் பிரிந்த கேமசரியின் ஆற்றாமையைக் கண்டு ஆற்றப் புகுந்த அவள்தாய் விளக்குகிறாள். இளமை நீர்க்குமிழி போல நிலையற்றது என்றும், இன்பம் மின்னலைப் போலத் தோன்றி மறையக் கூடியது என்றும், செல்வம் வெயிலுறு பனியைப் போல நீங்கும் இயல்பினது என்றும் அவள் தாயின் கூற்றிலே விளக்குகின்றார்.

மன்னுநீர் மொக்குள் ஒக்கும் மானிடர்இளமை; இன்பம்
மிண்ணின் ஒத்து இறக்கும்; செல்வம் வெயிலுறு பனியின் நீங்கும்;
இன்னிசை இரங்கும் நல்யாழ் இளியினும் இனிய சொல்லாய்!
அன்னதால் வினையின் ஆக்கம் அழுங்குவது என்னை

- கேமசரி. 126

என்று கூறுகிறார்.

இவ்வாறு உலகத்தின் பொதுவான நிலையாமையை அறிவதால் தனிப்பட்டவர் தாம் அடையும் துன்பத்தை அவற்றோடு ஒப்பிட்டு ஆற்றிக்கொள்ள முடிகிறது. இன்பம் துய்க்கும் பொழுது தம் இன்பத்தின் அளவைப் பெரிது என உவந்தால் இன்பம் பெரிதாகக் காணப்பட்டு மகிழ்ச்சியை ஊட்டுகிறது. தனக்கு வரும் துன்பத்தைப் பெரிதாகக் கருதி அதனாலேயே சோர்ந்து விட்டால் மனம் சோர்ந்து செயலிழந்து வாழ்வு நசிந்துவிடும். அதனால்தான் புலவர்களும் பெரியோர்களும் உலகத்தின் நிலையாமையைச் சொல்லித் தனிப்பட்ட வரின் துன்பத்தைக் குறைத்துக் கொள்ள வழிசெய்கின்றனர் என்று கூறலாம். கேமசரியின் துன்பத்தையும் விசயமாதேவியின் துயரத்தையும் குறைக்க வாழ்வின் நிலையாமைத் தன்மை கூறப்படுகிறது.

இவ்வாறு நூலில், ஆங்காங்குத் தக்க சூழ்நிலைகளில் வாழ்க்கையில் ஈடுபடும் பலநெறிகளில் உள்ளார்க்கும் பயன்படும் வகையில் அறங்களையும் சமயக் கருத்துகளையும் வாழ்வில் மேற்கொள்ள வேண்டிய உயர்ந்த நீதிகளையும் ஆசிரியர் உணர்த்தக் காண்கிறோம்.

இந்தக் கொள்கைகளைப் பிறர் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் கவிஞன் அவற்றைச் சொல்லித் தீர்த்தால்தான் மனநிறைவு அடைகிறான் என்று கூறலாம். மற்றவர்கள் இக் கொள்கைகள் ஏற்றுக் கொள்ளத் தக்கவை யல்ல என்று மறுத்தாலும், அதைப் பற்றி அவன் பொருட்படுத்துவதில்லை. சுவையையும் நலத்தையும் நூகர்வதற்கு உரிமை இருப்பதைப் போலவே அவர்களுக்குப் பிடிக்காத கொள்கைகளைப் புலவனின் தனிப்பட்ட நம்பிக்கைகள் என்று தள்ளவும் உரிமை இருக்கிறது. எனினும் கொள்கையை நீக்கிவிட்டு அணியும் நலனும் மிக்க காவியமாக மட்டும் உயர்ந்த கவிஞனால் அமைக்க இயல்வதில்லை. கவி வேறு கவிஞன் வேறு என்று பிரிந்து வாழ அவனால் இயல்வதில்லை.