மெய்யறம் (1917)/மாணவரியல்
மெய்யறம்.
மாணவ ரியல்.
முதல் அதிகாரம்.–மாணவர் கடமை.
மாண்பெற முயல்பவர் மாணவ ராவர்.
௧
ஆணும் பெண்ணு மதுசெய வுரியர்.
௨
இளமைப் பருவ மியைந்த ததற்கே.
௩
மற்றைய பருவமும் வரைநிலை யிலவே.
௪
அவர்கடன் விதியிய லறிந்துநன் றாற்றல்.
௫
அன்னைதந் தையரை யாதியைத் தொழுதல்.
௬
தீயினம் விலக்கி நல்லினஞ் சேர்தல்.
௭
தக்கவா சிரியராற் ற்ன்னிய லறிதல்.
௮
ஒழுக்கமுங் கல்வியு மொருங்குகைக் கொள்ளல்.
௯
இறைவ னிலையினை யெய்திட முயறல்.
௧0
௨-ம் அதி.–விதியியல் அறிதல்.
வினையின் விளைவே விதியென வந்துறும்.
௧௧
விதிசெய் கர்த்தா வினைசெய் யுயிரே.
௧௨
மெய்ப்பொருள் வினையை விளைத்துயிர்க் கீயும்.
௧௩
தீவினை விளைவிற் சேருவ துன்பம்.
௧௪
நல்வினை விளைவி னணுகுவ வின்பம்.
௧௫
தீவிதி வரவைச் செப்பு மடன்மடி.
௧௬
நல்விதி வரவை நவிலுமறி வூக்கம்.
௧௭
விதியை மாற்றிட வினையை மாற்றுக.
௧௮
தீவிதி வேண்டிற் றீவினை புரிக.
௧௯
நல்விதி வேண்டி னல்வினை புரிக.
௨0
௩-ம் அதி.–தாய்தந்தையரைத் தொழுதல்.
தாயுந் தந்தையுந் தம்முதற் றெய்வம்.
௨௧.
அவரிற் பெரியர் யாருமிங் கிலரே.
௨௨.
அவரடி முப்பொழு தநுதினந் தொழுக.
௨௩.
அவர்பணி யெல்லா மன்பொடு செய்க.
௨௪.
அவருரை யெல்லா மறிந்துளங் கொள்க.
௨௫.
அவர்பொருள் செய்தற் காந்துணை புரிக.
௨௬.
அவர்நட் பெல்லா மவர்போற் கொள்ளுக.
௨௭.
அவர்பகை யெல்லா மவர்போற் றள்ளுக.
௨௮.
அவர்பெயர் விளங்கிட வறிவமைந் தொழுகுக.
௨௯.
இல்வாழ் வரசிற் கியைந்தவ ராகுக.
௩0.
௪-ம் அதி.–மெய்யைத் தொழுதல்.
மெய்யுல கெல்லாஞ் செய்முதற் கடவுள்
௩௧.
உலகப் பொருட்கெலா முயிரென நிற்பது.
௩௨.
அறிவா யெங்கணுஞ் செறிவா யமைந்தது.
௩௩.
பகுத்தறி யுயிர்வினைப் பயனதற் களிப்பது.
௩௪.
உலகந் தனதரு ணலனுற வாள்வது.
௩௫.
தொழுமுறை யதனைமுப் பொழுது முள்ளல்.
௩௬.
உள்ளியாங் குறங்கி யுள்ளியாங் கெழுதல்.
௩௭.
எம்மதக் கடவுளுந் தம்ம தெனக்கொளல்.
௩௮.
உலகி லதனடு வோர்ந்து நிற்றல்.
௩௯.
அந்தண ராகி யதனிலை யடைதல்.
௪0.
௫-ம் அதி.–தீயினம் விலக்கல்.
தீதெலாந் தருவது தீயினத் தொடர்பே.
௪௧.
தீயவர் நல்லுயிர் சிதைக்குங் கொடியர்.
௪௨.
பிறர்பொருள் வவ்வும் பேதை மாக்கள்.
௪௩.
துணைவரல் லாரை யணையுமா வினத்தர்.
௪௪.
அறிவினை மயக்குவ வருந்து மூடர்.
௪௫.
புரைவளர் பொய்ம்மை புகலுந் தீயர்.
௪௬.
அறனோ பொருளோ வழிக்குங் கயவர்.
௪௭.
பசுவின் செயலைப் பதியின தென்பர்.
௪௮.
இத்திறத் தாரோ டிணங்கி நிற்போர்.
௪௯.
தீயின மெல்லா நோயென விலக்குக.
௫0.
௬-ம் அதி.–நல்லினஞ் சேர்தல்.
நன்றெலாந் தருவது நல்லினத் தொடர்பே.
௫௧.
நல்லவர் மெய்ந்நிலை நண்ணி நிற்போர்.
௫௨.
அகத்துற வுற்றுமெய் யறிந்து நிற்போர்.
௫௩.
தவமு மொழுக்கமுந் தாங்கி நிற்போர்.
௫௪.
நன்னினைப் புரைசெயன் மன்னி நிற்போர்.
௫௫.
உலகிய லெல்லா முணர்ந்து நிற்போர்.
௫௬.
அறனோ பொருளோ வாக்கி நிற்போர்.
௫௭.
பசுவினைப் பயன்பதி பயக்கு மென்போர்.
௫௮.
இத்திறத் தாரோ டிணங்கி நிற்போர்.
௫௯.
தினமு நல்லினந் தெரிந்துசேர்ந் திடுக.
௬0.
௭-ம் அதி.–ஆசிரியரை யடைதல்.
அறிவினைத் தருபவ ராமா சிரியர்.
௬௧.
இருபா லாருந் தருவதற் குரியவர்.
௬௨.
அறிவு வகையா னாசிரி யர்பலர்.
௬௩.
எவர்க்கு மொழுக்க மின்றியமை யாதது.
௬௪.
அவர்கடன் மாணவ ரறிதிற னறிதல்.
௬௫.
நல்வினை விரும்பு நல்லவர்க் கோடல்.
௬௬.
மாணவர் தமைதம் மகாரெனப் பேணல்.
௬௭.
அறிந்தவை யெல்லாஞ் செறிந்திடச் சொல்லல்.
௬௮.
சொல்லிய செய்யவும் வல்லுந ராக்குதல்.
௬௯.
அறிந்தா சிரியரை யடைந்தெலா மறிக.
௭0.
௮-ம் அதி.–தன்னை யறிதல்.
தன்னை யறித றலைப்படுங் கல்வி.
௭௧.
மனிதரி லுடம்பு மனமான் மாவுள.
௭௨.
தோன்முதற் பலவின் றொகுதிகா ணுடம்பு.
௭௩.
உடம்பெலா நிற்கு முயரறி வுரன்மனம்.
௭௪.
உடம்பு மனமுமா ளுயரறி வான்மா.
௭௫.
ஆன்மா மனமுட றான்றன் வலிதனு.
௭௬.
மெய்ம்முத லியம் வெளிச்செலும் வாயில்.
௭௭.
உடன்மனத் தின்பி னோடு மியலது.
௭௮.
மனமற வறநெறி மருவு மியலது.
௭௯.
ஆன்மா மனத்தை யறநெறி யுய்ப்பது.
௮0.
௯-ம் அதி.–மனத்தை யாளுதல்.
மனமுத் தொழில்செயு மாபெருஞ் சத்தி.
௮௧.
நினைக்குந் தொழிலை நிதமுஞ் செய்வது.
௮௨.
அறனு மறனு மறிதிற னிலாதது.
௮௩.
அதனெறி விடுப்பி னழிவுடன் கொணரும்.
௮௪.
அதனெறி விடாஅ தாளுத றன்கடன்.
௮௫.
தானதிற் பிரிந்து சந்தத நிற்க.
௮௬.
எதையது நினைத்ததோ வதையுடன் காண்க.
௮௭.
மறமெனில் விலக்குக வறமெனிற் செலுத்துக.
௮௮.
பயனில வெண்ணிற் பயனதிற் றிருப்புக.
௮௯.
ஒன்றெணும் பொழுதுமற் றொன்றெண விடற்க.
௯0.
௧0-ம் அதி.–உடம்பை வளர்த்தல்.
உடம்பெலாஞ் செய்யு மொப்பிலாக் கருவி.
௯௧.
உடம்பை வளர்த்தலஃ துரமுறச் செய்தல்.
௯௨.
உடம்புநல் லுரமுறி னுலகெலா மெய்தும்.
௯௩.
உரனிலா வுடம்பு வரனிலா மங்கை.
௯௪.
உளந்தொழில் செயற்கு முடலுரம் வேண்டும்.
௯௫.
வளியன னீரதி லளவி னுறச்செயல்.
௯௬.
மாறுபா டிலாவூண் மறுத்துமுப் பொழுதுணல்.
௯௭.
சிலம்பமெய்ப் பயிற்சிக டினந்தொறுஞ் செய்க.
௯௮.
பிணியுறி னுடன்பல தீர்த்தான் மருந்துணல்.
௯௯.
நினைந்த படியுடல் வளைந்திட வளர்க்க.
௧00.
௧௧-ம் அதி.–கொலை விலக்கல்.
கொலையுயிர் தனையத னிலையினின் றொழித்தல்.
௧0௧.
வாழு முயிர்நிதம் வருந்த வதைத்தல்.
௧0௨.
அச்செய றூண்டுத லச்செயற் குதவுதல்.
௧0௩.
இயலு மிடத்தச் செயலைத் தடாமை.
௧0௪.
படுமுயி ரறிவுபோற் படிப்படி கொடிததாம்.
௧0௫.
கொலைபா தகங்களுட் டலையாய தென்ப.
௧0௬.
அதுபல பிறப்பினு மருந்துயர் விளைக்கும்.
௧0௭.
தொழுநோய் வறுமையோ டழுநோய் பெருக்கும்.
௧0௮.
கொலைபுரி வார்க்கிங் கிலைபதி யருளே.
௧0௯.
கொலையினை விலக்கினார்க் கூற்றமும் விலக்கும்.
௧௧0.
௧௨-ம் அதி.–புலால் விலக்கல்.
புலால்புழு வரித்தபுண் ணலால்வே றியாதோ?
௧௧௧.
புண்ணைத் தொடாதவர் புலாலையுட் கொள்வதென்?
௧௧௨.
அதுவலி தருமெனின் யானையஃ துண்டதோ?
௧௧௩.
அரிவலி பெரிதெனி னதுநமக் காமோ?
௧௧௪.
அன்றியும் வலியோ வறிவோ சிறந்தது?
௧௧௫.
வலியோ டறிவினை மக்களூன் றராதுகொல்?
௧௧௬.
மக்களூ னுணாது மறிமுத லுண்பதென்?
௧௧௭.
பொறியறி விலார்க்கு மறிமுதற் றாழ்ந்தவோ?
௧௧௮.
அவைகொன் றுண்பார்க் கருளுண் டாமோ?
௧௧௯.
அருளிலா ரருண்மயப் பொருணிலை யடைவரோ?
௧௨0.
௧௩-ம் அதி.–களவு விலக்கல்.
களவுடை யவர்தரா துளமொடொன் றெடுத்தல்.
௧௨௧.
வஞ்சித்துக் கொளல் வாங்கிக் கொடாமை.
௧௨௨.
களவினை யேவுதல் களவிற் குதவுதல்.
௧௨௩.
தடுக்கக் கூடிய விடத்ததைத் தடாமை.
௧௨௪.
உடையவர் நலத்தையொத் துருக்கொளு மிம்மறம்.
௧௨௫.
களவினைக் கள்ளரு மெள்ளுவர் பிறர்முன்.
௧௨௬.
கள்ளுநர் தடுப்பவர்க் கொல்லவும் படுவர்.
௧௨௭.
கள்ளுந ருடையராற் கொல்லவும் படுவர்.
௧௨௮.
களவினாற் பலபிறப் பளவிலா வறுமையாம்.
௧௨௯.
களவினை விலக்கினார்க் களவிலாச் செல்வமாம்.
௧௩0.
௧௪-ம் அதி.–சூது விலக்கல்.
சூதுவஞ் சனையதற் கேதுவாங் கருவி.
௧௩௧.
பந்தயங் குறிக்கும் பலவிளை யாடல்.
௧௩௨.
அதுபொரு டருதல்போ லனைத்தையும் போக்கும்.
௧௩௩.
உற்றவூ ணுடைமுதல் விற்றிடச் செய்யும்.
௧௩௪.
பொறையு மறிவும் புகழுங் கெடுக்கும்.
௧௩௫.
சூதர்தஞ் சேர்க்கையாற் சூதுகைப் புக்கிடும்.
௧௩௬.
சூதரா தியரைத் தூர நிறுத்துக.
௧௩௭.
காலங் கழித்திடக் கவறுகை யெடுப்பர்.
௧௩௮.
அதனினு மாலமுண் டழிதனன் றென்க.
௧௩௯.
கவறுருள் களத்தைக் கனவினுங் கருதேல்.
௧௪0.
௧௫-ம் அதி.–இரவு விலக்கல்.
இரவென் பதுபிறர் தரவொன் றேற்றல்.
௧௪௧.
இரவினிற் றாழ்ந்ததொன் றிலையென மொழிப.
௧௪௨.
இரவினிற் களவு மேற்றமா மென்ப.
௧௪௩.
இரந்திடப் படைத்தவன் பரந்தழி கென்ப.
௧௪௪.
இரந்துயிர் வாழ்தலி னிறத்தனன் றென்ப.
௧௪௫.
அவருரை யெல்லா மழியா வுண்மை.
௧௪௬.
இரந்துயிர் வாழ்தலிங் கிழிவினு ளிழிவே.
௧௪௭.
தமக்குவாழ் வாரதிற் சாதலு நன்றாம்.
௧௪௮.
பிறர்க்குவாழ் வாரதாற் பிழைத்தலு நன்றாம்.
௧௪௯.
அவரு மதைவிடி னரும்பெருஞ் சிறப்பாம்.
௧௫0.
௧௬-ம் அதி.–மயக்குவ விலக்கல்.
மயக்குவ வறிவினை மயக்கும் பொருள்கள்.
௧௫௧.
அவைகள் கஞ்சா வபின்முத லாயின.
௧௫௨.
அறிவுதம் முயிரே யாதியே யுலகே.
௧௫௩.
அறிவினை மயக்குத லவற்றை யழித்தலே.
௧௫௪.
அறிவினை மயக்குவா ரருமறம் புரிவர்.
௧௫௫.
மயக்குவ சிலபிணி மாய்க்குமென் றுண்பர்.
௧௫௬.
மயக்காத வுண்டவை மாய்த்தலே யுத்தமம்.
௧௫௭.
மயக்குவ வலியினை வழங்குமென் றுண்பர்.
௧௫௮.
வலியினை வழங்கல்போல் வலியெலாந் தொலைக்கும்.
௧௫௯.
ஆதலான் மயக்குவ வற்பமுங் கொண்டிடேல்.
௧௬0.
௧௭-ம் அதி.–பொய்ம்மை விலக்கல்.
நிகழா ததனை நிகழ்த்துதல் பொய்ம்மை.
௧௬௧.
நிகழ்வதை யங்ஙன நிகழ்த்துதல் வாய்மை.
௧௬௨.
தீமையைத் தருமெனின் வாய்மையும் பொய்ம்மையாம்.
௧௬௩.
புரைதீர் நலந்தரின் பொய்ம்மையும் வாய்மையாம்.
௧௬௪.
வாய்மையைத் தருவதே வாயென வறிக.
௧௬௫.
மற்றவை யெலாம்வெறும் வாயிலென் றறிக.
௧௬௬.
வாய்மை யகத்தது தூய்மையை வளர்க்கும்.
௧௬௭.
பொய்ம்மை யகத்தது புரையினை வளர்க்கும்.
௧௬௮.
பொய்ம்மையை யாள்பவர் புன்னர காழ்வர்.
௧௬௯.
பொய்ம்மை யொரீஇயவர் புகழ்வீ டடைவர்.
௧௭0.
௧௮-ம் அதி.–புறஞ் சொல்லல் விலக்கல்.
புறஞ்சொலல் பிறரைப் புறத்திழித் துரைத்தல்.
௧௭௧.
அறங்கொலு மறத்திற் புறஞ்சொலல் கொடிது.
௧௭௨.
புறஞ்சொலல் பொய்முதற் புரையெலாம் வளர்க்கும்.
௧௭௩.
புறஞ்சொலல் புறனெலாம் பொருபகை யாக்கும்.
௧௭௪.
புன்மகார் செயல்களுட் புறஞ்சொல லொன்று.
௧௭௫.
புறஞ்சொலு நாவின ரறஞ்சொலல் வஞ்சம்.
௧௭௬.
புறஞ்சொலு நாவினர்க் கறஞ்சொலன் மடமை.
௧௭௭.
புறஞ்சொலல் கேட்டலும் புன்மையென் றறிக.
௧௭௮.
புறஞ்சொலி வாழ்தலிற் பொன்றனன் றென்ப.
௧௭௯.
ஆதலாற் புறஞ்சொல லடியொடு விடுக.
௧௮0.
௧௯-ம் அதி.–பயனில் சொல் விலக்கல்.
பயனில்சொல் யார்க்கும் பயன்றராச் சொல்லே.
௧௮௧.
அறியா மையினின் றச்சொல் பிறக்கும்.
௧௮௨.
அறியா மையினை யச்சொல் வளர்க்கும்.
௧௮௩.
அறிவினர் நட்பெலா மச்சொல் குறைக்கும்.
௧௮௪.
அறிவிலார் நட்பினை யச்சொல் பெருக்கும்.
௧௮௫.
பயனுள சொல்லினைச் சொலவிடா தச்சொல்.
௧௮௬.
பயனுள செயலினைச் செயவிடா தச்சொல்.
௧௮௭.
பயனில சொல்லுவர் நயனுறா ரென்றும்.
௧௮௮.
பயனில சொல்பவர் பதடியென் றறைப.
௧௮௯.
பயனில விலக்கிப் பயனுள சொல்லுக.
௧௯0.
௨0-ம் அதி.–அழுக்கா றொழித்தல்.
அழுக்கா றயலா ராக்கத்திற் புழுங்கல்.
௧௯௧.
அழுக்கா றுறலினோ ரிழுக்கா றிலதே.
௧௯௨.
அழுக்கா றதுபோ லழிப்பதொன் றின்றே.
௧௯௩.
அழுக்கா றுளவரை யொழுக்கா றிலையே.
௧௯௪.
அழுக்கா றுடையார்க் காக்கமின் றாகும்.
௧௯௫.
வறுமையும் பசியுஞ் சிறுமையு முளவாம்.
௧௯௬.
அழுக்கா றுடைமைகீழ் வழுக்கா றென்ப.
௧௯௭.
விலங்குளு மழுக்கா றிலங்குத லில்லை.
௧௯௮.
அறிவுடை மக்க ளதுகொளல் புதுமை.
௧௯௯.
அழுக்கா றுளத்துறா தநுதின மோம்புக.
௨00.
௨௧-ம் அதி.–எண்ணெழுத் தறிதல்.
எண்ணெனப் படுவ தெண்ணுநற் கணிதம்.
௨0௧.
எழுத்தெனப் படுவ திலக்கிய மிலக்கணம்.
௨0௨.
எண்ணு மெழுத்துங் கண்ணென மொழிப.
௨0௩.
எண்ணறி யார்பொரு ளெய்துத லரிது.
௨0௪.
எழுத்தறி யார்பிற வெய்துத லரிது.
௨0௫.
எண்ணெழுத் தறிந்தா ரெய்துவர் நான்கும்.
௨0௬.
எண்ணு மெழுத்து மிடைவிடா தாள்க.
௨0௭.
அவைதாய் மொழிகொளி னதைமுன் பறிக.
௨0௮.
பின்பவை மிக்குள பிறமொழி யறிக.
௨0௯.
அறிவதைக் கசடற வறிந்துகொண் டொழுகுக.
௨௧0.
௨௨-ம் அதி.–தொழில் அறிதல்.
மெய்யுறுப் புக்கொடு செய்வது தொழிலே.
௨௧௧.
தொழிலா லுலகந் தோன்றிநிற் கின்றது.
௨௧௨.
தொழிலிலை யெனிலுல கழிவது திண்ணம்.
௨௧௩.
தொழிலிலார் வறுமையுற் றிழிவெலா மடைவர்.
௨௧௪.
அரியநற் றொழில்சில வறிதல்யார்க் குங்கடன்.
௨௧௫.
படைக்கல மனைத்தும் பண்பொடு பயில்க.
௨௧௬.
படைவகுத் தமர்செயு நடையெலா மறிக.
௨௧௭.
புவிகடல் விண்மிசை போவவூர்ந் தறிக.
௨௧௮.
எவ்வகை யுருவு மெடுத்திடப் பழகுக.
௨௧௯.
உழவுவா ணிகங்கைத் தொழில்சில வறிக.
௨௨0.
௨௩-ம் அதி.–திருந்தச் செய்தல்.
திருந்தச் செயலியல் பொருந்தச் செய்தல்.
௨௨௧.
அழகு நிறைவு மமைவுறச் செய்தல்.
௨௨௨.
திருந்தச் செய்தலே செய்தற் கிலக்கணம்.
௨௨௩.
திருந்தச் செயல்பல சீர்களைக் கொணரும்.
௨௨௪.
திருத்தமில் செயலாற் சீர்பல நீங்கும்.
௨௨௫.
சிறுதொழி லெனினுந் திருந்தவே செய்க.
௨௨௬.
சிறுதொழிற் றொகுதியே பெருந்தொழி லாவது.
௨௨௭.
செய்யும் தொழிலிலே சிந்தையைச் செலுத்துக.
௨௨௮.
தொழிலினைக் கியமாய்த் துரிதமாச் செய்க.
௨௨௯.
பிறர்செய் தொழிற்குப் பின்னிடா வகைசெயல்.
௨௩0.
௨௪-ம் அதி.–நன்றி யறிதல்.
நன்றியென் பதுபிறர் நல்கிடு முதவி.
௨௩௧.
உறவினர் முதலியோ ருதவுதல் கடனே.
௨௩௨.
பிறர்செயு முதவியிற் பெரிதொன் றின்றே.
௨௩௩.
உதவியிற் சிறந்த துற்றுழி யுதவல்.
௨௩௪.
உயர்ந்தது கைம்மா றுகவா துதவல்.
௨௩௫.
அறிதலெஞ் ஞான்று மதைநினைந் தொழுகல்.
௨௩௬.
உதவியோர் குடியெலா முயர்வுற வுள்ளல்.
௨௩௭.
உதவியோ ரறவுரை யுடனிறை வேற்றல்.
௨௩௮.
உதவியோர் மிகைசெயி னுடனதை மறத்தல்.
௨௩௯.
அறிதற் களவுண் டுதவி சொலக்கெடும்.
௨௪0.
௨௫-ம் அதி.–நடுவு நிலைமை.
நடுவு நிலைமைதன் னடுவு ணிற்றல்.
௨௪௧.
பிறவுயிர் நடுவள விறனடு வின்மை.
௨௪௨.
நடுவறப் பொருளி னடுனிற் கும்பொருள்.
௨௪௩.
அறனெலா நிற்பதற் கஃதா தாரம்.
௨௪௪.
அதுசிறி தசையி னறனெலா மழியும்.
௨௪௫.
நடுவினு ணிற்பவர் நலனெலாம் பெறுவர்.
௨௪௬.
நடுவினை விடாரை நானிலம் விடாது.
௨௪௭.
நடுவிகந் தாருடன் கெடுவது திண்ணம்.
௨௪௮.
நடுவிகந் தாரை நரகமும் விடாது.
௨௪௯.
ஆதலா னடுவி லசையாது நிற்க.
௨௫0.
௨௬-ம் அதி.–அடக்க முடைமை.
அடக்க மனம்புலத் தணுகா தடக்கல்.
௨௫௧.
அறிவினர்க் கென்று மடங்கி யொழுகல்.
௨௫௨.
அடக்கநன் னெறியி னடக்கச் செய்யும்.
௨௫௩.
அடக்கமில் லாமை யதைக்கடக் கச்செய்யும்.
௨௫௪.
அடக்கம் பல்வகை யாக்கமுந் தருமே.
௨௫௫.
அடக்க மிலாமை யழிவெலாந் தருமே.
௨௫௬.
அடக்கமெய் வீட்டிற் கடிப்படி யாகும்.
௨௫௭.
அப்படி யேறினா ரடைவரவ் வீடு.
௨௫௮.
அப்படி யேறா ராழ்வர்வெந் நரகு.
௨௫௯.
ஆதலா லடக்க மநுதின மோம்புக.
௨௬0.
௨௭-ம் அதி.–ஒழுக்க முடைமை.
ஒழுக்க மென்ப துயர்ந்தோர் நடையே.
௨௬௧.
அருளறி வமைந்தவை யாள்பவ ருயர்ந்தோர்.
௨௬௨.
அவர்நடை பெரியோர்க் கடங்கி யொழுகல்.
௨௬௩.
இருக்கை யெழுத லெதிர்பின் செல்லல்.
௨௬௪.
நினைவுஞ் சொல்லும் வினையுமொன் றாக்கல்.
௨௬௫.
மறநெறி விலக்கி யறநெறி செல்லல்.
௨௬௬.
தானுற வேண்டுவ வேனோர்க் களித்தல்.
௨௬௭.
தன்னுயிர் போல மன்னுயிர்ப் பேணல்.
௨௬௮.
பகைசெய் தவரொடு நகைசெய் தளாவல்.
௨௬௯.
உயிரெலா மெய்யென வோர்ந்தவை யோம்பல்.
௨௭0.
௨௮-ம் அதி.–அறிவுடைமை.
அறிவு மறமொரீஇ யறத்தின்பா லுய்ப்பது.
௨௭௧.
அறிவெஞ் ஞான்று மற்றங் காப்பது.
௨௭௨.
அறிவு பகைவரா லழிக்கப் படாதது.
௨௭௩.
அறிவினை யுடையா ரனைத்து முடையர்.
௨௭௪.
அறிவில் லாதார் யாதுமில் லாதார்.
௨௭௫.
அறிவிற் கறிகுறி யாவன செய்தல்.
௨௭௬.
எளியவாச் செலவுரைத் தரியவை யுணர்தல்.
௨௭௭.
பாவம் பழிக்குப் பயந்திவ ணொழுகல்.
௨௭௮.
உலகினோ டென்று மொத்து நடத்தல்.
௨௭௯.
எதிரதாக் காத்தெவ் வின்பமு மடைதல்.
௨௮0.
௨௯-ம் அதி.–ஊக்க முடைமை.
ஊக்க முயர்வுற வுனுமன வெழுச்சி.
௨௮௧.
ஊக்க முடைமை யுலகெலாங் கொணரும்.
௨௮௨.
ஊக்க மிலாமை யுடையவும் போக்கும்.
௨௮௩.
ஊக்க முடையா ருயர்ந்தோ ராவர்.
௨௮௪.
ஊக்க மிலாதா ருயிர்க்கும் பிணங்கள்.
௨௮௫.
உயர்ந்தவை யெவையோ வவையெலா முள்ளுக.
௨௮௬.
அவற்றினு ளொன்றை யடைந்திட விரும்புக.
௨௮௭.
அதனை யடையு மாறெலா மெண்ணுக.
௨௮௮.
ஒவ்வொன் றினுமுறு மூறெலா மெண்ணுக.
௨௮௯.
ஊறொழித் ததையுறு முபாயமுங் கருதுக.
௨௯0.
௩0-ம் அதி.–முயற்சி யுடைமை.
உயர்வுற வுழைக்கு முடற்றொழில் முயற்சி.
௨௯௧.
முயற்சி பலவகை யுயற்சி நல்கும்.
௨௯௨.
முயற்சி யூழையு முதுகிடச் செய்யும்.
௨௯௩.
முயற்சி யுடையார் மூவுல காள்வார்.
௨௯௪.
முயற்சி யிலாதா ரிகழ்ச்சி யடைவர்.
௨௯௫.
ஊக்கிய வொன்றனை யுடன்கொளத் துணிக.
௨௯௬.
அதிகவூ றுறாநல் லாற்றின் முயல்க.
௨௯௭.
உறுமூ றொழித்தறி வுரங்கொடு தொடர்க.
௨௯௮.
தவறினுந் தாழ்ப்பினுந் தளர்ச்சியெய் தற்க.
௨௯௯.
முயற்சியின் விரிமுத னூலினு ளறிக.
௩00.
மாணவரியல் முற்றிற்று.