அணியும் மணியும்/நாடும் மொழியும்

விக்கிமூலம் இலிருந்து
10. நாடும் மொழியும்

தெள்ளு தமிழில் தீஞ்சுவைக் கவிகள் இயற்றி நெஞ்சை அள்ளிய கவிஞர்கள் பலர். அவர்களுள் நாட்டையும் மொழியையும் ஏட்டில் பாடி நல்லுணர்வு ஊட்டிய பெருமை பாரதியாரையே சாரும். மற்றைய கவிஞர்களுக்கு இல்லாத தனிப் பெருமை இவருக்கு உண்டு. நாட்டு உணர்வும் மொழிப் பற்றும் தோன்றும் வகையில் நற்கவிதைகள் பாடி ஆற்றலும் அறிவும் ஊட்டித் தாழ்வும் தயக்கமும் போக்கி வாழ்வும் வழியும் வகுத்து மக்கட்கவிஞர் எனப் போற்றப் பெறும் வகையில் இன்று தமிழுலகம் போற்றும் தனிப்பெருங் கவிஞராக விளங்குகின்றார்.

வங்கத்தில் தாகூர் பிறந்து மொழியுணர்வையும் நாட்டுப் பற்றையும் உணர்த்தியவாறு போலவே, மொழியுணர்வையும் நாட்டுப் பற்றையும் தமிழ்நாட்டுக்குக் கவிதையால் ஊட்டியவர் பாரதியார் ஆவார். கவிஞன் பிறக்கும் சூழ்நிலையும் காலமும் அவனை ஒவ்வொரு வகையாக உருவாக்குகின்றன. ஒரே காலத்தில் நாட்டுப் பற்றையும் மொழிப் பற்றையும் உண்டாக்கிய நற்கவிஞர்களாகிய பாரதியும் தாகூரும் இந் நாட்டில் தோன்றினரென்றால், காலத்தின் கரங்களும் ஞாலத்தின் சூழ்நிலையும் இத்தகைய போக்குடைய கவிஞர்களைப் படைத்தன எனலாம்.

பாரதி கவிதையுலகில் ஒரு புதுமையை உண்டாக்கியவர். எளிய தமிழில் எதையும் சொல்லி வாழ்வில் எழிலையும் எழுச்சியையும் உண்டாக்க முடியும் என்று காட்டிய புதுமையை இவர் கவிதையில் காணலாம். அப் புதுமையோடன்றி நாட்டுணர்வை நலமுற ஊட்டிய பெருமையும் இவரைச் சாரும்.

அந்நியர் ஆட்சியில் தன்னிலை கெட்டுத் தடுமாறிய நிலையில், மக்களை உரிமைப் போருக்கு ஒருங்கெழத் தூண்டியது இவருடைய கவிதைகளின் தன்னிகரில்லாப் பெருமையாகும். உரிமை வேட்கையை இவர் உணர்த்தியது போல வேறு எவரும் உணர்த்தியிருக்க முடியாது. உரிமை இல்லாவிட்டால் வெறு மாலைகளைச் சுமக்கும் உயிரில்லாப் பிணத்தின் கோத்தைப் போன்றதே மனிதரின் போலிவாழ்வு என்று உணர்த்துகிறார்.

நின்னருள் பெற்றி லாதார் நிகரிலாச் செல்வரேனும்
பன்னரும் கல்விகேள்வி படைத்துயர்ந் திட்டாரேனும்
பின்னரும் எண்ணிலாத பெருமையிற் சிறந்தாரேனும்
அன்னவர் வாழ்க்கை பாழாம் அணிகள் வேய் பிணத்தோ டொப்பார்

என்று உரிமையின் உணர்வை உணர்த்துகிறார். உயிரிருந்தால் தனிமனிதர் வாழ்வு உண்டு; உரிமையிருந்தால் நாட்டு வாழ்வு உண்டு என்ற கருத்தை உணர்வு பொருந்த உணர்த்துகின்றார்.

அந்த உரிமை ஒருசிலருக்கே மட்டும் பயன்படும் உரிமையாக இருக்கக் கூடாது என்பதையும், அந்த உரிமையால் பெறும் பயன் இன்னது என்பதையும்,

ஏழை யென்றும் அடிமை யென்றும்
எவனும் இல்லை சாதியில்
இழிவு கொண்ட மனித ரென்பது
இந்தியாவில் இல்லையே

என்ற விடுதலைப் பாட்டால் உணர்த்துகின்றார்.

நம் வாழ்வு இந்த நாட்டோடு எவ்வாறு இணைந்து, நம் உணர்வுகள் எவ்வாறு பிணைந்து அமைந்திருக்கின்றன என்பதை நாட்டு வணக்கப் பாடலில் நன்கு காட்டி நாட்டுக்கும் நமக்கும் உள்ள உறவைத் தெளிவுபடுத்துகின்றார்.

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே

என்று நாட்டுக்கும் நமக்கும் உள்ள உறவின் பழமையையும் பழக்கத்தையும் நன்கு காட்டுகின்றார்.

நாம் பிறந்து வளர்ந்ததும் நம்மைப் பெற்ற தாயார் தோன்றி வளர்ந்து மழலைகள் பேசிக் கன்னியராகிக் களித்து மகிழ்ந்ததும் இந்நாடே என்று கூறி, நாம் மட்டும் அல்ல நம் அன்னையரும் அவர் முன்னையரும் வாழ்ந்ததும் இந்நாடு என்பதை உணர்த்துகின்றார்.

இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து அருள்
ஈந்ததும் இந்நாடே - எங்கள்.அன்னையர் தோன்றி
மழலைகள் கூறி
அறிந்ததும் இந்நாடே - அவர்
கன்னியராகி நிலவினிலாடிக்
களித்ததும் இந்நாடே

என்று, நாட்டுக்கும் நமக்கும் உள்ள நெருங்கிய தொடர்பைத் தம் பாட்டுத் திறத்தால் இசைத்துக் காட்டுகின்றார்.

பாரத அன்னையின் திருப்பள்ளி யெழுச்சியாக அமைக்கும் பாடலில் தூங்கும் நாட்டைத் துயிலெழுப்பி மக்களுக்கு உணர்வூட்டும் உயரிய பண்பைக் காண்கிறோம். பாரத அன்னையை எழுப்புவது போலப் பாட்டு அமைந்திருந்தாலும் அப் பாடல் மக்களை எழுப்புவதாகவே அமைந்துள்ளது.

விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே!
வியப்பிது காண்! பள்ளி யெழுந்தரு ளாயே

என்று பள்ளி எழுப்புகின்றார்.

மக்கள் எழுச்சியில் ஒரு தனி எழிலைக் காண்கின்றார். அதை பாரத அன்னையின் எழுச்சியாகக் கூறி அந்த எழுச்சியில் எழிலை எப்பொழுது காண்போம் என ஏங்குகின்றார்.

நின்னெழில் விழியருள் காண்பதற்கு எங்கள்
நெஞ்சகத்து ஆவலை நீயறியாயோ!

என்று கேட்டு, அவ்வெழுச்சியில் ஒரு தனி வேட்கையை எழுப்பிவிடுகிறார்.

நாடு வாழ, மொழியும் வாழவேண்டும் என்ற நல்லுணர்வு பாரதியின் பாடலில் ஆழப் பதிந்து கிடக்கிறது. அதனால்தான் நாட்டின் உணர்வு பெருகப் பாடிய அப் பாவலர் மொழியின் பெருமையையும் மிகச் சிறப்பாக உணர்த்துகின்றார்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவது எங்குங் காணோம்

என்று தமிழின் இனிமையைத் தம் இனிய பாடலில் இசைத்துக் காட்டுகின்றார்.

ஒரு மொழியின் பெருமையை அந்த மொழியில் தோன்றும் உயர்ந்த கவிகளின் சிறப்பாலேயே உலகம் மதிக்க முடிகிறது என்பதை நன்குணர்ந்த பாரதியார்,

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல்
    இளங்கோ வைப்போல்

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை; உண்மை வெறும்
    புகழ்ச்சி யில்லை

என்று, தமிழ்ப் புலவர்களின் பெருமையை நிலைநாட்டுகின்றார்.

பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடர் போன்று அறியாமையால் ஆழ்ந்திருக்கும் அனைவரும், தெள்ளு தமிழமுதின் சுவையைக் கண்டால் அவர் போன்று அழியா வாழ்வு பெற்று விழி பெற்று உயர்வடைவர் என்பதைக் காட்டுகிறார். உள்ளத்தில் எழும் உண்மையொளியால் தீஞ்சுவைத் தமிழில் கலைப்பெருக்கும் உண்டானால், நாட்டில் மொழியுணர்வும் ஒளிமிக்க வாழ்வும் உண்டாகும் என்பதை அறிவுறுத்துகிறார்.

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின
    வாக்கினிலே ஒளியுண் டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
    கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெலாம்
    விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
    இங்கமரர் தம் சிறப்புக் கண்டார்.

என்று தமிழின் சுவையையும் கவியின் பெருமையையும் உணர்த்துவதைக் காண்கிறோம்.

பாரதியின் பெருமை, நாட்டையும் மொழியையும் தனித்தனியே சிறப்பித்துப் பாடியதில் மட்டும் அமையவில்லை. நாட்டையும் மொழியையும் ஒன்றாக இணைத்து மொழிப்பற்றையும் நாட்டுப்பற்றையும் வேறாகப் பிரிக்க முடியாது என்று கூறுவதில்தான் அவர் பெருமை புலப்படுகிறது. தமிழையும் தமிழ் நாட்டையும் ஒன்றுபடுத்திப் பாடி மொழியையும் நாட்டையும் பிரிக்க முடியாது என்ற உணர்வை ஊட்டக் காண்கின்றோம். நாட்டுப் பாடல் என இமயத்தையும் குமரிமுனையையும் தனியே பாடிய கவிஞர் மொழிவழியால் தமிழ் நாட்டின் எல்லையையும் உடன் குறிப்பிடுவது, மொழியும் நாடும் பிரிந்தியங்கா என்பதைக் காட்டவே எனக் கூறலாம்.

நீலத் திரைக்கடல் ஓரத்திலே - நின்று
    நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை - வட
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
    மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு

எனத் தமிழோடு நாட்டையும் ஒருங்குவைத்துக் காணும் காட்சியைக் காண்கிறோம்.

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
    தேன்வந்து பாயுது காதினிலே

என்று மொழியுணர்வையும் நாட்டுப் பற்றையும் ஒருங்கு ஊட்டிச் செந்தமிழ் நாடு என்ற தொடரால் சிறப்பிக்கிறார்.

நாட்டையும் மொழியையும் ஒருங்கு அமைத்துப் பாடும் இயல்பு ‘பாப்பாப்’ பாட்டிலும் காண்கின்றோம். பாரத நாட்டின் குழந்தை தமிழ்நாடு என்று கூறித் தமிழ் நாட்டுக்கும் பாரதநாட்டுக்கும் உள்ள தொடர்பைப் புலப்படுத்துகின்றார். பாரத நாடும் அதன் பகுதியாகிய தமிழ்நாடும் அமுதின் இனியன என்று அழகாகக் கூறுகின்றார்.

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தின் இனியதடி பாப்பா - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

என்று கூறுகிறார். தமிழ்நாட்டைப் பெற்றதால்தான் இந்திய நாட்டுக்குப் பெருமை உண்டாகியிருக்கிறது என்பதைக் குறிப்பாக உணர்த்தக் காண்கிறோம்.

இதனை அடுத்து, மொழியின் உயர்வையும் நாட்டின் பெருமையையும் ஒரே இடத்தில் வைத்து இரண்டனுக்கும் உள்ள நெருங்கிய உறவைக் காட்டுவார் போன்று அமைத்திருக்கும் நிலை போற்றத்தக்கதாகும்.

சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே - அதைத்
    தொழுது படித்திடடி பாப்பா!
செல்வம் நிறைந்த இந்துஸ்தானம்-அதைத்
    தினமும் புகழ்ந்திடடி பாப்பா!

என்று கூறி நாட்டுப் பற்றும் மொழிப் பற்றும் பிரிக்க முடியாதன என்பதைக் காட்டுகின்றார். நாடு வாழ மொழி வாழ வேண்டும் என்பதும், மொழி வாழ நாடு வாழ வேண்டும் என்பதும் பாரதியாரின் கொள்கை என்பது புலனாகின்றது.

நாட்டுவாழ்த்துப் பாடலிலும் இதே பண்பைத்தான் காண்கிறோம். செந்தமிழும் தமிழ் பேசும் மக்களும் இம் மக்கள் வாழும் நாடும் வாழ வேண்டும் என்றும் முறையாகக் கூறும் சிறப்பைக் காண்கின்றோம். மொழியையும் மக்களையும் நாட்டையும் தனித்துப் பிரித்து வாழமுடியாது என்பது அவருடைய அடிப்படைக் கொள்கையாக விளங்குகிறது. அவர் அமைக்கும் வாழ்த்துரை இதுவே யாகும்:

வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு

நாட்டுணர்வையும் மொழியுணர்வையும் மட்டும் அவர் தம் பாட்டுத்திறத்தில் அமைக்கவில்லை. நாடு வாழவும் மொழி வாழவும் அவர் கூறும் வழிவகைகள் அவர் பெருமையை உயர்த்தி விடுகின்றன. நாடு வாழத் தொழில் வகைகள் சிறக்க வேண்டும் என்பது அவர் காட்டும் வழியாகும். தொழில் சிறக்க வேண்டுமானால் தொழிலுக்கு மதிப்பும் உயர்வும் கொடுக்க வேண்டும் என்பது அவர்தம் அறிவுரையாகும்.

வாழ்வில் புதுவழி கூறுவோர் ஒரு சிலர் கலையை உயர்த்திப் பேசுவர்; ஒரு சிலர் தொழிலையே உயர்த்திப் பேசுவர். பாரதியார் இரண்டையும் ஒத்த நிலையில் வைத்து அவற்றை வளர்க்க வேண்டிய அடிப்படையை உணர்த்துகிறார். காவியம் செய்வதும், காடு வளர்த்தலும், கலை வளர்த்தலும், கொல்லர் உலைக்களம் வளர்த்தலும், ஓவியம் வரைதலும், ஊசி செய்தலும் ஒத்த மதிப்புடைய தொழில்களாகக் கொள்ள வேண்டுமென்பார் இவற்றை அடுத்தடுத்து வைத்துக் கூறுகின்றார். இவ்வாறு தொழில்களில் வேறுபாடு பாராட்டாமல் உலகத்துத் தொழிலனைத்தையும் நம் நாட்டில் செய்தால்தான் நாடு விழிப்படைந்து உயர்வு அடைய முடியும் என வற்புறுத்துகின்றார்.

காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்
    கலைவளர்ப்போம் கொல்லர் உலை வளர்ப்போம்
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம்
    உலகத்தொழிலனைத்தும்உவந்து செய்வோம்

என்பது அவர்தம் அறிவுரையாகும்.

நாடு வாழத் தொழில்வளம் சிறக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் கவிஞர், மொழி வாழக் கலைவளம் சிறக்க வேண்டும் என்றும் வற்புறுத்துகின்றார். பிற நாட்டுக் கலைகளைத் தமிழ் மொழியில் அமைப்பதோடு இறவாத புகழுடைய புது நூல்களைத் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் என்று வற்புறுத்துகின்றார்.

சென்றிடுவீர் எட்டுத் திக்கும்-கலைச்
     செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்

என்று அறைகூவி அறிவுறுத்துகின்றார்.

பாரதியாரின் தனிப்பெருமை, நாட்டுச் சீர்மையையும் மொழியின் உயர்வையும் எடுத்துக் காட்டி அவை சிறக்க வழிவகைகளைக் காட்டிச் சென்றமையாகும். இலக்கியத்தில் நாடும் மொழியும் பொருளாக அமைத்துக் கவிதையால் மக்கள் உள்ளத்தைத் தொட்டு உணர்வு ஊட்டிய அவர் தொண்டு மிகவும் போற்றத் தக்கதாகும்.